Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - நிறைவுப் பகுதி)


உச்சியில் தகித்துக் கொண்டிருந்த சூரியனின் மொத்த வெப்பமும் அனல் அருவியாக என் தலை வழியாகக் கொட்டி உடம்பை எரிப்பது போலத் துடித்தேன். சற்று நேரம் அந்தப் பாதையிலேயே முன்னும் பின்னுமாக என்னையறியாமல் நடந்தேன். சோர்ந்து ஒருபெரிய மரத்தின் வேரில் அமர்ந்தேன். திடீரென்று யாரோ முதுகில் சாட்டையால் அடித்து விரட்டியது மாதிரி எழுந்து வேகமாக பாடசாலை நோக்கி ஓடினேன். 


அம்மா லலிதாம்பிகை படத்தின் முன் அமர்ந்து கண்மூடி வலது கையைப் புடவைத்தலைப்பால் மறைத்து அமர்ந்திருந்தாள். மெல்லிய நார்மடிப்புடவையின் உள்ளே பெருவிரல் மற்ற விரல்களின் மடிப்புக் கோடுகள் மீது தொட்டுத் தொட்டு நகர்வது நிழல்காட்சி போலத் தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அமைதியில்லாமல் அலைவதைக் கண்டேன். உதடுகள் யாரிடமோ கெஞ்சுவது போல துடித்துக் கொண்டிருந்தன. செய்வதறியாமல் அவளையே பார்த்திருந்தேன். சிலநிமிடங்கள் கழித்து நமஸ்கரித்து எழுந்தாள். நான் வந்ததை முன்னரே அறிந்திருந்தவள் போல, என் கண்களைப் பார்த்துத் தீர்மாணமான வார்த்தைகளில் பேசினாள்.

“உன் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பான்னு உத்தம வைதீகாள் வம்சத்து ஒரே ஆண் வாரிசு நீ தான்ப்பா. சாஸ்திர விரோதமா ஒன்னும் யோஜிக்க மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்று கையை நீட்டினாள்.

அதிர்ச்சியில் சற்று நிலைகுலைந்தேன். அவ்வளவு நேரடியாகப் பேசுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என் மனம் தயாரித்து வைத்திருந்த பீடிகைகளுக்கு அவசியமேயில்லாமல் உடைத்து விட்டாள். அதனால் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் சிறிய மௌனத்துடன் தலை குணிந்து நின்றேன்.

அதையே அவள் அடுத்த வார்த்தைக்கான சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்டு, “சங்கரா என்னடா ஒன்னும் சொல்லமாட்டேங்கறே. அம்மா வேணுமா? வேண்டாமா?” தடங்கலே இல்லாமல் அடுத்த அம்பைத் தொடுத்தாள். ஒருவேளை நான் வந்த போது கண்மூடி இந்த வார்த்தைகளைத் தான் அடுக்கியடுக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தாளோ என்று நினைத்தேன்.

மனம் அருவியாக வார்த்தைகளைக் கொட்டியது. ஆனால் எதுவும் வாக்கியமாகச் சேராமல், உதிரியாக நாக்கில் கரைந்து தொண்டைக்குள் ஒழுகி இறங்கியது. நனவில்லாமல் கூட என்னால் சொல்ல முடிந்த வார்த்தையைத் திணறி, மிகவும் கஷ்டபட்டுக் கோர்த்து, “அம்மா..” என்றேன். ஒலியாக வெளியேறியதா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

“உன் அப்பா போனப்போவே பிராணனை விடாம, இன்னும் வச்சிண்டு இருக்கறதே உனக்காகத் தாண்டா. எல்லாரும் ‘ச்சீ’ன்னு சிரிக்கறா மாதிரி அவமானப்படுத்தி கொன்னுடாதேடாப்பா” கைகளை என் முன் கூப்பி குரல் தழுதழுக்க நடுங்கினாள். கதறி உடைந்து அப்படியே படாரென்று அம்மாவின் காலடியில் விழுந்தேன். அழுகிறேன் என்று நினைத்தேன். ஆனால் கண்ணீரே வரவில்லை. அடிபட்ட மிருகம் வலிதாங்காமல் ஊளையிடுவது போன்ற சத்தம் மட்டும் வந்தது. 


சிறிய இடைவெளிவிட்டு தோளைத்தொட்டு மெதுவாகத் எழுப்பி என் தலையை அவள் தோளில் சரித்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மூளையில் பிறந்து குரல்வளைக்கு வரும் முன்பே ஸ்பரிசத்தால் என் தலையிலிருந்து நேரடியாக என் எண்ணங்களைப் படிக்கிறாள் என்று தோணியது. நிச்சயமாகத் தீமானித்து மிகச் சரியாக அடுத்தடுத்து வார்த்தைகளை வீசி என்னை முழுமையாக செயலிழக்க வைக்கிறாள்.

இல்லை நான் பேசியே ஆகவேண்டும். உயிரைத் திரட்டி நாக்கில் வைத்தேன். மெல்ல அசைந்து வார்த்தைகள் வெளிவந்தது. “அம்மா ஸ்ரீதேவி பாவம்மா. உன்ன மாதிரிம்மா.. ரொம்ப நல்ல பொண்ணும்மா” என்றேன். என் கைகளை நீவி விட்டபடி, “லோகத்திலே எல்லா பொம்மணாட்டிகளும் அம்பாள் சொரூபம் தான். எல்லாருமே நல்லவா தான். ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒரு தர்மம் இருக்கு. அதை மீறி மனசு போனதுன்னா மகாபாபம். அவா பரம்பரையே அதை அனுபவிக்கனும்” என்றாள்.

தலையை அம்மாவின் தோளில் புதைத்து, “கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு குடுத்துட்டேன்மா. என்னை விட்டுட்டு அவ ஜீவனோட இருக்க மாட்டாம்மா” விசும்பிக் கொண்டே சொன்னேன்.

“பெத்தவாளுக்குத் தெரியும் அவாவாள் கொழந்தேளுக்கு என்ன பண்ணனும்னுட்டு. அவ அப்பா அவளுக்கு காலாகாலத்திலே கல்யாணம் பண்ணி வச்சு, அவ குடும்பமும், குட்டியுமா சந்தோஷமா இருப்பா. அம்மா அம்பாள்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறேன். நீயும் அம்மா சொல்றதக் கேட்டு சமத்தா நடந்துக்கோ”. அம்மா, வெற்றியை நோக்கி நகர்பவள் போல நிதானமாக என்னை சிறுபிள்ளையாக்கிச் சமாதானப்படுத்தும் வார்த்தைகளைச் சொன்னாள்.

முகத்தை அம்மாவின் தோளிலிருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்த்தேன். கற்சிலை. எப்போதும் போல எதையும் கண்டறிய முடியாத, அதிகம் உணர்ச்சிகளற்ற சாதாரண பாவம். ஒருவேளை, ஒருநாள் நான் இப்படி வந்து நிற்கும் போது அசையாமல் நிலைத்திருக்கவே இத்தனை வருடங்களாக இதைப் பயின்று வந்தாளோ என எண்ணிக்கொண்டேன். வேதத்திலிருந்தும், புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் என்னால் நூறு உதாரணங்கள் காட்டி நான் செய்வது தர்ம விரோதமல்ல என்று என்னால் வாதிட முடியும். ஆனால் அதனால் சிறிதும் பயனில்லை, 


அம்மாவின் நம்பிக்கைகளை என்னால் அசைக்கவே முடியாது என்று உள்ளூற நன்றாக அறிவேன். வாழ்வில் முதல்முறையாக பிரம்மகிரி, மடம், ஆச்சார்யர், மனிதர்கள், காலம், என் முன்னோர், அம்மா, வேதப்படிப்பு, சிகை, பூணூல், வெளுத்த தோல், எல்லாம் கசந்து தொண்டையில் குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாரையும், எல்லாவற்றையும் என் உயிரின் கடைசித் துளி வரை வெறுத்தேன். இது எதுவுமே எனக்கு இனி இல்லை என்று நினைத்த போது ஒரு கனம் நிறைவும், பின் ஆழ்ந்த வெறுமையும் கவ்வியது. 


கடைசி முயற்சியாக என்னால் முடிந்த வரை பலம்கொண்டமட்டும் மோதி அம்மாவின் இறுக்கத்தை உடைக்க முடிவு செய்தேன். வெடுக்கென்று அம்மாவின் கையை உதறி விட்டு அலறலான குரலுடன் பின்னோக்கி நகர்ந்து கதவின் மரநிலையில் தலையை வேகமாக பல முறை மோதினேன். நெற்றி நரம்புகள் நைந்து, சுருண்டு, சுற்றி இருப்பவையெல்லாம் கலைவையான ஓசை இழந்து ’ம்ம்ம்ம்’ என்ற ஒற்றை ஒலி மட்டுமாக மிஞ்சியது. 


“உன் புள்ளைய நீயே கொன்னு திண்ணுடு. அதுக்குத்தானே வளர்த்தே. அவ வேண்டாம்னா நானும் உனக்கு வேண்டாம். இனி உன் முகத்தையே பார்க்க மாட்டேன். செத்துப் போறேன். நீ சந்தோஷமா இரு” என்று கத்தி விட்டு, என்னைப் பாய்ந்துவந்து கட்டிக்கொண்டு தடுப்பாள் என்ற நம்பிக்கையில் பாடசாலையை விட்டு இறங்கி ஓடினேன்.
***

      ஓடி ஓடி கடைசியாக ஸ்ரீதேவியின் வீடு இருக்கும் கமுகுத் தோப்பினருகில் வந்து விட்டிருந்ததை உணர்ந்தேன். அதற்கு மேல் என்னால் நகர முடியவில்லை. அவள் வீட்டிற்குள் நுழையும் துணிவில்லை. அங்கே இருந்த பெருத்த மரமொன்றின் வேரில் அமர்ந்தேன். தலைக்குள் வின்னென்று தெறிப்பது போல் வலித்தது. மரத்தில் சாய்ந்து கால்களை நீட்டி வெகு இயல்பாக மரத்தின் ஒரு கிளை போல ஒன்றினேன். கொஞ்சம் கொஞ்சமாக எண்ண ஓட்டங்கள் அடங்கியது. ‘ஸ்ரீதேவி’ என்ற ஒற்றைப் பெயரும் ‘காத்திருக்கிறேன்’ என்கிற ஒற்றைச் சிந்தனையுமாக ஆனேன்.

என் கண்கள் எல்லைக் காவல் தெய்வங்களின் கல்விழிகள் போல நிலைத்துத் திறந்து அவள் வரவை நோக்கியிருந்தது. அன்று மாலையும், இரவும் கழிந்தது. மறுநாள் முழுவதும் கழிந்தது. என்னால் என் உடம்பைப் புரட்டக் கூட முடியவில்லை. என் கண்களை மட்டும் காவலுக்கு வைத்துவிட்டு எல்லா அங்கங்களும் உறங்கிவிட்டது போல. மூன்றாம் நாள் பின் மதியம் நேரே என்னிடம் வந்தாள். மூளை உயிர் பெற்று என்னை இயக்கியது. முதல் சிந்தனை, “நான் இங்கே இத்தனை நாளாக இப்படிக் காத்திருக்கிறேன் என்று இவள் அறிந்திருந்தாளா?” என்பது தான். அறிந்தும் வராமல் இருந்தாள் என்கிற அழுத்தத்தை நினைக்கும் போது அம்மா நினைவு வந்தது.

“அம்மா மனசு எனக்குத் தெரியும். நீங்க தான் அவங்களுக்கு எல்லாமே. அவங்கெ கண்ணீர் சிந்தி எனக்கு ஒரு ஜீவிதம் வேண்டா. தெய்வம் பொறுக்காது. தப்பெல்லாம் என்மேலெ தான். அருகத இல்லாத்தத ஆசப்பெட்டது என் குற்றம். நான் நாளேக்கு மதுரை போகும், மகாத்மாவ பாக்கறதுக்கு. அப்பா இங்கே பணி முடிஞ்சதும் அங்கே வந்துடுவாங்கெ. பின்னெ அவங்கெ கூடவே ஆஸ்ரம சேவைக்கு வடக்கே போயிடுவேன். நீங்க அம்மாவெ கஷ்டப்பெடுத்தாம, அவங்கெ சொல்றது அனுசரிக்கனும்” 


மனதை முழுதுமாக மறைத்து, முகத்தை சலனமே இல்லாமல் வைத்துக்கொண்டு அம்மாத்தனமாக எனக்கு அறிவுரை சொன்னபோது எரிச்சலடைந்தேன். அம்மாவோ, இவளோ என்னைக் குரோதத்துடன் சீண்டியிருந்தாலோ, சவால் விட்டு மிரட்டியிருந்தாலோ வெகு சுலபமாய் அள்ளி நொறுக்கி ஒடுக்கியிருப்பேன். ஆனால் இருவரும் என் ஆழ்மனதையும், உணர்ச்சிகளையும், மறைக்கவே முடியாத என் மிகப் பலவீனமான பக்கங்களையும் விரல் நுனியால் தட்டுகிறார்கள். திமிறவே முடியாமல் மண்டியிட்டு அடங்குகிறேன். வானில் பறக்கவும் முடியாமல், நிலத்தில் நிற்கவும் முடியாமல் எதோ ஒரு பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகாக காற்றில் தத்தளிக்கிறேன்.

அவளால் அம்மாவைப்போல அப்படி உறுதியாக இருக்க முடியாது என்பதை அவளுக்கே நிரூபிக்கத் துடித்தேன். என் பதிலையே எதிர்பார்க்காமல் அவள் நகர்ந்த போது, பாய்ந்து அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு, “உன்னைப் போக விடமாட்டேன்” என்று சிறுவன் போல முரண்டுபிடித்தேன். என் கை பட்டதும் அவள் உடலின் செயற்கையான இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்தேன். திரும்பி என் விரல்களைப் பிரித்து விலக்கி, “விடுங்கெ” என்ற போது அவள் அகன்ற விழிகளில் இமை வரம்புகளை தொட்டுத் தேங்கியிருந்த கண்ணீர்க் குளம், கரையை மோதி உடைத்து வழிந்து என் புறங்கையில் பட்டுத் தெறித்து நிலத்தில் சிந்தியது.
***

      எனது எட்டாவது வயதில் எனக்கு பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்தனர். அன்று தான் முதல் முறையாக உச்சியில் இருந்த மயிற்கற்றையைத் தவிர்த்து தலையை சுத்தமாக மழித்துவிட்டிருந்தனர். திடீரென்று தலைக்கு மேல் ஒன்றுமில்லாமல் பொட்டலாய்க் காய்ந்து சுரீரென எரிந்தது. காலையிலிருந்தே ஹோமப்புகை கண்ணில் ஏறி, இமைகளைத் திறந்தாலே ஒளி வெள்ளமாகப் பாய்ந்து விழித்திரை கூசியது. 


மதியம் அரைமயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். கனவில் என் தலையில் யாரோ நூறு நூறு ஊசிகளை வைத்துக் குத்துவது போன்று இருந்தது. வலி தாங்காமல் அலறித் துடித்தபடி எழுந்தேன். சிரித்தபடி வெள்ளைவெளேரென்று என் தாய்மாமா மகள் சாரதா உட்கார்ந்திருந்தாள். என்னை விடச் சிறியவள், ஐந்து வயதிருக்கும். “அய்.. உச்சிக்குடுமி சங்கதா...” என்று சிரித்துக் கொண்டு என் தலையை எட்டிக் குடிமியைப் பிடித்து ஆட்டினாள். மறுபடியும் ஊசிகுத்தும் வலி. பொறுக்க முடியாமல் அவளை இழுத்து என்னால் முடிந்தவரை அவள் தலையில் ஓங்கிக் குட்டினேன். அவள் கண்கள் கலங்கி நீர் திரைகட்டியது. நீர்த்திரையின் பின்னால் அவள் கரிய விழிகள் சிதறிய ஒழுங்கற்ற வட்டமாகத் தெரிந்தது. சிறிய வாயைக் கோணலாகத் திறந்தாள். எச்சில் கம்பிகள் மேலுதட்டிலிருந்து கீழுதட்டிற்கு இழுபட்டது. சில கணங்கள் சத்தமே இல்லை, பிறகு விட்டுவிட்டு சிலமுறை கரகரப்பான சத்தம் எழுப்பிய பின், காது கிழியும்படி கீச்சுக்குரலில் கத்தி அழுதாள். எனக்கு அவள் அழும் முகம் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவளை மாதிரியே அழுது காண்பித்தேன். “அத்தேத்த தொல்லுதேன் பாது..” என்ற எழுந்து அழுதபடியே ஓடினாள்.

சிறிது நேரம் விளையாடி விட்டு சமையலறைக்குள் அம்மாவைத் தேடிச் சென்றேன். சாரதா அம்மா மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்ணங்களில் கண்ணீர் வழிந்த தடம் காய்ந்து ஒரு கோடு போல தெரிந்தது. அம்மா அவளுக்கு வெள்ளிக்கின்னத்தில் வைத்து சர்க்கரைப் பொங்கல் ஊட்டிக் கொண்டிருந்தாள்.


“அம்மா” என்றபடி பின்னால் சென்று கழுத்தைக் கட்டிக்கொண்டேன். அம்மா காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அம்மாவின் பின்னலைத் தூக்கி பின்னந்தலையிலிருந்து உச்சிவகிடு வழியாக நேராக மடக்கி, மீதமிருந்த்தை கூந்தலை நெற்றி மேல் விரித்து “பாம்பு...” என்றேன். பதிலே சொல்லவில்லை அம்மா.


“அம்மா பசிக்கிறதும்மா.. நேக்கும் சக்கரைப் பொங்கல் வேணும்” என்றேன். அம்மா கோபமாக இருந்தால் சும்மாவாவது பசிக்கிறது என்று சொல்லுவேன். உடனே கோபத்தை மறந்துவிட்டு சாதம் பிசைந்து ஊட்ட ஆரம்பித்து விடுவாள். 


அம்மா சரதாவை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு, என்னை இழுத்து அவள் முன்னால் நிற்கவைத்தாள். “சாரதா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணி, இனிமே அழவிடமாட்டேன்னு சொல்லு!” என்றாள். ஒன்றும் புரியாமல் விழுந்து நமஸ்கரித்தேன். “அய்...உச்சிக்குடுமி” என்று பிடித்து ஆட்டிச் சிரித்தாள் சாரதா. 


அம்மா, என்னைக் கட்டிக்கொண்டு சொன்னாள், “கண்ணா, எப்பவும் பொம்மணாட்டிகள அழவிடப்டாதுப்பா. அது மகாபாபம். அம்பாள் கோவிச்சுண்டு உன்னவிட்டுட்டு போயிடுவா. அப்புறம் அது அம்மாக்கு தானே கஷ்டம்?”.


எனக்கு ஏதோ காற்றுருளை தொண்டைக் குழிக்குள் அடைப்பது மாதிரி இருந்தது, “இனிமே அழவே விடமாட்டேம்மா” என்று அம்மாவின் இடுப்பை கைகளால் வளைத்துக் கட்டமுயன்று எட்டாமல், வயிற்றில் முகத்தை அழுத்திக்கொண்டேன்.
***

      மெல்ல நடந்து மடத்துப் பக்கம் வந்தேன். மடத்துப் பூஜகர் சுப்பு சாஸ்திரிகள் தான் ஓடி வந்து என்னைப் பிடித்தார். படபடப்பாக இருந்தார். “சங்கரா, எங்கேடாப்பா போயிட்டே. ரெண்டு நாளா எல்லாரையும் பயப்பட வச்சுட்டியேடா. என்னடா ஆச்சு, என்ன கோலம்டா இது?” சொற்கள் அழிந்த மொழியைக் கொண்டு என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. “அம்மா, அம்மா” என்று மட்டும் தொடர்ந்து முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். “பாவம்டா அவள். உன்னைக்காணாத பைத்தியம் பிடிச்சாமாதிரி இருக்காடா” என்றார். அப்புறம் கடைசியாக “கோசாலை” என்ற சொல் காதில் விழுந்தது.
அதன்பிறகு அவர் சொன்ன எல்லா சொற்களும் பொருளில்லாமல், கொதிக்கும் கனத்த இரும்புக் குந்துமணிகளாய் மழைத்துளி போல சட்சட்டென்று தலையில் விழுந்து மண்டையோட்டைப் பொத்துக் கொண்டு மூளையின் மென் சதைப் பரப்பில் சூட்டுக்கோலை நீரில் விட்டது போல ‘ஷ்ஷ்க்’ என்னும் ஒலியுடன் பதிந்தது. இரும்புக் குண்டுகள் மெல்ல மூளையின் நெளிநெளியான பிளவை வாய்க்கால்களின் வழி ஓடி மையச்சுழலை அடைந்து, கரகரவென பெரும் விசையுடன் சுழன்றன. மூளைச் சதை கடையப்பட்டுத் திண்மையழிந்து, கூழாகி தலைக்குள் ததும்பியது. காலம், திசை, நினைவுகள், கற்பனை, எண்ணம், சொல், காட்சி, செயல் எல்லாம் வரிசைமாறி ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்தது. என்னைக் கட்டிப்போட்டிருந்த தர்க்கம் மெல்ல அறுந்து நழுவியது.
***

      மடத்தைச் சுற்றி ஓடினேன். வழியில் மறித்த எதையும், பிடிக்க வந்த எல்லோரையும் தலைக்கு மேல் தாவிக்குதித்து அனாயாசமாக ஓடினேன். சிறு சருக்கலோ, தடுக்கி விழவோ இல்லை. பிரம்மகிரியின் சரிவு தன் ஆயிரம் கரம் நீட்டி என்னை ஈர்த்தது. அருவிபோலப் பெரும் பாய்ச்சலாக விழுந்தேன். மேகங்கள் மீது பறக்கும் கந்தர்வன் போல புதர்கள், மரங்களைத் தாண்டி ஓடினேன். அந்தியின் தொடுவானத்தில் ஒளியின் கடைசி சிவப்புத் திரையை கிழித்துக் கொண்டு இருளில் ஓடினேன். ஓடும்போது சிகை அவிழ்ந்து காற்றில் பறக்க, வெள்ளை அங்கவஸ்திரமும், வேஷ்டியும் படபடக்க தேவேந்திரனின் வெண்குதிரை நான் என புரிந்தது. கண்கள் மங்கல் ஒளியிலும் தெளிவாகத் தெரிந்தது. எத்தனை மணிநேரம் ஓடியிருப்பேன் என்று தெரியவில்லை. களைப்பே இல்லை. கால்கள் சோர்ந்ததாக மூளை அறியவே இல்லை. ஹிரண்யகர்ப்ப வனத்தை அடைந்திருந்தேன். ஒரு நீர்வீழ்ச்சியின் அருகில் வந்து நின்றேன். அரையிருட்டில், இருண்ட கருவறையின் சாம்பிராணிப் புகை போல மங்கலாக இருந்தது வெள்ளை அருவி. ஒரு பெரிய பாறையின் சமதளமான பரப்பில் நின்றேன். உடலிலிருந்து வியர்வை பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது. வேஷ்டியை அவிழ்த்து பக்கத்தில் நின்றிருந்த உருண்டையான பாறையில் சுற்றினேன். அங்கவஸ்திரத்தை எடுத்து அதன் கழுத்தில் போர்த்தினேன். கொஞ்சம் நேராக நின்று பார்த்தேன். காதிலிருந்த கடுக்கணைக் கழற்றி மரப்பிசினை உருட்டி அதில் பதித்து பாறையின் காதுகளில் ஒட்டினேன். இடையிலிருந்த அரைஞான் கயிற்றை உருவி பாறையின் வேஷ்டி அவிழாமல் இறுக்கிக் கட்டினேன். ஏதோ ஒன்று குறைவது போலிருந்தது. சட்டென்று மார்பில் இருந்த பூணூலை அறுத்து பாறையின் வலதுதோளில் இருந்து இடையின் இடது பக்கம் வரை தொங்கவிட்டு முடிந்தேன். பாறையாகிய நான் முழு நிர்வானமான என்னைப் பார்த்துச் சிரித்தேன்.

       பாறையில் மல்லாந்து படுத்துக்கொண்டேன். சுற்றிலும் உயர்ந்த மலை முகடுகள் எழுந்து சுவர் போல அடைத்து நின்றிருந்தது. இருண்ட வானம் கர்ப்பினியின் மேவிய வயிறு போல கவிந்திருந்தது. அருவி தொப்புள்கொடி போல வளைந்து நீண்டு வந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தேன். கண்களிலிருந்து நீர் பக்கவாட்டில் வடிந்து காதுமடல்களில் தேங்கிக் குளிர்ந்தது. புரண்டு ஒருபக்கமாக படுத்து கால்களை மடக்கி அடிவயிற்றொடு ஒட்டி வைத்துக்கொண்டேன். கைவிரல்களை உள்ளங்கைக்குள் சுருட்டி முஷ்டியை மடித்து இரண்டு கரங்களையும் மடக்கி மார்போடு சேர்த்து தலையைச் சற்றே சரித்துக் கொண்டேன்.

நான் என் அம்மாவின் கருவுக்குள் இருக்கிறேன். இன்னும் பிறக்கவே இல்லை.
***
பகுதி -4