Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - பகுதி 1)

      ராட்சத உடலில் மயிற்கூர்ச்செரிந்து நிற்பது போன்ற மரச்செறிவும், கறுத்துத் திமிர்ந்த, கனத்த பெரும்பாறைகள் ஆங்காங்கே புடைத்து நிற்க, அடுக்கி வைக்கப்பட்ட ரகசியங்கள் போல மடிப்புக்களும் கொண்டு பிரமிப்பையும், அச்சத்தையும் ஒரே பார்வையில் தருவதாகத் தோண்றினாலும் உண்மையில் மலை கொஞ்சம் கூட கொடூரமானது இல்லை. பெற்ற குழந்தைக்காக பாலும், கண்ணீரும் சுரக்கும் எல்லா அன்னை மனங்களும் ஒன்று சேர்ந்த பெரும் கனிவு கொண்ட மனம் அதற்கு உண்டு. வெளித்தெரியாமல் அதன் உடலெங்கும் அமுதம் ஓடிக்கொண்டிருக்கும் நாளங்கள், வானோக்கி அண்ணாந்து ஏந்திய எண்ணற்ற முலை முகடுகளில் சுரந்து தன் மக்களுக்கு உணவூட்டுகிறது. அவள் அன்னை. ஆறு அவள் உந்தியிலிருந்து புறப்படும் தொப்புள் கொடி. அதன் மூலம் அவள் தன் கருவிலிருக்கும் உயிர்த்தொகைக்கு உயிரூட்டிப் போற்றி வளர்க்கிறாள்.


      அன்னை அசையாமல் மல்லாந்து படுத்து இரவும், பகலும் எப்போதும் கண்கொட்டாமல் வானையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லல்பட்டு ஆற்றாமல், அழுது தீர்க்கவும் வக்கற்று, வருந்தி உழன்று கொண்டிருக்கும் மனிதரை எண்ணி இளகி நெகிழ்ந்த அவள் மனதின் ஈரம், கசிந்து தேங்கித் தளும்பிக் கண்ணீர்ப் பெருக்கெடுத்து ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது. பிறர் துயர் பொறுக்காமல் வடிக்கப்படும் கண்ணீராதலாலேயே ஆற்று நீர் இனிப்பாக உள்ளது.

      மலை இங்கே பிரம்மகிரி என்று அழைக்கப்படுகிறாள். அவள் கையிலுள்ள அமிர்த கலசத்தில் இருந்து பொங்கி வழிந்து, மேனியெங்கும் ஆசைதீரத் தழுவி ஓடி, பாதத்தில் சதங்கை போல வளைந்து சிறு கற்களை உருட்டிப் பாறைகளில் மோதி சலசலவென ஓசையெழுப்பிக் கொண்டு பாயும் புண்ணிய நதி நூபுர கங்கை. திருமாலின் உந்தியிலிருந்து தோண்றி எல்லா உயிர்களையும் படைக்கும் பிரம்மன், பெரும் மாயையான அன்னையின் கர்ப்ப பாத்திரத்தில் கருவாய் உருக்கொண்டு பிறக்க விழைந்து ஒரு கல்பம் இங்கே கடும்தவம் இருந்ததனால் பிரம்மகிரி என்ற பெயர் வந்ததாக பிரம்மபுராணம் கூறுகிறது. அன்னையின் திருவயிறு பிரம்மகிரி. மகா மாயையின் கருணையினால் அவள் கருவுட்புகுந்த ஆத்மா அவளுள் கலந்து, இனி ஒரு தாய் வயிற்றில் பிறவா நிலை அடையும் என்கிறது பிரம்மகிரி மகாத்மியம்.

      பரந்து உயர்ந்த மெய்ஞான மலையின் உச்ச சிகரங்களில் ஒன்று பிரம்மகிரி. பரதகண்டத்தின் மூலைகள் எங்குமிருந்தும் மெய்யறிவின் இரும்புக் கோட்டையை தலையால் மோதித் திறந்த ஞானிகள் களைத்து அன்னையின் கருவறை தேடி பிரம்மகிரி நோக்கி காலங்காலமாக வந்துகொண்டே இருக்கின்றனர். எதிலும் அறிவது, யாதுமாகி நிற்கும் அவளையே என்று அறிந்து பிரம்மகிரியின் சரிவுகளுக்குள் இறங்கி ஹிரண்யகர்ப்ப வனத்திற்குள் மறைந்து அவள் கருவை அடைந்து அவளானார்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு மரமும், சடைமுடி காற்றில் பறக்க, கைகளை வானோக்கி உயர்த்தித் தூக்கிக் கூப்பி, அன்னையின் கருவை அடைய ஒற்றைக்காலில் ஒடுங்கி நின்று தவம் புரியும் முனிவர்கள் என்று ஐதீகம்.
***

      ஆதிசங்கரர் தோற்றுவித்த தென்திசையின் ஞானபீடத்தின் ஆதீனத்துக்குட்பட்ட கிளைமடமாக ஸ்தாபிக்கப்பட்டது பிரம்மகிரி ஸ்ரீ லலிதா பீடம். எண்ணூறு வருடமாக அறுபடாமல் தொடர்ந்து வந்த ஆச்சார்யார்களின் ஞான பரம்பரையில் மடம் வளர்ந்து விரிந்திருக்கிறது. அன்னை ஸ்ரீலலிதாம்பிகை வடிவாய் மாபெரும் கற்றளிக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். பிரம்மகிரியில் எப்போதும் கொண்டாடப்படும் தெய்வம் – பெண்கள். 

      ஒவ்வொரு முறை கோயிலில் லலிதாம்பிகையைப் பார்க்கும் போதும் கல் உதடு இளகி விரிந்து புன்னகைத்து ‘வா’ என்று அழைப்பது போலிருக்கும். மறுகனம் ஓடிச்சென்று என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருக்கும். என்முன் நிற்கையில் என் மார்புக்கும் கீழே குள்ளமாக ஒரு சிறுமி மாதிரி நின்று அண்ணாந்து பார்ப்பாள். தன் மடிசார் புடைவையின் தலைப்பால் எட்டி என் முகத்தை ஒற்றி, என் சிகையைச் சரி செய்வாள். நெய்யும், புகையும், வியர்வையும் கலந்தது அம்மாவின் வாசனை. ஒரு நாளில் எத்தனை முறை நான் எதிர்ப்பட்டாலும், அன்று அப்பொழுது தான் என்னைப் பார்ப்பவள் போல புன்னகைத்து அருகில் இருத்தி, எட்டி என் தலையை வருடி, தோளையும் கையையும் மெதுவாகப் பிடித்து விட்டு ‘லோகமாதா, லலிதே என் குழந்தைய பாத்துக்கோடி, அம்மா’ என்று கண்ணைமூடிக் கொண்டு ‘பேச’ ஆரம்பித்து விடுவாள். சலியாத பொறுமையும், எல்லோரிடத்தும் மாறாத அன்பும், வாழ்வில் ஒருவரையும் சபித்திடாத மனமும் உள்ளவள். அன்னையை இறுகப்பிடித்த பக்தி, எப்பொழுதும் மூச்சுடன் சீராக ஒலிக்கும் நாமஜபம். அம்மா எத்தகைய துன்பத்திலும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்திப் பார்த்ததிலை. பெண்ணின் கண்ணீர்த் துளி நிலத்தில் சிந்தினால் அதற்குக் காரணமாக இருந்தவரின் சந்ததியினர் மூன்று தலைமுறைக்கு அதன் துயரை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. தன்னால் ஒரு குடும்பம் அப்படி துன்பப்படக் கூடாது என்று சொல்லுவாள். சரியான படிப்பும், நிலையான வருமானமும் இல்லாத என் தாய்மாமா, இருக்கும் ஒரு வீட்டிற்கும், கொஞ்சம் பூமிக்கும் அம்மா பங்குக்கு வந்துவிடுவாளோ என்று எண்ணி, “ஊமக்கோட்டானா இருந்தே ஆம்படையான முழுங்கிட்டா ராட்சஷி. இவ அழிச்சாட்டியம் தாங்காம அந்த மகராஜன் ஜலத்தில விழுந்து பிராணன விட்டுட்டன். இப்போ என் உசுர்னா போறது” என்ற போது ஒரு வார்த்தையும் பேசாமல், ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தாமல் என்னையும், பாட்டியையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு இறங்கினாள். மடத்து வேத பாடசாலையில் சமையல் வேலையில் சேர்ந்தாள். நானும் அங்கேயே படித்ததனால் சோற்றுக்கும், தங்குவதற்கும் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை தொடர்ந்தது.

மடம் தர்மாதிகாரி அனந்தராமையர் என்னைப் பார்த்துக் கொண்டு அம்மாவிடம் கேட்டார், “இப்பிடி அசடாட்டம் வந்துட்டியேம்மா, நான் கேக்கறேன் அந்த சும்பன ரெண்டு வார்த்தை. மஹா பாபி..”

அம்மா அடுப்பில் இருந்து கண்ணெடுக்காமல், “வேண்டாம் மாமா. அண்ணா ரெண்டு பொம்மணாட்டி குழந்தேள வெச்சிண்டு கஷ்டப்படறார். அதனால ஏதோ சொல்லிட்டார். போறது, விடுங்கோ. நன்னா இருந்தா சேரி. என்னைப் பாத்துக்கறதுக்கு என் பிள்ளை இருக்கான்” என்றாள்.

அனந்தராமையர் பதிலில்லாமல் சூடான பெருமூச்சொன்றை என் தலைமேல் விட்டுவிட்டு பெருத்த சரீரத்தைப் பக்கவாட்டில் இருபுறமும் அசைத்து அசைத்து நடந்து சென்று மறைந்தார். அம்மா என்மேல் பார்வையை வைத்து, எனக்கும் அப்பால் வெட்டவெளியில் எதையோ பார்ப்பவள்போல் தனக்குள், ‘போறும், பொண்கள் கண்ணீரும் பாபமும். அம்பிகே... என் குழந்தையப் பாத்துக்கோடி அம்மா..’ என்று முனுமுனுப்பதைக் கேட்டேன். அம்மா என்னிடம், எங்கள் குடும்பத்திற்கு வாழாமல் இறந்த கன்னிப் பெண்ணின் சாபம் எப்படி வந்ததென்று ஒரே ஒருமுறை சொல்லியிருக்கிறாள்.
***

      இப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யாசங்கர தீர்த்தர் சன்யாசம் சுவீகரித்த மூன்றே மாதத்தில் மஹாசன்னிதானம் கைவல்யபதம் அடைந்துவிட்டார். என் கொள்ளுத்தாத்தா வியாகரண சிம்மம், பண்டிதராஜ யக்ஞராம சாஸ்திரி தான் அப்பொது ஸ்ரீமடத்தின் தர்மாதிகாரி. பணிரெண்டு வயதே ஆகியிருந்த இளைய சுவாமிகளை அடுத்த மடாதிபதியாக பீடாரோகணம் செய்வித்து அவருக்கு மடத்து சம்பிரதாயங்களையும், வேத, வேதாந்தங்களையும் போதித்தார். பீடாதிபதியாகி மூன்று வருடம் கழித்து சுவாமிகள் முதல் விஜய யாத்திரை புறப்படும் முன், சஹஸ்ரசண்டி யாகம் நடத்தவேண்டும் என்று யக்ஞராம சாஸ்திரிகளிடம் தெரிவித்தார். மனைவியை இழந்து ஐந்து வயது மகனுடன் தனித்து வாழ்ந்து வந்த யக்ஞராம சாஸ்திரி ஹோமத்தில் அமரும் தகுதி வேண்டி மடத்து சிப்பந்தி ஒருவரது மகளை, தன்னைவிட பதினைந்து வருடம் இளைய, பதிமூன்றே வயதான சிறுமியைத் திருமனம் செய்து கொண்டார். பிரம்மகிரி தன் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை உச்சத்தில் எழுந்து நிற்கும் படி யாகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. பாரதத்தின் அனைத்துப் பெரிய சமஸ்தானங்களிலிருந்தும், மடங்களிலிருந்தும் பண்டிதர்கள் பிரம்மகிரியில் கூடினர். யக்ஞராம சாஸ்திரி கடும் விரதம் தொடங்கினார். அன்னையே அவர் மேல் ஆவிர்பவித்திருப்பதாக பேச்சு எழுந்தது. சுவாமிகளைத் தவிர அவரிடம் நெருங்கிப் பேசவே அனைவரும் அஞ்சினர். சமீபகாலங்களில் அப்படி சிறு பிசகும் இல்லாமல், சாஸ்திர நியமத்தோடு சண்டி யாகம் நந்ததாக வரலாறே இல்லை. பத்து நாட்களும் மனைவியுடன் யாகசாலையில் வேள்வித்தீ மேனியில் சுடர்ந்து ஒளிவிட யாகம் நடத்தினார். பத்தாவது நாள் மகாபூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டு முடிந்தவுடன் அவரது மனைவி -அந்த இளங்கன்னி, தர்ப்பைப் புல்லால் அவரது தோளைத் தொட்டபடி அப்படியே அவர் மேல் சாய்ந்தாள். சிப்பந்திகள் உடனே வீட்டிற்கு தூக்கிகொண்டு போய் கிடத்தினர். உடல் தனல்துண்டு போல கொதித்தது. மூடியிருந்த மெல்லிய வெண் இமைகளுக்குள் விழிப் பந்து ஒரு முறை சுழன்றுவிட்டு பிறகு புருவம் நோக்கி மேலேறியது தெரிந்தது. உதடு ஏதோ சொல்ல வருவதுபோலக் குவிந்து, ஒருகனம் நின்று பின் பழைய நிலை அடைந்து, மெல்ல விரிந்து புன்னகைப்பது போல் நின்றது. ஒரு ஆழ்ந்த ஆனந்தமான துயில் போல் அசைவற்று இருந்தது. சிவந்த முகம் வெளிறி மஞ்சள் பூத்தது. உடல் குளிரத் தொடங்கி, பின் விரைத்தது. பெண்கள் கூட்டம் தங்களை இழந்து, ஆண்களின் நெஞ்சு அதிர அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து கதறியது. யக்ஞராம சாஸ்திரி செய்வதறியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார், பின்பு பித்துக்களை படிந்த முகத்துடன் அந்த உடலைப் பார்த்தார். கரகரப்பும், கீச்சுக் குரலும் கலந்த, அதுவரை அவரிடமிருந்து யாரும் கேட்டறிந்திடாத ஒரு ஓலம் எழுந்தது. அழுத்தி மீட்டிய வீணைத்தந்தி போல் உடல் அதிவேகமாக அதிர்ந்து நடுங்கியது. கழுத்து நரம்புகள் புடைத்துத் தலை ஒருபக்கமாய் சாய்ந்து இறுக, மோவாய் மறுபக்கம் இழுபட்டுக் கோணித்திறந்த வாயில் பற்கள் அழுந்தப் பதிந்து நாக்கிலிருந்து ரத்தப் புள்ளிகள் எழுந்து வந்தது. மூத்திரம் பிரிந்து தொடை வழி ஒழுக, மூக்கிலும், வாயிலுமிருந்து கோழை மார்பில் வடிந்தது. மார்புக்கூட்டை நொறுக்கி விடும்படி முஷ்டியால் படார் படாரென்று அறைந்துகொண்டு, சிகை அவிழ்ந்து விரிய, பாய்ந்து கோவிலை நோக்கி ஓடினார். பஞ்சகச்சம் நழுவி, தடுக்கி தெருவில் விழுந்து உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது, வேட்டியை உருவி எறிந்துவிட்டு வெறும் கௌபீனத்துடன் ஒடினார். ஒரு கூட்டமே அவரைத் துரத்திக்கொண்டு ஒடியது, அவர்கள் கண்ணெதிரே அவர் காற்றில் புகுந்து மறைந்துகொண்டிருந்தார், யாராலும் அவரை நெருங்கிக் கூட ஓடமுடியவில்லை. வழியெங்கும் விழுந்து புரண்டு உடம்பெல்லாம் சிறுகற்களும், முள்ளும் பதிந்து கீரலும், சிராய்ப்புமாக, ரத்தம் கசிய கோவிலுக்குள் போய் விழுந்தார். தடுக்க முயன்ற கருவறையிலிருந்த பட்டரை தூக்கி வெளியே எறிந்து கதவை அடைத்துக்கொண்டார். லலிதாம்பிகையின் பாதம் தெறிக்கும்படி நெற்றியால் ஓங்கி முட்டினார். குருதி பெருக்கெடுத்து அவள் பாதம் கழுவியது. வெளியிலிருந்தவர்கள் கடைசியாக கேட்டது, ‘அம்மா, என்னண்ட ஏன் இந்த பரீட்சை? எதுக்கோசரம் இந்த விளையாட்டு?’ என்ற வார்த்தைகள். உள்ளே கால் குளிர்ந்த அன்னை உதடு நெகிழ்ந்து புன்முருவலுடன் ‘வா’ என்றழைத்தாள். விஷயம் சுவாமிகளிடம் சேர்ந்து அவர் கோயிலுக்குள் வருவதற்குள், யக்ஞராம சாஸ்திரி அன்னையின் கருவறையிலிருந்து பிறந்த குழந்தை போல் ரத்தம் தோய்ந்த உடலுடன் வெளியே தவழ்ந்து விழுந்து, கோயிலை விட்டு வெளியேறி அட்டகாசமாக சிரித்துக் கொண்டே பிரம்மகிரி மலையின் சரிவில் இறங்கி ஹிரண்யகர்ப்ப வனத்தின் அடர்ந்த மரக்கூட்டங்களுக்குள் சென்று மறைந்தார். செந்தழல் சுடராக ஒரு இளைஞன் அம்மையின் கருவறையை அடைந்ததை பழங்குடிகள் கண்டு கைதொழுதார்கள்.

      ‘அந்தப் பொண்ண பெத்தவள் எப்படிக் கதறியிருப்பா? எத்தன சாபம் கொடுத்தப்பறம் அவ மனசு ஆறித்தோ? அம்பிகே...’ என்று அம்மா நடுங்கும் குரலில் மெலிதாகச் சொல்லிக்கொண்டு என்னை இழுத்து தன் வயிற்றோடு கட்டிக்கொண்டாள். குழைவான அடிவயிறு மெத்தென்று, கதகதப்பாக இருந்தது. உடலோடு ஒட்டிக்கொண்டே தலையை உயர்த்தி அம்மா முகத்தைப் பார்த்தேன். சிவந்திருந்தது. கண்ணீர் இல்லை. ஒருவேளை விழித்திரையின் பின்னால் உள்ளே அருவியாகக் கொட்டி நெஞ்சை நனைக்கிறதோ என்று எண்ணிக் கொண்டேன். என் காதை வயிறோடு வைத்து அழுத்தினேன், உள்ளே சிறிய நீக்குமிழிகள் மேலெழுந்து உடையும் மெல்லிய சத்தம், கலைவையான ஏதேதோ உறுமல், முறுகல் ஒலிகள் எங்கோ ஆழத்தில் இருந்து கேட்பது போலிருந்தது. முன்பு எப்போதோ அருகில் கேட்ட நினைவு எழுந்தது.
***
                                                                பகுதி-2