Friday, July 15, 2011

ஞான லோலன் (சிறுகதை)

     பிளவில்லாத உயிர்க் கடலில் நானாகவும், நானல்லாதனவாகவும் என்னைப் பிரித்தறியச் செய்யும் அந்த முதல் பிரக்ஞை வந்து மோதிய கணத்தில் தணித்து உருண்டு ஒரு சிறு துளியானேன். வெகு விரைவில் ‘நான்’ - ‘எனது’ என்னும் இரண்டு சிப்பிகளுக்கு இடையில் மாட்டி மூழ்கி கடலடியில் அழுந்தி, அழுந்தித் திரண்டு முத்தானேன். பிறகு எப்போதும் மீண்டும் கடலாவது பற்றிய கனவு தான் நான்.
     
       பிரக்ஞை வந்து மோதிய நாள் முதல் இவனை அறிவேன். எப்போதும் ஒன்று நான் என்ன சிந்தித்தாலும் எதிர் விவாதம் செய்வான் அல்லது சும்மா இருக்கும் பொழுதுகளில் என்னைத் தூண்டியபடியே இருப்பான். என்னுடனேயே வளர்ந்தாலும், எனக்கு முன்னும், பின்னும் சாஸ்வதமாய் எப்போதும் இருந்து வருபவன் போலும், நான் மீண்டும் கடலாவதற்கு தடை இவன் தான் என்றும் தோன்றும். இவனை அடக்கி மேலெழுவதே நான் ஒவ்வொரு கணமும் நடத்தும் போர்.
      
       இன்று காலையில் அலுவலகம் செல்லும் வழியில் கோயிலுக்குள் நுழைந்தேன். ஸ்ரீமூலநாதரிடம் நேற்றிரவு பள்ளியறை பூஜைக்குச் செல்லும் போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன், பதில் கண்டுபிடித்து விட்டாரா என்று கேட்க வேண்டும். கருவறையில், கிணற்றுக்குள்ளிருந்து எட்டி பார்க்கும் தலை போல ஆவுடை நடுவிலிருந்த லிங்கம் தெரிந்தது. உள்ளே தடித்த திரியிட்ட சரவிளக்கு ஒன்று நெளிந்து படபடவென ஆடிக்கொண்டு ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, சன்னமான திரியுடன் குத்துவிளக்கின் தீபம் அசையாமல் நின்று கேட்டுக்கொண்டிருந்தது. அங்கே வருபவர்கள் யாரும் ஸ்ரீமூலநாதசுவாமியுடன் நின்று பேசுவதேயில்லை. கண்ணீர் மல்க ஏதாவது கேட்பார்கள், அவர் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். ஆனால் கணேச பட்டர் இல்லாத சமயம் வந்தால் ஸ்ரீமூலநாதர் என்னோடு நன்றாக பேசுவார். மயில்கண் வேஷ்டியில் அழகாக இருப்பதாகச் சொன்னால் சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
     
       ‘என்ன இன்னைக்கு ஆபீசுக்கு டிமிக்கியா?’ என்று வெற்றிலைகாவிப் பல் தெரிய சிரித்துக்கொண்டே பட்டர் பூணூலில் இருந்த சாவியால் பூஜைக்குக் கதவைத் திறந்தார். பதில் சொல்லாமல் ஸ்ரீமூலநாதரிடம் ராத்திரி மீண்டும் வருவதாக கண்ஜாடை காட்டிவிட்டு விறுவிறுவென வெளியேறி குளக்கரையைச் சுற்றி வந்து நந்தவனத்தில் நுழைந்தேன்.  பத்துத் தூன் மண்டபத்தில் யானை சங்கிலியால் கட்டப்பட்டு நின்றிருந்தது. முன்னால் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த தென்னைமட்டையில் காலைவைத்து அழுத்தி, கொஞ்சம் ஓலைகளை தும்பிக்கையால் பற்றிச்சுருட்டி ஆய்ந்து எடுத்து ஒருமுறை தன் பெருத்த வயிற்றின் இருபுறமும் சுழற்றி, மொய்க்கும் பூச்சிகளை விரட்டிவிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டது. அதன் வாலை ஓயாமல் இரண்டு பின்னங்கால்களின் மேற்புறமும் வீசிக்கொண்டே இருந்தது. யானை தன் சக்தியின் ஒரு பங்கை பூச்சிகளை விரட்டவே செலவழிக்க வேண்டியிருக்குமென நினைத்துக் கொண்டேன். பாகன் மூர்த்தி அதன் காது மடலில் அங்குசத்தை தொங்கவிட்டுப் போயிருந்தான். சிறுநீர் கழிக்கவோ, பீடி குடிக்கவோ போயிருக்கலாம். அங்குசத்தின் தொரட்டி இரும்பின் நெருடலே பாகனின் இருப்பை யானைக்கு உணர்த்தும் போலும். ஒருவர் யானைப் பிண்டத்தில் நின்றிருந்தார். நான் பார்ப்பதை உனர்ந்தவராய், ‘கால்ல ஆணி இருந்தா சரியாயிரும்’ என்றுசொல்லிச் சங்கடமாய்ச் சிரித்து, வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.
      
       வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. சூரியஒளியின் கோணத்திற்கேற்ப மண்டபத்தின் பெரிய தூண்களும், மேலெழும்பி வளைந்த விதானமும் கீழே கல்தரையில் கரிய நிழலாய்ச் சரிந்திருந்ததைப் பார்க்க பத்துக் கால் கொண்ட பெரிய யானை ஒன்று படுத்திருப்பது போலிருந்தது. தூணில் கிழக்கு நோக்கி இருந்த பாவை விளக்குச் சிற்பப் பெண் ஆயிரம் ஆண்டு இளமையில் மாறாத தன் புண்ணகையுடன், கரங்களை சற்று முன்னால் நீட்டி ஏந்திய தீபத்தில் சூரியனையே சுடராக பொருத்த விழைபவள் போல இருந்தாள். அவள் காலடியில் உட்கார்ந்து தூணின் சப்பட்டையான பரப்பில் முதுகைச் சாய்த்து, வாகாக கால் நீட்டி யானையின் அருகில் உட்கார்ந்து கொண்டு அண்ணாந்து பார்த்தேன். இப்போது யானை நாலு தூண் மண்டபம் போல இருந்தது. இன்னும் பலமடங்கு பிரம்மாண்டமாய் மண்டப மேல்கூரையை எட்டுமளவு வளர்ந்துவிட்டது. அதன் கம்பி வால் மயிர், சுருக்கம் நிறைந்த தார்ப்பாயைப் போன்ற தோல் பரப்பை உரசும் ஒலியும், சருமத்தின் மிருக நெடியும், காதுமடல் அசைவு விசிறியடிக்கும் காற்றும், அதன் வயிற்றுக்குள் ஜீரனமண்டல தசைகள் உண்டாக்கும் ஒலிகளையும் கூடத் துல்லியமாக உணர்ந்தவனாக பிரமித்து வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். “யானைக்குத் தன் காட்டை நினைவிருக்குமா? தன் இனத்தைப் பிரிந்து வந்து இங்கே அனாதையாக நிற்பது தெரியுமா?” என்ற யோசனை வந்த போது, யானை எதையோ நினைத்துக் கொண்டது போல தலையை ‘ஆமாம் ஆமாம்’ என்று ஆட்டியது. மூலநாதரைப் போலவே யானையும் என்னுடன் பேச விரும்புவது புரிந்தது, அதற்காகத் தான் என்னை இவ்வளவு அருகாமையில் இருக்க அனுமதித்திருக்கிறது. ஒருவேளை பாகன் வருவதற்குள் ஏதாவது சொல்லலாம் என நினைக்கும் போதே, சட்டையின் கீழ் நுனியைப் தூக்கி வாயால் கவ்வி, வேட்டிமேல் கட்டியிருந்த அகலமான பச்சை பெல்ட்டை இறுக்கியபடியே வந்த பாகன், “என்ன சார் இங்க உக்காந்துருகீங்க? பெரிய உசுரு சார். தெரியாம கை, கால் லேசாப் பட்டுருச்சுன்னா அப்புறம் ரொம்ப கஷ்டம் சார்....” என்று இழுத்தான். மெல்லச் சிரித்து, எழுந்து பக்கத்தூணின் அடியில் அமர்ந்து கொண்டேன். “இன்னைக்கு லீவுங்களா..?” என்றவனிடம் “இல்ல. போகனும்..” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டு பேச்சைத் தவிர்க்கும் பொருட்டு பார்வையை விலக்கி யானைமேல் பதித்தேன்.
     
       யானை தன் தேன் நிறக்கண்ணால் என்னை அமைதியாக பார்த்தது. அந்த அமைதி என்னை வந்தடைய ஒரிரு நிமிடங்கள் ஆகிக்கொண்டிருந்த போது இவன் வந்து என் பக்கத்தில் சத்தமில்லாமல் உட்கார்ந்ததை உணர்ந்தேன். மூளைக்குள்  இறுகிக் கிடந்த ஒரு மடிப்பு மெல்லச் சோம்பல் முறித்து நெகிழ்ந்து கொண்டது. ம்ஹூம்.... திரும்பியே பார்க்கக் கூடாது! உடலில் சிறு சலனம் கூட வரக்கூடாது, இமை நொடித்தால் கூடப் போதும் உள்ளே நுழைந்து பேச ஆரம்பித்து விடுவான். காற்று வெளியில் கண்ணுக்குத் தெரியாமல் மிதக்கும் நுன்தூசித் துகள்கள், சாளரம் வழியே பீறிடும் ஒளிப் பாதையில் மினுக்கம் பெறுவது போல், மூளையின் உள்ளாழ்ந்த, இருண்ட அடுக்குகளில் பொதிந்து கிடக்கும் ஆயிரத்தெட்டு கேள்விகள், லட்சம் சந்தேகங்களைக் கீறி வெளிக்கிளப்பி விட்டுவிடுவான். பிறகு இராப்பகலாக அவனைச் சமதானப்படுத்த வாய் ஓயாமல் பதில் சொல்ல வேண்டிவரும். இருந்த நிலையில் மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டேன். உடம்பு எடை கூடிக் கனத்து அப்படியே கல்லாய் உறைந்தேன். உடம்பு மட்டும் அல்ல மனசு அசைந்தாலும் கூட ‘சட்’டென்று உள்புகுந்து உயிரைக் கூசச் செய்யும் எள்ளலைத் தொடங்கிவிடுவான். இதைத் தவிர்க்க எனக்கு ஒரு தந்திரம் தெரியும். பலவிஷயங்களில் மனதைச் சிதறடிக்காமல் ஏதாவது ஒரு பொருளைப் பற்றிய விஷயத்தில் சிந்தனையை விரட்டுவது. அதுவும் என்னால் தொடர்ந்து ஒரே ஒழுக்காக ஒரு விஷயத்தை சிந்திக்க முடியாது, அதனால் ஒரே பொருளைப் பற்றிய பல உதிரி சிந்தனைகளை வளரவிட்டுத் தொடுக்க ஆரம்பிப்பேன். தடதடக்கும் தண்டவாள அதிர்வை உள்ளிழுக்கும் சரளைக் கற்களாய் இந்த உதிரி சிந்தனைகள், வரிகள் என் மன அதிர்வுகளை உள்வாங்கி சமன்படுத்த உதவும்.
      
       இப்போது என் முன் தெரிவது அரசமரத்தின் பின்னால் கண்கூச வைக்கும் சூரியனும், அதற்கும் அப்பால் வெளுத்த நீல வானமும். சுரியனை உற்றுப் பார்ப்பது ஒன்றும் கஷ்டமில்லை. மரத்தின் சிறுகிளைகள், நுனிக்குச்சிகள், இலைகள் வழியாகப் பார்வையை நிலை நிறுத்த வேண்டும். மேல்பார்வைக்கு மரத்தைப் பார்ப்பதாய் பாவித்துக் கொண்டாலும், உள்பார்வையும், மனமும் சூரியன் மேலேயே இருக்க வேண்டும். இப்போது உங்கள் கண்கள் அபரிமிதமான ஒளி வெள்ளத்தை உள்வாங்கத் திராணியற்று கூசி உறுத்தும், இமைகளின் உள்சதை துடிக்கும். ஆனாலும் கண்ணை இமைக்கவே கூடாது. கண்களில் நீர் சுரந்து விழியினை மறைத்து இமைக் கரைகளைத் தொட்டு தளும்பி நிற்கும். பார்வையை விலக்காமல், கீழிமையை மட்டும் சற்று மேல்நோக்கி நெறித்தால் கண்ணீர் கடைக்கண் வழியாக இளம் சூடாகக் கசிந்து வழியும். சற்றே உங்கள் முகத்தைத் தூக்கினால் கன்னக் கதுப்புகள் வழியாக ஓடி மூக்கின் புடைத்த அடிப்பாகத்தைத் தொட்டு, இதழ்களின் ஓரக்குழிக்குள் விழுந்து நாவினை அடையும். உப்பு ருசியை அறிவீர்கள். ஆறாத உங்கள் ஆழ்மனதின் சுவை அது. மரத்தின் சிறு கிளைகள் மற்றும் இலைகளின் விளிம்புகள் இப்போது பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சிவந்து, ஒளி பெற்று தகதகக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஒளி விளிம்பிலிருந்து பரவி மையத்தை நோக்கி விரியும். ஒளி பூரணம் பெற்று மரம் மறையும். ஆம்! நீங்கள் காண்பது முழுச் சூரியனை. காற்றில் கம்பி மத்தாப்பை வைத்து வரையும் வட்டம் போல், சுழலும் கூரான பட்டப்பகல் வட்டத் திகிரி. பொன்னிறமும், சிவப்பும், ஆரஞ்சு வண்ணமும், நீலமும் கலந்து சுழித்து கொப்பளிக்கும் சூரியன். பின்னர் நிறங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமிழ்ந்து கண்ணைப் பறிக்கும் அதிதூய வெண்மை பொங்கும் சூரியன். எங்கும் வெண்மையன்றி வேறெதுவுமில்லை. மரம் இல்லை. கண்ணை இமைக்காமல் சடாரென்று யானையைப் பார்த்தேன். யானை வெண்மையாகி மறைந்து விட்டது.


       வானத்திற்கு இரண்டு கண்கள். ஆனால் எப்பொழுதும் ஏதாவது ஒரு கண்ணால் தான் பார்ப்பாள். பகலெல்லாம் வெப்பம் கொளுத்தும் பார்வை. நேரமாக ஆக உச்சத்தில் நின்று ஒற்றை விழியை உருட்டிப் பார்ப்பாள். தன் ஒளிச்சாட்டையைச் சுழற்றி மரம், செடி, புழு, பூச்சி, விலங்கு, மனிதன் என்று பேதம் பார்க்காமல் முதுகில் சொடுக்கி இயங்க வைப்பாள். மெல்ல உயிர்கள் களைக்கும் வேளையில் சினத்தால் சிவந்த விழியை ஆழியில் முக்கி குளிர்விப்பாள் அல்லது உயர்ந்த மலை அடுக்குகளின் பின்னால் ஒளித்து வைப்பாள்.......


இரவில் கற்பனைகளைத் தூண்டும் -மிதமான ஒளியும், குளுமையுமாக கணிந்து பார்க்கும் கண். சிலநாள் குறும்புக் குழந்தை சிரிக்கும் போது கண் கோடு போல தீற்றலாய் தெரிவது மாதிரி பாதி திறந்து இருக்கும். அவ்வப்போது ஒருநாள் அந்தக் கண்ணை முழுக்க மூடி இரவின் பேதமின்மையை, ஏகாந்தத்தை அனுபவிக்க வைப்பாள்.......


பௌர்ணமி நாளில் நட்சத்திரங்கள் சிதறிச் சூழ்ந்த முழுநிலாவைப் பார்த்தால், சர்க்கரைத்துண்டை எறும்புகள் மொய்ப்பது மாதிரி......


பகலெல்லாம் மனிதர்களின் வெள்ளைப் விழியில் கருமனியுடன் கூடிய கண்களையே சந்தித்து விட்டு, பௌர்ணமி இரவு வெட்டவெளியில் மல்லாந்து படுத்து முழுநிலா மிதக்கும் வானைப் பார்த்தால் கரியவிழியில் வெண்மனி கொண்ட ஒற்றைக் கண் பூமியை வேவு பார்ப்பதாக ஒரு பயம் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும்....
பனி பொழிந்து வெண்மை போர்த்தியிருக்கும் கடுங்குளிர்காலப் பூமிப் பரப்பைப் பார்க்கையில் ‘நிலவு உருகி நிலத்தில் உறைந்தது போல’ என்று வர்ணிக்கத் தோண்றும்.......
................................................. வானம், சூரியன், நிலவு, பகல், இரவு, நீலம், வானம், வானம், வெண்மை, குளுமை, அமைதி, அமைதி, அமைதி.....................


“என்ன அபத்தம் இது? ஏன் வானத்தைப் பார்க்க வேண்டும்? மண்ணின் கேள்விகளுக்கு விண்ணில் எப்படி பதில் கிடைக்கும்? வானத்தில் எங்கே அமைதி இருக்கும்?”
-யார் குரல் அது? ஐயோ! எங்கே இடறினேன்? கடவுளே... தர்க்கம்... தர்க்கம் புகுந்துவிட்டதே! இவன் உள்ளே நுழைந்து என்னை பரிகசித்து கொல்லப் போகிறானே....


        குவித்து வைத்த தவிட்டு மலையைக் காற்று சுலபமாகச் சிதறடித்து முன்னேறுவது போல் என்னை சிந்தனையை அறுத்து ஊடுறுவி “அப்ப என்ன செய்யப் போறதா உத்தேசம்?” என்று என்னை சீண்ட ஆரம்பித்தான்.


“எல்லாம் போதும்னு தோணுது. இந்த வாழ்க்கை, உறவுகள், பணம், வேலை, வெற்றி, அனுபவம் இதுக்கெல்லாம் எல்லையே இல்லை. முடிவே இல்லாத போட்டியில என்ன சுவாரஸ்யம்? இதெல்லாம் புரியாத வரைக்கும் தான் உலகத்த சந்தோஷமா அனுபவிக்க முடியும். புரிஞ்சா அப்புறம் வேற வழியே இல்லை, இதெல்லாத்தையும் கைவிடுறது மட்டும் தான் நிம்மதி” என்றேன்.


“அஹ்ஹஹ்ஹெஹ்ஹே.........” என்னை வெறி கொள்ள வைக்கும், அவனுக்கு தீனி கிடைத்துவிட்ட நக்கல் சிரிப்பு.. “இந்தா நிக்கிறாரே நம்ம தலைவரு யானைப் பாகன், அவன மாதிரித் தான் நீயும். அவனுக்கு, தான் யானையை முழுசாப் புரிஞ்சுக்கிட்டவன்னு நினைப்பு. யானை அவன் வெச்சிருக்கிற அங்குசத்துக்கு அடங்கி அடிமையா மண்டைய ஆட்டிக்கிட்டே நிக்கிறதா ஒரு பெருமை. அவனக்குத் தெரியாது யானை அவனை வெச்சு சும்மா விளையாண்டுகிட்டு இருக்குன்னு, என்னைக்காவது ஒரு நாள் லேசாத் தட்டினா தெரியும், நிஜமான யானைன்னா என்னன்னு. வந்துட்டான் தத்துவம் பேச..... தக்கினூண்டு உலகம், மிஞ்சிப்போனா எழுபதோ, என்பதோ வருஷம் ஒரு சின்ன வாழ்க்கை, இதோ என்ன நடந்ததுன்னே தெரியாம முப்பது வயசு ஓடிப் போயிடுச்சு, நீயெல்லாம் இன்னும் ஒரு நாப்பது வருஷம் இருந்தாலே பெரிய விஷயம். அதுக்குள்ள உலகம், வாழ்க்கை நிலையாமை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சாம்...”


“மனுஷன் தோண்றின நாள் முதலே, இந்த உலகத்தை அனுபவிக்கிறதுக்கு முன்னாடியே இதப்பார்த்து பிரமிச்சுப் போயிருப்பான். இதை முழுசா அனுபவிக்கிறதோ, முற்றா அறியறதோ சாத்தியமில்லேன்னு உள்ளூர தெரிஞ்சவன் தான் தாழ்வுமனப்பாண்மையில பூமியைப் பழிவாங்குற மாதிரி எல்லாத்தையும் அறிவியல் ஆராய்ச்சிகளால கூறு போட்டுப் பிரிச்சுக் காரணம் கண்டுபிடிச்சு, ‘புரிஞ்சுக்க முடியாத ரகசியம் எதுவுமில்ல, எல்லாம் அனுபவிக்க வேண்டிய சாதாரன போகப் பொருள் மட்டும்தான்’னு நிறுவ இடைவிடாம முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கான். ஆனா அறிவியல் வளர வளர பூமி மிகமிகப் பிரம்மாண்டமான பேரண்டத்தில வெறும் ஒரு தூசின்னு தெரிய, இத்தனை கால மானுட மனதின் ஆனவம் கற்பனைக்கு எட்டாமல் பரந்து விரிஞ்சிருக்கிற மாபெரும் மாய வலையின் ஒரே ஒரு கண்ணியின் பௌதிக விதிகளை கண்டறியும் அற்ப முயற்சின்னு உணர்ந்தவன், இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி குறுகிக் கூசிச் சிறுத்துப் போவான். இந்த ஆன்மீகமான சிறுமையிலிருந்து மீள ஒரே வழி இந்த பிரம்மாண்டப் பிரபஞ்சம் முழுசுமே என்னிலிருந்து வேறில்லை அல்லது அண்டத்தில் நானொரு அங்கமில்லை; நானே அதுன்னு உணருவது தான். வெறுமனே படிச்சுத் தெரிஞ்சிக்கிறதில்லை.”


“இப்போ எதுக்கு இவ்ளோ பெரிய உபன்யாசம்? யாருக்கு? இந்த சின்ன உலகத்துப் போட்டியில மத்தவன ஜெயிக்க முடியாதுங்கிற பயம் வந்துருச்சு. பின்வாங்கி ஒடுற. அத சமாளிக்க உன்னை நீயே ஏமாத்திக்கிறதுக்கு உட்கார்ந்து இத்தனை படிச்சு யோசிச்சு வச்சிருக்க. அதுக்கு பதிலா சிம்பிளா உன் பலவீனத்த நீயே ஒத்துக்கிறது எவ்வளவோ நேர்மையான விஷயம்”


“இல்ல, நான் ஒன்னும் தோற்றுப்போயி பின் வாங்கல. சாதாரன குடும்பத்திலேர்ந்து வந்து, உலகளவில நடந்த போட்டித் தேர்வில ஜெயிச்சு அமெரிக்காவில உதவித்தொகையுடன் முக்கியமான பல்கலைக்கழகத்தில பி.எச்.டி பட்டம் வாங்கினவன். நான் செஞ்ச நோய்த்தடுப்பு ஆராய்ச்சித் துறையில உள்ள முன்னோடி அராய்ச்சியாளர்கள் பொருட்படுத்தி படிக்கிற அளவுக்கு தரமான ஆய்வறிக்கைகளையும், கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டிருக்கேன். அதெல்லாம் விட்டுட்டுத் தான் சொந்த ஊருக்கே திரும்பி வந்திருக்கேன்”


“இதுவே பெரிய சாதனைன்னு நீயே முடிவு பண்ணிட்டியா? நோபல் பரிசு வாங்குற அளவுக்கு பெரிய உலகமகா கண்டுபிடிப்பு ஒன்னும் செஞ்சிடலியே.... வெறும் ஆயிரத்தோட நீயும் ஒன்னு, அவ்வளவு தானே?! இல்லேன்னா பள்ளிக்கூடத்தோட படிப்புக்கு முழுக்கு போட்டுட்டு, ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்க், நகைக் கடைன்னு வியாபாரத்தில இறங்கி கோடி கோடியா அள்ளுற உன் நன்பன் மாதிரி ஆளுகளப் பாத்து, பி.எச்.டி எல்லாம் படிச்சும் நம்மால இவ்வளோ சம்பாதிக்க முடியலியேன்னு நொந்து, வைத்தெறிச்சல்ல இப்படியெல்லாம் வெட்டி வசனம் பேசுற!”


“பணம் சம்பாதிக்கிறது தான் பெருசுன்னா, நான் அமெரிக்காலயே இருந்திருப்பேன். அதனால எல்லாம் என் மனசுக்கு முழு நிறைவு கிடைக்கும்னு தோணல, வேற ஏதோ தான் எனக்கு விதிச்சிருக்குன்னு ஒரு உள்ளொலி. அதத் தேடி அடையறது தான் இனிமே என் பயனம்”


“சரி அதுக்கு இப்ப என்ன செய்யப்போற? பேசாம வீட்டை விட்டு வெளியேறி சாமியாராகி ஊரு ஊரா சுத்தப் போறியா?”


“ஏன், சன்னியாசி ஆக முடியாதா? அது தான் இந்த தேடலுக்குச் சரியான வாழ்க்கைமுறை. யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாருடைய தொந்தரவும் இல்லாமல் தனித்து இருக்க ஒரே வழி. ஆமாம், சாமியாராகி ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு என் மனசு தேடுற உண்மையை அடைவேன். எத்தனை எத்தனை ஆத்மாக்கள் இந்த மன்னில ஞானம் தேடித் தீராத தாகத்தோட இந்த நாட்டை சுத்தி அலைஞ்சிருக்கு? தேடல் உண்மையா இருந்த யாரும் உணராமல் அடங்கியதில்லை. வேதகால ரிஷிகளில் ஆரம்பிச்சு, சங்கரர், விவேகானந்தர், ரமணர் வரை எத்தனை ஆயிரம் முன்னோடிகள். எத்தனை ஆயிரம் ஞான நூல்கள். அத்தனை பேரும் மூடர்களா? அத்தனையும் பொய்யா?? எதுவானாலும் சரி, நானே தேடி விடையை உணருவதை தவிர எனக்கு இனி வேறு வழி இல்லை. ‘யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே’. நெருப்பா எரியுவேன், சாம்பலும் மிஞ்சாது”


“அடேயப்பா...!! பேச்செல்லாம் பலமா இருக்கு, தமிழ் நெடியடிக்குதே.. நல்லா மனப்பாடம் பண்ணியிருக்க, பஞ்ச்சிங்கா வேற பேச கத்துக்கிட்டிருக்க. சபாஷ், அப்டியே அடுத்து சிஷ்யர்கள், ஆசிரமம், வெளிநாட்டுக் கிளைகள், சொத்துனு செட்டிலாயிடலாம்னு திட்டமா? இது தான் அசல் வேதாந்தம், இப்ப தான் புரியுது. நான் கூட உன்னை ஏதோன்னு தப்பா நினைச்சுட்டேன். பிழைக்கத் தெரிஞ்சவன் தான். வாழ்த்துக்கள்!”


“நான் உனக்காகவோ, வேற யாரையும் சமாதானப்படுத்துறதுக்காகவோ பேசல. இது தான் என் ஆழ்மனம் விரும்புறது. இது தான் என் ஜன்ம ஜன்மாந்திரங்களின் தவிப்பு. இதில வேற யாருக்கும் நான் என் நோக்கத்தை புரியவைக்க, நேர்மையை நிரூபிக்க, விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் கொஞ்சம் கூட இல்லை. என் தனிப் பயனத்தில நான் யாருக்கும் கட்டுப்பட்டவனும் இல்ல. நீ என்னை எவ்வளவு மோசமா கிண்டல் பன்னினாலும், என் உறுதியை குலைக்க முடியாது”


“அஹ்ஹஹ்ஹஹ்ஹா.... நெனைச்சுப் பார்க்கவே எவ்ளோ சிரிப்பா இருக்கு. நீ...... சாமியாராகி... ஹிஹ்ஹிஹெஹே.... யோசிச்சுப் பாரு... காசியில காலங்கார்த்தால அந்த குளிரில கையில நயா பைசா இல்லாம நீ தெருவில பிரம்மத்தை ‘தேடி’ லோலோன்னு அலையும் போது, ரம்பை, ஊர்வசி போல ரொம்ப அழகிகளெல்லாம் வேண்டாம் -சூடா ஃபில்டர் காபியும், முருகல் தோசையும் கண்டா போதும், உன் ‘பிரம்ம தேடல்’ அதோட நிறைவேறிடும். சாம்பார் வாளிக்குள்ளேயே ஜல சமாதி ஆயிடுவ. அவ்வளவு ஸ்திதப் பிரக்ஞன். மதராசி பாபா தோசையில பிரம்மத்தைக் கண்டு மகாசமாதி ஆன கதை காசிலேர்ந்து கைலாசம் வரைக்கும் ரிஷி புராணமாகி அப்புறம் தோசை முமுக்ஷுக்களின் மகாபிரசாதமாகி சௌத் இந்தியன் ஹோட்டலுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். இதுக்காகவே நீ சன்னியாசி ஆகலாம். ஹெ ஹெ ஹெ....”


       அடக்க முடியாமல் சிரித்த அவனைச் சமாளிக்க முடியாத கையாலாகாத்தனத்தினால், எரிச்சலுற்று, என் கைப்பையை அவன் முகம் நோக்கி விட்டெறிந்தேன், அது யானைப் பாகன் முதுகில் பட்டது. மேலும் கோபம் கூடியவனாய், உரத்த குரலில், “நீ போய்த் தொலை, உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கல, உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை. உன்னை மதித்து இவ்வளவு நேரம் பதில் சொன்னதே வீண். இதுக்கு மேலயும் என் கிட்ட வெட்டி விவாதம் பண்ண வராதே, அப்புறம் நடக்கிறதே வேற” கைகளை காற்றில் வீசி, கண்கள் சிவக்க, தொடைகள் நடுங்க எழுந்து நின்று கத்தினேன்.


இதெல்லாம் சரி..... இந்த முட்டாள் ஜனங்களுக்கு நாங்கள் பேசுவதில் என்ன புரியும்? ஏன் எங்களைச் சுற்றி எட்ட நின்று இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிலும் என்னை விடுத்து இவன் மேல் ஒரு நக்கலும், அனுதாபமும் கலந்த பார்வை வேறு! எனக்குப் புரியவில்லை! பாவம். இவர்கள் கிடக்கட்டும், நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆம்.... நான் மீண்டும் கடலாவது பற்றி....
-பிரகாஷ் சங்கரன்