Saturday, November 16, 2013

அயல் கலாச்சாரம் (பகுதி -3)

கடைகளில் முகம் மலர சிரித்து வரவேற்கும் ஊழியர்கள், தெருக்களில் உற்சாகமாகப் பேசிக்கொண்டு செல்லும் இளைஞர்கள், முகம் ஒப்பனையில் மிளிர நேர்த்தியான ஆடைகள் அணிந்து கொண்டு பதவிசாக சிம்பொனி அரங்குகளுக்குச் சென்று இசையை ரசிக்கும் நடுவயதினர் மற்றும் முதியோர்கள், ட்ராம், பேருந்து, சாலை என எங்கும் கைகோர்த்துக் கொண்டும், தழுவி முத்தமிட்டுக் கொண்டும் காதலில் உலகம் மறந்த ஜோடிகள் என வெளியில் வாழ்க்கை அழகானது. அது உள்ளும் புறமும் அப்படி இருந்தால் அதைவிட என்ன வேண்டும் வாழ்க்கையை நிறைக்க?
அன்றில் பறவைகள் போலிருக்கும் ஜோடிகளைப் பிரித்தால் இறந்தே போய்விடுவார்கள் எனத்தோன்றும் அளவுக்கு நெருக்கமாக இருப்பார்கள். பந்தங்கள், பலவண்ணங்களைக் காட்டி மிளிர்ந்தபடி காற்றில் அலையும் சோப்பு நுரை போல மெல்லியது. தனிமனிதன், தனித்தன்மை என்பது சருமத்தோடு ஒட்டிய கவசம் போன்றது, அதில் சிறிய கீறல் விழுவது போல ஏதாவது சாதாரணமாக நிகழ்ந்தாலும் கடுமையாக சீண்டப்படுவார்கள், கோபமாக எதிர்வினையாற்றுவார்கள். சோப்புநுரை தெறித்துவிடும். இங்கும் காதல், பாசம், நட்பு எல்லாம் உண்டு. ஆனால் தனிமனித விருப்பம்,சுதந்திரம் என்னும் மனநிலையின் தீவிரப்பிடிப்புக்கு முன் உறவுகளும், பந்தமும் எல்லாம் நிலைத்து நிற்க முடியவில்லை.
நாற்பது ஆண்டு கால கம்யூனிஸ ஆட்சியில் செக் மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை. 1989ல் கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டதும் பிரஷர் குக்கரிலிருந்து பீறிட்டு எல்லாத் திசையும் பாயும் நீராவி போல மக்கள் ஆர்வமாக எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்கள். இந்தியா, நேபாளம் ஆகியவையும் அவர்களின் விருப்ப சுற்றுலாத் தலங்களுள் முக்கியமானவை. இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள நிறைய செக் நண்பர்கள் உண்டு.
என் பல்கலையிலும், நான் வசிக்கும் விடுதியிலும், கிழக்கு முதல் மேற்கு வரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் இருந்து மாணவர்கள் இருக்கின்றனர். எனவே என் கோணங்கள் என்பது செக் மக்களுடன் மட்டுமே பேசியதிலிருந்து உருவானதல்ல. இந்தியாவைப் பற்றித் தெரிந்தவர்கள், இந்தியாவை விரும்புபவர்கள், இந்தியக் கலாச்சரத்தின் மீதும் இந்தியர்கள் மீதும் பெரிய மதிப்போ, விருப்பமோ இல்லாதவர்கள், மதநம்பிக்கை அற்றவர்கள், கிறிஸ்தவ, இந்து, புத்தமத ஆதரவாளர்கள் என்று பலதரப்பினருடனும், மாணவர்கள், இசைக்கலைஞர், ஆராய்ச்சியாளர், கார் ஓட்டுனர், மருத்துவர், சாதாரண வேலைகள் செய்பவர்கள், ஆண்கள், பெண்கள் என செக் மக்களுக்குள்ளும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளிலும் வயதிலும் உள்ளவர்களிடமும் உரையாடியிருக்கிறேன்.
முதலில் பரிச்சயமாகும் யாரிடமும் ஒருபோதும் நானாக இந்தியாவையும், நமது கலாச்சாரத்தையும் பற்றியோ அவர்களது கலாச்சாரத்தையோ பற்றின உரையாடலைத் துவக்க மாட்டேன். பொதுவான விஷயங்களையோ, என்னுடைய ஆராய்ச்சி அல்லது அவருடைய தொழில் சார்ந்த விஷயங்களையோ தொட்டுத்தான் பேச்சு இருக்கும். நான் நெற்றியில் புருவமத்தியில் சிறியதாக குங்குமம் இட்டிருப்பேன். கொஞ்சம் நன்றாகப் பேசியதும் அது என்ன, எதற்காக என்று கேட்பார்கள். அல்லது நான் மதுவகைகளைத் தவிர்த்தாலோ, அசைவ உணவைத் தவிர்த்தாலோ ஆர்வமிகுதியால் அனுமதியுடன் ஏன் என்று கேட்பார்கள். பதில் சொல்வேன், அது பெரும்பாலும் இந்தியாவை -அதன் பழக்க வழக்கம், பண்பாடு பற்றின உரையாடலாகத் தான் நீளும். தொடர்ந்து என்னை, என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால், அதன் வழியாக அவர்கள் தங்கள் நாடு, கலாச்சாரம், தங்களின் குடும்பம், தனிப்பட்ட தகவல்கள் பற்றியும் சொல்லவேண்டிவரும். அப்படித்தான் எனக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமண முறையை ‘அதில் காதல் என்னும் அற்புதம் இல்லை, வெறும் பிஸினஸ் அக்ரிமெண்ட்’ என்று விமர்சித்தபடி என்னுடன் பேச்சைத் துவக்கிய என் சகமாணவி உண்டு. நான் பொறுமையாக விளக்கினேன், என் அண்ணனின் கல்யாணம் நடந்த விதத்தை ஒரு ‘கேஸ் ஸ்டடி’ போல விவரணை செய்து, அவர்கள் இப்போது எப்படி சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னேன். இன்றும் இத்தகைய திருமணங்களில் அதிக சதவீதமும் வெற்றிகரமானவையாக இருப்பதையும், அதில் அன்பும் காதலும் இல்லாவிட்டால் திருமண பந்தங்கள் நீடித்திருக்க வழியில்லை என்பதையும் விளக்கினேன். பேச்சு முடிந்து அடுத்த மாதமே மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் ஆண் நண்பனுடன் இந்தியா சென்றார். தன் சுற்றுலாவின் இடையில் மதுரை சென்று அங்கிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் வீட்டு முகவரி பெற்றுக்கொண்டு கிராமத்தில் என் வீட்டிற்குச் சென்று நான் சொல்லியபடிதான் என் வீடும், குடும்பமும், ஊரும், மக்களும், பழக்கங்களும் இருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு வந்தார்.
பிராக் திரும்பியதும், ‘இந்தியாவைப் பார்த்ததும் முதலில் உன் மனதில் தோன்றிய எண்ணம் என்ன?’ என்று கேட்டேன். அவரை பற்றித் தெரியும் என்பதால் அநேகமாக டாக்ஸிக்காரர்களையோ, தெருவில் இருந்த குப்பையையோ, காசு கேட்டு நச்சரித்த பிச்சைக்காரர்களையோ குறித்தான எரிச்சலான விமர்சனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு தோற்று நான் வியக்கும்படியாக, ‘திருவனந்தபுரத்தில் அதிகாலை விமானத்தில் இருந்து இறங்கிக் காரில் விடுதி நோக்கி சென்றோம். வழியில் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவு ஊழியர் பெண்கள் மனதில் இருந்து மகிழ்ச்சியாக முகம் எங்கும் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தர்கள். பறக்கும் தூசிக்கு நடுவிலும் அவர்கள் முகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் கலந்த ஒளி தெரிந்தது. இங்கே ஐரோப்பாவில் பெண்கள் இவ்வளவு உண்மையான சந்தோஷத்துடன் இல்லை. மனதிற்குள் ‘ஃபக்… தே ஆர் லிவிங்’ என்றேன்’ என்று சொன்னார்.
விரைவில் திருமணம் செய்துகொண்டு இந்தியாவைப் போல நிலைத்த பந்தத்துடன் தானும் தன் ஆண் நண்பரும் வாழ முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் ஆறே மாதத்தில் சிறிய பிரச்சனையால் பிளவுபட்டுப் பிரிந்து போனார்கள். நான் அதற்காக உண்மையில் வருந்தினேன். இந்த மக்கள் அவர்களே விரும்பினாலும் கூடத் திரும்பமுடியாதவாறு கலாச்சாரத்தின் மறுபக்கத்திற்குப் புரண்டு வந்துவிட்டார்கள் என எண்ணிக்கொண்டேன்.
மிகையான தனிமனித உணர்வு உறவுகளில் உண்டாக்கும் சிக்கலை விளக்க ஒரு உதாரணத்திற்காக இவர்களை மட்டும் சொன்னேன். எனக்குத் தெரிந்து நான் பார்த்தவர்களிலேயே ஆண்கள் பெண்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் முறிந்த பந்தங்கள் குறைந்தது ஒன்றிரண்டாவது உண்டு. அவர்களின் வேதனையை அவர்களாகப் பகிராவிட்டால் ஒருபோதும் என்னால் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தோ வேறு எவ்வகையிலுமோ ஊகித்திருக்கவே முடியாது. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியாக ‘வெற்றிகரமாக’ இருப்பதாகவே தோன்றும். இந்த வெளிப்புறத்தைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். வேலை, விருப்பங்கள், சினிமா, அரசியல், சாப்பாடு, காலநிலை, விளையாட்டு இதற்கு மேல் ஒன்றும் பேசாமல், பெயர், சில மேலோட்டமான தனிப்பட்ட விவரங்கள் தவிர அதிக நெருக்கமும் இல்லாமல் மேற்கத்தியரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், வெற்றிகளைப் பற்றியும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
சும்மா விக்கிப்பீடியாவில் மேற்கத்திய பிரபலமான இசைக்கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டுவீரர்கள் இன்னபிற வெற்றிகரமான தனிநபர்களைப் பற்றிய பக்கங்களைப் புரட்டினாலே ஒரு விஷயம் தெரியவரும். அநேகமாக மிகப்பெரும்பாலானவர்களுக்குக் குறைந்தது ஒன்றோ இரண்டோ திருமண முறிவுகள் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் வெற்றியும், புகழும், பணமும் மட்டும் வெளியே தெரியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளில் அவர் நிம்மதியைத் தொலைத்திருப்பாரா, உள்ளுக்குள் இதனால் துக்கம் இல்லாமல் இருக்குமா, அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியும் வெற்றியும் நிரம்பிய மனிதரா என்பதை நம்மவர்கள் கணக்கிலெடுப்பதே இல்லை.
சொந்தத் தாய் அல்லது தந்தை (கூட அவர்களின் புதிய துணை) என ஒற்றைப் பெற்றோர்களுடன் வளர்ந்தவர்கள் மனநிலையைக் கேட்டறிந்தால் தெரியும். ‘இந்த நிமிடம் வாழ்க்கையில் நான் துவண்டு அப்படியே மல்லாந்து விழுந்தால் என்னைத் தாங்க என் குடும்பம் மொத்தமும் துடித்துக் கொண்டு வரும், மெல்ல என்னை வாழ்விற்கு மீட்டுவிடும். எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று நான் சொன்னால் அத்தகைய உறுதியுடன் திரும்ப பதில் சொல்லமுடியாமல் என்னைப் பொறாமையாகப் பார்க்காத ஐரோப்பியரே இல்லை. தனிமனித சுதந்திரம் என்பது மனிதர்களைத் திரளாகவே நடத்தாமல் தனியொரு மனிதரின் சிந்தனை, படைப்பூக்கம், விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்து அவருக்கான வெளியை உருவாக்கிக்கொள்ள வகைசெய்தல் என்ற அதன் உண்மையான பொருளிலிருந்து திரிந்து, தன் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கமுடியாத தனியாள்- அவனுடைய விருப்பங்களும், வெற்றியும், மகிழ்ச்சியுமே முக்கியம் என்று குறுகிவிட்டதாகவே நான் உணர்கிறேன். வெற்றிக்கெல்லாம் எப்படி தனிமனிதனே பொறுப்பாகிறானோ அப்படியே தோல்வியும். தோற்ற ஐரோப்பியர்களை யார் கவனித்துப் பார்க்கிறார்கள்?
பொருளாதார, விஞ்ஞான முன்னேற்றத்தையும், எளிதில் உடைந்து உருமாறும் பந்தங்களையும் தவறாகத் தொடர்பு படுத்திக் கொண்டு ஒரு நண்பர் (இந்தியர்), “இந்திய மதங்கள் சொல்லும் தத்துவம் என்ன? பற்றற்று இருப்பது தானே? அப்படி செண்டிமெண்ட், இமோஷன்ஸ் இல்லாமல் இருந்தால் செயல்கள் வெற்றி பெறும் என்பதுதானே உண்மை. அதை இங்கே கண்ணால் பார்க்கிறேனே. ஐரோப்பியர்களுக்கு யார் மீதும் உணர்ச்சிபூர்வமான பந்தமே இல்லை பற்றற்று இருக்கிறார்கள். அதனால் தான் முன்னேறிய சமூகமாக, அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்றார். இந்து மதம் கூறும் பற்றற்றிருப்பது என்றால் உண்மையில் என்ன என்று எனக்குத் தெரிந்த வகையில் கொஞ்சம் விளக்க முயன்றேன். நண்பர் அவரின் ‘தரிசனத்தை’ விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பாவிலேயே தங்கத்  தீர்மானித்துவிட்டதாகச் சொன்னார். யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை, அதனால் நெருக்கமான நண்பர்களாக ஐரோப்பியர் எவரும் இல்லை, “நெறய ஃப்ரெண்ட்ஸ் உண்டு, ஆனா, என்னன்னா என்னங்கற லெவல்ல டிஸ்டண்ட் மெய்ண்டெய்ன் பண்ணிக்கிறது. பிரச்சனை வராது பாருங்க”. ஐந்து வருடமாக ஐரோப்பாவில் ‘பற்றற்று’ இருக்கிறார் போலும். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தேன் இந்திய, மேற்கு தத்துவ நூல்கள் அடுக்கி வைத்திருந்தார். (மனதில் ஆசானுக்கும் மற்ற குருமார்களுக்கும் நன்றி சொன்னேன். தெளிவாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல், வழிகாட்ட ஒரு குருவும் இல்லாமல் எதையாவது படிக்கக் கிளம்பினால் இப்படி ‘தரிசனம்’ கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டேன்).
மதவரலாறு, ஆன்மீக வறுமை, வாழ்வின் சாரமற்ற வறட்சி, அரசியல் வரலாறு, கொடும் போர்களின் பேரிழப்புகள், அதன் உளவியல் தாக்கம், மிகையான தனிமனித முக்கியத்துவம், சீர்குலைந்த குடும்ப அமைப்பு, நிலையற்ற தனிப்பட்ட உறவுகள் என்று ஐரோப்பாவைப் பற்றி அடுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கே விஞ்ஞானம் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது, மக்கள் காதலிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள், வளர்க்கிறார்கள், குழந்தைகள் வளர்ந்து வெற்றியாளர்கள் ஆகிறார்கள், அவர்களும் காதலித்துப் பிள்ளை பெறுகிறார்கள், அவர்களும் வளர்கிறார்கள்…. என வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. எப்படி?
இந்தியாவில் அரசாங்கம் சரியில்லை, எங்கும் ஒரே ஊழல், லஞ்சம், நல்ல சாலை இல்லை, மின்சாரம் இல்லை, வறுமை, அழுக்கு, குப்பை, குடிக்க தூய குடிநீர்கூட இல்லை, இருந்தும் இங்கேயும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறதே? எப்படி? நாம் நமது சமூகச் சீர்கேடுகளை ‘இதெல்லாம் இப்படித்தான்’ என்று சகிக்கப் பழகிக்கொள்ளவில்லையா? அப்படித்தான் மேற்கிலும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘இதுஇப்படித்தான், மாற்ற முடியாது’ என்று சகிக்கப் பழகிக்கொண்டு அடுத்து என்ன? என்று வாழ்கிறார்கள். நாம் இழப்பது வசதியான வாழ்க்கையை, அவர்கள் இழப்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை.
ஐரோப்பா கீழானது, இந்தியா மேலானது என்று எளிய சூத்திரத்தை ஒப்பிக்க வரவில்லை, அது உண்மையும் இல்லை.
இந்தியாவில் தற்போது இருக்கும் மோசமான சீர்கேடுகளை, சமூகச் சூழ்நிலையை, ஒழுங்கீனங்களை வைத்து நமது சமூகத்தின் வரலாறே இப்படித்தான், எனவே இது மாறாது என்று நினைப்பவர்கள் உண்டு. மனித மனம் எட்டக்கூடிய பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை குறித்தான தரிசனங்களின் உச்சங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டடைந்த, அறிவியல், மெய்யியல், கலை, நாகரீகம் என்று அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மை வாய்ந்த நம் நாட்டின் நீண்ட வரலாறை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அடிப்படை சமூக, பொது ஒழுக்கங்கள் கூட அடையப்பெறாத மக்கள் சமூகத்திலிருந்து இத்தகைய ஒரு பண்பாடு எழுந்துவர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயமாக இல்லை என்று கொஞ்சம் யோசிக்கும் யாராலும் சொல்லமுடியும். ஐரோப்பாவின் அகவாழ்க்கைக் குளறுபடிகளுக்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பது போல நமது சமூகச் சீர்கேட்டிற்கும் வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மேற்கின் காலனியாதிக்கத்திற்கு அடிமைகளாக இருந்த, ஒட்டச் சுரண்டிவிட்டுப்போன தேசத்தின் வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளப் போராடிய காலத்தின் எச்சம் இவை. கல்வியும், பொருளாதாரமும், விழிப்புணர்வும் போதும் இதை மாற்ற. இது மாற்றக்கூடிய புறச்சீர்கேடு. மாறும்.
போரிட்டு நாடுகளை அழித்த, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புறத்தைக் கவலையே இல்லாமல் மாசுபடுத்திச் சீரழித்த ஐரோப்பா விழிப்புணர்வு பெற்று இப்போது பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதும், காடு நதி என்று இயற்கையைப் பேணுவதும் பார்க்கிறோமே? அவர்களால் முடியுமானால் நம்மாலும் முடியும். கடுமையான ஒரு சட்டமும் அதை கறாராக அமுல்படுத்தும் அரசும் போதும், இவற்றை மாற்றிவிட முடியும். (அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய அரசியல் தலைமை உருவாகும் நல்லூழ் நமது நாட்டிற்கு இருக்கும் என்றே நம்புகிறேன்). பழக்கத்தாலும் மாறும். இந்தியாவில் எப்படி இருந்திருந்தாலும், மேற்கிற்கு வந்ததும் அவர்களின் குடிமை ஒழுக்கத்தை கவனித்து வியப்பவர்களில் பலரும் தாங்களும் அதைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே இது மாறக்கூடிய சீர்கேடு தான்.
வேதியியலில் மீள்வினை, மீளாவினை என்று இருவகையான வினைகள் உண்டு. நமது சமூகச் சீர்கேடுகள் மீள்வினை, இவற்றை மீட்டுப் பழைய நல்ல நிலைக்கு முயன்று கொண்டுவந்து விடலாம். ஆனால் ஒருபண்பாடு தன் உள்ளார்ந்த உயர்ந்த விழுமியங்களை முற்றிலுமாக இழப்பது மீளாவினை. குடும்பம், வாழ்வின் அர்த்தம் மீதான நம்பிக்கை, நிலைத்த உறவுகள், தியாகம், ஒருவருக்காக ஒருவர் என்ற வலைப்பின்னல் சமூகம், போன்றவை இழந்தால் மீட்கமுடியாதவை. ஐரோப்பாவின் பிரச்சனை இதுதான். நான் பேசிப் பார்த்தவரை அவர்களும் இதை உணர்கிறார்கள்.
ஐரோப்பா எதற்கு? இங்கே நமது நாட்டிலேயே நாம் இதைக் கவனிக்கலாம். அயலானை சந்தேகத்தோடு பார்க்கிற, கதவை சாத்தி வாழ்கிற அடுக்குமாடி வாழ்க்கையும், பெருகும் திருமண முறிவுகளும், முதியோர் இல்லங்களும், இன்னும் பிறவற்றையும், வாழ்வை வாழ நினைக்கும் எவரும் கவலையோடு தான் நோக்குவார்கள். இதனால் உண்டாகும் இழப்பும், துயரமும் என்ன என்பதை நாமும் அறிவோம். இவற்றைப் பழைய நிலைக்கு மாற்ற முடியவில்லையே என்ற நிதர்சனம் தான் பழங்காலத்தை, கூட்டுக் குடும்பத்தை, கிராமத்து வாழ்க்கையை, கடந்த போன பால்யத்தைப் பற்றின ஏக்கம் நிரம்பிய புலம்பல்களாக நாள்தோறும் கேட்கிறோம். நாமும் புலம்பியிருப்போம். இது இப்படியே தொடர்ந்தால் நாமும் ஐரோப்பியர்களாகி விடுவோம்.
இந்தியாவில் மக்களிடையே கசப்பும், அதிருப்தியும், கவலையும் உள்ளது. மிகப்பெரும்பாலும் அது பணப்பற்றாக் குறையால். நமது நாட்டில் நடக்கும் தற்கொலைகளில் அதிகமும் வறுமை, கடன் முதலியவற்றால், மேற்கில் இது முறிந்த பந்தங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் தோல்விகள், ஆதரவு தர ஆளில்லாததால் உண்டாகும் மன அழுத்தத்தால். ஆக, என்னைக் கேட்டால் ஒப்பீட்டளவில் மேற்கை விட இந்தியர்கள் வசதியற்ற வாழ்க்கையின் நடுவிலும் ஒரு மகிழ்ச்சியும், திருப்தியும் இருப்பவர்களாகவே சொல்வேன். கையில் இருப்பதன் பெருமை உணரப்படாது என்பது பொதுவிதி.
அயல் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் புறவயமான முன்னேற்றம், பொருளியல் வெற்றி, இவற்றை முதன்மைப்படுத்தும் வறட்டு பொருளியல், அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுபவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. மாறாக, மெய்யான மன மகிழ்ச்சியும், வாழ்ந்ததன் திருப்தியும், ஆத்மார்த்தமான நிறைவும் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் அளக்கும் அளவீடுகளாக நம்புபவர்களுக்காகவே என் அனுபவங்களை சொல்கிறேன்.
இந்தியா வெற்றிபெற்ற சமூகமாக இருக்க வேண்டுமா அல்லது மகிழ்ச்சியான சமூகமாக இருக்க வேண்டுமா இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றால் நான் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுப்பேன். மண்ணில் யூடோப்பியா சாத்தியம் இல்லை, ஆனால் இங்கே நாம் வாழமுடிந்த அதிகபட்சமான சிறப்பான, நிறைவான வாழ்க்கை என்பது இன்றைய நிலையில் மேற்கின் குடிமை ஒழுக்கங்களையும், சூழல் உணர்வையும் இந்தியா அடைவதும், மேற்கு தன் ஆத்மாவை நிரப்பும் ஆன்மீக தரிசனத்தையும், குடும்ப வாழ்க்கை என்னும் பலத்தையும் வெற்றிகரமாக இணைப்பதில் உள்ளது. இந்தியாவின் பக்கம் இந்த சமன்பாடு எளிதாக அடையக்கூடியது என்று நம்புகிறேன்.
                                                                             -நிறைவு-
-பிரகாஷ் சங்கரன்

அயல் கலாச்சாரம் (பகுதி -2)


தொடர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு. முதலில் ஜெர்மானிய மொழி திணிக்கப்பட்டது, பின்னர் கம்யூனிஸ்ட் காலத்தில் 40 வருடம் ரஷ்ய மொழி கட்டாயமாக இருந்தது, இத்தனையையும் மீறி இன்று மருத்துவம், அறிவியல், உயர் தொழில் நுட்பம் என அனைத்தும் செக் மொழியிலேயே பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் காலத்தில் மாற்றப்பட்ட இடம், தெருப் பெயர்கள் எல்லாம் மீண்டும் பழைய செக் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பத்திரமாகப் பேணுகிறார்கள். கைவிடப்பட்ட பழம்பெரும் சர்ச்சுகள் புணரமைக்கப்பட்டு சுற்றுலாத் தளங்களாக மக்களைக் கவருகிறது. ஐரோப்பிய யூனியன் நிதி பெற்றுப் பாழடைந்த பழைய ஊர்களெல்லாம் மீண்டும் புதுப்பொலிவு பெறச்செய்கிறார்கள். இவ்வளவும் இந்தக் குறுகிய காலத்தில்.
முன்னேறிய மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே செக் குடியரசிலும், குடிமை ஒழுக்கம் சிறப்பாக இருக்கிறது. பொதுவெளியில் மக்கள் குப்பை கொட்டுவதில்லை, அசுத்தம் செய்வதில்லை, விதிகளை மதிக்கிறார்கள் அதே சமயம் பேச்சு- எழுத்து சுதந்திரம் அபாரமாக உள்ளது, பெண் உரிமை ஆணுக்குச் சமமாக இருக்கிறது, குற்றங்கள் மிகக் குறைவு, நடுராத்திரியிலும் நடமாட பயம் இல்லை, கல்வி பரவலாக உள்ளது, கட்டும் வரிக்குத் தகுந்த சிறப்பான சேவைகள் -போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு, இன்றியமையாத பிற அனைத்தும் – அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கிறது, அரசு அலுவலகங்கள் மக்களை மாட்டு மந்தை போல நடத்துவதில்லை, வாடிக்கையாளர் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது…இப்படி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கவனித்து வியக்கும் புறவயமான எல்லா விஷயங்களும், பண்புகளும் உண்டு.
மேலை நாட்டின் விஞ்ஞான பாய்ச்சலும் அவர்களின் குடிமை ஒழுக்க முறைகளும் தான் இங்கு வாழும் இந்தியர்களைத் துணுக்குறச் செய்கிறது. நமது ஐயாயிர வருட பாரம்பரியம், தத்துவம், ஞானம், கலாச்சாரம் எல்லாம் பழங்கதை மட்டும் தானா? நம்மால் ஐரோப்பியச் சமூகத்தைப் போன்ற முன்னேறிய முற்போக்கான சமூகமாக ஆகவே முடியாதா என்ற ஏக்கமும், அதற்குத் தோதாக இந்தியாவில் நடக்கும் சம்பவங்களும், படிக்கும் ஊழல் கொழிக்கும் கீழான அரசியல் செய்திகளும் அவநம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் தருவதாகவே உள்ளன. ஜெயிடம் அப்படிக் கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கலாம். உண்மையில் ஐரோப்பாவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் உண்டு. சந்தேகமில்லை.
ஆனால்… நாம் காணும் ஐரோப்பா, நாம் கேட்கும் ஐரோப்பிய செய்திகள் எல்லாம் இதன் வெற்றி பெற்ற பக்கங்கள் மட்டும் தான். அதிநவீன அறிவியலில் முன்னோடியாக, பொது நாகரீகமும், விழிப்புணர்வும் கொண்ட சமூகமாக மட்டும் பொதுவில் அறியப்படும் ஐரோப்பா. ஒருவகையில் இது வரலாற்றெழுத்து போல – வெற்றி பெறவனின் கதை மட்டுமே வரலாறாகிறது. எதை இழந்து இந்த வெற்றி பெறப்படுகிறது? வெற்றிகரமான இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரும் இழந்த, அல்லது அடைய விரும்பும் அகமகிழ்வு என ஒன்று உண்டா? இந்த வசதிகளால் உண்மையிலேயே அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து திருப்தியாக இறக்கிறார்களா? ஆரம்பகால விதந்தோதல் மற்றும் வியப்புகளுக்குப் பின் எனக்கு இருந்த கேள்வி இது தான்.
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவேண்டுமானால் நாம் அவர்களுடன் மிக நெருங்கிப் பழக வேண்டும். அதன் சாத்தியங்களை மேற்கில் வாழ்பவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். கிட்டத்தட்ட அது இரும்பு முட்டையைப் புல்லால் துளைக்க முயல்வது போலத்தான். எத்தனை வருடம் கூட வேலை பார்த்தாலும், வசித்தாலும், பழகினாலும் பொதுவான சில விஷயங்களுக்கு அப்பால் தனிப்பட்ட எந்த விஷயத்தையும் பேசிவிடவே முடியாது. அது இணைக்க முடியாத பெரும் அகழி. நம்மிடம் மட்டுமல்ல, அவர்களுக்குள்ளும் கூட அப்படித்தான். மிகமிக நெருக்கமான ஓரிருவருடன் மட்டுமே சொந்த விஷயங்களைப் பகிர்வார்கள். அப்போது மட்டுமே நாம் உண்மையான உள் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள சாத்தியம்.
எனக்கு அப்படி சிலருடன் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கதையையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே என் கருத்துக்கள் என்பது நான் நெருங்கிப் பழகியதன் மூலம், அதனால் அவர்கள் மனந்திறந்து சொன்ன விஷயங்கள் மூலம் உருவான நேரடி அவதானிப்புகள். புறவயமாக கவனித்து ஊகித்து உருவாக்கிக் கொண்டதல்ல.
ஐரோப்பியரின் பல குண இயல்புகளை வடிவமைத்ததில் இங்கிருந்த கடுங்குளிர் காலநிலையும், மதத்தின் பெயராலும், அதிகார அரசியலாலும் நடந்த கொடும் யுத்தங்களும், மரணங்களும் முக்கிய பங்கு வகித்தன. ஒரு அறுநூறு, ஆயிரம் வருட முந்தைய ஐரோப்பாவைக் கற்பனை செய்து பார்த்தால், உறைபனி கொட்டத் தொடங்கும் காலத்திற்கு முன்பே எல்லாப் பெரிய கட்டுமானங்களையும், பணிகளையும் செய்து விடவேண்டும். பின்னர் குளிர் காலம் முழுக்க வெளியில் ஒரு வேலையும் செய்ய முடியாது. ஆகவே சூரியனின் பிரகாசமும், வெப்பமும் இருக்கும் மாதங்களுக்குள் விரைந்து வேலைகளைச் செய்ய வேண்டும். வேலையில் குளறுபடி உண்டானால் தவறுகளைத் திருத்தி மறுபடியும் முதலில் இருந்து செய்ய முடியாது, ஆகவே கச்சிதமான திட்டம், நேரந்தவறாமல் பணியைத் தொடங்குதல், வேலை செய்யும் நேரத்தில் வேறெந்தப் பேச்சும் இல்லாத மும்முரமாகப் பணி புரிதல் போன்றவை அப்படி காலநிலை உருவாக்கிய நெருக்கடிகளால் உருவாகியிருக்கலாம். மதத்திற்காக நடந்த சண்டைகளும் உயிர்ப்பலிகளும், போர்களும் -மிக முக்கியமாக பேரழிவுகளை விளைவித்த இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த சமூகத்தில் உண்டான மனித வாழ்க்கை குறித்தான பார்வையும், மனநிலை மாற்றங்களும் எத்தகையதாக இருக்கும் என்பதையும் ஊகிக்கலாம். இந்த வலிகள் இன்றைய ஐரோப்பிய தலைமுறைகளிடம் காணமுடியாது, இதையெல்லாம் சதா நினைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அதன் விளைவுகள் இயல்புகளாக உருமாறி தலைமுறைகளாக கைமாறி வந்து சேர்ந்திருக்கிறது. இன்று அவர்கள் நாம் வியக்கும் “தனிமனிதர்கள், வெற்றியாளர்கள், பண்பாளர்கள்”.
இந்தியர்களுக்கு ஐரோப்பா வந்ததும் கவனத்தைக் கவரும் இன்னொரு விஷயம் மதம் மற்றும் கடவுள். இங்கு மதம் என்பது மிகவும் நீர்த்துப்போன ஒன்றாக உள்ளதும், நாம்தான் மதத்தையும் கடவுளையும் இறுகப்பிடித்து திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். பிராக் நகரில் ஒவ்வொரு இருநூறு மீட்டருக்கும் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. ஆனால் 80 சதவீதம் மக்கள் மதத்தைப் பின்பற்றாதவர்கள். ரோமன் கத்தோலிக்க விசுவாசிகள் 39 லிருந்து 10 சதவீதமாகவும், புரோட்டஸ்டண்ட்கள் 3.7லிருந்து 0.8 சதவீதமாகவும் குறைந்து விட்டார்கள். தேவாலயங்கள் எல்லாம் பகலில் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் மாலை வேளைகளில் இசைக் கச்சேரிக்காகவும் திறக்கப்படுகிறது.
வரலாற்றில் அதிகாரமயமாக்கப்பட்ட கிறிஸ்தவம், அதை எதிர்த்த சீர்திருத்த இயக்கம், அதனால் உண்டான போர்கள் என்று மதமும் தொடர்ந்த இழப்புகளுக்கும் விரக்திக்கும் காரணமாகவே இருந்துவந்துள்ளது. பாப பரிகாரத்திற்கு போப் விற்பனை செய்யும் (இண்டல்ஜன்ஸ்) ஒரு வகை பரிகாரச் சீட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப அதிக/ நீண்ட நாள் பாபம் மன்னிக்கப்படும். தேவாலயங்களில் வழிப்பாட்டுக்கு பிறகு கிறிஸ்துவின் சதை, இரத்தம் ஆகியவற்றின் குறியீடாக வழங்கப்படும் அப்பமும், ஒயினும் பாதிரிமார்களுக்கு மட்டுமே உரியது, சாதாரன மக்கள் அதைப் பெறும் தகுதி அற்றவர்கள் எனப்பட்டது. பெரும்பாலும் பிரபுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போப்பாக ஆனார்கள், அதிகாரம் கைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. போப்கள் அரசியல் அதிகாரத்தாலும், மதத்தலைமை என்னும் அதிகாரத்தாலும் ஆட்டிப்படைத்தனர். எதிர்த்தவர்களை சிலுவைப்படை கொண்டு ஒடுக்கினர்.
இந்த சீர்குலைந்த கிறிஸ்துவத்தையும், போப்பையும் எதிர்த்து 15ஆம் நூற்றாண்டில் செக் தேசத்தில் பெரும் கிளர்ச்சி எழுந்தது. கிளர்ச்சிக்கு காரணமான ‘யான் ஹூஸ்’ என்னும் சீர்திருத்தவாதியை ரோமன்கத்தோலிக் அதிகார பீடம் உயிரோடு கொளுத்தியது. அது அவரது கிளர்ச்சிக்கு வலு சேர்த்தது, ஆதரவாளர்களை சிலுவைப்படை கொண்டும் அடக்கமுடியவில்லை. பின்னர் பல போப்கள் மாறிய பிறகு செக் நாட்டு தேவாலயங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டது, அங்கே அப்பமும் ஒயினும் அனைவருக்கும் உண்டு. ஆனால் சீர்திருத்தவாதிகளும் ஒரு அதிகார நிறுவனமாகி கத்தோலிக்கர்களுக்குக் கொடுமைகள் நிகழ்த்தத் தொடங்கினார்கள். இந்த வரலாற்று நிகழ்வுகளாலும், கூடவே நாற்பது வருட கம்யூனிசத்தாலும் கிறிஸ்தவ மதம் பெருத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
வெவ்வேறு காரணங்கள் வழியாக மொத்த ஐரோப்பாவுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். எனக்கு இப்படித் தோன்ற இன்னொரு காரணமும் உண்டு. பெரும்பாலான ஐரோப்பிய தத்துவவாதிகள், அறிவியலாளர்கள் கிறிஸ்தவத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததைப் படித்தேன். ஜெயமோகன் சொல்வது போல கான்ஸ்டண்டைன் கிறிஸ்துவிலிருந்து ஆன்மீக கிறிஸ்துவை மீட்டெடுத்து மக்களுக்கு ஆற்றுதலும் ஆசுவாசமும் அளிக்கும் ஒரு ஞானி தோன்றியிருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றும். எந்த நாடாக இருந்தாலும் வாழ்க்கையைக் கவனிக்கும் அறிவுஜீவிகளுக்கு, அதன் விதியைப் புரிந்துகொள்ள முயல்பவருக்கு மதமோ, சடங்கோ, கடவுள் நம்பிக்கையோ அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் சர்வநிச்சயமாக எல்லா ‘வெள்ளைக்காரர்களும் அறிவுஜீவிகள் இல்லை. வாழ்க்கையைப் புரட்டிப்போடும் இழப்புகள், தோல்விகள், தாங்கமுடியாத துக்கங்கள் எனப்பல நிகழ்வுகளிலும் துவண்டு திசைமாறிவிடும் சாமானியர்கள்தான் பெரும்பாலும். வீடற்றவர்களாக, அழுக்கு உடையுடன், சதா குடித்து தெருவில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு இம்மாதிரி ஏதாவது ஒரு கதை இருக்கிறது. இவர்களுக்குச் சேவை புரியும் அமைப்புடன் தொடர்புள்ள நண்பரிடமிருந்து நான் கேட்டறிந்தவரை புள்ளிவிவரங்கள் அவர்களில் சரிபாதிக்கும் மேல் பல்கலைக்கழக கல்வி கற்றவர்கள் என்கிறது. பேராசிரியர்கள், இசைக்கலைஞர்கள், உட்பட வெற்றியாளர்களும் உண்டு. அம்மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு பாதை, மனதிற்கு உரமூட்டும் ஒரு வல்லமை இல்லாதது ஒரு சமூக இழப்பு. மதத்தின் இழப்பு, ஆன்மீக வறட்சி ஆகியவை ‘வாழ்க்கைக்கு ஒரு பொருளுமில்லை. பிறந்தோம், அனுபவிப்போம், இறப்போம்’ என்ற விட்டேத்தியான மனநிலைக்குக் கொண்டு விடுகிறது. இதனால் வாழ்வில் ஒரு சாரமற்ற ஆன்மீக வறுமை உணரப்படுகிறது. இதை நிரப்ப பாகனிசம், ஆப்பிரிக்க ஷாமானிஸம், இந்துமதம், பௌத்தம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். மதம் என்பது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு என்று நினைத்திருந்தவர்கள் அது முன்னோர்களின் அனுபவங்களிலிலிருந்து சேகரித்த சிந்தனைக் கருவூலம் என்னும் உண்மை புதிய வாசலைத் திறக்கிறது என்பதைக் கண்டடைந்து ஆச்சரியப்படுகிறார்கள். இருந்தாலும் இன்னும் பெரும்பாலானோர் எந்த நம்பிக்கையும் அற்றவர்களாகவே உள்ளனர். பி.தொ.நி.குரலில் கம்யூனிஸம் மதத்தின் தேவையை உணர்ந்துகொள்ளாமல் புறக்கணித்ததை அதன் பெரும் குறையாகச் சொல்லும் இடத்தை நினைத்துக்கொள்கிறேன்.
***
எனக்கு செக் நாட்டின் மத, அரசியல், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் சமகால நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கும், விவாதித்து அலசுவதற்கும் பெரும் உதவியாக இருப்பவர் என்னுடன் வேலை செய்யும் 57வயது செக் பெண்மணி. செக், ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், திபெத்தியன் என ஐந்து மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர். உண்மையான, தீவிர கிறிஸ்தவர். 20வருடங்களுக்கும் மேல் செக்நாட்டின் பகுதிகளிலும், ஆஸ்திரியாவிலும் இவாஞ்சலிக்கல் சர்ச்சின் பாஸ்டராக ஊழியம் செய்தவர். சொந்தக் காரணங்களுக்காக அமைப்பை விட்டு வெளியேறிக் கடந்த மூன்றரை வருடங்களாக எங்கள் ஆய்வுக்கூடத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே சொந்த ஆர்வத்தால் இன்னும் கிறிஸ்தவ மதச்சேவை புரிந்து கொண்டிருப்பவர். ரோம, கிரேக்க, கிறிஸ்தவ தொன்மங்களில் விஷய ஞானமும், வரலாற்றுப் புரிதலும் உள்ளவர்.
அநேகமாக நான் இங்கு மேற்கொண்ட எல்லாப் பயணங்களும் இவருடன் தான். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்வார். இவருடைய அம்மாவிற்கு 84 வயதாகிறது. செக், ரஷ்யன், பிரஞ்சு என மூன்று மொழிகள் தெரிந்தவர். அவரும் கிறிஸ்தவ நம்பிக்கை உடையவர். இளவயதில் செக் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று முதன் முறை சந்தித்துப் பேசிய போது காளிதாசன், இராமாயணம், பாரதம், வேதங்கள், தமிழ், இலக்கியம், நமது கலாச்சாரம், எனது குடும்பம் எனப் பலவற்றைப் பற்றி உரையாடினார்கள். ஐம்பதுவருடங்களுக்கு முன்பு செக் நாளிதழில் வந்திருந்த தாகூர் மற்றும் காளிதாசன் பற்றிய செய்திகளை கத்தரித்து வைத்திருந்ததைக் காட்டினார். பழந்தமிழ்ச் செய்யுள், வேதப்பாடல்கள் போன்றவற்றைச் சொல்லச்சொல்லி அவை அவர் காதிற்கு எவ்வகையான உணர்வுகளை எழுப்புகிறது என அனுபவித்துத் தெரிந்துகொண்டார். அது ஒரு நல்ல உறவாக வளர்ந்தது. என்னைத் தன் தத்துப் பேரன் என்று சொல்லிக்கொள்வார். அடிக்கடி அவரை வீட்டிற்குச் சென்று சந்திக்கிறேன். ஒவ்வொரு முறையும் கட்டித் தழுவிக்கொண்டு அன்புடன் வரவேற்பார். நான் போகாத மாதங்களில் அவர் தன் கையால் உண்டாக்கிய செக் பிஸ்கட்டுகளை மகளிடம் தந்தனுப்புவார். மூன்று வருடங்களாக நான் இல்லாமல் அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் உட்பட எந்தக் கொண்டாட்டமும் இல்லை. செக் மொழியில் பாட்டி என்றே அழைப்பேன். இப்படி ஒரு செக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய எந்த இந்தியரும் எனக்குத் தெரிந்து ப்ராகில் இல்லை. இந்த நெருக்கமான பந்தத்தை எனது பெருமையாகவும், ஒப்பற்ற அனுபவமாகவுமே நான் கருதுகிறேன்.
ஆனால் இங்கே நிச்சயமாக இதை வெற்றுப்பெருமைக்காகச் சொல்லவில்லை. இந்த நெருக்கம் அவ்வளவு எளிதாக வாய்ப்பதல்ல, எனவே இந்த அன்பும் நெருக்கமும் ஒரு கொடுப்பினை தான். அவரது சொந்தப் பெயரன்கள் கூட உட்கார்ந்து அவருடன் இவ்வளவு உரையாடியதில்லை. இந்த அளவுக்கு பழக வாய்ப்புகிடைத்ததால் தான் என்னால் மேலோட்டமான புரிதல்களைத் தாண்டி இந்தக் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் தெருவைத் தாண்டி வீடுகளுக்குள் நுழைகையில் என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் கொடூர கணங்களிலிருந்து, ரஷ்ய லிபரேஷன் ஆர்மி (செம்படை) பிராக் நகருக்குள் வந்ததிலிருந்து, கம்யூனிச ஆட்சியின் காலம் என வரலாறாக வெளியில் இருக்கும் தகவல்களை, அந்தச் சமயங்களில் வாழ்ந்த ஒருவரது அனுபவமாக நேரடியாகக்கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே வெறுமனே ஊகங்களிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளாமல், உண்மையான புரிதல்களிலிருந்து பெற்றுக்கொண்ட சித்திரத்தைத் தைரியமாகச் சொல்லமுடிகிறது.
இவாஞ்சலிக்கல் பாஸ்டராக வேலை பார்த்த என் தற்போதைய சக ஊழியர் ஐரோப்பாவின் திருமண பந்தங்களின் உள்ளீடற்ற தன்மையைக் கவலையோடு பகிர்ந்துகொள்வார். எளிய காரணங்களுக்காக சிதையும் குடும்பங்களை அறிவார், அதனால் அந்தச் சமூகத்தின் எதிர்காலம் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகும் என பேசுவார். அவர் தனிப்பட்ட முறையில் பல குடும்பங்களை ஒன்றாக சேர்த்து சின்னச்சின்னக் குடும்ப நிகழ்வுகள், விளையாட்டுக்கள், பாடல்கள், பிரார்த்தனைகள் என ஏற்பாடு செய்து ஊடே குடும்ப ஒற்றுமை, கனவன்-மனைவி, பெற்றொர்-குழந்தைகள் உறவு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி உரையாடல்களை நிகழ்த்துகிறார். சர்ச்சுகள் மூலம் நிலையான திருமண பந்தம், குடும்பம் என்னும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பாடுபடுகிறர்கள். அதன் பலன் மிகமிக குறைவு. நமது நாட்டில் எவ்வளவு இயல்பாக இந்தக் குடும்பம் என்கிற அமைப்பு உள்ளது, அதன் பலம் பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு நலம் சேர்க்கிறது என்றெல்லாம் என்னை வைத்துக்கொண்டே சில சமயம் பேசியிருக்கிறார். பெருமையாக அமைதியுடன் கவனித்துக் கொண்டிருப்பேன்.
இங்குள்ளவர்களிடம் பொதுவாக இந்தியக் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால் ஒருவித ஏக்கப் பெருமூச்சு விடுவதைக் காணமுடியும். “இங்கும் நூறாண்டுகளுக்கு முன்னால் இப்படித் தான் இருந்தது. காலம் மாறிவிட்டது, இனி இது சாத்தியமா என தெரியவில்லை” என்று வருத்தத்துடன் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது எதுவுமே அறியாமல், எந்த நேரடி அனுபவமும் இல்லாமல், ஒப்பேறாத உள்நோக்கமுள்ள புள்ளிவிவரங்கள், கருத்து நிலைப்பாடுகளை வைத்துக் கொண்டு நமது நாட்டில் சில ‘அறிவுஜீவிகள்’ ஒட்டுமொத்தக் குடும்ப அமைப்புமே சுரண்டலும் வன்முறையும் நிறைந்த வதைமுகாம்கள் என்பது போலப் பேசுவதும், இதை ஒழித்து சுதந்திரமான தனிநபர்களாக ஆனால் தான் மேற்கைப்போல முன்னேற முடியும் என்று எழுதுவதும் இந்த தேசத்திற்குச் செய்யும் ஒப்பற்ற தீங்கு என்பது என் எண்ணம்.

குடும்ப வன்முறை இங்கு இருக்கலாம், சுரண்டலும் இருக்கலாம், குறைவான சதவீதத்தில் இருக்கும் அவற்றை ஊதிப் பெரிதாக்கி ஒட்டுமொத்தமாக குடும்பம் என்கிற கருத்தையே சிதைக்க நினைப்பவர்கள் அடுத்த ஜன்மத்தில் மேற்கில் பிறந்து இதை அனுபவிக்கவேண்டும், அப்போது தான் தெரியும்.
தனிமனிதன் என்னும் நிலைப்பாடைப் பற்றிப் பேசினால் அதற்காக இவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்கள், குழுவாக இயங்கும் மனப்பாண்மை இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தால் இந்தசமூகம் என்றைக்கோ அழிந்திருக்கும். ஒரு வெளியைச் சகமனிதனுடன் பகிர்ந்துகொண்டு வாழ வேண்டியிருப்பதால் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க விதிகளை ஏற்றுக்கொண்டு அதை உண்மையாகக் கடைப்பிடித்து வாழ்கிறார்கள். அதனால் தான் ஒரு சிறந்த பொதுச்சமூகம் இங்கே சாத்தியமாகிறது. இது குடிமை உணர்ச்சியால் விளைவது. ஆனால் இது மேலோட்டமானது, இந்த விதிகள் பொதுவெளியில் செல்லுபடியாகுமே தவிர அந்தரங்க வாழ்க்கையில் செல்லுபடியாகாது. அங்கேதான் அவர்கள் தனிமனிதனாகிறார்கள். ஆற்றுமணல் போன்றது இந்தச் சமூகம். விலகி நின்று பார்க்கையில் மொத்தமாக சேர்ந்திருப்பது போல இருக்கும். கையில் அள்ளினால் ஒவ்வொன்றும் தனித் தனியான துகளாக உதிர்ந்து போகும்.
- பிரகாஷ் சங்கரன்

(பகுதி -1)                                                                                                                             (பகுதி -3)

அயல் கலாச்சாரம் (பகுதி -1)


(முன்குறிப்பு:இது சொல்புதிது இலக்கிய குழுமத்தில் அயல்கலாச்சாரம் குறித்து நண்பர்களுக்கிடையே நடைபெற்ற விவாதத்தில் நான் தொடராக எழுதிய மடல்கள். அவை தொகுக்கப்பட்டு ஆசான் ஜெயமோகனின் இணையதளத்தில் செக் குடியரசின் வாழ்க்கை என்னும் கட்டுரையாக வெளியிடப்பட்டது )
---

ஒரு மாதத்திற்கு முன் நண்பர்களுக்கிடையிலான ஒரு கலந்துரையாடலில் கிருஷ்ணன் இந்தியர்கள் champions of mediocrity ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையைத் தெரிவித்தார். அவர் தன் எல்லைக்குள் கவனித்தவரையில், இந்திய தனிநபர்கள் மிகுந்த உழைப்பும், கவனமும், திறமையும் தேவைப்படும் வேலைகளில் ஒதுங்கி மேம்போக்கான ஒரு ‘நடுசெண்டரான’ வாழ்க்கையை வாழ்கிறவர்கள் என்று சொன்னார். மூளைத் திறனிலும் உடல் திறனிலும் நாம் சப்பாணிகளாய் விட்டோம் என்றார். இந்த திறமைக் குறைவை ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளைக் கொண்டு உதாரணம் காட்டினார்.
எனக்கும் அதே சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த ஒரு பிரச்சனையாக நான் புரிந்து கொண்டிருந்தேன். இந்தியா மற்றும் அயல்நாட்டு வாழ்க்கையில் நான் கவனித்தவற்றை கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அதை நண்பர்களுக்கு எழுதினேன்.
அதன் சாராம்சம்:
நமது மக்கள் ஏன் இப்படி சோம்பியவர்களாக, தனித்திறமையற்று இருக்கிறார்கள்? சமீபத்திய ஒலிம்பிக் முடிவுகளை கவனித்ததை ஒட்டியும், பொதுவாக ஐரோப்பியர்களின் வாழ்க்கையை கவனித்ததை வைத்தும் நான் நினைப்பவை இவை…
1. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவையே பெரும்பாலும் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய (பொதுவாக -’மேலை நாடுகள்) நாடுகளின் கலாச்சாரம் தனிமனிதனை -அவன் வெற்றி, தோல்வி, சுகதுக்கங்களை, அவன் சொந்த நலனை முன்னிறுத்துபவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவனையே சாரும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் யாரையும் சார்ந்திருக்காத அதே சமயம் யாரையும் கடைசிவரை ஆதரிக்க வேண்டுமென்கிற தார்மீகச் சுமை இல்லாத தனிமனித சுதந்திரத்தை, நலனை முதன்மைப்படுத்தும் கலாச்சாரம்.
2. சமீபத்திய சில ஒலிம்பிக் பந்தயங்களை எடுத்துக் கொண்டால் ஆசியாவில் இருந்து அந்தப் பட்டியலுக்குள் பாய்ந்து வந்து அமர்ந்திருப்பவை சீனா, ஜப்பான், தென்கொரியா. இதில் சீனாவை மட்டும் விதிவிலக்காகக் கொண்டு ஒதுக்கி விடுகிறேன், அது சர்க்கஸ் மிருகங்களைப் பயிற்சி கொடுத்து வித்தைகாட்ட வைப்பதை தான் ஞாபகப்படுத்துகிறது. ஆனால் ஜப்பானும் தென்கொரியாவும் சமூகக் கலாச்சாரத்தில் நிறைய மாறிவிட்டன – அதாவது ஐரோப்பிய வாழ்க்கை முறையின் – சமூக இயங்குமுறையின் தாக்கம் மிகமிக அதிகம். அங்கு கீழைத்தேய வாழ்வுமுறை மாறி ‘தனிமனிதன்’ , தனிவாழ்க்கை என்னும் கருத்து சர்வசகஜமாக ஆகிவிட்டது. பழைய கலாச்சார விழுமியங்கள் பேணப்படுவதில்லை.
3. மேற்சொன்ன இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது தனிமனிதன் என்னும் கருத்தை முன் வைக்கும் சமுதாயம் தனிமனிதத் திறமைகளை, தனிநபர் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வித்யாசமாக, புதிதாக ஏதாவது செய்யப் படும்பாட்டைப் பார்க்கிறேன்.
4. ஆனால் இந்தத் ‘தனிமனிதன்’ என்னும் கலாச்சாரம் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை சிதைத்துப் போட்டுவிடுகிறது. பெரும்பாலானவர்களின் career நன்றாக இருந்தாலும், அந்தரங்க வாழ்க்கை மிகமோசமானதாக இருக்கிறது. அந்த அழுத்தம், அது தரும் மனச்சோர்வு ஆண், பெண் இருபாலரையும் நாற்பது வயதுகளில் தொடங்கி மிகவும் பாதிக்கிறது. கடைசிவரை நிலையில்லாத பந்தங்கள் தான் பெரும்பாலும். இந்த விரக்தியில் தான் வாழ்க்கைக்கு எந்த பொருளும் இல்லை, பிறந்தோம், அனுபவிப்போம், சாவோம் என்ற மனநிலைக்கு வருகிறார்கள். ஒரு பிடிமானம் இல்லை. தள்ளி இருந்து பார்க்கும் போது தெரியாது. நெருங்கிப் பழகி, நம்பிக்கையைச் சம்பாதித்தால் அப்புறம் அவர்கள் சொல்வதில் இருந்து நமக்கு இது புரியும்.
5. நம் குடும்ப வாழ்க்கை முறை, நம்மைச் சார்ந்தவர்களுக்காக நாம் நமது விருப்பங்களையும், ஆர்வங்களையும் தவிர்த்துக்கொள்ளுதல், ஒருவகையில் தனிமனிதத் திறமைகளைப் பின்னுக்கு இழுத்தாலும், ஒப்பீடாக மேலைக் கலாச்சாரத்தைத் தொடர்பவர்களை விட நம் அந்தரங்க வாழ்க்கை திருப்திகரமாகவே இருக்கிறது. ஆக, லாபமும், நட்டமும் வெவ்வேறு வாழ்க்கைமுறைகளில் ஒரு மாதிரி ஊசலாட்டத்திற்குப் பிறகு முள் ஒரு சமநிலைக்கு வருகிறது என்று நினைக்கிறேன். அதிக GDP அல்லது Gross National Happiness (GNH) எது ஒரு நாட்டிற்கு அவசியம் என்பது போல மேற்கண்டதும், சிக்கலான ஒரு சமநிலை.
(அயல்நாடுகளிலும் இந்தியாவிலும் சாதிக்கும் சில விதிவிலக்கான இந்தியர்களை விலக்கி, பெரும்பான்மையான சராசரி மக்களைக் கொண்டு அடைந்த முடிவுகள் இவை. மேலும் இவை ஒலிம்பிக் சமயத்தில் தோன்றியவை. மேலோட்டமான புரிதலுக்கு நமது குடும்ப வாழ்க்கை முறையால் தான் நாம் தனித்திறமைகளை வளர்க்காமல் மந்தையாக வாழ்கிறோம் என்று நான் சொல்வது போல் தோன்றும். சிறிய நண்பர்கள் கூட்டம் என்பதால் புரிந்துகொள்ளப்படும் என்று நினைத்து எழுதுகிறேன்.)
***
இதன் பின்னர் கிருஷ்ணனுடன் தொலைபேசியில் நடந்த உரையாடல்களில் இங்கே நான் கவனித்தவை, என் நேரடி அனுபவம், இந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் சில விஷயங்களைச் சொன்னேன். அவற்றை வரும் நாட்களில் எழுதுகிறேன்.
எல்லா நாட்டு சர்வதேச விமான நிலையங்களும் ஒரே உணர்வைத் தருவதைப் போல பெருவாரியான “வெளிநாட்டு அனுபவங்களும்” புறவாழ்க்கையை வைத்து மட்டும் பார்த்தால் பெரிய வித்யாசம் எதுவும் தெரியாது. இவற்றில் பொதுவாக, வெள்ளைக்காரப் பிள்ளைகள் பஸ்ஸில் போகும் போது அழுவதே இல்லை, இந்தியப் பிள்ளைகள் கத்திக் கூப்பாடு போடும், வெள்ளைக்காரர்கள் காலையில் குளிப்பதே இல்லை, மவுத்வாஷ் மட்டும் செய்துவிட்டு, சாண்ட்விச்சும், காப்பிக் கோப்பையுமாகக் கிளம்பிவிடுவார்கள், வாக்கிங் போகும் போது எதிர்ப்பட்டால் “இனிய நாள்” என்று சிரித்தபடி வாழ்த்துவார்கள், ட்ராமில், பஸ்ஸில், ட்ரையினில் எங்கும் காதில் ஐபாடும், கையில் புத்தகமுமாக இருப்பார்கள், அடுத்தவர்களைக் கவனிக்க மாட்டார்கள், தெருவெல்லாம் கண்ணாடி மாதிரி இருக்கும், இந்தியாவின் மசால் தோசையை விரும்புவார்கள், இனிப்பு போடாமல் காப்பி, டீ குடிப்பார்கள் … என்பவை உட்பட இன்னும் எழுதிச் சலித்த ஏராளமானவை உண்டு. அவற்றை நான் எழுதப்போவதில்லை.
அயல் வாழ்க்கை, அயல் கலாச்சாரம் என்பதில் என்னைப் பொறுத்தவரை முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தனிமனித உறவுகள், உறவுச்சிக்கல்கள் -இவற்றினால் உண்டாகும் அகபாதிப்புகள் – புறவிளைவுகள் தான். ஏனென்றால் அது தான் அந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு விளைவை உண்டாக்கவல்லது.
கிட்டத்தட்ட நமது நாட்டைப் போலவே நெடுங்கால அந்நிய ஆக்கிரமிப்பு, போராட்டங்கள், அழிவுகள், சுதந்திரம், பிரிவினை என்னும் வரலாற்றுத் தடம் உள்ள நாடு செக் குடியரசு. தனிநாடாக நம்மை விட மிக இளைய நாடு. பொருளாதாரத்தில், பொது வாழ்க்கைத்தரத்தில் வளர்ந்த நாடு. இங்கே தனிவாழ்க்கை எப்படி இருக்கிறது? நான் கவனிப்பவற்றை எழுதுவேன்.
***

செக் குடியரசின் சுருக்கமான முன்வரலாறு:

13ஆம் நூற்றாண்டு-
கடுமையான படையெடுப்புகளால் உலகையே நடுங்க வைத்த மங்கோலியப் படை ஜெங்கிஸ்கானின் பேரன் பைதாரின் தலைமையில் ஐரோப்பாவை ஆக்கிரமிக்கப் புகுந்தபோது செக்நாட்டின் கிழக்கு எல்லையில் தோற்கடிப்பட்டது. பைதார் கொல்லப்பட்டார். வரலாற்றில் வெல்லவே முடியாததாக விளங்கிய மங்கோலியப்படைகள் செக் படைவீரர்களால் அடக்கப்பட்டது .
14ஆம் நூற்றாண்டு-
செக் அரசர் நாலாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் சக்ரவர்த்தியாக, ரோம, இத்தாலிய தேசங்களின் மாமன்னனாக ஐரோப்பாவின் செல்வாக்கான அரசராக விளங்கினார். செக்கின் பொற்காலம்.
15ஆம் நூற்றாண்டு-
ஐரோப்பாவில் போப் தலைமையிலான நிறுவன கிறிஸ்தவத்தின் அடக்குமுறைகள், பாகுபாடுகளைக் கண்டித்து பெரும் கலகம் செய்த செக் நாட்டவரான யான் ஹூஸ் என்னும் சீர்திருத்தவாதியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இருபத்தி ஐந்து வருடங்கள் நிறுவன கிறிஸ்தவத்தை எதிர்த்துப் போராடினர். கிறிஸ்தவ போப் ஏவிவிட்ட சிலுவைப்படைகளுடன் மூன்று முறை போரிட்டனர். விளைவாக மெல்ல மெல்ல மொத்த நாடும் ஆன்மீக கிறிஸ்தவ நாடாக மாறியது. போப், கத்தோலிக்கம் இரண்டும் வலுவிழந்தது. யான் ஹூஸின் மறைவிற்குப் பின் புரட்சிப்படை மெல்ல வன்முறைப் படையாக மாறி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கெதிரான கொடுமைகளை நடத்தத் தொடங்கியது. அதுவே பின்னர் வேறு வகையில் நிறுவனமாகி அதிகாரத்துடன் இணைந்து கொண்டு, எதிர்த்துப் பேசுபவர்களை வன்முறையால் கையாளும் அடக்குமுறையாகிப் போனது தனிச் சோகக்கதை.
16, 17, 18, 19ஆம் நூற்றாண்டுகள்-
ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பர்க் அரசவம்சத்தின் கட்டுப்பாட்டுக்குள் மெல்லெ மெல்ல செக் நாடு வந்தது. புனித ரோமப்பேரரசு வீழ்ந்த பின் ஆஸ்திரோ-ஹங்கேரிய அரசின் கீழ் வெறும் ஒரு அங்கமாக ஆனது. (கிட்டத்தட்ட காலனிபோல). பஞ்சம், போர்கள், துர்க்கியப் படையெடுப்பு, பெரும் நோய்கள் என்று பேரிழப்புகளுடன் தொடர்ந்த சோதனையான காலகட்டம். கத்தோலிக்க நிறுவன கிறிஸ்தவம் மீண்டும் அரச குடும்பத்தால் வலுவாக்கப்பட்டது. சீர்திருத்த கிறிஸ்தவம் உட்பட எல்லா பிற மத நம்பிக்கைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டன.
20ம் நூற்றாண்டு-
முதல் உலகப்போரில் ஆஸ்த்ரோ-ஹங்கேரிய அரசு தோற்று சிதைந்த பின்னர் செக்கொஸ்லோவாக்கியா என்னும் தனி நாடு உருவாக்கப்பட்டது.
ஹிட்லரின் நாஜி ஜெர்மனி செக்கோஸ்லோவாக்கியாவை மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மீண்டும் லட்சக்கணக்கான கொடூர மரணங்கள். செக்கோஸ்லோவாகியர்களும், யூதர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்று 1945ல் ரஷ்ய லிபரேஷன் படை பிராக் நகருக்குள் வந்து நாட்டை விடுவித்ததுடன் ஜெர்மானிய ஆதிக்கம் ஒழிந்தது. கம்யூனிஸமும், ரஷ்யர்களும் கொண்டாடப்பட்டார்கள்.
கம்யூனிஸம் பிரபலைமடைந்து வெகுவேகமாக வளர்ந்தது. செக்கோஸ்லோவாகிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி அடுத்த ஆண்டே (1946ல்) ஆட்சியைப் பிடித்தது. அடுத்தடுத்த வருடங்களில் ‘சீர்திருத்த புரட்சி’ என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையும் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கம்யூனிஸ்ட் கட்சி. அடக்குமுறை ‘சுதந்திரம்’. கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் கைதிகளும், கலகக்காரர்களும், சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டனர். ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளுக்கு விசுவாசமான நாடு.
தொடர்ந்து 41 ஆண்டுகள் கம்யூனிசத்தின் ஆட்சி. 1950களில் வேகமாக வளர்ந்த நாடு, 60, 70 களில் வளர்ச்சி வேகம் குறைந்தது, 80களில் முற்றிலும் தேங்கிப் போனது. செக்கொஸ்லோவாகியா மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதாரத்தில், வளர்ச்சியில் பின் தங்கியது. இந்த நாற்பத்தோரு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேர் தேசத்திற்கு எதிரானவர்களாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், நான்கு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
1989ல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை வழிப்போராட்டம் – ‘வெல்வெட் புரட்சி’ கம்யூனிச சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இன்னொரு சுதந்திரம். தாராளவாத பொருளாதாரக் கொள்கையுடன், புதிய ஜனநாயக ஆட்சி உருவானது.
1993ல் ஸ்லோவாகியா சண்டையும், கொலைகளுமின்றி அமைதியாக சகோதர நாடாக தனியாகப் பிரிந்தது – ‘வெல்வெட் டிவோர்ஸ்’.
கடந்த பத்தொன்பது வருடங்களாக தனி நாடாக செக் குடியரசாக இருக்கிறது. மிக இளைய நாடு. வேகமான முன்னேற்றம். உலக வங்கியின் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. ஒரு கோடி ஜனத்தொகை. நல்ல சமூகவாழ்க்கைத் தரம்.
கவனித்தால் சில வேறுபாடுகளுடன் நமது வரலாற்றுப் போக்கு போலவே இருப்பது தெரியும். ஒரு அரசியல், மத பொற்காலம், தொடர்ந்து நூற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பு, அஹிம்சை வழியில் ஒரு புரட்சி, பிரிவினை..என்று..
இன்றைய சமூக, அரசியல், கலாச்சார, வாழ்க்கை நிலையில் சொந்த வரலாற்றின் தாக்கம் இருக்கும். அதற்காகவே இந்த எளிய வரலாற்று அறிமுகம்.

- பிரகாஷ் சங்கரன்

                                                                                                                                              (பகுதி - 2)