Saturday, March 23, 2013

நடனம் ஆடுவீர்களா? (சிறுகதை - ரேமண்ட் கார்வர்)


குடிப்பதற்கு ஒரு கோப்பையை நிரப்பிக் கொண்டே சமையல் அறையிலிருந்து, முன்முற்றத்தில் இருந்த ‘படுக்கையறை’யைப் பார்த்தான்.  மெத்தையை மூடியிருந்த கோடு போட்ட படுக்கை விரிப்பு அவிழ்க்கப்பட்டு, பக்கத்திலிருந்த மேசையின் மேல் கிடந்த இரண்டு தலையணைகளுக்குப் பின்னால் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர மற்ற அனைத்தும் படுக்கையறையில் ஏற்கனவே எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கிறது -படுக்கையில் அவன் பக்கத்தில் படிக்கும் விளக்குடன் ஒரு சிறுமேசை, அவள் பக்கத்தில் படிக்கும் விளக்குடன் ஒரு சிறுமேசை.
அவன் பக்கம், அவள் பக்கம்.
விஸ்கியை ஒரு மடக்கு உறிஞ்சிய போது அதை நினைத்துக்கொண்டான்.
மேசை, கட்டிலின் விளிம்பிலிருந்து சில அடி தூரத்தில் இருந்தது. அன்றைக்குக் காலையில் தான் மேசை டிராயர்களை ஒழித்து, அதில் இருந்த பொருட்களை எல்லாம் ஒரு அட்டைப் பெட்டிக்குள் போட்டு கட்டிவைத்திருந்தான். அந்த அட்டைப் பெட்டி வீட்டின் கூடத்தில் இருந்தது. மேசைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஹீட்டர் இருந்தது. கட்டிலின் கால் மாட்டில் அலங்கார தலையணையுடன் கூடிய ஒரு பிரம்பு நாற்காலி இருந்தது. பழுப்பேறிய அலுமினிய சமையல் பாத்திர செட் முற்றத்தின் ஒரு ஓரத்தை அடைத்துக் கொண்டு கிடந்தது. அன்பளிப்பாகக் கிடைத்த பெரிய மஞ்சள் நிற மஸ்லின் துணி ஒரு மேசை மீது விரிக்கப்பட்டு அதன் பக்கங்களில் வழிந்து தரையில் கிடந்தது. அதன் மேல் ஏதோ செடியுடன் ஒரு சிறிய பூந்தொட்டியும், பக்கத்தில் ஒரு கிராமஃபோனும், டப்பா நிறைய சாப்பிட உபயோகிக்கும் கரண்டிகளும், முள் கரண்டிகளும், மழுங்கிய கத்திகளும் இருந்தன. அவையெல்லாமும் அன்பளிப்பாகக் கிடைத்தவை தான். காபி மேசையின் மீது மரக்கதவும், சட்டகமும் கூடிய டிவி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சற்றுத் தள்ளி ஒரு சோஃபாவும், நாற்காலியும், தரைவிளக்கும் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வைக்கும் அறையின் கதவிற்கு முட்டுக் கொடுத்தபடி ஒரு எழுத்து மேசை இருந்தது. அதன் மீது சில பாத்திரங்களும், ஒரு சுவர்க்கடிகாரமும், இரண்டு ஃபிரேம் போட்ட படங்களும் இருந்தன. வண்டிப்பாதையில் ஒரு பெட்டி நிறையக் கண்ணாடி, பீங்கான் கோப்பைகளும் தட்டுக்களும்  -ஒவ்வொன்றும் தனித்தனியாக பழைய செய்தித்தாளால் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. காலையில் தான் அலமாரிகளில் இருந்து அனைத்தையும் ஒழித்து சுத்தப்படுத்தியிருந்தான், கூடத்தில் இருக்கும் மூன்று அட்டைப்பெட்டிகளைத் தவிர எல்லாப் பொருட்களும் வீட்டிற்கு வெளியே தான் இருந்தது. வீட்டிற்குள்ளே இருந்து நீண்ட இணைப்பு மூலம் மின்சாரம் இழுத்து அனைத்திற்கும் தொடர்பு தந்திருந்தான். எல்லாமே இயங்குகிறது, அவையெல்லாம் வீட்டிற்குள்ளே இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது. ஒரு வித்தியாசமும் இல்லை.
அவ்வப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் வேகம் குறைந்தது, அதில் இருந்தவர்கள் வெறித்துப்பார்த்தனர். ஆனால் ஒரு வண்டியும் நிற்கவில்லை.
இதுவே அவனாக இருந்தாலும் நிற்காமல் தான் போயிருப்பான்.
dance-2
    o0o0o0o
“எல்லாம் விக்கிறதுக்கா இருக்கும்,” அந்த இளம் பெண் பக்கத்திலிருந்த இளைஞனிடம் சொன்னாள்.

அவளும், அவனும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அவர்களுடைய சிறிய வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.
“அந்த மெத்தைக்கு எவ்வளவு கேக்கறாங்கன்னு பார்ப்போம்” என்றாள் அவள்.
“அப்படியே டிவியையும் சேர்த்துக் கேட்கலாம்” என்றான் அவன்.
வீட்டின் முன்கேட்டைத் திறந்து காரை உள்ளே செலுத்தி சமையல் மேசைக்கு அருகில் நிறுத்தினான்.
இருவரும் வண்டியை விட்டு இறங்கி அங்கிருந்த பொருட்களைச் சோதிக்கத் தொடங்கினார்கள். அவள் மஸ்லின் துணியைத் தொட்டுப்பார்த்தாள், அவன் மிக்ஸியை மின்சாரத்தில் இணைத்து அதன் திருகுவிசையைத் திருப்பி பொடிப்பொடியாக நறுக்கும் இடத்தில் நிறுத்திப் பார்த்தான். அவள் உணவை சூடுகுறையாமல் வைக்கும் பாத்திரத்தை கையில் எடுத்துப் பார்த்தாள், அவன் டிவியை இயக்கி அலைவரிசைகளை மாற்றிப்பார்த்தான்.
அவன் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு டிவியைப் பார்த்தான். ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தபடி சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டுத் தீக்குச்சியை புல்தரையில் சுண்டி எறிந்தான்.
அவள் படுக்கையில் அமர்ந்தாள். காலணியை உதறிவிட்டு மெல்ல மெத்தையில் சாய்ந்தாள். மல்லாந்து படுத்தவாறே ஒரு நட்சத்திரத்தை பார்ப்பதாக நினைத்துக் கொண்டாள்.
“ஜாக், ஒரு தலகாணிய எடுத்துக்கிட்டு இங்க வா, இந்த மெத்தையில படுத்துப் பாரு” என்றாள்.
“எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“நீயே ட்ரை பண்ணிப் பாரு” என்றாள் அவள்.
அவன் சுற்றும்முற்றும் பார்த்தான். வீடு இருண்டு கிடந்தது.
“வேடிக்கையா இருக்கு…” என்றான், “வீட்ல யாராவது இருக்கங்களான்னு பாத்துடறது நல்லது”
அவள் மெத்தையில் துள்ளிக் குதித்தாள். “முதல்ல இந்த மெத்தையில் படுத்துப் பாரு” என்றாள்.
அவன் தலைக்குக் கீழே தலையணையை வைத்து மெத்தையில் படுத்து கொண்டான்.
“எப்படி இருக்கு?” -அவள் கேட்டாள்.
“நல்லா உறுதியா இருக்கு” என்றான்.
அவள் அவளுடைய பக்கத்தில் புரண்டு படுத்து அவன் முகத்தில் கை வைத்தாள்.
“முத்தம் கொடு” என்றாள்.
“எழுந்திரிக்கலாம்” என்றான்.
“முத்தம் கொடு”, அவள் கண்களை மூடி, அவனை இறுக்கிக் கொண்டாள்.
“நான் போய் வீட்ல யாராவது இருக்காங்களான்னு பாக்கறேன்” என்றான்.
ஆனால் எழுந்து எங்கும் போகாமல், மெத்தையில் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து டிவி பார்க்கிறவன் போல பாவனை செய்தான்.
தெருவில் இருந்த மற்ற வீடுகளில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன.
“ஒருவேளை.. இப்படி இருந்தா நல்லா இருக்கும்ல?…” ஏதோ சொல்லத் தொடங்கியவள் சொல்லி முடிக்காமல் நிறுத்தி, மெல்ல நகைத்துக் கொண்டாள்.
அவனும் சிரித்தான் -ஒரு காரணமும் இல்லாமல்,  ஒரு காரணமும் இல்லாமலேயே படிக்கும் விளக்கை ஒளியூட்டினான்.
அவள் ஒரு கொசுவை விரட்டினாள், அவன் எழுந்து தன் சட்டையைச் சரி செய்து கொண்டான்.
“நான் போய் வீட்ல யாராவது இருக்காங்களான்னு பாக்கறேன்,” என்றான், “ஒருத்தரும் இருக்கற மாதிரி தெரியல, ஒருவேளை இருந்தா எதையெல்லாம் விக்கிறாங்கன்னு கேக்கறேன்”.
“அவங்க என்ன விலை சொன்னாலும் சரி, பத்து டாலர் கம்மியாவே கேளு, எப்பவுமே அது தான் பேரம் பேசறதுக்கு நல்ல வழி” என்றாள். தொடர்ந்து, “வித்தே ஆகனும்னு ஏதாவது கஷ்டம், கட்டாயம் இருக்கும்”
அவன், “நல்ல டிவி” என்றான் .
அவள், “அதுக்கும் விலை எவ்வளவுன்னு கேளு” என்றாள்.
    o0o0o0o
அந்த ஆள் சந்தையிலிருந்து ஒரு பையை தூக்கிக் கொண்டு சாலையோர நடைபாதையில் வந்தான். அதில் பியரும், விஸ்கியும், கொஞ்சம் ரொட்டிகளும் இருந்தது. வீட்டின் முற்றத்தில் ஒரு கார் நிற்பதையும், ஒரு இளம் பெண் மெத்தையில் படுத்திருப்பதையும் கண்டான். டிவி ஓடிக்கொண்டிருந்தது, ஒரு இளைஞன் வீட்டின் தாழ்வாரத்தில்  நின்றிருந்தான்.
அவன் நெருங்கி பெண்ணிடம், “ஹலோ” என்றான், “மெத்தை பிடிச்சிருக்கா?”
“ஹலோ” என்றபடி அவள் எழுந்தாள், “சும்மா எப்படி இருக்குன்னு படுத்துப் பார்த்தேன்..”, மெத்தையை மெல்லத் தட்டினாள், “நல்ல மெத்தை” என்றாள்.
அந்த ஆளும், “ஆமாம், நல்ல மெத்தை தான்” என்றபடி கொண்டுவந்த பையை கீழே வைத்து, அதிலிருந்து பியரையும், விஸ்கியையும் வெளியில் எடுத்து வைத்தான்.
“இங்க யாருமே இல்லைன்னு நினைச்சோம்” என்றான் அந்த இளைஞன். “இந்த மெத்தையும், டிவியும் அப்புறம் அந்த எழுத்து மேசையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு, வாங்கலாம்னு நினைக்கிறோம். மெத்தைக்கு என்ன விலை எதிர்பாக்கறீங்க?”
“ம்ம்ம்… அதுக்கு ஐம்பது டாலர் யோசிச்சிருக்கேன்” என்றான் அந்த ஆள்.
“நாப்பது டாலர், சரியா?” என்றாள் அவள்.
“சரி, நாப்பது கொடுங்க போதும்” என்றான்.
அந்த ஆள் அட்டைப் பெட்டியிலிருந்த கண்ணாடிக் கோப்பையை எடுத்து அதன் மேல் சுற்றியிருந்த காகிதத்தை பிரித்தான். விஸ்கி பாட்டிலின் மூடியிலிருந்த முத்திரையை உடைத்துத் திறந்தான்.
“டிவிக்கு எவ்வளவு?” அந்த இளைஞன் கேட்டான்.
“இருபத்தி அஞ்சு”
“பதினைஞ்சுக்கு தர்றீங்களா?” அவள் கேட்டாள்.
“பரவாயில்ல..பதினைஞ்சு போதும்” என்றான்.
அவள் அந்த இளைஞனைப் பார்த்தாள்.
“பசங்களா… ஏதாவது கொஞ்சம் குடிங்க.” என்றான் அந்த ஆள், “கண்ணாடி கிளாஸெல்லாம் அந்தப் பெட்டில இருக்கு. நான் உட்காரப்போறேன்”.
அந்த ஆள் சோஃபாவில் உட்கார்ந்து, நன்றாக காலை முன்னால் நீட்டி, முதுகைப் பின்னால் சாய்த்துக் கொண்டு அவளையும் அவனையும் உற்றுப் பார்த்தான்.
    o0o0o0o
அந்த இளைஞன் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை எடுத்து அவற்றில் விஸ்கியை ஊற்றினான்.
“எனக்கு போதும். நான் தண்ணீர் கலந்துக்குவேன்” என்றாள் அவள்.
சமையல் மேசைக்கருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அம்ர்ந்து கொண்டாள்.
“அங்க இருக்கற குழாய்ல தண்ணீர் வரும்”, குழாயைக் காட்டினான் அந்த ஆள். “நல்லா திற…”.
தண்ணீர் கலந்த விஸ்கியுடன் அந்த இளைஞன் வந்தான். தொண்டையக் கணைத்துக் கொண்டு சமையல் மேசையில் அமர்ந்தான். குடிக்காமல் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.
அந்த ஆள் டிவியை ஆழ்ந்து பார்த்தான். தன் கோப்பையில் இருந்ததை குடித்து விட்டு மறுபடியும் விஸ்கியை ஊற்றி நிரப்பினான். எழுந்து சென்று தரை விளக்கைப் போட்டான். அப்பொழுது அவன் விரலிடுக்கில் வைத்திருந்த சிகரெட் நழுவி சோஃபாவின் ஒரு இடுக்கினுள் விழுந்தது.
அவள் எழுந்து அதைத் தேடி எடுக்க அவனுக்கு உதவப்போனாள்.
“சரி…உனக்கு என்னெல்லாம் வேணும்?” இளைஞன் அவளிடம் கேட்டான்.
அவன் தன் செக்புத்தகத்தை வெளியில் எடுத்து, அதை உதட்டுக்கு அருகில் வைத்துக் கொண்டு சிந்திப்பது போல நின்றான்.
“எனக்கு அந்த எழுத்து மேசை வேணும்” என்றாள். “அதுக்கு எவ்ளோ பணம்?”
விவேகமில்லாத அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் காற்றில் வெறுமனே கை அசைத்தான் அந்த ஆள்,
“நீயே ஏதாவது விலை சொல்லு” என்றான்.
மேசைக்கருகில் உட்கார்ந்திருந்த அவர்கள் இருவரையும் உற்றுப்பார்த்தான். விளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் முகத்தில் என்னவோ தெரிந்தது. அது நல்லதா அல்லது கெட்டதா. ஊகிக்க முடியவில்லை.
    o0o0o0o
அந்த ஆள், “டிவியை அணைச்சுட்டு கிராமஃபோனைப் போடறேன்” என்றான். “அதுவும் விக்கிறதுக்குத் தான். விலையும் ரொம்பக் கம்மி. நீங்களா பாத்து ஒரு விலை சொல்லுங்க” என்றான்.
இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக்கொண்டு பியரைத் திறந்தான். “எல்லாமே விக்கிறதுக்குத்தான்” என்றான்.
அவள் தன் கோப்பையை நீட்டினாள், அந்த ஆள் அதிலும் ஊற்றினான்.
“தேங்க்ஸ், நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க” என்றாள்.
“விஸ்கி உனக்கு நல்லா தலைக்கு ஏறுது” என்றான் இளைஞன் அவளைப் பார்த்து, “எனக்கும் தான்” என்றபடி தன் கோப்பையை உயர்த்திக் குலுக்கினான்.
அந்த ஆள் தன் கோப்பையைக் காலி செய்துவிட்டு மறுபடியும் ஊற்றிக் கொண்டான். இசைத்தட்டுகள் இருக்கும் பெட்டி தட்டுப்பட்டது. பெட்டியை அவளிடம் நீட்டி, “ஏதாவது ஒன்னை எடு” என்றான். இளைஞன் செக்புத்தகத்தில் பணம் எழுதி நிரப்பிக்கொண்டிருந்தான்.
அவள் அந்த இசைத்தட்டுக் குவியலில் இருந்து சும்மாவேனும் எதையோ எடுத்து, “இந்தாங்க” என்றாள்.
அவள் தந்த இசைத்தட்டின் மேல் என்ன எழுதியிருக்கிறது என்று கூட அவளுக்குத் தெரியாது. உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று விட்டு மறுபடியும் அங்கேயே உட்கார்ந்தாள் -அசையாமல் ஒரே மாதிரி உட்கார விரும்பாதவள் போல.
“செக் எழுதிட்டேன், பேங்க்ல அப்படியே காட்டி பணம் எடுத்துக்கலாம்” என்றான் இளைஞன்.
“நல்லது” -அந்த ஆள் கூறினான்.
அவர்கள் சேர்ந்து குடித்தார்கள். பாட்டுக் கேட்டார்கள். அந்த ஆள் மறுபடியும் தன் கோப்பையை நிரப்பினான்.
குழந்தைகளே, நடனம் ஆடுவீர்களா? என்று கேட்க மனதில் நினைத்தான், ஆனால், “நடனம் ஆடுவீர்களா?” என்று கேட்டான்.
“இங்க ஆட முடியுமா என்ன?” என்றான் இளைஞன்.
“ஏன் முடியாம? ஆடுங்க. இது என்னோட வீட்டு முற்றம். நீங்க விரும்பினா இங்கயே நடனம் ஆடலாம்”
    o0o0o0o
    dance1
இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும்,  அதையே  மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள். இசைத் தட்டு முடிந்த போது, இளைஞன்,  ”எனக்கு போதை ஏறிவிட்டது” என்றான்.
“உனக்கு ஒன்னும் இல்லை” என்றாள் பெண்.
“ஆமாம், எனக்கு போதை ஏறிவிட்டது” என்றான்.
அந்த ஆள் அந்த இசைத்தட்டை திருப்பி வைத்து சுழல விட்டான். இளைஞன், “எனக்கு…” என்று இழுத்தான்.
அவள் இளைஞனிடம் “என்கூட ஆடனும்” என்றாள், பின்னர் அந்த ஆளிடம் கூறினாள். அந்த ஆள் எழுந்து நின்றபோது அவள் இருகரங்களையும் அகல விரித்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
    o0o0o0o
அவள், “அதோ.. அங்க இருக்கறவங்க பாத்துக்கிட்டே இருக்காங்க” என்றாள்.
“பரவாயில்ல” என்றான் அந்த ஆள், “இது என்னோட வீடு”.
அவள், “ஆமாம், பாத்தா பாத்துக்கட்டும்” என்றாள்.
“அதான் சரி, நல்லா பாக்கட்டும்” என்றான் அந்த ஆள்.  ”ஆமாம். இங்க நடந்த எல்லாத்தயும் பார்த்துட்டதா நினைச்சிருப்பாங்க. ஆனா, அவங்க இன்னும் இத பார்க்கல, இல்ல?” என்றான்.
அவன் அவளது மூச்சைத் தன் கழுத்தில் உணர்ந்தான்.
“உனக்கு உன் மெத்தைய ரொம்ப பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.
அவள் மெல்லத் தன் இமைகளை மூடித் திறந்தாள். அவள் தன் முகத்தை அவன் தோள்களில் அழுத்தினாள். அவனை தனக்கு நெருக்கமாக இழுத்துக் கொண்டாள்.
“நீ வாழ்க்கைல வெறுத்துப் போயிருக்கனும் அல்லது வேற ஏதாவது நடந்திருக்கனும்” என்றாள்.
    o0o0o0o
பல வாரங்கள் கடந்து அவள் சொன்னாள்: “அந்தாளுக்கு நடுத்தர வயசிருக்கும். அந்தாளோட பொருளெல்லாம் வீட்டோட முன் முற்றத்துல கிடந்துச்சு. பொய்யே சொல்லல…நெஜமா நல்ல போதை..அப்புறமா ஆடினோம். அந்த வீட்டு முற்றத்திலேயே… கடவுளே.. சிரிக்காத.. எங்களுக்கு  இதோ இந்த ரிக்கார்ட தான் போட்டான். இந்த கிராமஃபோனப் பாரேன்.. அந்த கிழட்டுப் பய இதையும் எங்களுக்குக் கொடுத்தான்.. மேற்கொண்டு இதோ இவ்வளவு அரதப் பழைய ரிக்கார்டுகளையும்.. இந்த குப்பையை எல்லாம் எவனாவது கண்ணால பாக்கவாவது செய்வானா?”
அவள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள். பார்க்கும் எல்லோரிடமும் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஆனால் அதற்கும் மேல் அதில் எதுவோ சொல்ல இருந்தது, அவள் அதையும் பேசியே வெளியில் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என முயன்றாள். கொஞ்ச காலம் கழித்து, அவள் அந்த முயற்சியையும் கைவிட்டாள்.

...
(மொழிபெயர்ப்பு :பிரகாஷ் சங்கரன்)

நன்றி : சொல்வனம், இதழ்-83 http://solvanam.com/?p=24567