Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - பகுதி 4)


“கௌரியேட்டா... நீங்களும் கோசாலைக்கு என்கூட வாங்களேன்” தலையை ஒரு பக்கமாகச் சரித்து, கண்களை இடுக்கி செல்லமாகக் கெஞ்சும் பாவனையில் அழைத்தாள். பட்டுநூலில் கட்டிய நாய் மாதிரி அவளுடன் சென்றேன். ஒருக்காலும் என்னால் அதை அறுத்துக் கொண்டு ஓட முடியாது என அறிவேன்.

      கோசாலை நோக்கி நந்தவனத்தின் ஊடாக நடந்தேன். பூஜைக்குப் பறித்தது போக மீதமிருந்த பூக்களிளெல்லாம் ஒரு தேனீ போல விரல்களால் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டே வந்தாள். இமைகள் சிறகு போல படபடக்க, தன்னையறியாமல் மெல்லச் சிரித்துக்கொண்டே இருந்தாள். நந்தவனத்தின் மறுபுறம் வழியாக வெளியேறி சரிவில் ஒற்றையடிப் பாதை வழியாக இறங்கினேன். எப்பொழுதும் போல மிகக்கவனமாக அடியெடுத்து வைத்து பின்தொடர்ந்து வந்தாள். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக வர, மௌனம் கணத்து என் முதுகில் தொற்றி ஏறி உட்கார்ந்து கொண்டு சரிவில் என்னை முன்னோக்கித் தள்ளுவது போல உணர்ந்தேன்.

கல்தூண்களின் மேல் படுக்கவைத்த மர உத்தரத்தில் வந்து சரிந்த ஓடுவேய்ந்த முன் பக்கத் திண்ணையில் யாரோ வேட்டியால் முகத்தைமூடி இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய மரக்கதவைத் திறந்து கோசாலைக்குள் நுழைந்தேன். நடுவே திறந்த முற்றத்தைச் சுற்றிக் கவிழ்த்த ‘ப’ போல இருந்த கொட்டிலுக்குள் அவளை அழைத்துச் சென்றேன். கருங்கல் பாவி, புல்கூரை வேய்ந்திருந்த்தது. வேலையாட்கள் யாரும் இல்லை. பால் கறந்து, கழுவி விட்டு சென்றிருந்தார்கள். பசுக்களின் உடம்பிலிருந்து வெப்பம் மெல்லிய அலைகளாக வெளிவந்து கொட்டிலே கதகதப்பான போர்வைக்குள் இருப்பது போலிருந்தது. புதிய சானமும், மூத்திரமும் கலந்த காரநெடி நீராவியாக எழுந்து பரவி நாசியை அடைத்தது. 

இடுப்பு உயரமிருந்த சுவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்த மரப்பலகைத் தடுப்புக்குள் புதிதாகக் அறுத்துக் கொண்டுவந்த புல்லைக் கொட்டியிருந்தார்கள். மூக்கனாங்கயிறு இல்லாமல் பசுக்கள் சுதந்திரமாக திசைக்கு ஒன்றாக இருந்தன. என் பாட்டியின் தோழிமார்களில் ஒருத்தி முன்னங்கால் இரண்டையும் கழுத்தின் கீழே மார்போடு ஒட்டி மடக்கி, வலது பின்னங்காலை உப்பிய வயிற்றின் அடியில் வைத்து, பெருத்து வெளிறிய அகிடு பிதுங்கி வெளித்தெரிய இடது பின்னங்காலை நீட்டி உட்கார்ந்து, வாயில் நுரைவழிய அசுவாரசியமாய் பழங்கனவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தாள். எங்கள் காலடி அதிர்வினால் கனவிலிருந்து மீண்டது போல மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தாள். வால் முனைக் கூந்தலால் கவரி வீசுவது போல முதுகின்மேல் வீசி ஈக்களை விரட்டிய பின் தனியாக நீட்டிக் கிடத்தி வைத்தாள். நாக்கை நீட்டி புள்ளித் துளைகள் நிறைந்த, கறுத்த குளிர்ந்த நாசியின் ஒரு பக்கத் துவாரத்திற்குள் விட்டெடுத்தாள். பக்கவாட்டில் நீண்டிருந்த காதுகளை ஒரு முறை சுழற்றி அடித்து, ஸ்ரீதேவியைப் பார்த்தவாறு ஆச்சர்யமாய், ‘ம்ம்ம்பாஆஆ....?’ என்றாள், ‘ஆமாம்’ என வெட்கி சிரித்துக் கொண்டே அருகில் சென்று கழுத்தின் கீழே படுதா போல தொங்கும் சதையை மெல்லச் சொறிந்து கொடுத்தேன். ‘இன்னும்’ என்பது போல் தாடையை உயர்த்திக் காண்பித்தாள். வெண்மயிர்பரப்பில் விரல்களால் அளைந்தேன். சுகமாக ஒரு முறை கண்களை மூடித்திறந்து, பெருமூச்சு விட்டாள். ஸ்ரீதேவி பழங்களை எடுத்து நீட்டவும் கருநீல நாக்கு வெளியில் நீண்டு பழத்தைச் சுழற்றி உள்ளே இழுத்துக் கொண்டது. 

பழ வாசனை அடித்ததும், இன்னொரு மாமி கழுத்தை முன்னோக்கி இழுத்து நாக்கை வெளியில் நீட்டி ஆர்வமாக காற்றில் துழாவினாள். மெதுவாக தலையைக் குலுக்கிக் கவனத்தைக் கோரினாள். ஸ்ரீதேவி பழத்தை எடுத்து நீட்டும் முன்பே எக்கி, நாக்கை நீட்டி இழுத்துக்கொண்டாள். பழத்தை எடுத்துக் கொள்ளும் சாக்கில் தன் சொரசொரப்பான நாக்கினால் ஸ்ரீதேவியின் விரல்களில் ‘வறட்’டென்று ஒரு முறை வருட, வசந்தத்தில் நிலம்கீறித் துளிர்த்தெழும் இளம் பசும்புல் நுனி பரவிய பரப்புபோல அவள் மேனி சிலிர்த்து மயிற்கூச்செறிய, அனிச்சையாய் என் கைகளைப் பற்றி விரல்களை இறுகக் கோர்த்துக்கொண்டாள். ஒவ்வொரு புல்நுனியின் மீதும் அமர்ந்துகொள்ளும் பேரார்வத்துடன், அவள் மேனியைக் கருமேகமாய்ச் சூழ்ந்து பெருமழையாய்ப் பொழிந்தேன்.

***
      
இங்குள்ள எல்லாம் உள்ளே ஒரு நெருப்புப் விதையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது உரசும் போது உள்ளிருக்கும் நெருப்புப் விதை மேல்த்தோலைக் கீறி நுனிநீட்டிக் கிளைபரப்பி வளரும். கிளைநுனிகளில் பட்பட்டென்று முட்டை ஓட்டை உடைத்து வெளியேறி நெருப்பு வண்டுகள் சிறகை வீசி வானில் பறக்க ஆரம்பிக்கும். உணவுக்காக அகலத் திறந்த பறவைக்குஞ்சின் சிவந்த வாய் போல தீ நாக்கு நீட்டி இன்னும் இன்னும் என்று படபடத்து அடிக்கும். வாய்க்குள் விழும் யாவற்றையும் மிச்சமில்லாமல் உண்டு, வளரும்தோறும் பிளவுபட்டு பல்கிப்பெருகி நூறுநூறு தீநாக்குகள் வான்நோக்கி துழாவும். பின் பசியாறி, சிவந்த புழுக்கள் போல மெல்ல நெளிந்து அசைவு அடங்கும்.

சிலசமயம் குருதியில் குளித்துச் சிவந்த கூந்தலை காற்றில் விசிறி எறிந்து பெருங்கூட்டமாகக் குதித்து ஆவேசமாக ஆடும் ஏதோ பழங்குடி நடனம் போல இருக்கும். செக்கச்சிவந்த சிறகுகள் செருகிய பொன் கிரீடம் அணிந்த நீலநிற தேவதைகள் இடையை ஒடித்து ஆடும் நளின நாட்டியம் போல சிலசமயம்.

சிவந்த அலைகள் விளிம்பில் ஆர்ப்பரித்து வீசி காற்றை மோத, மையத்தில் ஒளிகரைந்து ஜொலிக்கும் நீலநிற ஆழி. பார்வையை உறுத்தாத குளிர்ந்த நீலம். நெருப்புக்குள் இருக்கும் ஆழி. அதில் குதித்துவிட வேண்டும். ஒரு நொடிப்பொழுதே எரிச்சல். பிறகு அதன் ஆழத்தில் அமிழ்ந்து கரைந்து குளிர்ந்து ஆழியாகி விடுவோம்.

***

      மழையில் நனைந்த இறகுபோல என் மார்பில் ஒட்டியிருந்தாள். நான் இதுநாள் வரை மெண்மை என்று அறிந்திருந்த எல்லாவற்றிற்கும் இனி வேறு சொல் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். காற்றை தழுவியனைப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் இறுக்கி ஆழமாக மூச்சை இழுத்தால் அவளை அப்படியே என்னுள்ளே நிரப்பிக்கொண்டு விடுவேன். அப்புறம் அவள் என்னிலிருந்து பிரிந்து வெளியேறினால் நான் வெறும் பிணம் தான். அதனால் அவள் என்னைவிட்டு பிரியவே கூடாது.

“ஸ்ரீதேவி, என்னை விட்டுட்டுப் போயிடாதே. நான் செத்..” விரல்களால் என் வாயை மூடினாள்.

 “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கௌரியேட்டா. இனி ஒரு ஜன்மம் எனக்கு வராது. அது தான் எப்போழும் என் பிரார்த்தனை. இந்த ஜன்மத்தில் ஒரு ஜீவிதம் உண்டுன்னா அது உங்களோடே தான். வேற ஒரு ஆசையும் எனக்குக் கிடையாது. அம்பாளுக்கு தெரியும். என் விளி கேட்கும்” தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள். அவள் சிவந்த கண்ணத்தில் செம்மன் மேட்டில் ஓடிய வண்டித்தடம் போல என் பூணூல் வரிகள். என் மார்பில் அவள் காது தோடு பதிந்து ஏதோ ஒரு பூ பூத்திருந்தது.

***
      நறுமணத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு தாழைமடலுக்குள் புகுந்து கட்டுண்ட பூநாகம் போல என் மனம் அவளுள் சுருண்டு மயங்கியிருந்தது. இந்த மயக்கத்தை நானே வலிய விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். ஒரு கடுந்தவமிருப்பது போல் மனம் இந்த ஆறுமாதங்களாக வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல் அவள் மேல் ஒருமுகப்பட்டு இருப்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது. மனம் கொஞ்சம் கூட ஒட்டாமல், ஆனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராமல் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக, முழுக்கவனத்துடன் செய்வது போல நம்பவைக்கும் என் நடிப்பு எனக்கே வியப்பாக இருந்தது. குறிப்பாக ஆச்சார்யரிடம் அடிக்கடி தணித்து நேர்ப்பார்வையில் படாதபடி கூட்டத்தில் கலந்தும் மறைந்தும் நான் நாட்களைத் தள்ளிய சாமர்த்தியத்தையும், அம்மாவிடம் ரொம்பத் தொடாமலும், கண்களைச் சந்திக்காமலும் நகர்ந்து கொண்டே பேசும் தந்திரத்தையும் எப்படியோ கற்றுக்கொண்டேன். 

எனக்குள் புகுந்து கொண்ட ஏதோ ஒரு வல்லமை, திசைவெளியெங்கும் பறந்து பாயும் அலைக்கழிப்புள்ள என் மனத்தின் மீது ஏறி உட்கார்ந்து, அத்தனை நுனிகளையும் அடக்கிப் பிடித்து ஒற்றை முனைப்புள்ள ஒரு கருவியாக்கித், தன் இலக்கை நோக்கித் தான் விரும்பும் திசைவேகத்தில் முடுக்கி விரட்டுவதை வெறுமனே வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன். 

“ஸ்ரீதேவி இன்னைக்கு என் அம்மாகிட்ட உன்னை அழைச்சுண்டு போறேன். மத்தியானம் பாடசாலைக்கு வந்துடு. அம்மாவுக்கு உன்னைப் பாத்த உடனேயே ரொம்ப இஷ்டமாயிடும். சந்தோஷப் படுவா.” என்றேன்.

அவளுள் படபடப்பு அதிகரித்தது. புடவைத் தலைப்பு நுனியை கைகளால் சுருட்டி, கசக்கிப் பின் இழுத்து நீவிவிட்டு மறுபடியும் சுருக்கி நிலை கொள்ளாமல் தவித்தாள்.  பெரிய விழிகளால் மலங்க விழித்தபடி நான் ஏதாவது சொல்லவெண்டும் என்பது போல என்னைப் பார்த்தாள். பின் தளர்ந்து கண்மூடி, என் மார்பில் சாய்ந்து அனைத்துக்கொண்டு, “அம்மே, என் கூடவே இருக்கனும்” என்று முனுமுனுத்தாள். முதுகைத் மெல்லத் தடவிக் கொடுத்தேன். உச்ச வேகத்தில் அடித்த அவள் இதயத்தின் தாளகதி, மெல்லத் தணிந்து என் இதயத் துடிப்பின் லயத்தோடு ஒன்றியது.

மதியம் பாடசாலைக்குச் சென்று அம்மாவின் மடியில் தலைவைத்துக் கொண்டு கால் நீட்டிப் படுத்தவாறே சம்பந்தமில்லாமல் பலரைப் பற்றியும் பேசி நடுவே பொதுவாக ஸ்ரீதேவியின் பெயரையும் சிலமுறை சொன்னேன். அம்மா அவளைப் பற்றி மேற்கொண்டு விளக்கமாகக் கேட்கவேண்டும் என்பதற்காகவே சட்டென்று பாதியில் நிறுத்திவிட்டு வேறெதையோ யோசிப்பதுபோல மௌனமாக இருந்தேன்.

அம்மா ஒன்றுமே கேட்காமல் என் சிகையை இறுக்கி கட்டிவிட்டு, என் தோள்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு இக்கட்டாகிவிட்டது. மறுபடியும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் பேசாமல் இருந்தேன்.

“மடத்தில ஏதாவது சாப்பிட்டியா கண்ணா? இல்ல அம்மா ஏதாவது பிசைஞ்சு கொண்டுவந்து ஊட்டட்டுமாப்பா?” என்றாள். எப்படியாவது பெண்களைப் பற்றி பேச்சைத் திருப்பவேண்டுமென்று, “நீ சின்னப்பொண்ணா இருந்தபோது எப்டிம்மா இருந்தே?” என்றேன். ‘ஹ்ம்ம்..’ என்று சிறுபுன்னகையை தந்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா உறுதியான மரம் போல. காற்றால் அதன் இலைகளையும், கிளை நுனிகளையும் தான் அசைக்க முடியுமே தவிர அதன் வேரை தொடக்கூடமுடியாது. ஏதேனும் சூறாவளி வந்தால்தான் உண்டு.

ஸ்ரீதேவி, அவள் முகத்தை வாடவைக்க முயன்ற சூரியனைத் தோற்கடித்து, மலர்ந்த முகத்துடன் வந்தாள். அம்மா மடியில் படுத்திருந்த என்னைச் சிறு பார்வையால் தொட்டுவிட்டு அம்மாவைப் பார்த்து கைகூப்பிப் புண்ணகைத்தாள்.

“வாங்கோ” என்றபடி எழுந்து அம்மாவிடம், “அம்மா நான் சொல்லிண்டிருந்தேனே அந்த பொண்ணு இவா தான்” என்றேன்.

அம்மா ஒன்றுமே கேட்காதவளாய், “யாருப்பா?” என்றாள். “மடத்துக்கு வந்திருக்கிற மலையாளத்து இன்ஜினியரோட பொண்ணும்மா. ஆனா தமிழ் நன்னா பேசுவா. இவா அம்மா பாலக்காட்டு பிராம்மணா” இனிச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்காமல் முடிந்தவரை எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

“வாம்மா” என்று அழைத்தாள் அம்மா. அவள் உள்ளே நுழைந்து அம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். அம்மா அவள் தலையில் மெதுவாகக் கைவைத்து “அம்பாளாட்டமாயிருக்கே. லலிதாம்பா அனுக்கிரகத்தில தீர்க்க சுமங்கலியா க்ஷேமமா இருப்பேம்மா.” என்று வாழ்த்தினாள். அம்மா என்னைத் தவிர யாரையுமே தொட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எனக்கு ஒரே தாவலில் பாதிமலை ஏறிவிட்ட மகிழ்ச்சி.

“உன்னைப் பாத்துட்டு அப்படியே பாடசாலையை பார்க்கனும்னு சொன்னா. பாவம் இவா அம்மா மூனு வருஷத்துக்கு முன்னாடித் தவறிபோயிட்டாளாம்”

அவள் பார்வையைத் தாழ்த்தித் தரையை நோக்கினாள். அம்மா, “எல்லாருக்கும் தாயார் அந்த லோகமாதா லலிதை தான்” என்றாள்.

“இவாள முதல் தடவை கோயில்ல பாத்தபோது உன்னையே சின்னப் பொண்ணா பாத்தாமாதிரி தோணித்தும்மா. அப்பவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று அடுத்து முன்னேறினேன்.

அம்மா, அங்கே இருந்த லலிதாம்பாள் படத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தையும் பூவையும் எடுத்துக்கொடுத்துவிட்டு, “சீக்கிரமே கல்யாணமாகி ஆத்துக்காரும், குழந்தையுமா சந்தோஷமா இருக்கனும். சரிம்மா, ஆத்துல தேடப்போறா. பத்திரமா போயிட்டு வாம்மா” என்றாள்.

ஸ்ரீதேவி மறுபடியும் அம்மாவை விழுந்து வணங்கி எழுந்தாள். 

இருவரின் கண்களும் ஒரு கண நேரம் சந்தித்து மீண்டது. ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் பார்வையால் ஏதோ பரிமாறிக் கொண்டார்கள். “போயிட்டு வரேம்மா” என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பாமலேயே புறப்பட்டு நிதானமாக நடந்து சென்றாள்.  

சில நிமிடங்களை தவிப்புடன் கடத்திவிட்டு, “நாழியாச்சும்மா. மடத்துக்குப் போகனும்” என்று சொல்லிவிட்டு மெதுவாக பாடசாலையின் வாசல் வரை நடந்து வெளியேறிய பின், விருட்டென்று வேகமெடுத்து ஓடி ஸ்ரீதேவியை நெருங்கி மூச்சிறைக்க நின்றேன்.

“சொன்னேனோல்லியோ? அம்மாவுக்கு உன்னை ரொம்பப் புடிச்சுடுத்து பாத்தியா?” என்றேன். முதிர்ந்த பெண்மனியின் தோரணையுடன், ஒரு சிறுவனைப் பார்ப்பது போல அலட்சியமாக ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்து, “அப்படியா?” என்றபடி நடந்தாள்.

“பின்னே? சீக்கிரம் விவாகமாகனும்னு ஆசிர்வாதம் பண்ணாளே... புரியலையா?” என்றேன் உற்சாகம் குறையாமல். 

ஒன்றும் பேசாமல் குணிந்தபடி நடந்தாள். கோபமாக, “உனக்கு சந்தோஷமில்லையா?” என்றபடி அவள் மோவாயைப் அழுத்திப்பிடித்து முகத்தை நிமிர்த்தினேன். 

கீழுதட்டை மடக்கிப் பற்களால் அழுந்தக் கடித்திருந்தாள். கண்கள் கலங்கி, மூக்கு நுனியும், கண்ணங்களும் சிவந்திருந்தது. தோள்களைத் தொட்டேன். ஜன்னி வந்தது போல உள்ளூற நடுங்கினாள். மெல்ல அனைத்துக் கொண்டேன். “வேண்டாம் கௌரியேட்டா. நாம நினைச்சது போல நடக்காது” நடுங்கிச் சிதறிய சன்னமான குரலில் சொன்னாள். 

அணைத்திருந்த கையை விலக்கி, “அம்மா நன்னாத்தானே பேசினா. ஏன் இப்படி தப்பா புரிஞ்சுண்டு கஷ்டப்படறே?” என்றேன்.

“எனக்கு சரியா புரிஞ்சாச்சு”

“எப்படி?”

“உங்களுக்கு சொன்னா புரியாது கௌரியேட்டா...” மரங்களுக்கிடையே பிரிந்து சென்ற ஒற்றையடிப் பாதையில் விறுவிறுவென நடந்தாள்.

***






பகுதி-3                                            நிறைவுப் பகுதி                                

2 comments:

  1. அன்பின் பிரகாஷ்..
    உங்கள் புதிய வலைக்கும் ஆக்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அழுத்தமான..ஆழமான பல தேடல்கள் உங்களில் ஜனிக்க வாழ்த்துக்களும்,ஆசியும்.

    ReplyDelete
  2. சுசீலாம்மா, உங்கள் ஆசியும், அன்பும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருப்பதில் எனக்கு நிறைவு!

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...