Wednesday, October 5, 2011

நுண் உயிர்களும் மூளையும்



கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்?
நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்!
குடலிலிருந்து மூளைக்கு
குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா?

மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம்! எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது.
இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது (1). இந்த ஆய்வில் அடையப்பட்ட முடிவுகள் சில: பிறப்பிலிருந்தே நுண்ணுயிர்கள் தொற்றாத அதிதூய்மையான சூழலில் வளர்க்கப்பட்ட எலிகள், சாதாரண சூழலில் வளர்க்கப்பட்ட எலிகளை விட மிகவும் சுறுசுறுப்பாகவும், சாகசமான செயல்களைச் செய்வதாகவும் இருந்தன. அவை இளமையாக இருக்கும்போதே அவற்றை வழக்கமான குடல் நுண்ணுயிர்கள் தொற்றி வளரக்கூடிய சாதாரண சூழலுக்கு மாற்றினால், பின்னர் வளர்ந்து பெரிதாகையில் மற்ற சாதாரண எலிகளைப் போலவே செயல்பட ஆரம்பிக்கின்றன. மாறாக அதிதூய சூழலில், குடலில் நுண்ணுயிர்கள் தொற்றாமல் வளர்ந்து பெரிதான எலிகளை பின்னர் சாதாரண சூழலில் விட்டால், கடைசிவரை அவற்றின் சுறுசுறுப்பிலும், நடத்தையிலும் மாற்றம் வரவில்லை. இதன் காரணத்தை கண்டறிய அந்த எலிகளின் மூளையில் கற்றல், நினைவாற்றல் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞைப் பாதைகளையும், மரபணுக்களையும் பரிசோதித்தபோது, குடல் நுண்ணுயிர்கள் தொற்றும் சாதாரண சூழலில் வளர்ந்த எலிகளில் இப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. செரோடோனின், டோபமைன் போன்ற நரம்பு சமிக்ஞை கடத்தி வேதிப்பொருட்களை மட்டுமல்ல, நரம்பணுக்களின் சமிக்ஞை (மின், வேதி) கடத்தல் என்ற மொத்த செயல்பாட்டையே கட்டுப்படுத்துகிறது குடலில் வாழும் நுண்ணுயிர்த் தொகை. குழந்தைப் பருவத்தில் குடலில் நுண்ணுயிர்களின் ‘குடியேற்றம்’ நடைபெறுவதும், அந்த ஆரம்பகட்டத்தில் நடைபெறும் மூளை வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பரிணாம வளர்ச்சியின்போதே தொகுக்கப்பட்டவை. இதே முடிவுகள் தனியாக மற்றொரு குழுவினர் கிருமிகளற்ற எலிகளை வைத்துச் செய்த ஆராய்ச்சியிலும் கிடைத்தன. இந்த ஆய்வில், மூளையில் -குறிப்பாக குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றலுக்குக் காரணமான ‘ஹிப்போகேம்பஸ்’ என்னும் பகுதியில்தான் மேற்குறிப்பிட்ட மரபணு சம்பந்தமான மாற்றங்கள் உண்டாகிறதென கண்டுபிடிக்கப்பட்டது (2).
குடலில் இருக்கும் எல்லா நுண்ணுயிர்களும் தீங்கு செய்பவையும் அல்ல. பல நுண்ணுயிர்கள் (எ.கா. சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு ஆற்றலை விநியோகித்தல், புதிய நோய்கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற உடலுக்கு நன்மை தரும் செயல்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குடலினுள் இவற்றின் சமநிலை பேணப்பட வேண்டியதும் அவசியமாகும். இந்த சமநிலை குலையும்போது மனநிலையும், மூளைச் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக மன அழுத்தம், இனம் புரியாத சோகம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார்ந்த சிக்கல்கள் உருவாவதில் குடல்வாழ் நுண்ணுயிர்களின் குறைவும் ஒரு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது (3).
இந்த ஆய்வில் எதிர்-உயிர் மருந்துகள் (ஆன்ட்டிபயாட்டிக்) கொடுத்து எலிகளின் குடல்வாழ் நுண்ணுயிர்களின் இயற்கையான சமநிலை வெகுவாகக் குறைக்கப்பட்டபோது அவற்றின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. கவனமின்மையும், சோர்வும் உண்டானது கவனிக்கப்பட்டது. மன அழுத்தம், சோர்வு போன்றவற்றுடன் தொடர்புடைய, மூளையிலிருந்து பெறப்படும் நரம்பணுக் காரணியின் அளவும் மிகவும் அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எதிர்-உயிர் மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டதும், குடல்வாழ் நுண்ணுயிர்கள் சமநிலைக்கு வந்து, ஆரோக்கியமான மூளை வேதிச் செயல்பாடுகளும், நடத்தையும் மீண்டது. (ஆனால் நாம் முதலில் பார்த்த ஆய்வு முடிவுகளுடன் இது மாறுபடுவதாகத் தோன்றும். அது மூளை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் குடல் வாழ் நுண்ணுயிர்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்கிறது, இந்த ஆய்வு அடுத்த வாழ்க்கை நிலைகளில் குடல்வாழ் நுண்ணுயிர்களின் பங்கை ஆராய்கிறது).
இதை இன்னும் நுண்மையாக அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் கிருமிகள் இல்லாத மந்தமான நடத்தைக்கான மரபுப் பின்புலம் கொண்ட எலிகளிடம், சாதாரண எலிகளை விட அதிக சுறுசுறுப்பும் ஆரோக்கியமான நடத்தைப் பண்புகளும் கொண்ட எலிகளின் வயிற்றிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்களைச் செலுத்தியபோது அவை நல்ல உற்சாகமும், சுறுசுறுப்பான செயல்பாடுகளும் மிக்கவையாக மாறின. அதே போல சாதாரணமான நடத்தைகள் உள்ள எலிகளுக்கு மந்தமான நடத்தைக்கான மரபுப் பின்புலம் கொண்ட எலிகளின் குடல்வாழ் நுண்ணுயிர்களை எடுத்துச் செலுத்தினால் அவையும் மந்தமானவையாக மாறின. இதிலிருந்து குடல்வாழ் நுண்ணுயிர்களில் உடல் நலத்திற்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மட்டும் எண்ணிக்கையில் மிகுந்திருந்தால் அது மூளை – அதன் வழியாக நடத்தை, செயல்பாடுகளில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவது உறுதியாகிறது.
இந்த “மூளைக்கு நன்மை செய்யும் குடல்வாழ் நுண்ணுயிர்கள்” எனும் கருத்தை நேரடியாக விளக்குகிறது ஒரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரை (4). ஒரு குறிப்பிட்ட வகை லாக்டோபாஸில்லஸ் (Lactobacillus rhamnosus JB-1 ) என்னும் பாக்டீரியா செலுத்தப்பட்ட எலிகளில் குறிப்பிடத்தக்க அளவு மன அழுத்தம், சோர்வு தொடர்பான நடத்தைகள் குறைந்தது, மேலும் மன அழுத்தத்தினால் அதிகரிக்கும் ‘கார்டிகோஸ்டீரோன்’ போன்ற ஹார்மோன்களின் அளவும் குறைந்தது. இந்த ஆராய்ச்சி மூலம் சில குடல்வாழ் நுண்ணுயிர்கள் எந்த வினைப்பாதையின் மூலம் மூளையின் வேதிச்செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை போன்று எலிகளில் நடத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி முடிவகளைக் கொண்டு மனிதர்களின் உடலுக்கும், மூளைக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்களைக் கொண்டு குணப்படுத்தும் மருத்துவ முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக குடல் பதற்ற பிணிக்கூட்டு (Irritable bowel syndrome) மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. மேலும் வளர்ந்த பிறகு வரும் (பிறவியிலேயே இருப்பதல்ல) ‘ஆடிஸம்’ குறைபாட்டுக்கு குடல் வாழ் நுண்ணுயிர்களின் சமன்குலைவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவை போன்ற மூளை-மன நோய்களைக் குடல் நுண்ணுயிர்களைக் கொண்டு குணப்படுத்தும் முறைகள் எதிர்காலத்தில் வரலாம். இப்பொழுதே ‘புரோபயாடிக்’ துணை உணவுகளும் பிரபல மடைந்து வருகின்றன.
தொற்றுநோய்களும் அறிவுத்திறனும்
கருவுற்ற தாய்க்கு ஏற்படும் நோய்த்தொற்று கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிக்கும். நோய் தொற்று ஏற்பட்ட தாயின் நோயெதிர்ப்பு செல்கள் வெளியிடும் ‘சைடோகைன்கள்’ (Cytokines) எனப்படும் செல் சமிக்ஞை மூலக்கூறுகள் நஞ்சுக்கொடி வழியாக கடந்து சென்று கருவை அடைகின்றன. இந்த சைடோகைன்கள் பிற செல்களின் பிளவிப்பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கக் கூடியவையாதலால், கருவின் மூளை செல்களின் பெருக்கத்தையும் நரம்பணுக் கட்டுமானத்தையும் பாதிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் கருவிலிருக்கும் குழந்தைகள் பின்னாளில் நரம்பு – மனச் சிக்கல்களுக்கு ஆளாகின்றன. உதாரணமாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகும் தாய்மார்களின் கருவிலிருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் ஸ்கீஸோஃப்ரீனியாவினால் பாதிக்கப்படுகின்றன. இந்த மனநலக் குறைபாட்டினால் அவர்களின் பேச்சு சிந்தனை, உணர்ச்சிகள், நடத்தை போன்றவற்றில் சிக்கல்கள் உருவாகின்றன (5).
மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது. மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரம்ப நிலைகளில் மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பணு வலைக் கட்டுமானம் வேகமாக வளர்ச்சியடையும் முக்கியமான கட்டமாகும். இந்தச் சமயத்தில் உணவிலிருந்து கிடைக்கும் சக்தியில் 90% மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது. இத்தகைய முக்கியமான கட்டத்தில் தொற்றுநோய்கள் தாக்கினால் அதிகமான ஆற்றல் விரயம் ஆகிறது, இது மூளை வளர்ச்சி, நரம்பணு வலைப்பின்னல் கட்டமைப்பை பாதிக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இளம் வயதில் குடல் புழு தாக்குதல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் அறிவுத்திறன் அளவீடு பின்னர் அவர்கள் வளரும் போது குறைகிறது என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது (6).
இந்தக் கருதுகோளை அடிப்படையாக வைத்து தொற்று நோய் பரவலில் வேறுபாடுள்ள, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிலும், ஒரே நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களிலும் சராசரி அறிவுத் திறன் அளவீட்டில் வித்தியாசம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை இன்னும் ஆதாரமான கேள்வியான அறிவாற்றலில் மரபியல் மற்றும் சூழலின் பங்கைப் பற்றி பேசுவதாகின்றன (பார்க்க:அறிவாற்றல் மரபுப் பண்பா?). முடிவுகள் பெரும்பாலும் தொற்றுநோய்கள் பரவல் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் மக்களின் சராசரி அறிவுத்திறன் அளவீடு குறைவாக உள்ளது என்றே சொல்கிறது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் மாஸாசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷையர், வெர்மாண்ட் ஆகிய மாகானங்களில் மக்களின் சராசரி அறிவுத்திறன் அளவீடு அதிகமாகவும், கலிஃபோர்னியா, மிசிசிபி, லூஸியானா மாகாணங்களில் குறைவாகவும் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த வேறுபாட்டிற்கு அம்மாகாணங்களின் குறைவான (அ) அதிகமான தொற்றுநோய் பரவலைக் காரணமாகக் குறிப்பிடுகிறது (7). இதற்கு அப்படியே நேர் எதிரான வாதமும் முன் வைக்கப்படுகிறது: அறிவாற்றல் அதிகம் இருக்கும் சமூகத்தில் (அ) பகுதிகளில் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்றுகள் குறைவாக இருக்கின்றன அதாவது, நோய்ச் சூழலை திறமையாக எதிர்கொள்ள முடிகிறது. இவை முதற்கட்ட ஆய்வுகள். எந்தெந்த நோய்க்கிருமிகளின் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது, அம்மக்களின் மரபியல் முன்சார்புகள், கல்வி, பொதுவான அறிவாற்றல் காரணி (g) போன்றவைகளையும் கருத்தில் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்போது இவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்கள் உருவாகும்.
மூளையை நேரடியாகத் தாக்கும் நுண்ணுயிர்கள்
மேலே சொல்லப்பட்டதெல்லாம் எவ்வாறு குடல்வாழ் நுண்ணுயிர்கள் உடல் செயற்பாட்டியல் சார்ந்த வினைப்பாதைகள் வழியாக மூளையின் வேதியல் கூறுகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக மூளை, மன, நடத்தைச் செயல்பாடுகளை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கின்றன என்பது பற்றி.
ஆனால் நுண்ணுயிர்கள் மூளையில் என்ன நேரடித் தாக்கம் செலுத்துகின்றன?
கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படி எந்த நுண்ணுயிரும் தொற்றாதவாறு பாதுகாக்கப்படுகிறதோ, அப்படி நம் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்வாழும் வரை மூளை பாதுகாக்கப் படுகிறது. இரத்த - மூளை தடுப்பு (Blood – Brain Barrier) என்கிற விசேஷ நரம்பணுக்களால் ஆன தடுப்பமைப்பின் மூலம் ரத்தத்திலுள்ள கிருமிகளோ, வேறு பெரிய வேதியல் மூலங்களோ மைய நரம்பு மண்டலத்தில் மூளையின் புறச்செல் பாய்மங்களுக்குள் (Brain extracellular fluid) நுழையமுடியாதபடி தடுக்கப்பட்டிருக்கிறது. இதனையும் மீறி சில பாக்டீரியாக்கள், வைரஸ், பூஞ்ஜை போன்றவை நரம்புமண்டல செல்களைத் தொற்றி விடுகின்றன. பொதுவாக மூளை/மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் எந்த நுண் உயிர் தொற்றாக இருந்தாலும் புத்தியில் மந்தத் தன்மை, கற்றல், கேட்டல், நினைவாற்றல், ஒருமுகத் தன்மை போன்ற அறிதல் செயல்பாடுகளில் இடைக்கால அல்லது நிரந்தர கோளாறு உண்டாதல், மன அழுத்தம், உளைச்சல், சோம்பல், விருப்பமின்மை, தீராக்கவலை போன்ற மன நலம்/நடத்தை சார்ந்த குறைபாடுகள் உண்டாதல் இவற்றில் சிலவோ அல்லது அனைத்துமோ உருவாகும். முற்றிய நிலைகளில் மரணத்தை உண்டாக்கும்.
முக்கியமான சில உதாரணங்கள்,
1. பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய்த்தாக்குதல்: நிமோனியா (Streptococcus pneumoniae), இன்ஃப்ளூயன்ஸா (Haemophilus influenzae type B) மற்றும் மெனின்ஜைடிஸ் (Neisseria meningitides). ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் எதிர்-உயிர் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தி விடலாம்.
2. வைரஸ் தாக்குதல்: எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமி நேரடியாக மூளைக்குள் நுழையமுடியாது. ஆனால் ஒருவகை இரத்த வெள்ளை அணுக்களுக்குள் தன் மரபணுவை மட்டும் செலுத்தி, வளர்தல் மற்றும் பல்கிப்பெருகுதல் வேலைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து, வெள்ளை அணு நரம்பு மண்டலத்துக்குள் சென்றதும் பெருகி வளர ஆரம்பிக்கும். விளைவு – மூளைச் செயல்பாடு வேகம் குறையும், கவனம், ஞாபகத்திறன் போன்றவை கெடும், மந்தநிலையும், உணர்ச்சிகள் குறைவும் உண்டாகும். எய்ட்ஸை முற்றிலும் குணப்படுத்த முடியாது, ஆனால் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் எச்.ஐ.வியால் உண்டாகக் கூடிய மூளைக் கோளாறை (ஞாபக அழிவை) தவிர்த்து விடலாம்.
3. அமீபா போன்ற நுண்ணுயிரின் தாக்குதல்: நேக்லேரியா (Naegleria fowleri) எனப்படும் “மூளை தின்னும் அமீபா” வின் தாக்குதல் இருப்பதிலேயே மோசமானது. பொதுவாக இதன் தாக்குதல் உலகளவில் மிகக் குறைவுதான், ஆனால் தொற்றினால் 98% மரணம் உறுதி, அதுவும் பதினான்கே நாட்களில் மரணம் சம்பவிக்கும்(8). தூய்மையாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள், நீர் நிலைகள், தொட்டிகள் போன்றவை இவற்றின் உயிர் வாழிடம். பொதுவாக மூக்கு வழியாக தொற்றி, நரம்பு இழைகளைப் பற்றி மேலேறி மூளையை அடைந்து நரம்பணுக்களை தாக்கி அழித்துவிடும். (குறிப்பு: ஹடயோக வகுப்புகளில் கலந்து கொண்டு மூக்கு வழியாக நீரைவிட்டு சுத்தம் செய்யும் ‘ஜல நேதி’ செய்பவர்கள், கட்டாயம் நன்றாக கொதிக்கவைத்து, உப்பு சேர்த்து பின் வெதுவெதுப்பாக ஆனவுடன் செய்யவேண்டும். குழாய் தண்ணீரை அப்படியே எடுத்து மூக்கில் விடுபவர்கள் நேக்லேரியாவிற்கு வாசலை அகலத் திறந்துவிடுவதற்குச் சமம்!) வெற்றிகரமான குணப்படுத்தும் மருந்துகள் இல்லை.
நம் சுற்றுப்புறம், நாம் உண்ணும் உணவு, நமது சொந்த தூய்மைப் பழக்கவழக்கங்கள் போன்றவைதான் அடிப்படையில் நுண்ணுயிர்களுக்கும் நமக்குமான தொடர்புப் பாலங்கள். நாம் அறியாவிட்டாலும் நம் உடல் மிகவும் நுணுக்கமாக அனைத்தையும் அறிகிறது. எல்லா காரணிகளுக்கும் மத்தியில் தராசு முள் போல் ஒரு சமநிலையைப் பேணுகிறது. நாம் வலிந்தோ, மிகுந்த அஜாக்கிரதையாலோ உடலின் இயற்கையான சமநிலையை கெடுக்காமல் இருந்தாலே போதும். நுண்ணுயிர்கள் பற்றி நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் இந்திய ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் அறிவு/மனம் x உடல் -எவ்வாறு ஒன்றை ஒன்று நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கின்றன என்பது குறித்து நெடுங்காலமாகவே அழுத்திச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. சொந்த சௌகரியங்களுக்காக அவற்றை பழம்புராணம் என்று அலட்சியப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.
(முற்றும்)
உதவிய மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள்:
1. R. D. Heijtz, et al., 2011. Normal gut microbiota modulates brain development and behavior. Proceedings of the National Academy of Sciences. DOI: 10.1073/pnas.1010529108
2. K. M. Neufeld, et al., 2011. Reduced anxiety-like behavior and central neurochemical change in germ-free mice. Neurogastroenterology & Motility. 23 (3): 255 DOI:10.1111/j.1365-2982.2010.01620.x
3. E. Denou, et al., 2011. The Intestinal Microbiota Determines Mouse Behavior and Brain BDNF Levels.Gastroenterology. 140 (5): 1, S-57
4. J. A. Bravo, et al.,2011. Ingestion of Lactobacillus strain regulates emotional behavior and central GABA receptor expression in a mouse via the vagus nerve.Proceedings of the National Academy of Sciences, DOI: 10.1073/pnas.1102999108
5. U. Meyer, et al., 2009. A Review of the Fetal Brain Cytokine Imbalance Hypothesis of Schizophrenia. Schizophrenia Bulletin. 35(5): 959–972.
6. W.E. Watkins and E. Pollitt. 1997. “Stupidity or Worms”: Do Intestinal Worms Impair Mental Performance?. Psychological Bulletin. 121 (2): 171-91
7. C. Eppig, et al., 2011. Parasite prevalence and the distribution of intelligence among the states of the USA. Intelligence. 39: 155-60