Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - பகுதி 2)

       என் அம்மாவைப் போல இந்த பிரம்மகிரியில் இன்னொரு பெண் என்றால் அது சாட்சாத் லலிதாம்பிகையே தான். அந்த லலிதையை இளம் பெண்ணாக ஒரு முறை மடத்தில் பார்த்தேன். வெளியூர்களில் இருந்து ஆச்சார்யரையும், ஸ்ரீ லலிதாம்பிகையையும் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஸ்ரீமடம் சர்வாதிகாரி அனந்தராமையர், சன்னிதானத்தின் கட்டளையின்படி பக்தர்கள் தங்க ‘யாத்ரி நிவாஸ்’ கட்டும் ஏற்பாடுகளில் இறங்கினார். கட்டிடப் பணிகளுக்காக அவருடைய நண்பரும், மடத்தின் ஆப்தருமான இன்ஜினியர் அச்சுதன் நாயர் அவர் மகளுடன் பிரம்மகிரியிலேயே வந்து தங்கினார். அனந்தராமையர் அச்சுதன் நாயரையும், அவர் மகளையும் சுவாமிகளைத் தரிசனம் பண்ணிவக்கும் படி என்னிடம் சொன்னார். அவர்களை ஒரு சிறுபார்வையால் அழைத்துவிட்டு குரு மந்திரத்தை நோக்கி நடந்தேன். என் பின்னால் அவர்கள் புரியாத மொழியில் ஏதோ மெல்லப் பேசியபடி இடைவெளிவிட்டுத் தொடர்ந்து வந்தார்கள். கௌரிசங்கர பூஜை முடிந்து ஆச்சார்யரை தரிசிக்க நிற்கும் மக்கள் கூட்டத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டேன். நாயர் தன் அங்கவசஸ்திரத்தை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். ஆச்சார்யரைக் கண்டதும் இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அந்தப் பெண் தலைமுடியைப் பின்னாமல், காதோரங்களில் இருந்து சிறிது முடிக்கற்றையை எடுத்து பின்தலையில் கட்டி, அதையும் சேர்த்துத் தொங்கவிட்டு இடையின் கீழ் முடிந்திருந்தாள். நமஸ்கரிக்கும் போது அவள் முதுகில் அது ஒரு கருநாகத்தின் பத்தி போல விரிந்தது.
***

      சூரிய உதயத்திற்கு முன்பாகவே நூபுரகங்கையில் குளிக்கச் சென்றேன். சற்று நேரம் ஆற்றை வெறித்தபடி எண்ணங்களற்று உட்கார்ந்திருந்தேன். மங்கிய நிலவொளிக்கு கண்கள் பழகியதும், காற்றில் அசையும் கருப்புத் துணி போல ஓடிக்கொண்டிருந்த ஆறு இதுவரையில் நான் கவணித்திராத ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியது. எவ்வளவு யோசித்தும் என்ன அது என்று பிடிபடவில்லை. சலித்துப் போய், மௌனவெளியில் ஒற்றைச் சொல்லை விட்டெறிவது போல சரேலென ஆற்றில் பாய்ந்தேன். குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் தோல் எரிந்து அடங்கியது. ஆற்றின் அடியாழத்துக்கு நீந்திச் சென்றேன். காற்று நிரம்பிய சுவாசப்பை விம்மி மார்புக்கூட்டை முட்டியது, பின்மண்டையில் நீரழுத்தம் யாரோ கவ்விப்பிடிப்பது போல இருந்தது. இமைகளை இறுக்கிக்கொண்டபோது கண்களுக்குள் அடர்ந்த கருமை பரவியது. சட்டென்று ஆறு எண்ணைப் பளபளப்புள்ள கரிய, நீண்ட கூந்தல் ஓடை என்று தோணியதும் யாரோ உந்தித்தள்ளியது போல மேற்பரப்பிற்கு வந்தேன். பிடிவாதமாக எதையோ மறுதலிப்பவன் போல தலையைச் சிலுப்பிக் கொண்டேன். சிறைப்பட்டிருந்த காற்று வெடித்துக்கொண்டு வாய்வழியாக வெளியேறியதும் மார்புக்குள் அறைந்த முரசு ஓய்ந்து நிதானமடைந்தேன்.
***

      பாடசாலையில் ஆரம்பநிலை மாணவர்களுக்கு வகுப்பெடுத்து முடித்ததும் நான் எனது பாடம் கேட்க பெரிய வாத்தியாரிடம் போக வேண்டும். அவர் வர இன்னும் நேரம் இருக்கிறது. சமையலறைக்கு சென்று அம்மாவைப் பார்க்கலாம் என்று எண்ணிப் புறப்பட்டேன். பட்டர் குரலைக் கேட்டு திடுக்கிட்ட போதுதான் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று புரிந்தது. எப்படி இங்கே வந்தேன்? என்னை அம்மாவைப் பார்க்கப் போவதாக நம்பவைத்து கால் கோயிலுக்கு கூட்டிவந்து விட்டதா? காலுக்கு தனி மனம் உண்டா என்ன? “சங்கரா, சித்தநாழி சன்னதியப் பாத்துக்கோ, அவசரமா ஆத்துக்குப் போயிட்டு ஓடிவந்துடறேன்” என்று சொல்லி வெறும் கால்கள் மட்டுமாகிவிட்டிருந்த என்னை மீட்டு முழுவுடலாக்கி, பதிலுக்கு காத்திருக்காமல், பஞ்சகச்சத்தை ஒருபுறமாகத் தூக்கிகொண்டு கால்களைப் பரப்பிவைத்து விரைந்தார் கோயில் பட்டர்.

கருவறைக்குள், எனக்கும், என் அன்னைக்கும், அவளின் அன்னைக்கும், மற்றுமுள்ள அன்னையர்க்கெல்லாம் அன்னையாகிய லலிதாம்பாள் காலமற்று, கல்லில் வடித்தவன் காதலுக்காக கருணையுடன் இளம்பெண்ணாக உருக்கொண்டு வெளிப்பட்டிருந்தாள். ஆயிரம் தலைமுறை நம்பிக்கை, கற்சிலை தெரியவில்லை, அன்னையை பார்த்துக்கொண்டே இருந்தேன். மெல்லிதழ் மெல்ல விரிந்தது. “ஒரு புஷ்பாஞ்சலி பண்ணனும்” என்றாள். திடுக்கிட்டு திரும்பினேன். லலிதையே தான். கருவறையின் வெளியே நின்றிருந்தாள். “ஸ்ரீதேவி, நாள் பரணி” என்றபடி பூக்குடலையை கற்படியில் வைத்தாள். ஒரு கணம் உறைந்து பின் மீண்டு, நீர்தெளித்து பூக்களை எடுத்துக் கொண்டேன். அர்ச்சனை முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு சந்தனத்தை நெற்றியில் தீற்றியபடி சினேகமாய்ச் சிரித்து 

“திருமேனி இங்க தான் சாந்திப் பணிக்கு நிக்குதா?” என்றாள். ஒன்றும் பேசாமல் பார்த்தபடியே இருந்தேன்.

“திருமேனி மறந்நு போயாச்சா? ஞான் இஞ்சினியர் அச்சுதன் நாயரோட மகள்”

அவள் சொற்கள் வந்து தொட்டதும், நாக்கு மரவட்டை போல சுருண்டு கொண்டுவிட்டது. பேசும் முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடிக்கொண்டு, அசையும் இதழ்களையும், வீணையொலி போன்ற குரலையும் மறுபடியும் மனதில் நிகழ்த்திக்கொண்டேன். லலிதையின் குரல் இனிமையாகத்தான் இருக்கும். ஆனால் இது வரை நான் கேட்டது அம்மாவின் குரல் மாதிரி இருக்கும். இன்று வேறு விதமாகக் கேட்கிறதே...

“அப்போ செரி திருமேனி, ஞான் போகனம்” என்று சொன்னது காதில் விழுந்தது.

கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவள் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள். தலையிலிருந்து ஒரு கரிய நதி வழிதோடியது, ஒரு துளசிக்கதிர் மட்டும் மிதந்து வந்து கீழே ஒரு சுழலில் சிக்கிக்கொண்டு நின்றது. நான் நூபுரகங்கைக்குள் விழுந்து மூச்சு முட்டுவது போல இருந்தது. சுவாசத்திற்காக வாய் திறந்தேன் “இல்லை, நான் பாடசாலையில் அத்யயனம் பண்றேன். பூஜகர் ஆத்துக்குப் போயிருக்கார். அவர் வரவரைக்கும்....”

நான் முடிக்கும் முன்பே, திரும்பி நின்று பார்த்து சிரித்தாள். “ஓ...” என்று கொஞ்சம் ராகம்போட்டு நீட்டிச் சொன்னாள். பாடப்போகிறாள் போலிருந்தது.

“மௌனவிரதமோன்னு எனக்கு ஸம்சயம் வந்தாச்சு. என்னவாக்கும் படிக்கிறது?” என்று கேட்டாள். தமிழ் மாதிரி இருந்தாலும் வித்தியாசமாகப் பேசுவதாகப் பட்டது. எப்படிக் கேட்பதென்று தெரியாமல் “தமிழ் பேசுவேளா?” என்று கேட்டேன்.

மெலிதாகப் புண்ணகைத்து, “வீட்டிலே கொஞ்சம் தமிழ் சொல்லும். அம்மா இருந்தவரை என்கூட தமிழாக்கும் பேசறது. இப்போ இல்லை....’ என்றவள் சற்று நிறுத்தி பிரசாத சந்தனத்தில் ஒட்டியிருந்த பூக்களை தனியாகப் பிரித்துக்கொண்டே, “அம்மா பாலக்காடு தமிழ் பிராமணராக்கும்” என்றாள்.

அவள் சொன்னது முழுதாகப் புரியவில்லை, “நான் இங்கே மடத்து வேத பாடசாலையில் யஜுர்வேத அத்யயனம் பண்றேன், கணபாடம் முடிச்சாச்சு. மேற்கொண்டு படிக்கிறேன்” என்றதும் பெரியவாத்தியார் வந்திருப்பார் என்ற ஞாபகம் வந்தது.
அவள் சரி என்பது போல மெதுவாகத் தலையசைத்து விட்டு நிதானமாகத் திரும்பி நடந்தாள்.

சந்தனநிற கோடிப்புடவை நெற்கதிர் பச்சைநிறக் கரையுடன் அணிந்திருந்தாள். அவளே தாமரை மலரின் ஒளிஊடுறுவும் ஒரு இளம் இதழ் போலத்தான் இருந்தாள். மெலிதாகச் சிரித்தாலும் மேலேரும் கண்ணக்கதுப்புகள் சிவந்து, திறந்த குங்குமச் சிமிழ் போலத் தெரிந்தது. மையெழுதிய அகன்ற விழிகளில் புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டியின் கண்கள் போல ஈரமினுமினுப்புடன், கள்ளமின்மையும், குதூகலமும் கொப்பளித்தது. மாதுளம்பழ நிறத்தில் மென்வரிகள் நிறைந்த சிறிய இதழ்கள் விரியும் போதெல்லாம் ஈறுகள் தெரியாமல் சொல்லுக்குக் கட்டுபட்டது போல கைகோர்த்து வரிசையாக நிற்கும் பற்கள் ஒளிவீசியது. முன்கழுத்தில் அணிலின் முதுகு போன்று மூன்று மெல்லிய சதை வரிகள் இருந்தது. நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்ளும் போது உள்ளங்கை போலவே புறங்கையும் விரல் மூட்டுகளின் தோல் சுருக்கங்களில் கூட நிறஅடர்த்தி இல்லாமல் நெய் பூசியது போல பளபளப்பாக இருந்ததைப் பார்த்தேன். காதுகள் புதிய வாழையிலைக் குருத்துச்சுருளின் மெண்மையுடன் இருப்பது பார்க்கும் போதே தெரிந்தது. பின் கழுத்தில் அம்மாவின் கையை உதறி ஓடும் குறும்புக்குழந்தைகள் போல மிருதுவான சிறிய கேசச்சுருள்கள் பின்னலுக்குள் அடங்காமல் ஆர்வமாக எட்டிப்பார்த்தது. தோளிலிருந்து முழங்கை வரை கைகள் உடலை ஒட்டி இருக்க, இடையிலிருந்து முன்கை உடலிலிருந்து பக்கவாட்டில் சற்று விலகி காற்றிலாட நடந்தாள். அப்போது தான் அவள் உடலின் வடிவமும் அவ்வாறே தோளிலிருந்து இடைக்கு குறுகியும் மீண்டும் அகன்றும் இருப்பதை கவணித்தேன். உடனே என்னைப் பார்த்துக்கொண்டேன் அகன்ற தோள்கள் இடையில் குறுகி அப்படியே கால்கள் நீண்டிருப்பதாகப் பட்டது. அவள் நடக்கும்போது உடல் ரொம்பவும் மேலும் கீழுமாய் ஏறி இறங்காமல், தரையைக் காலால் தேய்க்காமல் சற்றே தூக்கி வைத்து காற்றில் மிதந்து செல்வது மாதிரி இருந்தது. ஏதோ வெகு அபூர்வமான பொருளை உள்ளே பாதுகாத்து வைத்திருப்பது போல நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நடந்தாள். பாதங்களை எடுத்துவைப்பது நல்ல சந்தஸில் அமைந்த சமஸ்கிருத சுலோகத்தின் வார்த்தைகள் போல சீராக இருந்தது. அதன் தாள கதியில் மனம் தானாக எங்கிருந்தோ வரிகளை எடுத்துப் போட்டது....

‘உடுராஜமுகி ம்ருகராஜகடி கஜராஜ விராஜித மந்தகதி
இஸதே வனிதா ஹ்ருதயே வஸதி...’*

சுவாரஸ்யமாய் எழுதும் பொது எழுத்தானி உடைந்தது போல, அடித்தொண்டையில் கத்தியபடி “சங்கரா.. ரொம்ப ஒத்தாசைப்பா. நீ கிளம்பு. உங்க வாத்தியார் அப்போவே பாடசாலைக்கு போறதப் பாத்தேன்” ஈரக்குடுமியை முடிந்துகொண்டே பட்டர் வந்தார். அவர் உடலெங்கும் பொழுது புலர்வது போல புதிய விபூதி பூச்சின் ஈரம் உலர்ந்து வெளிறி வெண்மை படர்ந்தது.

சட்டென்று மழை நின்றது போலிருந்தது எனக்கு. மனம் பின்னோகி ஒடி, ‘இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன்? என்ன யோசனை செய்தேன்? ஏதோ பாடல் வரிகள் சொன்னேனே, காளிதாசனுடையதா?’ என்று அறுந்து சுருண்ட வீணைத்தந்தியை இழுத்துக் கட்ட முயன்றது. நான் பாடசாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன்.
***

      மடத்துச் சிப்பந்திகள், பண்டிதர்கள், தர்மாதிகாரி என்று ஒரு கூட்டமே பாடசாலையின் முற்றத்தில் இருந்தது. ஆச்சாரிய ஸ்வாமிகள் மாணவர்களிடம் அவர்களுக்கு பாடம் ஆன வேத சம்ஹிதையின் நடுவிலிருந்து ஆங்காங்கே சில அடிகளை எடுத்துக் கொடுத்து அவர்களை முழுமை செய்யச் சொல்லி கவனித்துக் கொண்டிருந்தார். அருகே தலைமை அத்யாபகர் சற்று முதுகை வளைத்து, இடது கையை மார்பின் குறுக்கே கட்டி, வலது உள்ளங்கையை குவித்து வாயையும், மூக்கையும் பாவனையாக மறைத்து, கண்களில் மிகுந்த பனிவுடன் நின்றார். நான் சென்றவுடன் தரையில் விழுந்து நமஸ்கரித்து அத்யாபகரின் அருகில் சென்று நின்று கொண்டேன். ஆச்சாரியர் தலையில் முக்காடிட்டிருந்த காவித் துணியை காதுமடலின் பின்னல் இழுத்துவிட்டு ஒதுக்கிக் கொண்டே என்னைப் பார்த்தார். மிக மிருதுவான சப்தத்தில், “என்ன பாடம் ஆறது?” என்றார், அத்யாபகர் இன்னும் கொஞ்சம் வளைந்து, “சங்கரனுக்கு காவிய பாடம் ஆறது. ஆச்சார்யாள் அனுக்கிரஹம், பரம்பராகதமா வந்த ஞானம், ரொம்ப வேகமா கிரஹிச்சுக்கிறான்” என்றார். மிகக் குறைந்த உணவும், மிகமிகக் குறைந்த உறக்கமும், கடுந்தவமும், ஞானமும், தொன்னூற்றி ஆறு வயதின் வற்றிச்சுருங்கிய தேகமும், அனுபவமும் சேர்ந்து ஆச்சாரியர் முற்றி உலர்ந்த முழுத்தேங்காய் போல இருந்தார். என் மூன்று தலைமுறை மூதாதைகளைப் பார்த்தவர். அமைதியாகக் கூர்ந்து நோக்கி, கண்களின் வழியே ஊடுறுவிச் சென்று என் வேர்களைத் துழாவி, எதுவோ தட்டுப்பட்டதுபோல் பொருள்பட மெதுவாகப் புண்ணகைத்து, காய்ந்த சமித்துகளைப் போன்ற தன் கையால் மந்திராட்சதை தந்தார். “நீ பாடசாலையில் இருக்க வேண்டாம். மடத்துக்கு வந்துடு. நாளைலேர்ந்து நீயும் வேதாந்தபாடத்தில் சேந்துக்கோ. கார்த்தால பூஜைக்கு சுப்புவுக்கு ஒத்தாசை பண்ணு” என்றார். அருகிலிருந்த இன்னொரு முதிய வைதிகர் முன்வந்து “ஆச்சார்யாள் அனுக்கிரஹம்” என்று என்னை ஒருமுறை பார்த்தார்.
      மடத்தில் வேதாந்த பாடம் ஆச்சார்யரே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிஷ்யர்களுக்கு சொல்வது. எனக்குப் பெருமையும், சந்தோஷமும் பொங்கியது, அடக்கிக்கொண்டு மறுபடியும் விழுந்து நமஸ்கரித்தேன். ஆச்சார்யர் புறப்பட்டவுடன், பாடசாலை சமையல்கட்டிற்கு ஓடிச்சென்று அம்மாவிடம் சொல்லி, நமஸ்கரித்தேன். அம்மாவிற்கு அதன் முக்கியத்துவம் புரியும், ஆனால் முகத்தில் எனக்காக சிறிது மகிழ்ச்சியைக் காட்டினாள், மற்றபடி அதை பொருட்படுத்தவே இல்லை. என் சிகையை அவிழ்த்து, தலையை விரல்களால் கோதி, முடியை நீவிவிட்டு பின் இறுக்கிக் கொண்டையாக முடிந்துகொண்டே “தினம் பாடம் முடிஞ்சாப்புறம் மத்தியான்னம் அம்மாவப் பாக்க வந்துடுப்பா” என்றாள். அம்மாவும் மஞ்சள் நிறமாக இருப்பாள், இப்பொழுது சமையல் வேலைக்கு வந்த பிறகு அவள் முகம் மட்டும் தீ நிறத்தில் இருந்தது. என்னேரமும் உள்ளே எதுவோ எரிந்துகொண்டே இருப்பது மாதிரி. உள்ளங்கைகள் மிருதுத்தன்மை குறைந்து கொஞ்சம் காய்த்திருந்தது. தலையில் ஒருமுடி கூட இன்னும் நரைக்கவில்லை. சிரிப்பும் பெரும்பாலும் இருக்காது, எனக்காக மிகமெலிதாக விரியும் உதடுகளின் கீறலான இடைவெளியில் பற்கள் சற்றே தெரியும். ‘லலிதே, என் குழந்தையப் பாத்துக்கோடி அம்மா’ என்று அவள் முனகும் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. என் மனம் என்னையில் முக்கிய கை போல மிக லாவகமாக பிடியிலிருந்து நழுவி வேறெங்கோ செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
***

      “நமஸ்காரம் திருமேனி” என்ற ஒலி கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போல ரொம்பவும் ஆர்வமாக தலையை நிமிர்ந்து பார்த்தேன். நன்கு பழுத்த பொன்னிறமான தாழம்பூ மடல்கள் இருந்தது, இல்லை, கூப்பிய அவள் கரங்கள் தான் அது. நான் கோவிலின் உள்ளே செல்லாமல் குளக்கரைப் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். எப்போது இங்கே வந்தேன்?, எதற்கு? - நினைவிலில்லை. ஆனால், நான் இங்கே, இப்பொழுது, இப்படி இருப்பதும், இவளைக் கண்டவுடன் அகம் மலர்ந்து சிரிப்பதும் தற்செயலானது இல்லை என்று புரிந்தது. கூடவே, ஒரே நாளில் மனம் அவள் கோயிலுக்கு வரும் நேரத்தைக் கணித்து, என்னை இழுத்துவந்து குளக்கரையில் விட்டிருப்பதை உணர்ந்ததும் ஆச்சரியமாய் இருந்தது. அதைவிட ஆச்சரியம், இவளும் கோயிலுக்குள் செல்லாமல் எப்படி நேரே இங்கே வந்தாள் என்பது. ஒருகனம் இருவரும் மிகச்சிக்கலான ஒரு மண்டலத்திற்குள் வழி தவறி மாட்டிக்கொண்டு அதன் திறப்புகளிலும், தடுப்புகளிலும் திசை திருப்பப்பட்டு எதிர்பாராத திருப்பங்களில் நேருக்கு நேர் முட்டிக்கொள்வது போல இருந்தது.
      குளக்கரையைச் சுற்றியிருந்த பெருமரங்களின் இலையடர்வுகளில் கிடைத்த சிறிய இடைவெளிகள் வழியாக கீற்றுகள் போல நீண்டு வந்த காலையின் பொன்னொளி அவள் முகத்தின் பக்கவாட்டில் மிகமென்மையாகத் தொட்டு நின்றது. நேர்பார்வைக்குப் புலப்படாத கன்னத்தின் மென்மயிர்கள் தங்ககத்தூசி போல மிளிர்ந்தது. மந்தமான காற்றில் ஆடிய இலைகளால் இடைவெளிகள் அடைபட்டு, புதிய சாளரங்கள் திறக்கப்பட்டு பீறிவந்த ஓளிக்கீற்று அவள் கன்னப்பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் தெளிந்து, மறைவது சூரியன் தன் கிரணங்களால் அவள் கன்னத்தை தொட்டுத் தொட்டுப் பார்ப்பது போல இருந்தது. பேசுவதற்காக வாயை சற்றே திறக்கும் போது ஒளி அவள் வெண்பற்களில் பட்டு சிதறி ஈரமான கீழுதட்டின் மேல் குளம்போலத் தேங்கியது. அவள் ஒளியை உமிழ்பவள் மாதிரி இருந்தாள்.

      இவளை நான் ரொம்ப உற்றுப்பார்க்கிறேன். இவள் அதை அறிவாள், ஆனாலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கொஞ்சம் நாணிக்கொண்டு அனுமதிக்கிறாள் என்று தோணியது. இப்படியெல்லாம் நினைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்குமென்று தெரியவில்லை. காலத்திற்கு ஒரே சீரான ஒட்டம் இல்லை போலும். இடத்திற்கும், மனிதருக்கும், நேரத்திற்கும் தகுந்தமாதிரி காலம் மெதுவாகவும், வேகமாகவும் ஓடுகிறது. இவளருகில் எல்லாமே சற்று நிதானமாகவே செயல்படுவது போல் இருக்கிறது. அதுவே இவளின் இயல்புக்கும் பொருத்தமானதாக இருந்தது. ‘அப்படியென்றால், இவளுடனேயே இருந்தால் என் காலம் மெல்ல நகர்ந்து ஆயுள் கூடுமா...?’ சிரிப்பு வந்தது.

“எதுக்கு திருமேனி சிரிக்கறது?” என்றாள். எழுந்து அங்கவஸ்திரத்தால் உடலை போர்த்திக் கொண்டு படியேறி அவளருகில் சென்றேன். “நீங்க தமிழ் பேசறத நினைச்சுண்டிருந்தேன். சிரிப்பு வந்துடுத்து” என்றேன். காலைவேளையில் குளக்கரையில் உட்கார்ந்து அவளைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டேனோ என்று தோண, “அசடு” என மனதிற்குள் என்னையே திட்டிக் கொண்டேன். “ஓ... இப்போ ஞான் நிறைய தமிழ் பேசறது. மெட்ரிகுலேஷன் வரை படிச்சது கல்கத்தயிலா. அம்ம மரிச்ச சேஷம் தமிழ் பேசவே ஆளில்லா. திருமேனி பாக்கனும், இனி வேகம் படிச்சு சுத்தமாயிட்டு பேசுவேன்”

அவளுக்கு அம்மா இல்லை என்பது கேட்க கஷ்டமாயிருந்தது. இப்போது எதைக் கேட்டாலும் அபத்தமாகிவிடும் என்பதால், அபத்தமாகவே ஏதாவது கேட்க நினைத்து, “இங்கிலீஷ் பாஷை எல்லாம் பேசுவேளா?” என்றேன்.

தோள்கள் குலுங்காமல் தலையை மட்டும் அசைத்தாள். நீளமான கழுத்து கொண்ட பறவைகளுக்கு மட்டும் நளினமும், அழகும், பெண்மையும் கூடுதலாக இருப்பதன் ரகசியம் புரிந்தது.

“இந்தப்பக்கம் திருமேனின்னு சொல்ற பழக்கமில்லை. சாமின்னு கூப்பிடுவா. நீங்க அப்படியும் கூப்பிட வேண்டாம். கௌரிசங்கரன்னு பேர். எல்லாரும் சங்கரான்னு கூப்பிடுவா. உங்களுக்கு இஷ்டப்பட்ட மாதிரி கூப்பிடுங்கோ”

“ம்ம்ம்ம்..... கௌரியேட்டான்னு கூப்பிடறேன்”, ஏற்கனவே யோசித்து வைத்தது மாதிரி பட்டென்று சொன்னாள்.

“உங்களோட சௌகரியம்”

“அப்போ நீங்களும் என்னை ஸ்ரீதேவின்னு கூப்பிடனும்”
சிரித்துக்கொண்டேன்.

“கௌரியேட்டா.... அப்பா இன்னைக்கு மடத்திலேக்கு வரும்” என்றாள்.
அதில் விசேஷம் ஒன்றும் இருப்பதாகத் தெரியாததால் ‘ஓகோ..’ என்று வெறுமே சொல்லிவைத்தேன்.

“ஸ்வாமிகளுடே அடுத்து முக்கியமான விஷயம் பேசறதுக்கு”

சட்டென்று மனம் பரபரப்படைந்தது. “என்ன விஷயம்?”

“மகாத்மா காந்தி மதறாஸ் வந்திருக்காங்க. இங்க வரதுக்கு முன்னாடி நாங்கெ அங்கே போய் பாத்தாச்சு. பாபுஜி மதுரைக்கு போவாங்களாம். அப்பா பாபுஜிய பிரம்மகிரிக்கு ஸ்வாமியெ பாக்க க்ஷனிச்சிருக்காங்கெ. அம்பலத்துக்குள்ளே ஹரிஜனங்களையும் அனுவதிக்கிறது பத்தி ஸ்வாமிகிட்டெ பாபுஜி கேட்கப் போறாங்க”

நான் மகாத்மா காந்தியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆச்சார்யரே அப்படித் தான் குறிப்பிடுவார். பாரத தேசத்தின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட கர்ம யோகி என்றும் சொல்லுவார். ஆனால் பஞ்சமர்கள் கோவிலுக்குள் எதற்கு வரவேண்டும் என்று தான் எனக்குப் புரியவில்லை.

“பஞ்சமர் கோவிலுக்குள் நுழையறது சாஸ்திர விரோதம் இல்லையா? அவாளோட சம்பிரதாயமே வேறயாச்சே?”

அவள் முகம் வாடியது. முகத்தைத் தாழ்த்தி கெஞ்சலாக, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கௌரியேட்டா... அவங்களும் நம்மள மாதிரி மனுஷ்யங்க தானெ? உங்கள லலிதாம்பிகைய பாக்கக்கூடாதுன்னு சொன்னா எத்ரமாத்ரம் சங்கடமாயிருக்கும்?”

வெறும் பேச்சுக்குக் கூட என்னால் அதைத் தாங்கமுடியவில்லை. துக்கம் பொங்கி கண்ணை நிறைத்தது. உடனே சென்று அம்பாளைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இவள் சொல்வது நியாயமாகப்பட்டது. எல்லாருக்கும் இறங்கும் குணம். என் அம்மா போலவே தான் இவள். என் அம்மா சொன்னால் நான் மறுக்க மாட்டேன். ஆனால் சமஸ்தானத்திலும், ஸ்ரீமடத்திலும் இதற்கு என்ன முடிவு செய்வார்கள்? எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இவளுக்கு மகாத்மாவை ரொம்ப பிடித்திருக்கிறது. இவளிடம் பேசுவதற்காகவேணும் அவரைப் பற்றி இன்னும் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மௌனம் மெலிதாக உள்ளே நுழைந்து நீண்டு வளர்ந்து இருவரையும் பிரித்தது, அதை அறுத்து மீண்டும் ஒட்டிக்கொள்வது போல, “நிறைய வாழைப்பழம் இருக்கு வீட்ல, கோசாலைக்கு கொண்டு போய் கொடுக்கனும். வழி சொல்லித் தாங்க கௌரியேட்டா...” என்றாள்.
கோசாலை..... அங்கே நான் போய் இரண்டு வருடம் ஆகப் போகிறது. மடத்தில் முன்பு நான் மிகவும் விரும்பிய இடமும், பிறகு எப்போதும் நினைத்தாலே துயரம் கவ்விக்கொள்ளும் இடமும் அது தான்.
***
(* நிலவொத்த முகம், சிம்மம் போலக் குறுகிய இடை, கஜராஜனை (யானை) போன்ற மெல்ல நடை, இப்படி ஒரு அழகி என் இதயத்தில் வசிக்கையில்.....)
பகுதி-1                                                     பகுதி-3