Saturday, March 10, 2012

நாடகம்


பொழுதுக்கு ஒரு முகமென
விதம் விதமாய்
ஒளிந்துகொண்டு
ஒப்பனை செய்வீர்கள்

உங்கள் பொய்த்திரைகளைக்
கிழித்துக்கொண்டு வந்து
என் கண்கள் கண்டுவிடும்

சட்டென்று வெட்கி
புதுப்புது பாவனைகளை
அள்ளிச் சுற்றிக்கொண்டு
மானம் காப்பீர்கள்

இரக்கமில்லாமல்
அவற்றை உருவி எறிந்து
உங்களை அம்மணமாக்கி
என் அகம் ரசித்துவிடும்

'சீச்சீ.. பைத்தியக்காரன்'
என்று
'கௌரவமாக' ஒதுங்குவீர்கள்

மெத்தென்ற தெருப்புழுதியில்
சுகமாகப் புரண்டபடி
உங்கள் நாடகங்களை எண்ணி
சிரித்துக் கொள்வேன்

பாழடைந்த
உங்கள் உள்ளங்களில்
என் சிரிப்பு
முடிவுறாது எதிரொலிக்கும்

செவிப்பறைகள் கூச
அப்போதும்-
'ஐயோ பாவம்' என்றொரு
அனுதாப வசனம் பேசுவீர்கள்

அதற்கப்புறமும்-
நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல்
நடிப்பீர்கள்
நான் எதுவுமே தெரியாதவன் போல்
நடிப்பேன்.

-பிரகாஷ் சங்கரன்

Sunday, March 4, 2012

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 5)


நுண்கலைக்கழக அருங்காட்சியகம் (Accademia Gallery)

ஃப்ளோரன்ஸ் நகரின் மற்றொரு முக்கியமான அடையாளம் அல்லது ஃப்ளோரன்ஸ் என்ற சொல்லிற்கே இணைச் சொல்லாகிவிட்ட மைக்கேலேஞ்சலோவின் உன்னதப் படைப்பான ‘டேவிட்’. யூதர்களின் இரண்டாம் அரசனாக அறியப்படுபவர். ஆபிரகாமிய மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றிலும் முக்கிய ஆளுமையாகப் போற்றப்படுகிறார் டேவிட் (கி.மு 1040 – 970). இயேசு கிறிஸ்து அவருடைய தந்தை யோசேப் மற்றும் தாய் மரியாள் இருவரின் வழியிலும் டேவிடின் உதிர வம்சத்தின் தொடர்ச்சி என நம்பப்படுகிறார்.

ஃபிலிஸ்தீனியர்களின் சார்பாக அவர்களுள் ராட்சத உருவம் கொண்ட பலசாலியான ‘கோலியாத்’ என்பவன் இஸ்ரேலியர்களை நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுகிறான். இஸ்ரேலியர்களில் ஆடுமேய்க்கும் கீழ்குலத்தைச் சேர்ந்த இளம் டேவிட், தான் கோலியாத்துடன் ஒற்றைக்கு சண்டையிட அரசன் சௌலிடம் அனுமதி பெறுகிறான். எதிர்பாராத நேரத்தில், வலிமையான கோலியாத்தின் நெற்றியில் தன் கவனைச் சுழற்றி கல்லாலடித்து வீழ்த்துகின்றான். அது முதல் டேவிடின் புகழ் இஸ்ரேலியர்கள் மத்தியில் பரவத்தொடங்குகின்றது. அரசனால் தளபதியாக நியமிக்கப்பட்ட டேவிட் பின்னர் தலைமையேற்று நடத்திய போர்களில் எல்லாம் வெற்றி பெற, ஒரு கட்டத்தில் சௌல் மன்னனே டேவிடின் புகழுக்கு அஞ்சி அவனை கொல்லத் திட்டமிடுகிறான். அதிலிருந்து தப்பிய டேவிட், பின்னர் அரசனது வாரிசுகள் இறந்ததும் யூதர்களில் குலமூத்தோர் வேண்டிக்கொண்டபடி இஸ்ரேலிய சாம்ராஜ்யத்தின் அரசனாக பதவியேற்கிறார்.

டேவிடின் சிற்பம் மைக்கேல் ஏஞ்சலோவுக்கு முன்னும் பின்னும் பல சிற்ப மேதைகளால் வடிக்கப்பட்டுள்ளது. எல்லாம் பெரும்பாலும் கோலியாத்துடன் டேவிட் போர் புரியும் நிலையைக் காட்சிப்படுத்தியது. ஆனால் மைக்கேலேஞ்சலோவின் டேவிட், நீண்ட தோல் வாரால் ஆன கவனை இடது தோளிலிருந்து இடுப்பின் வலது பக்கம் வரை  முதுகுக்குப்பின் மறைத்துப் பிடித்துக் கொண்டு, இளைஞனுக்குரிய அலட்சியப்பார்வையுடன், கொஞ்சம் கூட பயமே முகத்தில் காட்டாமல் கோலியாத்தை முறைப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. பதினேழு அடி உயர வெள்ளை சலவைக் கல்லால் ஆனது டேவிட்டின் சிற்பம்.

வெற்றி நாயகனான டேவிட்டின் சிலை முதலில் ஃப்ளோரன்ஸின் செல்வாக்கு மிக்க பிரபுக் குடும்பமான மெடிஷிக்கும் மற்றும் சுற்றியுள்ள மற்ற சக்திவாய்ந்த மன்னராட்சிப் பகுதிகளுக்கும், ரோமின் ஆளுகைக்கும் எதிராக சுதந்திரக் குடியரசான ஃப்ளோரன்ஸின் குடிமைச்சமூகம் விடுக்கும் எச்சரிக்கையின் குறியீடாக ரோமின் திசை நோக்கி சைனோரியா சதுக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1873ல் இப்போதுள்ள அருங்காட்சியக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதன் போலி சைனோரியா சதுக்கத்தில் வைக்கபட்டுள்ளது.

அகடமியா காலரியில் மைக்கேலெஞ்சலோவின் டேவிட் சிற்பமும், இன்னும் ஃப்ளோரன்ஸ் நகரெங்கும் பல சிற்பிகளால் வடிவமைக்கபட்ட கட்டிடங்கள், தேவாலயங்கள், சிலைகள் போன்றவற்றின் மூல மாதிரிகளும், ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சில அதிவீர சைவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு சன்னதியையும் திரும்பிக்கூடப் பார்க்காமல் நேராக சொக்கநாதரை மட்டும் வணங்கிவிட்டு, மீனாட்சி அம்மையைக் கூட தரிசிக்காமல் வெளியேறி விடுவார்கள். அது போல அகடமியா காலரிக்கு வெளியே நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து, 10 யூரோ பணம் கொடுத்து டிக்கட் வாங்கி, டேவிட்டை மட்டும் ஒருமணி நேரம் பல்வேறு கோணங்களில் கண்ணாரக் கண்டுவிட்டு வேறெதையுமே பார்க்காமல் ஒரு பெருமூச்சுடன் அமைதியாக வெளியேறியவர்களைக் கவனித்தேன்.

புகைப்படங்களில் பலமுறை இந்தச் சிற்பத்தைக் கண்டிருக்கிறேன். நேரில் பார்க்கும் போது அதன் பிரும்மாண்ட உருவம் உருவாக்கும் பிரமிப்பும், வியப்பும், நெகிழ்ச்சியும் அயிரம் மடங்கு அதிகம். டேவிடின் நிற்பில் தெரியும் அந்த அலட்சிய தோரணையும், முகத்தின் இளமையும், கண்களில் சுடரும் தைரியமும் இவன் எதிர்காலத்தில் இஸ்ரேலியர்களின் சக்ரவர்த்தியாக ஆவான் என்று குறியிட்டுக் காண்பிப்பது போலிருக்கும்.

உஃபிஸி கலைக்கூடம் (Uffizi Gallery)

ஃப்ளோரன்ஸின் மிகப்பிரம்மாண்டமான, மிக முக்கியமான, ஏன் உலகிலேயே மிக மிக முக்கியமான, புகழ்பெற்ற கலை அருங்காட்சியகம் இது. லியனார்டோ டா வின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், சாண்ட்ரோ போர்ட்டிசெல்லி, ரெம்ப்ராண்ட், ஃபிலிப்பொ லிப்பி முதலான பல பெரும் படைப்பாளிகளின் ஓவியங்கள், சிற்பங்கள் இங்கே சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பழைய கலை அருங்காட்சியகளுள் இதுவும் ஒன்று. ஆரன் நதிக்கரையில் ‘ப’ வடிவத்தில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (1560-1586). இன்று ஃப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கியமான சுற்றுலா கவர்ச்சி இந்த அருங்காட்சியகம்.

மிக நீண்ட வரிசைகளில் சுற்றுலாப் பயனிகள் காத்திருந்து உள்ளே செல்கிறார்கள். சில சமயங்களில் 5 மணி நேரம் வரை உள்ளே நுழையக் காத்திருக்க வேண்டிவருமாம். நான் சென்றிருந்த சமயத்திலும் மிக நீண்ட வரிசை இருந்தது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் நின்றுவிட்டு நகர்ந்து விட்டேன்.

அதற்குக் காரணம் இருந்தது.  தனியனாக ஃப்ளோரன்ஸில் சுற்றிக்கொண்டிருந்த போது, பளிங்கு தேவாலயங்கள், பிரம்மாண்டமானதும், நுண்ணிய வேலைப்பாடு கொண்டதுமான அதன் தூண்கள், உயர்ந்த, ஓவியங்கள் செறிந்த விதானங்கள், உயிர்ப்பான ஒரு கனத்தில் உறைந்துவிட்டன போன்ற ஊணர்ச்சி ததும்பும் சிற்பங்கள் என ஒவ்வொன்றையும் சூழல் நினைவே அற்று முழுமையாக அனுபவித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு மென்சோகம், விரக்தி கலந்த வெறுப்பு மனத்தைப் பீடிக்க பாதியிலேயே திரும்பி விடுதி அறைக்குள் வந்து படுத்துக் கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கும் போதே வந்த இந்த மனக்குழப்பத்தின் காரணம் புரியாமல் தவித்தேன். 

அங்கே இருந்த நான்கு நாட்களும், பார்க்கும் ஒவ்வொரு சிற்பமும் முந்தைய சிற்பத்தை விட பேரழகும், முழுமையும் இருப்பதாகத் தோன்றும். "இதற்கு மேல் எதுவும் இல்லை, ஐயோ இப்படி கண்ணை குருடாக்குகிற அழகா? உயிரைக் குழைச்சு செதுக்கி இருக்கிறானே படுபாவி சிற்பி" என்று தனிமையில் வாய்விட்டு புலம்பிய படியே இருந்தேன். அமைதியாக இருப்பதை விட அந்தப் புலம்பல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

பின்னர் எதேர்ச்சையாக இணையத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த விஷயம் தெரியவந்தது.

இது ஒரு வகைக் 'கலைப்பித்து'. ஆம், மகத்தானதும், அதியழகும், அற்புதமுமான கலைப் படைப்புகளையோ, இயற்கை காட்சியையோ ஒரே இடத்தில் தொடர்ந்து காண நேரும்போது, மனம் களிவெறியில் பிதற்றும் ஒரு வகை நோய்க்கூறு. இதற்கு "ஃப்ளோரன்ஸ் சிண்ட்ரோம்" என்று பெயர். இதனால் இதயம் அதிவேகமாகத் துடிப்பதும்குழப்பமும்உருவெளிக்காட்சிகளும்,  மயக்கமும் வரும்.  ஃபிரஞ்சு எழுத்தாளர் ஸ்டெண்தால் என்பவர் 1817 இல் ஃப்ளோரன்ஸ் நகரைச் சுற்றிப் பர்க்கையில், குறிப்பாக அங்குள்ள 'உஃபிஸி' கலைக்கூடத்தை (இங்கே பிக்காசோ, லியனார்டோ டவின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட பெரும் கலைஞர்கள் அத்தனைபேரின் மிகச்சிறந்த படைப்புகளும் உள்ளது) பார்வையிடும் போது இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டதாக தனது Naples and Florence: A Journey from Milan to Reggio என்னும் நூலில் பதிந்துள்ளார். அதனால் இது 'ஸ்டெண்தால் சிண்ட்ரோம்' என்றும் அழைக்கபடுகிறது. 

பின்னர் ஜெயமோகனின் ‘அருகர்களின் பாதை’ பயனக்குறிப்பைப் படித்துக்கும் போது, அவரும் ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு சிற்பங்களின் முன்னும், சமனர் ஆலயங்களைக் காண மலைமுகடுகளுக்கு ஏறி அங்கிருந்து விரிந்து பரந்து கிடக்கும் சமவெளியையும் பார்க்கும் போதும் ‘ஆனால் இந்த அழகுபிதற்றச்செய்கிறது இந்த பிரம்மாண்டம். இத்தனை பேரழகையும் மனிதன் எதற்காகத் தேடுகிறான்? அவனுள் இருக்கும் அழகுக்கான தாகம் இத்தனை பிரம்மாண்டமானதா என்ன? இத்தனை கட்டிய பின்னும் அது அப்படியே இன்னும் எஞ்சுகிறதா என்ன? , என்று எழுதியதை வாசித்தேன்.

அதுவே மிகச்சரியாகச் சொல்லப்பட்ட வாக்கியம் என்று தோனியது. ஒருவேளை அவருடன் பயணம் சென்றிருந்தால்  ஏதாவது ஒரு கோயிலில் நான் நிச்சயம் மனச்சமன் குலைந்திருப்பேன் என்றே நினைத்துக் கொண்டேன். இப்போது தோன்றுகிறது, அப்படியே குலைந்தால் தான் என்ன? சாதாரண மனத்தின் கற்பனை எல்லைக்கு வெளியே காலத்தைத் தாண்டி நிற்கும் அற்புதங்களின் முன் பித்தானால் தான் என்ன? பெயர், ஊர், குடி என தனது அடையாமாக எதையும் வெளிக்காட்டாமல், ஒரு புதிர்போலத் தன் படைப்புக்குள் ஒளிந்து கொண்டு வசீகரிக்கும் கலைஞனின் இருப்பை, நம் மனம் சுயத்தை மறந்து பித்து கொள்ளும் ஒவ்வொரு தருனமும் மீண்டும் மீண்டும் நியாயம் செய்யும் என்று தோன்றுகிறது.

ஃப்ளோரன்ஸில் இருந்து மிக அருகில் ஒருமணி நேரப் பயணத்தில் ‘பிஸா’ நகரம் இருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தையும், மிகப்பிரம்மாண்டமான தேவாலயத்தையும், கல்லறைத் தோட்டத்தையும், பிஸா நகர அருங்காட்சியகத்தையும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பளிங்குக் கல்லின் ஆயிரம் ஆயிரம் மெய்நிகர் சிற்பங்கள். வரும் வழியில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் மூன்று தினங்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். விடாது தொடர்ந்து வந்தன வெண்பளிங்குச் சிற்பங்கள். விதிவசத்தால் வரும் வினைகளை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தலையில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல, பேச்சுமூச்சின்றி சிற்பங்களிலும், ஓவியங்களிலும், கட்டுமானங்களிலும் அமிழ்ந்தேன். திரும்பத் திரும்ப உணர்ச்சிவசப்பட்டு புகழ்ந்து, வியக்க உடம்பிலும் மனசிலும் இனி திராணியில்லை. வெண் பளிங்குச் சிற்பங்களாகக் கொட்டும் வெள்ளை அருவியில் தலையை நீட்டிவிட்டது போல வெறுமனே அனுபவித்துக் கொண்டு சொல்லற்று இருந்தேன். திரும்பி பிராக் வரும் போதும், வந்த பின்னரும் நாலைந்து நாள் நகரம் பெரிய சலன ஓவியமாகவும், மக்கள் அனைவரும் அசையும் சிற்பங்களாகவும் கனவிலும் நனவிலும் குழப்பியடித்தது. வகைதெரியாத ஒரு மயக்கம். சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்.

எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு மண்ணையும், மக்களையும், அவர்கள் வாழ்வையும், தொண்மங்களையும், பிரதிபலிக்கும் கலையே இந்த அளவுக்கு என்னை உள்ளிழுக்குமென்றால், ஆயிரமாயிரம் தலைமுறைகளாக என் முன்னோர் வாழ்ந்து ஊறிய மண்ணின் பண்பாட்டை, அதன் இதிகாஸ, புராணங்களை, ஐதீஙகங்களை, நம்பிக்கைகளை, தெய்வங்களைப் பிரதிபலிக்கும் கலை எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கும்? அது தரும் மன எழுச்சியும், நிறைவும் எவ்வளவு உணர்வுப் பூர்வமானதாக இருக்கும்? திடீரென்று என் நாட்டு மீதும், என் சொந்த ஊர் மீதும் பாசம் மிகுதியாகப் பெருகியது போல உணர்ந்தேன். என் தேசத்தின் ஒவ்வொரு மூலைக்கும் காலாற அலைந்து, அதன் செழுமையை அனுபவிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டேன். உண்மையில் இந்த பயணத்தின் விளைவாக என்னுள் ஏற்பட்ட முக்கிய மாற்றம் என்பதே இது தான் என்று தோன்றுகிறது.
---------
நிறைவு.

< பகுதி - 4                                                 

ரசிக்க :)

சிலை வைத்துப் பழிவாங்குறது
சிங்கத்தின் வாயில் இளஞ்சிங்கம் -டேவிட்
உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்
சிலை போல வேஷம் - வயிற்றுப்பாடு


நிழல் வரைந்த மண்டபம்..