Sunday, January 8, 2012

இருப்பு


மலையின் அடிவாரம் மெல்லச் சரிந்து சமதளத்தைச் சந்திக்கும் ஈர நிலப்பரப்பை பசும்புற்கள் படர்ந்து போர்த்தி, கூர் நுணிகளில் சூடிய நீர்முத்துக்களில் சூரியன் உள்பட மொத்த வெளியையும் அடக்கியிருந்தது. அதனுள் மோதி முயங்கிய மேகங்கள் மிதந்து நகர்ந்தபடி உருமாறிக் கரைந்து கொண்டிருந்தன. பச்சைப் புற்பரப்பின் மீது இளம் வெயிலின் ஒளியில் பெயரறியாத எண்ணற்ற சிறிய பூக்கள் வண்ணப்பொட்டுக்களாய் தெறித்திருக்க இன்னும் முழுமையாக நெய்யப்படாத ஒரு பட்டுப்புடவை போல இருந்தது. பளீரென்றிருந்த அடிவாரத்தின் முன்சரிவு வெண்பற்கள் தெரியச் சிரிக்கும் இளம்பெண் போல, காற்றால் கூந்தலை அளைந்து கொண்டு ரகசியக் குரலில், “ஹை! உள்ளே வரமாட்டாயாக்கும்.. உனக்காகத்தானே காத்திருக்கேன்? ரொம்பத்தான் தெரியாதமாதிரி…” என்று குழைந்தது.
சூரிய ஒளி சரிவில் மெல்ல ஏறி காட்டை ஊடுறுவ முயன்று தோற்றுக் கொண்டிருக்க, பச்சையின் அடர்த்தி படிப்படியாக மிகுந்துவந்து உள்காட்டில் கருநீலமாகக் காத்திருந்தது.
இருளில் புடைத்தெழுந்து, மின்னல் வெட்டியது போல கனநேரம் திறந்துமூடிய இரு பெரிய விழிகள் கண்டு மனம் திகைத்திருக்கும் போதே கால்கள் ஈரம்கசிந்து வழுக்கும் சரிவில் அழுத்தி ஊன்றி லாவகமாக ஏற ஆரம்பித்திருந்தது. மனம் பதறி ஓடிச்சென்று சேர்ந்துகொள்ள நான் மரக்கூட்டத்தின் ஊடாக மலையில் ஏறினேன்.


கைக்குச் சிக்கிய வித்துகளை எல்லாம் வாரியிறைத்து பைத்தியக்காரன் உண்டாக்கிய தோட்டம் போல கலவையான மரங்கள், செடிகள், புதர்கள், புற்கள் என மண்டியிருந்தது மலை. அனைத்தையும் கட்டி இறுக்கிச் சிதறாமல் சேர்த்துப் பிடித்திருப்பது போல கொடிகள் சுருண்டு, நெளிந்து, சுழன்று படர்ந்திருந்தன. பெருமரங்களில் வளைந்து முறுகியிருந்த கொடிகள், முரட்டுக் காதலனைத் இறுக்கித் தழுவி மார்பில் துவண்டிருக்கும் காதலியின் கைகள் போல இருந்தன. இருபதடிகள் மட்டுமே ஏறியதாக ஞாபகம், வியர்த்து உடல் முழுதும் ஈரமானது போல உணர்ந்து நின்றேன். காட்டின் காற்று, நீரில் நனைத்த சல்லாத் துணி போல ஈரம் கனக்க என்னை மூடிச்செல்வதால் நனைந்திருக்கிறேன் என்றறிந்தேன்.
மண்ணில் மட்கும் சறுகுகள், தழைகளின் பச்சை வாடை, காட்டின் இருளில் பொதிந்து வாழும் மிருகங்களின் சரும நெடி, பறவை எச்சத்தின் சுண்ணாம்பு வீச்சம் எல்லாமாகக் கலந்து எழுந்த ஒரு உயிர்ப்புள்ள வாசனை நீராவியில் கரைந்து சுவாசத்தில் ஏறிய போது முன் எப்பொழுதோ நிச்சயமில்லாத ஒரு தருனத்தில் மிக நெருக்கமாக அனுபவித்த ஒரு மனித உடலின் வாசனையை ஆழ்மனம் முகர்ந்துவிட, யாரென்று பிடிகிட்டாமல் பரிதவித்தது. அதே நொடியில் காட்டின் இருண்ட ஆழத்திலிருந்து எழுந்த மெல்லிய நக்கலான சிரிப்பொலி மனதைச் சீண்ட, தெளிவாகத் தெரிந்த பாதையில் செல்வது போல ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திட்டவட்டமாக காலெடுத்து வைத்து வெறியுடன் மேலேறிக் கொண்டிருந்தேன்.
மண்ணின் அடியில் புதைந்துவிட்ட எதையோ மோப்பம் பிடித்து, பித்துப் பிடித்தது போல முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி குழித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுநாய், ஈரமண் அப்பிய நாசியுடன், காதுகளை உயர்த்தி விடைத்து, என்னை நோக்கிப் பாயும் தோரணையில் பின்னங்கால்களில் உடலின் எடையைச் சரித்துத் தாங்கிக் கொண்டது. அடிவயிற்றை எக்கி, ரோமம் சிலிர்க்க அடித்தொண்டையில் உருமியபடி, சிவந்த ஈறுகளைப் பிளந்து கொண்டு கோரைப்பற்கள் வெளித்தெரிய என்னைப் பார்த்தது. அதிர்ந்து கொண்டிருந்த அடிமனதின் வெறியோடு என் கண்கள் காட்டுநாயின் காய்ந்த சருகு நிறக் கண்களைச் சந்தித்த சில நொடிகளில், மயிரடர்ந்த வாலை வளைத்து பின்கால்களின் சந்து வழியாக அடிவயிற்றில் ஒட்டியபடி, ஈனமாக முனகிக் கொண்டு மெல்லப் பின்னகர்ந்து சட்டென்று பாய்ந்து புதர்களுக்குள் ஓடி மறைந்தது. நான் மூச்சை ஆழ இழுத்து தேக வாசனையை மோப்பம் பிடித்துப் பாய்ந்து பாறைகளில் தாவி ஏறிச் சென்று கொண்டிருந்தேன்.

மேலேறும் தோறும் புதியபுதிய மலைமுகடுகள் ஆர்வமாகத் தடுப்பைத் தாண்டி எட்டிப்பார்க்கும் தலைகள் போல எழுந்து வந்துகொண்டே இருந்தன. மலை வளர வளர நான் குறுகிச் சிறுத்துக் கொண்டே இருந்தேன். மௌனமாக யாரையோ எதிர்நோக்கி அமர்ந்திருக்கும், வானவெளியைத் தாண்டி வளர்ந்த பிரம்மாண்டமான உருவத்தின் கோர்த்த ராட்சத கைவிரல்களின் இடுக்கில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பு தான் நான் என்று தோன்றியது. புரியாத மொழியில் எழுதப்பட்ட ரகசியப் புத்தகத்தின் வரிகளென சிகரங்களின் நீண்ட சரிவுகள் அடுத்தடுத்துக் கிடக்க, அவ்வரிகளின் மீது விரல் வைத்து வாசிக்கும் யாரோ ஒருவனின் அல்லது ஒருத்தியின் ஆள்காட்டி விரல் மட்டுமே நான் என்னும் மொத்த உடலும் என்ற உணர்வு வர, சலனமின்றி உறைந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்திருப்பேன் என்று தெரியவில்லை. சட்டென்று திரைவிலக்கப்பட்டு எதிர்பார்க்காத காட்சியை கண்டவனாய் துணுக்குற்றேன். நான் மலையென்றும், விளிம்பின் வரிகள் என்றும், சரிவுகள், பள்ளங்கள் என்றும் எண்ணியிருந்தவை அற்பக் கனவுபோலக் கலைந்தது. உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா? யாருடைய மூளைக்குள்ளோ எண்ணமாக இருக்கிறேன் என்றால் இன்னும் நான் பிறக்கவே இல்லையா? நான் பிறப்பதற்கு முன்பே என்னை எண்ணமாக அறியும் இந்த மூளை யாருடையது? அப்படியானால் என்னைப் பற்றி இதுவரை நான் கேட்பதாகத் தோனுகின்ற கேள்விகள் எல்லாம் உண்மையில் இந்த மூளையின் ஒட்டுமொத்த எண்ணங்களின் ஒரு சிறுபகுதி தானா அதுவுமில்லை வெறும் எதிரொலியா நான்? உண்மையில் எனக்கு உடலும் இருப்புமே கூட இல்லையா?

என் வாழ்நாட்கள் முன்பின்னாகப் புரட்டிப் போடப்பட்டது போல இருந்தது. குழப்பிக் கலைத்துப் போடும் கேள்விகளின் பாரம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறிவிட வேண்டுமென விரும்பினேன். நிணமும் குருதியும் தோய்ந்த அதே உயிர்ப்புள்ள தேகத்தின் வாடை இப்போது மிக அருகில் வீசுவதை உணர்ந்து உடல் கனத்து மீண்டேன். அந்த வாடை கரைந்து புலனின் உணர்வு எல்லைக்கு அப்பால் செல்லும் தோறும் அது கூர்மையடைவதை வியந்தேன். மனம் கூடவே விரைந்து அதைப் பாய்ந்து பற்றிக்கொண்டு யாரென அடையாளம் காணத் துடித்தது. ஒருகனம் மலை அடிவாரத்து புல்வெளியில் வெண்பற்கள் ஒளிவிட சிரித்த கள்ளமற்ற இளம்பெண் முகம் தோன்றி மறைந்து உள்காட்டின் அடியற்ற ஆழத்தில் மின்னி மறையும் புரிந்துகொள்ளவே முடியாத கரிய பெரும்விழிகள் தெரிந்தது.
தலையைச் சிலுப்பிக் கொண்டு, நிதானிக்க முயன்றேன். அண்ணாந்து தலை சரித்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். குபுகுபுவென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்து முட்டியது. மேலே தெளிவாக நீலக்கடல் விரிந்து கிடக்க, வெண் நுரைபொங்க நீரலைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சத்தமே இல்லாமல் புறப்பட்டு வந்து கரையில் விரவியழிந்தன. நான் இருப்பது ஆழியினடியில் இன்னொரு உலகிலா, இல்லை, உலகம் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டதா? உடல் தளர்ந்தது.
இறுதி முயற்சியாகக் கால் விரல்களை அழுந்த மடித்து ஊன்றி நின்றேன். இருகைகளையும் விறைப்பாக்கி பக்கவாட்டில் விரித்து உள்ளங்கைகளுக்குள் கைவிரல்களை சுருட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். தோலும், உடலின் மொத்த நரம்புகளும் அவற்றின் உச்சபட்ச இழுவையில் இழுபட்டுத் தெறித்துவிடுவது போல இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு ஓரிரு நிமிடம் கண்மூடி இருந்துவிட்டு மெல்லக் கைவிரல்களைத் தளர்த்தி இமைகளைத் திறந்து பார்த்தேன். மேலே நீலவானில் வரிவரியாக வெண்பஞ்சு மேகங்கள் நகர்ந்து மலைமுடியில் தேங்கி, பின் காற்றில் சிதறிக் கலைந்தது. மெல்ல நகைத்துக் கொண்டேன்.

நான் நின்று கொண்டிருப்பது ஒரு சிகரத்தின் உச்சியிலுள்ள சிறு கற்பாறைத் திட்டின்மீது. கால்விரல்களின் விளிம்பில் இருந்து அப்படியே கீழே அதலபாதாளத்தில் முடிவின்மை இருண்ட குழம்பாக அமைதியாக இருக்கிறது. நான் என் இருப்பை உறுதி செய்து கொள்ள தீர்மானித்துவிட்டேன்.
பழுத்த இலை உதிர்வது போல என் பாதங்கள் அதிர்வின்றி பிடியை விடுகின்றன. என் உடல் நழுவி முடிவின்மை நோக்கிச் சரிகின்றது. நான் எடையின்றி மெல்லிய இறகு போல காற்றால் மேலே மேலே உந்தப்பட்டு நீலவானின் ஒளியை நோக்கி மிதந்து செல்வது போல் உணர்கிறேன்.
அடுத்தகணம் தெரிந்துவிடும் என் இருப்பு.

- பிரகாஷ் சங்கரன்.
நன்றி: சொல்வனம்; இதழ் 62

இந்திய பாரம்பரிய அறிவியல்


ஒரு சமூகம் தனது மூதாதைகள் அதீத புத்திசாலிகள், எல்லாம் தெரிந்தவர்கள், இப்போதிருக்கும் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று நம்புவதையும், பெருமைப்பட்டுக் கொள்வதையும் கூடப் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனால் என் முன்னோர் முட்டாள்கள், ஒன்றும் தெரியாத சோற்றுப் பாண்டங்கள், அப்படியே ஏதாவது தெரிந்திருந்தாலும் அவை எல்லம் போலி அறிவியல், உண்மையில் அவற்றுக்கு அர்த்தமே இல்லை, வெளியிலிருந்து இன்னொருத்தன் வந்து தான் எங்களுக்கு அறிவியல் சொல்லித் தந்தான் என்று பெருமை கொள்ளும் அடிமை மனநிலையின் உளவியல் தான் புரிவதே இல்லை.
பொதுவாக இந்தியாவின் பாரம்பரிய அறிவியலைப் பற்றிப் பேசும் போது மின்னஞ்சல்களில் பரவலாக சுற்றி வரும் சிலவற்றையே அறியமுடிகிறது, பாஸ்கராச்சாரியர், ஆர்யபட்டர், சரகர், சுஸ்ருதர் போன்ற பெயர்கள் மட்டும் பிரபலம். இல்லாவிட்டால் 3000 வருடம் முன்பு இந்தியாவில் க்ளோனிங் பண்ணினார்கள், கிட்னி ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணினார்கள் என்ற ரீதியிலான “கோட்டி அறிவியல்” (நன்றி:அரவிந்தன் நீலகண்டன்) தகவல்கள் பரப்பபடும். இவற்றுக்கு மத்தியில் உண்மையான இந்திய அறிவியல் சாதனைகளை ஆதாரப் பூர்வமான மேற்கோள், நூல் பெயர், ஆண்டு இன்னபிற தகவல்களுடன் தெளிவாகப் பேசும் யாராவது இருக்கிறார்களா என்று தேடியபோதுமுனைவர்.கோபாலகிருஷ்ணன் என்பவரின் உரைகள் யூட்யூபில் கிடைத்தது.
மிகத் தெளிவாக “இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள்இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறுகிறார்.  அவரைப் பற்றிய விவரங்கள் கீழே தருகிறேன்.
அதற்கு முன் கொஞ்சம் அவருடைய ஒரு உரையிலிருந்து சில தகவல்கள்.
“1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யபட்டர் பூமியின் குறுக்களவு 1050 யோஜனை (1 யோஜனை=12.11KM) அதாவது 12715KM என்று குறிப்பிட்டுள்ளார் (கோபர்நிகஸ், கலிலியோவுக்கு எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னால்!!). ஆனால் இதை எப்படிச் சொன்னார்? அதற்கு ஆர்யபட்டீய எண்முறை பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சமஸ்கிருத எழுத்துக்களை அடிப்படையாக வைத்து எண்மதிப்பு கணக்கில் கொள்ளவேண்டும். “ந்யீளா பூவ்யாசம்” என்கிறது ஆர்யபட்டீயம். ந்யீ என்றால் 1000, ளா என்றால் 50 (இவை எப்படி வந்தது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க) ஆக 1050 யோஜனை -- கணக்கு மேலே.
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது, அந்தச் சுழற்சியின் வேகம், புவியின் சாய்வுக் கோணம், மேலும் க்யூப் ரூட், சைன் தீட்டா, காஸ் தீட்டா போன்றவற்றையும் விளக்கியிருக்கிறார் ஆர்யபட்டா. (எல்லாவற்றுக்கும் அதன் மூல சம்ஸ்கிருதச் செய்யுளைச் சொல்லி விளக்கியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்).
இன்னொரு எண்முறை இருந்திருக்கிறது -- பூத சங்க்யா!
1 = பூமி, ப்ருத்வி, சந்திரன், இந்து, சசி, …… (இவை எல்லாம் ஒன்று என்பதால்)
2 = (கண்கள்) நயனம், நேத்ரம், (செவிகள்) ச்ரோத்ரம்…. (இவை எண்ணிக்கையில் இரண்டு என்பதால்)
3 = ராமா(பலராம, பரசுராம, ஸ்ரீராம என மூன்று என்பதால்), அக்னி (கார்ஹபத்ய, பிரகஸ்பத்ய, ப்ரஜாபத்ய), அனலா, வஹ்னி ….
4 = வேதம் (4 வேதங்கள்), சமுத்ரம், வனம், கானனம்…
5 = சரம், பிராண (ஐந்து பிராணன்), பூத (பஞ்ச பூதங்கள்)….(எல்லாம் ஐந்து..)
6 = ருது, ரச..
7 = ரிஷி, முனி, ….
8 = சர்ப்பம், திக்…
9 = கிரகம்…
இப்படியாக போய்க்கொண்டே இருக்கிறது. சரி ஏன் இப்படி ஒரு எண்முறை வைத்தார்கள்? அறிவியலும் சம்ஸ்கிருத செய்யுள்கள் வடிவில் எழுதப்பட்டதாலும், அவை சந்தஸ் எனப்படும் சந்தத்துக்குள் கட்டமைக்கப்பட்டிருந்த்தாலும் இவ்வாறு வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும். எழுதும் போது எண்ணிக்கையின் வலமிருந்து இடமாக எழுத வேண்டும்.
உதாரணமாக லல்லாசார்யர் ‘சிஷ்யதீவ்ருத்தி தந்த்ரா’ என்னும் நூலை மேற்கண்ட எண்முறையைக் கையாண்டு எழுதியிருக்கிறார் (825 பொ.ஆண்டு). ஒரு மஹாயுகம் 43,20,000 வருடங்கள். ஒரு மஹாயுகத்தில் பூமி 157,79,17,500 முறை சுழல்கிறது (“வ்யோம சூன்ய சர அத்ரி இந்து ரந்த்ர அத்ரி அத்ரி சர இந்தவ:”) சுழற்சியை மொத்த வருடங்களால் வகுத்தால் 365.252538617 முறை ஒரு வருடத்தில் சுழல்கிறது!!
இதைத் தவிர எண்முறை கடபயாதி எண்முறை என்று ஒன்று இருக்கிறது. புதுமை, அழகியல், தேவை அடிப்படையில் இந்த எண்முறைகளே அவற்றின் அளவில் ஒரு தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளாகும்.
பூமி சூரியனைச் சுற்றி வரும் வேகம் “கோபாக்யயா தினதாம” = “ஏகோன ஷஷ்டிலிப்தா: அஷ்டௌ விலிப்தா” அதாவது 59நிமிடம் 8 நொடி, 10 டெசி நொடி,13 மைக்ரோ நொடி கோணத் திசைவேகம் (ஆங்குலர் வெலாசிடி) -- சொன்னவர் புதுமனை சோமயாஜி (கலிலியோவுக் கெல்லாம் முன்பே).
இவற்றை அறிந்துகொள்ளும் பொழுதே தவிர்க்கமுடியாத ஒரு கேள்வி மனதில் எழும். ‘எந்தப் பயன்பாட்டிற்காக இத்தனை அடிப்படையான அறிவியல் உண்மைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்தார்கள் நம் ரிஷி விஞ்ஞானிகள்? நவீன அறிவியலில் அடிப்படை உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டு தொழிநுட்பம், கருவிகள், இயந்திரங்கள் வளர்ந்துவிடும். பண்டைய இந்தியாவில் என்னவெல்லாம் தொழில்நுட்பங்கள், கருவிகள் இருந்தன?’
இதற்கு விடைதேட, நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்ற அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பயன்பாடுகள்; உதாரணமாக: மருத்துவம், கட்டிடம், கணிதம், வானவியல், ஜவுளி, கணிமவியல், ரசாயனம், பௌதீகம், என்று பல துறைசார்ந்த கண்டுபிடிப்புகளையும் அவற்றின் மூலத்தை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். மேலும் பல நூல்கள் மஹாபாஸ்கரீயம் (628 பொ.ஆ), லகுபாஸ்கரீயம் (629 பொ.ஆ), பிரம்மஸ்புட சித்தாந்தம் (528 பொ.ஆ)….. இன்னும் ஏராளமான தகவல்கள்.. மெய்சிலிர்க்கவைக்கும் உண்மைகள். பெருமை கொள்ளச் செய்யும் பாரம்பரியம்.
இந்திய அறிவியலை நீர்த்துப் போகச்செய்யும் இன்னொரு தவறான புரிதல் ரிஷிவிஞ்ஞானிகள் இதையெல்லாம் உள்ளுணர்வு அல்லது கற்பனையினால் சொன்னார்கள் என்பது. இதையும்  தெளிவாக மறுக்கிறார், “சாக்ஷாத் அனுபவ யத்ருஷ்டௌ, ந ச்ருதோ, ந குருதர்சித, லோகானாம் உபகாராய ஏதத் சர்வம் ப்ரதர்சம்”, “பரீக்ஷாயார்த்து கலு ப்ரயோஜனம்” போன்ற வரிகளில் நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்.
எல்லா துறைகளிலும் இந்த நாட்டின் எல்லாப் பாகங்களிலுமுள்ள ரிஷி விஞ்ஞானிகளும் பங்களித்திருக்கின்றனர். அவை  சம்ஸ்கிருத்தில் நூலாகத் தொகுக்கப்பட்டு நாடுமுழுவதிலும் ஆர்வமுடையவர்களால் கற்கப்பட்டு வந்துள்ளன. சமஸ்கிருதம் ஒதுக்கப்பட்டதாலும், ஒட்டுமொத்த தேசத்தின் ஆற்றலும் அன்னியர்களிடமிருந்து நாட்டை காக்கவும், விடுவிக்கவும் செலவழிக்கப்பட்டதாலும் இன்னும் பல காரணங்களாலும் இவை வளராமலும், பரவாமலும் போனது.  இவற்றில் பலநூல்கள் ஐரோப்பியர்களால் நூறாண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, நம்மவர்களின் உதவியால் தான் அவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.
இருந்தும் ஒருசில நேர்மையாளர்களைத் தவிர, பெரும்பான்மை ஐரோப்பியர்கள் இந்த உண்மைகளை மறைத்து இந்தியாவை பாம்பாட்டிகளின் தேசமாக மட்டுமே, தங்களால் நாகரீகம் கற்றுத்தரப்பட வேண்டியவர்கள் என்றுமே பரப்பிவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நமது ரிஷிவிஞ்ஞானிகளின் மேண்மையும், பிறரின் மனக்கோணலும் புரிகிறது. ‘இந்தியாவில் கொஞ்சம் மதம், தத்துவம் தவிர அறிவியல் எதுவும் இல்லை’ என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சொன்னதும் நமது துரதிர்ஷ்டமே!
ஆனால் இந்த பல்லாயிரம் ஆண்டு பாரம்பரிய விஞ்ஞான நூல்கள் எதையும் பற்றிய அடிப்படைத் தகவல் கூட அறிந்திராத அறிவின்மை தரும் அசட்டுத் துணிச்சல் தான் இந்திய அறிவியல் பாரம்பரியத்தைப் இழிவுபடுத்தி, ‘நீராவிய வச்சு வெள்ளக்காரன் கப்பல்வுட்டான், நம்மாளுக கொழாப்புட்ட செஞ்சு வாய்க்குள்ள வுட்டானுங்க’ என்று கேலிபேசச் செய்கிறது, கூடவே ‘எனக்கு நவீன அறிவியல் தெரியும்’ என்கிற அளவிற்கு மீறிய தன்னம்பிக்கையும் பாரம்பரிய அறிவியல் அறிவை குறைத்து மதிப்பிட்டு, முற்போக்கு போலிப்பகுத்தறிவுச் சாயம் பூசச்செய்கிறது. முனைவர். கோபாலகிருஷ்ணன் மிகத் தெளிவாகவும், அடக்கமாகவும், ஆனித்தரமாகவும் பேசும் காரணம் உண்மையான அறிதல் தரும் நேர்மையான துணிவு.
டாக்டர். கோபாலகிருஷ்ணன் உயிர்வேதியலில் ஆய்வுப் பட்டம் பெற்று, அமெரிக்காவிலும் இந்திய CSIR லும் வேலை செய்து விட்டு, தற்போது கேரளத்தில் திருச்சூர் அருகில் Indian Institute of Scientific Heritageஎன்னும் ஆய்வுமையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
சமஸ்கிருதத்தில் டி.லிட். பட்டம் வாங்கியவர். உலக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க கௌரவ தலைவர் மருத்துவர். மகாதேவன் சாம்பசிவன் இந்த அமைப்பின் தலைவர் (இவர் ரிக், யஜுர் இரண்டு வேத கணபாடமும் வலமிருந்து இடமாகச் சொல்லும் திறமை படைத்தவர், உலகில் இந்தத் திறமை வாய்ந்த வெகுசிலருள் ஒருவர், திருவனந்தபுரம்  பழவங்காடி கண்பதி உட்பட 18 கோயில்களின் தந்திரி). இந்திய பாரம்பரிய அறிவியல் நூல்கள் (மேலேசொன்னவை உட்பட) அனைத்தும் சமஸ்கிருத செய்யுள்-ஆங்கில மொழிபெயர்ப்புடன் 25, 30 ரூபாய்க்கு நூல்களாக வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்தும், கல்லூரி, பல்கலைக் கழகம், பொது அமைப்புகள், கருத்தரங்குகளில் உரையாற்றி இவற்றைப் பரப்பும் தொண்டு வருகிறார்.
மேலே கொடுத்துள்ள இந்திய அறிவியல் தகவல்கள் வெறும் 0.1% மட்டும் தான். அவை அவர் 2003ம் ஆண்டு Chennai IIT ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தது
இவற்றோடு முனைவர். கோபாலகிருஷ்ணன் ஏராளமான ஹிந்துமத அடிப்படைகளை, சம்ஸ்காரங்களை, தத்துவங்களை விளக்கும் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அவர் உரைகள் எல்லாம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலுமாக ஒளிக்கோப்புகளாக யூட்யூப் போன்ற ஊடகங்களிலும், புத்தகங்களாகவும் கிடைக்கிறது. இந்திய பாரம்பரிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் வலைத்தள முகவரி www.iish.org . அந்தத் தளத்தில் பல புத்தகங்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? நம்மைப் பற்றி நாம் அறிந்துகொள்வதே அறியாமையிலிருந்தும், தாழ்வுணர்ச்சியிலிருந்தும் உதறித் தலைநிமிர ஒரேவழி. ஆகவே, எழுமின்! விழிமின்!!

-பிரகாஷ் சங்கரன்

நன்றி: தமிழ்ஹிந்து; டிசம்பர் 8 ல் பிரசுரமானது