Friday, August 22, 2014

குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.
oOo
Kunjunni mash நான்(நான் என்னும் தலைப்பில் எழுதிய சில குறுங்கவிதைகள்)
கு வுக்குப்பிறகு ஞ்ஞு
ஞ்ஞு வுக்குப்பிறகு ண்ணி
குவுக்கும் ஞ்ஞுவுக்கும் ண்ணிக்கும் பிறகு
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணிக்குப் பிறகு?
நான் ஒரு பூவிலிருக்கிறேன்
வேறொரு பூவின் தேனுக்காக
ஏங்குகிறேன்
குந்துமணியைவிடப் பெரியவன் நான்
என்னும் நினைப்பு உண்டாகும் போது
எள்ளைவிடச் சிறியவன் நான்
என்னும் உண்மையை
எள்ளளவும் அறிவதில்லை
என் முதுகில் ஒரு பெரிய யானை
என் நாக்கில் ஒரு ஆட்டுக்குட்டி
நானோ ஒரு எறும்புக் குட்டி
நான்
நானென்னும் சொல்லின்
இடையிலிருக்கிறேனா
விளிம்பிலிருக்கிறேனா
முன்னிலிருக்கிறேனா
பின்னிலிருக்கிறேனா
மேலேயிருக்கிறேனா
கீழேயிருக்கிறேனா
எள்ளில் எண்ணைபோல
விரவியிருக்கிறேனா
அல்லது
நானென்னும் சொல்லாயிருக்கிறேனா?
நான் எனக்கு நாணோ
ஆமென்றால் அம்பு எது?
எனக்கு நான் உபயோகமேயில்லை
அதற்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்
ஒருகைக்கு சொரியவேண்டுமானால்
அதேகையால் முடியாதில்லையா?
ஐயோ என்னையே எனக்கு துர்நாற்றம் அடிக்கிறதே
ஐயோ என் மனதிலிருந்து வெளிவர
என்னால் முடியவில்லையே
ஐயோ நான் என்னை
எங்கோ
மறந்துவைத்துவிட்டு வந்திருக்கிறேனே
நானொரு கவிதைக்காரன்
கபட கவிதைக்காரன்
விகட கவிதைக்காரன்
ஆனாலும் விதைக்காரன்
நான் இனி என் தந்தையாவேன்
அப்புறம் தாயாவேன்
அப்புறம் மகனாவேன், மகளாவேன்
அப்புறம் நான் என்னுடைய
நானுமாவேன்
என்னிடமே வந்துசேர்கின்றன
நான் அனுப்புவதெல்லாம்
யாரிலிருந்து அவற்றை பார்ப்பது
முட்டாள் தபால்காரன் கடவுள்
நெடும்பாதை
மழைக்கால அந்திப்பொழுது
நான் தனியன்
குஞ்சாயிருந்ததிலிருந்தே உண்ணுபவன்
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணி என்கிற நானா
நான் என்கிற குஞ்ஞுண்ணியா
என்பேர் என்பேர்
என் பேர் என் வேர்
என் மனம் என் மனை
என்னுடைய கவிதை நானேதான்
கற்பனையில் ஒரு
புலியைத் தேடுகிறேன் நான்
எனக்கு உறங்கத்தெரியாது
விழிப்பதற்கு தெரியவே தெரியாது
அரண்மனைக்கு காவல்நிற்கும்
நாய்தானே நான்
நாயின் விலாசம் என்ன?
நான் விழித்தபோது
என்னைக் காணவில்லை
ஆஹா அதிர்ஷ்டம்!
எனக்கு உயரம் குறைவு
என்னை உயர்த்தாதிருங்கள்
எனக்கு வேகம் குறைவு
என்னை தடுக்காதிருங்கள்
உயரமில்லாததே என்
உயர்வு என்றறிகிறேன் நான்
எனக்கொரு உலகம் உண்டு
உனக்கொரு உலகம் உண்டு
நமக்கொரு உலகம் இல்லை
நான்
யாருடைய கற்பனை
என்னைப் பெற்றது
நானே
என்னூடாக நடக்கவே
என்கால்களுக்குத் தெரியும்
நான் ஒரு கால்கவி
பெண் அறை அறியாததால் இருக்கலாம்
அறிந்தால்
நானொரு அரைக்கவி ஆவேனா
அல்லது
அரைக்கால்கவி ஆவேனா
நான்
அதிநவீனனில்லை
நவீனனுமில்லை
வெறும் வீனன்
நானொரு வாடகை வீடு
யாருடைய?
யாரில் இதில் வசிப்பது?
நான் இறப்பதற்காக
நான் வாழவேண்டுமென்று வைப்போம்
நான் வாழ்வதற்காக
யார் இறப்பார்?
நானென்னும் சிலுவையின் மேல்
அறையப்பட்டிருக்கிறேன் நான்
ஆனாலும்.. ஆ!
கிறிஸ்துவாய் மாறவில்லையே
நான் ஒரு துக்கம் மாத்திரம்
நானென்னும் பூவில்
நானென்னும் தேனைத் தேடியலையும்
நானென்னும் வண்டினை
கூவியழைக்கும் விளக்காய்
எரிகிறேன்
நான்
இந்த நான் இப்படியல்லாமலானால்
இந்த பிரம்மாண்டம் இப்படியல்லாமலாகும்
அடேயப்பா… நான்!
எனக்கு
பசிக்கும்போது உண்பேன்
தாகிக்கும்போது அருந்துவேன்
சோர்வடையும்போது உறங்குவேன்
உறங்கும்போது எழுதுவேன்
கவிதைகள்.
நான்
எனக்காக உண்கிறேன்
பிறருக்காக உடுக்கிறேன்
என்னைக் காணாது
என்னில் உருகாது
என்னுள்ளில் என்றும் இருக்கவேண்டும்
நான்
நான் போனாலே ஞானம் வரும்
ஞானம் வந்தாலே நான் போவேன்
இவ்வளவுதான் நான்
சொல்லவந்த விஷயமும்
இவ்வளவுதான்
அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவுதான்
தமிழில் இரட்டுற மொழிதல், சிலேடை போல மலையாள மொழியில் சில இடங்களை மிகச் சுவையாக எழுதியுள்ளார் (ஞானெனிக்கொரு ஞானோ, என்மனமென் மன…) வார்த்தைக்கூட்டுக்களை வைத்து விளையாடியுள்ளார் (குஞ்ஞில்நின்னுண்ணுன்னோன் குஞ்ஞுண்ணி). தமிழுக்கு இதைப் பெயர்ப்பது சவால்தான். அதன் தத்துவார்த்தப் பொருள் கெடாதவாறு முடிந்தவரை முயன்றிருக்கிறேன். நான் என்னும் வார்த்தைக்கு பெரும்பாலும் இடங்களில் மேற்கோள் இட்டு (‘நான்’) வாசித்தால் உள்பொருள் விளங்கும்.
இவரின் இன்னொரு கவிதை,
பறவை பறந்து வந்தது
பாறை மீது அமர்ந்தது
பறவை பறந்து சென்றது
பாறை மீதமானது
தேவதேவன் கவிதைகளை நினைவுபடுத்துகிறது. இன்னொன்று,
சர்க்கரைக் குன்றின் மேலிருந்து
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது -ஒரு
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது
எத்தனை சிறியது என் வாய்
எத்தனை சிறியது என் வயிறு
கம்பன் தந்துசென்ற “பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை” என்கிற படிமம் போலவே இந்த எறும்பும். பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் பற்றிய நேர்மறைப் பொருளும் எதிர்மறைப்பொருளும் ஒருங்கே இருக்கிறது.
(இரா.முருகன் மொழிபெயர்த்த குஞ்ஞுண்ணி மாஷின் சில கவிதைகளை இங்கே படிக்கலாம்)
-பிரகாஷ் சங்கரன்

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...