Monday, August 1, 2011

அன்னதாதா (சிறுகதை)



       சோம்பாய் இடதுகையில் சூடத்தட்டும், கட்டைவிரலில் வளைத்துப் பிடித்த மணியும், வலது கையில் தோளோடு முட்டுக்கொடுத்து இடுக்கிக்கொண்ட மூடிய வெண்கல வட்டிலும், உள்ளங்கையில் ஒரு சொம்பும், அதைத்தாங்கிய விரல்களில் ஒரு சிறு தூக்குவாளியும் தொங்க ஆடிஆடி நடந்தார். முன்னால் குருக்கள் வலது கையால் சிறிய பஞ்சலோக பள்ளியறை விக்கிரகத்தை மார்பில் விரித்த பட்டுத்துணியோடு சாய்த்து அணைத்துக்கொண்டு, இடது கையில் பஞ்சபாத்திரத்தை எடுத்துக்கொண்டு முன்னால் போனார். அம்மன் சன்னதியை அடைந்துவிட்டிருந்த நாயனக்காரர் வாசிப்பதை நிறுத்திவிட்டு, சீவாளியை எடுத்துப்பார்த்துத் திருப்தியில்லாமல் வெற்றிலை போட்டுச் சிவந்த வாயில் வைத்து நாலைந்து முறை சப்பினார், ஈர சீவாளியை மறுபடியும் நாதஸ்வரத்தில் வைத்து ஊதும்போது அவரது பேத்தி அழுவது போல சத்தம் முனகிக்கொண்டு வந்தது. மேளக்காரர் அவரது தம்பி, இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டு ‘நான் என்ன உன் பாட்டுக்கு வாசிக்கிறது?’ என்று தன் இஷ்டத்துக்கு தட்டிக்கொண்டிருந்தார் – காலையில் கல்யாணப் ‘ப்ரொகிராமில்’ கிடைத்த சம்பாவனையைப் பிரிப்பதில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். நான் ஏனோ காரணமே இல்லாமல் கொஞ்சம் அதிக குஷி மூடில் எல்லாவற்றையும் கவணித்துக் கொண்டு கடைசியாளாக நடந்து வந்தேன். 

ஏழெட்டுப் பேர் தான் மொத்தமே, பள்ளியறை பூஜை முடிந்தால், திருமபவும் சிவன் சன்னதி வந்து பைரவர் காலடியில் சாவிக்கொத்தை வைத்து பூஜை முடிந்து, பின்னர் கோயில் நடை சார்த்திவிடுவார்கள். குளிர்ந்த காற்று வீசியது. இன்றும் மழை வரலாம் என நினைத்துக்கொண்டேன். நேற்று பெய்த மழையில் கொடிமர முற்றத்தில் வாய்க்கால் போல நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை ஒய்ந்த போது, வெள்ளம் வடிந்த ஆற்றங்கரை போல அலையலையாக நுண்மணல் படிந்திருந்தது. கோயிலில் கூட்டமே இல்லாததால், மணல் கோலம் கலையாமல் இன்னும் அப்படியே இருந்தது. 

பிரசாதத்தை வாங்கித் தின்றுகொண்டே குளத்திற்கு வந்து படிக்கட்டுகளில் அமர்ந்தேன். மெல்ல கால் நீட்டி, தலையை ஒரு படியில்வைத்து அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி இருந்தேன். கோயிலுக்குள் இருந்த வெம்மைக்குக், குளிர்ந்த கல்படியிலிருந்து தலைக்குள் பரவிய குளுமை சுகமாக இருந்தது. தலைமுறைகளாக வாழும் கிராமம், சொந்த ஊரிலேயே அதிகம் தொல்லையில்லாத வேலை, கும்பாபிஷேகம், கிரகபிரவேசம், சஷ்டியப்தபூர்த்தி என்று விசேஷங்களுக்கு ஜபத்துக்கு போனால் கிடைக்கும் சைடு வருமானம்,  கரண்ட் போன ராத்திரிகளில் தெருவில் ஈஸி சேரைப் போட்டு, அரை இருளின் ரகசியத் தன்மையை அதிகரிக்கும் வம்புக் கிசுகிசுக்கள், கண்ஜாடைகளிலேயே பரப்பப்படும் புறணி, வீட்டின் கொல்லைக் கதைவைத் திறந்தால் ஓடும் வாய்க்கால், தெருவில் இரண்டடி வைப்பதற்குள் வரும் நாலு குசல விசாரிப்புகள், பேருந்தில் எப்போதும் விட்டுக்கொடுக்கப்படும் இருக்கை, மொத்த கிராமமும் ஒரு பெரிய வீடு போல, எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் என் வீட்டின் ஒரு அறையில் இருப்பது போலத் தான். சித்திரையில் மூலநாதருக்கு பிரம்மோற்சவம், ஆவணியில் அக்ரஹாரத்து தெற்கு முனையில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலில் உறியடி, வழுக்குமரம், ராதாகல்யானம் என்று கிருஷ்ண ஜெயந்தி பத்து நாள், அப்புறம் பங்குணியில் ராம நவமி பத்து நாள், பசுவன், கோலாட்ட ஜோத்திரை, திப்பிராஜபுரம் தீக்ஷிதரின் உபன்யாசம், மார்கழி பஜனை.... பயனத்தில் ஜன்னல் வழியே நொடிக்கு நொடி மாறும் காட்சிகளை வியந்து, வாய்பிளந்து, ஆர்வமாக வேடிக்கை பார்க்கும் சிறுவன் போல எனக்கு வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உற்சாகம் குறையாமல் பறந்துகொண்டிருக்கிறது. ஒருநாள்கூட சலிப்புத்தட்டவே இல்லை. அல்லது வெளியே போக வாய்ப்புக் கிடைக்காத ஆதங்கத்தை இப்படிப் பெருமை பேசி பூசி மறைத்துக் கொள்கிறேனா? மெட்ராஸ், பாம்பே, அமெரிக்கா என்று வெளியூர் போன நண்பர்களும் என்னைப் பார்த்துத் தானே பொறாமையாய் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்? ஒருவேளை எனக்காகச் சும்மாவேனும் அப்படிச் சொல்கிறார்களோ? இல்லை நிஜமாகவே நான் திருப்தியாகத்தான் இருக்கிறேன். நான் கொடுத்துவைத்தவன்! ஆனால் இந்த சோம்பாய் எதற்கு இத்தனை அருமையான ஊரையும், மக்களையும் விட்டு வாழ்நாள் பூராவும் அனாதை மாதிரி ஊர் ஊராய் பிச்சையெடுத்து அலைந்துவிட்டு, இந்த வயதான காலத்தில் திரும்பவும் ஊருக்கே வந்து சேர்ந்திருக்கிறார்? தலைவிதி! வேறென்ன?

      சாவிக்கொத்து கிலுங்கும் ஓசையைக் கேட்டுத் தலையை உயர்த்தித் திரும்பிப் பார்த்தேன், இருட்டு புடைத்தெழுந்து வருவது போல கனத்த உடம்பை தள்ளிக்கொண்டு வந்து அருகில் அமர்ந்தார் சோம்பாய்.
      “வாரும் ரவை* அய்யர்...” எழுந்து உட்காராமல் படுத்தவாறே கிண்டலாகச் சொன்னேன். “அடேயப்பா, அம்பி ஆனைச் சிகப்பு!” பதிலுக்குச் சொல்லிவிட்டு சிரித்தபடி என் தலைமாட்டில் அமர்ந்தார். கோயிலைப் பெருக்கி, பாத்திரம் தேய்க்கும் ராக்கம்மா, ‘கறுத்தச்சாமி’ என்று முன்பு என்னை ஒருமுறை சொல்லி “நெதம் கடலமாவத் தேச்சு குளிக்கச் சொல்லுங்கம்மா, வெளுத்து, நல்லா உங்க மாரி சிவீர்ண்டு ஆயிருவாரு” என்று ஆலோசனை சொல்லி என் அம்மாவிடம் வாங்குப்பட்டவள். ‘யாத்தே... அய்யர் ஆளுகள்ல இம்புட்டு கறுத்த ஆள நா எங்கனையும் பாத்ததில்ல” என்று அதிசயப்பட்டுப் போய், அவள் தான் இவருக்கும் ரவைச்சாமி என்று பெயர் வைத்தாள். ‘கருப்பு’ என்ற அடையாளத்தை என்னிடமிருந்து சுவீகாரம் எடுத்துக்கொண்டு என்னை காப்பதற்காகவே வந்தவர் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

      கரையில் ‘சிவசிவ’ என்று வரிசையாக அச்சடித்திருந்த பிசுக்கேறிய காவி அங்கவஸ்திரத்தை கழற்றி இரண்டாக மடித்துச் சுருக்கி, மோவாயை நிமிர்த்தி, ஒரு கையை உடம்பிலிருந்து விலக்கித் தூக்கி, இன்னொரு கையால் விசிறி மாதிரி சுழற்றிக் கொண்டார். அவர் மேல் பட்ட காற்று ஜவ்வாது விபூதியும், விறகுப் புகையும், எண்ணையும், வியர்வையும் குழம்பிய வினோதமான நாற்றத்துடன் என் முகத்தில் வீசியது. சட்டென்று எழுந்து உட்கார்ந்து, “ஓய்.. கஷ்கத்தை மூடும். கக்கூஸாட்டம்னா நாற்றது..” என்றேன் எரிச்சலுடன். விசிறிக்கொள்வதை நிறுத்திவிட்டு மெல்லச் சிரித்தபடி, “நான் என்ன அம்பியாட்டமா ஆபீஸ்லயா வேலை பாக்கறேன்?” என்றார். வியர்வையில் குளித்திருந்த உடல், நிலா வெளிச்சத்தில் மினுமினுத்தது. ‘உஸ்ஸ்...’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார். பரிதாபமாக இருந்தது. சூழலை மாற்றும் பொருட்டு அவருக்கு அந்தப் பக்கம் இருந்த தூக்குவாளிகளை அவரது மடியில் சற்றே சரிந்து கைநீட்டி எட்டி எடுத்தேன். அப்போது மிக அருகில் உணர்ந்த அவர் வியர்வை நாற்றத்தை, கடுமையாக பேசியதற்கான தண்டனையாக எடுத்துக்கொண்டேன். ஒரு தூக்கில் மேலே வாழையிலையில் கொத்துக்கடலை சுண்டலும், கீழே புளியோதரையும், இன்னொரு தூக்கில் மூன்று வெல்ல அப்பமும், இரண்டு மிளகு சேர்த்த உளுந்த வடையும் இருந்தது.

“என்னவோய்... பிரசாதம் ரொம்ப குறைச்சலா இருக்கே.. சாப்டுட்டீரா?” என்றேன்.

“இல்லம்பி... எல்லாம் வழக்கம் போல தானம் தான். காவக்கார வெங்கிட்டுக்கு கொஞ்சம், ராக்கம்மா பாவம் நாலு குழந்தேள வச்சிண்டுருக்கா, அதுகளுக்கு என்ன பெருசா அவ கொடுத்துடப் போறா, ‘சாமீ..சாமீ..’ன்னா, இந்தாடின்னு அவளுக்கு பாதிய கொடுத்துட்டேன்”

“வரவர ராக்கம்மா குழந்தேள அப்பமும், வடையும் கொடுத்து போஷாக்கு பண்றேன்னு நீர் பாகம் பிரிக்கிறது எனக்கென்னமோ சரியாப் படலைங்காணும்” என்றேன் நமுட்டுச் சிரிப்புடன். அவரும் ஒன்றும் பேசாமல் சிரித்துக் கொண்டார்.

எனக்குத் தெரியும் அவர் அப்படித் தான் செய்வாரென்று. வயது அனேகமாய் எழுபது இருக்கும் அவருக்கு. கிட்டத்தட்ட என்னை விட இரண்டரை மடங்கு பெரியவர். என் தாத்தா வயது. வேறு யாரையாவது நான் இப்படி எல்லாம் கிண்டல் பண்ண முடியுமா? ஒன்றுமில்லை, பக்கத்து வீட்டு ராகவன், வெறும் இரண்டு வயது பெரியவன், பேரைச் சொல்லிக்கூப்பிட்டாலே சண்டைக்கு வந்துவிடுவான். ஆனால் பெரிய படிப்போ, பணமோ இல்லாத, ஒண்டிக்கட்டையான, கொஞ்சம் அவலட்சனமான தோற்றத்துடன் உள்ள ஒரு கிழவன், விளையாடிவிட்டு குழந்தை வீசி எறிந்த கோமாளி பொம்மை போலத் தெருவில் நகைப்பிற்குரியவனாகி விடுகிறான். அவன் வயதும், அனுபவமும் கணக்கிலேயே வருவதில்லை. தெரிந்தும் என்னால் இந்த நக்கல்ப் பேச்சை விடமுடியவில்லை. அவரில் உள்ள எதைத் தெரிந்து கொண்டால் என் மனம் மரியாதையாக நடந்து கொள்ளும்? தெரியவில்லை.

      ஒரு வடையும், அப்பமும் மட்டும் கையில் எடுத்து பிய்த்து வாயில் போட்டுக்கொண்டேன். இவ்வளவு நேரம் இந்தாளுக்காக காத்திருந்த்து வீணாகவில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். “அரே சோம்பாய் ஜி, அப்பம் பஹூத் அச்சா ஹை! அதைவிட மிளகுவடை பஹூத் பஹூத் அச்சா லகரா ஹை!” என்று சொல்லிச் சிரித்து அவரது முதுகில் மெதுவாக இரண்டு அடி அடித்தேன். முதுகைத் தடவிக்கொண்டே, “டேங்க்ஸ்.. மதர் இஸ் தி அப்பம் வடா டேஸ்ட், நாட் ஐ. ஃபைங் ஷி பட் வாட் சோ தாட் பூட் தஞ்சாவூர்!” சிறுவன் போல நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். தூக்கை அவரிடம் நீட்டினேன்.  “எனக்கு வேண்டாம்பி, நீ சாப்பிடு. எனக்கு என்னமோ வாயு பிராப்ளமாட்டம் இருக்கு” என்றார்.

“எப்பப் பாத்தாலும் வாயு... நெய் நேத்ர வாயு, அன்னம் அண்ட வாயு, பருப்பு பக்க வாயுன்னுன்டு.... எதைத் தான் சாப்பிடுவீரோ..? ஒன்னுமே திங்காம எப்டி ஓய் நன்னா ‘கஷ்க்கு மொஷ்க்கு’ன்னு இருக்கீர்?”

“இந்தக் காலத்து பசங்க சாப்பிடறதெல்லாம் என்ன சாப்பாடு? அந்தக் காலத்தில நான் எவ்வளவு சாப்பிடுவேன் தெரியுமா? சொன்னா நம்ப மாட்டே அம்பி... ஒரு படி பச்சரிசிச் சாதம் ஒருத்தனா சாப்பிடுவேன். ஒரு பெரிய சொம்பு நெறையா காப்பி குடிப்பேன். இட்லி வார்த்துப் போட்டா இருபத்தஞ்சு திம்பேன், சூடா இருந்தா கணக்கே தெரியாது. எங்கம்மாவுக்குப் பெருமையா இருக்கும். எங்கக்கா விசாலம், ‘பரிமாறியே கை ஒடிஞ்சுபோறதுடா, கடங்காரா!’ன்னு கத்துவா. பரக்காபட்டி மாதிரி அள்ளி அள்ளித் திங்க மாட்டேன். கிரமமா ஒவ்வொன்னா ருஜிச்சு, அனுபவிச்சுச் சாப்பிடுவேன் அம்பி. சாப்பிடறச்சே யாரானாலும் என்கிட்டப் பேசப் பயப்படுவா. அதகளம் பண்ணிடுவேன். தீரத்தீர பரிமாறிண்டே இருக்கனும். சாப்பாடு, நான், சாப்பிடறது -வேற ஒரு சிந்தனையும் கிடையாது. எனக்கு ஒழுங்காப் பண்ணத் தெரிஞ்ச ஒரே விஷயம் அது தான். நம்ப மாப்ளைய்யர் ஹோட்டலுக்கு நான் பகல்ல போனாப் போறும். அய்யர் கோமணத்தில இடி விழுந்த மாதிரி துடிச்சுப் போயிடுவார். கல்லாலேர்ந்து ஓடிவந்து, கெஞ்சிக் கூத்தாடி என்னை வெளில அனுப்பிடுவார். அப்புறம் ராத்திரி கடைய முடிக்கிறதுக்கு முன்னாடி ஆளவிட்டுக் கூப்பிட்டு ‘தின்றா தாயளி’ ன்னு பக்கத்தில  இருந்து அவர் கையாலயே சந்தோஷமா பரிமாறுவார். நம்பலேன்னா அவர் பையன் குசுவுனிச் சுப்பிரமணியக் கேட்டுப்பாரு... ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா...” சத்தம் போட்டு வெகுளியாய்ச் சிரித்தார்.

“சரி ஓய்.. உமக்கு இப்போ ஒரு அஞ்சு கழுதை வயசுன்னு வச்சுப்போம். முதல் பத்து, கடைசிப் பத்து ஆக மொத்தம் இருபது வருஷத்தை ஆடித் தள்ளுபடி பண்ணிடுவோம். உம்ம கணக்குப் படியே இல்லாம குறைச்சு வச்சு அம்பது வருஷத்துக்குப் பாப்போம். சராசரியா ஒரு நாளைக்கு அரைக்கிலோ அரிசி, ஒரு லிட்டர் பால், கார்த்தால இருபது இட்லி, சில நாள் தோசைன்னா ஒரு இருபது தோசை, காய்கறி ஒரு கால்கிலோ, ஜலம் ஒரு மூனு லிட்டர், அப்பப்போ நீர் சாப்பிட்ட பஜ்ஜி, போண்டா, பக்ஷனமெல்லாம் ஒரு மாசத்துக்கு முப்பதுன்னு கணக்கு கூட்டிப் பார்த்தா.... ஹ்ம்ம்..... ஒன்பதனாயிரம் கிலோ அரிசி, பதிணெட்டாயிரம் லிட்டர் பால், ஒரு லட்சத்தி என்பத்திரெண்டாயிரம் இட்லி, ஒரு லட்சத்தி என்பத்திரெண்டாயிரம் தோசை, நாலாயிரத்து ஐநூறு கிலோ காய்கறி,  அம்பத்தஞ்சாயிரம் லிட்டர் ஜலம், பதிணெட்டாயிரம் பஜ்ஜி, போண்டா.... அட, பிரம்மராக்ஷஸா நீர் ஒருத்தனா அம்பது வருஷம் சாப்பிட்டதை ஆப்பிரிக்கால ஏதாவது ஒரு நாட்டு மொத்த ஜனத்துக்கும் ஒரு வாரம் பசியாற வச்சிருக்கலாமேய்யா... அத்தனையும் கொட்டிண்டுட்டு, இந்தத் தொந்தி கவுத்து வச்ச வெந்நீர் அண்டாவாட்டம் சாதுவா இருக்கே ஓய்..!” அவரது பெருத்த வயிற்றை மெல்லக் குத்தி அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தேன்.

எண்ணிக்கையின் பிரம்மாண்டம் அவருக்கு புரிந்ததோ, இல்லையோ வழக்கமான அசட்டுச் சிரிப்பை உதிர்த்து, தன் வயிற்றைத் தடவிக் கொண்டே, “இருக்கும். எத்தனையோ நூறு வருஷமா இந்த அக்ரஹாரத்து பிராம்மணா அத்தனை பேரையும் எரிச்ச ஸ்மசானம், எல்லாரையும் பஸ்மமாக்கி ஜீரணிச்சுட்டு இன்னும் அப்படியே தானே இருக்கு?” என்றார்.
அவர் பேச்சு தொணி சட்டென்று வித்தியாசமாகப் பட்டது. சுண்டலைக் கையில் கொட்டி, கொஞ்சம் வாயில் போட்டு மென்றுகொண்டே கேட்டேன், “கடோத்கஜய்யரே, ஏன் நீர் படிக்கலை? உங்காத்துல உம்மை பாடசாலைக்கு அனுப்பலியா?”

“ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு குறையும் வைக்கல. மொதல்ல ரகுநாதைய்யர் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவச்சா. அங்கபோயித் தூங்கினேன். நமக்கு மூளை வயித்திலன்னா இருக்கு? மண்டைல ஒன்னும் ஏறலை. ரகுநாதைய்யர் உன் சம்பளமும் வேண்டாம், நீயும் வேண்டாம்னு துரத்தி விட்டுட்டார். அப்புறம் பூணூலப் போட்டு சோழவந்தான் பாடசாலைல சேத்துவிட்டா. ஒரு மாசம் கூட இல்லை. ராத்திரியோட ராத்திரியா ஆத்தங்கரைல இறங்கி இக்கரைக்கு நீந்தி ஆத்துக்கு வந்து திண்ணைல படுத்துண்டுட்டேன். அப்புறம் ரெண்டு வருஷம் சும்மா சுத்திண்டு இருந்தேன். சரி இங்க விட்டாத்தானே ஒடி வந்துர்றான்னு சொல்லிட்டு கும்பகோணம் ராஜா பாடசாலைல கொண்டுபோய்ச் சேர்த்து விட்டா. அங்க பதினாலு வயசாயிடுத்து சேத்துக்க முடியாதுன்னு யோஜிச்சா, கைல கால்ல விழுந்து எங்கப்பா சேர்த்துவிட்டார். உங்க தாத்தாவும் அப்போ அங்க தான் படிச்சுண்டிருந்தார். அவர் பெரிய கட்சி, நான் பாத்தாலே பயந்து ஓடிடுவேன். ரெண்டு மாசத்தில அவாளே ஆத்துக்கு என்னை பத்திரமா திருப்பி அனுப்பி வச்சுட்டா!” இரண்டு உள்ளங்கைகளாலும் தொடையைத் தட்டிக்கொண்டு குதூகலமாகச் சிரித்தார்.

“நீர் என்ன ஓய் பண்ணினீர்?”

“சின்னப் பசங்களையெல்லாம் கூட்டிண்டு ராத்திரி சுவரேறிக் குதிச்சு பக்கத்து கொட்டாய்ல பாய்ஸ் கம்பெனி நாடகம் பார்க்க கூட்டிண்டு போனேன். அங்க இருந்தா எல்லாரையும் கெடுத்துக் குட்டிசுவரா ஆக்கிடுவேன்னு பயந்துண்டு அனுப்பிச்சுட்டா. அவ்வளோதான்!”.

“அப்புறம்?”

“அப்புறம் என்ன அப்புறம்? மறுபடியும் ஊர்ல சும்மா தின்னுட்டு, அடிதடி வம்புன்னு சுத்திண்டு இருந்தேன். ரெண்டுமூணு வருஷம் போச்சு. நான் நன்னா கருகருன்னு கட்டுக்குடுமியோட வாட்ட சாட்டமா இருப்பேன். ஒரு தடவை மட்டப்பாறைல எப்படியோ அம்மையநாயக்கனூர் ஜமீந்தார் பையன் பழக்கமானார். என்னை ரொம்ப்ப் பிடிச்சுப் போயிடுத்து. நான் தான் அவருக்கு சேக்காளி அப்புறம். குடுமிய அறுத்தெரிஞ்சுட்டு கிராப்பும், மீசையும் வச்சுண்டு சட்டை போட்டுண்டு வந்தேன். எங்கப்பா தலைல அடிச்சுண்டு, அக்ரஹாரமெல்லாம் பொரண்டு பொரண்டு அழுதார். ஆத்தில காலவைக்கப்படாதுன்னு விரட்டினார். அம்மா எவ்வளவோ கெஞ்சினா. நான் திரும்பிக்கூட பாக்காம அம்மையநாயக்கனூர் போயிட்டேன். அப்புறம் ஜமீந்தார் வீட்டுலேயே தங்கிட்டேன். அவரோட வில்லு வண்டில ஏறிண்டு நிலக்கோட்டைக்கு சேவல் சண்டை, மதுரைக்கு கச்சேரி, டிராமா, டான்ஸுன்னு சுத்தாத இடம் பாக்கி கிடையாது. திடீர்னு ஒருநா அப்பா தவறிப்போயிட்டார். என்னை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியாம வேறவழியில்லாம கோவிந்தாக் கொள்ளி போட்டுட்டா. ஒரு மாசம் கழிச்சு மாப்ளைய்யர் தான் எதேர்ச்சையா சின்ன ஜமீந்தார் கூட என்னை வத்தலக்குண்டு காளைவண்டிப் பந்தயத்துல பாத்துட்டு தகவல் சொல்லி கையோட ஊருக்கு கூட்டிண்டு வந்தார். எங்கம்மா என்னை அக்ரஹாரத்தில இந்தக் கோடீலேர்ந்து அந்தக் கோடிவரைக்கும் வெளக்கமாத்தாலயே துரத்தி துரத்தி அடிச்சு, கடைசில என் காலப் பிடிச்சுண்டு ‘இனிமே ஆத்தவிட்டு எங்கேயும் போகதப்பா. அம்மாக்கு கொள்ளி போடவானும் இருப்பா’ன்னு கதறி அழுதா.”

      நிறுத்திவிட்டு இறுக்கமாக குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவேண்டாம் என்று நினைத்துப் பேசாமலிருந்தேன். அவர் இன்று எல்லாவற்றையும் கொட்டும் மனநிலையில், நான் கேட்காவிட்டாலும் பேசுவார் போல இருந்தார். அவரே தொடர்ந்தார்...

“சொந்த வீடும், கொஞ்ச நிலமும், நகை, பாத்திரம் பண்டம்னு இருந்தது. சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லை. என் தீனி தான் உனக்குத் தெரியுமே... ஊர் மேய்ஞ்ச உடம்பு இல்லையா..? ஒரு வேலையும் செய்ய வணங்காம பேய்த்தீனி தின்னுண்டு, தடிமாடு மாதிரி உடம்ப வளர்த்துண்டு திரிஞ்சேன். அக்ரஹாரத்தில ஒரு பிராம்மணனுக்கும், ஏன் ஊர்ல ஒரு சேர்வானுக்கும் கூட அப்படி கட்டுமஸ்தான உடம்பு கிடையாது. கொஞ்சம் கொஞ்சமா பாத்திரம், பண்டம், நகைன்னு விக்க வேண்டிவந்தது. அக்காவுக்கு வரன் பார்த்துண்டிருந்தா அம்மா. நான் ஒரு பக்கம் இஷ்டத்துக்கு சாமானையெல்லாம் எடுத்து வித்து டிராமா, டான்ஸ்ன்னு செலவழிச்சேன்.  ஒன்னுமே சொல்லாம பொறுத்துன்டு இருந்தா அம்மா. பகலெல்லாம் திண்ணைல மல்லாக்கப் படுத்து, கால் மேல கால் போட்டுண்டு சீட்டி அடிச்சுண்டு இருப்பேன். அம்மா தெவசம், திங்கள்னா யாராத்துக்காவது சமைச்சுப் போடப் போவா. அக்ரஹாரத்தில யாராத்தில செம்மண்ணிட்டு கோலம் போட்டாலும் அங்க தான் அண்ணிக்குப் பூரா இருப்பேன். வேற ஒரு தொந்தரவும் பண்ணமாட்டேன், கடைசிப் பந்தியில தனியா பெரிய இலையைப் போட்டுண்டு உட்கார்ந்துக்குவேன். சும்மா சொல்லக்கூடாது, ஒருத்தர் கூட முகம் சுழிச்சுண்டு சாதம் போட்டதில்லை. பாவம் சமையக்காரனும், பரிசாரகனும் தான் ‘பக்பக்’னு பாத்துண்டு இருப்பான்கள். ஒரு ஆடி மாசம் வயித்துக்கு வகையா சாப்பாடு கிடைக்காம ஆத்திரமா வந்தது, அக்கா கல்யாணத்துக்கு சேர்த்துன்டு இருந்த காசையெல்லாம் துடைச்சு எடுத்துண்டு நேரா மதுரைக்குப் போனேன். ஒரு வாரம் மூக்குப் பிடிக்கத் தின்னு, கச்சேரி, நாடகம்னு பார்த்துட்டு காசு தீர்ந்து போனதும் ஆத்துக்குத் திரும்பி வந்தேன். அழுது வத்திப்போன முகத்தோட அம்மா எலிக்குஞ்சு மாதிரி ஒடிவந்து என் மேல மோதிப் பிறாண்டினா, இந்த ராக்ஷனை ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சாளோ என்னமோ அமைதியா, ‘எனக்குக் கொள்ளி போடவானும் நீ வேணும்னு நினைச்சுத் தான் பொறுத்துண்டு இருந்தேன். எங்க ரெண்டு பேருக்குமே உயிரோட கொள்ளி போட்டாச்சு. உன் வேலை முடிஞ்சாச்சு, இனிமே இங்க நிக்காத போயிடு’ ன்னா.  கோபத்துல அம்மாவப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளி விட்டுட்டு அப்பவே ஆத்தவிட்டுப் போயிட்டேன்”

       இவர் நிப்பாட்டுவது போல் தெரியவில்லை. என்னைப் பார்க்கவே இல்லை. வேறு யாருக்கோ சொல்வது போல குளத்தையும், வானத்தையும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். கரிய முகத்தில் ஒரு பித்துக்களை ஏறியது போலத் தோணியது. எனக்கு கொஞ்சம் பயமயிருந்தது. நான் விளையாட்டாக நக்கல் அடித்து பேசும் சோம்பாயே போதும் என்றிருந்தது. வேறு எதையாவது சொல்லிப் பேச்சை மாற்றும் எண்ணத்துடன், 
“ஓய் ரவை.. நீர் தான் அந்தக்காலத்துல நம்ப அக்ரஹாரத்திலேயே பெரிய மன்மதக்குஞ்சாமே? குருக்கள் மாமா சொன்னார். அதையெல்லாம் சொல்லாம டபாய்க்கிறீர் பாத்தேளா? அந்த சிவகங்கை சமாஜாரத்தை எடுத்து விடும்!” என்று  அவர் வேட்டியை பிடித்து இழுத்தேன். அது அவிழ்ந்தது. வழக்கமான சிரிப்பு இல்லை. அப்படியே வானத்தைப் பார்த்தபடியே இருந்தார். “ஆமாம் ஆத்தை விட்டு வெளியேறி நேரா சிவகங்கைக்குத்தான் போனேன்”. இப்போது அவர் முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது, பற்கள் தெரிந்தது.

சிரிப்பினூடாகவே பேசினார், “இந்தக் காலத்து சினிமாக்காரியெல்லாம் என்ன அழகு? வனஜா பட்டுபுடவை கட்டிண்டு, ஜிமிக்கியும், பேசரியும், காசு மாலையும், முத்து மாலையும், பவழ மோதிரமும், வங்கியும், ஒட்டியானமும் போட்டுண்டு, ஜல்ஜல்னு கொலுசுச் சத்தத்தோடு வீட்டை விட்டு இறங்கினாள்னா சிவகங்கை மொத்தமும் புருஷா பொம்மனாட்டி பேதமில்லாம அப்படியே ஸ்தம்பிச்சு போய் பார்ப்பா. அவளுக்கு சமமா சதிராட மதுரை ஜில்லாவிலேயே ஒருத்தியும் கிடையாது. சின்ன ஜமீந்தாரோட போனபோதே அவளத் தெரியும். அந்த அசடுக்கு லட்சாதிபதி ஜமீந்தாரவிட, பைசாப் பிரயோஜனம் இல்லாத இந்தக்  கருமுண்டம் மேல தான் பைத்தியம். ஸ்வாமீ..ஸ்வாமீன்னு பின்னாலேயே சுத்தி சுத்தி வருவாள். என்னை அப்படிப் பாத்துண்டாள். வெந்நீர்ல குளிச்சுட்டு, மாரெல்லாம் சந்தனம் பூசிண்டு, பட்டு வேஷ்டி என்ன, சில்க் ஜிப்பா என்ன, அத்தர் என்ன, மைனர் செயின் என்ன, யானை வால் மோதிரமென்ன.... ஒரு குட்டி ராஜா மாதிரின்னா இருந்தேன்!. நான் சாதாரணத் தட்டுல சாப்பிடுறதுக்கு சம்மதிக்கவே மாட்டா. வெள்ளித் தாம்பாளத்தில தான் சாப்பிடனும், வெள்ளிக் கூஜால தான் பால் குடிக்கனும். பஞ்சு மெத்தையில தான் படுக்கை. என்னத்துக்கு என்னைக் கட்டி அப்படித் தீனி போட்டாளோன்னு எனக்கும் இன்னைக்கு வரைக்கும் புரியலை. என்னக் கண்டாலே எல்லாப் பயலும் பயந்து ஓடுவான்கள். ஒருத்தன் அவ வீட்டுப் பக்கம் வர மாட்டான். ஒரு வருஷம் ராஜபோகமா இருந்தோம். ஒரு நாள் பக்கத்தில ஒரு பண்ணையார் கூண்டு வண்டிய அனுப்பி இவளைக் கூட்டிண்டு வரச்சொல்லி ஆளனுப்பிச்சான். எனக்குத் தெரியாம சத்தமில்லாம கிளம்பினவள எதேர்ச்சையா பாத்துட்டேன். வெறி வந்தவனாட்டமா அவள அடிச்சு துவம்சம் பண்ணினேன். கோச்சுண்டு அவ வீட்டை விட்டு கிளம்பி வெளில இறங்கினேன். அப்பவும் நடுத்தெருவில, என் காலைப் பிடிச்சுண்டு, ‘தெரியாமப் பண்ணிட்டேன் என் ராஜா, என்னை விட்டுட்டு போகாதீரும். கல்யாணம் பண்ணி, இருக்கிறதை வச்சு நிம்மதியா வாழுவோம். உங்க அடிமையா காலம் பூரா இருப்பேன். என்னை விட்டுட்டுப் போயிடாதீரும் ஸ்வாமீ’ ன்னு கெஞ்சி அழுதா. அப்படியே எட்டி உதைஞ்சுட்டு திரும்பிப் பாக்காம வந்துட்டேன். ஆனா சும்மா உட்காரவச்சு சாப்பாடு போட்டவளை, ஒரு உபகாரமும் இல்லாம உக்காந்து தின்னுட்டு அடிக்கிறதுக்கும், ஆளுறதுக்கும் எனக்கு என்ன உரிமை இருக்கு? ஹ்ம்ம்.. அதெல்லாம் அப்போ எங்கே தோணித்து? சாப்பிடுவேன், கோச்சுப்பேன். அவ்வளவு தான்”

      மறுபடியும் சிரிப்பு மங்கிப் பித்துக்களை படர்ந்தது. அசையாமல் இருந்தார். அவரை யோசிக்கவிடாமல் உடனே, “என்ன ஓய், பொழைக்கத் தெரியாத மனுஷனா இருந்திருக்கீர்! சரி, அப்புறம் என்ன பண்ணினீர்?” என்று அடுத்து அவரை நகர்த்தினேன்.

“அப்படியே கோயில், குளம், சத்திரம், சாவடி, மடம்னு சோறு போட்ட இடத்திலேயெல்லாம் தங்கினேன். அப்பவும் சாப்பாட்டுக்கு குறை இல்லை. ஒரு மலையாள மந்திரவாதி என்னைப் பாத்துட்டு, ‘உன் உருவத்துக்கும், லட்சணத்துக்கும் மாந்திரீகம் கத்துண்டா பெரியாளா வருவே. என் கூட வர்றியா?ன்னான். சோறு கிடைச்சா சரி, எங்க இருந்தா நமக்கென்னனுட்டு அவன் கூட கேரளாவுக்குப் போனேன்”

“அப்படி வாரும் விஷயத்துக்கு.. அங்க நன்னா ஜிலுஜிலுன்னு ஒரு கேரளாக் குட்டிய புடிச்சுட்டீராக்கும்?” வேண்டுமென்றே உரக்கச் சிரித்தேன்.

“எல்லாம் சொல்லிக் கொடுத்தான். அவன் கூடவே ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷம் இருந்திருப்பேன். நன்னா வயிறு நிறையா மட்டையரிசிச் சாதம் போட்டான். வித்தையை சொல்லிக் கொடுத்தான். நன்னாக் கத்துண்டதும் என்ன விடாம பூதத்தைக் கட்டி வேலை வாங்கற மாதிரி சதா போட்டு பிராணனை வாங்கிண்டு இருந்தான். கோபத்தில ஒரு நாள் அந்த மந்திரவாதியை அடிச்சு தூக்கி குளத்தில எறிஞ்சுட்டு, ஜோலியப் பாத்து போயிண்டே இருந்துட்டேன்” சொல்லிவிட்டு சாதாரணமாக என் கையைப் பிடித்துக்கொண்டார்.

      எனக்கு அடிவயிற்றில் ஜிலீர் என்றது. ஐயையோ... ஆளைத் தெரியாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டேனோ? மலையாள மாந்திரீகம்.... சொல்லிக் கொடுத்த மந்திரவாதியையே அடித்து குளத்தில் எறிந்தது எல்லாம் காட்சியாக மனதுக்குள் விரிந்த போதே சிறுநீர் முட்டிக்கொண்டு வருவது போல இருந்தது. கையை மெதுவாகப் பிடியிலிருந்து உருவ முயன்றேன். கிழவனுக்கு அசாத்தியமான பலம் இருப்பது அப்போது தான் தெரிந்தது. பயத்தைக் காட்டிக்கொள்ளாமல், “ஓய் ரவை, சும்மா புளுகு மூட்டையை அவுத்து விடாதீரும். நீர் இரும், நான் சுச்சா போயிட்டு வந்துடறேன்” என்றேன். “அம்பி, கோயில்ல எங்கே போறது? இந்த புளியோதரையையும், சுண்டலையும் காலி பண்ணு. இன்னும் கொஞ்ச நாழி, அப்படியே கிளம்பிப் போகவேண்டியது தான்”. விடவில்லை, பேச ஆரம்பித்துவிட்டிருந்தார்.

“அப்புறம் அங்கேர்ந்து பரதேசியா ஒவ்வொரு ஊரா இந்தியா பூரா சுத்தினேன். கர்நாடகா, ஆந்திரம், வடக்க பண்டரிபுரம், மதுரா, அலகாபாத், காசி, கேதாரம், பதரி, ரிஷிகேசம், கல்கத்தான்னு ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷம் தாடியும், முடியுமா சுத்தினேன். திடீர்னு செகந்திராபாத்தில யாரோ என் பேர் சொல்லிக் கூப்பிடறா மாதிரி தோணித்தேன்னு திரும்பிப் பாத்தா எங்கக்கா விசாலம். என்னைக் கட்டிண்டு, ‘என்னடா கோலம் இது? அம்மா கோபத்தில சொன்னாங்கிறதுக்காக ஆத்த விட்டு ஓடிப்போறதாடா? நீ போனப்புறம் கவலைப்பட்டே செத்தாடா அம்மா. கடைசியா அவ ஆசைப்பட்டது உனக்கு வயிறு நெறையா சாதம் போட்டு, உன் மடியில பிராணனை விட்டு, உன் கையால கொள்ளி வாங்கிண்டு போய்ச்சேரனும்னு தாண்டா’ன்னு சொல்லி ரோட்லயே அழறா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சாவுன்னா என்னன்னு புரியவும் இல்ல. நான் சாவையே பாத்த்தில்ல அம்பி” என்றார்.

      இப்போது முகத்தில் பித்து மறைந்து கண்களில் ஒரு சோகம் குடிகொண்டது போல, புருவத்தைச் சுருக்கிக் கொண்டிருந்தார். எனக்கு சற்றே ஆசுவாசமாக இருந்தது. நானே பேச்சை ஆரம்பித்தேன், “அக்கா எங்கே அங்க வந்தா?”

“அவாத்துக்காரருக்கு ரயில்வேயில உத்யோகம். குழந்தையே இல்லை அவளுக்கு. என்னை ஆத்துக்குக் கூட்டிண்டு போனா. அம்மிக் குழவியாட்டமா நன்னா கருகருன்னு, ஆறடிக்கு, பனந்தடி மாதிரி நான் போய் நின்னவுடனே அத்திம்பேர் பயந்து நடுங்கிப்போயிட்டார். அவர் என்னை அதுக்கு முன்னப் பார்த்ததே இல்லையே. பாவம் ரொம்ப நல்ல மனுஷன். எல்லாரும் நான் செத்துப் போயிட்டேனோன்னு நினைச்சுண்டு இருந்திருக்கா. எங்கம்மா மாதிரி எங்கக்கா என்னை கவணிச்சுண்டா. பிள்ளையில்லாத குறைக்கு என்னைப் பிள்ளை மாதிரி வயித்துக்குப் பாத்துப் பாத்துப் பண்ணிப் போட்டு கூடவே வச்சுண்டா. அங்கேர்ந்து அப்புறம் கல்கத்தாவுக்கு அத்திம்பேரை மாத்தினா. அவாகூடவே நானும் போனேன். அவாத்திலேயே ஒரு அஞ்சுபத்து வருஷம் இருந்திருப்பேன். ஒருநாள் அத்திம்பேருக்குப் பிடிக்கும்னு அக்கா பாகற்கா பிட்லை பண்ணிருந்தா. நாந்தான் இருக்கேனே, பகாசுரன், ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் கொட்டிண்டுட்டேன். மத்தியான்னம் ஆபீஸ்லேர்ந்து சாப்பாட்டுக்கு ஆசை ஆசையாய் வந்தவர் பிட்லை தீர்ந்து போச்சுன்னு கோபத்தில, ‘புள்ள இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையான்னா இருக்கு’ ன்னு அக்காவைச் சத்தம் போட்டார். எனக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்து, நேரா சமயக்கட்டுக்குப் போய் அப்படியே சமைச்சு வச்சிருந்ததை எல்லாம் தள்ளிக் கீழ கொட்டினேன். அக்காவுக்குத் தான் என்னைப் பத்தித் தெரியுமே, என்னைக் கட்டிண்டு விடாம அழுதா. அவ ஆத்துக்காரரோட சண்டை போட்டு என்கிட்ட மன்னிப்புக் கேக்கச்சொன்னா. அந்த பிராம்மணனும் பாவம், சும்மாச் சொல்லக் கூடாது என் கையைப் புடிச்சுண்டு மன்னிப்புக் கேட்டார். ரெண்டு பேரையும் பூச்சியத் தட்டி விடறமாதிரி உதறிட்டு பையைத்தூக்கிண்டு கிளம்பிட்டேன்”.

      எனக்கு ஆயாசமாக இருந்தது. இவரை ஏண்டா இன்று கிளப்பி விட்டோம் என்று தோணியது. நீண்ட நேரமாக கல்படியில் உட்கார்ந்து பின்பக்கம் குளிர்ந்து போயிருந்தது.  அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன், சனியன் பிடிச்ச மழை இன்னைக்கு வந்து தொலைச்சா என்ன? என்று வெறுப்பாக இருந்தது. மேகம் விலகி, சுற்றி பெரிய வட்டக் கோட்டை வரைந்து முழுநிலா அமைதியாக எங்களுடன் கதை கேட்டுக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டேன். 

“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வைக்க முடியுமா? அதே கதை தான். மறுபடியும் ஊர் ஊரா சுத்தினேன். மாந்திரீகம், மைவித்தைன்னு கொஞ்ச வருஷம் ஓடித்து. வகைவகையா சாப்பாடும், கள்ளும், கஞ்சாவும், பொண்ணும், காசும் வேணுங்கிறதெல்லாம் அவனவன் கால்ல கொண்டுவந்து கொட்டி நமஸ்காரம் பண்ணி, கையைக் கட்டிண்டு காத்து நிப்பான். அடுத்தவன் குடியக்கெடுக்கிறதுக்கு ஒவ்வொருத்தனும் எவ்வளவு கஷ்டப்பட்டு, உயிரைக்கொடுத்து வெறியா உழைக்கிறான் தெரியுமா? ஹ்ஹெஹ்ஹெ... அப்போதான் உடம்பு இன்னும் ஒரு சுத்து பெருத்து ‘திண்’னுனு ஆயி, மினுமினுன்னு மைக்கருப்பா ஆனேன்.  காலாபாபான்னா போதும், ஒருத்தனும் எதிர்ல நின்னு பேச பயப்படுவான்”.

      நான் பொறுமை இழந்தேன். இவரைக் கிறுக்கன் என்று நினைத்தால், இவர் நம்மைக் கிறுக்கனாக்குகிறார். மாயஜாலக் கதைகள் பொய் என்று தெரிந்தாலும் கேட்கப் பிடிக்கும், ஆனால் அதில் வருபவரே எதிரே உட்கார்ந்து சொன்னால் எரிச்சலாக இருக்காதா? இவரது பீற்றலுக்கு முடிவுகட்ட வேண்டுமென்று நினைத்தேன். குரலில் கொஞ்சம் கடுமையை வரவைத்துக் கொண்டு, “ஓய்..ரவை, நிப்பாட்டும்.  என்னை என்ன ராக்கமான்னு நினைச்சீரா உம்ம புருடாவை எல்லாம் வாயப் பொளந்துண்டு கேக்குறதுக்கு? கொஞ்சம் விட்டாக்க, சும்மா அளந்து விட்டுண்டே போறீரே உம்ம இஷ்டத்துக்கு? நீர் பாதிக்கதையைத் தான் சொல்லிருக்கீர். இதுக்குள்ளயே வருஷத்தை கூட்டினா உமக்கு எண்பது வயசாடுத்து. மீதியையும் சொல்லி முடிக்கும் போது நூத்தம்பது வயசாயிடும் போல இருக்கே? விட்டா மஹாவதார் பாபாஜிக்கு போட்டியா வந்துடுவீர் போல இருக்கே?” என்றேன். அவர் கவலையே படவில்லை. “என்ன அம்பி நான் போற எடத்துக்கெல்லாம் என்ன வாட்ச்சா கட்டிண்டு போனேன்? நாளு, நக்ஷத்ரம், வருஷம் எல்லாம் குறிச்சுக்கிறதுக்கு? தோணின நேரத்துக்கு, தோணின எடத்துக்கு போறவன். எனக்கு ஏது காலம், தேசமெல்லாம்? நீ படிச்சவன், சொல்றதை வச்சு குத்துமதிப்பா ‘ஒரு இத்தனை வருஷம்’னு நீயா புரிஞ்சுக்க வேண்டாமோ? நீ நம்பலேன்னா விடு, நான் கெளம்பறேன்” என்றபடியே மூடியைத் தேடி எடுத்து தூக்குவாளியை மூடினார். எனக்கென்னமோ சட்டென்று அவர் அப்படிச் சொன்னது நான் ஒரு அதீதமான வாழ்க்கைக்கதையை கேட்டுப் புரிந்து கொள்ளும் பக்குவமில்லாதவன் போன்ற தோற்றத்தைக் கொடுக்கவே, அதை மாற்றும் விதத்தில், “சரிங்கானும், ரொம்ப பிகு பண்ணிக்காமச் சொல்லும்” என்று தூக்கைப் பிடுங்கித் தள்ளிவைத்தேன்.

வெகு இயல்பாக விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார், “அப்படியே ஊர் சுத்தி சுத்தி ஹிமாச்சலத்தில கங்கைக் கரையோரமா எதோ ஒரு கிராமத்துக்கு வந்தேன். பகலெல்லாம் காட்டுக்குள்ள பிசாசாட்டமா சுத்திண்டு இருந்தேன். சாயாங்கால் வேளை, வாய் நமநமன்னது, ஊருக்குள்ள போனா ஏதாவது சத்திரத்தில சாப்பாடு கிடைக்கும்னு  நடக்க ஆரம்பிச்சேன். மளமளன்னு இருட்ட ஆரம்பிச்சுடுத்து, பாதைய தவறவிட்டுட்டேன். நடந்துண்டே இருக்கேன், திரும்பத் திரும்ப வெறும் பாறையும் மரமுமா அடர்ந்த காடு. ஒரு பொட்டு வெளிச்சமும் இல்லை. மனுஷா நடமாட்டமே இருக்கிற மாதிரித் தெரியலை. திடீர்னு அடிவயித்துல எதோ நெருப்புப் பிடிச்சா மாதிரி ஒரே எரிச்சல், என்னன்னே புரியலை. நேரம் ஆக ஆக எரிச்சல் கூடி, வயித்தப் புரட்டி, நாக்கெல்லாம் வறண்டு இழுக்கறது. தலை பாரமே இல்லாத மாதிரி லேசாகி, படார்னு தலையே வெடிச்சு இல்லாமப் போனா மாதிரி வெறும் கறுப்பா என்னமோ சுத்தறது. நான் நடக்கறேன்னு நினைச்சுண்டிருந்தேன், ஆனா ஒரே எடத்திலேயே கிடக்கிறது மாதிரி இருந்தது. அப்புறம் ஒன்னுமே ஞாபகம் இல்லை. எவ்வளோ நேரம் அப்படி இருந்தேன்னு தெரியலை, நினைவு தெளிஞ்சு பாக்கறச்சே ஒரு சின்னக் குடிசைக்குள்ளே இருந்தேன். எண்ணை விளக்கு வெளிச்சத்தில ஒரு சின்னப் பெண் குழந்தை மட்டும் மங்கலா தெரிஞ்சா. நான் மெதுவா எழுந்து உட்கார்ந்ததும் மறுபடியும் அடிவயித்தில் அதே தீ குபுகுபுன்னு எரியறது. அந்த பொண்ணு எழுந்து ஓடிப்போயி ஒரு வயசான கிழவியைக் கூட்டிண்டு வந்தா. ஒரு ஈயத்தட்டுல சப்பாத்தி வச்சிருந்தா, அந்த வாசனை வந்ததும் பாய்ஞ்சு அதைப் பிடுங்கி, பிய்ச்சுத் திங்கக் கூடத் தோணாம அப்படியே வாயில சுருட்டி அடைச்சுண்டேன். ஒன்னு தின்னுட்டு இன்னொன்னு திங்கப் பொறுமையில்ல, அடுத்த சப்பாத்திய வாயில தினிக்கப் பாத்தேன். வறண்ட தொண்டையில இறங்காம விக்கல் வந்து மூச்சு முட்டித்து. எத்தனை சப்பாத்தி மொத்தம் இருந்ததோ தெரியாது, வயித்தில தீ அனைஞ்சுட்டா மாதிரி ஒரு சாந்தம். அந்தத் தீ தான் பசிங்கிறது அத்தனை வருஷமா எனக்குத் தெரியாது அம்பி. அன்னிக்குத் தான் வாழ்க்கையில முதல் தடவையா எச்சக்கலைக்கு அடிச்சுக்கிற தெருநாய் மாதிரி தொண்டை அடைக்க வேக வேகமா தின்னேன். மறுபடியும் படுத்துண்டேன், தூக்கம் வரலை. அந்தக் கிழவியும், பொண்குழந்தையும் வெறும் ஜலத்தைக் குடிச்சுட்டு படுத்துண்டா. அந்தக் குழந்தை பாதி ராத்திரி எழுந்துண்டு அழுதா, கிழவி ஜலத்தைக் கொடுத்து சமாதானப்படுத்தி மடியில போட்டுண்டு தட்டித் தூங்க வச்சாள். நான் தூங்கிட்டேன்னு நினைச்சுண்டு அங்கேயிருந்த காளி படத்துக்கு முன்னால அழறா அந்தக் கிழவி, ‘அம்மா நான் கஷ்டப்படனும்னு நீ ஆசைப்பட்டா, அதை மீறி, எனக்கு சௌக்கியத்தைக் கொடுன்னு பிரார்த்தனை பண்ண எனக்கு என்ன உரிமை இருக்கு? எனக்கு மேல மேல கஷ்டத்தைக் கொடுத்து சோதனை பண்ணினா, நான் மாறிடுவேன்னு நினைச்சியாம்மா?  நீ எப்படி சோதிச்சாலும் நான் உன்கிட்ட ஒன்னும் கேட்கமாட்டேன். ஆனா இந்த சன்னியாசிக்கு வயிறு ரொம்ப சாப்பாடு போட முடியாத வருத்தம் மட்டும் இருக்கு. எப்பவும் இவருக்கு பசின்னு தெரியறதுக்கு முன்னாடி சாப்பாடு கொடுத்து காப்பாத்தும்மா” ன்னு சொல்லிண்டிருந்தா. நான் உடைஞ்சு சுக்கு நூறாயிட்டேன் அம்பி. அவ யாரு? எனக்கு அவ என்ன வேணும்? பரம தரித்திரத்தில இருக்கிற அவளுக்கு அவளோட பசிக்கு வழிகேட்கத் தோணலை. எங்கிருந்தோ வந்த ஒரு பரதேசிக்காக அவளோட காளிமா கிட்ட அழறா. ஏன்னா அவ அம்மா, அவ சகோதரி, அவ பார்யா, அவ பொம்மணாட்டி அம்பி. கம்பளிய உதறிட்டு அவ கால்ல போய் விழுந்தேன். என் அம்மா, அக்கா, வனஜா, என் வாழ்க்கை முழுசும் பிரதிபலன் பாக்காம சாப்பாடு போட்ட எல்லா பொம்மனாட்டியையும் என் மனசில தியானிச்சு அழுது அவ காலை அலம்பினேன். நான் வாழ்நாள்ல முதலும் கடைசியா அழுதது அப்போ தான். ஒருத்தருக்கும் ஒரு இம்மி கூட நன்றி இல்லாம, கோபம் வந்தா எட்டி உதைச்சுட்டு, எங்க போனாலும் சோறு கிடைக்கும்னுட்டு பெருமையாத் திரிஞ்ச மகாபாபி நான். அந்த கிழவி, ‘பாபா என் கால்ல விழறீங்களே’ன்னு பதறினா. நான் என் அம்மா கால்ல தான் விழறேன்னு சொன்னேன். ஆமாம், என்னை மறுபடியும் இந்த பூமியில புது மனுஷனா பெத்த அம்மா அவள்”

      அவர் முகம் மிகவும் தீவிரமான யோசனையில் இருப்பது போல இருந்தது. என்  கேள்வி அவரை சிதறடித்து விடுமோ என்று அஞ்சி மூச்சை அடக்கி அமைதியாக இருந்தேன். அவர் இனிமேல் சொல்வது எனக்காக இல்லை, தனக்குத் தானே சொல்லிக்கொள்வது என்று தோண்றியது.

“அப்போ திடீர்னு ஒரு எண்ணம் வந்தது, இந்தத் தீனி தானே நம்பள இப்படிப் பாடாப் படுத்தறது? எங்க போனாலும் சோறு கிடைக்கறதாலே தானே எல்லாரையும் தூக்கி எறிஞ்சுட்டுப் போகத் தோணறது? சடார்னு முடிவு பண்ணிட்டேன். மலையில உயர உயர ஏறிப் போயிண்டே இருந்தேன், ரிஷிகேசத்துக்கெல்லாம் மேல. வெறும் பனிக்காடு. குளிருன்னா சும்மா ஏப்பைசாப்பையான குளிரில்லை, சப்தநாடியும் உறைஞ்சு அடங்கி நின்னுடும். அங்கே செத்தது தான் சாகாம இருக்கும். மனுஷன் உயிரோட இருக்க முடியாது. ஒன்னு ராக்ஷசனா இருக்கனும், இல்ல தெய்வமா இருக்கனும். அப்போ தான் அங்க ஜீவிக்க முடியும். நான் தான் ராக்ஷசனாச்சே..ஹெஹ்ஹெஹ்ஹே.. பசியை ஜெயிச்சுட்டுத் தான் கீழ இறங்குவேன்னு சத்தியம் பண்ணிண்டேன். அங்க குகைகள்ள இன்னும் பெரிய பெரிய ஞானியெல்லாம் தபஸ் பண்ணிண்டிருக்கா அம்பி. அவாளுக்கு சேவகம் பண்ணினேன். அத்தனை வருஷம் எல்லா பெரிய க்ஷேத்திரத்திலேயும் சுத்திருக்கேனே ஒரு கோயிலுக்குள்ளயும் போனது கிடையாது, எந்த தெய்வத்தையும் கும்பிட்டதும் கிடையாது. பசின்னா என்ன தெரியாமலே வேளா வேளைக்கு வயிறு ரொம்ப சாப்பாடு கிடைச்சா அப்புறம் எதுக்கு ஸ்வாமிய தேடப்போறோம்? எனக்குத் தெரிஞ்ச ஒரே தெய்வம் அன்னம் தான். அத்தனை வருஷமும் தெரிஞ்சோ தெரியாமலோ உபாசனை பண்ணினது அதைத் தான். என் உபாசனா மூர்த்தியை ஜெயிக்கிறதுக்கு, அதுகிட்டயே வரம் கேட்டு தபஸ் பண்ணினேன். வெறும் பச்சிலையைத் தின்னுண்டு, அங்க இருந்த யோகிகளுக்கு சிஷ்ருஷை பண்ணிண்டு ஒரு பத்து முப்பத்திரண்டு வருஷம் இருந்தேன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார். “நான் கணக்குப் போடறதை அப்பவே விடுட்டேன். நீர் மேற்கொண்டு சொல்லும்” என்று நானும் மெல்லச் சிரித்தேன்.

“ஒருநாள் என் குருநாதர், ‘உனக்கு வேளை வந்தாச்சு. அம்பாள் க்ருபை பண்ணிட்டா. இனிமே இங்கே இருக்க வேண்டாம் காசிக்கு போ!’ ன்னு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சார். கிளம்பி காசிக்கு வந்தேன். அன்னபூரணி கோயிலுக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு பெரிய தர்மச் சத்திரத்தில பரிசாரகனா வேலைக்குச் சேர்ந்தேன். தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரிகாளுக்கு சாப்பாடு போடுற வேலை. ஒரு நாள், ஒரு துளிக் கூட அலுப்பு இல்லை, சந்தோஷமா செஞ்சேன். கார்த்தால ஆரம்பிச்சா பாதி ராத்திரி வரை ஜனங்கள் வந்துண்டே இருப்பா.  அசரவே மாட்டேன், உடம்புக்கு கொஞ்சம் கூட அசதியே இருக்காது. வாழ்க்கையில அப்போதான் அடுத்தவா சாப்பிடறதை பார்த்தே என் வயிறும் மனசும் நிறைஞ்சு போற ஆனந்தத்தை அனுபவிச்சேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்துண்டேன். நானே சமையல், முடிச்சுட்டு பரிமாறவும் ஓடி வந்துடுவேன். சாப்பிட்டவா எல்லாம் வயித்துக்குள்ள போன சாப்பாடு நன்னா ஜெரிச்சு, மனசு திருப்தியா பூப்போல ஆயிடுறதுன்னு சொல்லுவா. சன்னியாசிகள்லாம், ‘அன்னதாதா’ ன்னு பிரியமா கூப்பிடுவா ‘உனக்கு அன்னபூரணியோட பரிபூரண கடாக்ஷம் இருக்கு’ன்னு ஆசிர்வாதம் பண்ணுவா. ‘காலாபாபா’ங்கற பேர் ஒழிஞ்சு எல்லாரும் ‘அன்னதாதா’ன்னே சொல்ல ஆரம்பிச்சுட்டா. இன்னைக்கும் காசியில அன்னதாதான்னாத் தான் தெரியும்.  ஒரு இருபது முப்பது வருஷம் என் கையால எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜனங்களுக்கு பசியாற அன்னம் பரிமாறியிருப்பேன். அது தான் நான் பண்ணின மகாயாகம். வேறென்ன தெரியும் எனக்கு? படிப்பு உண்டா இல்லை பணம் உண்டா?”
      
      கையைக் கூப்பி நெஞ்சோடு சேர்த்து வைத்து கண்களை மூடிக்கொண்டார். பிரார்த்திக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு பூமொட்டு மலர்வது போல் நிதானமாக இமைகளைத் திறந்து நிலவைப் பார்த்தார். அப்படியே ஒரு நிமிடம் அசையாமல் இருந்தார். அவரையே உற்றுப்பார்த்தேன். என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஆழங்களில் அவர் நழுவி நீந்திக்கொண்டிருப்பதாகப் பட்டது. பின் மெல்ல மேலெழுந்து வருவது போல உடலை அசைத்துக் கொண்டார்.

“அந்த சமயத்தில தான் நம்ப பத்மநாப சாஸ்திரிகள் காசிக்கு வந்திருந்தார். எதேர்ச்சையா என்னைப் பாத்துட்டு அடையாளம் கண்டுபிடிச்சு, ஆச்சர்யப்பட்டுப் போயிட்டார். அது சரி, என்னையும் என் உருவத்தையும் நம்ப ஊர்க்காரா எத்தனை ஜென்மம் ஆனாலும் மறக்கும்படியா நான் ஆடியிருக்கேன்? சாஸ்திரிகள் அண்ணா தான், ‘நம்ப ஊர் அகிலாண்டேஸ்வரியும், மூலநாதரும் அங்க சோம்பாய் இல்லாம வெறும் வெள்ளைச் சாதத்தை சாப்டுண்டு இருக்காடா. எவ்வளவு மானியம், எவ்வளவு பிரசித்தம், எப்டி இருந்த கோவில்? இப்ப நல்ல நிவேத்யத்துக்கு வழியில்லாம இருக்கா அம்பாள். நீ வந்து நம்ப கோவில் மடைப்பள்ளிய பாத்துக்கோடா!’ ன்னு சொன்னார். இந்த நாட்டோட எல்லா பாகத்திலயும் ஆயிரக்கணக்கான மக்கள் கையால சாதம் வாங்கிச் சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது. நம்ப நாட்டோட எல்லா ஊர் ஜலமும், உப்பும் கரைஞ்சு என் ரத்தத்தில ஓடுறது. யாருக்குன்னு நான் நன்றி சொல்றது, யாருக்கு நான் என்ன திரும்பிச் செய்றது? சரி, சகல லோகத்துக்கும் படியளக்கறவ அவள். அவளுக்கும் நாம தான் அன்னதாதான்னு முடிவு பண்ணியிருக்கா போல. இதை விட வேற என்ன பாக்யம் வேணும் இந்த ஜன்மத்துக்கு? ஆரம்பிச்ச இடத்தில வந்து முடிக்கிறது தானே நியாயம்?”

      நெகிழ்ந்திருந்தார். மிகநீண்ட யாத்திரை முடிந்து வீடு வந்து சேர்ந்த நிம்மதியும், நிறைவும் இருந்தது. இப்போதும் என்னைப் பார்க்கவில்லை, நிலவையும் பார்க்கவில்லை. அப்பால் வெளியில் எதையோ பார்த்து அனுபவித்துக் கொண்டிருப்பவர் போலத் தெரிந்தார். ஒரு மெல்லிய தென்றல் குளத்து நீரின் குளுமையை அள்ளி வந்து மேலே பூசிக் கடந்து சென்றது. என் மனம் குளிர்ந்து அடங்கியது.

    தூக்குவாளிகளை எடுத்துக்கொண்டு எழுந்தேன். அவர் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டபடியே சொன்னேன், “பாத்து, மெதுவா எந்திரிங்கோ மாமா, நாழியாயிடுத்து ஆத்துக்குப் போகலாம்”.

- பிரகாஷ் சங்கரன்.


(*ரவை - இரவு, சோம்பாய் - கோயில் பரிசாரகர்)