Friday, July 18, 2014

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?
அறிதலில் பரவசமும், தன்னுணர்வின்/இருப்பின் இயல்பைக் குறித்த தேடலும் கொண்ட அனைவருக்கும் எழும் வினாக்கள் இவை. Transcendence என்கிற ஆங்கிலத் திரைப்படம் இக்கேள்விகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் புனைவு திரைப்படம். 2014, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் கதைத்தளத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.
transcendence
தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கும் கும்பலால் சுடப்படும் விஞ்ஞானி கேஸ்டர் ஒருமாதத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். கேஸ்டரின் உடல் அழிவதோடு அவரது தன்னுணர்வும், இருப்பும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமா? நேரடியான தத்துவ விவாதங்கள் இல்லாவிட்டாலும் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் எழுப்பிக்கொண்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தச் சிக்கலை அணுகி, தொழில்நுட்பமும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியில் ஒரு தீர்வைக் கண்டுகொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி கதையை கொண்டு சென்றிருக்கும் விதமே இந்தப் படத்தைச் சிறப்பானதாக ஆக்குகிறது.
கேஸ்டர் என்னும் ஆளுமை உயிர்வேதிப் பொருட்களாலான அவரது உடலா அல்லது அதனுள் உறையும் தன்னுணர்வா? இந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான பதில் ‘உடலல்ல, அவரது தன்னுணர்வு தான் அவர்’ என்பதே. தன்னுணர்வின் விளைவே அவரது சிந்தனைகள். பௌதிக இருப்பிற்குக் காரணமான மனித உடலில், சிந்தனைகளின் நிகழ்களமாக இருப்பது மூளை. மூளையில் சிந்தனைகள் மின்காந்த அலைகளாக செயல்படுகின்றது. ஆக, இந்த மின்காந்த அலைகளை -அவை இயங்குவதற்கு ஏற்ற இன்னொரு தளத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருந்தால், ஒருவரது தன்னுணர்விற்கு உடலைக் கடந்த இருப்பை அளிப்பது சாத்தியம். கேஸ்டர் ஏற்கனவே செய்திருந்த மற்றொரு ஆராய்ச்சியின் அடிப்படையில் அவரது மனைவியும், விஞ்ஞானியுமான எவலின் இன்னொரு நண்பரின் துணையுடன் இதைச் செய்கிறார். கேஸ்டரின் மூளையை மின்னணு இணைப்புகள் மூலம் குவாண்டம் கணிப்பொறியுடன் இணைத்து அவரது தன்னுணர்வை வெற்றிகரமாக மின்னணு சமிக்ஞைகளாக்கி இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.
உடல் அழிந்தாலும் கேஸ்டரின் தன்னுணர்வு கணிப்பொறிக்கு கடத்தப்பட்டதால் அழியாமல் இருக்கிறது. இங்கே அடுத்த கேள்வி எழுகிறது, புலன்களை இழந்த தூய தன்னுணர்விற்கு ஊடகம் இல்லாததால் இனி அறிதலும், இயக்கமும் சாத்தியமில்லையா? செயலற்று வெறுமனே எஞ்சி இருப்பது தான் அதன் ‘இருப்பா’? மறுபடியும் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது. உடலைக் கடந்த கேஸ்டரின் தன்னுணர்வு, இதுநாள் வரையிலான மனிதனின் அறிதல்கள் பதிவுசெய்யப்பட்ட தொகுப்புவலையான இணையத்தில் கலந்ததும் எந்தத் தடங்கலும் இன்றி அத்தனையையும் அறிகிறது. உண்மையில் உடலையும், புலன்களையும் இழந்தது அறிதலுக்கான முடிவற்ற சாத்தியங்களைத் திறந்துவிடும் வரமாகிறது!
மனிதனின் இருப்பு என்பது அவன் உடல் சார்ந்ததா அல்லது தன்னுணர்வு சார்ந்ததா என்னும் ஆழமான கேள்வியை அடித்தளமாகக் கொண்டு, தன்னுணர்வை உடலைக் கடந்து இருக்கச்செய்தல் என்ற இடத்திற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வந்ததும் கதை வழக்கமான ஹாலிவுட் பாணியில் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் எடுத்துக்கொண்டு வேறு திசையில் பயணிக்கிறது. கேஸ்டர் புதிய நேனோ துகள்களை உருவாக்கி, மருத்துவம், சூழியல் பாதுகாப்பு, உயிரியல், ஆற்றல் என அனைத்து துறைகளிலும் அசாத்தியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார். கண்முன் கணவன் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை தாங்கமுடியாததால், ஏதேனும் ஒருவகையில் அவரது இருப்பை நீட்டிப்பதே எவலினின் எண்ணம். கேஸ்டரின் தன்னுணர்வு இவ்வளவு வேகமாக அனைத்தையும் அறியும் என்பது அவளே கூட கொஞ்சமும் யூகித்திராதது. ஒருகட்டத்தில் அவளே கேஸ்டரை அஞ்சுகிறாள்.
ஹாலிவுட் அறிவியல் புனைவுத் திரைப்படங்களின் பொதுவழக்கம், அபாரமான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அந்த விஞ்ஞானியோ அல்லது அதிகாரத்தை விரும்பும் வேறு யாரோ அழிவுக்குப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். நாயகன் அந்த யாரோவையும் கூடவே அந்தக் கண்டுபிடிப்பையும் அழித்து நியூயார்க்கில் இருந்தபடியே உலகைக் காப்பாற்றுவார். டிரான்செண்டன்ஸ் நல்லவேளையாக அந்த ரட்சகப் பெரியண்ணனைக் கொண்டுவரவில்லை. மாறாக, தொழில்நுட்பம், தத்துவம் எல்லாவற்றில் இருந்தும் விலகி சாமான்யர்களின் உளவியலுக்கு, யதார்த்தத்துக்கு வருகிறது. சாமானியன் அறிவை அஞ்சுகிறான். அறிவாளியை உள்ளூர வெறுக்கிறான். அதற்காக அவன் உருவாக்கும் சமாதானங்கள்தான் அவனது இருப்பை நியாயப்படுத்தும். எல்லைகளற்ற அறிவு வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒருவேளை நன்மை செய்யக்கூடும் என்கிற ஒரு நல்லெண்ண வாய்ப்பே யாரும் தருவதில்லை, அவன் கண்டிப்பாக அழிவு சக்தியாகத் தான் இருப்பான் என்கிற பொதுப்புத்திதான் ஜெயிக்கிறது. கேஸ்டரின் காதல் மனைவி கூட ஒரு நம்பிக்கைக் கீற்றை அவனிடம் காட்டவில்லை. அவளே அவரை அழிப்பதற்கும் கூட துணை போகிறாள்.
படமாக்கலில் உள்ள சில தர்க்க ஓட்டைகள், இன்னபிற காரணங்களால் படம் பெரிய அளவில் வசூலில் வெற்றி பெறவில்லை. இன்செப்ஷன் முதலிய படங்களின் இயக்குனரான கிறிஸ்டோஃபர் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வாலி ஃபிஸ்டர் இயக்கிய முதல் திரைப்படம் இது. கிறிஸ்டோஃபர் நோலன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை படமாக்கப்படுவதற்கு முன்பே மிகச்சிறந்த திரைக்கதையாக பிரபலமானது. இவையெல்லாம் இப்படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தாலும், படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்ததில் இருந்து இப்படத்தினைக் குறித்த எனது ஆர்வத்திற்குக் காரணம் ஒரு சிறுகதை.
2001ம் ஆண்டில் ஜெயமோகன் எழுதிய ‘கரிய பறவையின் குரல்’ தான் அந்தச் சிறுகதை. விபத்தில் துண்டிக்கப்பட்ட தன் கால்கள் கண்ணெதிரே எரிக்கப்பட்டதைக் கண்டாலும், வெட்டி அகற்றப்பட்ட -இல்லாத காலில் வலியிருப்பதாக மிகத் துல்லியமாக உணரும் கதை சொல்லி, தன் மூளையில் வெட்டப்பட்ட கால் அழுத்தமான ஒரு உணர்வாக உயிர்ப்புடன் மிச்சமிருப்பதை உணர்ந்து துணுக்குறுகிறான். தொடர்ந்து சிந்திக்கிறான். கால் இல்லாத போது மூளையில் கால் அருவமாக முழு உணர்ச்சிகளுடன் எஞ்சியிருக்கும் என்றால், ஒவ்வொரு அங்கமாக வெட்டப்பட்டாலும், முழு உடலே இல்லாமல் ஆனாலும் மூளையை மட்டும் அழியாமல் பத்திரப்படுத்தினால் அதில் முழு உடலின் அமைப்பும், உணர்ச்சிகளும் அப்படியே இருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்தால், இந்த மூளையின் நரம்பணு வலையுடன் உரையாடும் மின்னணு இணைப்புகளுடன் ஒரு ‘உடலை’த் தயாரித்துவிட்டால் போதும், முழு தன்னுணர்வுடன் புதிய உடலில் இருக்கலாம். அப்படியே உடல்களை மாற்றிக் கொண்டே போகலாம். அழிவே இல்லை!
 DSC03214-4
அடுத்த கேள்வி இன்னும் ஒரு அடுக்கு உள்ளே. மூளை என்பது இந்த புரோட்டீன் சதைப்பிண்டமா அல்லது அதன் மின்காந்த அமைப்பா? கால் சூட்சும வடிவில் இருக்கமுடியுமென்றால் மூளையும் சூட்சும வடிவில் இருக்கமுடியும்! பின்னர் அடுத்த கேள்வி, ‘மூளையின் மின்காந்த அலைகளின் அமைப்பைத் தீர்மானிக்கும் சூத்திரம் எது? நான் என கூறிக்கொள்ளும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள், உணர்வுகள் மூலம் அடையும் உடல், உடல் மூலம் அறியும் உலகம் அனைத்துமே அந்த சூத்திரம் தான். டி.என்.ஏ யில் தான் அந்த சூத்திரம் உள்ளது. அது கண்ணுக்குத் தெரியாத அச்சு, கருத்துருவாக கருவுக்குள் நுழைகிறது. தன் தேவைக்காக இந்த உடலை உருவாக்கிக் கொள்கிறது. அந்த அச்சு மூளையில் இருக்கும், அதற்கு அழிவில்லை. ஆனால் நான் என்பது அந்த நிரந்தரமான அச்சா அல்லது இந்த உடல் என்னும் நகல் மட்டுமா?
இன்னும் ஆழமான கேள்விகள் அடுத்து. உயிர் வாழ வேண்டும் என்கிற ஆதார வேட்கை படைப்புத் தொடரை நிலைநிறுத்துவதற்குத் தானே? சந்ததியை உருவாக்கிவிட்டால் ஆதார நோக்கம் நிறைவடைந்தது. அப்புறம் இந்த உடல் அழியாமல் இருக்கவேண்டும் என்பதும், ‘நான்’ என்னும் உணர்வும் எதற்காக? கேள்வி இங்கே முடியடைவில்லை. நான் என்னும் தன்னுணர்வு, பிறப்பு, இறப்பு என்பதன் ஆழங்களுக்கு நகர்கிறது. முடிவே இல்லாத கேள்விகளுக்கு, தற்காலிகமான ஒரு முடிவுடன் நிறைவுபெறுகிறது கதை.
‘உடலைக் கடந்த நான்/தன்னுணர்வின் இருத்தல் என்பது சாத்தியமா?’ என்கிற ஆதாரமான அதே கேள்வியுடன் தான் இந்தக் இரண்டு படைப்புகளும் தொடங்குகின்றன. அடிப்படையான, தத்துவார்த்தமான ஒரே கேள்வியுடன் தொடங்கினாலும் இந்தியத் தத்துவ மரபில் வந்த ஒரு படைப்பாளியின் அகமும், மேற்கின் நவீன சிந்தனை வழியில் வந்த ஒரு கலைஞனின் படைப்பூக்கமும் முதற் கேள்விக்கான விடையுடன் அடுத்து எந்தத் திசையில் நகர்கிறது என்பதை ஆராயவும் உதவும்.
தன்னுணர்வு உடலைக் கடந்து இருக்க சாத்தியமென்றதும், அதிநவீன தொழில்நுட்பத்தை கையிலெடுத்துக்கொண்டு அறிவியலின் எல்லாத் தளங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள், இன்னும் உயரிய தொழில்நுட்ப சாத்தியங்கள் என பக்கவாட்டில் பயணமாகிறது ட்ரான்செண்டன்ஸ் திரைப்படம். கரிய பறவையின் குரலின் கதை சொல்லி முதல் கேள்வியுடன் விடையுடன் அடுத்து அடுத்து என மேலும் பல தத்துவார்த்தமான கேள்விகளால் இன்னும் உள்முகமாக மனிதரின் இருத்தலின் அடிப்படைகளை நோக்கிப் போகிறான். கரிய பறவையின் குரல் வெளியில் இருந்து உள்நோக்கி செங்குத்தாக நகர்கிறது. ‘கரிய பறவையின் குரல்’ என்னும் தலைப்பு நம் மரபில் வந்த நம்பிக்கையை மிகச்சரியாக இங்கே பிரபிபலிக்கிறது.
தத்துவம், ​ தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் ஒப்பிடவும், சிந்திக்கவும் தூண்டும் இரண்டு படைப்புகள். அவ்வாறு சிந்திப்பது நாம் எங்கே நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தக்கூடும்.

- பிரகாஷ் சங்கரன்
(நன்றி: சொல்வனம், இதழ் 109ல் வெளியானது)