Thursday, August 2, 2012

மானுட ஞானம் தேக்கமுறுகிறதா?


( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து உந்தப்பட்டு அது தொடர்பாக எழுந்த என் சிந்தனைகளை தொகுத்து எழுதிய கடிதம். ஜெ தளத்தில் வெளியிடப்பட்டது )
********
பதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும்.
என் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, மானுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான புறவயமான அறிவுத் தொகுப்பும் எந்த ஒரு போட்டியாளரையும் ‘சமாளிக்கும்’ பொருட்டு உருவானதல்ல. எனவே இனிமேலும் மானுட வளர்ச்சிக்கு அப்படி எந்த ஒரு உயிரினமும் ஞானச் சவால் விடவேண்டியதில்லை.
மனித இனத்தின் ஒட்டுமொத்த புறவயமான ஞானச் செல்வமும் அவன் போட்டியாளர்களை வென்று தன் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் என்றால், அவன் குரங்கினத்திலிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேட்டையாடக் கற்றுக் கொண்டதே போதும். அத்துடன் அவனது அறிவுத் தேடல் நின்றிருந்திருக்கலாம்.
ஆனால், அப்படி வேட்டையாட அவனைத் தூண்டியதே பரிணாமக் கொடையாக மனித இனத்திற்குக் கிடைத்த பெரிய அளவுள்ள மூளைதான். மனிதனுக்கு, மரபணு ரீதியாக மிக நெருங்கிய பேரினக் குரங்குகளை விட மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் – மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis).
எனவே பரிணாமத்தின் முதல் பெரும் கொடையே அறிவை விரிவு செய்ய விதிக்கப்பட்டிருப்பதால் மனிதனின் அறிவுத் தேடல் – ஞான சேகரம் எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தொடரும் எனவே நினைக்கிறேன். ஜெ கூறியபடி மானுட ஞானம் என்னும் நீர்ப்படலம் அது பரவும் நிலத்தின் அமைப்பிற்கேற்ப அமைகிறது. மொழி, எழுத்து, இசை என்று தேவைப்பட்ட காலங்களில் அந்தப் பள்ளங்களை நிரப்பியும், பிறகு இன்று காணும் யாவையுமாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட, இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதே இன்னும் சுவாரஸியமானதாக ஆக்குகின்றது.
இந்த இடத்தில் விஷ்ணுபுரத்தில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்றான “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்பதை நினைத்துக் கொள்கிறேன். ஆம், மானுட ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் இதுகாறும் ‘உருவாக்கித்’ தொகுத்தவற்றை ஒட்டியும், வெட்டியும், முற்றிலும் எதிர்த்தும் கூட இருக்கலாம். வாழும் சூழல் கொடுக்கும் சவால் மட்டுமே பரிணாமத்திற்குக் காரணமாக வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால அறிவுச் செயல்பாடு, கட்டற்ற இன்றைய ஞானம் உருவாக்கும் சிக்கல்களை சமாளிப்பதும், எல்லைகளை மீறுவதும் ஆக இருக்கலாம். இன்றைய மனிதனே நாளைய மனிதனுக்கு போட்டி அல்லது சிந்தனைகளை வடிவமைப்பவன்.  இது என் எளிய ஊகமே. அல்லது முன்னொருமுறை என் கேள்விக்குப் பதிலாக ஜெ சொன்னது போல, ‘தனியொரு கரையான், தானும் சேர்ந்து கட்டும் புற்றின் பிரம்மாண்டத்தை ஒரு போதும் கற்பனை செய்யக்கூட முடியாது. அது போலவே மானுட ஞானம் வழியாக பிரபஞ்ச விதி அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாது’.

*
சில மாதங்களுக்கு முன் மானுட இனத்தின் எதிர்காலத்தை யூகித்து Mark Changizi என்பவரால் எழுதப்பட்ட Harnessed: How Language and Music Mimicked Nature and Transformed Man என்றொரு புத்தகத்தின் அறிமுகக் கட்டுரை படிக்க நேர்ந்தது.http://seedmagazine.com/content/article/humans_version_3.0/
கட்டுரையாளர் சொல்வதன் சுருக்கம்:
1. இயற்கைத் தேர்வில் (Natural selection) பேரினக்குரங்கிலிருந்து மனிதன் (human 1.0) உருவானான். நாம் இப்போது இருக்கும் நிலை அதை விட ஒரு படி மேல் – மனிதன் 2.0. மனிதனின் முதல் பண்புகள் பேச்சு, எழுத்து, இசை யாவும் இயற்கைத் தேர்வினால் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உருவானவை என்கிறார். ஆனால் அது பிரக்ஞை பூர்வமாக நாம் உருவாக்கிக் கொண்டதல்ல, நமது ஆதி நடத்தைப் பண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தில் இயல்பாக எழுந்தவை. நமது விழிப்புலத்திற்கு ஏற்றவாறு எழுத்து, நம் கேள்விப் புலத்திற்கு ஏற்ப பேச்சு, நமது செவிப்புலத்திற்கும், அகஎழுச்சியைத் தூண்டும் இயக்கமுறைகளுக்கும் ஏற்ப இசை உண்டானது என்கிறார். சுருக்கமாக நாம் இயற்கையில் இருக்கும் அமைப்பிற்கு தகுந்தாற் “போலச் செய்கிறோம்”.
2. மனிதன் 3.0 என்கிற அடுத்த கட்டத்திற்கான நகர்வு, மரபணு மாற்றம் அல்லது செயற்கை அறிவாற்றல் போன்று செயற்கையாகத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாக இருக்காது, இயற்கையை போத பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்வதாக இருக்கும். காரணம் இயற்கையில் நாம் இவ்விதம் பரிணமித்திருப்பதே ஆகச்சிறந்த வடிவத்தில், ஆற்றலுடன்தான்.
3. இப்போது நாம் நமது மூளை அல்லது மற்ற உறுப்புக்களை பரிணாமத்தில் அடிப்படையான அளவிற்கு மட்டுமே போதுமானவையாக உருவாகியிருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் அவை மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எந்தத் தொழில் நுட்பத்தாலும் (மரபணு, Artificial Intelligence) அடையக்கூடியதைவிட மிக அதிகமான கற்பனை செய்யமுடியாத சக்தி நம்மிடம் இப்பொழுதே இருக்கும் இயற்கையான அமைப்பில் இருந்து கிடைக்கும் – அதற்கு நாம் அந்த இயற்கை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (harnessing). ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும், அப்படி அடையப்பெறும் சக்தி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது.
அறிவியல் ஊகங்கள் – இன்று வரை கண்டுபிடிக்கபட்டவை, இதன் நீட்சியாகச் சாத்தியமானவை, பின்னர் அதன் மேலதிக கற்பனை என்று நம்பத்தகுந்ததாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தக் கட்டுரையாளர் செய்வது அடிப்படை அறிவியல் விளக்கங்களை வைத்துக்கொண்டு தாவும் பெரும் கற்பனைப் பாய்ச்சல். ஆனால் அதுதான் சாத்தியமும் கூட. புராணங்களில் வரும் கந்தருவர், யக்ஷர் போன்ற அதீத சக்தி படைத்த அடுத்த மானுட வடிவம் வரும் என்கிற உற்சாகம். தொட்டுக்கொள்ள இயற்கைத் தேர்வு, உயிரியல் தகவமைப்பு என்று கொஞ்சம் பரிணாமவியல். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் அவரது கூற்று தான் – “அளப்பரிய சக்தி கிடைக்கும், ஆனால் அது என்ன, எப்படி அடைவோம் என்று சொல்லமுடியாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சில வீடியோ கேம்கள், முப்பரிமாணக் காட்சி போன்றவை நாம் ஏற்கனவே நமது மூளையின் இயற்கை அமைப்பிற்கேற்ப அவற்றை முன்னேற்றுகிறோம் என்பது ஒரு அடையாளம்”.
*
தத்துவம் அறிவியல் சிந்தனைக்கு என்ன தூண்டுதல் தர முடியும் என்கிற கேள்விக்குப் பதிலாக ஜெயமோகனின் இந்த வரிகளைக் கூறலாம், “ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.”
“பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.” அருமை! ஒரு உயிரியல் ஆய்வு மாணவனாக என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய கருத்து இது. இதன்படி யோசித்தால் எதிர்கால மானுட ஞானம் என்பதே சூழலுடன் முரண்பட்டு/போரிட்டு பரிணமிக்காமல், ஒட்டுமொத்த உயிர்ச் சூழலுடன் ஒத்திசைந்து தன்னைத் தக்கவைக்கும் வழியைத் தேடுவதே அடுத்தகட்ட ஞானத் தேடலாக இருக்கலாம். அதற்கான நெருக்கத்தை மற்ற உயிர்களுடன் உருவாக்குவதே அடுத்த காலத்தின் அறிவியலாக இருக்கலாம். இன்னும் நிறைய சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது. நன்றி ஜெ.
மேலும், உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரினங்களை விட பலசெல்/கூட்டு உயிரினங்கள் பரிணாமத்தில் மேம்பட்டவை என்று கருதப்படுகிறது. சில சமயம் இதையே தலைகீழாகப் போட்டுப் பார்த்து யோசித்தால், ஒரு அறையை அடைத்துக்கொண்டு இருந்த பிரும்மாண்ட கம்ப்யூட்டர்களைவிட இன்று உள்ளங்கைக்குள் அடங்கும் கணினிகள் வளர்ச்சிப் ‘பரிணாமத்தில்’ மேம்பட்டவையாகக் கருதப்படுவது போல ஏன் பெரும், பல செல் உயிரினங்களை விட கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் நுண் உயிரிகள் பரிணாமத்தில் மேம்பட்டவையாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு செல் உயிரினங்கள் அவை அப்படி இருப்பதாலேயே பரிணமிக்கும் வேகம் மனிதனை (எல்லா பெரும் உயிரினங்களையும்) விட மிக மிக அதிகம். ஆகவேதான் தொடர்ந்து பெரிய பலசெல் உயிரினங்களுக்குச் சவால் விட்டுத் தாக்குப் பிடிக்க முடிகிறது (எச்.ஐ.வி. உட்பட பல நோய்க்கிருமிகளை உதாரணம் சொல்லலாம்).
மேலும் அவற்றின் இருத்தல் தனித்தனியானாலும், கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாகவே இயங்குவதால் இருத்தலுக்கான போட்டியில் வெற்றிகரமாக தனது சந்ததியைப் பெருக்கி மரபணுவைக் கடத்தி தன் இனத்தை நீடித்துக்கொள்கின்றது. எனவே ஜெ சொன்னது போல “பரிணாமம் சுழற்சி மூலமாக நிகழ்கிறதெனக் கொண்டால்” எதிர்கால மானுட ஞானம் இவ்வாறு மீண்டும் தனிச் செல்களாக உதிர்ந்து ஓரிடத்தில் கூடி வாழ்வதைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஒரு மாபெரும் வைரஸ் தொகை அந்த வைரஸின் உயிர்ப்பிரக்ஞையுடன் இருப்பது போல அப்பொழுதும் மானுட செல்கள் மானுடப் பிரக்ஞையுடன் இருக்கலாம். பரிணமிக்கும் வேகத்திலும் மற்ற ஒருசெல் உயிர்களுடன் போட்டியிட முடியும்.
இந்த மாதிரியெல்லாம் சிந்திப்பது எனக்கும் பிடிக்கும், எனது ஆய்வுத்துறைக்கும் இந்த ‘விபரீதக்’ கற்பனைகள் பலன் தரும். சில சமயம் ‘லூசுத்தனமாக’த் தோன்றினாலும், அறிவியல் ஊகத்தை யாரும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. எனவே இவற்றை கதைகளாக எழுதி வைத்துவிடுவேன். அங்கு கதாசிரியனின் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாதில்லையா? :))
சிந்தனைகளைக் கிளறி விடும் உரையாடல்களுக்கு மீண்டும் நன்றிகள் பல ஜெ.
-பிரகாஷ்

4 comments:

  1. அறிவு (தர்க்கம், சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த ) ரீதியாக
    மானுடம் முன்னேறிக் கொண்டு இருந்தாலும்

    உணர்வு (பாசம், கருணை, அன்பு) ரீதியாக
    பின்னோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயம்

    படிப்பும் அறிவியல் அறிவும் விஷய அறிவும்
    சுய நலத்தை/ தனிமையை/ குறுகிய வட்ட வாழ்வை அதிகரிக்கச் செய்கிறதோ என்ற ஐயம்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ராம்ஜி,

      //உணர்வு (பாசம், கருணை, அன்பு) ரீதியாக பின்னோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயம்//

      மானுட வரலாற்றிலேயே நாம் வாழும் இந்தக் காலகட்டம் தான் ஒப்பீட்டளவில் மிகுந்த மனிதநேயமும், உயர்வான சமூக விழுமியங்களும், அமைதியும் நிலவும் காலகட்டம் என்பார் ஜெ.

      உயிர்வாழ்தல் என்னும் ஆதார இச்சை இயற்கையில் உயிர்களுக்கு 'விதிக்கப்பட்டது'. முதலில் மனிதன் உயிர்வாழும் வேட்கையுடைய ஒரு எளிய உயிர், அதற்கு அப்புறம் தான் அறிவும், ஞானமும் தேடும் 'சிந்திக்கும் மிருகம்'. பாசம், கருனை, அன்பு ஆகியவை மானுடத்தின் அடிப்படை உணர்ச்சிகள். மனிதன் என்னும் சமூக விலங்கு கூட்டாக வாழ இவை அவசியம். மனித சமூகத்தின் அடிப்படை இயல்பில் மானுட அறம் என்று ஒன்று உண்டென்றால் அது எப்போதும் உணர்ச்சியோடு தான் தொடர்பு படுத்தப்படும், அறிவோடு அல்ல. அறஉணர்வு தான்; அறஅறிவு அல்ல. எனவே உயிர்வாழ்தலுக்கு தேவையான அடிப்படையான உணர்ச்சிகள் என்றுமே முற்றாக அழிந்துவிடாது. காலத்தில் அவை குறைவது போலத் தோன்றினாலும் உள்ளோடும் மானுடஅறம் மனித குலத்தை அடிப்படை உணர்ச்சிகளை நோக்கியே நகர்த்தும் என்றே நம்புகிறேன்.

      Delete
  2. My grand parents are not graduates not even 10th stand, but they move well with the entire street people.

    Every other day my grand father used to make one new friend (in real world, not in adding face book ids), but I am not able to make new fiend. Probably if i get new friend once in a month, thats a big acheivement

    ReplyDelete
  3. மாறுபட்ட சிந்தனைதான் சன்கரன் அவர்களே!

    இன்று கொசு, கரப்பான் பூச்சி,உண்ணி என்று பெரிய பட்டாளமே மனித இனத்துடன் போட்டி போடுகிறதே. அறிவால் இல்லாவிட்டாலும்,இருப்பால் அவைகள் மனிதனை வென்றுவிட்டதாகவே தோன்றுகிறது. சில சமயம் கொசு நம் மேல் உட்காரும்போது நாம் அடித்தால் நம் கையில் சிக்காத இடமெல்லாம் பார்த்து ஆராய்ந்து பின்னரே அமர்கிறது.நம் கையில் சிக்காமல் ரத்தம் உறிஞ்சிய பின்னர் பறக்கிறது.நாம் என்ன பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.

    கண்ணுக்குத் தெரியும் பூச்சிகளே நம்மை பாடாய்ப்படுத்துகின்றன. கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் எல்லாம் இன்னும் என்ன என்ன செய்யப் போகிறதோ, யார் சொல்ல முடியும்?

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...