Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - பகுதி 3)

       கொள்ளுத்தாத்தா யக்ஞராம சாஸ்திரி மறைந்தவுடன், ஐந்து வயது குழந்தையாக இருந்த என் தாத்தா பத்மநாபனை மடத்திலேயே ஆச்சார்யரின் நேரடிக் கண்கானிப்பில் வளர்த்தார்கள். குழந்தை எப்பொழுதும் பண்டிதர்களும், ஞானிகளும் கூடியிருந்த சபையில் விளையாடி, ஞானத்தை விளையாட்டாகவே அடைந்தது. மிக இளம் வயதிலேயே மாபெரும் அறிவாளியாகத் திகழ்ந்தார். அவரும் இதே வேதபாடசாலையில் தான் ஆசிரியராயிருந்தார். பாரதமெங்கும் நடந்த வித்வத் சதஸ்களில் மடத்தின் சார்பாகப் பங்கேற்ற அவரின் நிகரற்ற கல்வி ஞானத்தை போற்றி ‘ஸலக்ஷன வேத விஷாரத்’, ‘வைதீகப் பிரவீன’ என்று பட்டங்கள் குவிந்தன. செல்லுமிடமெல்லாம் விருதும், கௌரவமும் பெற்று பிரம்மகிரி ஸ்ரீவித்யா பீடத்தின் ஞானச் செல்வாக்கை அழுத்தமாக நிறுவிவந்தார். சன்னியாசம் கொடுத்து, அடுத்த மடாதிபதியாக ஆச்சார்யர் அவரையே நியமிப்பாரென்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஆச்சார்யர் சம்பிரதாயத்துக்காக ‘கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று கேட்டபோது, தாத்தா கொஞ்சமும் தயங்காமல் ‘ஆச்சார்யாள் அனுக்கிரஹம்’ என்று சொல்லி விட்டார். மடத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியாயிருந்தது. ஆச்சார்யருக்குத் தெரியும், தாத்தா ஆத்மஞானி, அவருக்கு எதிலும் விருப்பு, வெறுப்பு இல்லை, ‘சன்னியாசம் சுவீகரித்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டிருந்தாலும் அதுவே அவரது பதிலாயிருந்திருக்குமென்று.

      பதினெட்டு வயதில் கௌசலை என்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். ‘பத்மநாப கணபாடிகளின் ஆத்துக்காரி’ என்று அறியப்படுவதில் கௌசலை பாட்டிக்கு அளவில்லாத பெருமை. திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ராமனாதன் என்று பெயரிட்டார்கள். குழந்தை வளர வளர மற்ற பிள்ளைகள் போலல்லாமல், அம்மாவின் வயிற்றைக் குரங்குக்குட்டி போல கவ்விப்பிடித்துக் கொண்டு கீழே இறங்காமல், எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தது. நான்கு வயது வரை ஒரு சொல் கூட பேசவில்லை. தாத்தாவின் அறிவின் மீது பொறாமை கொண்டு உள்ளூற குமைந்து கொண்டிருந்தவர்கள் குளிர்ந்தார்கள், “புள்ளை எங்கேர்ந்து பேசுவான், அதான் இவரே மொத்த வம்சத்துக்கும் சேத்து ஒரேடியாப் படிச்சு, பேசிப்பேசியே அடுத்தவா வாயெல்லாம் அடைச்சுட்டு, நாந்தான் பண்டிதன்னு அகங்காரமா அலையறாரே.. இதோ புள்ளயாண்டான் வாயப்பிடுங்கிட்டா அம்பாள்!” என்று பின்னால் பேசினர். பத்மனாப கணபாடிகள் மடத்து வளாகத்திலும், கோயிலிலும் எங்கு சென்றாலும் மகனைத் தூக்கிக் கொண்டு தேவி மஹாத்மியம் முழுவதையும் ஒவ்வொரு சொல்லையும் தன் உயிரிலிருந்து உருக்கியெடுத்து சொல்ல ஆரம்பித்தார். மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளை கடைசி நாள் கடைசிச்சொல்லைச் சொல்லி முடித்ததும் வாய் திறந்து ‘அம்மா’ என்று தொடர்ந்தது. “இனிமே அவ பாத்துப்பா” என்று மகனை அப்படியே லலிதாம்பிகையின் சன்னதியில் கிடத்தி, அன்னையை உள்விழிகளால் உற்றுப்பார்த்தார். அன்னை மலரிதழ் மொட்டவிழ்ந்தது. நேரே மடத்திற்குச் சென்று ஆச்சார்யரின் காலில் விழுந்தார். ஞானானந்த தீர்த்தர் என்னும் சன்னியாசி ஊரை விட்டு வெளியேறி, பிரம்மகிரியின் உயர்ந்த குன்றொன்றின் மேல் தனித்த சுடராக பொருந்தியிருந்து, ஒரு வார்த்தைகூட பேசாமல், மனதிற்குள் மீதமிருந்த கடைசிச் சொல் வரை, ‘குரு கருணா விலாசம்’, ‘ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரயோக தீபிகா’ ‘அத்வைதானுபூதி சூத்ரம்’, ஜீவப்ரஹ்ம ஐகபத்ய ப்ரகரணம்’ என்று நூல்களாக எழுதிக் குவித்தார். வருடங்கள் கழிந்து ஒருநாள், பிட்சை அளிக்கச் சென்ற மடத்துச் சிப்பந்தி, ஆளைக்காணாது வெறும் காவிவேட்டியும், துண்டும் மட்டும் கிடக்க, பதறியோடி ஆச்சார்யரிடம் சொன்னார். அனைவரும், ஏதாவது மிருகத்திற்கு இரையாயிருப்பார் என்று வருத்தப்பட்டார்கள். ஆச்சார்யர் குன்றின் உச்சியில் நின்று, சரிவைத்தாண்டி பள்ளத்தாக்கில் மண்டியிருந்த ஹிரண்யகர்ப்ப வனத்தின் பச்சைமரக்கூட்டத்தின் தலைகளுக்கு நடுவில் எதையோ நிலைத்தவிழிகளுடன் பார்த்தபடி இருந்தார்.
***

      அரைப்பிச்சியான கௌசலைப் பாட்டி மீதமிருந்த போதத்தை முழுக்கத் தன் மகன் மேல் வைத்தாள். ராமனாதன் குறைவாகப் பேசி, அதிகமாகப் படித்தார். தந்தை ஞானத்தின் கூர்வாளால் வார்த்தைகளைப் பிளந்து, சிதறிய பீஜாட்சரங்களின் உள்ளே அதிரும் நாதஒலியில் மனம் லயித்தார். மகனோ மெல்லிய மயிலிறகால் ஒலிகளை வாரி அள்ளிக் கோர்த்த வார்த்தைகளைக் கொண்டு கட்டியெழுப்பிய காவியங்களில் கரைந்தார். கால்கள் நிலத்தில் ஊன்றி நின்றாலும், எப்போதும் மனம் எங்கோ அந்தரத்தில் பறந்தபடி இருந்தது. காக்கை, குருவி, மாடு, நாய், மலர், மலை, சிலை என்று பேதமில்லாமல் எல்லாவற்றிடமும் பாடிச் சிரித்தார். சமயங்களில் சிறுமிகள், கன்னிப்பெண்கள், தாய்மார்களை பார்த்ததும் நடு வீதியிலே காலில் விழுந்தார். கவிமனம் அறியாதவர்கள் பெண்பித்தன் என்று இழிவுசெய்து ஒதுங்கினர். தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்தனர். ஆச்சார்யரிடம் வாமாச்சாரம் பயின்று புத்தி பேதலித்தவன் என்று புகார் செய்தனர். ஆச்சார்யர் பதிலே சொல்லாமல், அப்பாவையே லலிதாம்பிகைக்கு பூஜை செய்யச்சொன்னார். ஊர் வாய் மெல்ல முனுமுனுத்து அடங்கியது. தாத்தாவின் சிஷ்யர் ஒருவர் தான் தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தார். அடுத்த வருடம் நான் பிறந்தேன்.

      எனக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருமுறை நானே பார்த்திருக்கிறேன். அந்திப்பொழுதில் விளையாடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, முற்றத்தில் அம்மா சிவப்புப் பட்டுடுத்தி, செவ்வரளி மாலை சூடி, இடைவரை கேசம் விரிந்து புரள, வெற்றிலை மென்று சிவந்த வாயுடன் லலிதாம்பிகை சிலை போல ஒரு காலை மடித்து, மறுகாலை தொங்க விட்டு கல்லுரல் மேல் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் தூபக்காலிலிருந்து குங்கிலியம் புகைந்து, கணத்த வெண்புகை குட்டி மேகம் போல் தங்கி வழிந்து, காற்றில் கரைந்து பரவியது. அப்பா அம்மாவை சுற்றி வந்து பூத்தூவி, காலில் விழுந்து வணங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்த என்னையும் நமஸ்கரிக்க வைத்தார். ‘அம்மா..’ என்று அழைத்தேன். அம்மா என்னைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பாதி இமைகள் சரிந்திருக்க, விழிகள் மேல்நோக்கி சொருகி நின்றிருந்தது. பயந்து மூர்ச்சையானேன். தெளிந்த போது கோயில் கருவறையில் அப்பாவின் மடியில் இருப்பதை உணர்ந்தேன். அப்புறம் அப்பா என்னிடம் லலிதாம்பிகை தான் அம்மா, பயப்படக் கூடாதென்றார். மற்றவர்களுக்கு சிலையாக இறுகி அமர்ந்திருக்கும் அன்னை, என் தாத்தா, கொள்ளுத்தாத்தாவிடம் கணிந்து, முகமலர் அலர்ந்து, ‘வா...!’ என்றழைத்த கதையைச் சொன்னார்.  எனக்கும் கோயிலில் லலிதாம்பிகையின் கல்லுதடு மெல்ல விரிந்து சிரிப்பதையும், பேசுவதையும், அருகே அழைப்பதையும் காண்பித்துக்கொடுத்தார்.

      மடத்தில் வாசிப்பும், விவாதமும் எல்லாம் சமஸ்கிருதத்தில் தான். அப்பா தான் எனக்குத் தமிழ் படிக்கக் கற்றுக் கொடுத்தார். மடத்தில் ஆச்சார்யருக்கும், இன்னும் வெகுசிலருக்கும் தவிர வேறு யாருக்கும் தமிழில் புலமை கிடையாது. ஆச்சார்யரிடம் தான் அப்பாவும் தமிழ் கற்றுக்கொண்டார். சுப்பிரமணிய பாரதியைப் போய்ப் பார்த்திருக்கிறார், அவரை தமிழ்க் காளிதாசன், ஸ்ரீவித்யா உபாசகர் என்று சொல்லுவார். பரம்பரையாய் சேமித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் அடங்கிய பெட்டியில் அப்பாவின் கையெழுத்தில் தேவநாகரியில் எழுதப்பட்ட கொத்துக்கொத்தான தாள்களைப் பார்த்தேன். அப்பா எழுதி நான் பார்த்த ஞாபகமே இல்லை. எப்போது எழுதியிருப்பாரென்று யூகிக்க முடியவில்லை. ‘பாலா லீலா விநோதம்’ என்று தலைப்பிட்டு சமஸ்கிருதத்தில் செய்யுள்களாக எழுதியிருந்தார். முதல் பத்துப்பாட்டு சம்பிரதாயமான விநாயகர், குரு, அன்னை துதிகளுடன் அவையடக்கமும் இருந்தது. அப்புறம் அதில் துதிகளே இல்லை. பாலா, கன்யா, அம்பா என்று மூன்று காண்டங்களாகப் பிரித்து, அன்னை லலிதாம்பிகை நூலாசிரியனை வாலைக்குமரியாக காலில் நூபுரம் கிலுகிலுக்க, சிற்றடி வைத்து ஓடி, மழலை மொழி பேசி, குறும்பு விளையாட்டுக்கள் செய்தும், இளங்கன்னியாக மிளிறும் பேரழகுடன் வசீகரித்து, தனைமறந்து அவளைத் தேடித்தேடி ஏங்கித் தாபத்தில் அழுது, கல்வியும், குலமும், பணமும் எல்லாம் துறந்து, காணும் பொருளிலெல்லாம் அவள் அழகே கண்டு, பரவசத்தில் ஆடிப்பாடி, மதியழிந்து தகரும் தருணத்தில், கருணையே வடிவாக, உலகனைத்திற்கும் தாயாக, மகனின் துயர் பொறுக்காதவளாக, எல்லா மாயையும் தனது லீலையே என்று உணர்த்தி, சிறுகுழந்தையாக்கி மார்பில் அனைத்து அமுதூட்டி அமரனாக்கி, பின் தன் கருவுக்குள் வைத்து தானாக்கினாள் என்று அழகும், காதலும், காமமும், அன்பும், கருணையும், தத்துவமும், வர்ணனைகளும் அடுத்தடுத்து வர, அதற்கேற்ற சந்தங்களில் ஒலிக்கும் சொற்களைக் கோர்த்து காப்பியமாக பொன் நகை செய்யும் நுணுக்கத்துடன் எழுதியிருந்தார்.

      ஒரு நவராத்திரி உற்சவ காலத்தில் கன்னியாபூஜை, சுவாசினி பூஜை, ஹோமம், வேத சதஸ், ஊர்வலங்கள் என்று வழக்கம் போல் பிரம்மகிரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தது. அப்பா வழக்கத்தை விட அதிக உற்சாகத்தில் மிதந்தார். எல்லாரும் பித்து முத்திவிட்டதாக கிண்டலாகப் பல்லிளித்துக் கூடி நின்று அப்பாவை சிகை பிரிந்து, வேட்டி அவிழக் கூத்தாடவைத்து வேடிக்கை பார்த்தனர். பத்தாம் நாள் அதிகாலை நூபுரகங்கையின் கரையில் அப்பாவின் அங்கவஸ்திரம் இருந்தது.  சற்றுத் தள்ளி நதி கலகலவென சிரிக்க, நீர்ப்பெருக்கின் ஓரத்தில் வளர்ந்துநின்ற புதர்ச்செடியில் கைகோர்த்து வேட்டியும், பூனூலும் இன்னும் நெளிந்து ஆடிக்கொண்டிருந்தது.

      அம்மா மௌனம் கனத்து அசையாமல் நின்றிருந்தாள். ஜலசமாதி அடைந்துவிட்டார், யோகி என்றார்கள். அம்மா கற்சிலை போல அமர்ந்தாள். விழிகள் திறந்து, கடைசிப் புன்னகை அப்படியே உறைந்தது. மாறாத புன்முறுவல் பூத்த லலிதை போல அம்மா என்று எண்ணிக்கொண்டேன். என்னை இறுக வயிற்றோடு கட்டிக்கொண்டாள். கொதிக்கும் சோற்றுப் பானையின் மூடி போல அம்மாவின் அடிவயிறு தட்தடப்பதை உணர்ந்தேன்.

      கௌசலைப் பாட்டி நீர்ச்சுழலில் சிக்கிய எறும்பு போல திசையழிந்து தத்தளித்தாள். கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு என்னேரமும் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டே இருந்தாள். “என் ஆத்துக்காரரையும், குழந்தையையும் திருப்பிக் கொடுடி முண்டை. ராட்சஷி, என் குலத்தையே நாசம் பண்ணின துஷ்டை. நீ மட்டும் சந்தோஷமா ராஜ்ஜியம் பண்ணிண்டிருக்கலாம்னு நினைச்சியோ. நாசமாபோயிடுவே. விடமாட்டேன். கொன்னுட்டுத்தான் மறுவேலை....” புடவையை அவிழ்த்தெறிந்து, எச்சில் தெறிக்க, அழுது சிவந்து வெறிபிடித்த விழிகளுடன் காற்றில் யாராருடனோ சண்டை போட்டாள். மெல்லக் கிட்டப்போய் கவணித்தவர்கள் அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்து, அரண்டு போய் விலகி ஒடினார்கள். அங்கேயே சிலமுறை மலமூத்திரம் கழித்தாள். கோயில் ஊழியர்கள் பொறுக்கமாட்டாமல், வாயைத் துணியால் கட்டி, குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டுவந்து வீட்டில் போட்டார்கள். பின் அம்மா என்னையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு மாமாவீட்டிற்கு வந்தாள். பாட்டி நள்ளிரவில் திடீர் திடீரென்று எழுந்து தலையிலடித்துக்கொண்டு உரக்க காது கூச கெட்டவார்த்தைகளாக பொழிந்தாள். அம்மா மட்டும் தான் அவ்வேளைகளில் பாட்டியை நெருங்க முடியும். அம்மா ஒன்றுமே பேசமாட்டாள். பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணை உற்றுப் பார்ப்பாள். சிலநிமிடங்களில் பாட்டி திட்டுவதை நிறுத்திவிட்டு, அம்மா மடியில் குழந்தை போல முகம் புதைத்துக், கதறி அழுது, அப்புறம் கேவிக்கேவி வெறும் விசும்பல் மட்டுமாக ஆகி அப்படியே தூங்கிவிடுவாள்.

      மாமாவின் ஏச்சுக்களுக்குப் பதிலெதுவும் சொல்லாமல் அம்மா என்னையும் பாட்டியையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். கௌசலைப் பாட்டி கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை நிறுத்திவிட்டாள். இரவு, பகல் எப்பொழுதும் மடத்து கோசாலையில் பசுக்கொட்டிலிலேயே இருந்தாள். எல்லா பசுக்களும் அவளுக்கு கணவனைப் பிரிந்து, குழந்தையையும் இழந்து, சதா துக்கத்தை மென்று அசைபோட்டு, கண்ணீரைப் பாலாய்ச் சொரியும் கைம்பெண்கள். லட்சுமி மாமி, கௌரி மாமி, சாந்தா மாமி, வனஜா மாமி என்று அவைகள் எல்லாம் அவளைப்போலவே வாழ்வு மீந்து போன அன்னையைர்கள். அவளுக்கு அவர்களோடு துக்கத்தைப் பங்கு போட்டுப், புலம்பி, அழுது, ஆறுதல் சொல்லவே நேரம் சரியாயிருந்தது. குழந்தைகள் ஒளிந்து நின்று அவளை வேடிக்கைபார்த்தன, ‘கோசாலைப் பாட்டி’ என்று பேர் வைத்து அழைத்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கி விளையாடின. பிறகு எல்லாருக்கும் கௌசலைப் பாட்டி ‘கோசாலைப் பாட்டி’ ஆனாள். எப்பொழுதும் கன்றுக்குட்டிகளைக் கட்டிக்கொண்டு தூங்கினாள். இரண்டு வருடங்களில் அழுகையும், புலம்பலும் நின்று முகத்தில் அமைதி நிறைந்தது. புண்ணகையும், மகிழ்ச்சியும் கூடி சன்னமான குரலில் கீர்த்தனைகளைப் பாடினாள். பெண்கள் கோசாலைக்குச் சென்று பாட்டியிடம் ஆசி வாங்கினார்கள். பாட்டி கோசாலையிலேயே ஒருநாள் தோலுக்குள் வைக்கோல் பொதிந்த ஒரு கன்றுக்குட்டியைக் கட்டியபடி அசையாமல் கண்மூடியிருந்தாள். வளைத்து அணைத்திருந்த அவள் கரங்களுக்குள்ளிருந்து அதைப் பிரிக்கமுடியாமல், அப்படியே சிதையில் வைத்து தீ மூட்டினோம்.
***


பகுதி-2                                           பகுதி-4

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...