Friday, April 27, 2012

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

picture12
The Day India Burned) என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருந்த ஒரு முக்கியமான ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. தலைப்பே சுய விளக்கமாக இந்திய தேசப் பிரிவினையின் துயரத்தைப் பற்றியது என்பதைத் தெரிவிக்கிறது. பிரிவினையை யார் விரும்பினார்கள்?, எல்லைகளை யார் பிரித்தது? அதன் விளைவுகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தரும் வரலாற்றின் பக்கங்களில் படம் ஆரம்பிக்கிறது.
நீண்டகாலமாகத் தொடர்ந்த சுதந்திரப் போராட்டங்கள் ஒரு வரலாற்றுத் தருணத்தில் உச்சகட்டம் அடைந்து ஆங்கிலேயர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க, தோதாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு கிட்டத்தட்ட திவாலான நிலையிலிருந்த ஆங்கில அரசு, உறிஞ்சிச் சப்பி வீசப்பட்ட பழமான இந்தியாவில் ஒரு ராணுவத்தை நிர்வகிக்க ஆகும் செலவு உட்பட பலவற்றை கணக்கில் கொண்டு இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்கிறது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதை எதிர்பார்த்து உள்ளே கனன்று கொண்டிருந்த அரசியல் லாப அறுவடைக் கணக்கீடுகள் வேகம் பெற்று பெரும் தீயாக பற்றி எரிய ஆரம்பிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் வெகு காலம் முன்பே இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள பெரும்பான்மை ஹிந்து தலைவர்களின் மேல் சந்தேகம் கொண்ட இஸ்லாமியத் தலைவர்கள், அங்கிருந்து பிரிந்து தாக்காவில் (இன்றைய பங்களாதேஷ்) 1906ம் வருடம் ‘அனைத்திந்திய முஸ்லீம் லீக்’ கட்சியை ஆரம்பிக்கும் போதே அதன் அப்போதைய தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களால் மத அடிப்படையிலான பிரிவினைக்கான வித்து விதைக்கப்பட்டுவிட்டது.
“இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு ஜனநாயக நாடாக உருவானால் இந்துப் பெரும்பான்மையான நாடாக இருக்கும், மதச்சிறுபான்மையினராக முஸ்லீம்களுக்கு என்றும் எந்த உரிமையும் கிடைக்காது, உயிருக்குப் பாதுகாப்பும் இருக்காது,” என்று ‘நம்பிக்கை இழந்த’ முகம்மது அலி ஜின்னா இஸ்லாமியர்களுக்கென தனி நாடு அமைந்தால் மட்டுமே அவர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழமுடியும் என்று பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்வைக்க அவருக்கு ஆதரவு பெருகுகின்றது. நாட்டில் தங்களின் பங்கைப் பிரித்துத் தரச் சொல்லிக் கேட்டு நச்சரிக்கிறார்.


பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய, ஜின்னா நேரடிச் செயலில் இறங்க அறைகூவுகிறார். 1946, ஆகஸ்ட் 16 ந் தேதி முஸ்லீம் லீகின் கோட்டையான கல்கத்தாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் புதிய நாடான ‘பாகிஸ்தான்’ பிரித்துத் தரப்படவேண்டும் என்று போராடுகின்றனர். கூட்டம் எப்படி மெல்ல கலவரமானது என்பதை இன்று உயிருடன் இருக்கும் - அந்தச் சம்பவங்களை நேரில் கண்டவர்களும், பத்திரிக்கையாளர்களும் விவரிக்கின்றனர். தங்கள் புதிய நாடுக்கான கோரிக்கை முனைநகர்ந்து இந்து எதிர்ப்பு வெறுப்பாக மாறுகின்றது. போராட்டக் குழுவினுள் ரௌடிக் கும்பல் மெல்ல உசுப்பேற்ற கூட்டம் இந்துக்கள் வாழும் பகுதிகளை நெருங்கி வளைக்கிறது. அவர்களின் வீடுகளையும், கடைகளையும் சூறையாடிக் கொளுத்துகின்றது. கலவரங்களுக்கே உரிய பாலியல் பலாத்காரம், கொலைகள் என எல்லாக் கொடுஞ்செயல்களும் அரங்கேறுகின்றன. பதினான்கு பதினைந்து வயதுப் பையன் எவ்வாறு வெகு இயல்பாக கும்பல் மனநிலையில், உயிருக்காகக் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு இந்து முதியவரைக் கொலைசெய்ய காலைவாரிக் கீழே வீழ்த்துகிறான் என்பதை நேரில் பார்த்தவர் விவரிக்கிறார். மூன்றே நாட்களில் ஐயாயிரம் உயிர்களைப் பலி கொண்டு, தீக்கிரையாகிச் சாம்பலான கட்டிடங்களுடன் கலவரம் அடங்குகிறது. அத்துடன் ஒன்றுபட்ட இந்தியா நீடிக்கமுடியும் என்ற கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் பொசுங்கிப் போகிறது. கூடவே இந்தியாவிலிருந்து ‘அமைதியாக’ வெளியேறும் பிரிட்டிஷ் கனவும் தகர்கிறது.
jinnah-gandhi
வன்முறை வங்காளத்துக்கு வெளியிலும் பரவ, இந்துக்கள் அதிகமுள்ள பகுதிகளில் முஸ்லீம்களும், முஸ்லீமகள் அதிகமுள்ள பகுதிகளில் இந்துக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் ஒரே ஒரு மனிதர் மட்டும் மதத்தால் பிளக்கப்படாத இந்தியா என்ற லட்சியக் கனவைச் சுமந்து கொண்டு வெற்று மார்பும், வெறும் கால்களுமாக வங்காளத்தில் கிராமம் கிராமமாக நுழைகிறார். அவர் மகாத்மா என்று மக்களால் அன்புடன் போற்றப்படும் காந்தி. இதை ஒரு முஸ்லீம் பெரியவர் பேட்டியில் விவரிக்கையில், “அவர் முஸ்லீம்களின் ஆதரவைப் பெறவே முடியவில்லை. இரண்டு கைகளையும் இரண்டு இளம்பெண்களின் தோளில் போட்டுக் கொண்டு நடந்து வரும் அவரைப் போய் இந்துக்கள் துறவிமாதிரி வணங்குகிறார்கள். ஆனால் அவரால் முஸ்லீம்களின் இதயத்தை நெருங்கக்கூட முடியவில்லை.”
காந்தியுடன் அப்போது கல்கத்தா வந்த அவரது தொண்டர் அசோகா குப்தா என்னும் பெண் பேட்டியளிக்கையில், “மதங்கள் வேறாக இருந்தாலும் ஒரே நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் ஒன்றாக இருக்கமுடியும் என்று நம்பினார் காந்தி. ஹிந்து, முஸ்லீம் எல்லோர் வீடுகளிலும் தங்கினார். ஆனால் பிரார்த்தனைக் கூடங்களுக்கு முஸ்லீம்கள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர் சொன்னதை யாருமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. பின்னாளில் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் அவர், தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று வருந்தினார். தான் இறந்து போய்விட வேண்டும் என்றே விரும்பினார்,” என்கிறார்.
எந்த முன்னேற்றமும், முடிவும் இல்லாமல் காலம் ஓட, 1947 பிப்ரவரி மாதம் ஆங்கிலேயர்கள், 1948 ஜூனில் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கின்றனர். இந்தியர்களின் கையில் அவர்கள் நாட்டை ஒப்படைப்பதற்கும், இஸ்லாமியர்களின் பாகப் பிரிவினைக்கும் மவுண்ட்பேட்டன் பொறுப்பளிக்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து குடும்பத்துடன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக அதே ஆண்டு மார்ச் மாதம் வந்து சேர்கிறார்.
நாட்டைப் பிரிப்பதற்கு முன் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்களைச் சந்தித்துச் சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகின்றார் மவுண்ட்பேட்டன். நேருவுக்கும் நாடு பிரிக்கப்படுவதில் ஆரம்பத்தில் சம்மதம் இல்லை. சோசலிஷ சிந்தனை உள்ளவரும், அதிகாரம் குவிக்கப்பட்ட மைய அரசில் நம்பிக்கை கொண்டவருமான நேருவுக்கு இதில் உடன்பாடில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து இப்போது இருப்பது போலவே ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே நாடாக சேர்ந்து வாழலாம் என்கிறார். ஜின்னாவுக்கோ மைய அதிகாரமற்ற மாகாண சுய அதிகாரமுள்ள புதிய நாடு உருவாகுமானால் தாங்கள் பெரும்பான்மை இருக்கும் இடங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும், எனவே தனிநாடு அவசியமில்லை, இல்லாவிட்டால் தனிநாடு தான் ஒரே தீர்வு என்று நினைக்கிறார். பேச்சு வார்த்தைகள், சமரச முயற்சிகள் தோல்வி அடைந்து கடைசியில் நாட்டைப் பிரிப்பது என்று முடிவாகின்றது. இரண்டு தலைவர்களிடமும் பேசிப்பார்க்கும் மவுண்ட்பேட்டனால் நேருவுடன் நட்புடன் பழக முடிகிறது ஆனால், “ஜின்னா சுமுகமில்லாதவர், மிகவும் இறுக்கமானவர் - பனிக்கட்டி போல இறுக்கமானவர்,” என்று கூறியதாக மவுண்ட்பேட்டனின் மகள் கூறுகின்றார்.
அடுத்து வரும் நாட்களில், ஐந்து நதிகள் பாயும், வளமான பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்களும், முஸ்லீமகளும் வசிக்கும் பகுதிகளில் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. பஞ்சாப் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டால் முஸ்லீம் அரசாங்கத்தின் கீழே வாழநேரும் என்பதை இஸ்லாமியர்களுடன் வரலாற்றுப் பகை கொண்ட சீக்கியர்களால் ஏற்கமுடியவில்லை. அத்தனை நாள் சாதாரணமாக வாழ்ந்துவந்த இரண்டு மதத்தவரும் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதமும், படைகளும் திரட்டுகிறார்கள். சில சீக்கிய கிராமத் தலைவர்கள் இந்த சண்டைகள் வேண்டாம் என்று ஊர்க்காவல் படை அமைத்து தங்கள் கிராமங்களில் வாழும் இஸ்லாமியரைக் காப்பாற்றுகின்றனர்.
பின்னர் அந்தக் கிராமங்களை இஸ்லாமியர்கள் ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டபடி ஆயுதங்களுடன் ஆக்கிரமிக்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திடாத கிராமத் தலைவர், முஸ்லீம்களிடம் சிக்கினால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு மதம் மாற்றம் செய்யப்படுவர் என்று நொந்து போகிறார். பத்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் பெண்களை மொத்தமாக ஒரு ரகசிய இடத்தில் மறைத்துப் பாதுகாக்கிறார்கள். பின்னர் நடந்ததை நேரில் பார்த்த தலைவரின் மகன், ஐம்பது வருடத்து பழைய கோர நினைவுகளை பேட்டியில் சொல்கிறார், “அப்பா எனது அக்காவை ‘வா மகளே’ என்று கூப்பிட்டார், தனது நீண்ட வாளை அக்காவின் கழுத்தை நோக்கி ஓங்கி வீசினார். அக்காவின் தலை தனியாக மண்ணில் உருண்டது. அடுத்து இன்னொரு சகோதரி. அங்கே எந்தப் பெண்ணும் கதறவில்லை, பயப்படவும் இல்லை, இறைநாமத்தை சொல்லியபடி தைரியமாக இருந்தார்கள். அப்புறம் நாங்கள் கேட்டதெல்லாம் டக், டக் என்னும் தலைகள் வெட்டப்படும் சத்தம் தான்,” சொல்லும் போதே துக்கம் தொண்டையைக் கவ்வ பேசமுடியாமல் அழுகிறார். இன்னொரு சீக்கியர், “எங்களில் சரிபாதியைக் கொன்றார்கள். அப்புறம் நானும் என் வாளால் எதிர்ப்படும் முஸ்லீம்களை எல்லாம் வெட்டினேன். எனவே யோசித்து வருத்தப்பட ஒன்றும் இல்லை,” என்கிறார்.
“நாட்டை ஒப்படைப்பது, பிரிப்பது என்று முடிவு செய்த பின்னால் ஏன் 1948 என்று ஒரு வருடம் தாமதம் செய்யவேண்டும். அது வரை இங்கே நடக்கும் எல்லாவறுக்கும் நான் ஏன் பொறுப்பாளி ஆகவேண்டும்?” என்று நினைத்து மவுண்ட்பேட்டன் மூன்றே மாதத்தில் -ஆகஸ்டு 15, 1947ல் சுதந்திரம் கொடுத்துவிடுவது என்று தீர்மானிக்கிறார். ஆனால் இந்த குறைந்த கால அவகாசமே பிரிவினையை மிகக் கொடூரமான ஒரு வரலாற்று நிகழ்வாக ஆக்கியது. இந்தியாவில் மதப் பெரும்பான்மையினராக முஸ்லீம்கள் உள்ள வடமேற்கு, கிழக்குப் பகுதிகள் அவர்களின் புதிய நாடாக அமையுமென்று தீர்மானிக்கப்படுகின்றது. கனவு மெய்ப்படுவது போல முஸ்லீம் மக்கள் மகிழ்கிறார்கள். ஆனால் திட்டவட்டமான எல்லைகள் வகுக்கப்படவில்லை. இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து வாழும் பகுதிகளில் யார் பெரும்பான்மை, எது அதிக சேதமில்லாமல் எல்லைகளை பிரிக்கும் வழி, நதிகள், ரயில் தடங்கள் போன்றவை எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என ஆயிரம் சிக்கல்கள்.
சிரமம் மிக்க இப்பணி இங்கிலாந்திலிருந்து பாரிஸைத் தாண்டி கிழக்கே பயணம் செய்திராத ராட்க்ளிஃபிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் இருக்கும் பிரிட்டிஷாரின் அக்கறையின்மையை நாம் உணரும் போது எழும் கசப்பு, பின்னர் அதன் கொடுமையான விளைவுகளைப் பார்க்கும் போது வெறுப்பாக வளர்கிறது. பிரிவினைக்கு முப்பத்து ஆறு நாட்களுக்கு முன் இந்தியா வரும் ராட்க்ளிஃப், பஞ்சாப் மற்றும் வங்காளத்திற்கே செல்லாமல் வைசிராயின் விருந்தினர் மாளிகையில் ஒரு அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் இந்திய வரைபடத்தில் உதவியாளர் ஒருவரிடம் இந்து, சீக்கிய, முஸ்லீம் மக்கள் தொகையின் கணக்கீடுகளைக் கேட்டுக்கொண்டே தோராயமாகக் கோட்டை வரைகிறார். அவர் வரைபடத்தில் வரைந்த கோடு புதிதாக உருவாகும் இரண்டு நாடுகளின் தலைவிதியாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முடிவு வரியாகவும் ஆகிறது.
வரலாற்றுப் பெருமையும், அழகும் மிக்க லாகூர் நகரம் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதி. அங்கிருந்த கல்விக்கூடங்கள், வங்கிகள், பணம் புழங்கும் தொழில் நிறுவனங்கள் என எல்லாம் இந்துக்களின் உடைமை. எனவே லாகூர் இந்தியாவின் பகுதியாக அறிவிக்கப்படும் என்று முஸ்லீம்களும் இந்துக்களும் எதிர்பார்த்திருக்க, ராட்க்ளிஃப் வரைந்த தலைவிதி லாகூரை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்து விடுகிறது. குறைந்த நாட்களே உள்ள நிலையில் இனியும் இங்கிருந்தால் உயிரும் மிஞ்சாது என்று பெரும்பாலான லாகூர் இந்துக்கள் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறர்கள். அப்படி எதுவும் மோசமாக நடக்காது, பிரிட்டிஷ் அரசின் கீழ் வாழ முடியுமானால் முஸ்லீம் அரசின் கீழும் வாழலாம் என்று நினைத்த ஹிந்துக்களின் நிலைமையை சோம் ஆனந்த் என்னும் அப்போதைய லாகூர் வாசியும், அப்போது லாகூர் கலைக் கல்லூரியின் மாணவரும் பின்னாளில் இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியருமான சதீஷ் குஜ்ராலும் விரிவாக விளக்குகின்றனர்.
லாகூர் தெருக்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. “சால்மி எனப்படும் ஹிந்துக்கள் நிறைந்த பகுதி ஒட்டுமொத்தமாக தீயிடப்பட்டு, கொழுந்துவிட்டு எரிந்ததை ஐந்து மைகளுக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து பார்த்தேன்” என்கிறார் சோம் ஆனந்த். அதே நேரம் அம்ரிதசரில் முஸ்லீம் பெண்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியில் இழுத்துவரப்பட்டு கற்பழிக்கப்படும் கொடுமையும் நடந்தேறுகிறது. பிரிவினை என்ற சிந்தனை உண்டான மறுகனமே வன்மமும் பயங்கரவாதமும்தான் மக்களை நோய்போலப் பீடிக்கிறது. கருணை என்பதே கருகிப்போனது போல இருக்கிறது. நிலைமை மிக மோசமடையும் சூழலில் தந்திரமாக எஞ்சி இருக்கும் பிரிட்டிஷ் படைகளை இங்கிலாந்துக்கு திரும்ப அழைத்துக் கொள்கிறது ஆங்கிலேய அரசாங்கம். ஒருபக்கம் எங்கும் வன்முறை, இன்னொரு பக்கம் அதை அடக்கப் போதுமான படை பலம் இல்லாத நிலை.
9
இதற்கு நடுவே சுயாட்சி செய்து வந்த சிறிய மன்னராட்சிப் பிரதேசங்கள் பிரிட்டிஷார் வெளியேறினால் பழையபடி தங்களின் நிலையைத் தாங்களே தீர்மாணிக்கலாம் என்று நினைத்திருக்க, மவுண்ட்பேட்டன் நேருவுடன் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கையின் படி அரசர்களை அழைத்து, “இந்தியாவுடன் இணைந்துவிடுங்கள், இல்லையெனில் மக்களாட்சியின் மாபெரும் அலையில் அடித்துத் செல்லப்படுவீர்கள்,” என்று எச்சரிக்கை கொடுத்துவிடுகிறார்.
ஆகஸ்ட் 14, 1947 ல் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கபடுகிறது. மறுநாள் ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியா சுதந்திர நாடாகிறது. ஒட்டுமொத்த நாடும் சுதந்திர கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, காந்தி மட்டும் தன் தாய்நாடு மதக்காழ்ப்பினால் துண்டாடப்பட்டு பிரிவதை மனதளவில் ஏற்கமுடியாமல் கல்கத்தாவில் உண்ணாவிரதம் ஏற்று, தன்னை வருத்திக்கொண்டு மரணத்தை விரும்பி ஒடுங்கியிருக்கிறார்.
டெல்லியிலும் கராச்சியிலும் அணிவகுப்புகள், ஊர்வலங்கள் என்று மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, பிரிவினையின் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட அப்பாவிப் பொதுமக்களான இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் தலைமுறைகளாக மூதாதையர் வாழ்ந்த மண்ணையும், தங்கள் உடைமைகளையும், உணர்வுகளையும் கண்ணீரில் கரைத்துவிட்டு தங்கள் புதிய வாழ்விடம் நோக்கிய பயணத்தைத் துவக்குகிறார்கள்.
உலக வரலாற்றில் மானுட இனம் செய்த மிகுந்த துயரம் மிக்க பயணங்களில் ஒன்றாக என்றென்றைக்கும் ஆகிவிட்டது அது. காலணிய அரசின் சுரண்டலில் பல நூறாண்டுகள் வாடி ஏழ்மையில் தள்ளப்பட்ட லட்சக்கணக்கான பாரத நாட்டு மக்கள், வன்முறையில் எஞ்சிய உற்றார் உறவினர்களோடும், மூட்டை முடிச்சுகளை அள்ளிப் பொறுக்கிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும் கால்நடையாகவும் எதிரெதிர் திசைகளில் நடக்கின்றனர். ஐம்பது மைல் நீளத்துக்கு மக்களின் வரிசை இருந்ததாக அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு காவலர் பேட்டியில் கூறுகிறார். நான்கு மணி நேரம் ஆகும் ரயில் பயணம் மொத்த ரயிலையும் ஈ கூட்டம் போல எஞ்சின், ஜன்னல் கம்பி, படிக்கட்டு, கூரை என எல்லாப்பக்கமும் ஒட்டிக்கொண்டும், தொங்கிக் கொண்டும் அப்பி மொய்த்திருக்கும் மக்களுடன் ஐந்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் வரை எடுக்கிறது. எல்லாத் திசையிலும் எதிர்ப்படும் பக்கமெல்லாம் மக்கள் கூட்டம்.
PARTITION_MIGRATION
மக்களை இடப்பெயர்வு செய்யும் பணியில் இருந்த ஒரு காவலர் தான் கண்டதை விவரிக்கிறார். ஏற்கனவே தொடர் வன்முறைகளில் சரியாக உணவு உட்கொள்ளாத வற்றிப் போன ஜீவன்கள் உணவும், எந்தவிதமான மருத்துவ வசதியும், குடிக்க நீர் கூட இல்லாமல் உயிர்த்திருக்க வேண்டி நடக்கிறார்கள். இதற்கு இடையிலும் கொலைகள், கற்பழிப்புகள்…. அவ்வப்போது ஆகாய விமானம் மூலம் உணவுப் பொருட்கள் போடப்படுகின்றது. அது கிடைக்கும் அதிர்ஷ்டமும் இல்லாதவர்கள் கிடைத்ததைச் சாப்பிடுகிறார்கள், அல்லது பசியால் காய்ந்த வயிற்றுடன் வெயிலில் நடந்து கொண்டே இருக்கிறார்கள். நோய் வாய்ப்பட்டு விழுகிறார்கள். பூச்சிகள் போல பொலபொலவென வழியிலேயே செத்து உதிர்கிறார்கள்.
பயனத்தின் மூன்று நாட்களுக்குப் பிறகு வற்றிப் போன உடலுடன் சுமைகளைத் தூக்க முடியாமல் முதலில் கைகளில் வைத்திருக்கும் உடைமைகளைக் கைவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். பின்னர் சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள். ரோட்டோரத்தில் சாவை நோக்கி ஆசையாகத் தவழும் அப்பாவிக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே நடக்கிறார்கள். இதைக் கேட்டதும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தனது கட்டுரை ஒன்றில் விவரித்த ஆப்பிரிக்கக் கதை நினைவிற்கு வந்து மனதைப் பிழிகிறது.
“சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.”
இந்தக் கொடுமை எல்லாம் எங்கோ ஆப்பிரிக்காவில் தான் நடக்கும் என்று நினைத்திருக்கும் நம் நினைப்பில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவது போல வருகிறது அந்தக் காவலரின் பேட்டி. இதே நாட்டில் தான் அறுபது வருடங்களுக்கு முன் இத்தனை கொடுமைகளும் மதத்தின் பெயரால், பிரிவினையின் பெயரால் அரங்கேறியுள்ளன. அந்தத் தாய்மார்களின் கருப்பை அடைந்த கொதிப்புக்கும், வேதனைக்கும் பிரிவினைக்கு வித்திட்ட தலைவர்கள் தங்கள் மதத்தின் புனித நூலின் எந்தப் பக்கங்களில் சமாதானம் தேட முடியும்? அவர்களின் வயிற்றெரிச்சலைப் பெற்று உருவான எதுவும் நிம்மதியாக நிலைக்குமா?
uk_india_pic_patition_camel_1947

ஒன்றரைக் கோடி மக்கள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இடம்பெயர வேண்டிய கட்டாயம் பிரிவினை வாதத்தால் நேர்கிறது. இருபுறமும் நடந்த இடப்பெயர்வினால் குறைந்தது பத்து லட்சம் மக்கள் சாகிறார்கள். எங்கும் பிணக்குவியல், கழுகுகள் தங்கள் ரத்த பந்தங்களைக் கொத்தித் தின்பதை தங்கள் கண்கொண்டு காண நேரும் அவலம் அந்த மக்களுக்கு. தன்னால் வரையபட்ட எல்லைக் கோடும், அதன் பொருட்டான இடப்பெயர்வும் விளைவித்த கொடும் விளைவுகளைப் பார்த்த ராட்க்ளிஃப், குற்றஉணர்வு மேலிட தனது சம்பளப்பணத்தை வேண்டாமென்று பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டு, இங்கிலாந்து திரும்புகிறார்.
ஆங்கில அதிகாரிகள், மவுண்ட்பேட்டன் மனைவி, இந்திய அதிகாரிகள் எனப் பலரும் பஞ்சாபிற்கு வருகை தருகிறார்கள். யாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை. வீடு, குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மக்கள் பிரிவினையால் எல்லாம் இழந்து நடுத்தெருவிற்கு வந்து அகதிகளாகி கடைசியில் ஏதோ புதிய இடங்களில் அகதிகள் கூடாரங்களில் காத்திருக்கிறார்கள் - தங்கள் எதிர்காலத்துக்காக. ஆயிரம் ஆயிரம் கரங்கள் சோற்றுக்காக பிச்சைக்காரர்களைப் போல வெட்டவெளியில் உயர்ந்து காற்றில் தவிப்புடன் துழாவுகின்றன.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பஞ்சாபில் அகதிமுகாமில் இருக்கும் மக்களை நேரில் சந்திக்க வருகிறார். அப்போது பஞ்சாப் அகதிகள் முகாமில் இருந்த ஓவியர் சதீஷ் குஜ்ரால் அங்கே நடந்தவற்றை மிகத் துல்லியமாக நினைவிலிருந்து மீட்டுச் சொல்கிறார், “அத்தனை காலம் தங்கள் அன்பான தலைவராக நேசித்த நேருவை, அகதிகள் கொல்லும் வெறுப்பில் இருந்தார்கள். நேரு அதிர்ச்சியடைந்தார். நானும் நேருவை மிக விரும்பியவன். என்னாலும் அன்று அவரைக் கொஞ்சம் கூட நேசிக்கமுடியவில்லை. இந்த அரசியல்வாதிகள் தான் எல்லா இழப்புகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும் காரணம்.”
பிரிவினையால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும்தான். உலகின் எல்லா பெருமதங்களும் வந்து குடியேற முடிந்த பாரத தேசத்தின் ஆதாரமான இறையாண்மையை மறந்து, மதரீதியான மனப்பிளவு முற்றிச் ‘சேர்ந்துவாழ முடியாது’ என்று வெறுத்து, நாட்டையே பிரிக்கும் அளவுக்கு மதவெறி ஆனது இந்த தேசத்தின் துரதிர்ஷ்டமே. மதப்பிளவை மக்கள் மனதில் விதைத்த அரசியல்வாதிகள் வசதியாகத் தங்கள் பங்கைப் பெற்றுக் கொண்டு சிறு கீறல் கூட உடம்பில் விழாமல் நாட்டின் தலைவர்கள் ஆனார்கள். வீணாக உயிரை விட்டது அப்பாவி அடித்தட்டு மக்களே.
இரண்டு நாட்டு மக்களையும் இவ்வளவு கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி, மத அடிப்படையில் பிரித்து உருவாக்கப்பட்ட தேசம் பின்னர் வரலாற்றில் அடைந்த ‘வளர்ச்சி’ என்னவென்று ஆராய்ந்தால், பிரிக்கப்பட்ட கையுடன் சுடச்சுட ஒரு யுத்தம் உட்பட மொத்தம் நான்கு யுத்தங்களை (1947, 1965, 1971 மற்றும் 1999) இந்தியா மீது தொடுத்ததும், தொடர்ந்து மறைமுகமாக எளிய முஸ்லீம்களை மதரீதியாக மூளைச்சலவை செய்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவைத்து அவர்களின் அமைதியான வாழ்க்கையைச் சீரழிப்பதும் தான். மதத்தின் அடிப்படையில் பிரிந்து சென்ற நாடு விரைவில் அதே மத அடிப்படைவாதத்திற்குள் வழுக்கி விழுந்து, ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்கு உள்ளேயே சகிப்புத்தன்மை இல்லாமல் நாளும் குண்டுவைத்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒப்பிட்டால், இஸ்லாமியர்களின் ‘பாதுகாப்பிற்கும்’ நலனுக்காகவுமே உருவாக்கப்பட்ட பாகிஸ்தானைவிட, மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் வாழ்க்கைத் தரம் பலமடங்கு உயர்ந்தது. உலகில் இன, மொழி, மதத்தின் அடிப்படையிலான பிரிவினைவாதத்தை உரக்கக் கூச்சலிடும் அனைவருக்கும் பாகிஸ்தானின் நிலை ஒரு பாடமும் ஆகும்.
பெரும்பாலும் பிரிவினையை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மையான ஒளிக்கோப்புகள், நேரில் பார்த்த -பாதிக்கப்பட்ட மக்களின் பேட்டி, மவுண்ட்பேட்டனின் மகள், நேருவின் உறவுக்காரப் பெண், காந்தியின் சிஷ்யை, பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை செய்தவர்கள், கலவரங்களையும், பேச்சுவார்த்தைகளையும் பதிவு செய்த பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் பேட்டி, அளவான பின்னனி இசை மற்றும் நல்ல விவரணையுடன் எடுக்கப்பட்டுள்ளது இந்த ஆவணப்படம்.
பிபிசியால் எடுக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம், நடந்த சம்பவங்களைத் காலவரிசைப்படி தொகுத்துக் காட்டினாலும் இந்து-முஸ்லீம் பிரச்சனைகளையே நிகழ்ந்த கொடுமைகளுக்கு முக்கியமான காரணமாகக் காட்டுவதாக இருக்கிறது. முப்பத்தி எட்டு கோடி மக்கள் வாழும் மிகப்பெரிய நாட்டை சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுரண்டி ஆண்ட பிரிட்டிஷார் -தங்களுக்கு இனிப் பிரயோசனம் இல்லை என்றவுடன் அவசரம் அவசரமாக தெளிவான திட்டங்கள் எதுவும் வகுக்காமல், ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்பது போன்ற உதாசீனத்துடன் நடந்து கொண்டது மேம்போக்காகச் சொல்லித் தாண்டப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களை நேரடியாகப் பாதிக்கும் தேசப்பிரிவினையை எந்த அக்கறையும் இல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கை, உணவு, குடிநீர், இடப்பெயர்வுக்கான வாகன வசதி, மருத்துவ வசதி குறித்தான எந்தத் திட்டமிடலும் இல்லாமல் பட்டிமாடுகளை அவிழ்த்துவிடுவது போல நடந்துகொண்ட இரக்கமின்மை அழுத்தமாக சுட்டிக்காட்டப்படவில்லை.
பிரிவினை என்ற ஒரு நிகழ்வு மட்டும் விளைவித்த பேரிழப்புகள் இவை. அதற்கு முன் சுதந்திரம் அடைவதற்காக தொடர்ந்து நூற்றாண்டு காலம் இந்த நாட்டு மக்கள் செய்த தியாகங்களில் எத்தனை சதவீதம் அப்படியே சத்தியத்தின் முழு வெக்கையோடு பதிவு செய்யப்பட்டுள்ளது? ஐரோப்பாவில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகட்டும், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களாகட்டும், விரிவான தகவல்களுடன் வரலாற்று நூல்களும், வரலாற்றுத் தருணங்களின் எல்லாக் கோணங்களையும், அனைத்துத் தரப்பையும் கருவாகக் கொண்டு எண்ணற்ற ஆவணப்படங்களும், மிகச்சிறந்த திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.
ஆனால் நம் நாட்டில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் இந்தியர்களால், இந்திய அரசாங்கத்தால் வரலாற்று முக்கியத்துவம் அறிந்து ஆவணப்படுத்தப்படவில்லை. மாறாக உண்மைகள் மழுங்கடிக்கப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன. காரணம் -பழைய கசப்புகள் மேலும் வெறுப்பைத்தான் வளர்க்கும் என்கிற மொண்ணையான அரசியல் நிலைப்பாடு. மக்கள் முன் நம் வரலாற்றை ஒளிவு மறைவில்லாமல் வைக்க வேண்டும். மக்கள் முட்டாள்களல்ல, தங்கள் சொந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை உணர வேண்டும். நெல்நாற்றுகளைப் பறித்து புதிய இடத்தில் நடுவது போல, தங்கள் வேர்கள் படர்ந்த மண்ணிலிருந்து தங்களைப் பறித்து எடுத்து, வாழும் வேட்கையில் புதிய மண்ணில் தங்களை விதைத்துக் கொண்ட நம் மக்களின் வரலாற்றை சொல்லும் இந்த ஆவணப்படம் நியாயமாக இந்தியரால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஒரு வேளை இந்தப் பிரிவினைக்கான, அதன் மாபெரும் வேதனைகளுக்கான காரணங்களும் பாரபட்சமின்றி இந்திய துணைக்கண்டத்தின் எளிய மக்களின் பார்வையில் நியாயமாகத், தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். படம் யூட்யூபில் காணக்கிடைக்கிறது. அவசியம் பார்க்கப்பட வேண்டியது.
 
நன்றி: சொல்வனம் - இதழ் 69. http://solvanam.com/?p=20444
-பிரகாஷ் சங்கரன்.

Sunday, April 1, 2012

ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)

      உலகில் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்வும், தொல்லியல், மானுடவியல் உணர்வும் குறைவு என்பதே நமக்கு கல்வியும், தத்துவ சிந்தனையும் பயிற்றுவித்த மேலைநாட்டு பாமரர்களின் கருத்து. ஆனால் ஆதிமனித இனமான தமிழர்கள் தங்கள் வரலாற்றை குரங்கிலிருந்து மனிதனாக பரிணமித்த காலந்தொட்டு தொடர்ந்து பாடியும், ஆடியும், எழுதியும் வந்திருக்கிறார்கள் என்பது மேலை அறிஞர்களே அறியாதது. தமிழர்கள் தங்களுக்கென குமரிக்கண்டம் என்னும் ஒரு கண்டத்தையே உருவாக்கி இன்னும் நினைவில் பேணி வருவதையும் அவர்கள் உணரவில்லை. பல்வேறு மனித இனம் இருப்பதையும், நாவலந்தீவில் அவைகள் வரலாறுணர்வோடு முரணியக்க ரீதியாக முரன்பட்டு வாழ்ந்ததையும் ஏராளமான முதற்சங்கப் பாடல்களின் வாயிலாக அறியலாம். ஆனால் வடக்கில் புதிய மனித இனங்கள் தோன்றி, வரலாற்றுணர்வு இன்றி தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, பின் வரலாற்றையே திருத்தி எழுதி, அதையே மதமாகவும் மாற்றிவிட்டனர். உதாரணமாக ராமாயணம், மகாபாரதம் போன்ற மத நூல்களில் ஆரிய-திராவிட இனவரைவியல் குறிப்புகள் ஏராளமாக உள்ளது. இதிகாசம் என்ற போர்வையில் அவை பதுக்கி வைத்திருக்கும் தீவிர இனவாதக் கருத்துக்கள் அதிதீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. குறிப்பாக ராமாயணம் என்னும் மத நூலில் ஆரியராமன் தெற்கு நோக்கி வரவர இங்கே மனிதர்களே இல்லை. குரங்குகளும், அரக்கர்களும் தான் இருந்தனர். அவர்களை அழித்து அவன் வடக்கு மீள்வதே ஆரியப் படையெடுப்பைப் போற்றுவது தான்.

     மதுரைக் காமராஜ் பல்கலைக்கழக திராவிட நாட்டாரியல் துறை முன்னாள் தலைவர் பேரா.முனைவர். அற்புதப் பாண்டியன் (எம்.ஏ.எம்.ஃபில், பி.எச்.டி, டிப்ளமோ இன் காந்தியன் தாட், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்) இது தொடர்பான நாட்டார் ஆய்வுகளில் முன்னோடி. கீழக்குயில்குடி, பன்னியான், செக்காணூரனி, செல்லம்பட்டி, பகுதிகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட திராவிட இன சாதியினரிடத்தில் புழங்கப்படும் நாட்டுப்புறப் பாடல்களில் இராமன் தென்னகம் நுழைந்து இராமேஸ்வரம், இலங்கை சென்று போர் நடத்தியது முதல், மீண்டும் அயோத்தி புறப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் தலைமுறைகளாகப் பாடப்படுவதை இருபதாண்டு காலம் தேடியலைந்து சேகரித்துள்ளார். அது ஐநூற்றிச் சொச்சம் பக்கங்கள் அளவுள்ள தனி நூலாகவும் அவரது மாணவர்கல் சிலருடைய முனைவர் ஆய்வேடுகளாகவும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக சங்ககாலத்துக்கும் முற்காலத்திய தமிழ்நடையில் அமைந்த "ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து" என்னும் புத்தகம் அவரது அயராத உழைப்பில் வெளிவந்தது (தமிழ் திராவிடர் பதிப்பகம், விளக்குத்தூண் சமீபம், கீழமாசி வீதி, மதுரை-9, போன் நிர்.- 0452-2735460). இந்தப் புத்தகம் என்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, தியாகராசர் கல்லூரி முதலியவற்றில் முதுகலை தமிழ் வகுப்பிற்கான பாடமாக இருந்தது. மதுரைக் கல்லூரியில் மட்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்து விட்டார்கள். அந்த பார்ப்பணச் சதியை எதிர்த்து மதுரைக் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

புதிதாக வந்த இனமக்களை தமிழர்கள் "ஆரு இவிய?" என்று வியந்து கேட்டதே 'ஆரிவிய' என்று மறுவிப் பின்னர் "ஆரிய" என்ற சொல்லாகி அதுவே அந்தப் புதிய இனத்தாரின் பெயராக வழங்கிற்று என்று தமிழ் மொழியியலாளர்கள் கருதுகின்றனர். "ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து" நூலில் மிகநுட்பமான, இது வரை வெளிவராத மறைக்கப்பட்ட பல வரலாற்றுத் தகவல்கள் தமிழ்ச்சமூகத்தின் முன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆரியனான ராமன் போர் முடிந்து சீதையை மீட்டதும், கிட்கிந்தையிலிருந்து பிடித்து வரப்பட்ட வானரங்களை அம்போ என்று விட்டுச் சென்றதும், அவை பின்னர் தென்மேற்கு நோக்கி நகர்ந்து அடர்ந்த பசுமையான மேற்கு மலைத்தொடர்களின் அடிவார ஊர்களில் குடியேற ஆரம்பித்தன, பின்னர் அவை மெல்லப் பரிணாமத்தில் வளர்ந்து ஆதிக்கப் போர்ச் சாதியாயின. ராமனின் படை நாயகர்களாக இருந்த அந்த சாதி நாயர் என்றழைக்கப்பட்டது. அப்பகுதியில் மொந்தன் வாழைச் சாகுபடியில் ஒரு புது புரட்சியையே உருவாக்கிய இனம் அவர்கள். உலகத்திற்கே முதல்முறையாக வாழைப்பழத்தின் பல பிரயோகங்களைக் கற்றுத் தந்தவர்களும் அவர்களே. இன்றும் "குலேரம் வாலி நாயர் பேரவை" என்ற சங்கம் இருப்பதும், அவர்களிடம் ராமனின் படை நாயகர்கள் என்பதற்கான  ஆதாரமாக செப்புப் பட்டையம் இருப்பதும் பேரா.அற்புதப் பாண்டியன் வெளியிட்டுள்ளார். ஜெ கூட (ஜெயலலிதா இல்லை,  ஜெயமோகன்) இதுபற்றி விரிவாகவே எழுதியுள்ளார்.

     எஞ்சிய மீதிப் பழங்குடிகள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்கி பரிணாம வளர்ச்சியில் தங்கள் குரங்கு, அரக்க குனத்தை விட்டு திருந்தி வாழ ஆரம்பித்தனர். கடலைத் தாண்டிய அவர்கள் "தாண்டியர்" என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி "பாண்டியர்" என்றாயிற்று என்றும் பேரா. அற்புதப் பாண்டியன் ஆய்வு முடிவில் தெரிவிக்கிறார். அவர்களே பின்னர் பலநூறாண்டுகள் கழித்து மகாபாரத காலத்தில் ராமனின் வம்சத்தில் வந்த கிருஷ்ணன் என்னும் கறுப்பு ஆரியனை (இது ஆரிய திராவிடக் கலப்பின் அடையாளம் என்கிறார் பேரா. பாண்டியன்) போரில் ஆதரித்து வெற்றி தேடித் தந்தனர். கிருஷ்ணனின் சொந்த ஊரான மதுரா வை மீட்டுத் தந்தனர். அதுவே "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்ற பெயர்வரக் காரணமாயிற்று. சுந்தர என்ற சொல் ராமாயன காலத்திலும் ஆதிமந்தி இனத்தாரைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதை, இராமாயணத்தில் 'சுந்தரகாண்டம்' என்னும் பகுதியின் சிறப்பால் அறியலாம் என்று மேலதிகத் தகவல் கொடுக்கிறார் பேரா. அற்புதப் பாண்டியன். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் மீண்டும் பாண்டியர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டது. இன்னும் மேற்குமலைகளில் வசிக்கும் ஆதிமந்திவமிசத்தார் கிழக்கில் இருந்து வருபவர்களை பாண்டி என்றழைப்பதையும் பேரா.அற்புதப் பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார். 

கல்யாணமாகி ஹனிமூனுக்கு (தேனிலவு) காட்டுக்கு வந்த இடத்தில் மனைவியத் தொலைத்த ராமன் பார்ப்பவர்களிடமெல்லாம் 'ஹனிமூன் ஹனிமூன்' என்று புலம்ப அது ஆதிமந்திவமிசத்தாரால் ஹனுமான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஹனிமூன் என்ற ஆங்கிலச் சொல்லின் வேர் செந்தமிழில் இருந்து சென்றதும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ராமாயணம் போன்ற மதநூல்களில் மறைக்கப்பட்ட பரிணாம, வரலாற்று, ஆரிய-திராவிட போர்த் தகவல்கள் இருக்கின்றன என்பதை வெள்ளிடைமலையாக வெளிச்சம் போட்டு தமிழ்கூறும் நல்லுலகின் முன்பு காட்டியது பேரா.முனைவர்.அற்புதப் பாண்டியனின் ஆய்வு முடிவுகள். ஆனால் வழக்கம் போல ஆரியச் சதியில் அவரின் ஆய்வு முடிவுகள் பரிகசித்து ஒதுக்கப்பட்டதால் தமிழ் அன்னையின் துயரக் கண்ணீர் தான் மிச்சம்.

முனைவர்.பேரா. அற்புதப் பாண்டியனின் மின்னஞ்சல் முகவரி wonder.paniyan@tamil.mku.in . பழகுவதற்கு எளிய, இனிய மனிதர். ஆனால் வெளியுலகிற்கு தெரியாமல் மறக்கடிக்கப்பட்டவர் இந்த மாமேதை. பேரா.முனைவர் அற்புதப் பாண்டியன் என்றொருவர் இருக்கிறார் என்பதே கற்பனை என்று இன்று தமிழ்த் திராவிடர்களே நினைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய உட்கருத்து என்னவென்றால், முனைவர்.பேரா.அற்புதப் பாண்டியன் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேட்பதே ஆரியச் சதிதான். 

முனைவர்.பேரா.அற்புதப் பாண்டியன் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுநனவிலி. அவரை அவ்வளவு எளிதில் மறக்கடிக்க முடியாது. அவர் திராவிடப் பாரம்பரியத்தின் ஆதார ஆற்றல். அவரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அவரை ஒருவரிலிருந்து இன்னொருவராக மாற்றவே முடியும். ஏதாவது ஒரு பெயரில் அவர் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பார்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் அவரின் ஆய்வுப் பணிக்கு ஓய்வு கொடுத்தாலும், அவர் தமிழுக்கு ஓய்வுகொடுப்பதாக இல்லை. மதுரை இறையியல் கல்லூரியின் மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவே குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடித் தடுப்புகளுக்கு உள்ளே அமர்ந்து, வராக அவதாரம் போல் தமிழ் இலக்கியங்களையும், குறிப்பாக இந்துமத நூல்களையும் குவித்து மூக்கால் கிண்டிப், பிதுக்கி எடுத்து ஆய்வுக் கட்டுரைகளாக அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.

தற்போது அவருடைய மகள் செல்வி. அற்புதசுகம், Ph.D in Applied Linguistics (U of C, USA) தாய்த்தமிழகம் மீண்டுவந்து நாற்பத்தி ஐந்து நாட்கள் தான் ஆகிறது, தோள்ப்பையில் கட்டியுள்ள விமான பாதுகாப்பு சோதனை அட்டை கூட இன்னும் பிரிக்கப்படவில்லை. தந்தையுடன் பஞ்சு பொதியப்பட்ட சுழல் நாற்காலியில் உட்கார்ந்து தன் அதிநவீன மடிக்கணினியைத் திறந்து ஆய்வுப் புயலைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டார். "நான் கொண்டு சங்க வயது சிம்மாசனத் தமிழை பின்னால் வருவேன் மதுரைக்கு" (I will get the Sangam age throne of Tamil, back to Madurai!) என்று சபதம் செய்துள்ளார்.

செல்வி.அற்புதசுகம் Ph.D (USA) வின் ஆய்வுப் பொருள், "தற்காலத் தமிழ் விடுகதைகளில் திராவிட உள்குறியீட்டுச் சிந்தனைகள்" என்பதாகும். ஒரே ஒரு ஆய்வுமுடிவை மட்டும் இந்தக் கட்டுரைக்காகச் சொன்னார்.

 "கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். அது யார்?" என்ற விடுகதைக்கு "பூட்டு" என்று குழந்தைகள் கூட பதில் சொல்லும். இதன் பின்னால் உள்ள குறியீட்டு அர்த்தத்தை ஆய்வு செய்தால், "கருப்புச் சட்டை அணிந்தவரான தந்தை ஈ.வே.ரா பெரியார், திராவிடத் தமிழனின் இன, மானம் காத்த காவல்காரன். இரும்புப் பூட்டுப் போல உறுதியானவர்" என்கிற திராவிடத் தமிழ்ச் சிந்தனை உள்ளுறையாக இருப்பதை அறியலாம் என்று செல்வி.அற்புதசுகம் Ph.D (USA) தெளிவு படுத்துகிறார்.

கூடியவிரைவில் மதுரை தமுக்கம் மைதானத்தை மையமாக வைத்து, தமிழ்ச்சூழலில் ஒரு பூமிக்குலுக்கம் வரவிருப்பதாக பஞ்சுபொதிந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே, அசல் பெப்பே ஜீன்ஸ் கால்சராயை இறுக்கியபடி வசீகரப்புண்ணகை செய்தார்.

தொடர்புகொள்ள: Dr.Arputhasukam, Ph.D (USA),
                               Rolling chair in Contemporary Tamil Conundrum, 
                               Tamilnadu Theological Seminary, 
                               Arasaradi, Madurai - 625 010. 
                               email: wonder.sukam@theology.com



- பிரகாஷ் சங்கரன்