Monday, December 12, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 4)


மைக்கேலேஞ்சலோ (1475 – 1564)


ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள ஊரில் பிறந்தவர் மைக்கேலேஞ்சலோ. மிக இளம் வயதிலேயே அவரது கலைத்திறன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. ஃப்ளோரன்ஸ் வந்து டொமினிகோ கிர்லாண்டயோ என்னும் ஓவியரின் கீழ் பயின்றார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்வாக்கு மிக்க மெடிஷி குடும்பத்தின் தத்துப் பிள்ளையாக ஆனார். பொறியியல், ஓவியம், சிற்பம், கட்டிட வடிவமைப்பு, கவிதை என்னும் பல்வேறு துறைகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கினார். லோரென்சோ மெடிஷி இளம் மைக்கேலேஞ்சலோவின் திறமை மேல் அபார நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தார். அவரின் முதல் கலைப்படைப்புகளுக்கு ஆனையும், பொருளுதவியும் கொடுத்தவரும் மெடிஷி தான்.

பிற்காலத்தில் வளர்ந்து புகழ்பெற்று பெரும் கலைஞனாக வெனிஸ், ரோம், பொலோன்யா என்று பல இடங்களிலும் வேலை செய்து, பொக்கிஷங்களாக புகழப்படும் கலைப்படைப்புக்களை உலகில் அவரின் கலை, கற்பனை மற்றும் அறிவுத்திறனின் சாட்சியமாக நிறுவிவிட்டிருந்தார். போப் உட்பட ரோமின் முக்கியமானவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்தார். ரோமின் புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயக் கட்டுமானத்தில் தலைமை சிற்பி, வடிவமைப்பாளராக இருந்தார். அவர் உயிருடன் இருந்த போதே அவரின் வாழ்க்கை வரலாறு எழுதி வெளியிடப்பட்டது. ஒரு கலைஞனுக்கு அவன் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அங்கீராம் அனைத்தும் குறைவிலாது கிடைத்தது.

ஆனாலும் மைக்கேலேஞ்சலோ எப்போதும் தனித்து, உள்முகமாக ஒடுங்கியவராக, சோகம் ததும்பும் முகத்துடன் இருந்தார். பணமிருந்தும் ஏழை போல தோற்றமளித்தார். தன்னுடைய 57வது வயதில் தொமாஸோ டி காவிலியெரி என்னும் 23 வயது இளைஞன் மேல் மிகுந்த காதல் கொண்டார். அந்த இளைஞனைக் குறித்து முன்னூறுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகளை எழுதியுள்ளார். அந்த உறவு ஓரினச்சேர்க்கை என்று சொல்லப்பட்டாலும், மைக்கேலேஞ்சலோவைப் பொருத்தவரை ஒரு சிற்பியாக, ஓவியராக அவரது படைப்பூக்கத்தைப் பெருக்கும் - அழகான உடலை ஆராதிக்கும், தூய பிளாட்டோனிய (பாலுணர்ச்சியை மீறிய) காதல் என்றார். இறப்பதற்கு முன் அவர் வரைந்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிற்ப, கட்டிட மாதிரிகளை எரித்தார்.

இத்தனைக்கும் மீறி இன்றும் மறுமலர்ச்சிக் காலத்தின் அசல் முன்மாதிரியாக மைக்கேல்லேஞ்சலோவும், அவரது சம காலத்திய இன்னொரு மாமேதையான லியானோர்டோ டாவின்சியும் போற்றப்படுகிறார்கள். டேவிட், தி பியதா (The Pieta), இறுதித் தீர்ப்பு நாள் (the last Judgement), the creation of Adam, Adam and Eve in Eden garden, சிஸ்டின் சாப்பலின் மேற்கூரை ஓவியம் (முன்னூறுக்கும் மேற்பட்ட உருவங்கள் அடங்கியது – 4 ஆண்டுகள் ஆனது வரைந்து முடிக்க) என் இன்னும் எண்ணற்ற அவருடைய புகழ் பெற்ற சிற்பங்களும், ஓவியங்களும் உலகின் முக்கியமான தேவாலயங்களையும், அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கிறது. மிகுந்த தெய்வபக்தியும், தீவிர கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கையும் உடையவரான மைக்கேலேஞ்சலோ இரண்டு முறை கடுமையாக நோய்வாய்ப்படு ம்ரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் பிழைத்தார். “நான் மிகச்சாதாரனமானவன், கலையின் மூலமாக கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக எனக்கு ஆயுளை நீட்டித்தந்துள்ளார்” என்றார். எண்பத்தி எட்டாவது வயதில் ரோமில் உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி உடல் ஃப்ளோரன்ஸுக்கு கொண்டுவரப்பட்டு, சாண்டா கிராஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாருடனும் அதிகம் பழகாத, வாழ்நாள் முழுதும் தனித்து ஒதுங்கி வாழ்ந்து மறைந்த அந்த உன்னதக் கலைஞனின் கல்லறையில் நின்ற போது எனக்குள் எழுந்த கேள்வி, எது மனிதனை உள்ளொடுங்கி, தனக்கான ஒரு உலகைக் கற்பனையில் கட்டி, அதை ஓவியமாகவும், சிலையாகவும் கலைவடிவமாக வெளிப்படுத்த வைக்கிறது? கடவுளா, தனி மனித இயல்பா, அவன் அகம் மட்டும் அறியும் இன்ப துன்பங்களின் உச்சகட்டங்களா, அவன்  விரும்பிய ஆனால் இழந்த உறவுகளா, வெளித்தெரியாத வேறு ஏதாவதா... எது கலையாகிறது?

உயர்ந்த தூண்களின் உச்சியில் வளைந்த கூம்பு விதானங்கள், அப்பால் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடி ஓவியத்துக்கு சூரியன் உயிர் கொடுக்க, நீண்ட பிரார்த்தனைக் கூடத்தில் சுற்றுலாப் பயணிகளின் கிசுகிசுவென பேச்சு சப்தத்துகிடையே கேமராக்கள் கண்சிமிட்ட, கல்லறையின் முன்னால் நெடு நேரம் நின்று கொண்டிருந்தேன்.   பளிங்குச் சமாதியில் குளிர்ந்த வெண் பளிங்குச் சிலையாக மூன்று பெண்கள் சோகமாகத் தலை குணிந்து அமர்ந்திருக்க உள்ளே மௌனமாக மைக்கேலேஞ்சலோ அவருக்குப் பிடித்த தனிமையில் இருப்பது போலத் தோன்றியது.
மைக்கேலேஞ்சலோவின் கல்லறை

கலிலியோ கலிலி (1564 -1642)

பிஸா நகரத்தில் பிறந்து ஃப்ளோரன்ஸ் நகரத்தில் வளர்ந்தவர் கலிலியோ. கணிதம், இயற்பியல், வானவியல், தொழில்நுட்பம், தத்துவம் என்று பல அறிவுசார் துறைகளில் மேதையாகத் திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மறுமலர்ச்சியின் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர். ஐன்ஸ்டீனால் நவீன அறிவியலின் தந்தை எனப் புகழப்பட்டவர். கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை ஆதரித்ததால் கிறித்தவ மத அதிகாரபீடங்களின் எதிர்ப்புக்கு ஆளானார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள புவிமையவாதம் பொய், சூரியன் அசையாமல் மையத்தில் இருக்க பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்றார். மதவிசாரனைக்கு உட்படுத்தபட்ட போதும் தன் கருத்துக்களில் பின் வாங்காததால் “மத நம்பிக்கைகளுக்கு எதிரான கடுமையான சந்தேகவாதி” என முத்திரை குத்தப்பட்டார். அதன்பின் வாழ்நாளின் இறுதி வரை ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள அவருடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மூன்று வருடங்கள் தொடர்ந்து வாரம் ஒருமுறை பைபிளின் ஏழு பாவ மன்னிப்பு பகுதிகளையும் படிக்க வேண்டும் என தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களை விளக்கி நூல்கள் எழுதினார்.  தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு 77 ஆம் வயதில் மரணமடைந்தார். முதலில் வெளியில் புதைக்கப்பட்ட அவரது உடல் பின்னர், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு சாண்டா கிராஸ் தேவாலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கலிலியோவின் கல்லறை

கலிலியோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவியலின் பல உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்ட இந்தியாவின் பாஸ்கரர், இன்றும் பாஸ்கராச்சாரியர் என்று ஞானியாக, ஆசிரியராகப் போற்றப்படும் நமது பண்பாடு நினைத்து பெருமைப்படாமல் இருக்க நான் “பகுத்தறிவு” பாசறையைச் சேர்ந்த புத்திசாலிமூடனா என்ன?? தான் கண்டடைந்த உண்மையை துணிச்சலாக முன்வைத்து மதக்குருடர்களை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞனுக்கு மனதார வணக்கம் செய்துவிட்டு நகர்ந்தேன்.

மக்யாவெல்லி (1469 – 1527)

ஃப்ளோரன்ஸில் பிறந்த அரசியல் தத்துவ சிந்தனையாளர். மெடிஷி குடும்பத்தை விரட்டிவிட்டு குடியரசு மலர்ந்த போது, 29 வயதில்  ஃப்ளோரன்ஸின் நிர்வாக சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மெடிஷி குடும்பம் ஃப்ளோரன்ஸைக் கைப்பற்றியபோது சிறையில் கொடுமைகள் அனுபவித்து, பின்னர் குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பில்லாமல் எழுத்தில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது நெருங்கிய அரசியல் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். தனது புகழ்பெற்ற அரசியல் சிந்தாந்த நூலான ‘தி பிரின்ஸ்’ ஐ எழுதினார். உன்னத அரசியலுக்கும், நடைமுறைக்குச் சாத்தியமான அரசியலுக்கும் உள்ள அடிப்படையான முரனை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிமுறைகளைப் பேசினார். தனிப்பட்ட ஒழுக்கம், பொது ஒழுக்கம் இரண்டையும் குழப்பாமல் பிரித்துக்கொள்ள வேண்டும், எந்தப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு முற்றிலும் புதிய அரசனாக அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புபவன் சில ஒழுக்க/நேர்மை மீறல்களைச் செய்தாக வேண்டும் என்றார். கற்பணையான உன்னதச் சமூகம் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அரசனுக்கு முன் மாதிரியாக இருக்காது என்பது அவர் கொள்கை. 58 ஆவது வயதில் ஃப்ளோரன்ஸில் மரணமடைந்தார். சாண்டா கிராஸில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவுச் சின்னத்தில் “புகழ்ச்சிக்கு இன்னொரு சொல் ஈடில்லாத பெயருடையவர்” என்று இத்தாலியனில் பொறித்து வைத்துள்ளார்கள்.
மக்யாவெல்லியின் கல்லறை

இன்னும் ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த பல சிற்பிகள், ஓவியர்கள், மதகுருமார்கள், இலக்கியவாதிகள் போன்றோரின் கல்லறையும் நினைவுச் சின்னங்களும் இங்கே இருக்கிறது. தேவாலயத்தின் வெளியே உயர்ந்த பீடத்தில் பெரிய பளிங்குச் சிலை வைத்திருக்கிறார்கள் தாந்தேவுக்கு. சாகும் வரை பிரியமான ஊருக்குள் வரவிடாமல் செய்த ஃப்ளோரன்ஸ் நகரின் குற்ற உணர்வு, பாவமன்னிப்புக் கேட்டு வைத்திருப்பது போல இருந்தது. பஸிலிக்காவின் உள்ளும் புறமும் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்கும் பிற வண்ணப் பளிங்குக் கற்களையும் கொண்டு இழைத்திருக்கிறார்கள். உட்புறச் சுவர்களில் இருபதுக்கு இருபது அடி அளவில் எல்லாப் பக்கமும் பைபிள் காட்சிகள், ஃப்ளோரன்ஸ் வரலாற்று நிகழ்வுகள், ரோமத் தொண்மங்களை நிஜ அளவுள்ள ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு தூணிலும், சிறிய ‘ஆல்டர்’களிலும் பளிங்குச் சிலைகள். இண்டு இடுக்களில் எல்லாம் ஓவியங்கள், சிற்பங்கள், போதாததற்கு மாபெரும் ஜன்னல்களில் கண்ணாடி ஓவியங்கள். வழிப்பாட்டுத் தலமாக இல்லாமலிருந்தால் இதுவும் ஒரு அருங்காட்சியகம் தான்.
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்காவின் உள்புறம்...
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்கா
சந்தேகத் தாமஸ்.. சாண்டா கிராஸ் பசிலிக்கா


இதமான குளிர், மரவேலைப்பாடுகள் மிகுந்த உயர்ந்த மேற்கூரை, ஒவ்வொரு படத்தின் முன்பும் ஆடாமல் நின்றெரியும் மெழுகுவர்த்திகள், அதன் முன் மண்டியிட்டு வணங்கும் வெள்ளை முகங்கள், குறிப்பாக கண்மூடி அசையாமல் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் பொண்ணாக மினுங்க, பிரார்த்தனை மரப்பெஞ்சில் உட்கார்ந்து உற்று ரசித்தேன்.

மிதமான விளக்கு வெளிச்சம் ஆரஞ்சு வண்ணத்தில் பரவிக் கிடக்க, தங்க முலாம் பூசப்பட்டுள்ள ஆல்டரும், அலங்கார வளைவுகளும், பூ வேலைப்பாடுகளும், ஓவியங்களும் ஜொலித்தது. மொத்த தேவாலயமுமே ஒரு பெரிய முப்பரிணாம ஓவியம் போலவும், அதனுள் ஒரு ஓவியக் கதாபாத்திரமாக நானும் இருப்பது போல பிரமை வந்தது.

ஒருபுறம் அதி நுணுக்கமாக செதுக்கப்பட்டு, ஆடை மடிப்புகள், பறக்கும் கூந்தல், நீட்டிய கைகள், எடுத்த பாதம் என உயிர்-நிகர் உடல் அசைவின் கனங்கள், முக பாவனைகள் என்று பளிங்குச் சிலைகள் உயிருடன் எழுந்து வருவது போலிருக்க, மறுபுறம் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் உறைந்த பாவனையில், மூடிய இமைகளுக்குள் மெல்ல உருளும் விழிகள், சிற்பம் போல் அசையாமல் கண்மூடி பிரார்த்திக்கும் சிவந்த இதழுள்ள பெண்கள் உயிரற்ற சிலைகள் போலத் தோன்றும் முரனை எண்ணி நகைத்தபடி வெளியேறினேன்.
பெயர் மறந்து போன ஏதோ பளிங்கு தேவதை..
ஒரு பெரிய சதுக்கத்தின் முன் வானைத் துளாவும் கூம்பு வடிவ கோபுரங்களுடன் நிற்கிறது சாண்டா கிராஸ் தேவாலயம். சதுக்கத்தில் ஒரு பெண் தெருக்கலைஞர் தனியளாக நின்று வயலின் வாசித்தபடி கீச்சுக் குரலில் ஏதோ பாடிக் கொண்டிருந்தாள், நெளிந்து நெளிந்து மேலேறி குரல் உச்ச சுருதியில் எங்கோ உயரத்தைத் தொட்டபோது எதுவோ கைதவறி விழுந்து உடையப் போவது போல் எனக்குப் பதட்டமாக இருந்தது. வயலின் கம்பியின் நாதம் எது, அவள் குரல் எது என்று பிரித்தறிய முடியவில்லை. அவள் அப்படியே குரலை நீட்டிப் பிடித்து கொஞ்சம் மேலேயே தங்கிவிட்டு பின் அழகாக வழுக்கிக் கொண்டு இறங்கி வந்து இயல்பான குரலில் பாடினாள். பாடி முடித்ததும் கூடி இருந்தவர்கள் பலத்த கைதட்டலில் உற்சாகப் படுத்தினார்கள். சுற்றிலும் இருந்த பெரிய கட்டிடங்களில் குரல் எதிரொலித்து அவள் பாடுவதை வெட்டவெளியிலும் நன்றாகக் கேட்கக் கூடிய ஒலியமைப்பை உண்டாக்கியது.

சுற்றிலும் சிறிதும், பெரிதுமான பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், காபிக் கடைகள். பளீரென்ற வெளிச்சம், நீல வானம். சுற்றுலாப் பயனிகளுக்கேற்ற காலநிலை. மக்கள் உற்சாகமாகக் கூட்டம் கூட்டமாக பேசிச் சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சட்டென்று ஐநூறு ஆண்டுகள் முன்னால் வந்து குதித்தது போலிருந்தது. ஒரு கோகோ–கோலா வாங்கிக் குடித்து 2011 க்கு வந்தேன்.


பகுதி-3                                                            பகுதி-5

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...