Saturday, December 3, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)
அக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வெனிஸ் வழியாக நீண்ட ரயில் பயணம். ஐரோப்பாவில் விமானப்பயணத்தை விட மிகவும் சௌகரியமானது ரயில் பயணம். ஏசுவைப் போல ரெண்டு கையையும் நீட்டி ‘நம்புங்க துரை..நான் அப்படிப்பட்டவனில்லீங்க’ என்று சாட்சியம் சொல்லும் பாதுகாப்பு சோதணை கிடையாது, கூட்டம் இருக்காது, அமரவும் கால் நீட்டிக் கொள்ளவும் வசதியான நல்ல அகலமான இருக்கைகள், விமானத்திற்கு இணையான துயமையான கழிவறை வசதிகள், வண்டி ஓடும் தடதட சத்தமே இல்லாமல் இருக்கும் அமைப்பு, உள்ளே புகைபிடித்து அடுத்தவர்களுக்கு கேன்சர் அன்பளிப்பு அளிக்க அனுமதியில்லை, நிலப்பரப்புகளை நன்றாக காணும்படியான அகலமான கண்ணாடி ஜன்னல்கள்... என்ன ஒன்று நம் ஊர் போல உடனே பேசக்கிளம்பி இறங்கும் போது, ‘மறக்காம மெயில் பண்ணுங்க’ என்று ஆரத்தழுவிப் பிரியும் ‘ரயில் ஸ்னேகம்’ உருவாகும் வாய்ப்பு இல்லை. நேரம் பெரியவிஷயம் இல்லை என்றால், பேச்சுத் துணைக்கு ‘ஆள்’ இருந்தால் அல்லது ‘பராக்கு’ பார்ப்பதிலும், தண்டிதண்டியான புத்தகத்துள் முகம் புதைத்து மூக்கால் உழும் பழக்கமும் இருந்தால் ரயில் பயணமே சுகமானது.

ஃப்ளோரன்ஸ்

அழகிய ‘ஆரன்’ நதியின் கரையில் அமைந்திருக்கும் ஃப்ளோரன்ஸ், இத்தாலியின் துஸ்கானி மாகாணத்தின் தலைநகரம்,. இத்தாலிய மொழியில் ‘ஃபியரென்ஸ்’ என்றும் லத்தீனில் ‘ஃப்ளோரென்ஸியா’ என்றும் அழைக்கப்படுகிறது.

நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மையப் பகுதி முழுவதும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நகரம் ஒட்டுமொத்த பகுதியும் உலகப் பொக்கிஷமாகக் கருதப்படும் அளவிற்கு என்ன சிறப்பு அங்கே இருக்கிறது?

ஃப்ளோரன்ஸ் – இத்தாலி மற்றும் மொத்த ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் (Renaissance) பிறப்பிடம். பதினாலாம் நூற்றாண்டில் ஃப்ளோரன்ஸிலிருந்து தான் அறிவியல், தத்துவம், சமயம், அரசியல், இசை, ஓவியம் என எல்லா துறைகளிலும் ஒரு கலாச்சாரப் புரட்சி அலை கிளம்பி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் 17ஆம் நூற்றாண்டு வரை அதன் அனைத்துத் தளங்களிலும் புதிதாகப் புரட்டிப் போட்டது.

ஃப்ளோரன்ஸில் வாழ்ந்த மேதைகளின் பட்டியலைப் பார்த்தால் மலைப்பு வரும், அதுவே அந்நகரம் ஏன் ஐரோபிய வரலாற்றில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கும். சுருக்கமான ஒரு பட்டியல்: பலதுறை மாமேதையான லியனார்டோ டாவின்சி, கலைமேதை மைக்கேல் ஏஞ்சலோ, அரசியல், தத்துவ சிந்தனையாளர் மாக்கியவில்லி, ஐரோப்பாவின் தலைசிறந்த கவியான தாந்தே, வானவியலாளர் மற்றும் தத்துவவாதியான கலிலியோ கலிலி, செவிலியர்களின் முன்மாதிரியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

மெடிஷி குடும்பம்

ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த ‘மெடிஷி’ என்னும் பிரபுக்குடும்பம் ஐரோப்பா முழுமையிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்தில் இருந்து மட்டுமே நான்கு கத்தோலிக்க ‘போப்’கள் உருவாகியிருக்கின்றனர், இரண்டு ஃபிரெஞ்சு அரசிகள் மற்றும் ஆஸ்திரிய நாட்டின் மன்னரின் பட்டத்தரசி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஃப்ளோரன்ஸின் நுண்கலைகள் மற்றும் கட்டிடக்கலைக் கலைஞர்களை ஆதரித்து கலைகளின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமானவர்களும் இந்தக் குடும்பத்தினர் தான். வங்கித்துறையில் நுழைந்து அரசியல், மதம் என மெல்ல மெல்ல வளர்ந்த சாதாரண விவாசாயக் குடும்பம் இது.  ஃப்ளோரன்ஸை மையமாக்கி 14-18 ஆம் நூற்றாண்டு வரையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் 18ஆம் நூற்றாண்டில் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்திருக்கிறது மெடிஷி குடும்பம்.

புனித மேரி கதீட்ரல் (Cathedral of St. Mary of the Flower)

13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து படிப்படியாக 15ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் முழுவதும் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கவிந்த அரைக்கோள வடிவ மையக்கும்மட்டம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கும்மட்டமாக இருந்துள்ளது. 

அகலமான உயர்ந்த வாயில்களின் இருபக்கத்தையும் அலங்கரிக்கும் சுருள் வடிவ பளிங்குத் தூண்கள் கவனிக்கப்படவேண்டியது. ஒவ்வொரு சுருள் வடிவமும் வேறுபட்டவை. இடையில் வெவ்வேறு நிற பளிங்குக்கல்லை இழைத்து எப்படி இந்தச் சுருள் வடிவங்களை வடித்தார்களோ சிற்பிகள்? 

காலை மற்றும் மாலையில் இளஞ்சூரியன் வண்ணக்கிரண விரல்களால் இந்த பளிங்கு ஆலயத்தின் சுவர்களில் வருடி விளையாடும் காட்சியும், இரவில் முழுநிலவு மௌனமாக குளிர் வெண் ஒளியைப் பொழிந்து வட்ட முகம்மலர விண்ணிலிருந்து ரசித்திருப்பதையும் கண்டபோது ஒருவித பரவசம் மனதைக் கரைத்தது.
முன்பக்கத்தைத் தவிர மற்ற பக்கங்கள் அழுக்கும் பிசுக்கும் படிந்து பளிங்கின் பளபளப்பு மங்கிக் கிடந்தது. ஒரு வயதான அமெரிக்கர் என்னிடம், “இது பரவாயில்லை இருபது வருடம் முண்டு நான் வந்த போது இதைவிடக் கேவலமாக இருந்தது” என்றார். புதுப்பிக்கும் பணி மிகுந்த பொருட்செலவில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சைனோரியா சதுக்கம்

வெக்ஹியோ அரண்மனை
ஃப்ளோரன்ஸின் மையத்தில் அமைந்துள்ள இந்தச் சதுக்கத்தில் ‘வெக்ஹியோ அரண்மனை’ (Vecchio palace) மற்றும் அழகிய மேற்கூரை வளைவுகள் கொண்ட சைனோரிய அரங்கம் இருக்கிறது. இங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். எல்லாம் பளிங்குச் சிலைகள் சிலையின் முப்பரிணாம வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் உச்சபட்ச திறமையுடன் பயன்படுத்தியுள்ளார்கள். 360 கோணமும் சுற்றி வந்து நுணுக்கமாக ரசித்தால் மட்டுமே கலைஞனின் உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்புக் கொடுத்த்தாகும். எல்லாம் கிரேக, ரோம தொண்மங்களில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்கள், சிலையாக உறைந்து நூறாண்டுகள் தாண்டி நிற்கின்றது. 

பாலிக்சீனாவின் பலி

ட்ரோஜான் போர் முடிந்ததும், அக்கிலிஸின் ஆவி கிரேக்கர்களின் முன் தோண்றி, அவர்கள் கப்பல் மீண்டும் ஹெல்லாஸ் சென்றுஅடைய காற்று வீச வேண்டுமானால் மனித பலி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறான். அக்கிலிஸின் கல்லறையில் கன்னியான பாலிக்ஸீனாவைப் பலி கொடுக்க வேண்டுமென்கிறான். பாலிக்ஸீனா அடிமையாய் சாவதைக் காட்டிலும் பலியாய் மடிவதை விரும்புகிறாள். அக்கிலிஸின் மகன் நியோப்டோலமஸ் அவள் கருத்தை அறுத்துக் கொல்கிறான். பாலிக்ஸீனாவின் தாய் ஹெக்குபா தனது மகளின் முடிவை என்னிக் கண் கலங்குகிறாள்.ஹோமரின் இலியட்டில் இந்தக் கதை வரவில்லை, என்றாலும் யூப்ரிடிஸ் என்பவர் எழுதிய ட்ரோஜான் பெண், ஹெக்குபா என்னும் நாடகங்களில் வருகிறது. பியோ ஃபெடி என்னும் சிற்பி மனத்தில் கண்டதை பளிங்கில் அற்புதச் சிலையாக உருவாக்கி நிறுத்தியிருக்கிறான் சைனோரிய சதுக்கத்தில். சிலைகளின் முகத்தில் உணர்ச்சிகள், ஆடை, கூந்தல் ஆகியவற்றின் நுண்மையான, தத்ரூபமான செதுக்கல், கடைசிப் படத்தில் ஹெக்குபாவின் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளி வருவதைக் கூட செதுக்கியிருக்கிறான் மகாகலைஞன்!!

ஆடை மற்றும் கூந்தல் இழைகளின் நுணுக்கம்...
கண்ணீர்த் துளியை கவணிக்கவும்...                                                               பகுதி - 2