Monday, February 25, 2013

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்


உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும்.
மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம். குறிப்பாக அதன் நடத்தை (Behaviour) சார்ந்த பண்புகளில் மிக ஆதாரமானவை என்று கூறலாம்.
உடலில் சர்க்கரை சிதைவுமாற்றம் செய்யபட்டு ஆற்றலாக சேமிக்கப்படுவது முதல் சந்ததியை தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் வரை ஒரு உயிரியுடன் தொடர்புள்ள அனைத்தும் அதன் உயிரியல் பண்புகள் தான். அனைத்து உயிரியல் பண்புகளும் அதற்குக் காரணமான மரபணுவில்தான் குறிக்கப்பட்டு, தலைமுறைகளாக தொடர்ந்து கடத்தப்படுகிறது. உயிரியல் பண்புகள் நேரடியாக ஒற்றை மரபணுவால் குறிக்கப்படலாம் அல்லது மரபணுத் தொடரில் ஆங்காங்கே தனித்தனியாக விரவியிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களின் தொகுப்பினால் குறிக்கப்படலாம். (உதாரணமாக ஒருவரின் உயரத்தை நிர்ணயம் செய்வது எந்த ஒரு தனியான மரபணுவும் இல்லை, மாறாக, பல்வேறு மரபணுக்களின் கூட்டு வெளிப்பாட்டால் நிர்ணயம் செய்யப்படுகிறது.)
ஒருசெல் நுண்ணுயிர்களில் மரபணுவில் குறிக்கப்பட்டுள்ள பண்பு நேரடியாக வெளிப்படுகிறது. ஆனால் உயர் உயிரினங்களில் (விலங்குகளில்) இது கொஞ்சம் சிக்கலானது. குறிப்பாக நடத்தை சார்ந்த அடிப்படையான பல பண்புகள் இரண்டு அடுக்குகளிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. முதலில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களில் ஒரு உயிரியல் பண்பு குறிக்கப்படுகிறது, அடுத்ததாக இந்த மரபணுக் குறியீடு, ஒரு உயிரியல் பண்பாக உருப்பெறும் களமான மூளையில், ஒவ்வொரு பண்புக்கும் உள்ள சிறப்புப் பகுதிகளில் வெளிப்படுவதன் மூலம் முழுமை அடைகிறது. மனிதன் போன்று, நரம்பணு வலைப்பின்னல்களும் முளையின் அளவும் பெருவளர்ச்சி பெற்ற உயிரினத்தில் இந்த இரண்டாம் கட்ட வெளிப்பாடு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, பேச்சு/மொழி என்னும் திறனுடன் தொடர்புடைய மரபணுக்கள் வெளிப்படும் களம் மனிதனின் மூளையில் உள்ள பேச்சுக்கான சிறப்புப் பகுதிகள்.

மூலக்கூறு மரபியல் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளின் பெரும்பாய்ச்சல் நிகழ ஆரம்பித்த காலத்திலிருந்து அடிப்படையான பல உயிரியல் பண்புகளுக்கு மரபியல் விளக்கங்களும் ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு வரை விலங்குகளின் இயல்பு எனக் கருதப்படும் மிக அடிப்படையான உயிரியல் பண்புகள் தத்துவம், சமூகவியல், நடத்தையியல், உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்து மட்டுமே விளக்கப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாக, அறிவாற்றல் அல்லது மொழி/பேச்சு என்னும் பண்புகளுக்கான மரபியல் அடிப்படையை விளக்கி சொல்வனத்தில் முன்னர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கலாம்.
உயிரினங்களின் நடத்தை சார்ந்த மிக அடிப்படையான பண்புகள் மரபணுக்களில் ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் சில சமூக வாழ்க்கையின் மூலம் அவற்றுக்குக் ‘கற்றுத்தர’ப்படுகின்றன, வேறு சில எந்தப் புறத்தூண்டுதலோ, உதவியோ இன்றி வெளிப்படுகின்றன. காட்டில் ஒரு இளம் சிறுத்தைக் குட்டிக்கு வேட்டையாடுதல் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளும் பண்பாக இருக்கிறது, ஆனால் நீச்சல் அதற்குக் கற்றுத் தரப்படுவதல்ல. வாழ்வில் முதல் முறை அது நீரில் இறங்கும் போதே நீந்தத் தொடங்கிவிடுகிறது. வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இத்தைகைய பண்புகளை கவனித்தால் அது இன்னும் ஆச்சரியத்தைத் தூண்டும். தாயிடமிருந்து கண்திறக்கும் முன்பே பிரிக்கப்பட்டு தன் இனத்தின் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தபட்டு முற்றிலும் அன்னியமான சூழலில் வளர்க்கப்படும் நாய்களும் கூட அவற்றின் இயல்புகளை மறந்துவிடுவதில்லை. நீச்சலோ, முகர்ந்து அறிதலோ அவற்றில் எந்த ‘கற்றுத்தரலும்’ இன்றியே வெளிப்படுகிறது. சட்டென்று இப்பண்புகளை நாம் ‘அவை நாயின் இயற்கை’ என்று சொல்லிவிடுவோம். அவ்வாறு சொல்லும் போது நமக்குத் தெரியாமலே நாம் குறிப்பிடுவது இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகள் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் விதமாக உயிரிகளில் உள்ளார்ந்து பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்னும் மரபியல் நோக்கையே ! “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவா வேண்டும்?” என ஆழமான பொருள் பொதிந்த ஒரு புரிதலை எளிய பழமொழியாக பண்பாட்டில் சேகரித்து வைத்திருக்கிறோம்.
சமீபத்திய மரபியல் ஆய்வு ஒன்று இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகளுக்கான மரபியல் ஆதாரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எலிகள் பூமிக்கு அடியில் வலை தோண்டி வசிப்பது அவற்றின் அடிப்படையான உயிர்ப்பண்பு. தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு பல தலைமுறைகளாக ஆராய்ச்சிக்கூடங்களிலேயே இனப்பெருக்கம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட வெவ்வேறு இன எலிகள், பெரிய மண்தொட்டிகளில் விடப்பட்டபோது சட்டென்று மண்ணைத் தோண்டி வலைகளை அமைக்க ஆரம்பித்தன. இதன் மூலம் வலையைத் தோண்டுதல் என்னும் அடிப்படைப்பண்பு சமூக வாழ்கையால் மட்டும் உண்டாவதல்ல, மரபணுக்களிலேயே குறிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வலையைத் தோண்டும் உந்துதல் மட்டுமல்ல, தோண்டப்போகும் வலையின் கட்டுமானத் திட்டமும் கூட மரபணுவிலேயே பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆய்வு.
1
இந்த ஆராய்ச்சிக்காக, மரபணு ரீதியாக நெருங்கிய இரண்டு எலி இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஓல்ட்ஃபீல்ட் எலிகள் எனப்படும் எலி இனம் நீண்ட சுரங்கப்பாதைகளும், உள் நுழைவதற்கும் ஒரு வாசலும், ஆபத்து நேரங்களில் தப்பித்துப் போவதற்கு இன்னொரு சுருக்குவழியும் வைத்து வலைகளை தோண்டக்கூடியது. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட இன்னொரு எலி இனம் நீளம் குறைவான சுரங்கப்பாதையும், தப்பிச் செல்லும் வாசல் இல்லாமலும் உள்ள வலைகளைத் தோண்டக்கூடியது. இயற்கையான அதன் வாழ்க்கைச் சூழலிலும், ஆய்வகத்திலும் எத்தனை தலைமுறைகள் தாண்டினாலும் இனம் சார்ந்த இந்த வலைகளின் கட்டுமானத் திட்டம் மாறவே இல்லை.
அடிப்படையில் இரண்டு எலி இனங்களும் மரபணு ரீதியாக நெருங்கியவை ஆதலால் இவற்றைக் கலந்து இனப்பெருக்கம் செய்ய வைத்து கலப்பின எலிகளை உருவாக்கினர். வலையின் சுரங்கப்பாதை நீளம், தப்பிச்செல்லும் வாசல் ஆகியவற்றை, முதல் தலைமுறை கலப்பின எலிகள் தோண்டும் வலைகளிலும், கலப்பின எலிகளை மீண்டும் நீளம் குறைவான சுரங்கப்பாதை உள்ள வலைகளைத் தோண்டும் எலி இனத்துடன் இனப்பெருக்கம் செய்ய வைத்து உருவான எலிகளின் வலைகளிலும் அளந்தனர். அத்துடன் இந்த எலிகளில் இருந்து மரபணு பிரித்தெடுக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொண்ட மூலக்கூறு மரபணு ஆய்வில் எலி இனங்களின் மரபணுத் தொடரில் மூன்று பகுதிகள் வலையின் சுரங்கப்பாதை நீளத்தைக் குறிக்கின்றன என்பதையும், ஒரு பகுதி தப்பிச்செல்லும் வாசல் அமைப்பதைக் குறிப்பதையும் கண்டுபிடித்தனர்.
வலைதோண்டுதல் என்னும் அடிப்படை உயிர்ப்பண்புக்கான மரபியல் பின்புலம் மிகநீண்ட மரபணுத் தொடரில் இருந்து நான்கு குறுகிய மரபணுப் பகுதிகளில் பொதிந்துள்ளது என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துவிட்டதால், இனி இதில் நேரடியாகப் பங்குபெறும் மரபணுக்களைத் தேட வேண்டிய பரப்பு குறுகி விட்டது. விஞ்ஞானிகளின் அடுத்த ஆராய்ச்சி இலக்கு இந்த நான்கு பகுதிகளிலும் குறிப்பிட்ட எந்த மரபணு வலைதோண்டும் பண்பைக் குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான்.
burrow-shape
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகமுக்கியமான இந்த ஆய்வு, புகழ்பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’-ல் கடந்த மாதம் வெளியாகி உயிரியல் ஆய்வாளர்களின் பெரும் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஏற்கனவே விலங்குகளின் நடத்தை தொடர்பான பல பண்புகளுக்கான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், மேலும் இந்த ஆய்வின் முடிவும், அடிப்படையான உயிரியல் பண்புகளுக்கான மரபியல் குறித்த தேடலில் பல புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளன. அவை இத்தகைய ஆய்வுகளின் எதிர்கால சாத்தியங்கள் என்னவெல்லாமாக இருக்கக்கூடும் என்ற கொஞ்சம் ‘அறிவியல் புனைவுத் தனமான’ ஊகங்களை மனதில் தூண்டுகின்றன.
எலி வலை தோண்டுதல், பறவை கூடு கட்டுதல் போன்ற பெரிய உயிரினங்கள் மிகச்சிறிய குழுவாக அல்லது தனியாக ஈடுபடும் அடிப்படை உயிரியல் செயல்பாடுகளின் மரபியல் பின்புலம் தரும் வியப்பு ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் எறும்புகள், தேனீ, கரையான் போன்ற சிற்றுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்து ஈடுபடும் செயல்களில் (புற்றுக் கட்டுதல், தேனடை கட்டுதல், உணவு தேடுதல், எதிரிகளைத் தாக்குதல், சமூகமாக வாழ்தல் இன்னபிற…) மரபணுக்களின் பங்கு என்னவாக இருக்கமுடியும்? என்னும் கேள்வி இன்னும் மிகப்பெரிய வியப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு, சிலவகை எறும்புகளின் புற்றின் பிரம்மாண்டமான அளவும், ஏராளமான அறைகளும், பாதைகளும் கொண்ட மிகச்சிக்கலான கட்டுமானத் திட்டமும் ஒவ்வொரு தனி எறும்பின் திறனுக்கும், ஆயுளுக்கும் அப்பாற்பட்டவை. சில வாரங்களே உயிர்வாழும் எறும்புகள் (ராணி எறும்புகள் விதிவிலக்கு, அவை 20 - 30 வருடங்கள் வரை வாழும்) தலைமுறை தலைமுறையாகப் பிறந்து புற்றைக் கட்டி வளர்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு எறும்பின் மரபணுவிலும் இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கானத் திட்டம் இருக்க முடியுமா?
ps2
பொதுவாக, எறும்புகளின் கூட்டுமனத்தில் அந்தப் புற்றின் கட்டுமானத்திற்கான திட்டம் இருக்கக்கூடும், அந்த எறும்புகளின் கூட்டுமனம் என்பது பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற தத்துவார்த்தமான விளக்கமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பதில்களுள் சிறந்தது என்பது என் எண்ணம். புகழ்பெற்ற பகுப்பாய்வு உளவியல் வல்லுனரான கார்ல் யுங் முன்வைத்த, மனிதர்களுள் தனிமனித நனவிலியைத் தாண்டி மிக ஆழத்தில் ஒட்டுமொத்த இனத்தின் ‘கூட்டு நனவிலி’ (Collective Unconscious) இருக்கிறது என்ற கருதுகோள் உளவியலில் புதிய வாசல்களைத் திறந்தது. இந்த கூட்டு நனவிலி மனித இனத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறுகிறது. விளைவாக, கூட்டு நனவிலியில் இருக்கும் ‘தொல்படிமங்கள்’ (Archetypes) மனிதரில் நனவுமனச் செயல்பாட்டில் வெளிப்படுகிறது என்றார் யுங். இந்தக் கருதுகோளை, மேலே சொன்ன கூட்டுமனம் என்ற தத்துவார்த்தமான விளக்கத்துடன் - தலைமுறைகள் தாண்டி ஒரு மிகப்பெரிய கூட்டுச்செயல்பாட்டில் ஈடுபடும் எல்லா உயிரினங்களுக்கும் போட்டுப்பார்க்கலாம்.
உளவியலில் கூறப்படும் கூட்டு நனவிலி போல, அறிவியலில் (சமூக உயிரியலில்) ‘கூட்டு அறிவாற்றல்’ (Collective Intelligence) என்றொரு கருதுகோள் உண்டு. ஒரு உயிரினத்தில், தனித்த ஒவ்வொரு அங்கங்களின் அறிவாற்றல் ஒட்டுமொத்தமாக்க் கூடிச் செயல்படுவதே ‘கூட்டு அறிவாற்றல்’.
அடிப்படையில் மனிதன் உட்பட அனைத்துப் பெரிய பலசெல் உயிரினங்களும் தனித்தனி செல்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி ஒற்றை அமைப்பாகச் செயல்படும் விதமாக பரிணமித்தவை தான். ஒரு மனிதனின் ஒவ்வொரு நரம்பணுவும் தனித்தனியாக இருந்தால் அவை, ஒன்றிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு சமிக்ஞையைக் கடத்தும் செயல்பாட்டில் மட்டும் தான் ஈடுபட முடியும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரே மூளையின் அங்கமாகச் சேர்ந்து செயல்படும்போது ஆர்யபட்டராகவோ ஆதிசங்கரராகவோ மாறமுடியும்.
ps1
நுண்ணுயிர்கள் முதல் எறும்புகள், கரையான்கள், இன்னும் பல்வேறு பூச்சிகள், சிற்றுயிர்கள், பறவைகள், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகள் உட்பட பல உயிரினங்களில் இந்தக் கூட்டு அறிவாற்றல் செயல்படுகிறது. வானில் பறக்கும் பறவைக்கூட்டம் சட்டென்று ஒரே நேரத்தில் ஒரு திசை நோக்கி வளைந்து திரும்புதலும், கடலடியில் சிறுமீன்கள் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக நீர்ச்சுழல் போல சுழல்வதும், ஒரே திசையில் நீந்துவதும், ஒரே நேரத்தில் நீந்தும் போக்கை மாற்றி அலையெனப் புரண்டு திரும்புவதும், பெரும்படையாக லட்சக்கணக்கான எறும்புகள் உணவு தேடிப் புலம்பெயர்வதும் எல்லாம் ‘கூட்டு அறிவாற்றல்’ கொண்டும் விளக்கப்படுகின்றது. ஒற்றை பேருருவமும் மனமுமாக ஒரு உயிரினத்தின் ஒவ்வொரு தனி அங்கமும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கூட்டு இச்சையினால் (Collective Will) செயல்படும் இவற்றை ‘அதிஉயிரிகள்’ (Superorganisms) என அழைக்கின்றனர். இந்தக் கூட்டு அறிவாற்றலில் மரபணுக்கள் பங்கு இருக்க முடியுமா என்பது குறித்து எதிர்கால ஆய்வுகள் இருக்கக்கூடும்.
இத்தகைய ஊகங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இருக்கிறது, அதே ‘நேச்சர்’ இதழில் போன மாதம் வெளியான சுவிட்ஸர்லாந்தின் லாஸேன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினரால் நெருப்பு எறும்புகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு. ஒரு நெருப்பு எறும்புக் காலனியில் பொதுவாக ஒரே ஒரு ராணி எறும்பு மட்டுமே இருக்கும். சில நெருப்பு எறும்புக் காலனிகளில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட ராணி எறும்புகள் இருக்கும். இந்த இரண்டு விதமான காலனிகளைச் சேர்ந்த எறும்புகளின் மரபணுக்களில் நடத்தபட்ட மூலக்கூறு மரபியல் ஆய்வில் Gp-9 என்னும் ஒற்றை மரபணு நேரடியாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறும்பை ஏற்றுக்கொள்ளும் உயிரியல் பண்பை நிர்ணயிக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த Gp-9 என்னும் மரபணு எறும்புகளில் முகர்வுத் திறனை குறிக்கும். ஒரு எறும்புச் சமூகத்தின் இந்த Gp-9 மரபணுவில் ஏற்படும் சிறிய மாற்றம் அந்தச் சமூகம் ஒன்றுக்கு மேற்பட்ட ராணி எறும்புகளை ஏற்றுக்கொள்ளும் பண்பை உண்டாக்குகின்றது. X, Y என்று பாலின நிர்ணயம் செய்யும் மரபணுத்தொகுப்பு இருப்பதுபோல, இப்போது இந்த ஆய்வின் மூலம் முதன் முறையாக சமூக வாழ்க்கைப் பண்பை நிர்ணயிக்கும் ஒரு ‘சமூக மரபணுத்தொகுப்பு’ (‘Social Chromosome’) கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு உயிர்களின் அடிப்படை பண்புகளின் மரபியல் பின்புலத்தை நிரூபிக்கும் நேரடியான –ஒற்றை மரபணுத் துல்லியத்திற்கு தரவுகளைத் தருகிறது என்ற வகையில் மிகமுக்கியமானது.
கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட அடிப்படைக் கேள்விகளில் சிலவற்றுக்கு இன்னும் மரபியல் சார்ந்த விளக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இதுவரை மரபணு விளக்கமே கொடுக்க முடியாமல் இருந்த -பல்வேறு காரணிகள் கொண்ட, மிகச் சிக்கலான, அடிப்படையான உயிர்ப்பண்புகளுக்கு ஒன்று அல்லது பல்வேறு மரபணுக்களின் பின்புலம் இருப்பதை வெளிக்கொண்டுவரும் இத்தகைய நவீன மரபணுவியல் ஆய்வு முடிவுகள், உயிர்ப்பண்புகளைப் பற்றிய நம் புரிதலுக்கு முக்கியமான தகவல்களையும், அறிதலின் சங்கிலியில் விடுபட்ட கண்ணிகளையும், தொடர்புறும் புதிய கோணங்களையும் சேர்க்கின்றன. அதற்காக ‘அனைத்தும் மரபணு மயம்’ என்றோ, தத்துவம், சமூகவியல், நடத்தையியல், உளவியல், நரம்பியல் சார்ந்த விளக்கங்கள் காலாவதியாகிவிடும் என்றோ பொருளில்லை. இந்த மரபியல் பின்புலம் ஏனைய விளக்கங்களுக்கு அடியிலிருந்து ஒளியூட்டுவதன் மூலம் அறிதலுக்கு புதிய பரிமாணங்களையும், திசைகளையும் காட்டுகிறது.
-பிரகாஷ் சங்கரன்.

Monday, January 28, 2013

வாழ்வெனும் வரம்

1_500


கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஒரு ஆவனப்படம் பார்த்தேன். பேராழிகள் - Oceans என ஆங்கிலத் தலைப்பு.  ஜாக்குவெ பெர்ரின் (Jacques Perrin) என்னும் ஃபிரெஞ்சு நடிகர்-இயக்குனரால் இயக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் நான்கு வருடங்கள் படம்பிடிக்கப்பட்டது. ஜாக்குவெ பெர்ரின், சின்னஞ்சிறு பூச்சிகளின் உலகில் நடக்கும் தொடர்புகொள்ளல் முறைகளை நுணுக்கமாக ஆராயும் ‘Microcosmos’  மற்றும் வலசை போகும் பறவைகளின் நெடும் பிரயானத்தை விளக்கும் ‘Winged Migration’ என்னும் புகழ் பெற்ற ஆவனப்படங்களையும் இயக்கியவர்.
பூமிப்பந்தில் நிலத்தின் அளவை விட மூன்று பங்கு அதிகமான பரப்பைக் கொண்ட கடலில், நிலத்தை விட மூன்று மடங்கு அதிகம் அற்புதங்களும் இருக்கத்தான் செய்யும். பூமியின் உயிரினங்களில் மிகப்பெரியது முதல் மிகச் சிறியது வரை அங்கு உயிர் வாழ்கின்றன. நில உயிர்களின் தோற்றங்களை வைத்து நாம் அறிந்திருக்கும் வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறான, உயிர்களின் உருவ அமைப்பு குறித்தான நமது தர்க்கத்துக்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்ட, கற்பனைக்கே எட்டாத ஆயிரமாயிரம் விநோத வடிவங்களில் உயிரினங்கள். கற்பாறைக்கு வாய் வாய்த்தது போல் ஒன்று, கிளைகளும், இலைகளுமாய் நகர ஆரம்பித்துவிட்ட தாவரம் போல் ஒன்று, ஒளியே வடிவான ஒன்று, ஒளிசென்று தீண்டும் ஆழத்திற்கப்பால் முழுதும் வண்ணங்களால் வாரியிறைத்த உடலுடன் ஒன்று, உருகி உருகி வழிவது போல நகரும் ஒன்று, இன்னும் இன்னும்…. ஆனால் அனைத்திலும் நீரின் வளைவு-நெளிவு-நெகிழ்வு என்னும் அடிப்படையான இயல்பே அதில் வாழும் உயிர்களின் உடல் வடிவத்தின் தகவமைப்புக்கும் ஆதாரமான விதியாக அமைந்திருக்கிறது. வாழும் இடத்தின் இயல்பே அதில் வாழ்பவற்றின் இயல்பைத் தீர்மாணிக்கின்றது. நம்மில் பலரும் பெரும்பாலும் இத்தகைய ஆவனப்படங்களைப் பார்த்திருப்போம். எனவே அவற்றை இங்கே விவரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால், ஒன்றரை மணிநேரப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு வகையான உயிரிணங்களின் வாழ்க்கையில்  வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு உயிரினத்தின் கதை என்னைப் படைப்பின் விநோதங்களுப்பால் இயற்கையின் புதிரான கணக்கு வழக்குகளையும் -அதன் சமன்பாட்டையும், இவற்றின் வழி ஒட்டுமொத்தமாக மனித வாழ்க்கையையும் நின்று யோசிக்க வைத்தது. கடல் - எப்படியானாலும் நம்முடைய ஆதி வீடல்லவா?
தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகிறது. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையில் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு முமையாக விடுபடுகின்றன.  அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன. கடல் அலைக்கரங்களை வீசி ஓலமிட்டு அழைக்கிறது, உண்மையில் கடலடியில் மனதைத் தங்கள் குஞ்சுகளின் மேல் வைத்திருக்கும் தாய் ஆமைகளின் உயிர்த்தவிப்பு தான் கரையை மோதும் அந்த அலைகள். இப்பொழுது காமிரா வானத்தைக் காண்பிக்கிறது. இந்தக் ஆமைக் குஞ்சுகளுக்காகவே நீண்ட தூரம் பறந்து வந்து களைத்து வானத்திலேயே பசியுடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு கடற்பறவை இனம். வானை நிறைத்து நுற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன. பூமியை நோக்கி எய்யப்பட்ட அம்பு போல சர் சர்ரென்று வேகமாகப் பறந்து வந்து ஆமைக் குஞ்சுகளைக் கவ்விச்செல்கின்றன பறவைகள்.


பிறந்த நொடிமுதல் வாழ்க்கைப் பந்தயம் ஆரம்பிக்கின்றது. பந்தயத்தின் முடிவு வாழ்வு அல்லது சாவு - இரண்டில் ஒன்று தான். இரண்டு உயிரினங்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம். ஆமைக்குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியேறிய கணமே ஓட ஆரம்பிக்கின்றன. நீரின் ஆழத்திற்கு சென்று சேர்வதற்குள் மிகப்பெரும்பாலானவை மரணம் அடைகின்றன. பிறந்த அடுத்த நொடியில் மரணம். என்ன வாழ்க்கை இது? இந்தப் பிறப்பிற்கு என்ன அர்த்தம்? எதற்காகப் பிறக்க வேண்டும்? பறவை இனம் உயிர்பிழைக்கவா? அதற்காக ஆமையாய்ப் பிறந்து அக்கணமே மடிய வேண்டுமா? இது பாரபட்சம் இல்லையா? என்ன இயற்கை இது?
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சம்பவமும் அதன் முன் பின் நிகழும் சம்பவங்களுடன் கொள்ளும் தொடர்பை கவனிக்க முடிகிறது. பிரபஞ்ச விதியின் திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விலக்கப்பட, காட்சி இப்போது தெளிவாகிறது. இந்தத் தரிசனம் வாழ்வு குறித்த பல சிந்தனைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்புகிறது. கடலில் வாழும் இந்த ஆமைகள் எதற்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்ல வேண்டும்? கடலில் இருந்து நிலத்திற்கு வந்து பரிணமித்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட உயிரினங்களில், நிலத்திலிருந்து மீண்டும் கடலுக்குத் திரும்பச் சென்ற சில உயிரிகள் உண்டு. அதில் ஒன்று தான் இந்தக் கடல் ஆமைகள். ஆனாலும் அவை முட்டையிடுவதற்கு இன்னும் நிலத்தைத் தான் சார்ந்துள்ளன, கடலிலேயே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் அளவுக்கு இன்னும் பரிணமிக்கவில்லை. ஆகவே அவை நிலத்துக்கு வந்தாக வேண்டும்.
முட்டை இட்டுவிட்டு தாய் ஆமைகள் மீண்டும் கடலுக்குச் சென்று விடுகின்றன. மற்றெல்லா உயிரினத்திலும் குட்டிகள் பிறந்தது முதல் சுயமாக வாழும் தகுதி பெறும் வரை தாயால் உணவு ஊட்டப்பட்டு, உயிர் பாதுகாக்கப்பட்டு மிகக்கவனமாக பேணி வளர்க்கப்படுகின்றன. ஆனால் கடல் ஆமைக்குஞ்சுகள் பிறக்கும் போதே தன்னந்தனியாக, காத்துக்கொண்டிருக்கும் மரணத்தின் கரிய நிழலை எதிர்கொண்டபடி பிறக்க வேண்டிய சவாலை இயற்கை விதித்திருக்கிறது.
g
ஓவ்வொரு ஆமையும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான். ஆம், கரையில் பிறந்த இடத்திலிருந்து கடலுக்குள் சென்று சேரும் அந்த இருபதடி தூர உயிருக்கான ஓட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஆமை மட்டுமே கடற்பறவைகளின் பசித்த வாயில் இருந்து தப்பிக்கிறது. கடலுக்குள் சென்று சேர்ந்தாலும் கூட்டமாக இடப்பட்ட பல்லாயிரம் முட்டைகளில் எந்த ஆமைக்குஞ்சின் தாய் எந்த பெரிய ஆமை என்று எப்படி தெரியும்? எனவே தானாகவே தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டியது தான். அப்படி கரையில் உயிர் பிழைத்த ஆமைக் குஞ்சுகளுக்கு அடுத்த எதிரி கடலில் இருக்கும் பெரிய மீன்கள். அவற்றிலிருந்தும் எவை தப்புகின்றனவோ அவையே கடல் ஆமை இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு கடல் ஆமை முழு பாலின வளர்ச்சி அடைவதற்கு (இனத்தைப் பொறுத்து) குறைந்தது இருபத்தி ஐந்து முதல் அதிகபட்சம் ஐம்பது ஆண்டுகள் ஆகும். எதிரிகளிடமிருந்து தப்பி உயிர் பிழைத்து வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே பாலின முதிர்ச்சி அடைந்து தங்கள் இனத்தின் உயிர்ச் சங்கிலி அறுபடாமல் காக்கின்றன.
உயிர்வாழும் கடல் ஆமைகளை வெற்றியாளர்களின் சமூகம் என்று சொல்லலாம், அல்லது இனத்தின் தொடர்ச்சிக்கு வேண்டி உயிரிழந்த சகோதரர்களின் உயிர்த் தியாகத்தால் பிழைத்து வாழும் சமூகம் என்றும் சொல்லலாம். சுமார் 10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூதாதையர் ஆமை இனத்தில் இருந்து  பிரிந்தவை கடல் ஆமைகள். இந்தக் கிரகத்தின் உயிரினங்களில் மூத்தகுடிகளுள் ஒன்று. இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உயிர்பிழைத்து வந்தவை, ‘நேற்றுப் பிறந்த’ மனிதனால் எந்த மதிப்பும், இரக்கமும் இல்லாமல் வேட்டையாடப்படுகின்றன.
கடல் ஆமைக் குஞ்சுகள் கரையில் முட்டை ஓட்டைப் பிளந்து கொண்டு வெளிவரும் சமயத்தில் இருந்து பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று கூட பின்னோக்கியோ பக்கவாட்டிலோ ஓடுவதில்லை. அப்படி ஓடினால் ஆயிரத்தில் ஒன்று கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. மிகச்சரியாக எல்லாமே கடலை நோக்கியே ஓடுகின்றன. அவை எப்படி கடலின் திசையை அறியும்? அப்போது தான் இன்னொறு தெரிகின்றது, தாய் ஆமைகள் எல்லா முட்டைகளையும் தலை கடல் நோக்கி இருக்குமாறு இட்டிருக்கின்றன. அவற்றின் எதிர்காலத்தின் திசை கருவிலேயேயே விதிக்கப்பட்டிருக்கிறது. வெளியேறியவுடன் அந்தத் திசை நோக்கி ஓட வேண்டியது தான்.
முன்னரே நேரம் குறித்து வைத்தது போல ஒரே கால அளவைக்குள் படைபடையாக ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருகின்றன. அப்படி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் அல்லது வெவ்வேறு நாட்களில் முட்டைகளைக் கீறி வெளிவருமானால்? அப்பொழுதும் ஒன்று கூட உயிர் பிழைக்க முடியாது. மேலே பசியுடன் பறந்தலைந்து கொண்டிருக்கும்  கடற்பறவைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தால் தான், ஒவ்வொரு பறவையும் ஒன்றிரண்டாகத் தங்களுக்கு எனக் கவ்விக் கொண்டது போக சில ஆயிரம் ஆமைகள் உயிர் பிழைத்து கடலைச் சென்றடைய முடியும். அத்தனையும் சரியாக நடந்தால் ஒரு ஆமைக்குஞ்சு வாழ்வெனும் வரத்துடன் ஆழியை அடையும்.
ஒருவேளை கொன்று தின்பதற்காகக் காத்திருக்கும் எதிரிகளே இல்லாமல் இருந்திருந்தால்? இனப்பெருக்க காலத்தில் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் கரைக்கு வந்து கடற்கரை மணலை அகழ்ந்து முட்டையிடுகின்றன. ஒவ்வொன்றும் சராசரியாக இருநூறு முட்டைகள் வரை இடும். அவ்வளவும் பொரிந்து குஞ்சுகள் கடல் சேர்ந்தால் கடலே ஆமைகளின் ஏகாதிபத்தியத்தியமாகி விடும். பிறக்க வேண்டிய ஆமைக்குஞ்சுகளின் எண்ணிக்கை, வெளிவர வேண்டிய நேரம், எதிரிகளின் எண்ணிக்கை என யாவும் இயற்கையின் மாறாத விதிகளில் மிகக்கச்சிதமாக முன்வகுக்கப்பட்ட உயிர்ப் போராட்டம் இது. ஒன்று பிறழ்ந்தாலும் ஏதாவது ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபட்டுப் போகும். ஜெயமோகன் தனது ‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ நூலில் கூறியிருப்பது போல பிரபஞ்ச விதி, அதன் பல்லாயிரம் தராசுத் தட்டுகளை ஓயாமல் சமன்படுத்திய படி இருக்க முள் ஒரு சமநிலையைக் கண்டு மையத்தில் நிற்கிறது.
ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்தால் நியாயப்படுத்தப்படுகிறது இங்கே. சிந்திக்கையில் ஒவ்வொரு மனிதருமே  வெற்றிகரமாக உயிர்பிழைத்த ஒரு கடல் ஆமை போல தான். ஆயிரத்தில் ஒன்றாகக் கடல் சேர்ந்த ஆமைக்குஞ்சு போல, பல்லாயிரத்தில் அண்டம் சேர்ந்த ஒரு உயிர் அணு தான் மனிதன். ஓடு உறுதியாகி வளர்ந்து விட்டால் ஒவ்வொரு ஆமையும் (இனத்தைப் பொருத்து) சராசரியாக நாலரை அடி நீளமும், 250 கிலோ எடையுமாக, என்பது ஆண்டுகள் உயிர் வாழும். பிறந்த நொடியில் ஓடிய ஓட்டத்திற்கும், காட்டிய வேகத்திற்கும் முற்றிலும் எதிர்மாறாக, காலத்தின் வேகத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் மிக நிதானமாக, மிதக்கும் குன்றுகள் போல வாழ்கின்றன. வரமாகக் கிடைத்த வாழ்வை நிறைவாக வாழ்ந்து மடிகின்றன. ஆமைக்குஞ்சுகளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் இந்த வாழ்க்கை பெரும் வரம் தான். ஆனால் இந்த வரத்தை விரயமாக்க நாமே ஓயாமல் போராடுகிறோம். மனிதனுக்கு மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை; ஐம்புலன்கள் வழியாக, அடங்காத மனத்தின் பேராசையை நிரப்பும் கட்டுக்கடங்காத வெறியில் தன் இனம் முதல் அனைத்து உயிர்களையும் அழிக்க தயங்குவதில்லை. இன்னும் நெருக்கமாகப் போனால் ஒவ்வொருவருக்கும் கட்டுப்பாடற்ற தன் சொந்த மனமே போதும், வாழ்வைக் கொன்றழிக்க.
வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எல்லையற்று, புலன் வழி நுகர்ச்சிகளின் வழியாகப் பெறும் இன்பங்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்வதல்ல. அதே நேரம் முற்றாக நிராகரிப்பதும் முழுமையான வாழ்க்கை அல்ல. செயலற்ற நிலை என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை. அப்படியானால் எது முழுநிறைவான வாழ்க்கை? இந்திய மரபு கூறும் முழுமையான வாழ்வென்பது செயல்களின் விளைவுகளில் பற்று வைத்து அதிலேயே உழலாமல், செய்யும் தொழிலில் முழுப்பிரக்ஞையுடன் திறம்பட செயல்புரிவதையே. இந்த நிலையை அடைய மனம் மற்றும் புலன்களின் மீதான முழுக் கட்டுப்பாடு தேவையாகிறது.
இந்துத் தொன்மங்களில் ஆமை முக்கியமான குறியீடாகத் தொடர்ந்து சுட்டப்படுகிறது. ஜபம், தியானம் செய்பவர்கள் அமர்வதற்கென்று ஆமை வடிவத்தில் மரத்தால் ஆன பலகை உகந்ததென்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அமரும் பலகைக்கு கூர்மாசனம் என்று பெயர். (யோக மரபில் கூறப்படும் கூர்மாசனம் என்னும் ஆசனப்பயிற்சி வேறு). கூர்மாசனத்தில் அமர்தல் என்னும் குறியீடு ஐம்புலன்களை வெல்வதை, அதன் வழி இச்சை மற்றும் மனத்தின் மீதான முழுக்கட்டுப்பாட்டைப் அடையும் நிலையைக் குறிக்கின்றது.
இந்து மதம்/வேதாந்தம் செயல் புரியும் ஊக்கத்தைக் குறைத்து அவனை சமூக வாழ்வில் இருந்து விலக்குகிறது, உள்ளொடுங்கியவனாக மாற்றுகிறது என்னும் மேற்கின் குற்றச்சாட்டு அதன் முற்றான புரிதல் குறைபாட்டால் எழுவது. உண்மையில் நேர்மாறாக, செயல்களின் பலனில் விருப்பத்தை விலக்கி, முழு மனத்திறனுடன் செயல் புரியும் மனிதர்களே சிறந்த சமூக மனிதர்களாக, சமூகத்தின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் ஆகப்பெரிய பங்களிப்பாளர்களாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த வெற்றியாளர்களாக இருக்க முடியும். இந்த நாட்டில் அப்படி வாழ்ந்து காட்டிய எண்ணற்ற ஆளுமைகள் வரலாற்றில் உண்டு. ஆயிரத்தில் ஒரு ஆமைக்குஞ்சிற்குக் கிடைத்ததைப் போல, அத்தகையவர்களுக்கே உண்மையில் வாழ்வெனும் வரம் முழுமையாக கைவரப்பெறுகிறது.
-பிரகாஷ் சங்கரன்

Tuesday, January 15, 2013

அனுபவமாவது எது?


கடந்த மாதம் செக் குடியரசின் தெற்குப் பகுதியில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பழமையான ஒரு ஊருக்கு நண்பர்களுடன் பயணம் செய்தேன்.
காலையில் மரக்கூட்டங்களுக்கு ஊடாக பல கிலோமீட்டர் நடந்து மலை உச்சியின் மீதுள்ள ஒரு சிதைந்த 12ஆம் நூற்றாண்டுக் கற்கோட்டைக்குச் சென்றோம். லாண்ட்ஷ்டெய்ன் (Landstejn) எனப்படும் அக்கோட்டை மன்னர்களிடமிருந்து பல பிரபுக் குடும்பங்களுக்கு கைமாறி பிறகு மெல்ல மெல்ல கைவிடப்பட்டு சிதைந்து காலத்தின் எச்சமாக நிற்கிறது. கோட்டையின் ஒரு மூலையில் தனியாக செங்குத்தான சதுரமாக உயர்ந்து நிற்கும் கண்காணிப்புக் கோபுரத்தின் உள்ளே இருக்கும் படிகள் வழியாக ஏறினால் உச்சியில் திறந்த வெட்டவெளிக்கு வரலாம்.
dsc00967
மூச்சு வாங்க மேலேறி வந்தவுடன் சட்டென்று பத்துத் திசையையும் திறந்து கொள்ள, ஆகாயத்தின் நடுவில் அந்தரத்தில் தனியாக தொங்க விட்டது போன்று இருந்தது. குளிர்ந்த வேகமான காற்று மோதித் தள்ள ஏதோ கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் கூட்டமாக கையைப் பிடித்து பின்னால் இழுப்பது போல உணர்ந்தேன். கோபுரத்தின் இடுப்புயரமுள்ள பக்கச் சுவரின் விளிம்புக்கு மறுபுறம் கீழே அப்படியே செகுத்தாக இறங்க கோட்டையின் சிதைந்த சுவர்களும், அதற்கும் கீழே மலை முகடும் அது அப்படியே சரிந்து சமவெளியைத் தொட்டுப் படர்ந்த பச்சைப் பள்ளத்தாக்கும் தெரிந்தது.
மேலிருந்து பார்க்கும் முன்னூற்றி அறுபது பாகையும் வெகுதொலைவில் தொடுவானத்தின் புகைமூட்டத்தினுள் சென்று மறையும் அடர்ந்த பசும் மரக்கூட்டம். உடுத்திக் களைந்து தரையில் போட்ட கசங்கிய பச்சைப் பட்டுப் புடவை போல நடுநடுவே பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் மொண்ணை முகடுகளுடன் ஏறியிறங்கி அலையலையாகப் படர்ந்துள்ள புல்வெளி. இது ஒருதரம் கிளிப்பச்சை. வளைவு நெளிவே இல்லாமல் நெட்டுக்குத்தாக ஊசி முனையுடன் பைன் மரங்கள் நின்ற இடங்களில் பூமி மேனி சிலிர்த்துக் கொண்டது போல இருந்தது. இலையுதிர் காலம். பசுமை மாறா மரங்களின் கரும்பச்சை பரப்புக்கிடையே ஆங்காங்கே இலையுதிர்க்கும் மரங்களின் இலைகள் வெயிலில் பளீரென்று மஞ்சளாகவும், காவிநிறத்திலும், சிவப்பாகவும் ஜொலிப்பது பச்சைப் பட்டுப் புடவையின் கோலம் போல அல்லது காடு தீப்பற்றி எறிவது போல இருந்தது.
எங்கோ உற்பத்தியாகி காட்டை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கும் நதி, வெயில் பட்டு மினுமினுக்கையில் புதர்களுக்குள் ரகசியமாக வளைந்து ஊர்ந்து செல்லும் ராட்சதப் பாம்பு போலத் தெரிந்தது. நீலவானம் கரைந்து தரையில் சொட்டித் தெறித்தது போல வெவ்வேறு அளவுகளில் கோணலான ஏரிகள், குளங்கள். சில இடங்களில் பழுப்புச் சிவப்பு நிறத்தில் ஏழெட்டு கட்டிடங்களின் ஓட்டுக்கூரைகள், இன்னும் சிலவும் இருக்கலாம் -உள்காட்டில் மறைந்து அலையும் செந்நாய்க் கூட்டம்போல - மரத்தின் அடர்த்தியில் மேலிருந்து பார்த்தால் கண்ணில் படவில்லை.


இதற்கு முற்றிலும் மாறாக, மேலே கவிழ்ந்த வானம் தெள்ளத் தெளிவான நீல நிறத்துடன் சூரியன் பிரகாசிக்க பூமியை வெறும் சாட்சியாகப் பார்த்தபடி அமைதியாக இருந்தது. அவ்வப்போது இடையன் புசுபுசுவென்ற வெள்ளை செம்மறியாட்டுக் கூட்டத்தைப் பத்திச் செல்வது போல காற்று திரள் திரளாக குட்டி மேகங்களை தள்ளிக் கொண்டு சென்றது. செம்மறியாட்டு கூட்டம் மறைந்ததும் மீண்டும் சூரிய ஒளி, மீண்டும் நீல வான அமைதி. சொல் ஒழிந்த மனம் போன்ற அமைதி.
இயற்கை உண்டாக்கிய கிளர்ச்சியினால் கோபுர உச்சிக்கும் மேல் சில அடி உயரத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். பார்க்கும் காட்சியையெல்லாம் என்னை மீறி உருவகங்களாக, வர்ணனைகளாக, சொற்களாக வாரி இறைந்த படி இருந்தது மனம். கொஞ்ச நேரம் நிலைகொள்ளாத தவிப்பு. வார்த்தைகள் ஒவ்வொன்றாக வற்றிக் காய்ந்ததும் மனதில் ஒரு பேச்சற்ற அமைதி. துக்கத்தைத் துடைத்து வழிந்த கண்ணீர் கன்னத்தில் உப்புப் பிசுபிசுப்புத் தடத்தை மட்டும் விட்டு செல்வதைப் போல, எல்லாம் ஒரு உணர்ச்சிநிலை மாத்திரமாக உறைந்தது. பூமியின் பச்சை கொப்பளிக்கும் உற்சாகமும், வானின் மௌனமான நீலமும் மனதின் ஒரு ஊசிமுனையில் அருகருகே இருக்கின்றன போல.
மலை உச்சியிலோ, பாறையின் மீதோ இருந்து தடைகளின்றி விழிப்புலத்தை நிறைக்கும், மாபெரும் இயற்கை விரிவைக் காணும் போதெல்லாம் ஏற்படும் அதே வியப்புணர்வு - பிரபஞ்சம் மிகமிகப் பிரம்மாண்டமானது, இயற்கை அதிமகத்தானது!
கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது. இந்தப் பிரம்மாண்டத்தில் நானும் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். சதைக்குள் சிக்கிக் கொண்ட பிரபஞ்சம் நான். முதன் முறை வாழ்வில் ஒரு மலைஉச்சியில் நின்று பார்த்தபோது இந்த அத்வைத உணர்வு ஒரு கணம் தான் தோன்றியது, அதற்கப்புறம் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப அதே எண்ணம் உருவாகிறதா அல்லது நான் அதை உருவாக்கிக் கொள்கிறேனா என்று தெரியவில்லை. சிலநேரம் இந்த வார்த்தைகளே சலிப்பைத் தரும். ஆனாலும் அப்படி நினைத்துக் கொள்வது ஒரு பெரிய ஆசுவாசம்.
dsc00992
மெல்ல மலை இறங்கி நடந்து வந்தோம். மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் தெல்ச் (Telc) என்ற ஊருக்குச் சென்றோம். சிறிய ஊர் தான் ஆனால் பழமையான, முக்கியமான ஊர். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையம். ஊரின் நடுவே பெரிய, கொஞ்சம் கோணிய செவ்வகமான சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றிலும் வரிசையாக மிக விரிவான வேலைப்பாடுகள் கொண்ட பரோக் பாணி மற்றும் மறுமலர்ச்சிக் கால கட்டிடங்கள்.
பச்சை, பழுப்பு, கடல் நீலம், மஞ்சள், சிவப்பு, தாமரை நிறம் என்று பல வர்ணநிறக் கட்டிடங்கள் கலவையாக அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தன. அனைத்துமே நான்கு மாடி உயரம். எல்லா கட்டிடங்களையும் இணைக்கும் மறுமலர்ச்சி பாணி நீண்ட இணைப்பு வழி. தூண்களில் இருந்து புறப்பட்டு மையத்தை நோக்கி சர்ச் விதானம் போலக் கூம்பியபடி சென்று மையத்தில் இணையும் பூவை ஒத்த அதன் வளைந்த உள் கூரை.
கட்டிடங்களின் முகப்பு வெறும் சதுரமாக பெட்டிகளை அடுக்கி வைத்தது போல இல்லாமல் அழகான வளைவுகளுடன், அகலம் குறைந்த படியே சென்று மேலே முக்கோணம் அல்லது அரைக்கோள வடிவத்தில் முடிந்தது. முன் பக்கம் முழுவதும் நுணுக்கமான கீறல் ஓவியங்கள் செறிவாக வரைந்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. எல்லாக் கட்டிடங்களிலும் கண்ணாடிக் கதவு வைத்த ஜன்னல்களின் வெளிப்புறம் கொத்துக்கொத்தாக விதவிதமான நிறங்களில் பூக்கள் அடர்ந்து பூத்திருக்கும் சிறிய அலங்கார பூத்தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தன.
இரண்டு உள்ளங்கை அளவுள்ள சிறிய கருங்கல் பாவிய சதுக்கத்தின் மத்தியில் இரண்டு நீரூற்றுக்கள். ஒரு சிறிய பூங்காவின் மத்தியில் ஐரோப்பாவைச் சூறையாடிய பிளேக் நோய் மரணங்களின் உயரமான நினைவுச் சிலை. இன்னொரு சிறிய நீர்த் தடாகத்தின் மத்தியில் கையில் சிறிய பொன்னிற சிலுவையும் தலைக்குப் பின் சுடரும் பொன்னாலான ஒளிவட்டமுமாக யேசு - அவருக்கே உரித்தான சோகம் கப்பிய சாந்தமான முகத்துடன். அந்தச் சிலையின் பிரதிபிம்பம் அப்படியே கீழே உள்ள நீரில் தலைகீழாகத் தெரியும். சதுக்கத்தின் ஒரு பாதி வரிசைக் கட்டிடங்களும் யேசுவின் காலுக்குக் கீழே நீரில் பிரதிபலிக்கும். தென்றல் மெல்ல நீர்ப் பரப்பை வருடிச் சென்றால், தலைகீழ் யேசுவும், அந்த சதுக்கமும் எல்லாம் ஒரு கனவு போல அலையலையாக மெல்ல கலைந்து ஓயும், பின்னர் மீண்டும் பிம்பம் உருவாகும். அந்த அலை அசைவில் பிறர் இன்னும் அறியாத ஒரு யேசு நடனமாடுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.
dsc01072
கொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் குவியல்களாக வானத்தில் மேகங்கள் படர நிலத்தில் ஒளி குறைந்து கொண்டே வந்தது. காட்சிக்கேற்றபடி ஒளி அமைக்கப்பட்ட நாடக அரங்கம் போல சதுக்கம் இப்போது முற்றிலும் புதிய இடமாக இருந்தது. புகை படிந்த பழைய எண்ணை ஓவியம் போல கட்டிடங்களின் நிறம் மங்கலாக, கல்தரையும், வானமும் ஒன்று போலானது.
பூத்தூவலாகத் தொடங்கி கொஞ்சம் பெரிய தூறல் மழை பெய்தது. பத்தே நிமிடம், திரைவிலக்கப்பட்டது போல் மேகம் மாயமாய்க் கலைந்து விலக மீண்டும் பளீரென்று சூரியன். கல்தரை எண்ணை பூசிய கருங்கல் சிலை போல பளபளக்க, கழுவித் துடைத்த கண்ணாடி வழியாகக் காணும் காட்சி போல சதுக்கமே தெளிவான புதிய ஒளியுடன் பிரகாசமாக இருந்தது. ஒருவேளை சற்று முன் இருந்த மங்கலான ஒளியின் காரணமாக இருக்கலாம், இப்போது எல்லாமே முன்பைவிடக் கூடுதல் பொலிவுடன், துல்லியமாகவும், பளீரென்றும் இருந்தது.
சூரியனின் மாயக் கிரண விரல்கள் தொட்ட இடமெல்லாம் புதுப் பிறப்பெடுத்தது. தடாக மையத்து யேசுவின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நிஜமாகவே ஒளிவட்டமாகியது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு இளம்பெண் போல தனக்கு மட்டுமே உரிய பிரத்யேக அழகுடன் மிளிர்ந்தது. ஒளியால் அறியப்படும் பொருட்களில் எல்லாம் ஒளியையே அறிகிறோம் என்ற வரி நினைவில் எழுந்தது. இது சாங்கியமா வைசேஷிகமா என்றொரு குழப்பமும் கூடவே. வார்த்தைகளும் சிந்தனைகளும் குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்று பிரயத்தனப்பட்டேன், முடியவில்லை. ஒவ்வொறு கட்டிடமாக நிதானமாக பார்த்துக் கொண்டே நின்றேன். என்னைச் சுற்றி வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் நடுவில் வந்து விழுந்து விட்டது போல இருந்தது. அழகு. பைத்தியக்காரனாகப் புலம்பவிடும் அழகு. கோட்டை உச்சியில் நின்றுகொண்டு சமவெளியைக் கண்டபோது எழுந்த அதே மன எழுச்சி, சற்றும் குறைவில்லாமல். ஏதோ சிலகணங்கள் என்னை இழந்திருந்தேன்.
வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் மரங்களும், பூமியை நோக்கி வளைந்து வரும் ஆகாயமும் இணைந்து மனத்தில் தூண்டும் அழகுணர்ச்சியை கல்லும் மண்ணும் குழைத்துக் கட்டிய கட்டிடங்களும், சிலைகளும் உண்டாக்குகின்றன. கூட இருந்தவர்கள் சாதாரணமாக பார்வையை ஓடவிட்டு இயல்பாக பார்த்துக் கொண்டிருக்க எனக்கோ ஒவ்வொன்றும் நரம்புகளை அதிரவைத்து, மனம் பரபரக்க பரவச அனுபவமாக, ஏதோ ஒரு உணர்வு நிலை என் போதத்தை மெது மெதுவாக மேவிப் புதைக்கிறதே, ஏன்?
இரண்டிலும் உள்ள அழகு ஒன்று தானா? இயல்பாக ஒன்றை இயற்கை என்றும் மற்றதை செயற்கை என்றும் எளிதாகப் பிரித்துக் கொண்டு, சிறந்தது x கொஞ்சம் மட்டமானது என்று வகுப்பது பொதுப்போக்கு. கடலும் நதியும், மலையும் மழையும், மரமும் மலரும் மனதில் தோற்றுவிக்கும் கிளர்ச்சி தான் சிற்பமும், ஓவியமும், கட்டிடங்களும் உண்டாக்குகின்றதா? நாம் காண்பனவற்றில் எதை நாம் சாரமாக அனுபவிக்கிறோம் அல்லது நம்முள் எது அனுபவமாகிறது?
இரவு காட்டை ஒட்டி இருந்த நண்பரின் பழைய விடுமுறைக் கால வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். சுற்றிலும் வேறு கட்டிடங்கள், வாகனங்கள், தெருவிளக்கு போன்றவை எதுவும் இல்லாததால் ஒளியால் மாசுபடாத அடர்ந்த இருள். நட்சத்திரங்களை அவதானிக்க பொருத்தமான சூழல். வீட்டு முற்றத்துப் புல்வெளியில் மல்லாந்து, ஒளிப் புள்ளிகளாக ஆகாயம் எங்கும் விரவிப் படர்ந்திருந்த நட்சத்திர மண்டலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கார்ல் சாகன், “பெருவெளியில் எண்ணற்ற விண்மீன் அண்டங்களின் (galaxies) தூசி மண்டலத்தில் பூமி என்னும் ஒரு துகளில் ஒட்டிக் கொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் என்பவன்” என்று மனித மைய சிந்தனையை நிராகரித்ததை நினைத்துக்கொண்டேன். அந்த நேரத்தில் அந்த நினைவு மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்தது.
நல்ல குளிர். பிறர் உறங்கச் சென்றுவிட்டார்கள். கூடத்தில் இருந்த கணப்பில் பெரிய மரத் துண்டுகள் போடப்பட்டிருந்தது. செத்த காட்டைத் தின்று நெருப்பு வளர்ந்து கொண்டிருந்தது. தீயும் காற்றும் பேசிக் கொள்ளும் படபட சப்தம் தவிர கனத்த அமைதி.
மனதைக் காற்றுடன் ஒப்பிடுவது வழக்கம். அப்போது தீயுடன் ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருந்தது. தீ என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பது. பயறு போல சிறிதாக அசைவில்லாமல் இருக்கும் மெழுகுவர்த்தியின் நெருப்பும் இடைவிடாத நிகழ்வு தான். எண்ணங்களின் தொடர்ச்சியான நிகழ்வு தான் மனம். எண்ணங்களின் ஒழுக்கு நின்று போனால் மனம் இல்லை. கிடைமட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போல, எரியும் அக்னி மேல் நோக்கிப் பாயும் நதி. ஒரு கணத்தில் இருந்த நெருப்பை மறுகணம் பார்ப்பதில்லை நாம்.
dsc01232
அனுபவமாவது எது? உறங்க விடாமல் கேள்வி எரிந்து கொண்டிருந்தது. யோசித்து யோசித்து இரு கோட்பாடுகளை வந்தடைந்தேன்.
1. இயற்கை மனிதனுக்கு எப்போதும் முடிவில்லாத ஆச்சர்யங்களைத் தந்து கொண்டே இருப்பது. அதியற்புதம் வாய்ந்த இயற்கையின் பேரழகின் முன் நிற்கும் போதெல்லாம் மனிதன் பேச்சிழந்து ஸதம்பிக்கிறான். ஓவியம், சிற்பம், இசை, கலைநயம் மிக்க கட்டிடம் என்று மனிதனுக்குள் உள்ள நுண் உணர்வுகளைத் தீண்டி அழகுணர்ச்சியைக் கிளறி அவன் தன்னை மறந்து போகச் செய்யும் எல்லா கலைப்படைப்புகளும் மனிதனின் ‘படைப்புகளே’. ஆனால் மனிதனின் படைப்பு ஒரு போதும் இயற்கையின் பேராற்றல் மிக்க படைப்புத் திறனை தாண்டிச் செல்ல முடியாது. இதை மனித மனம் உள்ளூற நன்கு அறியும். ஆனாலும் ‘நான்’ என்னும் ஆதாரமான, மிக அழுத்தமான சுயம் தனக்கான அங்கீகாரத்தை தானே வழங்கிக் கொள்ளும். எனவே மானுடத்தின் ‘படைப்புகளின்’ முன்பு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை மறந்து வியப்பதும், பெருமைப்பட்டுக் கொள்வதும், ரசிப்பதும் மானுடத்தையே -அதன் வழியாக தன் சுயத்தையே. ஒருவகையில் ஆழ்மனதில் தன்னைத் தானே அங்கீகரித்துக் கொள்ளும் செயல். ஆக, மனிதனுக்கு கலைப் படைப்புகளில் அனுபவமாவது என்பது அவன் சுயமே.
2. மனிதனே இயற்கையின் படைப்புகளுள் ஒன்றுதான். அந்த இயற்கையே மனிதனையும் படைக்குமாறு விதித்துள்ளது. மனித மனத்திற்குச் சாத்தியமான எல்லாக் கற்பனைகளுக்கும் வேர் இயற்கையிலேயே உள்ளது. ஆகவே அவன் செய்வதெல்லாம் மறுபடைப்பு மட்டுமே. மனிதன் உருவாக்கும் மறுஆக்கத்திற்கெல்லாம் தூண்டுகோல் இயற்கை தரும் பேரனுபவம் தான். அந்த அனுபவத்தையே மனிதன் ஓவியமாகவும், இசையாகவும், கவிதையாகவும், சிற்பமாகவும், அழகான கட்டிடங்களாகவும் அவனுடைய இயல்பிற்கேற்ப பிரதிபலிக்கிறான். விஷ்ணுபுரத்தின் சிற்பி பிரசேனர் சொல்வது போல் பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். அதை ஆழ்ந்து அறியத் தொடங்கும் போது ஒரு அனுபவத்தை மற்றொன்றாக மாற்றிக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஆற்றல் அழிவின்மை விதி போல. இயற்கையின் படைப்பு தரும் பேரனுபவமே மனிதனின் மறுபடைப்புகளிலும் அனுபவிக்கப்படுகிறது. அதாவது மனிதனின் படைப்புகளிலும் இயற்கையே அனுபவமாகிறது.
சுருக்கமாக, மனிதனின் படைப்புகளில் அனுபவமாவது அவன் சுயமே x மனிதனின் படைப்புகளில் அனுபவமாவதும் இயற்கையே என்று இரண்டு எதிரெதிர் கருதுகோள்களாக வரையறுக்கலாம். ஆனால் உண்மையில் முதல் கருதுகோள் வழியாக இரண்டாம் கருதுகோளுக்கு வந்து சேர்ந்தேன் என்பதே சரி.
கணப்பில் தணல் நிறமான இலைகளுடன் மரங்கள் காற்றில் அசைந்தாடின. பழுத்துச் சிவந்த இலைகள் மழை போல் உதிர்ந்து விழுந்தன, சில இலைகள் காற்றில் மெல்லப் பறந்து மறைந்தன. அங்கே நீலமும், மஞ்சளும், சிவப்புமாக வரிசையாகக் கட்டிடங்கள் தோன்றின. அவை நெருப்புத் தடாகத்தில் நெளிந்து நெளிந்து ஆடின. அதன் பின் சிவந்த இலைகளுள்ள மரங்களும், வண்ண வண்ணக் கட்டிடங்களும் எல்லாம் ஒன்றாகக் கனப்புக்குள் கலந்து ஆடி ஆடி மெதுவாக அமிழ்ந்தன. கண்களுக்குள் சிவப்பு கரைந்தது, விழி மெல்லச் சுழன்று உள்வாங்கியது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி நெருப்பு இலையுதிர்க்கும் வனத்தில் மூழ்கினேன்.
- பிரகாஷ் சங்கரன்.
(நன்றி: சொல்வனம் இதழ் 80ல் வெளிவந்தது http://solvanam.com/?p=23454)