Monday, January 28, 2013

வாழ்வெனும் வரம்

1_500


கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஒரு ஆவனப்படம் பார்த்தேன். பேராழிகள் - Oceans என ஆங்கிலத் தலைப்பு.  ஜாக்குவெ பெர்ரின் (Jacques Perrin) என்னும் ஃபிரெஞ்சு நடிகர்-இயக்குனரால் இயக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் நான்கு வருடங்கள் படம்பிடிக்கப்பட்டது. ஜாக்குவெ பெர்ரின், சின்னஞ்சிறு பூச்சிகளின் உலகில் நடக்கும் தொடர்புகொள்ளல் முறைகளை நுணுக்கமாக ஆராயும் ‘Microcosmos’  மற்றும் வலசை போகும் பறவைகளின் நெடும் பிரயானத்தை விளக்கும் ‘Winged Migration’ என்னும் புகழ் பெற்ற ஆவனப்படங்களையும் இயக்கியவர்.
பூமிப்பந்தில் நிலத்தின் அளவை விட மூன்று பங்கு அதிகமான பரப்பைக் கொண்ட கடலில், நிலத்தை விட மூன்று மடங்கு அதிகம் அற்புதங்களும் இருக்கத்தான் செய்யும். பூமியின் உயிரினங்களில் மிகப்பெரியது முதல் மிகச் சிறியது வரை அங்கு உயிர் வாழ்கின்றன. நில உயிர்களின் தோற்றங்களை வைத்து நாம் அறிந்திருக்கும் வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறான, உயிர்களின் உருவ அமைப்பு குறித்தான நமது தர்க்கத்துக்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்ட, கற்பனைக்கே எட்டாத ஆயிரமாயிரம் விநோத வடிவங்களில் உயிரினங்கள். கற்பாறைக்கு வாய் வாய்த்தது போல் ஒன்று, கிளைகளும், இலைகளுமாய் நகர ஆரம்பித்துவிட்ட தாவரம் போல் ஒன்று, ஒளியே வடிவான ஒன்று, ஒளிசென்று தீண்டும் ஆழத்திற்கப்பால் முழுதும் வண்ணங்களால் வாரியிறைத்த உடலுடன் ஒன்று, உருகி உருகி வழிவது போல நகரும் ஒன்று, இன்னும் இன்னும்…. ஆனால் அனைத்திலும் நீரின் வளைவு-நெளிவு-நெகிழ்வு என்னும் அடிப்படையான இயல்பே அதில் வாழும் உயிர்களின் உடல் வடிவத்தின் தகவமைப்புக்கும் ஆதாரமான விதியாக அமைந்திருக்கிறது. வாழும் இடத்தின் இயல்பே அதில் வாழ்பவற்றின் இயல்பைத் தீர்மாணிக்கின்றது. நம்மில் பலரும் பெரும்பாலும் இத்தகைய ஆவனப்படங்களைப் பார்த்திருப்போம். எனவே அவற்றை இங்கே விவரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால், ஒன்றரை மணிநேரப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு வகையான உயிரிணங்களின் வாழ்க்கையில்  வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு உயிரினத்தின் கதை என்னைப் படைப்பின் விநோதங்களுப்பால் இயற்கையின் புதிரான கணக்கு வழக்குகளையும் -அதன் சமன்பாட்டையும், இவற்றின் வழி ஒட்டுமொத்தமாக மனித வாழ்க்கையையும் நின்று யோசிக்க வைத்தது. கடல் - எப்படியானாலும் நம்முடைய ஆதி வீடல்லவா?
தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகிறது. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையில் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு முமையாக விடுபடுகின்றன.  அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன. கடல் அலைக்கரங்களை வீசி ஓலமிட்டு அழைக்கிறது, உண்மையில் கடலடியில் மனதைத் தங்கள் குஞ்சுகளின் மேல் வைத்திருக்கும் தாய் ஆமைகளின் உயிர்த்தவிப்பு தான் கரையை மோதும் அந்த அலைகள். இப்பொழுது காமிரா வானத்தைக் காண்பிக்கிறது. இந்தக் ஆமைக் குஞ்சுகளுக்காகவே நீண்ட தூரம் பறந்து வந்து களைத்து வானத்திலேயே பசியுடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு கடற்பறவை இனம். வானை நிறைத்து நுற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன. பூமியை நோக்கி எய்யப்பட்ட அம்பு போல சர் சர்ரென்று வேகமாகப் பறந்து வந்து ஆமைக் குஞ்சுகளைக் கவ்விச்செல்கின்றன பறவைகள்.


பிறந்த நொடிமுதல் வாழ்க்கைப் பந்தயம் ஆரம்பிக்கின்றது. பந்தயத்தின் முடிவு வாழ்வு அல்லது சாவு - இரண்டில் ஒன்று தான். இரண்டு உயிரினங்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம். ஆமைக்குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியேறிய கணமே ஓட ஆரம்பிக்கின்றன. நீரின் ஆழத்திற்கு சென்று சேர்வதற்குள் மிகப்பெரும்பாலானவை மரணம் அடைகின்றன. பிறந்த அடுத்த நொடியில் மரணம். என்ன வாழ்க்கை இது? இந்தப் பிறப்பிற்கு என்ன அர்த்தம்? எதற்காகப் பிறக்க வேண்டும்? பறவை இனம் உயிர்பிழைக்கவா? அதற்காக ஆமையாய்ப் பிறந்து அக்கணமே மடிய வேண்டுமா? இது பாரபட்சம் இல்லையா? என்ன இயற்கை இது?
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சம்பவமும் அதன் முன் பின் நிகழும் சம்பவங்களுடன் கொள்ளும் தொடர்பை கவனிக்க முடிகிறது. பிரபஞ்ச விதியின் திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விலக்கப்பட, காட்சி இப்போது தெளிவாகிறது. இந்தத் தரிசனம் வாழ்வு குறித்த பல சிந்தனைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்புகிறது. கடலில் வாழும் இந்த ஆமைகள் எதற்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்ல வேண்டும்? கடலில் இருந்து நிலத்திற்கு வந்து பரிணமித்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட உயிரினங்களில், நிலத்திலிருந்து மீண்டும் கடலுக்குத் திரும்பச் சென்ற சில உயிரிகள் உண்டு. அதில் ஒன்று தான் இந்தக் கடல் ஆமைகள். ஆனாலும் அவை முட்டையிடுவதற்கு இன்னும் நிலத்தைத் தான் சார்ந்துள்ளன, கடலிலேயே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் அளவுக்கு இன்னும் பரிணமிக்கவில்லை. ஆகவே அவை நிலத்துக்கு வந்தாக வேண்டும்.
முட்டை இட்டுவிட்டு தாய் ஆமைகள் மீண்டும் கடலுக்குச் சென்று விடுகின்றன. மற்றெல்லா உயிரினத்திலும் குட்டிகள் பிறந்தது முதல் சுயமாக வாழும் தகுதி பெறும் வரை தாயால் உணவு ஊட்டப்பட்டு, உயிர் பாதுகாக்கப்பட்டு மிகக்கவனமாக பேணி வளர்க்கப்படுகின்றன. ஆனால் கடல் ஆமைக்குஞ்சுகள் பிறக்கும் போதே தன்னந்தனியாக, காத்துக்கொண்டிருக்கும் மரணத்தின் கரிய நிழலை எதிர்கொண்டபடி பிறக்க வேண்டிய சவாலை இயற்கை விதித்திருக்கிறது.
g
ஓவ்வொரு ஆமையும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான். ஆம், கரையில் பிறந்த இடத்திலிருந்து கடலுக்குள் சென்று சேரும் அந்த இருபதடி தூர உயிருக்கான ஓட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஆமை மட்டுமே கடற்பறவைகளின் பசித்த வாயில் இருந்து தப்பிக்கிறது. கடலுக்குள் சென்று சேர்ந்தாலும் கூட்டமாக இடப்பட்ட பல்லாயிரம் முட்டைகளில் எந்த ஆமைக்குஞ்சின் தாய் எந்த பெரிய ஆமை என்று எப்படி தெரியும்? எனவே தானாகவே தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டியது தான். அப்படி கரையில் உயிர் பிழைத்த ஆமைக் குஞ்சுகளுக்கு அடுத்த எதிரி கடலில் இருக்கும் பெரிய மீன்கள். அவற்றிலிருந்தும் எவை தப்புகின்றனவோ அவையே கடல் ஆமை இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு கடல் ஆமை முழு பாலின வளர்ச்சி அடைவதற்கு (இனத்தைப் பொறுத்து) குறைந்தது இருபத்தி ஐந்து முதல் அதிகபட்சம் ஐம்பது ஆண்டுகள் ஆகும். எதிரிகளிடமிருந்து தப்பி உயிர் பிழைத்து வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே பாலின முதிர்ச்சி அடைந்து தங்கள் இனத்தின் உயிர்ச் சங்கிலி அறுபடாமல் காக்கின்றன.
உயிர்வாழும் கடல் ஆமைகளை வெற்றியாளர்களின் சமூகம் என்று சொல்லலாம், அல்லது இனத்தின் தொடர்ச்சிக்கு வேண்டி உயிரிழந்த சகோதரர்களின் உயிர்த் தியாகத்தால் பிழைத்து வாழும் சமூகம் என்றும் சொல்லலாம். சுமார் 10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூதாதையர் ஆமை இனத்தில் இருந்து  பிரிந்தவை கடல் ஆமைகள். இந்தக் கிரகத்தின் உயிரினங்களில் மூத்தகுடிகளுள் ஒன்று. இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உயிர்பிழைத்து வந்தவை, ‘நேற்றுப் பிறந்த’ மனிதனால் எந்த மதிப்பும், இரக்கமும் இல்லாமல் வேட்டையாடப்படுகின்றன.
கடல் ஆமைக் குஞ்சுகள் கரையில் முட்டை ஓட்டைப் பிளந்து கொண்டு வெளிவரும் சமயத்தில் இருந்து பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று கூட பின்னோக்கியோ பக்கவாட்டிலோ ஓடுவதில்லை. அப்படி ஓடினால் ஆயிரத்தில் ஒன்று கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. மிகச்சரியாக எல்லாமே கடலை நோக்கியே ஓடுகின்றன. அவை எப்படி கடலின் திசையை அறியும்? அப்போது தான் இன்னொறு தெரிகின்றது, தாய் ஆமைகள் எல்லா முட்டைகளையும் தலை கடல் நோக்கி இருக்குமாறு இட்டிருக்கின்றன. அவற்றின் எதிர்காலத்தின் திசை கருவிலேயேயே விதிக்கப்பட்டிருக்கிறது. வெளியேறியவுடன் அந்தத் திசை நோக்கி ஓட வேண்டியது தான்.
முன்னரே நேரம் குறித்து வைத்தது போல ஒரே கால அளவைக்குள் படைபடையாக ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருகின்றன. அப்படி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் அல்லது வெவ்வேறு நாட்களில் முட்டைகளைக் கீறி வெளிவருமானால்? அப்பொழுதும் ஒன்று கூட உயிர் பிழைக்க முடியாது. மேலே பசியுடன் பறந்தலைந்து கொண்டிருக்கும்  கடற்பறவைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தால் தான், ஒவ்வொரு பறவையும் ஒன்றிரண்டாகத் தங்களுக்கு எனக் கவ்விக் கொண்டது போக சில ஆயிரம் ஆமைகள் உயிர் பிழைத்து கடலைச் சென்றடைய முடியும். அத்தனையும் சரியாக நடந்தால் ஒரு ஆமைக்குஞ்சு வாழ்வெனும் வரத்துடன் ஆழியை அடையும்.
ஒருவேளை கொன்று தின்பதற்காகக் காத்திருக்கும் எதிரிகளே இல்லாமல் இருந்திருந்தால்? இனப்பெருக்க காலத்தில் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் கரைக்கு வந்து கடற்கரை மணலை அகழ்ந்து முட்டையிடுகின்றன. ஒவ்வொன்றும் சராசரியாக இருநூறு முட்டைகள் வரை இடும். அவ்வளவும் பொரிந்து குஞ்சுகள் கடல் சேர்ந்தால் கடலே ஆமைகளின் ஏகாதிபத்தியத்தியமாகி விடும். பிறக்க வேண்டிய ஆமைக்குஞ்சுகளின் எண்ணிக்கை, வெளிவர வேண்டிய நேரம், எதிரிகளின் எண்ணிக்கை என யாவும் இயற்கையின் மாறாத விதிகளில் மிகக்கச்சிதமாக முன்வகுக்கப்பட்ட உயிர்ப் போராட்டம் இது. ஒன்று பிறழ்ந்தாலும் ஏதாவது ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபட்டுப் போகும். ஜெயமோகன் தனது ‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ நூலில் கூறியிருப்பது போல பிரபஞ்ச விதி, அதன் பல்லாயிரம் தராசுத் தட்டுகளை ஓயாமல் சமன்படுத்திய படி இருக்க முள் ஒரு சமநிலையைக் கண்டு மையத்தில் நிற்கிறது.
ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்தால் நியாயப்படுத்தப்படுகிறது இங்கே. சிந்திக்கையில் ஒவ்வொரு மனிதருமே  வெற்றிகரமாக உயிர்பிழைத்த ஒரு கடல் ஆமை போல தான். ஆயிரத்தில் ஒன்றாகக் கடல் சேர்ந்த ஆமைக்குஞ்சு போல, பல்லாயிரத்தில் அண்டம் சேர்ந்த ஒரு உயிர் அணு தான் மனிதன். ஓடு உறுதியாகி வளர்ந்து விட்டால் ஒவ்வொரு ஆமையும் (இனத்தைப் பொருத்து) சராசரியாக நாலரை அடி நீளமும், 250 கிலோ எடையுமாக, என்பது ஆண்டுகள் உயிர் வாழும். பிறந்த நொடியில் ஓடிய ஓட்டத்திற்கும், காட்டிய வேகத்திற்கும் முற்றிலும் எதிர்மாறாக, காலத்தின் வேகத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் மிக நிதானமாக, மிதக்கும் குன்றுகள் போல வாழ்கின்றன. வரமாகக் கிடைத்த வாழ்வை நிறைவாக வாழ்ந்து மடிகின்றன. ஆமைக்குஞ்சுகளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் இந்த வாழ்க்கை பெரும் வரம் தான். ஆனால் இந்த வரத்தை விரயமாக்க நாமே ஓயாமல் போராடுகிறோம். மனிதனுக்கு மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை; ஐம்புலன்கள் வழியாக, அடங்காத மனத்தின் பேராசையை நிரப்பும் கட்டுக்கடங்காத வெறியில் தன் இனம் முதல் அனைத்து உயிர்களையும் அழிக்க தயங்குவதில்லை. இன்னும் நெருக்கமாகப் போனால் ஒவ்வொருவருக்கும் கட்டுப்பாடற்ற தன் சொந்த மனமே போதும், வாழ்வைக் கொன்றழிக்க.
வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எல்லையற்று, புலன் வழி நுகர்ச்சிகளின் வழியாகப் பெறும் இன்பங்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்வதல்ல. அதே நேரம் முற்றாக நிராகரிப்பதும் முழுமையான வாழ்க்கை அல்ல. செயலற்ற நிலை என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை. அப்படியானால் எது முழுநிறைவான வாழ்க்கை? இந்திய மரபு கூறும் முழுமையான வாழ்வென்பது செயல்களின் விளைவுகளில் பற்று வைத்து அதிலேயே உழலாமல், செய்யும் தொழிலில் முழுப்பிரக்ஞையுடன் திறம்பட செயல்புரிவதையே. இந்த நிலையை அடைய மனம் மற்றும் புலன்களின் மீதான முழுக் கட்டுப்பாடு தேவையாகிறது.
இந்துத் தொன்மங்களில் ஆமை முக்கியமான குறியீடாகத் தொடர்ந்து சுட்டப்படுகிறது. ஜபம், தியானம் செய்பவர்கள் அமர்வதற்கென்று ஆமை வடிவத்தில் மரத்தால் ஆன பலகை உகந்ததென்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அமரும் பலகைக்கு கூர்மாசனம் என்று பெயர். (யோக மரபில் கூறப்படும் கூர்மாசனம் என்னும் ஆசனப்பயிற்சி வேறு). கூர்மாசனத்தில் அமர்தல் என்னும் குறியீடு ஐம்புலன்களை வெல்வதை, அதன் வழி இச்சை மற்றும் மனத்தின் மீதான முழுக்கட்டுப்பாட்டைப் அடையும் நிலையைக் குறிக்கின்றது.
இந்து மதம்/வேதாந்தம் செயல் புரியும் ஊக்கத்தைக் குறைத்து அவனை சமூக வாழ்வில் இருந்து விலக்குகிறது, உள்ளொடுங்கியவனாக மாற்றுகிறது என்னும் மேற்கின் குற்றச்சாட்டு அதன் முற்றான புரிதல் குறைபாட்டால் எழுவது. உண்மையில் நேர்மாறாக, செயல்களின் பலனில் விருப்பத்தை விலக்கி, முழு மனத்திறனுடன் செயல் புரியும் மனிதர்களே சிறந்த சமூக மனிதர்களாக, சமூகத்தின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் ஆகப்பெரிய பங்களிப்பாளர்களாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த வெற்றியாளர்களாக இருக்க முடியும். இந்த நாட்டில் அப்படி வாழ்ந்து காட்டிய எண்ணற்ற ஆளுமைகள் வரலாற்றில் உண்டு. ஆயிரத்தில் ஒரு ஆமைக்குஞ்சிற்குக் கிடைத்ததைப் போல, அத்தகையவர்களுக்கே உண்மையில் வாழ்வெனும் வரம் முழுமையாக கைவரப்பெறுகிறது.
-பிரகாஷ் சங்கரன்

2 comments:

  1. சொல்வனத்தில் முழுமையும் படித்தேன்.படித்தேன். படித்தேன்.ஆம் மூன்று முறை படித்தேன்.'ஈகாலஜி பாலன்ஸ்'என்பதை இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியாது.நமது முன்னோர்கள் கூர்மத்தை ஆன்மீகத்தேடலுக்கு
    ஒரு படிமம் ஆக்கியதையும் சொல்லி முடித்துள்ளது தென்கரை 'டச்' தான்.

    அன்னதாதாவும், கடல் ஆமையும் போறும் உங்கள் பெயர் சொல்ல.

    ReplyDelete
  2. நன்றி திரு.KMR. Krishnan

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...