Sunday, January 8, 2012

இருப்பு


மலையின் அடிவாரம் மெல்லச் சரிந்து சமதளத்தைச் சந்திக்கும் ஈர நிலப்பரப்பை பசும்புற்கள் படர்ந்து போர்த்தி, கூர் நுணிகளில் சூடிய நீர்முத்துக்களில் சூரியன் உள்பட மொத்த வெளியையும் அடக்கியிருந்தது. அதனுள் மோதி முயங்கிய மேகங்கள் மிதந்து நகர்ந்தபடி உருமாறிக் கரைந்து கொண்டிருந்தன. பச்சைப் புற்பரப்பின் மீது இளம் வெயிலின் ஒளியில் பெயரறியாத எண்ணற்ற சிறிய பூக்கள் வண்ணப்பொட்டுக்களாய் தெறித்திருக்க இன்னும் முழுமையாக நெய்யப்படாத ஒரு பட்டுப்புடவை போல இருந்தது. பளீரென்றிருந்த அடிவாரத்தின் முன்சரிவு வெண்பற்கள் தெரியச் சிரிக்கும் இளம்பெண் போல, காற்றால் கூந்தலை அளைந்து கொண்டு ரகசியக் குரலில், “ஹை! உள்ளே வரமாட்டாயாக்கும்.. உனக்காகத்தானே காத்திருக்கேன்? ரொம்பத்தான் தெரியாதமாதிரி…” என்று குழைந்தது.
சூரிய ஒளி சரிவில் மெல்ல ஏறி காட்டை ஊடுறுவ முயன்று தோற்றுக் கொண்டிருக்க, பச்சையின் அடர்த்தி படிப்படியாக மிகுந்துவந்து உள்காட்டில் கருநீலமாகக் காத்திருந்தது.
இருளில் புடைத்தெழுந்து, மின்னல் வெட்டியது போல கனநேரம் திறந்துமூடிய இரு பெரிய விழிகள் கண்டு மனம் திகைத்திருக்கும் போதே கால்கள் ஈரம்கசிந்து வழுக்கும் சரிவில் அழுத்தி ஊன்றி லாவகமாக ஏற ஆரம்பித்திருந்தது. மனம் பதறி ஓடிச்சென்று சேர்ந்துகொள்ள நான் மரக்கூட்டத்தின் ஊடாக மலையில் ஏறினேன்.


கைக்குச் சிக்கிய வித்துகளை எல்லாம் வாரியிறைத்து பைத்தியக்காரன் உண்டாக்கிய தோட்டம் போல கலவையான மரங்கள், செடிகள், புதர்கள், புற்கள் என மண்டியிருந்தது மலை. அனைத்தையும் கட்டி இறுக்கிச் சிதறாமல் சேர்த்துப் பிடித்திருப்பது போல கொடிகள் சுருண்டு, நெளிந்து, சுழன்று படர்ந்திருந்தன. பெருமரங்களில் வளைந்து முறுகியிருந்த கொடிகள், முரட்டுக் காதலனைத் இறுக்கித் தழுவி மார்பில் துவண்டிருக்கும் காதலியின் கைகள் போல இருந்தன. இருபதடிகள் மட்டுமே ஏறியதாக ஞாபகம், வியர்த்து உடல் முழுதும் ஈரமானது போல உணர்ந்து நின்றேன். காட்டின் காற்று, நீரில் நனைத்த சல்லாத் துணி போல ஈரம் கனக்க என்னை மூடிச்செல்வதால் நனைந்திருக்கிறேன் என்றறிந்தேன்.
மண்ணில் மட்கும் சறுகுகள், தழைகளின் பச்சை வாடை, காட்டின் இருளில் பொதிந்து வாழும் மிருகங்களின் சரும நெடி, பறவை எச்சத்தின் சுண்ணாம்பு வீச்சம் எல்லாமாகக் கலந்து எழுந்த ஒரு உயிர்ப்புள்ள வாசனை நீராவியில் கரைந்து சுவாசத்தில் ஏறிய போது முன் எப்பொழுதோ நிச்சயமில்லாத ஒரு தருனத்தில் மிக நெருக்கமாக அனுபவித்த ஒரு மனித உடலின் வாசனையை ஆழ்மனம் முகர்ந்துவிட, யாரென்று பிடிகிட்டாமல் பரிதவித்தது. அதே நொடியில் காட்டின் இருண்ட ஆழத்திலிருந்து எழுந்த மெல்லிய நக்கலான சிரிப்பொலி மனதைச் சீண்ட, தெளிவாகத் தெரிந்த பாதையில் செல்வது போல ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திட்டவட்டமாக காலெடுத்து வைத்து வெறியுடன் மேலேறிக் கொண்டிருந்தேன்.
மண்ணின் அடியில் புதைந்துவிட்ட எதையோ மோப்பம் பிடித்து, பித்துப் பிடித்தது போல முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி குழித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுநாய், ஈரமண் அப்பிய நாசியுடன், காதுகளை உயர்த்தி விடைத்து, என்னை நோக்கிப் பாயும் தோரணையில் பின்னங்கால்களில் உடலின் எடையைச் சரித்துத் தாங்கிக் கொண்டது. அடிவயிற்றை எக்கி, ரோமம் சிலிர்க்க அடித்தொண்டையில் உருமியபடி, சிவந்த ஈறுகளைப் பிளந்து கொண்டு கோரைப்பற்கள் வெளித்தெரிய என்னைப் பார்த்தது. அதிர்ந்து கொண்டிருந்த அடிமனதின் வெறியோடு என் கண்கள் காட்டுநாயின் காய்ந்த சருகு நிறக் கண்களைச் சந்தித்த சில நொடிகளில், மயிரடர்ந்த வாலை வளைத்து பின்கால்களின் சந்து வழியாக அடிவயிற்றில் ஒட்டியபடி, ஈனமாக முனகிக் கொண்டு மெல்லப் பின்னகர்ந்து சட்டென்று பாய்ந்து புதர்களுக்குள் ஓடி மறைந்தது. நான் மூச்சை ஆழ இழுத்து தேக வாசனையை மோப்பம் பிடித்துப் பாய்ந்து பாறைகளில் தாவி ஏறிச் சென்று கொண்டிருந்தேன்.

மேலேறும் தோறும் புதியபுதிய மலைமுகடுகள் ஆர்வமாகத் தடுப்பைத் தாண்டி எட்டிப்பார்க்கும் தலைகள் போல எழுந்து வந்துகொண்டே இருந்தன. மலை வளர வளர நான் குறுகிச் சிறுத்துக் கொண்டே இருந்தேன். மௌனமாக யாரையோ எதிர்நோக்கி அமர்ந்திருக்கும், வானவெளியைத் தாண்டி வளர்ந்த பிரம்மாண்டமான உருவத்தின் கோர்த்த ராட்சத கைவிரல்களின் இடுக்கில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பு தான் நான் என்று தோன்றியது. புரியாத மொழியில் எழுதப்பட்ட ரகசியப் புத்தகத்தின் வரிகளென சிகரங்களின் நீண்ட சரிவுகள் அடுத்தடுத்துக் கிடக்க, அவ்வரிகளின் மீது விரல் வைத்து வாசிக்கும் யாரோ ஒருவனின் அல்லது ஒருத்தியின் ஆள்காட்டி விரல் மட்டுமே நான் என்னும் மொத்த உடலும் என்ற உணர்வு வர, சலனமின்றி உறைந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்திருப்பேன் என்று தெரியவில்லை. சட்டென்று திரைவிலக்கப்பட்டு எதிர்பார்க்காத காட்சியை கண்டவனாய் துணுக்குற்றேன். நான் மலையென்றும், விளிம்பின் வரிகள் என்றும், சரிவுகள், பள்ளங்கள் என்றும் எண்ணியிருந்தவை அற்பக் கனவுபோலக் கலைந்தது. உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா? யாருடைய மூளைக்குள்ளோ எண்ணமாக இருக்கிறேன் என்றால் இன்னும் நான் பிறக்கவே இல்லையா? நான் பிறப்பதற்கு முன்பே என்னை எண்ணமாக அறியும் இந்த மூளை யாருடையது? அப்படியானால் என்னைப் பற்றி இதுவரை நான் கேட்பதாகத் தோனுகின்ற கேள்விகள் எல்லாம் உண்மையில் இந்த மூளையின் ஒட்டுமொத்த எண்ணங்களின் ஒரு சிறுபகுதி தானா அதுவுமில்லை வெறும் எதிரொலியா நான்? உண்மையில் எனக்கு உடலும் இருப்புமே கூட இல்லையா?

என் வாழ்நாட்கள் முன்பின்னாகப் புரட்டிப் போடப்பட்டது போல இருந்தது. குழப்பிக் கலைத்துப் போடும் கேள்விகளின் பாரம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறிவிட வேண்டுமென விரும்பினேன். நிணமும் குருதியும் தோய்ந்த அதே உயிர்ப்புள்ள தேகத்தின் வாடை இப்போது மிக அருகில் வீசுவதை உணர்ந்து உடல் கனத்து மீண்டேன். அந்த வாடை கரைந்து புலனின் உணர்வு எல்லைக்கு அப்பால் செல்லும் தோறும் அது கூர்மையடைவதை வியந்தேன். மனம் கூடவே விரைந்து அதைப் பாய்ந்து பற்றிக்கொண்டு யாரென அடையாளம் காணத் துடித்தது. ஒருகனம் மலை அடிவாரத்து புல்வெளியில் வெண்பற்கள் ஒளிவிட சிரித்த கள்ளமற்ற இளம்பெண் முகம் தோன்றி மறைந்து உள்காட்டின் அடியற்ற ஆழத்தில் மின்னி மறையும் புரிந்துகொள்ளவே முடியாத கரிய பெரும்விழிகள் தெரிந்தது.
தலையைச் சிலுப்பிக் கொண்டு, நிதானிக்க முயன்றேன். அண்ணாந்து தலை சரித்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். குபுகுபுவென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்து முட்டியது. மேலே தெளிவாக நீலக்கடல் விரிந்து கிடக்க, வெண் நுரைபொங்க நீரலைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சத்தமே இல்லாமல் புறப்பட்டு வந்து கரையில் விரவியழிந்தன. நான் இருப்பது ஆழியினடியில் இன்னொரு உலகிலா, இல்லை, உலகம் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டதா? உடல் தளர்ந்தது.
இறுதி முயற்சியாகக் கால் விரல்களை அழுந்த மடித்து ஊன்றி நின்றேன். இருகைகளையும் விறைப்பாக்கி பக்கவாட்டில் விரித்து உள்ளங்கைகளுக்குள் கைவிரல்களை சுருட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். தோலும், உடலின் மொத்த நரம்புகளும் அவற்றின் உச்சபட்ச இழுவையில் இழுபட்டுத் தெறித்துவிடுவது போல இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு ஓரிரு நிமிடம் கண்மூடி இருந்துவிட்டு மெல்லக் கைவிரல்களைத் தளர்த்தி இமைகளைத் திறந்து பார்த்தேன். மேலே நீலவானில் வரிவரியாக வெண்பஞ்சு மேகங்கள் நகர்ந்து மலைமுடியில் தேங்கி, பின் காற்றில் சிதறிக் கலைந்தது. மெல்ல நகைத்துக் கொண்டேன்.

நான் நின்று கொண்டிருப்பது ஒரு சிகரத்தின் உச்சியிலுள்ள சிறு கற்பாறைத் திட்டின்மீது. கால்விரல்களின் விளிம்பில் இருந்து அப்படியே கீழே அதலபாதாளத்தில் முடிவின்மை இருண்ட குழம்பாக அமைதியாக இருக்கிறது. நான் என் இருப்பை உறுதி செய்து கொள்ள தீர்மானித்துவிட்டேன்.
பழுத்த இலை உதிர்வது போல என் பாதங்கள் அதிர்வின்றி பிடியை விடுகின்றன. என் உடல் நழுவி முடிவின்மை நோக்கிச் சரிகின்றது. நான் எடையின்றி மெல்லிய இறகு போல காற்றால் மேலே மேலே உந்தப்பட்டு நீலவானின் ஒளியை நோக்கி மிதந்து செல்வது போல் உணர்கிறேன்.
அடுத்தகணம் தெரிந்துவிடும் என் இருப்பு.

- பிரகாஷ் சங்கரன்.
நன்றி: சொல்வனம்; இதழ் 62

2 comments:

  1. பிரகாஷ் தென்கரை: இருப்பு - The Natures Ecstasy -I felt it many times in my life which will not be obtained in normal course of life. I wish that you should come across lot such experience and blog it so person like me could able to experience through your poetic writing.

    ReplyDelete
    Replies
    1. Dear Hari,
      Thanks for the comments. I am glad you liked it :)

      Delete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...