Monday, December 12, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 4)


மைக்கேலேஞ்சலோ (1475 – 1564)


ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள ஊரில் பிறந்தவர் மைக்கேலேஞ்சலோ. மிக இளம் வயதிலேயே அவரது கலைத்திறன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. ஃப்ளோரன்ஸ் வந்து டொமினிகோ கிர்லாண்டயோ என்னும் ஓவியரின் கீழ் பயின்றார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்வாக்கு மிக்க மெடிஷி குடும்பத்தின் தத்துப் பிள்ளையாக ஆனார். பொறியியல், ஓவியம், சிற்பம், கட்டிட வடிவமைப்பு, கவிதை என்னும் பல்வேறு துறைகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கினார். லோரென்சோ மெடிஷி இளம் மைக்கேலேஞ்சலோவின் திறமை மேல் அபார நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தார். அவரின் முதல் கலைப்படைப்புகளுக்கு ஆனையும், பொருளுதவியும் கொடுத்தவரும் மெடிஷி தான்.

பிற்காலத்தில் வளர்ந்து புகழ்பெற்று பெரும் கலைஞனாக வெனிஸ், ரோம், பொலோன்யா என்று பல இடங்களிலும் வேலை செய்து, பொக்கிஷங்களாக புகழப்படும் கலைப்படைப்புக்களை உலகில் அவரின் கலை, கற்பனை மற்றும் அறிவுத்திறனின் சாட்சியமாக நிறுவிவிட்டிருந்தார். போப் உட்பட ரோமின் முக்கியமானவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்தார். ரோமின் புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயக் கட்டுமானத்தில் தலைமை சிற்பி, வடிவமைப்பாளராக இருந்தார். அவர் உயிருடன் இருந்த போதே அவரின் வாழ்க்கை வரலாறு எழுதி வெளியிடப்பட்டது. ஒரு கலைஞனுக்கு அவன் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அங்கீராம் அனைத்தும் குறைவிலாது கிடைத்தது.

ஆனாலும் மைக்கேலேஞ்சலோ எப்போதும் தனித்து, உள்முகமாக ஒடுங்கியவராக, சோகம் ததும்பும் முகத்துடன் இருந்தார். பணமிருந்தும் ஏழை போல தோற்றமளித்தார். தன்னுடைய 57வது வயதில் தொமாஸோ டி காவிலியெரி என்னும் 23 வயது இளைஞன் மேல் மிகுந்த காதல் கொண்டார். அந்த இளைஞனைக் குறித்து முன்னூறுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகளை எழுதியுள்ளார். அந்த உறவு ஓரினச்சேர்க்கை என்று சொல்லப்பட்டாலும், மைக்கேலேஞ்சலோவைப் பொருத்தவரை ஒரு சிற்பியாக, ஓவியராக அவரது படைப்பூக்கத்தைப் பெருக்கும் - அழகான உடலை ஆராதிக்கும், தூய பிளாட்டோனிய (பாலுணர்ச்சியை மீறிய) காதல் என்றார். இறப்பதற்கு முன் அவர் வரைந்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிற்ப, கட்டிட மாதிரிகளை எரித்தார்.

இத்தனைக்கும் மீறி இன்றும் மறுமலர்ச்சிக் காலத்தின் அசல் முன்மாதிரியாக மைக்கேல்லேஞ்சலோவும், அவரது சம காலத்திய இன்னொரு மாமேதையான லியானோர்டோ டாவின்சியும் போற்றப்படுகிறார்கள். டேவிட், தி பியதா (The Pieta), இறுதித் தீர்ப்பு நாள் (the last Judgement), the creation of Adam, Adam and Eve in Eden garden, சிஸ்டின் சாப்பலின் மேற்கூரை ஓவியம் (முன்னூறுக்கும் மேற்பட்ட உருவங்கள் அடங்கியது – 4 ஆண்டுகள் ஆனது வரைந்து முடிக்க) என் இன்னும் எண்ணற்ற அவருடைய புகழ் பெற்ற சிற்பங்களும், ஓவியங்களும் உலகின் முக்கியமான தேவாலயங்களையும், அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கிறது. மிகுந்த தெய்வபக்தியும், தீவிர கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கையும் உடையவரான மைக்கேலேஞ்சலோ இரண்டு முறை கடுமையாக நோய்வாய்ப்படு ம்ரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் பிழைத்தார். “நான் மிகச்சாதாரனமானவன், கலையின் மூலமாக கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக எனக்கு ஆயுளை நீட்டித்தந்துள்ளார்” என்றார். எண்பத்தி எட்டாவது வயதில் ரோமில் உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி உடல் ஃப்ளோரன்ஸுக்கு கொண்டுவரப்பட்டு, சாண்டா கிராஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாருடனும் அதிகம் பழகாத, வாழ்நாள் முழுதும் தனித்து ஒதுங்கி வாழ்ந்து மறைந்த அந்த உன்னதக் கலைஞனின் கல்லறையில் நின்ற போது எனக்குள் எழுந்த கேள்வி, எது மனிதனை உள்ளொடுங்கி, தனக்கான ஒரு உலகைக் கற்பனையில் கட்டி, அதை ஓவியமாகவும், சிலையாகவும் கலைவடிவமாக வெளிப்படுத்த வைக்கிறது? கடவுளா, தனி மனித இயல்பா, அவன் அகம் மட்டும் அறியும் இன்ப துன்பங்களின் உச்சகட்டங்களா, அவன்  விரும்பிய ஆனால் இழந்த உறவுகளா, வெளித்தெரியாத வேறு ஏதாவதா... எது கலையாகிறது?

உயர்ந்த தூண்களின் உச்சியில் வளைந்த கூம்பு விதானங்கள், அப்பால் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடி ஓவியத்துக்கு சூரியன் உயிர் கொடுக்க, நீண்ட பிரார்த்தனைக் கூடத்தில் சுற்றுலாப் பயணிகளின் கிசுகிசுவென பேச்சு சப்தத்துகிடையே கேமராக்கள் கண்சிமிட்ட, கல்லறையின் முன்னால் நெடு நேரம் நின்று கொண்டிருந்தேன்.   பளிங்குச் சமாதியில் குளிர்ந்த வெண் பளிங்குச் சிலையாக மூன்று பெண்கள் சோகமாகத் தலை குணிந்து அமர்ந்திருக்க உள்ளே மௌனமாக மைக்கேலேஞ்சலோ அவருக்குப் பிடித்த தனிமையில் இருப்பது போலத் தோன்றியது.
மைக்கேலேஞ்சலோவின் கல்லறை

கலிலியோ கலிலி (1564 -1642)

பிஸா நகரத்தில் பிறந்து ஃப்ளோரன்ஸ் நகரத்தில் வளர்ந்தவர் கலிலியோ. கணிதம், இயற்பியல், வானவியல், தொழில்நுட்பம், தத்துவம் என்று பல அறிவுசார் துறைகளில் மேதையாகத் திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மறுமலர்ச்சியின் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர். ஐன்ஸ்டீனால் நவீன அறிவியலின் தந்தை எனப் புகழப்பட்டவர். கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை ஆதரித்ததால் கிறித்தவ மத அதிகாரபீடங்களின் எதிர்ப்புக்கு ஆளானார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள புவிமையவாதம் பொய், சூரியன் அசையாமல் மையத்தில் இருக்க பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்றார். மதவிசாரனைக்கு உட்படுத்தபட்ட போதும் தன் கருத்துக்களில் பின் வாங்காததால் “மத நம்பிக்கைகளுக்கு எதிரான கடுமையான சந்தேகவாதி” என முத்திரை குத்தப்பட்டார். அதன்பின் வாழ்நாளின் இறுதி வரை ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள அவருடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மூன்று வருடங்கள் தொடர்ந்து வாரம் ஒருமுறை பைபிளின் ஏழு பாவ மன்னிப்பு பகுதிகளையும் படிக்க வேண்டும் என தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களை விளக்கி நூல்கள் எழுதினார்.  தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு 77 ஆம் வயதில் மரணமடைந்தார். முதலில் வெளியில் புதைக்கப்பட்ட அவரது உடல் பின்னர், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு சாண்டா கிராஸ் தேவாலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கலிலியோவின் கல்லறை

கலிலியோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவியலின் பல உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்ட இந்தியாவின் பாஸ்கரர், இன்றும் பாஸ்கராச்சாரியர் என்று ஞானியாக, ஆசிரியராகப் போற்றப்படும் நமது பண்பாடு நினைத்து பெருமைப்படாமல் இருக்க நான் “பகுத்தறிவு” பாசறையைச் சேர்ந்த புத்திசாலிமூடனா என்ன?? தான் கண்டடைந்த உண்மையை துணிச்சலாக முன்வைத்து மதக்குருடர்களை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞனுக்கு மனதார வணக்கம் செய்துவிட்டு நகர்ந்தேன்.

மக்யாவெல்லி (1469 – 1527)

ஃப்ளோரன்ஸில் பிறந்த அரசியல் தத்துவ சிந்தனையாளர். மெடிஷி குடும்பத்தை விரட்டிவிட்டு குடியரசு மலர்ந்த போது, 29 வயதில்  ஃப்ளோரன்ஸின் நிர்வாக சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மெடிஷி குடும்பம் ஃப்ளோரன்ஸைக் கைப்பற்றியபோது சிறையில் கொடுமைகள் அனுபவித்து, பின்னர் குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பில்லாமல் எழுத்தில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது நெருங்கிய அரசியல் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். தனது புகழ்பெற்ற அரசியல் சிந்தாந்த நூலான ‘தி பிரின்ஸ்’ ஐ எழுதினார். உன்னத அரசியலுக்கும், நடைமுறைக்குச் சாத்தியமான அரசியலுக்கும் உள்ள அடிப்படையான முரனை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிமுறைகளைப் பேசினார். தனிப்பட்ட ஒழுக்கம், பொது ஒழுக்கம் இரண்டையும் குழப்பாமல் பிரித்துக்கொள்ள வேண்டும், எந்தப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு முற்றிலும் புதிய அரசனாக அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புபவன் சில ஒழுக்க/நேர்மை மீறல்களைச் செய்தாக வேண்டும் என்றார். கற்பணையான உன்னதச் சமூகம் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அரசனுக்கு முன் மாதிரியாக இருக்காது என்பது அவர் கொள்கை. 58 ஆவது வயதில் ஃப்ளோரன்ஸில் மரணமடைந்தார். சாண்டா கிராஸில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவுச் சின்னத்தில் “புகழ்ச்சிக்கு இன்னொரு சொல் ஈடில்லாத பெயருடையவர்” என்று இத்தாலியனில் பொறித்து வைத்துள்ளார்கள்.
மக்யாவெல்லியின் கல்லறை

இன்னும் ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த பல சிற்பிகள், ஓவியர்கள், மதகுருமார்கள், இலக்கியவாதிகள் போன்றோரின் கல்லறையும் நினைவுச் சின்னங்களும் இங்கே இருக்கிறது. தேவாலயத்தின் வெளியே உயர்ந்த பீடத்தில் பெரிய பளிங்குச் சிலை வைத்திருக்கிறார்கள் தாந்தேவுக்கு. சாகும் வரை பிரியமான ஊருக்குள் வரவிடாமல் செய்த ஃப்ளோரன்ஸ் நகரின் குற்ற உணர்வு, பாவமன்னிப்புக் கேட்டு வைத்திருப்பது போல இருந்தது. பஸிலிக்காவின் உள்ளும் புறமும் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்கும் பிற வண்ணப் பளிங்குக் கற்களையும் கொண்டு இழைத்திருக்கிறார்கள். உட்புறச் சுவர்களில் இருபதுக்கு இருபது அடி அளவில் எல்லாப் பக்கமும் பைபிள் காட்சிகள், ஃப்ளோரன்ஸ் வரலாற்று நிகழ்வுகள், ரோமத் தொண்மங்களை நிஜ அளவுள்ள ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு தூணிலும், சிறிய ‘ஆல்டர்’களிலும் பளிங்குச் சிலைகள். இண்டு இடுக்களில் எல்லாம் ஓவியங்கள், சிற்பங்கள், போதாததற்கு மாபெரும் ஜன்னல்களில் கண்ணாடி ஓவியங்கள். வழிப்பாட்டுத் தலமாக இல்லாமலிருந்தால் இதுவும் ஒரு அருங்காட்சியகம் தான்.
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்காவின் உள்புறம்...
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்கா
சந்தேகத் தாமஸ்.. சாண்டா கிராஸ் பசிலிக்கா


இதமான குளிர், மரவேலைப்பாடுகள் மிகுந்த உயர்ந்த மேற்கூரை, ஒவ்வொரு படத்தின் முன்பும் ஆடாமல் நின்றெரியும் மெழுகுவர்த்திகள், அதன் முன் மண்டியிட்டு வணங்கும் வெள்ளை முகங்கள், குறிப்பாக கண்மூடி அசையாமல் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் பொண்ணாக மினுங்க, பிரார்த்தனை மரப்பெஞ்சில் உட்கார்ந்து உற்று ரசித்தேன்.

மிதமான விளக்கு வெளிச்சம் ஆரஞ்சு வண்ணத்தில் பரவிக் கிடக்க, தங்க முலாம் பூசப்பட்டுள்ள ஆல்டரும், அலங்கார வளைவுகளும், பூ வேலைப்பாடுகளும், ஓவியங்களும் ஜொலித்தது. மொத்த தேவாலயமுமே ஒரு பெரிய முப்பரிணாம ஓவியம் போலவும், அதனுள் ஒரு ஓவியக் கதாபாத்திரமாக நானும் இருப்பது போல பிரமை வந்தது.

ஒருபுறம் அதி நுணுக்கமாக செதுக்கப்பட்டு, ஆடை மடிப்புகள், பறக்கும் கூந்தல், நீட்டிய கைகள், எடுத்த பாதம் என உயிர்-நிகர் உடல் அசைவின் கனங்கள், முக பாவனைகள் என்று பளிங்குச் சிலைகள் உயிருடன் எழுந்து வருவது போலிருக்க, மறுபுறம் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் உறைந்த பாவனையில், மூடிய இமைகளுக்குள் மெல்ல உருளும் விழிகள், சிற்பம் போல் அசையாமல் கண்மூடி பிரார்த்திக்கும் சிவந்த இதழுள்ள பெண்கள் உயிரற்ற சிலைகள் போலத் தோன்றும் முரனை எண்ணி நகைத்தபடி வெளியேறினேன்.
பெயர் மறந்து போன ஏதோ பளிங்கு தேவதை..
ஒரு பெரிய சதுக்கத்தின் முன் வானைத் துளாவும் கூம்பு வடிவ கோபுரங்களுடன் நிற்கிறது சாண்டா கிராஸ் தேவாலயம். சதுக்கத்தில் ஒரு பெண் தெருக்கலைஞர் தனியளாக நின்று வயலின் வாசித்தபடி கீச்சுக் குரலில் ஏதோ பாடிக் கொண்டிருந்தாள், நெளிந்து நெளிந்து மேலேறி குரல் உச்ச சுருதியில் எங்கோ உயரத்தைத் தொட்டபோது எதுவோ கைதவறி விழுந்து உடையப் போவது போல் எனக்குப் பதட்டமாக இருந்தது. வயலின் கம்பியின் நாதம் எது, அவள் குரல் எது என்று பிரித்தறிய முடியவில்லை. அவள் அப்படியே குரலை நீட்டிப் பிடித்து கொஞ்சம் மேலேயே தங்கிவிட்டு பின் அழகாக வழுக்கிக் கொண்டு இறங்கி வந்து இயல்பான குரலில் பாடினாள். பாடி முடித்ததும் கூடி இருந்தவர்கள் பலத்த கைதட்டலில் உற்சாகப் படுத்தினார்கள். சுற்றிலும் இருந்த பெரிய கட்டிடங்களில் குரல் எதிரொலித்து அவள் பாடுவதை வெட்டவெளியிலும் நன்றாகக் கேட்கக் கூடிய ஒலியமைப்பை உண்டாக்கியது.

சுற்றிலும் சிறிதும், பெரிதுமான பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், காபிக் கடைகள். பளீரென்ற வெளிச்சம், நீல வானம். சுற்றுலாப் பயனிகளுக்கேற்ற காலநிலை. மக்கள் உற்சாகமாகக் கூட்டம் கூட்டமாக பேசிச் சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சட்டென்று ஐநூறு ஆண்டுகள் முன்னால் வந்து குதித்தது போலிருந்தது. ஒரு கோகோ–கோலா வாங்கிக் குடித்து 2011 க்கு வந்தேன்.


பகுதி-3                                                            பகுதி-5

Sunday, December 11, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 3)


சாண்டா கிராஸ் தேவாலயம்
சாண்டா கிராஸ் பசிலிக்கா, ஃப்ளோரென்ஸ்
ஐரோப்பிய கிறிஸ்தவ மதவரலாற்றில் மிகமுக்கியமான ஆளுமையாகப் போற்றப்படும் புனித ஃபிரான்ஸிஸ் (12-13ஆம் நூற்றாண்டு) தோற்றுவித்ததாகச் சொல்லப்படும் சாண்டா கிராஸ் பசிலிக்கா, பதிமூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் மீண்டும் முழுவதும் வெள்ளைப் பளிங்கினால் கட்டப்பட்டு, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு பொ.வ.1442ல்  போப் நாலாம் யூஜீனால் திறந்து வைக்கப்பட்டது.  ஃப்ளோரன்ஸ் நகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் இந்த தேவாலயம். இங்கு தான் மறுமலர்ச்சிக் காலத்தைக் கட்டியெழுப்பிய மைக்கேல் ஏஞ்சலோ, மாக்கியவில்லி, கலிலியோ உட்பட பலரின் பூத உடல் புதைக்கப்பட்டுள்ளது.

Interior - Santa Cross Basillica, Florence
இவர்கள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்நகரத்தின் வரலாற்றிலிருந்தும், கலாச்சாரப் புரட்சிக்கான அவர்களின் பங்களிப்பிலிருந்தும் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் மிகுந்த நுண்ணுணர்வும், மிக மெல்லிய இதயமும் கொண்ட படைப்பாளிகள். அவர்களின் சொந்த இன்ப துன்பங்களின் தாக்கம் தான் அவர்களது கலை வெளிப்பாடு. அது தான் மறுமலர்ச்சியின் வேர். இவர்கள் ஃப்ளோரன்ஸில் வாழவும், வெளியேறவும் காரணமாயிருந்த நிகழ்வுகள் ஒருவகையில் மறுமலர்ச்சி வெளியில் பரவவும் காரணமாயிருந்தது. இவர்களின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதே ஃப்ளோரன்ஸ் நகரை, அதன் பொக்கிஷங்களைத் தங்கள் அகத்திலிருந்து உருவாக்கி அளித்த கலைஞர்களின் ஆத்மாவோடு சேர்த்து முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

தாந்தே (1265 – 1321)

தாந்தேயின் சிலை....
ஐரோப்பாவின் மகாகவியாகப் போற்றப்படும் தாந்தே அலிகியெரி பிறந்தது ஃப்ளோரென்ஸில். அப்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் உச்சத்திலிருந்த போப்பரசர் ஆதரவாளர்கள் மற்றும் புனிதரோமாபுரிப் பேரரசரின் ஆதரவாளர்களுக்கு இடையில் தொடர்ந்து அதிகார மோதல்கள் ஏற்பட்டது. போப்பின் ஆதரவாளர்கள் ‘கெல்ஃப்’ என்றும், ரோமப் பேரரசரின் ஆதரவாளர்கள் ‘கிப்பெல்லைன்’கள் என்றும் அழைக்கப்பட்டனர். தாந்தே கெல்ஃப்களின் சார்பாகப் போர்களில் பங்கு பெற்றார். 


போப்பின் ஆதரவாளர்களான கெல்ஃப்கள் வென்றனர், பின்னர் அவர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஃப்ளோரன்ஸ் நகரத்தின் நிர்வாகத்தில் போப்பின் முழுத்தலையீடும் வேண்டும் என்று நினைத்தவர்கள் ‘கருப்பு கெல்ஃப்கள்’ என்றும், ரோமின் அதிக தலையீடில்லாத சுதந்திரமான ஃப்ளோரன்ஸை ஆதரித்தவர்கள் ‘வெள்ளை கெல்ஃப்கள்’ என்றும் பிரிந்து மோதிக்கொண்டனர். இப்போது தாந்தே வெள்ளை கெல்ஃப்கள் பக்கம் இருந்தார். முதலில் ஜெயித்த வெள்ளை கெல்ஃபுகளை பின்னர் ரோமிலிருந்து வந்த போப்பின் படை வென்று துரத்தியது. அந்தச் சமயம் அமைதி உடன்படிக்கைக்காக ரோமில் போப்பைச் சந்திக்கச் சென்றிருந்த தாந்தேவை ஃப்ளோரன்ஸில் இருந்து இரண்டு வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்டதாக அறிவித்து, பெரிய தொகையையும் அபராதமாக விதித்தனர் புதிய ஆட்சியர்கள். மீறி ஃப்ளோரன்ஸ் நகரத்தில் கால் வைத்தால் உயிருடன் கொளுத்தப்படுவார் என்றூம் எச்சரித்திருந்தனர். பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால் அனுமதி தரப்படும் என்ற போது அதை நிராகரித்து வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தார்.


தனது பிரியத்திற்குரிய நகரமான ஃப்ளோரன்ஸுக்கு தான் திரும்பவே முடியாதென்ற ஏக்கம் அவர் இறப்பு வரை இருந்தது. மேலும் அவரது இளமையில் 9 வயதான போதே பீட்ரைஸ் என்னும் சிறுமியை கண்டவுடன் காதல் வந்திருந்தது. பீட்ரைஸ் வளர்ந்து இளம்பெண்ணான போது அவர் காதலும் வளர்ந்தது, அடிக்கடி ஃப்ளோரன்ஸ் நகரத் தெருக்களில் சந்திருக்கிறார். 

ஆனால் தாந்தேயின் பெற்றோர் அவர் 12 வயதாக இருக்கும்போதே இன்னொரு பெண்ணுக்கு மணம் முடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டனர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டியிருந்தது. ஐரோப்பாவிலும் அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்திருக்கிறது! வெகு இளம் வயதிலேயே பீட்ரைஸ் இறந்ததும் தாந்தேயின் கவிமனதை ஆழமாகப் பாதித்தது. இந்தக் காலங்களில் ஃப்ளோரன்ஸுக்கு வெளியில் தான் தனது உலகப் புகழ்பெற்ற ‘டிவைன் காமெடி’ என்கிற கவிதைக் காவியத்தை இயற்றினார்.

பீட்ரைஸின் உருவமும், அவரது இளம் வயது காதல் நினைவுகளும் மீண்டும் மீண்டும் தாந்தேயின் மனத்தில் எழும்ப, அந்த எழுச்சியினால் உந்தப்பட்டு எழுத அரம்பித்தது தான் டிவைன் காமெடி. தாந்தே தன்னையே கதாப்பாத்திரமாக உருவகித்துத் தான் இறந்து நரகத்திற்கும், பின்னர் சிறிய தண்டனை/ பக்குவப்படுத்தல் காலத்தைக் கடந்து, கடைசியாக சொர்க்கத்திற்குச் செல்வதையும் மிக நுணுக்கமான, ஆழந்து தத்துவார்த்தமாகப் பொருள் கொள்ளும் விதத்தில் எழுதி, அதன் வழியாக ஒவ்வொரு மனிதனின் ஆன்மீகமான வாழ்க்கைப் பயணத்தை காவியமாக்கினார். 

அவரது காவியமே இத்தாலியன் மொழி உண்டாகி வளரக் காரணம். இத்தாலியன் மொழியையே ‘தாந்தேயின் மொழி’ என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. கடைசி வரை தான் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊருக்குப் போக முடியாமலேயே 1321ல் ராவென்னா என்னும் ஊரில் மரணமடைந்தார். அங்கேயே அவரது உடல் புதைக்கப்பட்டது. பின்னர் ஃப்ளோரன்ஸ் தவறை உணர்ந்து, அவரது உடலின் மிச்சங்களைப் பலமுறை கேட்டும் ராவென்னா சபை மறுத்துவிடவே, ஃப்ளோரன்சின் சாண்டா கிராஸ் தேவாலயத்தில் தாந்தேயின் நினைவு ஸ்தூபம் அமைக்கப்பட்டு, அந்த வெற்று நினைவுச் சினத்தின் மேல் “காலத்தின் மிகச்சிறந்த கவிக்கு, மரியாதையுடன்...’ என்று அவரது காவியத்திலிருந்தே வரியை மேற்கோள் எடுத்து பொறித்துவைத்துள்ளனர்.
தாந்தேயின் நினைவுச் சின்னம், சாண்டா கிராஸ் தேவலயத்தினுள்....


பகுதி-2                                                          பகுதி-4

Wednesday, December 7, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 2)


பெர்சீயஸின் மெடூசா வதம்

 

கிரேக்க தொண்ம நாயகன் பெர்சீயஸ்பாம்புக் கூந்தல் கொண்டமக்களைக் கல்லாக மாற்றும் அரக்கி மெடூசாவின் தலையை அறுத்துமுகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கும் காட்சி -பதினாறாம் நூற்றாண்டு ஃப்ளோரன்ஸ் சிற்பி பென்வெனுடோ செல்லினியின் படைப்பில் வெண்கலச் சிலையாக. இந்தச் சிலையை தொடர்ந்து 10 வருடம் செய்ய முயன்றுமுடியாமல் தோல்வியடைந்துஒருநாள் தன் வீட்டு சாமன்களையெல்லாம் எரி உலையில் போட்டு வெண்கலத்தை உருக்கி சிலையை வார்த்தபோதுஅதிசயமாக சிலை முழு உருப்பெற்றது. வலதுகாலில் மூன்று விரல்கள் மட்டும் பின்னால் சேர்க்கப்பட்டது

நாடும் நாட்டு மக்களும்
அதிகாலை ஃப்ளோரன்ஸ் 'சாண்டா மரியா நோவெல்லா' ரயில்நிலையத்தை வந்தடைந்த போது 5.30 மணி. வெளியேறி, வாடகைக் கார்களைத் தாண்டி ரோட்டில் இறங்கிய போது மெல்ல விடிந்து கொண்டிருந்தது. குளிர் அவ்வளவாக இல்லை. முன்னரே லாட்ஜைச் சென்றடையும் வழியை அச்சிட்டு கையில் வைத்திருந்தாலும், அதிகாலை மயக்கத்தில் முன்னால் பிரிந்து சென்ற நான்கு பெரிய சாலைகளில் எதில் செல்ல வேண்டுமென்பதில் குழப்பம் வந்தது. சரி, மக்களின் பொறுமை எப்படி என்று சோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது தான் என முடிவு செய்து, யாராவது சிக்குவார்களா என தேடினேன். தன் பெட்டிக் கடையை திறந்து, தினசரிகளை தொங்கவிட்டும், பொருட்களை எடுத்து வெளியில் வைத்து அடுக்கிக் கொண்டும் இருந்த பெரியவரிடம், ஹோட்டல் முகவரியைக் காண்பித்து உலகப் பொது மொழியில் (சைகை!) கேட்டேன். பொறுமையாக வழி சொன்னார் -இத்தாலியனில்! ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் என் சோதனையில் தேறிவிட்டமையால் அவரது திருப்திக்காக மண்டையை வெகு விவரமாக ஆட்டிவிட்டு, நன்றி சொல்லி, பெட்டியை உருட்டிக் கொண்டு நடந்தேன். சிறிய கருங்கற்கள் பதிக்கப்பட்ட நடைமேடையில் பெட்டியின் சக்கரம் ‘கடபுட’வென சத்தம் போட்டு காலை வேளையின் அமைதியைக் கெடுத்தது, இருந்தாலும் இறக்கமில்லாமல் தரதரவென இழுத்துச் சென்றேன். ஐம்பது மீட்டருக்குள் மறுபடியும் சந்தேகம், இம்முறை ஆளரவமில்லாத பனிபொழிந்து ஈரமான சாலையைப் பெருக்கும் பணிப்பெண் சிக்கினார். அவரிடம் தெருப்பெயரைப் புரியவைக்க பத்து நிமிடமும், ஹோட்டல் பெயரை புரியவைக்க பத்து நிமிடமும் முதலீடு செய்தேன். என் உச்சரிப்பு ஒரிஜினல் பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் நானே விட்டாலும், அவர் விடுவதாய் இல்லை. என்னை நிற்கச் சொல்லிவிட்டு அந்த அரை இருட்டில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பத்தடி நடந்தார். அப்புறம் சைகை காட்டி விட்டு என்னைத் திரும்பிப் பார்க்கச்சொன்னார். எதிரே வலப்பக்கம் நான்கு கட்டிடம் தள்ளி விடுதி! வழிந்து சிரித்துக் கொண்டு போய்ச்சேர்ந்தேன், மக்கள் நல்லவர்கள் தான் போல என சமாதானம் செய்தபடி!

பொதுவாக சுற்றுலாத் தலங்களில் வசிப்பவர்கள் இந்தமாதிரி வழி சொல்லி அலுத்துப் போயிருப்பார்கள். இந்தியாவில் அதை பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு, கூடவே கூட்டிச்சென்று விடும் நல்ல உள்ளங்கள் எல்லா ஊரிலும் உண்டு. ஆனால் ஐரோப்பாவின் நியூட்ரினோ வேக வாழ்க்கையில், அடுத்தவர்களுக்காகச் செலவழிக்கும் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பேரிழப்பாகத் தோன்றுவது போலிருக்கும். யாரையும் கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

செக் குடியரசில் வெள்ளையர்களைத் தவிர வேறு இன, நிற மக்கள் மிகமிகக் குறைவு. தலைநகரான பிராகில் கூட அப்படித்தான். மங்கோலிய முக அமைப்புடைய வியட்நாமியர்களை விட்டால் வேறு நாட்டு மக்கள் அதிகம் பார்க்க முடியாது. ஐரோப்பவின் அனைத்து நாடுகளிலும், பெருநகரங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆப்பிரிக்கர்கள் பிராகில் விரல் விட்டு எண்ணிவிடும் அளவு தான் இருக்கிறார்கள். பிராகை விட்டு தள்ளி ஏதாவது சிறு நகரங்கள், கிராமப்புறங்களுக்குச் சென்றால் இந்திய நிறத்தைப் பார்த்த்தும் சட்டென்று ஒரு அதிர்ச்சி முகத்தில் பரவி, அந்தக்கனமே அதைச் சமாளிக்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அசட்டு வெள்ளையில் இருக்கும் வட இந்தியர்களை சமயங்களில் ரோமா என்றழைக்கப்படும் ஜிப்ஸி இன மக்களுடன் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு ஜிப்ஸிக்களைக் கண்டால் ஆகாது. 

ஆனால் ஃப்ளோரன்ஸில் ஆப்பிரிக்கர்களும், மத்தியக் கிழக்கு நாட்டினரும், பங்களாதேசிகளும், இலங்கைத் தமிழரும், சிங்களரும் நிறைய இருக்கிறார்கள். பங்களாதேசிகள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகம். பெரும்பாலும் தெருக்கடைகள், சிறு வியாபாரம், துப்புரவுப் பணி போன்றவற்றைச் செய்கிறார்கள். ஆகவே வெவ்வேறு நிற மக்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு யாரும் வித்தியாசமாகப் படுவதில்லை. ஒரு நாள் ஊர் சுற்றி விட்டு இரவு பதினொன்னரை மணிக்கு ஒருவரிடம் வழி கேட்டேன். இளம்பெண், ஐந்தே முக்கால் அடி உயர டார்க் சாக்லேட் நிறத்தில் இருக்கும் என்னிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அருகில் வந்து பதில் சொன்னாள். உணவகங்கள், சுற்றுலாத் தளங்கள், பேருந்துகள் என எல்லா இடங்களிலும் அப்படியே.

நகரின் பெரும்பகுதியும், குறிப்பாக பழைய நகரப்பகுதி முழுவதும் கருங்கல்லாலான ரெனையசென்ஸ் பாணி கட்டிடங்களே இருக்கின்றன. கற்பாறைகளைச் செவ்வக வடிவத்தில் பெருங்கற்களாகச் செதுக்கி அதை ஒன்றின் மீது மற்றொன்று அடுக்கிக் கட்டப்படும் கட்டிடம். வெளிப்புறமிருந்து பார்க்க செவ்வக வடிவ கட்டம் கட்டமாகத் தெரியும். எல்லாம் திட்டமிட்டு கட்டியது போல ஒரே அமைப்பும், நான்கு மாடி உயரமுமாக இருக்கிறது. வண்ணம் பூசப்பட்ட கட்டிடங்களும் இருக்கின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை என்று பளீர் வண்ணங்கள் இருந்தாலும் அவற்றின் மங்கலான 'ஷேட்'களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்கள் ஒன்றையொன்று அடுத்து வரிசையாக நதியின் இருகரைகளிலும், தெருக்களிலும், சதுக்கங்களின் நாற்புறமும் சுற்றி நின்று கண்களுக்கு கலவையான அழகைக் காட்சிவைக்கின்றன. இதுவே பொதுவாக ஐரோப்பாவின் எந்த நகரத்துக்குப் போனாலும் பொதுவான அமைப்பு.

பிரதான சாலைகள் கூட அகலமில்லாமலும், குறுக்குச் சாலைகள் அதை விட நெருக்கலாகவும், சந்துகள் இரண்டு பேர் மட்டும் நடக்கக் கூடிய அளவிற்கு குறுகலாகவும் இருக்கிறது. இந்தக் குறுகிய சந்தில் நடக்கும் போது தலைக்கு மேலே பல கட்டிடங்கள் எதிர்ப்புறமுள்ள கட்டிடத்தை இனைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடங்களின் கூரை கேரள, தமிழ்நாட்டு பழைய வீடுகளைப் போல ஓடு வேயப்பட்டு, உள்புறம் மரச் சட்டங்களால் தாங்கப்பட்டுள்ளது. 


பெரும்பாலும் எல்லா பழைய சாலைகளும் செங்கல் அளவுள்ள கருங்கற்களால் பாவப்பட்டிருக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளை ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்லும் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் தடதடத்துப் போகும் போதும், குதிரைகளின் இரும்பு லாடம் அடித்த குளம்படியின் டக்டக் சத்தமும், குறிப்பாக அந்தி சாய்ந்த பிறகு, கண்ணை உறுத்தாத ஆரஞ்சு பொன் நிறத்து விளக்கொளியில் ஏதோ 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருப்பது போல ஒரு பிரமையை உண்டாக்குகிறது. கட்டிடங்கள் அவற்றின் பழமை மாறாமல் பேணப்படுகிறது. அந்தப் பழமை தான் இந்நகரின் சுற்றுலா மூலதனம். அதை பெயிண்ட் அடித்தும், இடித்துவிட்டு கண்ணாடி ஒட்டிய ஜிஜிகு உயர கட்டிடங்கள் கட்டியும் நாறடிக்கவில்லை.

தடுக்கி விழுந்தால் ஒரு மியூசியம் அல்லது பழைய சர்ச், இல்லாவிட்டால் காபி – பிஸா கடைகளில் தான் விழவேண்டும். நகரமெங்கும் காபி மணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. இத்தாலியர்களுக்கு காபி என்றால் நல்ல ஸ்ட்ராங்கான கடுங்காப்பி, சர்க்கரை இல்லாமல், ஒரு மடக்கு – அவ்வளவு தான். அந்த வாசனையும், கசப்பும் பல மணி நேரம் தங்கும். நான் 30மில்லி அளவுள்ள அந்தக் காப்பியைக் குடித்துவிட்டு கசப்பு தலைக்கேறி கபாலத்தை இடிக்க, சாமி வந்தது போல தலையைச் சிலுப்பிக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். மூச்சு, நாடி, நரம்பெல்லாம் காபி ஓடுவது போலிருந்தது. நமக்கு 'ஆத்துல கலந்த பசுமாட்டுப் பாலில், டிகாஷன் சேர்த்து, வட்ட டபராவில் நுரைவர ஆற்றிக் குடிக்கும் நரசூஸ் காபி தான் பேஷ்..பேஷ்..' என நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்தக்காபி கொடுப்பது பாரம்பரியமான விருந்தோம்பல். மற்றபடி கப்புசினோ, பால் காபி (கஃபே லாட்டே), இத்யாதிகள் அவர்கள் விரும்புவதில்லை. அதெல்லாம் இத்தாலி பெயரைச் சொல்லி வெளியே பிரபலம். 

ஸ்பாகெட்டி, பாஸ்தா, பிஸா, லஸான்யா என்று இத்தாலிய உணவுகள் எல்லாம் உலகம் முழுதும் பரவி விட்டது. நம் மக்களிடம் அதைச் சாப்பிட்டால் விஞ்ஞானி ரேஞ்சுக்கு ஒரு தற்பெருமையும், அறியாதவர்களை ‘அபிஷ்டு’க்களாகப் பார்க்கும் தொணியும் வந்துவிட்டது. மைதா மாவு அப்பளம் போல இருக்கும் மெல்லிய வஸ்துவை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒவ்வொரு அடுக்கின் நடுவிலும் கீரை, காய்கறி, சீஸ் வைத்து நிரப்பி வேக வைத்து, உப்பிலிட்ட ஆலிவ் காய்கள் மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறப்படும் சைவ லஸான்யா பிடித்திருந்தது. பாகிஸ்தானிய மற்றும் இந்திய உணவகங்கள் இருந்தது, சரி தமிழ்வாணன் போல இட்லி தேடி அலைந்து தமிழ் மானம் காக்க மனமில்லாமல் பிஸா, பழம், காபியென்றே நான்கு நாளும் ஓட்டிவிட்டேன்.

தங்கநகைக் கடைப் பாலம்

இரவில்...
பதிணான்காம் நூற்றாண்டில் ஆரன் நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்தக் கல்ப்பாலத்தில் (ponte vecchio - பழைய பாலம்) ஆரம்ப காலத்தில் முழுவதும் கசாப்புக் கடைகள் தான் இருந்திருக்கிறது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சிறுவியாபாரம், வட்டிக்கடை என்று வளர்ந்து இப்போது வரிசையாக தங்க நகைக்கடைகள் தான் இருக்கின்றன.

பகலில்...
ஆங்கிலத்தின் Bankrupt என்ற வார்த்தை உருவாக இந்தப் பாலம் தான் காரணம். அந்தக்காலத்தில் வியாபாரிகள் தங்கள் கடைச்சரக்கை பரப்பி வைக்கும் மர மேசையை (banco), அவர்கள் தரவேண்டிய கடன் தொகையைத் தர முடியாமல் போனால், அரசாங்க ஆட்கள் அடித்து நொறுக்குவார்களாம் (rotto). மேசை உடைந்தால் வியாபாரம் செய்ய முடியாது. இந்தச் செயலே bankruptcy என்றானது. கடைகளின் பழைய தோற்றத்தை மாற்றாமல் வியாபாரம் செய்கிறார்கள். இன்று இந்தப் பாலம் ஃப்ளோரன்ஸின் முக்கியமான காட்சித்தலம்.பகுதி -1                                                                                                                                   பகுதி -3

Saturday, December 3, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)
அக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வெனிஸ் வழியாக நீண்ட ரயில் பயணம். ஐரோப்பாவில் விமானப்பயணத்தை விட மிகவும் சௌகரியமானது ரயில் பயணம். ஏசுவைப் போல ரெண்டு கையையும் நீட்டி ‘நம்புங்க துரை..நான் அப்படிப்பட்டவனில்லீங்க’ என்று சாட்சியம் சொல்லும் பாதுகாப்பு சோதணை கிடையாது, கூட்டம் இருக்காது, அமரவும் கால் நீட்டிக் கொள்ளவும் வசதியான நல்ல அகலமான இருக்கைகள், விமானத்திற்கு இணையான துயமையான கழிவறை வசதிகள், வண்டி ஓடும் தடதட சத்தமே இல்லாமல் இருக்கும் அமைப்பு, உள்ளே புகைபிடித்து அடுத்தவர்களுக்கு கேன்சர் அன்பளிப்பு அளிக்க அனுமதியில்லை, நிலப்பரப்புகளை நன்றாக காணும்படியான அகலமான கண்ணாடி ஜன்னல்கள்... என்ன ஒன்று நம் ஊர் போல உடனே பேசக்கிளம்பி இறங்கும் போது, ‘மறக்காம மெயில் பண்ணுங்க’ என்று ஆரத்தழுவிப் பிரியும் ‘ரயில் ஸ்னேகம்’ உருவாகும் வாய்ப்பு இல்லை. நேரம் பெரியவிஷயம் இல்லை என்றால், பேச்சுத் துணைக்கு ‘ஆள்’ இருந்தால் அல்லது ‘பராக்கு’ பார்ப்பதிலும், தண்டிதண்டியான புத்தகத்துள் முகம் புதைத்து மூக்கால் உழும் பழக்கமும் இருந்தால் ரயில் பயணமே சுகமானது.

ஃப்ளோரன்ஸ்

அழகிய ‘ஆரன்’ நதியின் கரையில் அமைந்திருக்கும் ஃப்ளோரன்ஸ், இத்தாலியின் துஸ்கானி மாகாணத்தின் தலைநகரம்,. இத்தாலிய மொழியில் ‘ஃபியரென்ஸ்’ என்றும் லத்தீனில் ‘ஃப்ளோரென்ஸியா’ என்றும் அழைக்கப்படுகிறது.

நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மையப் பகுதி முழுவதும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நகரம் ஒட்டுமொத்த பகுதியும் உலகப் பொக்கிஷமாகக் கருதப்படும் அளவிற்கு என்ன சிறப்பு அங்கே இருக்கிறது?

ஃப்ளோரன்ஸ் – இத்தாலி மற்றும் மொத்த ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் (Renaissance) பிறப்பிடம். பதினாலாம் நூற்றாண்டில் ஃப்ளோரன்ஸிலிருந்து தான் அறிவியல், தத்துவம், சமயம், அரசியல், இசை, ஓவியம் என எல்லா துறைகளிலும் ஒரு கலாச்சாரப் புரட்சி அலை கிளம்பி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் 17ஆம் நூற்றாண்டு வரை அதன் அனைத்துத் தளங்களிலும் புதிதாகப் புரட்டிப் போட்டது.

ஃப்ளோரன்ஸில் வாழ்ந்த மேதைகளின் பட்டியலைப் பார்த்தால் மலைப்பு வரும், அதுவே அந்நகரம் ஏன் ஐரோபிய வரலாற்றில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கும். சுருக்கமான ஒரு பட்டியல்: பலதுறை மாமேதையான லியனார்டோ டாவின்சி, கலைமேதை மைக்கேல் ஏஞ்சலோ, அரசியல், தத்துவ சிந்தனையாளர் மாக்கியவில்லி, ஐரோப்பாவின் தலைசிறந்த கவியான தாந்தே, வானவியலாளர் மற்றும் தத்துவவாதியான கலிலியோ கலிலி, செவிலியர்களின் முன்மாதிரியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

மெடிஷி குடும்பம்

ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த ‘மெடிஷி’ என்னும் பிரபுக்குடும்பம் ஐரோப்பா முழுமையிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்தில் இருந்து மட்டுமே நான்கு கத்தோலிக்க ‘போப்’கள் உருவாகியிருக்கின்றனர், இரண்டு ஃபிரெஞ்சு அரசிகள் மற்றும் ஆஸ்திரிய நாட்டின் மன்னரின் பட்டத்தரசி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஃப்ளோரன்ஸின் நுண்கலைகள் மற்றும் கட்டிடக்கலைக் கலைஞர்களை ஆதரித்து கலைகளின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமானவர்களும் இந்தக் குடும்பத்தினர் தான். வங்கித்துறையில் நுழைந்து அரசியல், மதம் என மெல்ல மெல்ல வளர்ந்த சாதாரண விவாசாயக் குடும்பம் இது.  ஃப்ளோரன்ஸை மையமாக்கி 14-18 ஆம் நூற்றாண்டு வரையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் 18ஆம் நூற்றாண்டில் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்திருக்கிறது மெடிஷி குடும்பம்.

புனித மேரி கதீட்ரல் (Cathedral of St. Mary of the Flower)

13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து படிப்படியாக 15ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் முழுவதும் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கவிந்த அரைக்கோள வடிவ மையக்கும்மட்டம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கும்மட்டமாக இருந்துள்ளது. 

அகலமான உயர்ந்த வாயில்களின் இருபக்கத்தையும் அலங்கரிக்கும் சுருள் வடிவ பளிங்குத் தூண்கள் கவனிக்கப்படவேண்டியது. ஒவ்வொரு சுருள் வடிவமும் வேறுபட்டவை. இடையில் வெவ்வேறு நிற பளிங்குக்கல்லை இழைத்து எப்படி இந்தச் சுருள் வடிவங்களை வடித்தார்களோ சிற்பிகள்? 

காலை மற்றும் மாலையில் இளஞ்சூரியன் வண்ணக்கிரண விரல்களால் இந்த பளிங்கு ஆலயத்தின் சுவர்களில் வருடி விளையாடும் காட்சியும், இரவில் முழுநிலவு மௌனமாக குளிர் வெண் ஒளியைப் பொழிந்து வட்ட முகம்மலர விண்ணிலிருந்து ரசித்திருப்பதையும் கண்டபோது ஒருவித பரவசம் மனதைக் கரைத்தது.
முன்பக்கத்தைத் தவிர மற்ற பக்கங்கள் அழுக்கும் பிசுக்கும் படிந்து பளிங்கின் பளபளப்பு மங்கிக் கிடந்தது. ஒரு வயதான அமெரிக்கர் என்னிடம், “இது பரவாயில்லை இருபது வருடம் முண்டு நான் வந்த போது இதைவிடக் கேவலமாக இருந்தது” என்றார். புதுப்பிக்கும் பணி மிகுந்த பொருட்செலவில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சைனோரியா சதுக்கம்

வெக்ஹியோ அரண்மனை
ஃப்ளோரன்ஸின் மையத்தில் அமைந்துள்ள இந்தச் சதுக்கத்தில் ‘வெக்ஹியோ அரண்மனை’ (Vecchio palace) மற்றும் அழகிய மேற்கூரை வளைவுகள் கொண்ட சைனோரிய அரங்கம் இருக்கிறது. இங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். எல்லாம் பளிங்குச் சிலைகள் சிலையின் முப்பரிணாம வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் உச்சபட்ச திறமையுடன் பயன்படுத்தியுள்ளார்கள். 360 கோணமும் சுற்றி வந்து நுணுக்கமாக ரசித்தால் மட்டுமே கலைஞனின் உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்புக் கொடுத்த்தாகும். எல்லாம் கிரேக, ரோம தொண்மங்களில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்கள், சிலையாக உறைந்து நூறாண்டுகள் தாண்டி நிற்கின்றது. 

பாலிக்சீனாவின் பலி

ட்ரோஜான் போர் முடிந்ததும், அக்கிலிஸின் ஆவி கிரேக்கர்களின் முன் தோண்றி, அவர்கள் கப்பல் மீண்டும் ஹெல்லாஸ் சென்றுஅடைய காற்று வீச வேண்டுமானால் மனித பலி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறான். அக்கிலிஸின் கல்லறையில் கன்னியான பாலிக்ஸீனாவைப் பலி கொடுக்க வேண்டுமென்கிறான். பாலிக்ஸீனா அடிமையாய் சாவதைக் காட்டிலும் பலியாய் மடிவதை விரும்புகிறாள். அக்கிலிஸின் மகன் நியோப்டோலமஸ் அவள் கருத்தை அறுத்துக் கொல்கிறான். பாலிக்ஸீனாவின் தாய் ஹெக்குபா தனது மகளின் முடிவை என்னிக் கண் கலங்குகிறாள்.ஹோமரின் இலியட்டில் இந்தக் கதை வரவில்லை, என்றாலும் யூப்ரிடிஸ் என்பவர் எழுதிய ட்ரோஜான் பெண், ஹெக்குபா என்னும் நாடகங்களில் வருகிறது. பியோ ஃபெடி என்னும் சிற்பி மனத்தில் கண்டதை பளிங்கில் அற்புதச் சிலையாக உருவாக்கி நிறுத்தியிருக்கிறான் சைனோரிய சதுக்கத்தில். சிலைகளின் முகத்தில் உணர்ச்சிகள், ஆடை, கூந்தல் ஆகியவற்றின் நுண்மையான, தத்ரூபமான செதுக்கல், கடைசிப் படத்தில் ஹெக்குபாவின் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளி வருவதைக் கூட செதுக்கியிருக்கிறான் மகாகலைஞன்!!

ஆடை மற்றும் கூந்தல் இழைகளின் நுணுக்கம்...
கண்ணீர்த் துளியை கவணிக்கவும்...                                                               பகுதி - 2