Wednesday, December 26, 2012

நிசப்தத்தில் பிறந்த இசை


sokout1
“நேற்று நடந்ததைப் பேசாதே
நாளையை எண்ணி வருந்தாதே
கடந்ததையும் வரப்போவதையும்
நம்பிக் காலத்தை வீணாக்காதே
இந்தப் பொழுதை இறுகப் பிடி”

என்னும் உமர் கய்யாமின் கவிதை வரிகளைப் போல் வாழ்பவன் சிறுவன் குர்ஷித். பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. ஆனால், மலர்களில் தேன் சேகரிக்கும் தும்பியையும், மலத்தில் அமரும் வண்டையும் அவற்றின் சிறகடிப்பின் ரீங்காரத்தை வைத்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு செவிக் கூர்மை உண்டு.
மழைத் துளி மண்ணைத் தீண்டும் முன் வானிலேயே வாய்திறந்து அதைப் பருகித் தாகம் தணிந்து இசைபாடும் சாதகப் பறவை போல, எங்கும் எப்போதும் இசைக்காக மனம் திறந்து காத்திருந்து அதைச் செவிகளால் அள்ளிவிடும் குர்ஷித்தின் அகத்திற்குள் விதையாக வந்து விழும் ஒரு ஒலியும், அது மெல்ல வளர்ந்து மாபெரும் இசையாகப் பரிணமித்து அவனையும் மீறி இந்த உலகத்தை நிறைக்கும் தருணத்தையும் காட்சிப்படுத்தி இருக்கும் ஈரானித் திரைப்படம் – The Silence (ஃபாரசீக மொழியில் سکوت )‎
***
பார்வை உள்ளவர்களின் கவனத்தைக் கண்கள் சிதறடிப்பது போல, நுண்ணிய செவிப்புலன் கொண்ட குர்ஷித்தின் கவனத்தை அவனது காதுகள் கலைக்கின்றன. அவன் வீட்டைவிட்டு இறங்கினால் காதுகளைப் பஞ்சை வைத்து அடைத்து விரல்களால் அழுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், அன்று மலர்ந்த மலர்களில் ஊறியிருக்கும் புதுத்தேனும், மகரந்தமும் தேனீயைத் தன் திசை நோக்கிக் கவர்ந்து இழுப்பது போல, தெருவில் எங்காவது கேட்கும் இசை அவனை ஈர்த்து இழுத்துக் கொண்டு போய்விடும். இசை வரும் திசையில் போய் அதன் இனிமையில் மூழ்கி மயங்கியிருப்பான். இதனால் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிடும்.
vlcsnap-2011-02-23-17h15m20s166
குர்ஷித்துக்கு இசைக்கருவிகள் தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்கூடத்தில் விற்பனைக்கு அனுப்பும் முன் இசைக்கருவிகளைச் சுருதி கூட்டிப் பார்த்து சரி செய்யவேண்டிய வேலை. அப்பா இல்லாமல் அம்மாவுடன் இருக்கும் சிறிய வீட்டிற்கும் வாடகை தரமுடியாமல் ஏழ்மையில் கழியும் சிரமமான வாழ்க்கை. வீட்டு உரிமையாளர் மாத இறுதிக்குள் பணம் தரச்சொல்லி கெடு விதித்திருக்கிறார். பணம் தராவிட்டால் வீட்டைக்காலி செய்து சாமான்களைத் தெருவில் வீசிவிடுவார். மாத இறுதிக்கு இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளன. ஆனால் குர்ஷித்தின் மனம், வீட்டுக்காரர் தினமும் அதிகாலையில் வீட்டுக் கதவை ‘ப.ப.ப.பம்ம்…’ என்று தட்டும் சத்தத்தில் உள்ள சந்தத்தில் லயித்துக் கிடக்கிறது.


அம்மா தினமும் முதலாளியிடம் முன்பணம் வாங்கிவரச் சொல்லி ஞாபகப்படுத்துகிறாள். குர்ஷித்துக்கு ஐந்து நாளைக்குப் பின் வீட்டை விட்டு இறக்கி விடப்படும் நிலையை விட அன்று காலையில் கேட்கும் கதவைத் தட்டும் சத்தத்தில் துவங்கி, தெருவில் கேட்கப் போகும் இனிமையான குரல்களும், இசையும் தான் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. நாளையைப் பற்றிய கவலைகளினால் அன்றைய நாளின் இனிமையைத் தவறவிட மாட்டான்.
குர்ஷித்துக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவனுடன் வேலை பார்க்கும் நதீரா என்னும் அனாதைச் சிறுமி. வண்ணமயமான அழகான ஆடையை நேர்த்தியாக அணிந்திருப்பாள், பூக்களின் இதழ்களைக் கிள்ளியெடுத்து தன் நகங்களில் நகப்பூச்சாக ஒட்டி அலங்கரித்துக் கொள்வாள், சிவந்த செர்ரிப் பழங்களைக் காம்புடன் எடுத்துக் காதுகளில் தொங்கவிட்டு லோலாக்கு போல ஆட்டிப் பார்த்துக் கொள்வாள், தண்ணீர் எடுக்கக் குளத்துக்குப் போனால் தன் ஆடையினுள் மறைத்து வைத்திருக்கும் சிறிய கண்ணாடியை வெளியில் எடுத்து யாரும் கவனிக்காமல் தன் அலங்காரங்களையும், முக அழகையும் தானே ரசித்துப் பார்ப்பாள். ஒளியால் துலக்கம் பெறும் காட்சிகளின் அழகில், மலர்களின் வண்ணங்களில், பழங்களின் சுவையில் மனம் கரைபவள். குர்ஷித் ஒலியின் காதலன் என்றால், நதீரா ஒளியின் காதலி.

அவன் இசைக்கருவிகளை ஸ்ருதி சேர்த்து இசைக்கும் போது அவள் தன்னை மறந்து ஒயிலாக நடனமாடுவாள். அவள் மென் கரங்கள் தென்றல் ஏரி மீது வருடி எழுப்பும் மென் அலைகள் போல நெளிந்தாடும். தலையசைவில் காதில் தொங்கும் செர்ரிப் பழங்கள் லயமுடன் அசைந்தாடும். அவளின் நடனம்தான் ஒலிபுகாத கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கும் முதலாளிக்கு ஸ்ருதி சரியாக சேர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம். அவள் அசைவு சரியில்லையென்றால் அவர் முகம் எரிச்சலில் சுருங்கும்.
“மலத்தில் அமரும் வண்டுகளுடன் பேசினால், உன் ரீங்காரம் கெட்டுவிடும். அவைகளுடன் பேசாதே’ என்று தும்பிகளிடம் சொல்லும் குர்ஷித், இசையை ரசிக்காத - பணத்திலேயே குறியாக உள்ள கரகரக் குரல் முதலாளியுடன் நேரடியாகப் பேசமாட்டான். நதீரா தன் இனிமையான் குரலில் முதலாளி சொல்வதைச் திரும்பிச் சொல்ல வேண்டும், அவளிடம் தான் அவன் பதில் கூறுவான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இசை அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்று விடுகிறது. அப்படி ஒரு நாள் ஒரு மாணவனின் இசையைத் தொடர்ந்து சென்று இசைப்பள்ளி ஒன்றை அடைகிறான். இசை ஆசிரியர், குர்ஷித் வேலை பார்க்கும் இடத்தில் வாங்கிய இசைக்கருவிகள் நன்றாக இல்லை, எதிலும் சரியான ஸ்ருதியே இல்லை என்று குறை சொல்கிறார். ஒரு மாணவனின் இசைக்கருவியை குர்ஷித்தின் கையில் கொடுத்து முதலாளியிடம் கொண்டு போய் திரும்பக்கொடுக்கச் சொல்கிறார். குர்ஷித் ஆசிரியரின் கைகளைத் தொட்டுப் பார்க்கிறான், அவர் கை ஏறி இறங்கி அசைவதற்கேற்ப மாணவர்களிடமிருந்து இசை அலையலையாகப் பொங்கி வருவதை உணர்கிறான். மௌனமாக இசைக் கருவியைச் சுமந்தபடி திரும்புகிறான்.
இங்கே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒசைகளின் கலவையிலிருந்து இசைத் துளிகளை மட்டும் துல்லியமாகத் தனியாகப் பிரித்து அனுபவிக்கும் அன்னப்பறவை குர்ஷித். ஸ்ருதி, லயம் சார்ந்த நுண்ணுணர்வும், கூர்மையான ரசனையும் உடைய அவன் ஸ்ருதி சேர்த்த இசைக்கருவிகள் அபஸ்வரமாக ஒலிக்கின்றன என்கிறார் ஒரு இசை ஆசிரியர். அப்படியானால் குர்ஷித்தின் மனதில் நிரம்பித் தளும்புவதாக நாம் நினைக்கும் இசை என்பது குழந்தை கிறுக்கிய வெற்றுச் சுழிப்புகள் மட்டும் தானா? அதற்கு ஒரு நேர்த்தியும், பொருளும் இல்லையா?
தொடர்ந்து வரும் காட்சி இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது. இது படத்தின் பொருள் பொதிந்த கவித்துவமான காட்சிகளில் ஒன்று. இசைக்கருவியை எடுத்துக்கொண்டு அவன் நடந்து போகயில் தூரலுடன் ஆரம்பிக்கிறது மழை. இசைக்கருவி மழையில் நனைந்துவிடாமல் காக்க குர்ஷித் ஓடும் போது கால் தடுமாறி குப்புற விழுகின்றான். அவன் கையில் இருந்து தவறிய இசைக்கருவி தள்ளித் தரையில் மல்லாந்து கிடக்கிறது. மழை வலுக்கிறது. மழைத்துளிகள் இசைக்கருவியின் தந்திகளின் மேல் விசையுடன் விழுகிறது. தந்திகள் அதிர்ந்து மீட்டப்பட, இசைக்கருவி சிலிர்த்துக்கொண்டு ஒலிகளை எழுப்புகிறது. இயற்கை தன் நூற்றுக்கணக்கான கரங்களால் மீட்டும் – மனித மனம் கற்பனையே செய்திட முடியாத முற்றிலும் புதுமையான இசை அங்கே நிகழ்கிறது. குர்ஷித் சேர்த்திருந்த ஸ்ருதி இயற்கையின் பேரிசைக்கு பொருத்தமாக இருக்கிறது. குர்ஷித் அந்த இசையின் திசையை நோக்கி மெல்லத் தரையில் ஊர்ந்து, கைகளால் தடவிச் சென்று இசைக்கருவியை அடைகிறான். காட்சியின் முடிவில் தந்திக்கருவியை இசைத்த மழைத்துளிகள் சென்று கலந்த ஏரியில், இசைக்கருவி மிதக்க, கழுத்தளவு மூழ்கி குர்ஷித் இருக்கிறான். மழை ஓய்ந்த ஏரி சூரியனின் வெள்ளி ஒளி பட்டு தகதகக்கிறது. இதுவே அவனும், இசையும் அதைத் தந்த இயற்கையும் ஒன்றாகக் கலக்கும் இடம். குர்ஷித் மனிதர்களின் ஸ்ருதிக்கு அப்பாலுள்ள தன் மனதின் இசையை இயற்கையில் கண்டுகொள்ளும் மிக முக்கியமான தருணம்.
ஒன்று, இரண்டு, மூன்று என வாடகைக் கெடு நாள் நெருங்குகிறது. வீட்டுக்காரன் தினமும் காலையில் தவறாமல் “ப.ப.ப.பம்ம்…” என்று கதவை தட்டும் சத்தம், பணம் வாங்கிவரச் சொல்லி அம்மாவின் ஞாபகப்படுத்தல்கள் என்று நாட்கள் ஓடுகின்றன. குர்ஷித் தரையிலிருந்து பறந்து எழும் புறாக்கூட்டத்தின் சிறகடிப்பின் லயத்திலும், ‘ப.ப.ப.பம்ம்..’ என்ற கதவைத் தட்டும் ஓசையின் சந்தத்திலுமே ஆழ்ந்திருக்கிறான். வழியில் கேட்ட நாடோடியின் இசையில் மயங்கி அவனைத் தொடர்ந்து போய் நான்காம் நாளும் வேலைக்கு தாமதமாகப் போகிறான். முதலாளி வேலையில் இருந்து போகச் சொல்லிவிடுகிறார்.
அவனைச் சமாதானப்படுத்தும் நதீரா, குளத்துக்கு நீர் எடுத்துவர கூட்டிக்கொண்டு போகிறாள். அவளுடைய சிறிய கண்ணாடியை எடுத்து வழக்கமான தன் அலங்காரங்களை ரசித்துப் பார்க்கும் போது குர்ஷித்துக்கு கண்ணாடியைப் பற்றிச் சொல்லி, அதில் அவனை வரைந்து காட்டுகிறாள். அப்போது ஒரு தேனீயின் ரீங்காரம் சட்டென்று நின்றுவிட கவனம் சிதறிய குர்ஷித் கண்ணாடியைத் தவற விடுகிறான்.
இதுவும் படத்தில் குறியீடுத் தன்மை வாய்ந்த இன்னொரு முக்கியமான காட்சி. இரண்டாக உடைந்த கண்ணாடியில் குர்ஷித் உருவம் தெரியும் பாதியை நதீராவும், நதீராவின் உருவம் தெரியும் பாதிக் கண்ணாடியை குர்ஷித்தும் எடுத்துக்கொள்வதாக இயக்குனர் காட்சியமைத்திருக்கிறார்.
image3
மனிதர்களில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் அனுபவங்கள் வழியாக அறிதல் நிகழ்கிறது. மெய் வழியாக தொடுதல் உணர்வையும், வாய் மூலம் ருசியையும், மூக்கின் நுகர்தல் வழி வாசனையையும், கண்களால் ஒளியையும், செவியால் ஒலியையும் உணர்கிறோம். இவற்றில் முறையே கண் மற்றும் செவியால் உணரப்படுவதாகிய ஒளியும், ஒலியும் தான் மனிதனால் மிக ஆழமாகவும், விரிவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டு மாபெரும் கலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. துயரமான முரணாக இந்த இரண்டு புலன்களை மட்டும்தான் மனித இனத்தில் பிறவியிலேயே இழக்கும் சாத்தியத்தை இயற்கை விதித்துள்ளது. பிற மூன்று புலன்களிலும் பிறவிக் குறைபாடு விதிக்கப்படவில்லை. (நுகர்வு, ருசி ஆகிய உணர்வுகளும் கலையாக மேம்படுத்தப்படாலும் ஒளி, ஒலியின் கலைவடிவங்கள் போன்று மிகவிரிவானவை இல்லை). குர்ஷித், நதீரா தங்களது கண்ணாடி பிம்பங்களை பரிமாறிக் கொள்வதை மனிதரின் இந்த இயற்கைக் குறைபாட்டுடன் புரிந்துகொள்ளும் போது அற்புதமான திறப்பு நிகழ்கிறது. ஒலியும், ஒளியும் ஒன்றை ஒன்று முழுமை செய்து கொள்கிறது. ஆனால் பக்கத்தில் இந்தக் குறைகளற்ற இயற்கையில், தேனீயின் ரீங்காரத்தோடும், பறவையின் இசையோடும் கலந்து அலைகளற்ற அமைதியான குளம் சுற்றியுள்ள அழகை அப்படியே பிரதிபலித்தபடி முழுமையாக இருக்கிறது.
கடைசிநாள் முதலாளி கடையைப் பூட்டிவிட்டு வேலைக்கு வேறு ஆள் பார்க்கச் சென்று விடுகிறான். மறுநாள் காலை, ஏரிக்கரையின் ஒரு கரையில் நாடோடிப் பாடகர்கள், குர்ஷித், நதீரா இருந்து கொண்டு மறுகரையிலிருக்கும் குர்ஷித்தின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படகில் ஒரு ஆள் குர்ஷித்தின் வீட்டை நோக்கிச் செல்கிறான். நாடோடிகள் தங்கள் இசையால் வீட்டுக்காரனை மகிழ்வித்து சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து இசைக்கிறார்கள். அவனுக்கோ இசை பிடிக்காது, பணம் மட்டும் தான் பிடிக்கும். அங்கே நடப்பதை எல்லாம் நதீரா குர்ஷித்துக்கு விவரிக்கிறாள். வீட்டுக்காரன் குர்ஷித்தின் அம்மாவிடம் கோபமாகப் பேசுகிறான். இக்கரையில் நாடோடிகளின் நாய் ஒரு வெள்ளைக் குதிரையைப் பார்த்துக் குரைக்கிறது. அங்கே வீட்டுக்காரன் சாமான்களைத் தூக்கி வெளியில் வீசுகிறான். குர்ஷித் நாடோடியிடம் குதிரையின் குளம்பொலியின் சந்தத்தில் அமைந்த இசையை மீட்டும்படி சொல்கிறான். அப்படியே இசைக்கிறான். குர்ஷித் குதிரை போல துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடுகிறான். குர்ஷித்தின் அம்மா ஒரு படகில் இவர்களை நோக்கி, சூரிய ஒளியை கண்கூசும் அளவுக்கு மேலும் பிரகாசமாக பிரதிபலிக்கும் ஆளுயரக் கண்ணாடியுடன் வருகிறாள்.
குதிரை போல ஓடியபடி கடைத்தெருவில் பாத்திரங்கள் செய்யும் ஒரு பெரிய கொல்லர் பட்டறையை வந்துசேர்கிறான். குழப்படியான உலோகச் சத்தங்கள் எழும்பும் அந்தப் பெரும் பட்டறைக்குள் நுழைகிறான். இரண்டு பிரிவாக பெரிய - சிறிய பாத்திரங்களைச் சுத்தியால் தட்டி உருவாக்கும் கொல்லர்களைத், தான் சொல்லும் சந்தத்தில் தட்டச் சொல்கிறான். சிறிய பாத்திரங்கள் ‘ப.ப.ப.’ என மூன்று முறை தட்ட, பெரிய பாத்திரம் ‘பம்ம்..’ என்று ஒரு முறை தட்டவேண்டும். இசை ஆசிரியன் செய்தது போல இரு பிரிவினைரையும் நோக்கி கைகளை நீட்டி அசைக்கிறான், சத்தம் ஒருசேர எழுகிறது -“ப.ப.ப.”, “பம்ம்..”, “ப.ப.ப.-பம்ம்..” “ப.ப.ப.பம்ம்..” ….. கைகளை அசைத்துக் கொண்டே வந்து ஓரிடத்தில் நிற்கும் குர்ஷித் மீது மேலிருந்து ஒரு ஒளிக் கற்றை பளிச்சென விழுகிறது.
தன் வீட்டிலேயே மிகப்பெரிய கண்ணாடி இருப்பதை அறிந்திராத குர்ஷித், தன்னுள்ளேயே இருக்கும் இசைப் பிரவாகத்தை அவனறியாமலேயே கட்டவிழ்த்து வெளியே விடுகிறான். தொடர்ந்து பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி துள்ளிப் பாய்ந்து கொண்டு பெருகி வந்து செவிகளை நிறைப்பதுடன் படம் நிறைவடைகிறது.

***
பிறவியிலேயே செவிப்புலன் இல்லாதவர்களுக்கு நிசப்தம் என்ற ஒரு நிலையே தெரியாது, ஏனென்றால் அவர்கள் சப்தம் என்கிற ஒன்றையே அறிந்திருக்கமாட்டார்கள். கேட்கும் திறனைப் பாதியில் இழந்தவர்களுக்கே ஒலிகள் ஓய்ந்த நிசப்தம் அனுபவமாகிறது.
மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?
குர்ஷித்தின் மனதுள் ஒலித்துளியாக விழுந்து பின்னர் பெருகிப் பெருகி மாபெரும் இசைப் பிரவாகமாக பொங்கிப் பரவும் ‘ப.ப.ப.பம்ம்…’ என்னும் இந்த ஒலிக்குறிப்பு தான் படத்தின் ஆன்மா. படம் முழுவதும் வெவ்வேறு வகையிலாக வந்து கொண்டே இருக்கும் இந்த இசைக் குறிப்பு ஐரோப்பிய செவ்வியல் இசைமேதை பீத்தோவனின் உலகப்புகழ் பெற்ற ஐந்தாவது சிம்ஃபனியின் தொடக்கம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த சிம்ஃபனியை பீத்தோவன் தனது காதுகேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பிறகு இசையமைத்தது என்ற தகவலை அறிந்தால் “நிசப்தத்தில் பிறந்த இசை” என்பது இன்னும் பொருத்தமானதாக தெரியும்.
மூன்று குறுகிய ஒலி (‘ப.ப.ப’), அதைத் தொடர்ந்து வரும் ஒரு நீண்ட ஒலி (‘பம்ம்..’) என்னும் இசைக்குறிப்பு தொடர்ந்து இரண்டு முறை இசைக்கப்படுவதுடன் பீத்தோவனின் ஐந்தாம் சிம்ஃபனி ஆரம்பமாகும். நான்கு கட்டங்களாக ஒருமணி நேரம் நீளும் இந்த சிம்ஃபனியில் ஆங்காங்கே தொடர்ந்து மேற்சொன்ன இசைக்குறிப்பு வந்து கொண்டே இருக்கும். இந்தப் புதுமையான (3+1) தொடக்க இசைக்குறிப்புடன் துவங்கும் பாணிக்காகவே இந்த சிம்ஃபனி மேற்கத்திய செவ்வியல் இசை வல்லுனர்களால் மகத்தான படைப்பாகப் போற்றப்படுகிறது.
இந்தப் புகழ்பெற்ற (3+1) ‘ப.ப.ப.பம்ம்..’ இசைக்குறிப்பு எழுதுவதற்கு பீத்தோவனுக்கு தூண்டுகோலாக இருந்ததாக இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒன்று பீத்தோவனுடைய மனதில் ‘விதி வாசல் கதவைத் தட்டும் சத்தம்’ என்ற படிமத்தில் இருந்து இந்தக் இசைக்குறிப்பு கிடைத்ததாக அவரது உதவியாளர் தனது புத்தகத்தில் கூறுகிறார். இன்னொன்று பீத்தோவனின் மாணவர் கூற்றுப்படி அது ஒருவகை மஞ்சள் குருவியின் சத்த்த்திலிருந்து தூண்டப்பட்டு உருவானது. இந்தப் படத்தில் ‘விதி வாசல் கதவைத் தட்டுதல்’ என்னும் படிம்மே கையாளப்பட்டுள்ளது. அது வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் வீட்டு வாசலை விதி தட்டி ’ப.ப.ப.பம்ம்…’ என்னும் ஒலி மூலம் அவனுள் இருக்கும் இசையுணர்வைத் தூண்டி, நாளை வரப்போகும் துன்பத்தை நினைக்காமல் இன்று கேட்கும் இசையில் லயித்து, கடைசியில் ஒரு இசைக்கலைஞனாக மாற்றுவதாக படத்தை விவரிக்க மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.
படத்தின் ஆன்மாவான நிசப்தத்தில் பிறந்த இசை பீத்தோவனுடையது என்றால் அதைத் தன் அகத்தின் இசையாகக் கண்டுகொண்ட அந்த சிறுவன் யார்? அது இந்தப் படத்தின் இயக்குனர் மோஹ்சென் மக்மல்பாஃப் தான். ஆம், அவரது இளமைக் கால அனுபவமே இந்தப் படம் உருவானதற்குக் காரணம். மிகுந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளரான அவரது பாட்டி சிறுவனான மோஹ்செனை, “வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது காதுகளை இறுக்கமாகப் பொத்திக்கொள்ள வேண்டும். இசையைக் கேட்டால் நரகத்திற்குப் போவாய்,” என்று சொல்வாராம். இசைக்கு நிசப்தமாக்கப்பட்டிருந்த மோஹ்சென்னின் காதுகள் முதன் முதலாகக் கேட்ட மேலை இசை பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி தான். ஒரு நேர்காணலில் “முதன் முறை கேட்ட கணத்திலிருந்து அந்த தொடக்க இசையின் ‘ப.ப.ப.பம்ம்..’ என்னும் நான்கு இசைக்குறிப்புகள் என் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்தன” என்கிறார். ஸ்வாதி நட்சத்திரத்தன்று பொழியும் மழையில் ஒரே ஒரு துளியை மட்டும் ஒரு சிப்பி மெல்ல வாய் திறந்து வாங்கிக் கொள்ளும். மழைத்துளியை தன்னுள் அடக்கிக் கொண்டு கடலாழத்தில் சென்று மௌனத்தில் ஆழ்ந்து காத்திருக்கும். கடல்நீரின் அழுத்தத்தால் சிப்பிக்குள் இருக்கும் அந்த நீர்த்துளி மெதுவாக இறுகி ஒருநாள் மிகச்சிறந்த மாசற்ற வெண் முத்தாக மாறும். அதைப்போல, 1808ஆம் வருடம் பீத்தோவன் என்னும் மாபெரும் கலைஞன் பெருமழையாய் பொழிந்துவிட்டுச் சென்ற இசையின் ஒரு துளி 190 வருடங்கள் காத்திருந்து மோஹ்சென் என்னும் இன்னொரு சிறந்த கலைஞனின் யதேர்ச்சையாகத் திறந்த காதுகள் வழியாக மனதில் சென்று தங்கி, இசையை வெறுக்கும் சமயச்சூழல், அரசியல், சமூகம், குடும்பம் போன்றவை கொடுத்த அழுத்தத்தால் இறுகி ஒரு சிறந்த கலைப்படைப்பாக உருப்பெற்று வந்துள்ளது.
படத்தில் இனிய (ஒலி) இசைக்கு உள்ள அளவு (ஒளி) அழகான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பெண்களின் முகத்தை முக்காடிட்டு முழுவதும் மூடிமறைத்துவிட்டால் இயற்கை அழகு எவ்வாறு முழுமை பெறும்? எனவே பெண்களுக்கு முகத்திரை கட்டாயமாக்கப்பாடாத தஜிகிஸ்தானில் முழுப்படத்தையும் எடுத்தார் மோஹ்சென். தஜிகிஸ்தான் ஃபார்ஸி மொழி பேசும் நாடு என்பதும் கூடுதல் அனுகூலம். 1997ல் வெளியான இந்தப் படம் ஈரானில் அடுத்த மூன்று வருடங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக பின்னணி இசையை மிகக் குறைவாகவே பயன்படுத்தும் மோஹ்சென் மக்மல்பாஃப் இந்தப் படத்தில் சூஃபி இசை, நாடோடி இசை, மேற்கத்திய இசை என்று பின்னணி இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார். படத்தின் ஆன்மாவே இசை தான். படத்திலேயே சூசகமாக, மனிதர்களை இரண்டு வகை வண்டுகளாக உருவகித்து, இசை ரசனை மிக்கவர்களை மலர்களில் தேன் அருந்தும் தும்பியுடனும், இசையை விரும்பாத- பணத்தை மட்டும் தேடும் ரசனையற்ற மனிதர்களை மலத்தில் அமரும் வண்டுகளுடன் ஒப்பிடகிறார்.
இசை என்ன செய்துவிட முடியும்? என்னும் கேள்விக்கு பீத்தோவனின் இசையும், மோஹ்சென் மக்மல்பாஃபின் அனுபவமும் - அதன் விளைவான ‘நிசப்தத்தில் பிறந்த இசை’ (The Silence) படமும் சாட்சி.
- பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம்; இதழ் 79ல் வெளியானது)

Tuesday, December 4, 2012

எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்


எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்
“இந்தியாவில் ஒரு பரிபூரண மனிதர் இருக்கிறார். சென்று அவரைப் பார்த்துவிட்டு வா” என்ற தனது ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்ற ஒரு ஈரானியப் பெண், நாத்திகனான தனது கணவனுடன் இந்தியாவிற்கு வருகிறாள். இந்திய நிலத்தில் அந்தப் பரிபூரண மனிதரைத் தேடிச்செல்லும் வழியில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் பிற மனிதர்களும், இவற்றால் உண்டாகும் அனுபவங்களும் இறுதியில் அந்தக் கணவன் மனைவிக்கு எந்த ஞானத்தை அளிக்கின்றன? உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா? இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன? இந்தக் கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்தான், அதிரடியான அற்புதங்களால் அன்னியப்படுத்தாமல் மனம் ஒன்றிப் பார்க்கும்படியான காட்சிகளை வைத்து நம்பகத்தன்மையுடன் படத்தை நகர்த்தும் யதார்த்தமான திரைக்கதை, நேரடியான, எளிமையான வசனங்கள் ஆகியவற்றின் மூலம் “எறும்புகளின் கதறல்” (Scream of the Ants) எனும் திரைப்படமாகியிருக்கிறது.. பல காட்சிகள் குறிப்பாக இந்திய நகரங்கள், சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் பகுதிகள் ஒரு சுற்றுலாப் பயணியின் டிஜிடல் வீடியோ பதிவுக் கருவியில் எடுக்கப்பட்டது போல எந்தத் திணிப்பும், செயற்கைத் தனமும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன.. காட்சிகள் வலிந்து செய்யப்படும் பிரச்சாரம் போல் இல்லாமல் தெரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.
*
f2
படம் ஒரு இனிய முரணுடன் தொடங்குகிறது. கம்யூனிஸ்ட்டும் ஆகவே நாத்திகனும், குடும்பம் எதிர்காலம் எதிலும் நம்பிக்கையற்றவனுமான கணவனுடன், மேலான உண்மையையும், வாழ்வின் பொருளையும், முழுமையையும் அறியும் ஆன்மீகத் தேடல் கொண்ட ஒரு பெண் தன் தேனிலவுப் பயணமாக இந்தியா வருகிறாள் -அதுவும் தன்னைச் சந்திப்பவர்களின் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்தும் ஞானியான ஒரு பரிபூரண மனிதரைத் தேடி. இருவரும் நேரெதிரான மனநிலைகளுடன் காதலும், சிறுசிறு ஊடல்களுமாக விவாதித்தபடியே பயணிக்கின்றனர்.


முதல் ரயில் பயணத்திலேயே சந்திக்க நேரும் ஒரு யதார்த்தவாதியான இந்தியப் பத்திரிக்கையாளன், ‘அற்புதங்கள், அற்புத மனிதர்கள் என்று தவறாக இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டினர் எல்லாம் பைத்தியம்’ என்கிறான். அந்த பயணத்திலேயே ஈரானிய தம்பதியினர் ரயிலை கண்களாலேயே நிறுத்தி விடும் ஒரு சாமியாரின் அற்புதச் செயலைப் பார்க்க நேர்கிறது. பின்னர் பத்திரிக்கையாளனிடம் சாமியார் தான் அற்புத மனிதனாக்கப்பட்ட கதையைச் சொல்கிறார். வாழ்வில் துயரங்களால் அவதிப்பட்ட அவர் ‘இனி வாழ்ந்து என்ன பயன்?’ என ஒருநாள் தற்கொலை செய்துகொள்வதற்காக இந்த தண்டவாளத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட நேரம் கழித்து வந்த ஒரு ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் கிடக்கும் ஆளைக் கண்டு வண்டியை நிறுத்தப் போய் பயணிகள் சாமியார் தன் பார்வையின் சக்தியினால் ஓடும் ரயிலையே நிறுத்திவிட்டதாக பூரிக்கின்றனர். அன்றுமுதல் கூட இருக்கும் பண்டாரங்களும், பிச்சைக்காரர்களும் அவரைக் கொண்டு வந்து ரயில் தண்டவாளாத்தில் உட்காரவைத்து ரயிலை ’நிப்பாட்டி’பயணிகளிடம் காணிக்கையும், உணவும் பெற்றுப் பிழைக்கிறார்கள். சாமியார் பாவமாக, “எனக்கு என் வீட்டிற்குப் போக வேண்டும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்தப் பண்டாரங்கள் என்னை விடமாட்டேனென்கிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சுகிறார். அவரை பண்டாரக் கும்பல் அலேக்காகத் தூக்கிச் செல்கிறது. முதல் அனுபவமே ஏமாற்றமாக, ஈரானிய தம்பதியின் பயணம் தொடர்கிறது.
அடுத்து இந்தியாவின் ஒரு பெருநகரச் சாலையில் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி சாலையோரக்காட்சிகளைப் பார்த்தபடியே சவாரி செய்கிறார்கள். பெண்ணின் பார்வையில் பூக்குவியல், சிட்டுக்குருவிகள், ஏழ்மையில் இருந்தாலும் சந்தோஷமாகச் சிரித்தபடி ஓடிவரும் அழகான குழந்தைகள், அழகான இந்தியப்பெண்கள், விதவிதமான மனிதர்கள் என காட்சிகள் தெரிகிறது, “எவ்வளவு அழகு?” என்று வியக்கிறாள்.
தொடர்ந்து அவன் பார்வையின் வழியாக சாலைக் காட்சிகள் விரிகின்றன. தெருவோரங்களில் படுத்திருக்கும் வீடற்றவர்கள், அவர்களுக்குப் பக்கத்திலேயே தூங்கும் நாய்கள், குப்பைமலைகள், போக்குவரத்து நெரிசல் பிச்சைக்காரர்கள், பிச்சை கேட்டு துரத்தியபடியே ஓடிவரும் சிறுமிகள், நீண்ட வரிசைகளில் தர்ம உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் என்ற அழுக்கும் அசிங்கமுமான சித்திரம் தான் தெரிகிறது.
எங்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு புரட்சிக்கான ஆவலிலேயே இருக்கும் அவனது கம்யூனிச மனம் ’தொன்னூறு’ சதவிகிதம் ஏழைகள் உள்ள நாட்டில் எப்படி புரட்சி வராமல் இருக்கிறது? என்று அடித்துக்கொள்கிறது. காந்தியின் அஹிம்சையால் பணக்காரர்கள் தான் பலனடைந்தார்கள், அஹிம்சை தான் வன்முறையை உருவாக்கும் என்று சமாதானம் செய்துகொள்கிறான். இங்கே தன் மனைவிக்கு என்ன அழகாகத் தெரிகிறது என்று புரியாமல் புலம்புகின்றான்.
மனைவியை, “உன் கடவுள் இந்த ஏழ்மைக்கும் துயரத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்?” என்று சீண்டுகிறான், அவள் வெடுக்கென, ”கண்டிப்பாக உன் புனித சோஷலிசம் இல்லை” என்று பதிலளிக்கிறாள். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏழ்மை, அழகு, கடவுள் என்று பலவிஷயங்களிலும் வாதம் வளர்கிறது. காதல் என்னும் மைய அச்சில் இணைந்திருக்கும் கத்திரிக்கோல் போல இருவரும் ஒருபக்கம் பிரிந்து விவாதித்துக்கொண்டு மறுபுறம் இணைந்து முன்செல்கிறார்கள்.
தந்தை இறந்த அன்று இரவு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த காந்தி பிறகு அதனால் மனம் வருந்தி குழந்தைப் பேறுக்காக அல்லாமல் இனி மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் ஏன்று முடிவெடுத்ததைப் பற்றி அன்றிரவு கணவனிடம் பேசுகிறாள். தாயாக வேண்டும் என்னும் தன் விருப்பத்தைச் சொல்லி அதற்காகவே அவர்கள் சேரவேண்டுமென்கிறாள். கம்யூனிச சித்தாந்தவாதியான கணவனுக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலோ, குடும்பத்தை உருவாக்குவதிலோ விருப்பமும் நம்பிக்கையும் இல்லை. மறுபடியும் குழந்தைகள், குடும்பம் பற்றிய விவாதம் இருவருக்குள்ளும் துவங்குகிறது. எரிச்சலுடன் அறையை விட்டு வெளியேறும் அவன் ஒரு விலைமாதுவைச் சந்திக்கிறான். அவள் வீட்டில் குடித்துவிட்டு கடவுளை விளித்துத் தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு புலம்புகிறான். சாதாரணப் பொழுதுகளில் அலட்சியமும், சந்தேகமுமாக பேசும் அவன் குடித்தபின் தனது இருப்பையும், இந்த உலகத்தையும், இதற்கெல்லாம்  காரணமான ‘கடவுளை’யும், அதை நம்பவிடாமல் தடுக்கும் தன் தர்க்கபுத்தியையும், கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாகத் தெரிந்துவிட்டால் சுலபமாக நம்பிவிடுவேனே என்ற எளிய காரணத்தை உருவாக்கிக் கொண்டு, வெறுமையாய் இருக்கும் தன்னை அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லிப் புலம்பும் காட்சி முக்கியமானது.
19677121
மறுநாள் ஒரு டாக்ஸி ஓட்டுனரிடம் பரிபூரண மனிதர் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஓட்டுனர் (தமிழ் நடிகர் யூகி சேது இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்) “காரில் போனால் ஒருமணி நேரம் தான், அவரை நன்றாகத் தரிசிக்கலாம். நடந்து சென்றால் இரண்டு நாள் ஆகும், ஆனால் அவரை நடந்து சென்று பார்ப்பது தான் சிறந்தது, அப்போது அவரிடமிருந்து வாழ்க்கைக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்” என்கிறார். வெயில் கொளுத்துகிறது. இவர்கள் காரில் செல்ல முடிவெடுக்கின்றனர். பாதி தூரம் போனதும் காருக்குள் ஒரு ஈ பறக்கிறது, ஓட்டுனர் வண்டியை திருப்பி ஈயை ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடவேண்டும் என்கிறார். வந்தவழியிலேயே திரும்பவும் போய் நடுவழியில் இறங்கி விடுகின்றனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புழுதி பறக்கும் பொட்டல் காடு. இரவும் பகலுமாக கால்நடையாக பரிபூரண மனிதரைத் தேடி நடக்கின்றனர். “ஒவ்வொரு அடி கால்வைக்கும் போதும் ஒரு எறும்பு கொல்லப்படுகிறது, பரிபூரண மனிதரைப் பார்க்கவேண்டுமென்றால் எறும்புகளைக் கொல்பவர் ஆகித்தான் தீரவேண்டும், நடப்பதை நிறுத்தினால் குற்றவாளி ஆவாய்” என்று கிண்டலடிக்கிறான் கணவன். மனைவி கடவுளிடம் “எறும்புகளை என் பாதையில் இருந்து மாற்று தெய்வமே, நான் நடக்க வேண்டும். உனது எறும்புகள் சாவதால் உனக்கு வருத்தம் இல்லையா? அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா?” என வேண்டியபடி நடக்கிறாள்.
ஈரானில் இருந்து வரும் போதே ஒரு மரநாற்காலியைக் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பரிபூரண மனிதரைச் சந்தித்தால் அவரை அதில் அமரச் செய்து புனிதமாக்கி ஈரானில் இருக்கும் தனது குருவுக்குப் பரிசளிப்பதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாள். போகும் இடமெல்லாம் கணவன் அதை முதுகில் சுமந்துகொண்டு வருகிறான், அதில் தான் அமர்வான். அது தான் அவனது சிம்மாசனம்.
f1
வழியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் ஒருவரிடம் பரிபூரண மனிதரைப் பார்ப்பதற்கு வழிகேட்கிறார்கள். அவருடைய பெயர் என்ன என்று பேச்சுக் கொடுக்கிறார்கள், ‘மக்கள் என்னை ‘மாட்டுக்காரன்’ என்று சொல்வார்கள் என்கிறார். ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று பெண்ணின் கேள்விக்கு மாட்டுக்காரர் பதில், ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே கடவுள் தான்’. பெண் விடாமல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்கிறாள், “இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லை” என்று சொல்லிவிட்டு மாட்டுக்காரர் ஓரு வீட்டைக் காண்பித்து இது தான் அவருடைய வீடு, கூப்பிடுங்கள், பதில் வராவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து கூப்பிடுங்கள், வருவார் என்று சொல்லிவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார்.
ஆண்  பரிபூரண மனிதரை உரக்கக் கூவி அழைக்கிறான்.  பெண் கண்மூடித் தியானிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மாட்டுக்காரர் திரும்பவருகிறார், அவர் தான் பரிபூரண மனிதர் என அறிந்து ஆச்சர்யமடைகிறாள். பரிபூரண மனிதரைப் பற்றின தன் கற்பனைகள் எல்லாம் தவிடுபொடியாக அவர் இவ்வளவு எளிமையாக, எல்லாரையும் போல் சாதாரணமானவராக இருப்பதைக் கண்டு குழம்பிவிடுகிறாள். கணவன் “இந்தாள் ஒரு கிறுக்கன்,” என்கிறான். பெண் பரிபூரண மனிதரிடம் தன் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும், பாதையையும் காண்பிக்கும் உபதேசத்தைச் சொல்லுமாறு கேட்கிறாள். பரிபூரண மனிதர் ஒரு வெங்காயத்தை நசுக்கி அதன் ஈரத்தை குச்சியால் தொட்டு ஒரு காகிதத்தில் எழுதுகிறார். கண்ணுக்குத் தெரியாத அந்த எழுத்துக்களை மூன்று நாள் கழித்து புனித நகரத்தில் நெருப்பின் மேல் காட்டினால் அவள் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும் என்கிறார். அவரை வணங்கி விடை பெறுகிறாள்.
திரும்பும் வழியில் மிகவும் வயதான ஒரு பெண்மணியைச் சந்திக்கிறார்கள். இந்தியாவில் பலவருடங்களாக ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒரு ஜெர்மானியரும் கூட இருக்கிறார். அந்தப் பாட்டி தான் காசியில் இறந்து இனி மீண்டும் பிறக்காத நிலை அடையவேண்டும் என்கிறாள். ஜெர்மானியர் அவளுக்கு உதவ வாக்களிக்கிறார்.
நால்வரும் காசிக்குச் செல்கிறார்கள். ஜெர்மானியருடனான உரையாடல் தொடர்கிறது, அவர் ஏன் ஐரோப்பிய வாழ்க்கையை நிராகரித்து இந்தியா வந்தார் என்று சொல்கிறார். பிறப்பறுக்கும் காசியையும், புனித கங்கை நதியைப் பற்றியும் விளக்குகிறார் ஜெர்மானியர். “இந்த மக்கள் கங்கையைப் புனித அன்னையாக வணங்குகிறார்கள், அந்த நீரைக் குடிக்கிறார்கள் அதையே அசுத்தப் படுத்துகிறார்கள். பிறப்பும் இறப்பும் இங்கே ஒன்றாகிறது,” என்கிறார்.
கணவனும் ஜெர்மானியரும் பிணம் எரிக்கிற மணிகர்ணிகா படித்துறைக்குச் சென்றுவிட, பெண் கங்கையின் நடுவே படகில் இருந்தபடி காசியின் படித்துறைகளைப் பார்க்கிறாள். மீண்டும் ஒருமுறை காட்சிகள் அவள் பார்வையின் வழியாகக் காட்டப்படுகின்றன. பிணங்கள் எரியும் அணையாத நெருப்பு எங்கும் தெரிகிறது. சற்று முன் பாதி எரிந்த பிணம் மிதந்த கங்கையில், இப்போது ஒரு திறந்த புத்தகம் மிதந்து செல்கிறது. அதையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தச் சூழலும் காட்சியும் அவளை என்னமோ செய்கிறது. ஒரு படித்துறையில் இறங்கிக் குளிக்கிறாள், பின்னணியில் அன்னை பராசக்தியை அனைத்து தாய் தெய்வங்களின் வடிவமாக வருணிக்கும் பாடல் மெதுவாக ஒலிக்கிறது. படத்தின் கவித்துவமான காட்சிகளில் ஒன்று இது. கைகூப்பித் தொழுது கங்கையில் மூழ்கிக் குளிக்கிறாள். சடைமுடியும், சாம்பல் பூசிய மேனியுமாக சாதுக்களின் கூட்டம் ஒன்று வருகிறது. நிர்வாணமாக கங்கையில் அவளைச் சுற்றி இறங்கிக் குளிக்கிறார்கள். அவள் இருப்பதையே கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் நிர்வாணமான ஆண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அறியவில்லை. பின்னால் அன்னையின் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதுக்கள் கரையேறிச் சென்றுவிடுகிறார்கள்.
அதே சமயம் மணிகர்ணிகா கட்டத்தில் ஜெர்மானியர் இரண்டு எரியும் பிணங்களைக் காட்டி, மரணம் முடிவில்லை, மீண்டும் பிறப்பு, மறுபடி இறப்பு, அடுத்து ஒரு பிறப்பு என்று முடிவற்ற துயரம் நிறைந்த அலைகளாக உயிர் சுழல்கிறது. இந்துக்கள் இந்த முடிவிலாத் துயரிலிருந்து விடுபட நினைக்கிறார்கள்” என பிறவிச் சுழலை விளக்குகிறார்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குறைவான விறகுள்ள ஒரு ஏழையின் பிணத்தின் மேல் ஈரானியன் இத்தனை நாளும் சுமந்தலைந்த நாற்காலி விறகாக வைக்கப்படுகிறது. அவன் கண்முன் நாற்காலி எரிந்து சாம்பலாகிறது. தன் அதிகாரம் கருகிச் சாம்பலாகும்போது தருக்க மனம் ‘ஓ…’வென அலறுகிறது.
அந்தப் படித்துறையில் ஒரு ஆசிரியர் சின்னஞ்சிறு மாணவர்களுக்கு வேதம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். பாடம் முடிந்ததும். கண்களையும், காதுகளையும் அடைத்துக்கொண்டு சுவாசத்தை மட்டும் இழுத்து விட்டு காற்றை முகரச் சொல்கிறார். ஜெர்மானியரும் அப்படியே செய்கிறார். ஈரானியன் பின்னல் திரும்பிப் பார்க்கிறான், பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய பாடம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் போகிறார். மாணவர்கள் சந்தோஷக் கூச்சலுடன் நிர்வாணமாக கங்கையில் குதித்துக் கூட்டமாகக் குளிக்கிறர்கள். ஜெர்மானியரும் கங்கையில் இறங்குகிறார். ஈரானியன் கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் கங்கையின் இரு படித்துறைகளில் இருவேறு விதமான நிர்வாணக் குளியல். அதே கங்கை நதி. அவள் மூழ்கி எழுந்துவிட்டாள். ஈரானியன் இன்னும் சஞ்சலத்துடன் கரையில்.
பூ விற்க வரும் சிறுமிகளிடம் விளக்கை வாங்கி அதில் பரிபூரண மனிதர் கொடுத்த தாளைக் காட்டுகிறள், புரியாத மொழியில் எழுத்துக்கள் மெல்ல துலங்கி வருகின்றன. சிறுமி அவளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறாள்,
“ஏழு கடல்களைத் தாண்டினேன்
ஏழு மலைமுடிகளில் ஏறி
பள்ளத்தாக்குகளில் இறங்கினேன்
பெருநிலம் எங்கும் நடந்தேன்
நகரங்களின் வழியாக நடந்து
உலகத்தையே சுற்றிக் கடைசியில்
என் வீட்டிற்கே திரும்பினேன்
என் தோட்டத்து செடியொன்றின்
இலைநுனியில் இருந்த பனித்துளிக்குள்
உலகமே இருக்கக் கண்டு வெட்கினேன்”
அந்தக் கிழவி கங்கையின் நடுவில் ஒரு மேடையில் தன்னந்தனியாக கைகூப்பியபடி தன்னை எரிப்பதற்கான விறகுடன் காத்திருக்கிறாள். திரை மெல்ல இருள்கிறது.
*
எறும்புகளின் அலறல் (Scream of the Ants) எனும் இப்படம் அதன் நுட்பமான குறியீடுகளின் வழியாக வாழ்வில் அறியவேண்டிய மெய்ஞானத்தையும் அதை நோக்கிய தேடலுக்கான பயணத்தையும் குறிப்பிடுகிறது. மேலே விவரித்துள்ள எட்டு காட்சிகளும் தான் இந்தப் படத்தில் மெய்தேடலுக்கான பயணத்தின் பாதையிலுள்ள முக்கிய மைல்கல்கள். அவற்றைத் தவறவிடாமல் கவனிக்கும் பார்வையாளனே வழிதவறாமல் பயணிக்கிறான். அவனுக்கே படம் முடிவில் அர்த்தமுள்ளாதாகிறது.
எதிர் எதிரான கருத்து நிலைப்பாடுகள் கொண்ட, ஆனால் காதலுள்ள கணவன் மனைவி என்னும் குறியீட்டு மனிதர்களுக்குள் இருக்கும் ஒரு முனையாக சஞ்சலமும், முடிவில்லாத கேள்விகளும், அவநம்பிக்கையும் கொண்ட வறண்ட தருக்க மனதையும், அதன் எதிர் முனையாக நுண்ணுணர்வும், உண்மையை நோக்கிய தேடலும், அதனில் ஆழமான நம்பிக்கையும் கொண்ட உணர்ச்சி மிகுந்த மனதையும் சித்திரிக்கிறது. ஒவ்வொரு மனித மனமும், தருக்கமும், உணர்ச்சிகரமுமாக இரண்டாகப் பிளந்து தான் இருக்கிறது. இந்த இரு வேறு மனப்பகுதிகளின் பிரதிபலிப்புதான் பயணம் முழுவதும் கணவன் – மனைவி இருவரின் பார்வைகளில் மாறுபடும் காட்சிகளாகவும், விவாதங்களில் எடுக்கும் நிலைப்பாடுகளுமாக காட்டப்படுகிறது. மேம்போக்கான தருக்கம் தன்னால் தொடமுடியாத ஆழங்களில் நம்பிக்கையின் தோள்மேல் சாய்ந்துகொள்கிறது.
முதல் இரயில் பயணத்தில் சந்திக்கும் பத்திரிக்கையாளனின் கிண்டலான பேச்சும், இரயிலைக் கண்ணால் நிறுத்தும் சாமியாரின் கதை தரும் ஏமாற்றமும், மெய்ஞானத் தேடலின் பாதையில் முதலில் தடையாகும் அவநம்பிக்கைகளையும், ஏமாற்றங்களால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தையும் உணர்த்துகிறது. அவர்கள் காரில் சுலபமாகச் சென்று பரிபூரண மனிதரைச் சந்தித்துவிடலாம் என்று நினைப்பது மெய்த்தேடலில் குறுக்கு வழியை முயல்வது. பின்னர் நடந்தே போக வேண்டி வருவது உண்மையை நோக்கிய தேடலின் பயணத்தை அவரவர்களே சுயமாக, படிப்படியாகச் செய்தாக வேண்டுமென்பதைக் குறிக்கும்.
மெய்ப்பொருளை நோக்கிய தேடலில் சமரசங்கள் இல்லை, உண்மை கறாரானது. அதை நோக்கித் தீவிரமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமக்குப் பிரியமான சொந்த நம்பிக்கைகளும், கடவுளின் உருவங்களாகப் பற்றியிருக்கும் பிம்பங்களும், எளிய தர்க்கங்களும், மேலோட்டமான நியாயங்களும், தற்காலிக உண்மைகளும் காலாவதியாகின்றன. அவற்றை மிதித்துக் கொன்றுதான் மேலான உண்மையை நோக்கிய அடுத்த அடிக்கு முன்னேற முடியும். காலடியில் நசுங்கும் எறும்புகளின் கதறல் உணர்த்துவது அதைத்தான். எறும்புகளின் கதறலை அந்தப் பெண் கேட்கிறாள், அந்தத் துன்ப நிலையை மாற்றச் சொல்லிக் கடவுளை இறைஞ்சுகிறாள், ஆனால் ஆண் அதைத் தவிர்க்க முடியாதது என்றும், கேலிக்குரிய விஷயமாகவும்தான் எடுத்துக் கொள்கிறான்.
பரிபூரண ஞானம் ஆடம்பரமில்லாமல் தன்னந்தனியாக இருக்கிறது. ஒரே உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கண்டெடுக்கிறார்கள், வேறு வேறு பெயரிடுகிறார்கள் – மாட்டுக்காரன் என்றும், பரிபூரண மனிதர் என்றும், பைத்தியம் என்றும், ஞானியென்றும் பலவாறாக. ஆனால் பரிபூரண மனிதரின் ஞானம் இதுவே - “ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான்.”
கங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்து வந்தாலும், தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், அதில் திடமாகவுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் அவள் கண்களை மறைத்திருக்கும் பொய்க்கரம் (கை உறை) என்னும் மாயை இங்கே விலகுகிறது.
பிறப்பு – இறப்பு என்னும் சம்சாரச் சுழலில் இருந்து வெளியேறுவதைப் பற்றி ஜெர்மானியர் திரும்பத் திரும்பப் பேசுகிறார். படத்தின் இறுதிக்கட்டம் முழுக்க பிறவிப்பிணியை நீக்கும் காசி நகரத்திலும், கங்கையிலுமே நடக்கிறது. இங்கே மிக நுணுக்கமாக இயக்குனரால் சேர்க்கப்பட்ட பின்னணி இசையைக் குறிப்பிட வேண்டும். இருள் திரையில் இருந்து மெல்ல விலகி, ஒளி பெற்று படம் ஆரம்பிப்பதும் முடிவில் மீண்டும் மெல்ல ஒளி குறைந்து திரையில் இருள் பரவும் போதும் ஒரு சம்ஸ்கிருத துதி ஓதப்படுகிறது. அது யஜுர் வேதத்தின் மையப்பகுதியிலுள்ள ருத்ர உருவான சிவனைப் போற்றும் “ஸ்ரீ ருத்ரம்” என்னும் மிக முக்கியமான வேதப்பாடலில் உள்ள மரணத்தை வெல்லும் மந்திரம் என்று போற்றப்படும் (ம்ருத்யுஞ்ஜயம்) ‘த்ரயம்பகம் யஜாமஹே..’ எனத்தொடங்கும் இரண்டு வரிகள். அந்த வேத வரிகள் “பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு அதன் கொடியுடனான பந்தத்திலிருந்து இயல்பாக விடுபடுகிறதோ அதைப்போல் மரணத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவேண்டும்” என்று வேண்டுகிறது.
இவ்வாறு படம் முழுக்க காட்சிகளிலும், இசையிலும், கதாபாத்திரங்களிலும், வசனங்களிலும் விரவிக்கிடக்கும் குறியீடுகளை உள்வாங்கத் தவறினால் படம் மொத்தமும் வெறும் நகரும் சம்பவங்கள் மட்டுமாகத் தான் பார்வையாளரின் மனதில் எஞ்சும். பல மேலை விமர்சகர்கள் இந்த நிலையில் சிக்கியிருப்பதை இப்படம் பற்றிய அவர்கள் விமர்சனங்களில் காணலாம். இதன் தத்துவ விசாரணையைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாத பார்வையாளருக்கு இது விளங்காது, ஏன் ரசிக்க முடியாமலும் போக வாய்ப்பு அதிகம்.
Mohsen Makhmalbaf
2006ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மோஹ்சென் மக்மல்பாஃப் (Mohsen Makhmalbaf). இது ஈரானில் தடைசெய்யப்பட்ட படம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ஈரானியப் படங்களை விரும்பிப் பார்க்கும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய இயக்குனர் மோஹ்சென். தமிழ் இலக்கிய, சினிமா வட்டாரத்திலும் ‘தி சைக்கிளிஸ்ட்’ என்னும் இவரது படம் பிரபலம்.
மோஹ்சென் மக்மல்பாஃப் இளமையில் ஈரானின் அரசரான ஷாவின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட இஸ்லாமிய புரட்சிக் குழுவில் சேர்ந்து, கலகம், வன்முறை செய்து ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தவர். அப்போது நிறைய வாசிக்கவும், யோசிக்கவும் தொடங்கினார். மகாத்மா காந்தியின் ஆளுமை இவரில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கியது. அரசியலிலிருந்தும், வன்முறையிலிருந்தும் விலகி கலை, இலக்கியத்தின் பக்கம் வந்தார். ஒரு பேட்டியில் “சே குவேராவில் இருந்து காந்திக்கு வந்தேன்” என்கிறார். ஆரம்ப காலங்களில் எழுத்தாளராக (27 நூல்களை எழுதியுள்ளார்) இருந்தவர் பின்னர் திரைப்படத்தை தனக்கான போராட்ட ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். தனது சுயமான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தும் பாணியை உருவாக்கிக் கொண்டார். 1979ம் ஆண்டு புரட்சிக்குப் பின் இஸ்லாமியக் குடியரசாக் மாறிய ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கும், பெண் விடுதலை, பெண் உரிமை, மனித உரிமைகள், கல்வி, சமூக நலனுக்கு ஆதரவாகவும் தனது போராட்டத்தை திரைப்படங்கள் மூலமாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்தப் படம் (Scream of the Ants) மற்றும் Sex and Philosophy என்னும் இன்னொரு படம் எடுத்ததற்காக ஈரானிய அரசின் ரகசிய போலீஸ் பிரிவு இவரது படப்பிடிப்புத் தளத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 2009ல் இருந்து ஈரானை விட்டு வெளியேறி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸில் வசித்துவருகிறார். இவரது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பம் முழுவதும் சினிமா இயக்குனர்கள். இவர்கள் குடும்பம் மட்டும் கேன்(Cannes), வெனிஸ், கனடா உட்பட பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பூடகமான கதை சொல்லல், உருவகங்கள் மற்றும் குறியீடுகளின் மூலம் உணர்த்துதல் என்று இவரது படங்கள் பார்வையாளனுக்கு சவலான அதே சமயம் மிகுந்த நிறைவான உணர்வைத் தரும்.
மத அடிப்படைவாதத்தில் சிக்காத பாரசீகனாக மோஹ்சென் மக்மல்பாஃப் படைத்திருக்கும் பெருமைமிகு திரைப்படம் இது.
- பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம். இதழ் 78ல் வெளியானது http://solvanam.com/?p=22882 )