Friday, September 2, 2011

அறிவாற்றல் மரபுப் பண்பா?


நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?”
உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடியும் என்று வாதிடப்பட்டது.

மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு உயிரியின் உடற்கூற்றியல் (Anatomy) மற்றும் உயிர்செயற்பாட்டியல் (Physiology) ரீதியான எல்லாப் பண்புகளையும் மரபணுக்களே தீர்மானிக்கின்றன, மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுவரை வெளிப்படுத்தப்பட்ட உயிரியல் பண்புகளையே (Phenotype) ஆராய்ந்து கொண்டிருந்த உயிர் அறிவியல், அப்பண்புகளைக் குறிக்கும் மூலமாகிய மரபணுத் தொகையின் (Genotype) கட்டமைப்பை ஆராயும் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களின் வழியாக புதுப்பாய்ச்சல் பெற்றது. மரபுப் பண்புகளையும், அதன் மூலமாகிய மரபணுக்களின் பங்களிப்பையும் பற்றிய ஆய்வு எல்லாத் துறைகளிலும் (பரிணாமவியல், மரபியல், உயிர்வேதியல், நரம்பியல், உளவியல், நோய்க்கூறியல், நடத்தை மரபியல் மற்றும் பல…) வேகம் பெற்றது.
அறிவாற்றலை மரபியல், நரம்பியல் மற்றும் நடத்தை மரபியல் (Behavioural genetics) ஆகிய துறைகளின் வாயிலாக உயிரியல் ரீதியாக அணுகலாம். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைகள் அறிவாற்றலைப் பற்றி என்ன சொல்கின்றன?
அறிவாற்றல்
அறிவாற்றல் மரபுப் பண்பா என்ற கேள்விக்கு முன், அறிவாற்றல் என்று குறிப்பிடப்படுவது எது? என்று தெரிந்து கொள்ளுதல் முக்கியம். அறிவாற்றல் (Intelligence) என்பது அறிதல் திறன் (Cognition), சிந்தித்தல், சமயோசிதம், கற்றல், வெளிப்படுத்துதல், தொடர்புகொள்ளல், திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்ற சிந்தனைச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது.
உளவியலில் பொதுவான அறிவாற்றல், பாய்ம மற்றும் படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் (Fluid and Crystallized Intelligence) என இரண்டாக வகுக்கப்படுகிறது. இதில் பாய்ம அறிவாற்றல் என்பது பெற்றுக்கொண்ட அறிவாக அல்லாது புதிய சூழ்நிலைக்கும், சிக்கலுக்கும் ஏற்றவாறு தர்க்கபூர்வமாக சிந்தித்து செயல்படுதலாகும். கணித, அறிவியல், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதில் திறன் பெற இது மிகவும் முக்கியம். படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் என்பது திறமையையும், அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும் ஆற்றல். ஆழ்ந்து அகன்ற பொது அறிவு, பரந்த சொல்வங்கி (Vocabulary), தகவல்களை நினைவிலிருந்து மீட்டுப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இதன் பங்கு அதிகம்.
நரம்பு மண்டலத்தின் தலைமையகமான மூளை என்னும் உயிரியல் உறுப்புதான் அறிவாற்றலின் மையம். தத்துவ ஞானி பிளாடோ மூளையே அறிவாற்றலின் மையம் என்று ஊகித்தார், ஆனால் அவரது சிஷ்யரான அரிஸ்டாட்டில் இதயமே அதன் மையம் என்று கருதினார், காலன் (Galen) என்கிற கிரேக்க ஹிப்போகிராட்டெஸ் வழி மருத்துவர் தான் சண்டையில் அடிபட்டு மூளை சிதைந்த போர்வீரர்களின் சிந்தனைப் புலம் பாதிக்கப்படுவதை கவனித்து, அறிவுச் செயல்பாடுகளில் மூளையின் முக்கியத்துவத்தை முதலில் உறுதி செய்தார்.
பரிணாமத்தின் பாதையில்
பரிணாமத்தின் மிக நீண்ட பாதையில், மனிதனுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் பொது மூதாதையான ஒரு பேரினக் குரங்கிலிருந்து மனிதன் தன் நெருங்கிய இனமான சிம்பன்ஸிகளிடம் விடைபெற்றுப் பிரிந்து, தனியாகத் தன் பயணத்தைத் துவங்கி இன்று கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட பரிணாமப் பயணத்தில் இதுவரை மனிதனின் மரபணுத் தொடர் (DNA sequence) சிம்பன்ஸிகளிடமிருந்து சற்றேறக்குறைய வெறும் 1.5% மட்டுமே வேறுபடுகிறது1 (இதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு –மரபணு வேறுபாடு எப்படி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து).
(Credit: Image: Edwin Hadley, University of Illinois.)
மரபணுத் தொடரில் 99% ஒற்றுமை இருந்தாலும் எது மனிதனை மனிதனாகவும், குரங்கைக் குரங்காவும் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வு முடிவு கூறிய பதில் மிக முக்கியமானது - மனித மூளையில் உள்ள மரபணு செயல்பாடு (Gene activity) தான்!2 இத்தனைக்கும் மனிதனுக்கும், சிம்பன்ஸிக்கும் மூளையில் வெளிப்படும் மரபணுக்களில் (Gene expression) உள்ள வித்தியாசம் மற்ற உள்ளுடல் அங்கங்களில் – அதாவது இதயத்திலோ, கல்லீரலிலோ, சிறுநீரகத்திலோ வெளிப்படும் மரபணுக்களை விடக் குறைவு தான்.(3) ஆனால் அது தான் மனிதனின் அறிவாற்றல் சார்ந்த பரிணாம வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மரபணுக்களின் பண்பு வெளிப்பாட்டில் ஆர்.என்.ஏ படியாக்கல் (Transcription) என்ற இடைநிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் சில காரணிகள் ஆர்.என்.ஏ ‘படியாக்கல் காரணிகள்’ (Transcription factors) என்று குறிக்கப்படும். இவற்றின் பங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது என்று நிறுவப்பட்டுள்ளது.(4) உதாரணமாக, ‘ப்ரோடோகாதெரின்’ (Protocadherin) என்கிற புரதத்தின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணியைச் சொல்லலாம். இந்த ப்ரோடோகாதெரின் மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது.
பெருமூளை அரைக்கோளங்களைச் (Cerebral hemisphere) சுற்றியுள்ள மடிப்புகள் நிறைந்த சாம்பல் நிறப் பொருள் (Grey matter) என்றழைக்கப்படும் புறணி (Cerebral cortex) மற்ற பேரினக்குரங்குகளை விட மனிதனுக்கு மூன்று மடங்கு அளவில் பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். (மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis)). இந்த சாம்பல்நிறப் பகுதி தான் சிந்தனை, விழிப்புணர்வு, மொழி, கற்றறிதல், பகுத்தறிதல் போன்ற மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் முக்கியப் பண்புகளை நிர்ணயிக்கிறது. சரி, இங்கே மரபணுக்களுக்கு என்ன முக்கியத்துவம்? என்று கேட்டால், பதில் ‘மிக முக்கியமான பங்கு மரபணுக்களுக்கு உண்டு’ என்பதே. உதாரணமாக HAR1F என்னும் ஒரு மரபணு மனிதக் கருவளர்ச்சியின் ஏழாவது வாரத்தில் மிக அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மரபணு நேரடியாக எந்தப் புரதத்தையும் குறிப்பதில்லை, பதிலாக மூளைப் புறணியில் (Cortex) நியூரான் அடுக்குகளை உண்டாக்குவதிலும், மூளையின் வடிவமைப்பைக் கட்டமைப்பதிலும் பங்குபெறும் இதர புரதங்களுக்கான மரபணுக்களின் வெளிப்பாட்டை மேம்படுத்துகிறது. மொத்தம் 49 மரபணுப் பகுதிகள் இவ்வாறு மனிதர்களில் சிம்பன்ஸிக்களை விட மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது5. அதில் ஒன்று தான் மேற்கண்ட HAR1F (மனிதர்களில் முடுக்கிவிடப்பட்ட பகுதி - Human Accelerated Region – HAR) மரபணு. மீதமுள்ள 48 பகுதிகளையும் அவற்றின் பண்புகளையும் கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனித இனத்தில்
இதுவரை மனிதன் அபாரமான மூளை வளர்ச்சி பெற்று தனது நெருங்கிய இனமான சிம்பன்ஸிக்களிலிருந்து வேறுபட்டு பரிணாமத்தின் பாதையில் விரைவாக முன்னேற மரபணுக்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இனி, மனித இனத்துக்குள் அறிவாற்றலை குறிக்கும் ஒரு காரணியாக மரபணுக்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
‘நவீன மரபியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆராய்ச்சியாளரான மெண்டல் (Gregor Mendel), பட்டாணிச்செடிகளை வைத்து ஆராய்ந்து, சில பண்புகள் மரபாக தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன என்ற தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு ஒரு வருடம் முன்பே 1865 ல் ஃபிரான்ஸிஸ் கால்டன் (Francis Galton) என்பவர் உயர்தள அறிவாற்றலும் மற்றும் சில திறன்களும் மனிதர்களில் மரபுப்பண்பாகக் கடத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்து இரண்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இவர் தான் “Nature Vs Nurture” என்கிற பதத்தையும் அந்த விவாதத்தையும் தொடங்கிவைத்தவர். கால்டனின் கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்டு ஸ்பியர்மேன் (Charles Spearman) என்பவர் பொதுவான அறிவாற்றல் காரணி (Genaral Intellingence factor, g ) என்கிற பதத்தை முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி வாய்மொழி (Verbal), எண்கணிதம் (Arithmetic), விழிப்புலம் (Visual), முப்பரிமாண சிந்தனை (Three dimensional thinking) போன்ற தனித்தனியான அறிவுத்திறன் சோதனைகளில் சிறப்பாக தேர்வுபெறுபவர்கள் இவற்றுக்குள் தொடர்புறக்கூடிய மைய இழையாக அடிப்படையான (அ) பொதுவான ஒரு அறிவாற்றல் உடையவர்களாக இருபார்கள். இந்த ‘அறிவாற்றலின் சாரம்’ அல்லது அடிப்படையான அறிவாற்றல் மரபாகக் கடத்தப்படக்கூடியது. இந்த கருதுகோளுக்கு எதிராக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் இதுவே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஆகும்.
மூலக்கூறு உளவியல் மற்றும் நடத்தை மரபியல் துறைகளில் சில பண்புகளின் மரபுத்தன்மையை ஆராய்ச்சி செய்ய இரட்டையர்களையே மாதிரிகளாகக் கொள்வது வழக்கம். ஒருவித்து இரட்டைகளில் (Monozygotic twins) இருவருக்கும் மொத்த மரபணுக்களும் 100% ஒத்ததாக இருக்கும். இருவித்து இரட்டைகளில் (Dizygotic twins) 50% மரபணு ஒற்றுமை இருக்கும். எனவே ஒரே சூழ்நிலையிலோ அல்லது பிரிந்து வெவ்வேறு சூழ்நிலைகளிலோ இந்த இரட்டைகள் வளர நேர்கையில், அவர்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது நீடிக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதன் மூலமாகப் பண்புகளை நிர்ணயிப்பதில் மரபணுக்களின் பங்கையும், சூழ்நிலை, சமூக தாக்கத்தையும் அறியலாம். அதே போல அல்ஸைமர் (Alzheimer’s), பார்க்கின்சன் (Parkinson’s), ஹண்டிங்டன் (Huntington’s) போன்ற நரம்பு குன்றல் நோய்கள் (Neuro degenerative diseases) அல்லது ஸ்கீசோஃப்ரீனியா (Schizophrenia) போன்ற மனநல குறைபாடுள்ளவர்களின் மரபணுவை (DNA), ஒத்த வயதும் சூழலும் கொண்ட ஆரோக்கியமானவர்களின் மரபணுவோடு ஒப்பிட்டு, ஆரோக்கியமானவர்களிடம் இல்லாத - அதே சமயம் மூளை குன்றல் நோயுள்ளவர்களிடம் இருக்கிற மரபணு மாற்றங்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாக மூளைச் செயல்பாட்டுக்கும், அறிவாற்றலுக்கும் உள்ள மரபுக் காரணிகளை விளக்கும் ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்துள்ளன. இவை ஒரு மறைமுகமான வழிமுறை தான்.
நேரடியாக அறிவாற்றலுக்கான மரபணுக்காரணிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட ஒற்றை மரபணுவும் அறிவாற்றலை நேரடியாகக் குறிப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அறிவாற்றல் என்பது பல்வேறு திறன்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது. அது ஒரு சிக்கலான பண்பு. எனவே பல்வேறு மரபணுக்கள் (Polygenic) தொடர்புடையதாக இருக்கும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த மரபணுக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அறிவாற்றலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருந்தாலும் சமீபத்திய சில முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளை தெரிந்துகொள்வது இந்தத் தலைப்பின் நோக்கத்திற்கு உதவும். எடுத்துக்காட்டாக, CHRM2 என்னும் மரபணுவின் புரதம் நரம்பணுக்கள் மின்னதிர்வை ஏற்று சமிக்ஞைகளை கடத்துவதில் பங்கு வகிக்கிறது. கற்றல் திறன், ஞாப சக்தி ஆகியவற்றுக்கு முக்கியமானது. 2007ம் ஆண்டு 200 குடும்பங்களைச் சேர்ந்த 2,150 தனிநபர்களின் CHRM2 மரபணுவில் உள்ள ‘மரபணு அடையாளங்களையும்’ (Genetic markers) அவர்களின் அறிவுத்திறன் அளவீட்டு சோதனையில் (IQ test) பெற்ற மதிப்பெண்களையும் ஒப்பிட்டதில், CHRM2 மரபணு அறிவாற்றல் திறனில் தாக்கம் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது (6). இதே மரபணு இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு நாடுகளில் செய்த ஆய்வுகளிலும் அறிவுத்திறன் அளவீட்டுடன் உள்ள தொடர்பு நிரூபிக்கப் பட்டுள்ளது. இன்னொரு நரம்பு மண்டல மரபணுவான STX1A, நரம்பணுக்களின் மின்வேதி சமிக்ஞை பரிமாற்றத்தில் பங்குபெறும் மிக முக்கியமான புரதத்தைக் குறிப்பது. STX1A மரபணுவின் வெளிப்பாடு வில்லியம்ஸ் ஸிண்ட்ரோம் என்னும் மனவளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளவர்களிடம் மிகக் குறைவாக உள்ளதும், அது அவர்களின் குறைவான அறிவுத்திறன் அளவீட்டுடன் (IQ-60) மிகவும் தொடர்புள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது7. சாதாரணமான ஒரு மனிதனின் அறிவுத்திறன் அளவீட்டு சராசரி 100 இருக்கும் (அதிகபட்ச IQ விற்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மரிலின் சாவன்துக்கு அவருடைய பத்தாவது வயதில் IQ-228 இருந்தது!). இதன் மூலம் அறிவாற்றலுக்கும் மரபணுவுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது என்பது வில்லியம்ஸ் ஸிண்ட்ரோமுக்கும் STX1A மரபணுவுக்கும் உள்ள தொடர்பின் வழியாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் (ஆகஸ்டு, 2011) வெளியிடப்பட்ட முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை மரபணுக்களுக்கும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பை மிக நேரடியாக நிரூபிக்கிறது (8). இதற்கு முன் வெளிவந்த ஆய்வுகள் பெரும்பாலும் மூளை சார்ந்த குறைபாடு நோயுள்ளவர்களையும், ஆரோக்கியமானவர்களையும், அல்லது இரட்டைகளையும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும், அவர்கள் பெற்ற/வளர்ப்பு பெற்றோரையும் ஒப்பிட்டு அறிவாற்றலின் மரபுப் பண்பை நிரூபித்துவந்தன. ஆனால் இந்த ஆய்வு ஆரோக்கியமான 3511 (ஆண், பெண் இருபாலரும்) பேரின் மரபணுவில் மொத்தம் 5,49,692 மரபணு அடையாளங்களைப் பரிசோதித்ததன் மூலம் மனிதர்களுள் படிகமாக்கப்பட்ட-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 40%ம், பாய்ம-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 51%மும் அவர்களின் மரபணு வித்தியாசங்களாலேயே தீர்மாணமாகின்றன என்று நிரூபிக்கிறது. ஒட்டுமொத்த மரபணுவையும் (DNA) கொண்டு ஆய்வு செய்யப்பட்டதால், எந்த குறிப்பிட்ட மரபணு (Gene) அறிவாற்றலில் பங்கு வகிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியாவிட்டாலும், மரபணுக்களின் பங்கையும் அறிவாற்றலின் மரபயிலையும் (Genetics of Intelligence) நேரடியாக தெரிவிப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மூளையின் அளவையும், நரம்பணுக்களின் வலைப்பின்னலையும் கட்டுமானத்தையும் நிர்ணயிப்பதில் மரபணுக் காரணிகள் வகிக்கும் இன்றியமையாத பங்கையும், மூளையின் அளவு எப்படி அறிவாற்றல் வளர்ச்சியில் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது என்பதையும் முன்னர் கண்டோம். மூளையின் செயல்பாடுகளைப் படம் பிடிக்கும் அதிநவீன கருவிகள் (HARDI) மூலம் 23 ஜோடி ஒருவித்து இரட்டையர்கள் மற்றும் 23 ஜோடி இருவித்து இரட்டையர்களின் மூளையைப் படம் பிடித்துப் பார்த்ததில் அவர்களின் மூளை நரம்பணு இழைகளைப் (Axons) போர்த்தியுள்ள மயலின் (Myelin) என்னும் கொழுப்புப்-புரதத்தின் தடிமனைப் பொறுத்து அவர்களின் மூளை செயல்பாட்டின் வேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தடிமனான மயலின் போர்வை இருந்தால் கட்டளைகளையும், தகவல்களையும் மூளை மிகவேகமாகக் கையாளும். அவர்களின் முப்பரிணாம சிந்தனை, விழிப்புலம் சார்ந்த செயல்பாடும், தர்க்கமும் எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டது. மயலின் போர்வையின் வளர்ச்சியைக் குறிக்கும் மரபணுக்கள் தான் இதைத் தீர்மாணிக்கின்றன. இருவித்து இரட்டைகளில் இந்த மயலின் போர்வையின் தடிமனில் வித்தியாசம் இருந்தது (ஏனென்றால் அவர்கள் 50% மட்டுமே மரபணு ஒற்றுமை கொண்டவர்கள், எனவே பெற்றோர்களிடமிருந்து மரபாகக் கடத்தப்படும் பண்பு வேறுபடலாம்) கண்டுபிடிக்கபட்டதன் மூலம் மூளை-அறிவாற்றல் செயல்பாடு மரபாகக் கடத்தப்படும் தன்மை புதியமுறையில் நிரூபிக்கப்பட்டது (9). இவையும் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகளும் அறிவாற்றலில் சமூகத்தின்/சூழலின் பங்கிருந்தாலும் முதல் மற்றும் முக்கியமான பங்கு பாரம்பரியமாகக் கடத்தப்படும் மரபணுக்களே என்ற கருத்தை அறிவியல் பூர்வமாக முன்வைக்கின்றன.
எதிர்காலம்
பரிணாமத்தில் மனித இனத்துக்குச் சிறப்புப் பண்பாக அமைந்த மூளை வளர்ச்சியையும், அறிவாற்றலையும் குறிக்கும் இந்த மரபணுக்கள் மனித இனம் முழுமைக்கும் பொதுவாகத் தானே இருக்கவேண்டும்?, அதனால் எல்லா மனிதருக்கும் அறிவாற்றலும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே? என்ற கேள்விகள் எழுகிறது. இங்கே தான் உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவித்து இரட்டைகளையும், இருவித்து இரட்டைகளையும், அவர்களின் அறிவுத்திறன் அளவீடு, வளர்கின்ற குடும்ப மற்றும் சமூகச்சூழல், சத்தான உணவு, பெற்றோரின் கல்வியறிவு மற்றும் அறிவாற்றல், கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை வைத்து சமூகவியலாளர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து அறிவாற்றலில் சூழ்நிலையின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக்கி வருகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவாற்றலின் மரபுத்தன்மை குறித்து ஆராயும் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சிகள் வேகம் பெற்று வருகின்றன. இப்போதும் இது ஒரு வளரும் துறையே. இது வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளவையும் ஒப்புநோக்க அடிப்படையானதே. இந்தத் துறையின் எதிர்காலப் போக்கை இதை போன்ற இன்னொரு துறையின் வளர்ச்சியை வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். தொற்று நோய்களுக்கான ஒற்றைப் புறக்காரணமாக நுண்கிருமிகளைக் கண்டுபிடித்த ஆரம்ப அறிவியல் காலங்களில், நோய்க்கூறு அறிவியல் (Immunology) வேகமாக வளர்ந்தது. ஆனால் ஒரு நோய்க்கிருமி ஒரே சூழ்நிலையில் வாழும் அனைவரையும் தாக்குவதில்லை என்பதும், ஒரு நோய்க்கிருமிக்கெதிரான தடுப்பூசி (Vaccine) அந்த நோய்கெதிரான பாதுகாப்பை எல்லா இன மக்களிலும் வெற்றிகரமாக உண்டாக்க முடிவதில்லை என்ற உண்மையும் அறிவியலாளர்களை மனிதர்களின் மரபணுக் கட்டமைப்பை நோக்கிச் சிந்திக்கச்செய்தது. நோயெதிர்ப்பில் ஈடுபடும் மரபணுக்களும், அதில் ஏற்படும் மாற்றங்களும் தான் ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்கு முதற்காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. (தொற்றுநோய்கள் மட்டுமல்ல உடற்செயலியக்கம் சார்ந்த எல்லா குறைபாடுகளுக்கும் மரபியல் முன்சார்பு உண்டு. எ.கா. இதயநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரைவியாதி, புற்றுநோய்…).
அந்த மரபணுக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கடத்தப்படுவதால், பிறப்பிலேயே சில நோய்கள் வருவதற்கான மரபியல் முன்சார்புகள் (Genetic predisposition) மனிதர்களில் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டதும் நோய்க்கூறியல், நோய்க்கூறு மரபியலாக வளர்ந்தது (Immunogenetics). பின்னர் இந்த மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட மனித இனத்துக்கோ (Race), இனக்குழுவுக்கோ (உதாரணம்: சாதிகள்) பொதுவானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது (Population-Immunogenetics). மனிதனின் மொத்த மரபணுத் தொடரும் வரிசைப்படுத்தபட்டபின் (Human Genome Sequencing) இன்னும் வளர்ந்து, ஒரு தனிமதனின் ‘நோய்க்கூறு ஜாதகத்தை’க் (Immunological Horoscope; என்னென்ன நோய்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது, எவ்வாறு அதைத் தடுத்துக்கொள்ளலாம்) கணிப்பதிலும், ஒவ்வொரு தனிமனிதனின் மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவம் (Personalized Medicine) என்ற நிலையையும் எட்டியுள்ளது. இதே போக்கு அறிவாற்றலின் மரபியலுக்கும் பொருந்தும்.
இப்போது அறிவாற்றலுக்கான மரபணுக் காரணிகளைக் கண்டறிவதில் வெற்றி பெற்றுள்ள இத்துறை பின்னர் ஒரு இனத்திலோ, சமூகத்திலோ அந்த மரபணுக்களின் பரவலை (Prevalence) ஆராய்ச்சி செய்யலாம். பின்னர் தனிநபரின் மூளை – அறிவுச் செயல்பாட்டை அல்லது நோய் வாய்ப்புகளை முன் கூட்டியே கணித்து முன்னேற்ற, பாதுகாக்க வழிசொல்லலாம். உதாரணமாக நாம் மேலே பார்த்த மயலின் போர்வையின் தடிமனை அதிகரிக்க, அதன் மரபணுவை வெளிப்பாட்டை அதிகரிக்கும் மருந்தை அல்லது மரபணு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதன் வழியாக பிறவியிலேயே வில்லியம்ஸ் சிண்ட்ரோம் வருவதற்கான மரபியல் முன்சார்பு இருக்கும் குழந்தைகளைக் காக்கலாம் (சாதாரண அறிவுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை அதிகப்படுத்தலாம்!!)  இப்போதைக்கு மூளை-அறிவாற்றல் வளர்ச்சிக் குறைவு நோய்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கவும் தான் அறிவாற்றல் மரபியல் துறை மரபணுக் காரணிகளைக் கண்டறிய முயற்சிக்கிறது.
அறிவாற்றலின் மரபுத் தன்மை என்னும் கருத்து சமூகவியல் பார்வையில் மிக அபாயகரமான கொள்கையாக இருக்கலாம். காரணம்- பன்னெடுங்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் மரபான பண்பாக அறிவாற்றல் (இன்னும் பல பண்புகள்) கருதப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது வம்சாவழியினருக்கோ சொந்தமானதென்றும் அதனால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டும் பிறர் தாழ்வாக நடத்தப்பட்டும் உருவான ஏற்றத்தாழ்வுகளே. சமூகவியல், சமவாய்ப்பின் மூலம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதும், வளர்த்துக் கொள்ளக் கூடியதும் தான் அறிவாற்றல் என்று நிரூபிப்பதன் மூலம் சமுக சமநிலையை வலியுறுத்த விழைகிறது. சமூகவியல் என்பது சட்டம், மொழியியல், அரசியல், தத்துவ, கலாச்சார விழுமியங்களையும், அறிவியலின் முடிவுகளையும் சற்றே மழுங்கடித்துச் சேர்த்து ஒன்றிணைத்து அலசி மனித சமூகத்தை, நடத்தையை, சமூக அமைப்பு முறைகளை புறவயமாக விளக்க முயல்வது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கூர்மையான, புறவயமான, நிரூபிக்கக் கூடிய உண்மைகளை மட்டும் தரமுடியும். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தான் பரிணாமத்தில் சிறப்புப் பரிசாக நமக்குக் கிடைத்த அறிவாற்றல் சார்ந்த மரபணுக்களுக்களை ஒவ்வொரு செல்லிலும் பொதிந்து வைத்திருப்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகும்!
உதவிய மூல ஆராய்ச்சி கட்டுரைகள்
2. Wolfgang Enard., et al., 2002. Intra- and Interspecific Variation in Primate Gene Expression Patterns. Science. 296: 5566. 340-343
3. Philipp Khaitovich., et al., 2005. Parallel Patterns of Evolution in the Genomes and Transcriptomes of Humans and Chimpanzees. Science. 309: 5742. 1850-1854
4. Yoav Gilad., et al., 2006. Expression profiling in primates reveals a rapid evolution of human transcription factors. Nature. 440, 242-245
5. Katherine S. Pollard., et al., 2006. An RNA gene expressed during cortical development evolved rapidly in humans. Nature. 443, 167-172
6. Danielle M. Dick., et al., 2007. Association of CHRM2 with IQ: Converging Evidence for a Gene Influencing Intelligence. Behavioural Genetics. 37:265–272
7. Gao MC., et al., 2010. Intelligence in Williams Syndrome Is Related to STX1A, Which Encodes a Component of the Presynaptic SNARE Complex. PLoS ONE. 5(4): e10292. doi:10.1371/journal.pone.0010292
8. G Davies., et al., 2011. Genome-wide association studies establish that human intelligence is highly heritable and polygenic. Molecular Psychiatry. DOI: 10.1038/mp.2011.85
9. Ming-Chang Chiang., et al., 2009. Genetics of Brain Fiber Architecture and Intellectual Performance. Journal of Neuroscience. 29 (7): 2212 – 2224


- பிரகாஷ்
நன்றி: சொல்வனம்

3 comments:

 1. அருமையான தொகுப்பு. ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் கட்டுரைகளை தமிழில் அழகாகவும், தெளிவாகவும் தொகுத்து உள்ளீர்கள். உங்கள் அறிவியல் கட்டுரை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள மகேஸ்வரி, வாசிப்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்.

   Delete
 2. superp sir saravanan from bangalore

  ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...