Thursday, August 16, 2012

பகத்சிங்கின் மரணம் - மறைக்கப்பட்ட உண்மைகள்


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், அதன் இன்பங்களையும், ஏன் உயிரையும்கூடத் தியாகம் செய்த அதன் பலிதானிகளின் ரத்தத்தால் எழுதப்பட்டது. சொந்த சகோதரர்கள் கூண்டுக்கிளிகளாய் அடிமை வாழ்வின் வாசலில் விட்டுஎறியப்படும் துணுக்கு உலகியலின் இன்பங்களுள் மூழ்கியிருக்கையில், வாழும் ஒவ்வொரு நொடியும் துன்பங்களை மட்டுமே எதிர்கொண்டாலும் நாட்டுநலனை மட்டுமே சிந்தித்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் பகத்சிங் இந்தியாவின் லட்சிய இளைஞர் உருவம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் 1907 செப்டம்பர் மாதம் 13ம் நாள் பிறந்த பகத்சிங், காந்தீயவாதியான லாலா லஜ்பதி ராய் துவக்கிய லாஹூர் தேசியக் கல்லூரியில் (National College, Lahore) படித்தவர். இளம்வயதில் காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு, அந்நியத் துணிகளை பொதுவெளியில் இட்டு கொளுத்துவது என்று அஹிம்சைப் போராட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்.
1922ஆம் வருடம் சௌரி சௌரா போராட்டத்தில் அறவழியில் போராடிய அப்பாவி கிராம மக்களை ஆங்கிலேய காவல்படை கொன்றதை எதிர்த்து அஹிம்சையைக் கைவிட்டு போராட்டக்காரர்கள் ஆங்கிலேயப் படையுடன் வன்முறையில் ஈடுபட்டதைப் பார்த்து அஹிம்சை வழிமுறைகளின் மீது நம்பிக்கை இழந்தார். அவர் நேரடி வன்முறைப் போராட்டத்தில் இறங்க முக்கியக் காரணமாக அமைந்தது அஹிம்சைவாதியான லாலா லஜபதி ராய் வெள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு.
bhagat_singhs_execution_lahore_tribune_front_page

1928ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடிய லாலா லஜபதி ராயைக் லத்தியால் அடித்துக்கொன்ற ஸ்காட் என்னும் பிரிட்டிஷ் காவலதிகாரியைப் பழிவாங்க திட்டமிட்டனர் பகத்சிங்கும் நண்பர்களும். அடையாளக் குழப்பத்தால் இன்னொரு அதிகாரியான ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். பகத் சிங்கும் நண்பர்களும் போலீஸின் பிடியின் சிக்காமல் சாகசமாகத் தப்பினர். பின்னர் ஆங்கிலேய அரசின் மத்திய அவையில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் பகத்சிங் கைது செய்யப்பட்டார்.
1935 மார்ச் 24ஆம் தேதி காலை 8 மணிக்கு என்று முடிவு செய்யப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை கடைசி நேரத்தில் மாற்றி பதினொன்னரை மணி நேரம் முன்பாகவே 23ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கில் இடப்பட்டதனால் இறந்தார் என்று பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிட்டிருப்பதையே பெரும்பாலான இந்தியர்கள் நம்பிகொண்டிருக்கின்றனர்.
2005இல் Some Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh என்னும் புத்தகம், பிரிட்டிஷ் உளவாளியாக இருந்த ஒரு இந்தியரின் குறிப்புகளிலிருந்து எடுத்து அவரது தத்து மகனான குல்வந்த் சிங் கூனர் மற்றும் அவரது சக எழுத்தாளர் ஜி.எஸ். சிந்தராவால் மேற்கொண்டு பிரிட்டிஷ் ஆவனங்களைச் சோதித்து எழுதி இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அது தரும் தகவல்கள் அதிர்ச்சி தரக்கூடிய, இந்திய தேசபக்தர்கள் ஒருபோதும் மன்னிக்கவிரும்பாத பிரிட்டீஷ் கொடூரங்களை வெளிக்கொண்டு வந்தது.
பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.
இரவோடு இரவாக லாஹூர் கண்டொன்மெண்டிற்கு உயிர் பிரியாமல் அரைமயக்கத்தில் இருந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரையும் தூக்கிச்சென்றனர். அங்கே திட்டமிட்டபடி தயாராக இருந்த சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் ஆத்திரம் தீரும் வரை துப்பாக்கியால் மூவரையும் குறீப்பாக பகத் சிங்கைச் உடலைச் சல்லடையாக்கிக் கொன்றனர்.
உடனடியாக இரவிலேயே லாஹூரில் இருந்து 6கிமீ தொலைவில் கட்சா ரோடில் பியாஸ் நதி சட்லெஜ் நதியுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உடல்களை அடையாளம் தெரியாதவாறு எரியூட்டி சாம்பலாக்கி அழித்தனர்.
மக்களைத் திசை திருப்புவதற்காக இரண்டு இந்திய கூலியாட்களை அனுப்பி ‘சட்லெஜின் மேற்குக் கரையில் ஹுசைனிவாலா என்னும் இடத்தில் ஏதோ பிணம் எரிக்கப்படும் பெரும் நெருப்பைப் பார்த்ததாக’ பொய்த் தகவலைப் பரப்பினர். இதை நம்பிய பொதுமக்களும், பகத் சிங்கின் சகோதரி அமர் கௌரும் ஓடிச்சென்று பாதி எரிந்துகிடந்த சில உடற்பாகங்களையும் எலும்புகளையும் அழுதுகொண்டே சேகரித்து ரவி நதியில் இறுதிச் சடங்கை முறைப்படி செய்வதற்காக கொண்டு சென்றனர். ஏராளமான பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடனும், சூளுரைகளுடனும் அஸ்தி நதியில் கரைக்கப்பட்டது.
கொடுமை என்னவென்றால் அது உண்மையில் பகத்சிங்கின் உடல் அல்ல. அதுவும் ஆங்கிலேயர்களால் போலியாக பகத்சிங்கைப் போல உயரம் உள்ள யாரோ ஒருவரின் உடலை வேண்டுமென்றே அரைகுறையாக எரித்து மக்களை ஏமாற்றுவதற்காகத் தந்திரமாகச் செய்யப்பட்டது.
ஏற்கனவே மியன்வாலி சிறைச்சாலையில் பிற ஐரோப்பியச் சிறைகைதிகளுக்கு இணையாக இந்தியக் கைதிகளும் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதன் மூலமாகவும், சாண்டர்ஸ் கொலை வழக்கில் தானே நீதிமன்றத்தில் வாதாடிய போது அந்த வழக்காடலயே சுதந்திரப் போராட்டத்திற்கான ஒரு சந்தர்பமாகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு எழுச்சியுடன் அவர் முன்வைத்த வாதங்கள் பத்திரிக்கையில் வெளியானதன் மூலமாகவும் இளைஞர்களின் புரட்சி வீரனாக புகழ்பெற்றிருந்தார். எனவே பகத்சிங்கை பட்டப்பகலில் திருட்டுத்தனமாக சுட்டுக்கொல்ல முடியாது, விஷயம் கசிந்து வெளித்தெரிந்துவிட்டால் மக்களின் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியாது என்பதற்காகவே அவசர அவசரமாக தூக்கிலடப்படும் நேரத்தை முன்னதாகவே மாற்றி இரவில் தூக்கிலிட்டனர். பகத்சிங் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தபோது வெறும் இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது. இந்த உண்மைத் தகவல்கள் பாடநூல்களில் இடம் பெறவேண்டும். சுதந்திரநாள் என்பது சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை என்ற அளவில் தேசிய உணர்ச்சிகள் வற்றிப் போயிருக்கும் சமூகத்தின் இளைய தலைமுறையை அது சுருக்கென்று குத்தி யோசிக்க வைக்கும்.
ஒரே ஒரு ஆங்கிலேய காவல் அதிகாரியின் மரணத்திற்கு ஐந்து வருடங்கள் காத்திருந்து குரூரமாகப் பழிவாங்க ஆங்கிலேயரின் சொந்தங்கள் துடித்ததென்றால், ஒட்டுமொத்த நாட்டையே அடிமையாக்கி கோடானகோடிப்பேரை ஈவிரக்கமின்றி கொன்ற ஆங்கிலேய காலனியாதிக்க வெறியர்களைப் பழிவாங்க இந்தமண்ணின் சகோதரர்கள் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் நடத்த முடிவெடுத்ததில் என்ன தவறு?
ஆனாலும் இத்தனையையும் சகித்துத்தான் ‘இன்னா செய்தாரையும் ஒறுத்து அவர் நாண’ வைத்த அஹிம்சை தரிசனம் மகாத்மா காந்தியின் கணிந்த பாரதீய மனதில் ஊற்றெடுத்து ‘இன்னொரு கன்னத்தை காட்டும்படி’ புத்தகத்தில் மட்டும் எழுதிவைத்திருந்த உலகிற்கு ஆயுதத்தைவிட ஆன்மீகத்திற்கும், அஹிம்சைக்கும் வல்லமை அதிகம் என்பதை மெய்ப்பித்தது.

-பிரகாஷ் சங்கரன்

நன்றி. சொல்வனம் (இதழ் 74ல் வெளியானது).http://solvanam.com/?p=21541

Thursday, August 2, 2012

மானுட ஞானம் தேக்கமுறுகிறதா?


( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து உந்தப்பட்டு அது தொடர்பாக எழுந்த என் சிந்தனைகளை தொகுத்து எழுதிய கடிதம். ஜெ தளத்தில் வெளியிடப்பட்டது )
********
பதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும்.
என் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, மானுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான புறவயமான அறிவுத் தொகுப்பும் எந்த ஒரு போட்டியாளரையும் ‘சமாளிக்கும்’ பொருட்டு உருவானதல்ல. எனவே இனிமேலும் மானுட வளர்ச்சிக்கு அப்படி எந்த ஒரு உயிரினமும் ஞானச் சவால் விடவேண்டியதில்லை.
மனித இனத்தின் ஒட்டுமொத்த புறவயமான ஞானச் செல்வமும் அவன் போட்டியாளர்களை வென்று தன் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் என்றால், அவன் குரங்கினத்திலிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேட்டையாடக் கற்றுக் கொண்டதே போதும். அத்துடன் அவனது அறிவுத் தேடல் நின்றிருந்திருக்கலாம்.
ஆனால், அப்படி வேட்டையாட அவனைத் தூண்டியதே பரிணாமக் கொடையாக மனித இனத்திற்குக் கிடைத்த பெரிய அளவுள்ள மூளைதான். மனிதனுக்கு, மரபணு ரீதியாக மிக நெருங்கிய பேரினக் குரங்குகளை விட மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் – மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis).
எனவே பரிணாமத்தின் முதல் பெரும் கொடையே அறிவை விரிவு செய்ய விதிக்கப்பட்டிருப்பதால் மனிதனின் அறிவுத் தேடல் – ஞான சேகரம் எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தொடரும் எனவே நினைக்கிறேன். ஜெ கூறியபடி மானுட ஞானம் என்னும் நீர்ப்படலம் அது பரவும் நிலத்தின் அமைப்பிற்கேற்ப அமைகிறது. மொழி, எழுத்து, இசை என்று தேவைப்பட்ட காலங்களில் அந்தப் பள்ளங்களை நிரப்பியும், பிறகு இன்று காணும் யாவையுமாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட, இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதே இன்னும் சுவாரஸியமானதாக ஆக்குகின்றது.
இந்த இடத்தில் விஷ்ணுபுரத்தில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்றான “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்பதை நினைத்துக் கொள்கிறேன். ஆம், மானுட ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் இதுகாறும் ‘உருவாக்கித்’ தொகுத்தவற்றை ஒட்டியும், வெட்டியும், முற்றிலும் எதிர்த்தும் கூட இருக்கலாம். வாழும் சூழல் கொடுக்கும் சவால் மட்டுமே பரிணாமத்திற்குக் காரணமாக வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால அறிவுச் செயல்பாடு, கட்டற்ற இன்றைய ஞானம் உருவாக்கும் சிக்கல்களை சமாளிப்பதும், எல்லைகளை மீறுவதும் ஆக இருக்கலாம். இன்றைய மனிதனே நாளைய மனிதனுக்கு போட்டி அல்லது சிந்தனைகளை வடிவமைப்பவன்.  இது என் எளிய ஊகமே. அல்லது முன்னொருமுறை என் கேள்விக்குப் பதிலாக ஜெ சொன்னது போல, ‘தனியொரு கரையான், தானும் சேர்ந்து கட்டும் புற்றின் பிரம்மாண்டத்தை ஒரு போதும் கற்பனை செய்யக்கூட முடியாது. அது போலவே மானுட ஞானம் வழியாக பிரபஞ்ச விதி அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாது’.

*
சில மாதங்களுக்கு முன் மானுட இனத்தின் எதிர்காலத்தை யூகித்து Mark Changizi என்பவரால் எழுதப்பட்ட Harnessed: How Language and Music Mimicked Nature and Transformed Man என்றொரு புத்தகத்தின் அறிமுகக் கட்டுரை படிக்க நேர்ந்தது.http://seedmagazine.com/content/article/humans_version_3.0/
கட்டுரையாளர் சொல்வதன் சுருக்கம்:
1. இயற்கைத் தேர்வில் (Natural selection) பேரினக்குரங்கிலிருந்து மனிதன் (human 1.0) உருவானான். நாம் இப்போது இருக்கும் நிலை அதை விட ஒரு படி மேல் – மனிதன் 2.0. மனிதனின் முதல் பண்புகள் பேச்சு, எழுத்து, இசை யாவும் இயற்கைத் தேர்வினால் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உருவானவை என்கிறார். ஆனால் அது பிரக்ஞை பூர்வமாக நாம் உருவாக்கிக் கொண்டதல்ல, நமது ஆதி நடத்தைப் பண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தில் இயல்பாக எழுந்தவை. நமது விழிப்புலத்திற்கு ஏற்றவாறு எழுத்து, நம் கேள்விப் புலத்திற்கு ஏற்ப பேச்சு, நமது செவிப்புலத்திற்கும், அகஎழுச்சியைத் தூண்டும் இயக்கமுறைகளுக்கும் ஏற்ப இசை உண்டானது என்கிறார். சுருக்கமாக நாம் இயற்கையில் இருக்கும் அமைப்பிற்கு தகுந்தாற் “போலச் செய்கிறோம்”.
2. மனிதன் 3.0 என்கிற அடுத்த கட்டத்திற்கான நகர்வு, மரபணு மாற்றம் அல்லது செயற்கை அறிவாற்றல் போன்று செயற்கையாகத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாக இருக்காது, இயற்கையை போத பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்வதாக இருக்கும். காரணம் இயற்கையில் நாம் இவ்விதம் பரிணமித்திருப்பதே ஆகச்சிறந்த வடிவத்தில், ஆற்றலுடன்தான்.
3. இப்போது நாம் நமது மூளை அல்லது மற்ற உறுப்புக்களை பரிணாமத்தில் அடிப்படையான அளவிற்கு மட்டுமே போதுமானவையாக உருவாகியிருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் அவை மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எந்தத் தொழில் நுட்பத்தாலும் (மரபணு, Artificial Intelligence) அடையக்கூடியதைவிட மிக அதிகமான கற்பனை செய்யமுடியாத சக்தி நம்மிடம் இப்பொழுதே இருக்கும் இயற்கையான அமைப்பில் இருந்து கிடைக்கும் – அதற்கு நாம் அந்த இயற்கை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (harnessing). ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும், அப்படி அடையப்பெறும் சக்தி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது.
அறிவியல் ஊகங்கள் – இன்று வரை கண்டுபிடிக்கபட்டவை, இதன் நீட்சியாகச் சாத்தியமானவை, பின்னர் அதன் மேலதிக கற்பனை என்று நம்பத்தகுந்ததாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தக் கட்டுரையாளர் செய்வது அடிப்படை அறிவியல் விளக்கங்களை வைத்துக்கொண்டு தாவும் பெரும் கற்பனைப் பாய்ச்சல். ஆனால் அதுதான் சாத்தியமும் கூட. புராணங்களில் வரும் கந்தருவர், யக்ஷர் போன்ற அதீத சக்தி படைத்த அடுத்த மானுட வடிவம் வரும் என்கிற உற்சாகம். தொட்டுக்கொள்ள இயற்கைத் தேர்வு, உயிரியல் தகவமைப்பு என்று கொஞ்சம் பரிணாமவியல். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் அவரது கூற்று தான் – “அளப்பரிய சக்தி கிடைக்கும், ஆனால் அது என்ன, எப்படி அடைவோம் என்று சொல்லமுடியாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சில வீடியோ கேம்கள், முப்பரிமாணக் காட்சி போன்றவை நாம் ஏற்கனவே நமது மூளையின் இயற்கை அமைப்பிற்கேற்ப அவற்றை முன்னேற்றுகிறோம் என்பது ஒரு அடையாளம்”.
*
தத்துவம் அறிவியல் சிந்தனைக்கு என்ன தூண்டுதல் தர முடியும் என்கிற கேள்விக்குப் பதிலாக ஜெயமோகனின் இந்த வரிகளைக் கூறலாம், “ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.”
“பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.” அருமை! ஒரு உயிரியல் ஆய்வு மாணவனாக என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய கருத்து இது. இதன்படி யோசித்தால் எதிர்கால மானுட ஞானம் என்பதே சூழலுடன் முரண்பட்டு/போரிட்டு பரிணமிக்காமல், ஒட்டுமொத்த உயிர்ச் சூழலுடன் ஒத்திசைந்து தன்னைத் தக்கவைக்கும் வழியைத் தேடுவதே அடுத்தகட்ட ஞானத் தேடலாக இருக்கலாம். அதற்கான நெருக்கத்தை மற்ற உயிர்களுடன் உருவாக்குவதே அடுத்த காலத்தின் அறிவியலாக இருக்கலாம். இன்னும் நிறைய சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது. நன்றி ஜெ.
மேலும், உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரினங்களை விட பலசெல்/கூட்டு உயிரினங்கள் பரிணாமத்தில் மேம்பட்டவை என்று கருதப்படுகிறது. சில சமயம் இதையே தலைகீழாகப் போட்டுப் பார்த்து யோசித்தால், ஒரு அறையை அடைத்துக்கொண்டு இருந்த பிரும்மாண்ட கம்ப்யூட்டர்களைவிட இன்று உள்ளங்கைக்குள் அடங்கும் கணினிகள் வளர்ச்சிப் ‘பரிணாமத்தில்’ மேம்பட்டவையாகக் கருதப்படுவது போல ஏன் பெரும், பல செல் உயிரினங்களை விட கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் நுண் உயிரிகள் பரிணாமத்தில் மேம்பட்டவையாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு செல் உயிரினங்கள் அவை அப்படி இருப்பதாலேயே பரிணமிக்கும் வேகம் மனிதனை (எல்லா பெரும் உயிரினங்களையும்) விட மிக மிக அதிகம். ஆகவேதான் தொடர்ந்து பெரிய பலசெல் உயிரினங்களுக்குச் சவால் விட்டுத் தாக்குப் பிடிக்க முடிகிறது (எச்.ஐ.வி. உட்பட பல நோய்க்கிருமிகளை உதாரணம் சொல்லலாம்).
மேலும் அவற்றின் இருத்தல் தனித்தனியானாலும், கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாகவே இயங்குவதால் இருத்தலுக்கான போட்டியில் வெற்றிகரமாக தனது சந்ததியைப் பெருக்கி மரபணுவைக் கடத்தி தன் இனத்தை நீடித்துக்கொள்கின்றது. எனவே ஜெ சொன்னது போல “பரிணாமம் சுழற்சி மூலமாக நிகழ்கிறதெனக் கொண்டால்” எதிர்கால மானுட ஞானம் இவ்வாறு மீண்டும் தனிச் செல்களாக உதிர்ந்து ஓரிடத்தில் கூடி வாழ்வதைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஒரு மாபெரும் வைரஸ் தொகை அந்த வைரஸின் உயிர்ப்பிரக்ஞையுடன் இருப்பது போல அப்பொழுதும் மானுட செல்கள் மானுடப் பிரக்ஞையுடன் இருக்கலாம். பரிணமிக்கும் வேகத்திலும் மற்ற ஒருசெல் உயிர்களுடன் போட்டியிட முடியும்.
இந்த மாதிரியெல்லாம் சிந்திப்பது எனக்கும் பிடிக்கும், எனது ஆய்வுத்துறைக்கும் இந்த ‘விபரீதக்’ கற்பனைகள் பலன் தரும். சில சமயம் ‘லூசுத்தனமாக’த் தோன்றினாலும், அறிவியல் ஊகத்தை யாரும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. எனவே இவற்றை கதைகளாக எழுதி வைத்துவிடுவேன். அங்கு கதாசிரியனின் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாதில்லையா? :))
சிந்தனைகளைக் கிளறி விடும் உரையாடல்களுக்கு மீண்டும் நன்றிகள் பல ஜெ.
-பிரகாஷ்