Tuesday, May 29, 2012

செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்


ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடு. மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறை தேர்வுகளினால் உலகளவில் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) குறைபாடு போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, வைட்டமின் C குறைபாடு, தொடர்ந்த மன அழுத்தம், அளவுக்கதிகமான உடற்பயிற்சி, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை பிரச்சனைகள் ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம். இவை முயன்றால் திருத்திக் கொள்ளக்கூடிய, நம் எல்லைக்குள் இருக்கும் காரணிகள்.
ஆனால், பூச்சிக்கொல்லிகள் போன்ற பல வேதிநச்சுக்கள், காரீயம், பெயிண்ட் போன்ற சிலவகை வண்ணப்பூச்சுகள், கதிர்வீச்சு, பாதரசம், போரான், பென்சீன் மற்றும் அடர் உலோகங்கள் எனப் பல காரணிகள் நாம் வாழும் சுற்றுச்சூழலுக்குள் பரவுவதன் மூலம் நமது ஆரோக்கியமான வாழ்க்கையில் மலட்டுத்தன்மை உட்பட பல நேரடி மற்றும் மறைமுக எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றின் கட்டுப்பாடு சாமானியர்களான நம் கையில் இல்லை. விளைவுகள் என்னவோ அனுபவித்தே தீரவேண்டியுள்ளது.


ஆண், பெண் மலட்டுத் தன்மையினால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை வெறும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல, முக்கியமான சமூகப் பிரச்சனையும் ஆகும். உலகம் முழுவதும் இதற்குத் தீர்வாக பாரம்பரியமாக செய்யப்பட்டு வந்தது குழந்தைகளைத் தத்தெடுத்தல். இரத்த உறவுகளிலோ, அல்லது நெருங்கிய சொந்தங்களிலோ ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது அல்லது அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து சொந்த வாரிசாக வளர்ப்பது. ஆனாலும் இதில் கருச்சுமந்து பிரசவித்தல் என்னும் தாய்மை நிறைவை அடைய முடியவில்லை என்னும் குறையை மானசீகமாக உணர்பவர்களும் உண்டு. நவீன மருத்துவ வளர்ச்சி இந்தக் குறைக்கு தீர்வாக செயற்கைக் கருவூட்டல் முறைகளைக் கண்டடைந்தது.
விந்தணு தானம், கருமுட்டை தானம், வாடகைத் தாய் போன்ற முன்னேறிய மருத்துவத் தொழிநுட்பங்களால் ஆண் மற்றும் பெண் மலட்டுத் தன்மைப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளின் குழந்தைப்பேறின்மைக் குறை தீர்க்கப்படுகிறது. இதில் முன்னரே கூறியதைப் போல ஆண் மலட்டுத் தன்மை உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே கருவடையச் செய்யும் தகுதியுள்ள ஆண் கொடையாளரிடமிருந்து விந்து தானம் பெற்று கருவடைந்து குழந்தைப்பேறு பெறும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
பொதுவாக விந்தணு வங்கிகள் (Sperm Banks), கொடையாளரிடமிருந்து விந்தணுக்களைப் பெற்று அவற்றை உறைபதனப்படுத்தி சேமித்து வைக்கும். மருத்துவமனைகள் தேவைக்கேற்ப அவற்றைப் பெற்று உபயோகப்படுத்திக் கொள்ளும். பெரிய மருத்துவமனைகள் அல்லது மகப்பேறுச் சிறப்பு மருத்துவனைகள் சொந்தமாகவே விந்தணு வங்கிகளை வைத்திருக்கும். தகுதியுள்ள கொடையாளரிடமிருந்து விந்தணுவைப் பெற்று சேமிக்கும் முன்பு அவரது உடல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். தொற்று நோய்கள், மரபணுக் கோளாறுகள் போன்றவை முக்கியமாகச் சோதிக்கப்பட வேண்டும்.
தொழிலாக நடத்தப்பெறும் இந்த விந்தணு வங்கிகளில் இந்தப் பரிசோதனைகள் முழுமையாக உரிய கவனத்துடன் நடத்தப்படுகின்றதா என்பது ஒரு மிகமுக்கியமான கேள்விக்குறி. இங்கு தான் இதுவரை பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாத ஒரு நடைமுறைப் பிரச்சனை சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு அமெரிக்க கள ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி ‘த நியூயார்க் டைம்ஸ்’ நாளேடுஒரு கட்டுரையை வெளியிட்டு,  பரவலான கவனத்தை இந்தப் பிரச்சினையை நோக்கி ஈர்த்துள்ளது.
நியூயார்க் டைம்ஸின் அந்தச் செய்தியின் படி, இரண்டாவது குழந்தைப் பேறுக்கு விரும்பிய ஒரு அமெரிக்க தம்பதி மருத்துவரின் ஆலோசனைப்படி செயற்கை விந்தூட்டலின் (Artificial Insemination) மூலம் கருத்தரிக்க முடிவு செய்தனர். பெண்ணுக்கு அமெரிக்காவின் பாஸ்டனிலுள்ள ஒரு விந்தணு வங்கியின் சேகரிப்பில் இருந்த, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு எந்தப்பிரச்சனையும் இல்லை என்று சான்றளிக்கப்பட்ட கொடையாளர் ஒருவரின் விந்தணுக்கள் மூலம் கருவூட்டப்பட்டது.

உரிய நேரத்தில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. மகிழ்ச்சியில் திளைத்த தம்பதிக்கு இடியாக வந்து இறங்கியது இன்னொரு செய்தி. குழந்தையின் குடல் அசைவில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையில் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் மரபணுப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு ‘சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis - இழைநார்ப் பெருக்க கட்டி) என்னும் மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


நுரையீரல், கல்லீரல், கணையம் மற்றும் குடலின் உட்பகுதியில் அளவுக்கு மீறி அடர்த்தியாக வளரும் இழைநார்கள்(fiber) மற்றும் கோழையால்(mucous layer) உண்டாகும் நோய் தான் ‘சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’. மூச்சுவிடுவதில் சிரமம், உணவு செரித்தலில் குறைபாடு, ஆண் மலட்டுத் தன்மை, நீரிழிவு என்று பல உடல்நலக் குறைபாடுகள் - சில சமயம் உயிருக்கு அபாயம் உண்டாக்கும் கடுமையான குறைபாடு. மனித மரபணுத் தொகுப்பின் ஏழாவது தொகுதியில் ஏற்படும் மரபணுக் குறைபாட்டால் வரும் இந்நோய் பரம்பரையாகக் கடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயின் மரபணுவை சோதித்ததில் நோய் தாக்காத ஆனால் நோய்தாங்கியாக (Carrier) அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. (சில மரபணுக்குறைகள் ஒடுங்கு பண்புகளாக இருக்கும், அதனால் ஒரு குரோமோசோமில் மட்டும் குறைபாடிருந்தால் அவருக்கு பாதிப்பு இருக்காது, அவரை மரபியலில் தாங்கி என்று குறிப்பிடுவார்கள்). சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் உண்டாவதற்கு ஒருவரின் இரண்டு குரோமோசோம்களும் (இங்கே குரோமோசோம் எண்-7) மரபணுக் கோளாறு கொண்டிருக்க வேண்டும். ஏதாவது ஒன்று இயல்பானதாக இருந்தாலும் நோய் வராது, அப்படியானால் விந்தணு தானம் செய்தவருக்கும் அந்த மரபணுக் கோளாறு இருக்க வேண்டும். சோதித்ததில் அதுவும் உறுதி செய்யப்பட்டது. அப்போது இந்நோயிருப்பதை அறிய உதவும் மிக அடிப்படையான, கட்டாயம் செய்யப்பட வேண்டிய மரபணு சோதனை எப்படி செய்யப்படாமல் விடுபட்டது என்ற கேள்வியும், விந்தணு தானத்தின் நம்பகத்தன்மையின் மேல் சந்தேகமும் எழுகிறது.
காதலித்து, திருமணம் செய்து கொண்டு, அன்பினால் தங்களது வாழ்க்கையின் ஒரு பாகமாகிவிட்ட ஒருவருடனான பந்தங்களிலும் இதே போல மரபணுக் குறைகளுள்ள குழந்தைகள் பிறக்க நேரலாம். ஆனால் முன்பின் தெரியாத, சிலசமயம் மருத்துவ அறிக்கையைத் தவிர எந்தத் தகவலும் அறியாத ஒருவருடைய விந்தணு அல்லது கருமுட்டையால் மரபணுக்கோளாறுடன் குழந்தை பிறப்பதை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?
இதே போன்ற மரபணு ரீதியிலான பிரச்சனைகளின் எல்லா சாத்தியக்கூறும் அப்படியே கருமுட்டையை தானம் செய்பவர்களிலும் உண்டு. ஆனால் விந்தணு தானத்தில் தான் மரபணுப் குறைபாடுகள் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் - விந்தணு தானத்தில் எத்தனை நூறு குழந்தைகளையும் உருவாக்க முடியும். பிழையடைந்த மரபணு  இயற்கையாக  மக்கள் தொகையில் பரவும் விகிதத்தை விட இது அதிகமான, விரைவான செயற்கைப் பரவலை உருவாக்கும். கருமுட்டை தானம் செய்து அல்லது கருவை வளர்க்கும் வாடகைத் தாய்களால் இத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்து, குறைபாடுள்ள மரபணுக்களைப் பரப்ப முடியாது. உதாரணமாக அமெரிக்காவில் ஒரு விந்தணுக் கொடையாளரின் விந்தணுக்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் வெள்ளையணு மற்றும் மூளைப் புற்று நோயை உருவாக்கும் மரபணுக் கோளாறுடன் பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல இருதய பாதிப்பு, மூளைக் கோளாறு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், புற்று நோய் என்று பல நோய்களுக்கான மரபணுக்கோளாறுகளுடன் பிறந்த -விந்தணு தானத்தில் உருவாக்கப்பட்ட பல ஆயிரம் குழந்தைகள் உண்டு. பலர் இள வயதிலேயே இறந்ததும் உண்டு. இங்கே இன்னொரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இவற்றில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து நோய் கண்டுபிடிக்கப்பட்ட போதே அதன் மரபணுப் பரிசோதனை செய்திருந்தாலோ, விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உடல் நலத்தை தொடர்ந்து கவனித்து ஆவணப்படுத்தி இருந்தாலோ அல்லது அதற்குக் காரணமான விந்தணுவை மறு பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தாலோ அந்தக் கொடையாளர்களின் விந்தணுவை அடுத்து வேறெவருக்கும் வழங்காமல் நிறுத்தியிருக்கலாம். இதன் மூலம் பிறக்கும் போதே மரபணுக் குறையுடன் பிஞ்சுக் குழந்தைகள் பூமிக்கு வர நேரும் பல கொடுமைகளைத் தவிர்த்திருக்க முடியும். இதைச் செய்யாத சம்பந்தப்பட்டவர்களின் அசிரத்தையினால் நாம் கற்றிருக்கும் பாடம் மிகுந்த வலிகளையும், இழப்புகளையும் உடையது.
இந்தியாவில் ஆண், பெண் மலட்டுத் தன்மை அச்சுறுத்தும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. மும்பையில் இயங்கி வரும் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் [International Institute of Population Sciences / IIPS) என்னும் கல்வி அமைப்பு,  2010 இல் வெளியிட்ட அறிக்கையில் 1981 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் முறையே 1991, 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் மலட்டுத்தன்மை பெருகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10 சதவிகித இந்திய இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், உற்பத்தி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்புகள் இருப்பதாகவும் அவை சொல்கின்றன. 16 சதவிகிதம் பெண்கள் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். 17% பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை அல்லது மணமுறிவு உண்டாகக் காரணம் குழந்தைப்பேறின்மை.[1] ஒன்பது கோடி இந்திய ஆண்களுக்கு ஆண்குறி விறைத்தல் கோளாறு இருக்கிறது. இதற்கான மருந்துகள் விற்பனையில் புழங்கும் பணம் மட்டும் தொண்ணூறு கோடி ரூபாய். 2000ல் வெறும் ஏழாயிரமாக இருந்த மலட்டுத் தன்மைச் சிகிச்சை/செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைச் சுழற்சிகள் 2010ல் நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையின் தீவிரமும், இந்தக் கட்டுரையின் நோக்கமும் தெளிவாகவே புரிய ஆரம்பித்திருக்கும்.
விந்தணு தானம் போன்ற செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைகள் அளிக்கும் மருத்துவமனைகள் இந்தியப் பெருநகரங்களில் முன்னெப்பொழுதையும் விட வேகமாகப் பெருகி வருகின்றன. விந்தணு வங்கிகள், குழந்தைபேறுக்கான மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனைகளின் தரம், விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளில் தொற்று நோய்கள் மற்றும் மரபணுக்கோளாறுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளைச் செய்வதில் அவற்றின் உண்மையான நடவடிக்கைகள், விந்தணு கொடையாளர்களின் தகவலட்டவனையை (Database) மேம்படுத்தி வைத்திருக்கும் விதம் போன்றவை தீவிரமாகக் கண்காணிக்கப் பட வேண்டும், நெறிப்படுத்தப்படவும் வேண்டும். இல்லையேல் பின்னாளில் இவை உண்டாக்கும் உயிரிழப்புகளுக்கும், மனவேதனைக்கும் அரசாங்கமோ அல்லது சம்பந்தபட்டவர்களோ பதில் சொல்லமுடியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.

பொதுவாக அடிப்படையான முன்னெச்சரிக்கை மருத்துவப் பரிசோதனைகள், முன்னேறிய தகவல் வலைப்பின்னல்கள் மற்றும் வெளிப்படையான தகவல் பரவல் போன்றவற்றில் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலேயே இத்தகைய பிரச்சனைகள் மிகத்தாமதமாக உணரப்பட்டன என்று தெரிகிற போது, இவற்றில் பல பத்தாண்டுகளாகவே அசிரத்தை மிக்கதாக அறியப்படும் நமது நாட்டின் நிலையை நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

அமெரிக்காவில் வெண்டி க்ரேமர் (Wendy Kramer) என்பவர் ஒரே விந்தணு அல்லது கருமுட்டைக் கொடையாளர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இணைக்கும் வகையில் ஒரு கொடையாளர்-சகோதரத்துவ (Donor Sibling Registry) இணையதளத்தை 2000இல் துவங்கினார். அது போல ஒன்று இந்தியாவிலும் துவங்கப்பெற்று நாடெங்கிலும் உள்ள விந்தணு வங்கிகள், மருத்துவமனைகள் வழியாக ஒரே கொடையார்களின் விந்தணுக்கள்/கருமுட்டைகள் மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இதனால் செயற்கைக் கருவூட்டல்களில் பிறந்த குழந்தைகள் வளரும் போது அவர்களின் மரபியல் ரீதியான ‘சகோதரர்களை’த் தொடர்பு கொள்ளவும், சட்ட ரீதியான உரிமைகள், சமூகம் சார்ந்த எதிர்கொள்ளல்கள் போன்றவற்றில் உதவியாகவும், தங்களது அடையாளத்தின் வேர்களைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கு வழிகாட்டியாகவும், யாருக்கேனும் மரபணுக் கோளாறுகளினால் நோய்கள் ஏற்பட்டால் அறிந்து கொண்டு உடனடியாக எச்சரித்து அந்த கொடையாளரின் விந்தணுவை இனிமேல் உபயோகிக்காமல் தடுக்கவும் உதவியாக இருக்கும்.
இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ந்து இவ்விஷயத்தில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பங்கு உண்மையில் நிறைய இருக்கிறது. ஆனால் இணையத்தில் இந்தியப் பத்திரிக்கைகளில் தகவல் தேடினால் இது போன்ற சமூகத்துக்கு பயன்படும் செய்திகளை விட, ’பிராமண விந்தணுக்களையே அதிகம் பேர் விரும்புகின்றனர், முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர்களின் விந்தணுக்களை விரும்புவதில்லை, சிவப்பான ஆண்களின் விந்தணுக்குத் தான் பெண்களிடம் கிராக்கி, அமிதாப் பச்சன் போன்ற உயரமான ஆண்களின் விந்தணுக்களையே விரும்புகின்றனர், ஐஐடி பட்டதாரிகளின் விந்தணுக்களுக்கு கோரிக்கை அதிகம், விந்தணு வங்கிகளின் ‘உற்பத்தி’ அறைகளில் கொடையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் நீலப்பட ஒளிக்கோப்புகள், நிர்வாண புகைப்படங்கள் மற்றும் இதர வசதிகளின் விவரணை’ போன்ற பரபரப்புணர்வையும், கிளர்ச்சியையும் தூண்ட எழுதப்படும்  விவரங்களும், வருணிப்புகளும் தான் காணக்கிடைக்கின்றன. இது போல மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, அழகு போன்றவற்றை அடிப்படையாக வைத்து விந்தணுக்களை தேர்ந்தெடுக்கும் வழக்கம் எல்லா நாடுகளிலும் இன்றும் உண்டு, இந்தியாவிற்கு மட்டுமான ‘கிறுக்குத்தனம்’ அல்ல. அப்படிச் சித்திரித்து, இந்தியரைத் தாழ்மையான மக்கள் என்று சித்திரித்து மகிழ்வதில் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு ஈடு ஏதுமில்லை.
1980ல் ராபர்ட் கிரஹாம் என்னும் அமெரிக்கர் விந்தணு தானத்தின் மூலம் மிகச்சிறந்த குழந்தைகளை உருவாக்க வேண்டி நோபல் பரிசு பெற்றவர்களின் விந்தணுக்களைச் சேகரித்து ஒரு விந்தணு வங்கியை உருவாக்கினார். ஆனால் பெரும்பாலும் நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் வயதானவர்களாக இருப்பதால் இவரின் திட்டத்திற்கு போதிய ‘ஆதரவு’ கிடைக்கவில்லை. இருந்தாலும் இருபத்தி ஒன்று அறிஞர்களின் விந்தணுக்களை அவரது வங்கியில் சேகரித்து வைத்திருந்தார். இதன் மூலம் 219 குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். பின்னர் அவர் இறந்ததும் 1999இல் அவரது விந்தணு வங்கி மூடப்பட்டது. இதே வகையிலான இன்னும் பல தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
எனவே இது போன்ற சுவாரஸியத் தகவல்களைக் ‘கண்டுபிடித்து’ கட்டுரைகள் எழுதுவதை விட விந்தணு வங்கிகள், செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் போன்றவற்றில் பரிசோதனை விதிமுறைகளைக் கடுமையாக்கி அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும், ஏற்கனவே அவ்வாறு பெறப்பட்ட குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பின்தொடர்ந்து கவனிக்கவும், தானம் பெறப்பட்ட மரபணுக்குறைபாடுள்ள விந்தணுக்களால் பிறந்து நோய்வாய்ப்பட்டு இறந்த - வெளித்தெரியாமல் போன சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளைச் செய்து அத்தகைய கொடையாளர்களின் விந்தணுக்களை வங்கிகளிலிருந்து நீக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அந்த விந்தணு வங்கிகள்/மருத்துவமனைகளை சட்டரீதியாக நிர்பந்திக்கவும், பொது மக்களுக்கு இதன் விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் வழிமுறைகளை மேற்கொள்ளவும் கோரி, இவற்றின் அவசியத்தையும், அவசரத்தையும் விளக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் போன்றவற்றை அழுத்தம் கொடுத்துச் செயல்பட வைக்க வேண்டும்.
யாருடைய அறியாமையாலோ, அசிரத்தையாலோ பிறக்கும் போதே மரபணுக் கோளாறுடன் பிறக்க நேரும் கொடுமையை உணரவைக்க வேண்டும். இந்தியாவின் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் கடமை இது.
——————————————————————————
குறிப்பு:
[1] உடலுக்கு வெளியில் செய்யப்படும் கருத்தரிப்பு சிகிட்சை (பெண்களின் கருமுட்டையை அவர்களின் மாத சுழற்சியின் போது பிரித்தெடுத்து, ஆய்வகத்தில் விந்தணுகளுடன் கருவடையச் செய்து பின்னர் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை -invitro fertilisation. artificial insemination அல்ல) க்காக சில பெண்களுக்கு அதிக கருமுட்டை உற்பத்தியை தூண்டுவதற்காக சில ஹார்மோன் ஊசிகள் கொடுக்கப்படும். இவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் அளவு சாதாரன அளவை விட பதிமூன்று மடங்கு அதிகமாகிறது. இளம் வயதில் இந்த்தகைய ஹார்மோன் ஊசி கொடுக்கப்படும் பெண்களுக்கு அடுத்து 16வருடங்களில் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

- பிரகாஷ் சங்கரன்.

நன்றி: சொல்வனம். (இதழ் 71 ல் வெளியானது) http://solvanam.com/?p=20907