Sunday, September 25, 2011

அந்திக் கவிதைகள்


இறுதிக் கூத்து

கருவுக்குள் கால் உதைத்து
தொடங்கியதென் ஆட்டம்

பின்னர் தொட்டிலில்
பருவத்தே கட்டிலில்
என் வெற்றிகளில்
அடுத்தவர் தோல்விகளில்
எதிர்த்தவன் தலைமீதெல்லாம்
மிதித்துக் கூத்தாட்டம்

கட்டித் தூக்கிவந்து
சுடலை நெருப்பிலிட
நான் நான் நான் 
என்று
எரிந்தபடி எழுந்தேன் ஆட

அடங்கின என் கால்கள்
வெட்டியானின் தடிக்கு.

------------------------------------------------

நீர்க்கடன்

முழுதும் நீராலானது 
என் கிரகம்

இருளாக
அமைதியாக
எப்போதும் உறக்கமாக 
என் கிரகம் 
எனக்கு மட்டுமாக...

ஏதோ விளிகேட்டு
எட்டி உதைத்ததில்

ஏகாந்தமும் 
அமைதியும்
உறக்கமும் தொலைத்து
கால்பங்கு நிலமுள்ள
கிரகத்தில் விழுந்தேன்

உச்சியில் வைரங்கள் மிதக்கும்
அந்தியில் பொன் உருகியோடும்
இந்த நதிக்கரையில்
காத்திருக்கிறேன்...

அஸ்தி கரைக்கப்பட்டு
என் நீர்க்கிரகம்
மீளும் நாளுக்கு.


- பிரகாஷ் சங்கரன்.

Friday, September 23, 2011

உள்ளுறங்கும் அரவம் (சிறுகதை)

அண்ணா வெள்ளைச் சட்டையை வெள்ளை அரைக்கால் டிரவுசருக்குள் விட்டு, சுருக்கங்களைக் கட்டைவிரல்களால் நீவி இடுப்பின் பக்கவாட்டில் ஒதுக்கினான். எண்ணை தேய்த்து அவனாகவே வகிடெடுத்து படிய வாரி, நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டான். கண்களை மூடி உள்ளங்கையை வாய்முன் குவித்து ஊதி விபூதி கண்ணில் விழாமல் சரி செய்தான். ‘அண்ணாவுக்கு எல்லாமே தெரியும்’ என்று நினைத்துக் கொண்டேன். “தலையை ஆட்டாதடா” அம்மா சீப்பால் தலையில் மெல்ல அடித்தாள். சினுங்கிக் கொண்டே நிமிர்ந்து அம்மா முகத்தைப் பார்த்தேன். இடது கையால் என் கண்ணங்களை பிடித்துக் கொண்டு, என் தலையில் தொலைத்த எதையோ தேடுவதைப் போல தீவிரமான பாவத்துடன் அம்மா எனக்கு வகிடெடுத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் கீழ்த்தாடையில் சிறிய கருப்புப் புள்ளியிலிருந்து ஒரே ஒரு முடிமட்டும் குட்டியாக நீண்டிருந்தது. “அம்மா உனக்கு தாடி மொளச்சிடுத்துமா” என்றேன். அம்மா பதிலே சொல்லவில்லை, இன்னும் தேடிக்கொண்டிருந்தாள். அம்மாவின் கழுத்திலிருந்த மஞ்சள் சரடை இழுத்து நீட்டி, தாலியை சுண்டி ‘விர்ர்ர்’ என்று சுற்ற வைத்து விளையாடினேன். அம்மா என் நெற்றியில் முத்தமிட்டு, “இனிமே இப்படி அசடாட்டமா விளையாடக் கூடாதுப்பா. பெரிய க்ளாஸ் போறியோல்லியோ, அண்ணா மாதிரி சமத்துன்னு பேர் வாங்கனும்” என்று சொல்லியபடி தாலிச் சரடை ஜாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டாள். “பகவானே என் புள்ளைக்கு நல்ல புத்தியக் கொடு” என்று முனுமுனுத்துக் கட்டை விரலால் என் நெற்றியில் விபூதியைத் தீற்றினாள். வாயை ‘ஆ..’ எனத் திறந்தேன், ஒரு துளி விபூதியைப் போட்டாள், வாசனையாக இருந்தது. “அம்மா சீக்கிரம்மா...” அண்ணா புத்தகப்பையுடன் தயாராக நின்றான், இடதுகையில் கர்ச்சீப்பை அவனாகவே அழகாக நான்காக மடித்து வைத்திருந்தான். “அண்ணா கையை கெட்டியாப் பிடிச்சுண்டு போகனும்ப்பா, அவன் கூட சண்டை போடக் கூடாது” அம்மா மறுபடி ஒரு முறை எனக்கு முத்தம் கொடுத்தாள், அண்ணாவின் தலை முதல் கண்ணங்கள் வரை தடவித் தன் தலையில் சொடக்கு விட்டுக் கொண்டாள். அண்ணா மறுபடியும் ஒரு முறை முடியை நீவி சரிப்படுத்தினான். தெருமுனை திரும்பும் வரை அண்ணா கையைப் பிடித்துக்கொண்டு சென்று, வளைவில் திரும்பியதும் கையை உதறிவிட்டு, ரோட்டில் கிடந்த தென்னங்குரும்பையை உதைத்துக் கொண்டே முன்னால் ஓடினேன். “டேய் எரும... ஓடாதடா... சாய்ங்காலம் ஆத்துக்கு வந்தா அப்பாகிட்ட சொல்லுவேன்” என்றபடி ஓடிவந்து சட்டைக்காலரைப் பிடித்து பின்னால் இழுத்தான். “நீ அடிச்சேனு நான் அம்மாகிட்ட சொல்லிக் கொடுப்பேனே” என்று சொல்லி முகத்தைக் கொணஷ்டை காட்டினேன்.

பள்ளிக்கூடத்துக்குள் இருந்த அரசமரத்தடி பிள்ளையாரிடம் என்னையும் நிறுத்தி கண் மூடி ஸ்லோகம் சொன்னான். பிள்ளையாரின் பீடத்தில் அகல் விளக்கு எண்ணை வழிந்து, அபிஷேகப் பாலும், நீரும், கருகிய ஊதுபத்தி சாம்பலும், விபூதி குங்குமமும் ஒன்றாகக் குழம்பிய செங்கருப்பு நிறக் களிம்பைத் தொட்டு என் நெற்றியில் இட்டு, தானும் இட்டுக்கொண்டான். மறுபடியும் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஏழாம் வகுப்புக்குள் நுழைந்தான். ஏற்கனவே சில பையன்கள் வந்து அவர்களுக்குப் பிடித்த வரிசையில் நல்ல மேசையை எடுத்துப் போட்டு, துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அண்ணா என்னை முதல் வரிசையில் இருந்த ஒரு மேசையை ஆடாமல் இருக்கிறதா என்று சரிபார்த்து உட்காரவைத்தான். கசங்கிய வெள்ளைச் சட்டையும், பெரிய தொடைகளுக்குப் பாதி கீழிறங்கிய வெள்ளை டவுசருமாக பாண்டி வந்தான். “என்ன பெரசாந்து...ப்ராசுக்கு எடம் போட வந்தியா?” கேட்டுவிட்டு கடைசி வரிசையின் ஜன்னலோர மூலையில் போய் தன் மஞ்சள் பையை வைத்தான். “பாண்டி... தம்பியப் பாத்துக்க” என்றான் அண்ணா.


“என்னய்யா.. பெரசாந்து, நீ சொல்லனுமாய்யா, நாம்பாத்துக்கிற மாட்டனா?” என்று சொல்லி உரிமையாக என் தோளில் கைபோட்டுக் கொண்டான் பாண்டி.

அண்ணா மெல்லச் சிரித்துவிட்டு, என்னிடம் “பிரேயர் முடிஞ்சவுடனே ஓடிடாத, நில்லு” என்றபடி வெளியேறினான். பாண்டியும் எங்கள் ஊர் தான். ஊரில் நிறைய பாண்டியன்கள் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் பட்டப்பெயர் தான் அடையாளம். இவன் ‘அல்டாப்பு பாண்டி’ – இவனுக்கு  எதுவுமே சாதாரணமாக நடக்காது. ஒரு முள் குத்தினால் கூட உள்ளங்கையின் அடியிலிருந்து பாம்பு விரல் நுணி வரை காட்டி, “இத்தாத்தண்டி முள்ளு பாத்துக்க... வேறெவனாச்சும் இருந்தாய்ங்கன்டா இந்நியாரம் சங்கு தான்... நா அப்படியே அசால்ட்டா எடுத்து எறிஞ்சுட்டு நடையக்கட்டிப் போய்க்கே இருந்தேன்..” என்று நிஜமாகவே சொல்வான். என் அண்ணாவுடன் ஏழாம் வகுப்புக்கு வந்தான். அந்த வருடம் பெயிலானான். அடுத்தவருடமும் பெயிலாகி இப்போது என்னுடன் எழாவதில் இருக்கிறான். அண்ணா ஒன்பதாம் வகுப்பு போகிறான். அவனுக்குப் போட்டியே இல்லை, முதல் வரிசையில் முதல் இடம் எப்பவும் அவனுக்குத் தான். அண்ணா தான் பிரேயரில் நின்று ‘ஸ்டேண்டட்டீஸ், அட்டென்ஷன்’, உறுதிமொழி எல்லாம் சொல்வான். எல்லா வாத்தியாரும் அவனிடம் நன்றாகப் பேசுவார்கள். எல்லாரையும் பட்டப்பேர் வைத்துக் கூப்பிடும் ‘நசுக்கர்’ கூட அவனைப் பேர் சொல்லி ‘வாய்யா..’ என்று தான் கூப்பிடுவார். என் பெயர் கூட யாருக்கும் உடனடியாக ஞாபகத்திற்கு வராது. ‘பிரசாந்த் தம்பி’ என்ற பெயரில் தான் ஆறாம் வகுப்பு முழுவதையும் ஓட்டினேன்.

பிரேயர் முடிந்த பின் அண்ணா வந்தான், ‘அதுக்குள்ள சட்டைய அழுக்காக்கிட்டியா?’ என்று தலையில் மெதுவாக குட்டி, பிறழ்ந்திருந்த என் சட்டைக் காலரைச் சரிசெய்து, “வடிவேல் சாருக்கு பாண்டியக் கண்டாலே பிடிக்காது. கிளாஸ்ல அவன் கூட ரொம்ப சேராத. சாயங்காலம் ஸ்கூல் விட்டவுடனே என் கிளாசுக்கு வந்துடு. நீயா தனியா போகாத” கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துவிட்டான்.

பாண்டியை வடிவேல் சார் தான் ‘வம்ம வச்சு’ ரெண்டு வருஷமாகத் தொடர்ந்து பெயிலாக்கி விட்டார் என்று பையன்கள் பேசிக்கொள்வார்கள். வட்டிக்கு பணம் விடுவதால் 'வட்டி'வேல் என்ற பட்டப்பெயர் அவருக்கு இருந்தது. பாண்டி ஏழாம்வகுப்பு வந்த புதிதில் ஸ்டாப்ரூமிலும், வகுப்பிலும் ஒரே குசுவின் நாற்றம் அடிப்பதைக் மோப்பம்பிடித்து, வடிவேல் சார் தான் சத்தமில்லாமல் குசுவை நசுக்கி விடுகிறார் என்று ‘கண்டுபிடித்து’ அவருக்கு ‘நசுக்கர்’ என்று பட்டப்பெயர் வைத்தான். முதலில் ஏழாம் வகுப்புக்குள் மட்டும் புழங்கிய பெயர் மெல்ல பெரியவகுப்பு பையன்களிடம் கசிந்து, யாரோ ஒருவன் கக்கூஸில் கரித்துண்டால் எழுதிவைக்க பள்ளி முழுவதும் தெரிந்து ஆசிரியர்களிடத்திலும், வெளியே ஊருக்குள்ளும் வேகமாகப் பரவி விட்டது. கொஞ்ச நாளில் ‘வாங்க நசுக்கரே’ என்று மக்கள் சகஜமாகக் கூப்பிடும் அளவுக்கு அதுவே அவரது பெயராகிவிட்டது. ஒருமுறை கார்த்திகை மாதம் அவர் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த போது, அன்னதானத்திற்காக நன்கொடை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த ஐயப்ப பக்த சபைக்காரர், பெயர் சட்டென்று ஞாபகத்திற்கு வராமல் மைக்கில்,  “பெருமதிப்பிற்குரிய ஆசிரியர், ஐயப்ப பக்தர், உயர்திரு நசுக்கர் சாமிக்கு பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் அருள்திரு ஐயப்பன் எல்லா நலன்களையும் அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்” என்று சொல்ல வடிவேல் சார் கோபித்துக் கொண்டு புளியோதரை தொன்னையை முகத்தில் வீசி எறிந்துவிட்டு வந்தார். பட்டப்பெயர் பரவ ஆரம்பித்த காலத்தில் பாண்டி, ‘வாசத்த வச்சு நாந்தான் கண்டுபிடிச்சேன்!’ என்று பெருமையாகக் கூற அதுவும் சேர்ந்தே பரவி விட்டது. அதுமுதல் பாண்டி வடிவேல் சாரின் எதிரியானான். வடிவேல் சாரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதும், கிடைக்காத போதுமெல்லாம் அவனை அடி வெளுப்பார். பாண்டி நக்கலாக, “அடிச்சாக் கூட பரவால்ல.. அந்தாள குசுவப் போடாம இருக்கச் சொல்லுங்கய்யா...” என்று அவர் அடியை மதித்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டான்.

பாண்டி வீட்டில் நான்கு பசுமாடும், இரண்டு எருமைகளும் வளர்க்கிறார்கள். அவன் அம்மா எங்கள் வீட்டிற்கு நெய் விற்க வருவாள். நானும் அண்ணாவும் வீட்டிற்குள் நுழையும் போது பாண்டி அம்மா எங்கள் திண்ணையில் ஸ்டவ் அடுப்பைத் துடைத்து, திரியை சரிசெய்து கொண்டிருந்தாள். அண்ணா நேரே உள்ளே போனான். நான் திண்ணையில் பையைத் தூக்கி எறிந்துவிட்டு அவள் முன்னால் வேடிக்கை பார்க்க உட்கார்ந்தேன். “என் சமத்து எப்போ ஸ்கூல் விட்டு ஆத்துக்கு வந்தது?” என்ற சத்தம் கேட்டதும் ஓடிப்போய் அம்மா வயிற்றை தலையால் முட்டிக் கைகளால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு, “அம்மா எனக்கு ஸ்கூல் லீவ் விட்டுட்டாளே.. இனிமே நாளைக்கு கார்த்தால தான் தொறப்பா...” என்று சந்தோஷமாகச் சொன்னேன். “கண்டுக்குட்டி மாதிரி வகுத்த முட்டுறதப் பாருங்களேன்..” பாண்டி அம்மா சிரித்தாள். என் அம்மாவிடம், “பாண்டி நம்ம குட்டிசாமி கூடத் தாம்மா படிக்கிறயான். இந்த வருசமும் பெயிலானாண்டாக்கும் பெறகு மாடுமேக்கத்தான் விடனும்” சொல்லிக்கொண்டே அடுப்பைப் பற்ற வைத்து, இலுப்பைச்சட்டியை ஏற்றினாள். தூக்கிலிருந்து வெண்ணையைக் கரண்டியால் எடுத்து சூடான சட்டியில் மெல்ல உதறி விழவைத்தாள். வெண்ணை சட்டியின் விளிம்பிலிருந்து வளைவான உள்பகுதி வழியாக சூட்டில் உருகி வழுக்கிக் கொண்டு மையத்தில் போய்ச் சேர்ந்தது. ஐஸ் கரைவது போல கண் முன் மெல்ல கரைந்து வெள்ளை நிறமாக நுரைத்துக் கொண்டது. முதலில் மெலிதாக ஒரு புளித்த வாடை வந்தது. அம்மா எதிரில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு மங்கையர் மலரை வாசிக்க ஆரம்பித்தாள். நான் அம்மாவின் மடியில் உட்கார்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டேன். “குட்டிசாமி பாண்டியப் பாத்துக்கிடனும். பாடம்லா புரியலேண்டா சொல்லிக்கொடுத்து பாஸாக வைங்க. எதுனா திமிருத்தனம் பண்ணாண்டாக்கும் ஏங்கிட்ட சொல்லுங்க. சரியா..?” என்று பாம்படம் காதில் ஆட தலையை அசைத்துக் கேட்டாள்.


“நீவேற லட்சுமி, நானே இவனுக்கு நல்ல புத்திவரனும்னு வேண்டாத தெய்வம் பாக்கி இல்ல. சவலைக் குழந்தையாட்டமாவே இருக்கான். இன்னும் ஆய்ப்போனா தானா அலம்பிக்கத் தெரியாது. இந்த லட்சனத்துல பாண்டிய இவன் பாத்துக்கப் போறானா?” என் தலை முடியைக் விரலால் அளைந்து, செல்லமாகக் குட்டினாள். நான் “அம்ம்மா....” என்று சினுங்கி வெட்கத்தால் அம்மாவின் புடவைத் தலைப்பை இழுத்து முகத்தை மூடிக்கொண்டேன்.

“அடுத்த வருஷம் பாண்டிக்கு மேய்க்கிறதுக்கு நாலு டெல்லி எருமை மாடு. இந்தக் கண்ணுக்குட்டிக்கு பூணூலப் போட்டு, குடுமி வச்சு கொண்டு போய் மகாதானபுரம் பாடசாலைல சேர்த்துவிடப்போறது. அவா அப்பா சொல்லிட்டார்..”


கோபமும் ஆத்திரமும் வர அம்மா கையைக் கடித்தேன். திரும்பி அம்மா மார்பில் முகம் புதைத்து, கழுத்தைக் கட்டிக்கொண்டேன். எனக்கு அழுகையாக வந்தது. அழுதேன். சத்தமே வெளியில் வரவில்லை. கேவிக் கேவி இழுத்தேன். தொண்டைக்குள் சவ்வு மிட்டாய் மாட்டிகொண்டது மாதிரி எதுவோ அடைத்தது.

பாண்டி அம்மா, “என் ராசா.. அளுவக் கூடாது. என் சாமில்ல.. அம்மா சும்மா சொல்றாங்க. சாமிய விட்டுட்டு அம்மாண்டால இருக்க முடியுமா?. ஏம்மா... சின்ன உசுற என்னத்தனாச்சும் சொல்லி பயமுறுத்துறீங்க? பாவம், எப்புடி ஏங்கிப் போயிருச்சு பாருங்க” என்றாள். “நீங்க இப்படி அளுதீங்கண்டா பெறகு யாரு சாமி பாண்டியப் பாத்துக்கிருவாங்க? கண்ணத் தொடய்ங்க.. யாத்தே ஆம்பளப் புள்ள அளுகலாமா?”


நான் அம்மா மடியிலிருந்து கண்ணைத் துடைத்துக் கொண்டே திரும்பி, “பாண்டிய நான் பாத்துப்பேன்” என்றேன். எனக்குப் பெருமையாக இருந்தது. இனிமேல் அண்ணா என்னைச் செய்வதையெல்லாம் நான் பாண்டியை செய்யலாம். எதிர்த்துப் பேசினால் மண்டையில் கொட்டலாம்.

“பெரியவனப் பத்திக் கவலையே இல்ல லட்சுமி. இவனை விடக் கொழந்தையா இருக்கறச்சேலேர்ந்தே அவன் படு சமத்து. தன் வேலையை தானே பாத்துப்பான். படிப்பு, வெளில வாசல்ல தனியா போறது, நாலு பேருகிட்ட பழகறது எல்லாத்திலயும் கெட்டிக்காரன். இவன் இத்தனை வயசாகியும் இன்னும் அரைச் சமத்தாவேன்னா இருக்கான். லோகம் போற போக்குல இப்படியே இருந்தான்னா பொழைக்க முடியுமா?”

“அம்மா நா இன்னக்கிச் சொல்றேம்மா... நீங்க வேணாலும் பாருங்க... குட்டிச்சாமி படுவெவரமான ஆளாவாரு. பெரியவரு... அவரு ஒரு மாதிரி. படிப்பு, வேலை வெட்டி, வீடுண்டு பொத்துனாப்புல இருப்பாரு. நம்ம சிறுசு ஊரு ஒலகத்தையே வித்துப் புடுவாரு. அம்மா முந்தானயவே புடிச்சுக்கிட்டு சுத்துற ஆம்பளப் பிள்ளைகயெல்லாம் பின்னாடி எப்படியாக்கொந்த ஆளாவாங்கண்டு தெரியாதா? கவலயவிடுங்க”. வெண்ணை உருகி மெல்லிய வெள்ளை நுரைக்குள் மஞ்சள் நிற திரவமாக இருந்தது. பாண்டி அம்மா விடாமல் மெதுவாக கரண்டியால் துளாவிக்கொண்டே இருந்தாள்.

அம்மா அமைதியாக என் முகத்தையே உற்றுப் பார்த்தாள். நான் பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டேன். அப்படிப் பார்த்தால், அழுகை வடிந்திருந்த கன்னத்தைத் தடவித் துடைத்து முத்தம் கொடுப்பாள் என்று தெரியும். அம்மா இழுத்து மூச்சு விட்டாள். என்னை இறக்கி கீழே விட்டு, “போறும், அம்மாக்கு மடி வலிக்கிறது. கீழ உட்காரு. இல்லேனா கைகால் அலம்பி, நெத்திக்கிட்டுண்டு அண்ணா கூட உட்கார்ந்து படி. போ” என்றாள். எனக்கு மறுபடியும் அழுகை வந்தது. பாண்டி அம்மா ஏதோ என்னைப் பற்றி சொல்லிவிட்டாள், அதனால் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்ட்து. முத்தம் கூட கொடுக்கவில்லை, மடியிலிருந்தும் இறக்கி விட்டுவிட்டாள். நாளைக்கு பாண்டியை நசுக்கரிடம் ஏதாவது சொல்லி மூட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நெய் காய்ச்சும் இலுப்பைச் சட்டியை எந்திரிக்கும் போது தட்டிவிட்டுவிட வேண்டும்.

மஞ்சள் நிறம் மாறி, நுரை குறைந்து நெய் தெளிவாக நல்லெண்ணை நிறத்துக்கு வந்தது. வாசனை மூக்கை நிரப்பி உள்ளே சென்று வயிற்றை அடைத்தது. இலுப்பைச்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி தெளிவான நெய்யை உழக்கால் அளந்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றினாள். சட்டியின் அடியில் கொஞ்சம் நெய்யுடன் இருந்த கசண்டில் கையோடு கொண்டு வந்திருந்த முருங்கை இலையை உருவிப் போட்டாள். சிட்சிட்டென்று பச்சை இலைகள் முருகி அடர் கரும்பச்சை நிறமாகியது. இப்போது வேறொரு வாசனை வந்தது. கரண்டியால் சுரண்டி ஒரு சிறிய தட்டில் போட்டுத் தந்தாள். சூடாக இருந்தது. சட்டையின் கீழ்பகுதியை மடித்து தட்டின் விளிம்பைப் பற்றித் தூக்கிக்கொண்டு சந்தோஷமாக ஓடினேன். பின்னால் அம்மா, “அண்ணாவுக்கும் கொடுத்துட்டு சாப்பிடுடா...” என்று சொல்வது கேட்டது.
***

அன்று மதியம் அண்ணாவுடன் இருந்து சப்பிட்டுவிட்டு என் வகுப்புக்குள் நுழைந்தேன். கருவாயன் மட்டும் தனியாக எதையோ நோண்டிக்கொண்டிருந்தான். அவனுக்கும் பெயர் பாண்டியன் தான், ஆனால் ‘அல்டாப்பு’ பாண்டி இருப்பதனால் யாரும் அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள். கருவாயன் தான். என்னைப் பாத்ததும், “அல்டாப்பு, ஆசாரி கெனத்துப்பக்கம் நவ்வாப்பளம் உலுக்கப் போயிருக்காப்ல. நீ வந்தீண்டா உன்னையும் கூட்டியாரச் சொன்னாப்ல.. நீ வாறியாடா?..” என்று கேட்டான். அவனுடன் ஆசாரி கிணற்றுக்கு சென்ற போது, பாண்டி மரத்தின் மேலே ஒரு கிளையைக் கைகளால் பிடித்துக்கொண்டு நின்றிருந்த இன்னொரு கிளையை மெல்ல கால்களால் உலுக்கினான். கீழே மற்ற பையன்கள் தாங்கள் போட்டிருந்த சட்டையைக் கழற்றி நவ்வாப்பழம் மண்ணில் விழாமல் ஏந்திக்கொண்டனர். மேலே இருந்த படியே பாண்டி கத்தினான், “ப்ராசு... நீ அங்கிட்டு ஓரமா உட்காருய்யா... பெரசாந்துக்கு தெரிஞ்சா கோவிப்பாப்ல”.


நான் தள்ளி மோட்டார் ரூமின் படியில் நிழல் பார்த்து அமர்ந்து கொண்டேன். பாண்டி இறங்கி வந்ததும் எல்லா பையன்களும் தாங்கள் பொறுக்கிய பழங்களில் கொஞ்சத்தை அவனிடம் கொடுத்தார்கள். சத்துணவு சாப்பிட கொண்டு வரும் தட்டு நிறைய சேர்ந்தது. “ப்ராசு..எடுத்துக்கைய்யா” என்றான். என் டிபன் பாக்ஸ் கொள்ளும் அளவு நிரப்பிக்கொண்டேன். கருவாயனுக்குக் கொஞ்சம் கொடுத்தான். தட்டில் மீதி இருந்த கொஞ்சத்தை ஒவ்வொன்றாக நாங்கள் மூவரும் தின்று கொண்டே வகுப்பிற்கு வந்தோம்.


பாண்டி “மொத பீரியடு யாரு?” என்று கேட்டான்.

“தமிழ்.. வடிவேல் சார்..”

“நசுக்கரு என்னத்தயாச்சும் சினிமாப் பாட்டப் பாடி, ‘நல்லாருக்காடா?’ண்டு இம்சயக் கூட்டுவாப்ல. நா சும்மா இல்லாம ஏள்ரையக் கெளப்புவேன். நீங்க போங்க. நா மூக்கையா கடையில இருப்பேன். சாயந்திரம் அங்க வந்துருங்க” என்று விட்டு கையைத் துடைத்துக் கொண்டே பத்தடி நடந்து பின் திரும்பி, “டேய் கருவாயா என் பைய மறக்காம எடுத்துட்டு வந்துரு. ப்ராசு கிட்டருந்து நவ்வாப்பளத்தைப் பிடுங்கினீண்டு தெரிஞ்சுச்சு... செத்தடி மவனே” பதிலுக்கு நிற்காமல் போய்விட்டான்.

சாயந்திரம் பள்ளி விட்டதும் பி.டி. ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டேன். வெளியே கிரவுண்டில் அண்ணா என்னைக் காத்து நிற்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். சற்று நேரம் இங்குமங்கும் திரும்பி பதைபதைப்புடன் தேடுவது தெரிந்தது. அப்புறம் வேகவேகமாக கேட்டை நோக்கி ஓடினான். சிறிது இடைவெளி விட்டு நான் மெல்ல நடந்து வந்தேன். ஸ்கூல் கேட்டிற்கு அருகில் மூக்கையா கடையில் பாண்டியைச் சுற்றி கருவாயனும் இன்னும் சில பெரிய பையன்களும் வாயைப் பிளந்து அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கையை நெஞ்சிலிருந்து பக்கவாட்டில் விரித்து, ஏற்ற இறக்கமாக ஏதோ சொல்லிகொண்டிருந்தான். நான் கடைக்குள் நுழைந்ததும் பாண்டி சட்டென்று திரும்பிக் கொண்டான். அவன் தலைக்கு அந்தப்பக்கம் புகை எழுந்து மேலே போனது. காலால் எதையோ தரையில் தேய்த்தான். வாய் முன் கையால் விசிறிக் கொண்டே என்னைப் பார்த்துத் திரும்பிச் சிரித்தான். “என்னையா ப்ராசு... இவ்வளவு நேரம் எங்க போன? பாவம் பெரசாந்து ஒன்னைய ராவிக்கிருந்தாப்ல.. இங்கனயும் அங்கனயுமா ஓடி, ஒன்னையக் காணாம பளயபடி ஸ்கூலுக்குப் போயிருக்காப்ல. நீ ஒக்காரு” என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “யேய்..சின்னையா.. ரெண்டு சூசப் போடப்பா, ஐஸ நல்லா செளும்பாப் போடு” என்று சொல்லிவிட்டு திரும்பி மற்றவர்களிடம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், “நைட்டு வயக்காட்டுல தண்ணியப் பாச்சிட்டு, மோட்டார் ரூம்புல படுக்கலாம்டு போறேன்...” மறுபடியும் இரண்டு கையையும் நெஞ்சிலிருந்து பக்கவாட்டில் விரித்துநீட்டி, “இத்தாத்தண்டி பாத்துக்க.. சரியான சைசு.. குண்டு பல்பு வெளிச்சத்துல சும்மா பளபளண்டு, மூணடி உயரத்துக்கு எந்திரிச்சு படத்த விரிச்சுக்கிட்டு நிக்கிது. புஸ்ஸுபுஸ்ஸுன்னு பேய்க்காத்து மாதிரி சத்தம். எனக்குன்னா ஒரு நிமிசம் ஈரக்கொல நடுங்கிருச்சு. உள்ள வச்ச கால சூதானமா அப்புடியே எடுத்து, பைய ரெண்டடி பின்னால போயிட்டேன். அப்புடியே ஆடாம அசங்காம நிண்டு என்னயப் படம் எடுக்குது பாத்துக்க. மருதவீரா, மடப்புரம் காளி எதுனா குத்தம் கொறைண்டா மன்னிச்சு விட்றுன்னு சொல்லிகிட்டே இருந்தேன். கொஞ்ச நேரஞ்செண்டு பைய்ய ஊர்ந்து அப்படியே வெளியேறி வாவரக்காச்சி மரத்தச் சுத்தி, நேரா நம்ம ஒச்சாத்தேவரு வயக்காட்டுப் பக்கமா போயிருச்சு. வெள்ளிக் கெளமடா... எவனாச்சும் கிட்ட போக முடியுமா? போட்டுச்சுன்னா சீன் சிந்தாபாத்து தான். நால்லாம் இது மாதிரி எம்புட்டு பாத்துருக்கேன். அந்நேரம் நம்ம கருவாயன் இருந்திருந்தான்னா அங்கனக்குள்ளாறயே பேண்டுருப்பியான்!” சொன்னதும் உறைந்து போய்க் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சட்டென்று சிரித்தார்கள். கருவாயன் சற்று சங்கடமாக நெளிந்து பின் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஜூஸ் வந்தது. பாண்டி வாங்கி ஒன்றை எனக்குக் கொடுத்தான். குடித்துக் கொண்டிருக்கும் போதே அண்ணா வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான். பின்னால் ஒரு கையை முறுக்கிக் கொண்டு தலையில் ‘நங்’கென்று கொட்டினான். அதிர்ச்சியில் குளிர்ந்த ஜூஸ் புரையேறி மூக்கு வழியாக கொட்டியது. சுடுமணல் நுழைந்தது போல எரிந்தது. பொறுக்கமுடியாமல் வாய் திறந்து ஓவென கத்தி அழுதேன். வாயிலிருந்து ஜூஸ் சட்டையில் வழிந்து நெஞ்சில் குளுமையாக விழுந்து அடிவயிற்றுக்குக் கீழே மெல்லிய சூடாக இறங்கியது.

“எங்கடா போன அடங்காத நாயே... எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? எங்கெங்கெல்லாம் தேடி ஓடினேன் தெரியுமா? நான் இல்லாம தனியா போகக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காளா இல்லையாடா எரும மாடே? இன்னிக்கு ஆத்துக்கு வா. அப்பாகிட்ட சொல்றேனா இல்லயா பாரு.  விசிறிக்காம்பால நன்னா சாத்து வாங்கினா தான் உனக்கு புத்தி வரும்” மறுபடியும் குட்ட கையை ஓங்கினான். பாண்டி ஓடி வந்து என்னைப் பிடித்து இழுத்து, “பெரசாந்து விடுய்யா... பாவம் தெரியாம பண்ணியிருப்பாப்ல...” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாண்டி கையைக் கடித்து அவனிடமிருந்து விடுபட்டு அண்ணா மேல் முட்டிக் கீழே தள்ளி அவன் தொடையைக் கடித்தேன். அண்ணா வலியால் அலறினான். பாண்டி ஓடி வந்து மறுபடியும் என்னைத் தூக்கினான், “இறக்கி விடுடா அல்டாப்பு நாயே” என்று அழுகையினூடே கத்தினேன். அண்ணா என் முகத்தில் குத்தி மரியாத இல்லாம பேசதடா, அவன் உன்னை விட எவளவு பெரியவன் தெரியுமா?” என்றான். பாண்டி சமாதானப்படுத்தினான், “ப்ராசு பாவம்யா..அப்புராணிப் புள்ள. நம்ம தம்பி தான... விடப்பா யேய்.. பெரசாந்து” என்றான். “இல்ல பாண்டி, எல்லாம் டூப்பு..சும்மா நடிக்கிறான் கடிநாய்” என்றபடி அண்ணா சட்டையை நீவி, தலையைச் சரி செய்து கொண்டான். பாண்டி என் பையை எடுத்துக்கொண்டான். எல்லாரும் அமைதியாக ஊரை நோக்கி நடந்தோம். அழுகையை நிறுத்தாமல் இருந்தால் அண்ணா பயந்து அடிக்காமல் இருப்பான், அம்மாவிடமும் அழுது கொண்டே சொன்னால் தான் நம்புவாள். கேவிக்கேவிக் விசும்பிக்கொண்டே கூட நடந்தேன்.

வீட்டுக்குப் போகும் வரை அண்ணா என் கையைப் பிடித்துக் கொண்டு, ஒன்றுமே பேசாமல் வந்தான். அதுவே எனக்கு பயமாக இருந்தது. அண்ணாவைக் கடித்ததில் அவன் தொடையில் வட்டமாகப் பல் பதிந்து தடித்துச் சிவந்திருந்தது. ‘அண்ணா அப்பாவிடம் கட்டாயம் சொல்லிக் கொடுப்பான், அவ்வளவுதான் செத்தேன், அம்மாவால் ஒன்றுமே செய்ய முடியாது’ என்று நினைத்துக் கொண்டே வந்தேன். வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல சமையற்கட்டிற்கு போய் அம்மாவைக் கட்டிக் கொஞ்சாமல், டிபன் பாக்ஸை கழுவப்போடப் போவது போல கொல்லைப்புறக் கதவைத் திறந்து தென்னந்தோப்பின் வழியாக வாய்க்கால் கரையை அடைந்தேன். டிபன் பாக்ஸில் இருந்து நவ்வாப்பழத்தை ஒவ்வொன்றாக எடுத்துத் தின்றேன். வலது கை விரல் நுணிகள் கருநீலக் கறை படிந்திருந்தது. இடதுகண்ணை மூடி நாக்கை நன்றாக வெளியில் நீட்டி வலது கண்ணைத் தாழ்த்தி நாக்கைப் பார்த்தேன். என் நாக்கு மாதிரியே இல்லை. கருநீல நிறத்தில் வேறு எதுவோ போல இருந்தது. நாக்கை நாலைந்து முறை வேகமாக உள்ளே இழுத்து வெளியே நீட்டினேன். பயமாக இருந்தது. அப்படிச் செய்வதை உடனே நிறுத்தினேன். கொஞ்ச நேரம் பேசாமல் அமர்ந்திருந்தேன். வாய்க்கால் கரையில் சில பெண்கள் குளித்து, துவைத்த துணிகளுடன், தலையில் துண்டை போர்த்தி, முடியுடன் சேர்த்து கொண்டை போல கட்டிக்கொண்டு, கட்டியிருந்த ஈரப் பாவாடையிலிருந்து நீர் சொட்ட மஞ்சள் முகங்களுடன் என்னைக் கவணிக்காமல் கடந்து போனார்கள். ஒரு அக்கா மட்டும், “பிரசாந்த் தம்பி தானே? ஏன் இங்க தனியா உட்கார்ந்திருக்க?” என்றாள். எரிச்சலாக இருந்தது. பதில் சொல்லாமல் எழுந்து நடந்து எதிர் திசையில் சென்றேன். வாய்க்காலின் மறுகரையில் கீழே இறங்கினால் மறுபடியும் கரையோரமாக நீண்டு செல்லும் தென்னந்தோப்பு, அதற்கப்புறம் அகண்ட வைகை ஆறு. மணல் வெளியில் ஆறு சிறு சிறு ஓடைகளாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. ஆழமில்லாத பகுதி வழியாக இறங்கி நடந்து நடுவே இருந்த மணல் பரப்பில் உட்கார்ந்து கொண்டேன். உச்சந்தலையில் வலிப்பது போல இருந்தது. கண் மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. மணல் இளஞ்சூடாக வெதுவெதுப்பாக இருந்தது. அப்படியே மல்லாந்து படுத்தேன், உடம்பிற்கு ஒத்தடம் கொடுப்பது போல இதமாக இருந்தது. என்னையறியாமல் கண்களை மூடிக்கொண்டேன். திடீரென்று பழகிய குரல் கேட்டு விழித்தேன். பாண்டியும் கருவாயனும் நின்றிருந்தார்கள். பாண்டி பதற்றமாக, “என்ன ப்ராசு..தனியாவா வந்த? என்னாச்சுய்யா? கருவாயன வீடுவரைக்கும் கூடவந்து விடச்சொல்லவா?” என்றான். “ஒன்னுமில்ல பாண்டி.. சும்மா தான் கண்ணமூடிண்டிருந்தேன். ஆத்துல அம்மாட்ட விளையாடப்போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்” என்றபடி எழுந்து நின்றேன்.

பாண்டி கட்டம் போட்ட கைலி கட்டியிருந்தான். கையில் நீண்ட ஒல்லியான இரும்புக் கம்பியும், ஒரு பையும் வைத்திருந்தான். கருவாயன் கையில் ரெண்டடி நீளமுள்ள பிய்ந்த சைக்கிள் டயரும், சில பச்சை தென்னை ஓலைகளும் வைத்திருந்தான். ஒன்றும் புரியாமல், “நீ என்ன இங்க?” என்றேன்.

கருவாயன் கிண்டலாக, “மாமி நாங்கோ அய்யரு ஆத்துல மீன் பிடிக்க வந்துருக்கோம்” என்றான். பாண்டி, “கருவாயா நீ இன்னைக்கு அடிவாங்கிச் சாகப் போற” என்றபடி கையிலிருந்த கம்பியின் ஒரு நுணியை உள்ளங்கையைச் சுற்றி வளைத்து கைப்பிடி மாதிரி இறுக்கிப் பிடித்துக் கொண்டான். “ப்ராசு.. நீயும் மீன் பிடிக்க வர்றியா?” என்று கேட்டான்.

கால்பரிட்சை லீவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்த, மெட்ராஸில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கும் என் அத்தை பையன் அநிருத்தன், பாண்டி என்னை ‘ப்ராசு’ என்று கூப்பிடுவதைப் போலவே அவனும் வேண்டுமென்றே திரும்பத் திரும்பக் சொல்லிக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான். ஊருக்குப் போகும் போது என் காதில் ‘ப்ராஸ்’னா இங்கிலீஷ்ல கெட்ட மீனிங் என்று கிசுகிசுத்து நக்கலாகச் சிரித்தான். அப்போதிலிருந்தே பாண்டியிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

“பாண்டி ப்ராசுன்னு சொல்லாதடா. பிரகாஷ்னு சொல்லுடா. ‘ப்ராஸ்’னா இங்கிலீஷ்ல கெட்ட அர்த்தம். எங்க சொந்தக்கார பையன் கிண்டல் பண்றாண்டா”


கருவாயன் ‘க்ளுக்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். பாண்டி அவனை முறைத்தான். கருவாயன் உடனே கொஞ்சம் ஓடி தள்ளி நின்றுகொண்டான்.

“வாயில நொளஞ்சாத்தானய்யா ஒளுங்கா சொல்லமுடியும்? இங்கிலீஸுக் காரங்க மாறில்ல பேரு வெக்கிறீங்க உங்க ஆளுகல்ல. சரி, எவேன் ஒன்னையக் கேலி பண்ணாண்டு சொல்லு. அடுத்தவட்டம் அவென் ஊருக்கு வந்தான்னா பொட்டிய ராவிர்றேன்” சொல்லிக் கொண்டே நீரில் இறங்கினான்.

மங்கலான வெளிச்சத்தில், கணுக்கால் அளவுள்ள நீரில் ஆற்று மணல் நிறமும், கூர்மையான மூக்குமுள்ள, என் சுண்டுவிரலை விடச் சிறிய மீன்கள் சரக்சரக் என்று அம்பு போல மணலில் சென்று புதைந்தன. அப்படி மணலில் ஒளிந்த ஒரு மீனை ‘வெடுக்’கென்று மண்ணோடு கொத்தாக அள்ளி, பின் மெதுவாக மணலை மட்டும் ஒழுக விட்டு, மீனைக் கையில் பிடித்து என் முன் நீட்டி, “இதான் அயிர மீனு” என்றான். கருவாயன் தள்ளியிருந்த படியே “ஆமாம் அது உங்காளுக மீனு. அய்யரு ஆத்துல எல்லாம் இதத்தான் திம்பாங்க” என்றான். “பாரு பாண்டி..” என்று சினுங்கினேன். பாண்டி, “கருவாயா இன்னிக்கு ஒனக்கு பூச உண்டுறா” என்றான்.

பேசிக்கொண்டிருக்கும் போதே கையிலிருந்த கம்பியை மின்னல் மாதிரி நீரில் விளாசினான். அந்த வேகத்தில் கம்பி ‘ப்ளுக்’ என்ற ஒலியுடன் நீரில் இறங்கியது. ஓரிரு நொடியில் அகலமான வயிறுள்ள ஒருமீன் வால் பகுதியில் வெட்டுப்பட்டு நீரின் மேல் மிதந்தது. அதைக் கையில் எடுத்தான். “இது என்ன மீனுண்டு தெரியுமா?” என்றான். “நல்ல ஆளப் பாத்து கேளுய்யா மீன தெரியுமாண்டு. அவென் என்னத்தக் கண்டயான்?” என்ற படி கருவாயன் அருகில் வந்தான்.

“இவ தான் கெண்ட மீனு. எப்புடி இருக்கா பாத்தியா சும்மா மினுமினுண்டு?”

மீன் வட்டக் கண்விரிய துடிதுடித்தபடி என்னைப் பார்த்தது. கருவாயன் கையிலிருந்த தென்னை ஓலையை கீறி தட்டையான இலைப்பகுதியைக் கிழித்து, குச்சியை நகத்தால் வழித்து சீராக்கினான். பாண்டியிடமிருந்து மீனை வாங்கி “வாடி வாடி என் ராசாத்தி, இன்னி கொளம்புல நீச்சலடிக்கலாம்” என்றபடி அதன் வாயை நெட்டுக்குத்தாகப் பிதுக்கினான். மீனின் வட்டக்கண் வளைந்து மேலேறி ஆச்சர்யமாகப் பார்ப்பது போலிருந்தது. ஈர்க்குச்சியின் நுனியை மீனின் சிறிய வாய்க்குள் நுழைத்து, சதை பிளந்து சிவந்து செதில் வழியே இழுத்தான். அதற்குள் பாண்டி இன்னும் இரண்டு வெட்டுப்பட்ட கெண்டைகளை கொண்டு வந்தான். கருவாயன் பூ தொடுப்பது போல அவற்றைக் கோர்த்தான். எந்தச் சலனமும் இல்லாமல் நான் பார்த்தது எனக்கே உறைத்து கண்ணை மூடித் தலையைச் சிலுப்பிக் கொண்டேன். வேகமாக இருட்டத் தொடங்கியது.

“பாண்டி பாவம்டா மீன். என்னை எல்லா மீனும் முறைக்கறதுடா. பயமா இருக்குடா” என்றேன்.

“டேய் கருவாயா இங்கிட்டு வாடா, பாவம் சங்கட்டப் படுறாப்லல்ல ப்ராசு”

“ஏன்ய்யா... நானெல்லாம் பேரச் சொன்னாலே அடிக்க வார. இவென் ஒன்னய பொளுதன்னிக்கும் வாடா போடாங்கிறயான். கண்டுக்கிறவே மாட்டுற. நீ என்ன செஞ்சாலும் உனக்கு பரிச்சைக்கு பேப்பர் தர மாட்டயான்” கருவாயன் சிரித்துக் கொண்டே பாண்டி அருகில் போனான்.

பாண்டி கம்பியை உருவி மணலில் எறிந்து விட்டு, சைக்கிள் டயரை கொளுத்தினான். எரிந்து கொண்டிருக்கும் டயரை என்னிடம் கொடுத்து விட்டு கைலியை அவிழ்த்தான்.
“ப்ராசு.. தண்ணிக்கு கொஞ்சம் மேல டயரப் பிடிக்கனும் சரியா. பாத்து டயர என் மேல போட்றாதய்யா.. கோவம்டா நம்ம கருவாயன் மேல போடு. இப்பவே கரிக்கட்ட தான். இனி தீபிடிச்சு எரிஞ்சாலும் இதுக்கு மேல அவெனால கருப்பாக முடியாது” சிரித்துக் கொண்டான்.
கருவாயன் மீன் கோர்த்திருந்த ஈர்க்குச்சியை என்னிடம் கொடுத்தான். ரப்பர் எரிந்து கொண்டே மெதுவாக கீழே கருப்பு முத்துகள் போன்று நீரில் சொட்டியது. பழுத்துத் தொங்கும் மஞ்சள் வெளிச்சத்தை நோக்கி மீன்கள் ஆர்வமாக மொய்த்துக் கொண்டு வந்தது. நெருப்பின் வெளிச்சத்தில் மீனின் அடிப்பகுதி தங்கத் தகடு போல் ஜொலித்து மின்னியது. நான் அதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாண்டியும் கருவாயனும் ஆளுக்கொரு பக்கமாக கைலியை பரப்பிப் பிடித்து நீந்தும் மீன்களுக்குக் கீழே நீரின் அடியில் மிக மெதுவாக நகர்த்திக் கொண்டே வந்தார்கள். மீன்கள் கைலியின் மையத்தில் இருக்கும் போது, மெல்ல கைலியின் பக்கங்களை வளைத்து உயர்த்தி மேலே கொண்டு வந்தார்கள். மீன்கள் என்னவோ நினைத்துக் கொண்டது போல நாலாப் பக்கமும் சிதறி நீந்தின. வேகமாக கைலியை மேலே தூக்கினார்கள். கைலியின் கீழே நீர் ஒழுகி வடிய, நான்கு மீன்கள் துள்ளிக் குதித்த படி இருந்தன. மீன்கள் சந்தோஷமாக விளையாடுகின்றன என நினைத்துக் கொண்டேன். பாண்டியும் சந்தோஷத்தில் குதித்து கருவாயன் தோளில் ஒரு குத்து விட்டான்.

“பாண்டி பசிக்கிறது. வீட்டுக்குப் போனும். அம்மா தேடுவா” என்றேன்.

“டேய் இருடா.. இன்னும் கொஞ்ச நேரத்துல சூட்டான் போட்ருவோம். கத்திரிக்கா மாதிரி இருக்கும். ரெண்டு திண்ணுட்டு போவ” என்றான் கருவாயன்.

பாண்டி உடனே கிளம்பி விட்டான். கருவாயன், “ஆட்டயக் கெடுத்துட்டியேடா.. நல்ல மூடுல இருந்தாப்ல அல்டாப்பு” என்றான்.

பாண்டி, “அடியேய்..கவனிக்கலண்டு நெனைக்காத. கொண்டேயுருவேன்.. பொளச்சுப் போ” என்று சிரித்துக்கொண்டே கைலியை பிழிந்து இடுப்பில் சுற்றிக் கொண்டான்.

எல்லா மீன்களையும் ஈர்க்குச்சியில் கோர்த்தபோது, திருவிழாவுக்குக் கட்டும் தென்னையோலைத் தோரணம் போல இருந்தது. டயரை பாண்டி வாங்கிக் கொண்டான். கருவாயன் மீன்களை எடுத்துக்கொண்டு நடக்க, நானும் கூடவே நடந்தேன். கரையேறியதும், “கால் வலிக்கறது பாண்டி” என்றேன். சட்டென்று குனிந்து உப்புமூட்டை ஏறச் சொல்லித் தூக்கிக் கொண்டான். அவன் முதுகில் உட்கார்ந்து கொண்டு எரியும் டயர் வெளிச்சத்தில் கரையோர நாணல்களை வேடிக்கை பார்த்தபடி வந்தேன்.

திடீரென்று பாண்டி நின்று, இடது கையை நீட்டி மறித்து கருவாயனின் சட்டையைப் பிடித்து இழுத்து நிப்பாட்டினான். “டேய் கருவாயா.. சூதானம். முன்னால பார்றா” என்றான்.

கருவாயன் ஒருநொடி புரியாமல் நின்று, பின் திகைத்து, “யாத்தே.. சாமீய்” என்று அடித்தொண்டையில் அலறினான். நான் பாண்டி முதுகில் இருந்த படியே ஆர்வமாக, “என்ன பாண்டி?” என்றபடி பாண்டியின் தலையும் தோள்பட்டையும் கழுத்து வழியாகச் சேரும் ‘ட’ வடிவத்தின் வழியாக எட்டிப் பார்த்தேன். முன்னால் என்னையில் முக்கிய சவுக்கு போல பளபளப்பாக நீளமாக எதோ கிடந்தது. நெருப்பு வெளிச்சத்தில் அது மிகமெல்ல நெளிவது போல் தெரிந்தது. பின் ஒரு கணநேரத்தில் முழுமையாக அதை உணர்ந்து, “அய்யோ..அம்மா..” என்று கத்தினேன். பாண்டி என் கால்களை இறுக்கிக் கொண்டு, “ப்ராசு சத்தம் போடாதய்யா.. ஒன்னுஞ் செய்யாது. பதறாம இரு” என்றான். ஏழடிக்குக் குறையாத ஒரு பெரிய நாகம், உப்பிய தன் தலையை வழியிலிருந்த சிறுகல் மீது வைத்தபடி அசையாமல் இருக்க அதன் வால் நீண்டு சம்பந்தமில்லாமல் எங்கோ தனியாக புற்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அதற்கு நான்கு கண்கள் இருப்பது போல இருந்தது. பிறகு மெல்ல எல்லாம் தெளிவானது. அதன் வாயிலிருந்து பிறப்பது போல, ஒரு பருத்த பெருச்சாளி எதோ ஒரு கணத்தில் உறைந்த மினுக்கும் கண்களுடன், இரு முன்னங் கால்களையும் எங்களை நோக்கிக் கும்பிடுவது போல சேர்த்துப் பிடித்திருந்தது. நாகத்தின் அகல விரிந்த வாயின் மேல் பகுதியில் அதன் இருகண்களும் பழுப்புச் சுடராக ஒளிர்ந்து எங்களையே பார்த்தது. ஒரே நேரத்தில் இரண்டு ஜோடிக் கண்கள் முற்றிலும் வெவ்வேறு இரண்டு மனநிலையில் என்னைப் பார்ப்பதாகத் தோண்றியது. என் தலைக்கு மேலே ஏதோ சூடாக வெளியேறிப் பறந்தது போல உணர்ந்தேன். அங்குலம் அங்குலமாக பெருச்சாளி பாம்பின் வாய்க்குள் சென்றுகொண்டிருந்தது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பெருச்சாளியின் முழு ஒத்துழைப்போடு மிக இயல்பாகவே அது நடப்பதாகப் பட்டது. கடைசிக்கணத்தில் பாம்பின் கண்களும், பெருச்சாளியின் கண்களும் ஒரே பூரண அமைதியை அடைந்ததாக உணர்ந்தேன். மங்கலான ஒளிப்புள்ளிகளாகி பட்டென மறைந்து பெருச்சாளியின் கண் பாம்பில் ஒன்றாகியது. உப்பி, வீங்கிய வயிற்றுடன் நாகம் சாவகாசமாக எங்களை நிமிர்ந்து பார்த்து, நெருப்பொளியில், பிளந்த கருநீல நாக்கை நீட்டித் துழாவியது. கருவாயன் பாண்டியை ஒண்டிக்கொண்டு, “பாண்டியண்ணே.. காப்பாத்துண்ணே” என்று அரற்றினான், பாண்டியின் வாய், ‘மருதவீரா, மடப்புரம் காளியாத்தா எங்களக் காப்பாத்து’ என்று முனகிக்கொண்டே இருந்தது. பின் நாகம் மெல்லத் தலையைத் தாழ்த்தி தரையைத் தொட்டு மிக மெதுவாக நெளிந்து நகர்ந்தது. நான் பாண்டியின் முதுகிலிருந்து இறங்கிக் கொண்டேன்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா, “என் செல்லக் கழுதைக்குட்டி ஊர் சுத்திட்டு, தொப்பை பசிக்கறச்சே ஆத்துக்கு வர்றது” என்று சொல்லிக் கொண்டு என்னை இழுத்து கண்ணத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். அண்ணா நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அப்பா பேப்பருக்குள் தலையை விட்டிருந்தார். சரி, அண்ணா ஒன்னும் சொல்லிக் கொடுக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். கிணற்றடிக்கு சென்று யூனிஃபார்மை கழட்டினேன். கிணற்றுக்குள் இருந்து நீளமான நாகம் அசையாமல் வாளி மீது தலை வைத்து இருந்தது. பயமாயிருந்தது. சத்தம் போடாமல் கொடியிலிருந்து வேறு டிரவுசரை எடுத்து போட்டுக்கொண்டு சமையற்கட்டுக்குச் சென்றேன். ரசமும், பருப்பும், நெய்யும், சூடான பச்சரிசி சாதமும் கலந்த வாசனை எழுந்தது. அம்மாவின் தலையில் இருந்து பளபளவென்று ஒரு கருநாகம் மெல்ல முதுகில் இறங்கிக் கொண்டிருந்தது. சொல்ல நினைத்தேன். வாய் திறக்க முடியவில்லை. “என்னடி தங்கம்.. குழந்த பேசாம சமத்தா இருக்கு” என்றபடியே திரும்பி எனக்கு சாதத்தை ஊட்டி விட்டாள். அம்மாவை உட்காரச் சொல்லி மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். அம்மா டிவி பார்த்துக் கொண்டே ஊட்டினாள். அமைதியாகச் சாப்பிட்டு விட்டு, அம்மா மடியிலேயே கண்ணை மூடியபடி இருந்தேன். ட்யூப் லைட் வெளிச்சத்தில், மீன் தொட்டிக்குள் விடப்பட்ட வண்ண மீன்கள் மாதிரி இரண்டு கண்களுக்குள்ளும் கலர்கலராக பாம்புகள் சுற்றிச் சுற்றி ஓடின. கண் கூசி வலித்தது. “குழந்தைக்கு என்னாச்சுன்னு தெரியலையே... ஒரு சேட்டையும் பண்ணாம இப்படி ‘தேமே’ன்னு இருக்கே.. பகவானே..” உருவமே இல்லாத காற்றின் உதடு போல யாரோ என் நெற்றியில் மிக மெண்மையாக முத்தம் கொடுத்தது போல இருந்தது. அம்மாவா...? இல்லை.. பாம்புகள் மட்டும் தான் நெளிந்து கொண்டிருந்தது. எங்கே இருக்கிறேன்?

***


ஈர நிலம் போர்த்தி மூடிய பச்சைப் புல்வெளி. சூரிய நுண்கிரணங்கள் போல நீண்டு ஒளிவீசும் வெண்மயிர் படர்ந்த, கபடமின்மையும், தூய்மையுமே உருக்கொண்டு எழுந்த ஒரு அழகான வெள்ளை முயல்குட்டி தன் திராட்சைக் கண்ணை உருட்டி மலங்க விழித்தது. பாரமே இல்லாத மிருதுவான உடலுடன் புல் நுணிகூட மடங்காமல் நடப்பது குட்டி வெண்மேகம் ஒன்று புல்வெளியில் மிதப்பது போல இருந்தது. காலை ஒளி புற்களில் ஊடுருவ பளீரென ஒளிரும் பச்சைப் புல் ஒவ்வொன்றையும் காதை உயர்த்தி வியந்து பார்த்து துள்ளிக் குதித்தது. அங்கே இருள் கிழித்து மேலேழும் சூரியப்பழம் போல செக்கச் சிவந்த ஒரு கனியைச் சுமந்து கொண்டு தனியாக ஒற்றைப் பசுங்கொடி இடுப்பை வளைத்து வந்து நின்றது. ஆதியில்லாத காலம் முழுவதும் தனக்காக காத்திருக்கும் ரத்தநிற வசீகரக் கனியைக், காலத்தில் முன்வகுத்த கனம் ஒன்றில் கண்டுகொண்டது வெள்ளை முயல்குட்டி. ஒரு நொடி கூடத் தயங்காமல் உயிர் தெறிக்கும் வேகத்துடன் மிச்சமில்லாமல் உண்டது. போதையில் கிறங்கித் தள்ளாடிய வெள்ளை முயல் குட்டியின் தாமரை இதழ்க் காதுகளில் ஓடிய செந்நரம்புகளில் நீலம் ஊடுருவிப் பரவியது. விழித்திரையின் நுண் நரம்புகளிலும், சிவந்த ஈறுகளிலும், நாக்கிலும், கால் நகங்களிலும், வெம்மையான அடிவயிற்றின் பரப்பிலும் நீலம் பூத்து விரிந்தது. வெண்பஞ்சு உரோமம் பொசுங்கிக் கருகித் திரித்திரியாக உதிர்ந்தது. முடிகள் கொழிந்த தோல் நீல நிறத்தில் கொழகொழவென எண்ணைத் தாள் போல ஆனது. கால்கள் குன்றி அடிவயிற்றுக்குள் புதைந்தது. உடல் சுருங்கிச் சப்பி முகத்திற்கும் வாலுக்குமிடையில் குழாய் போலக் குறுகியது. காதுகள் காய்ந்த வாழைப்பூ மடல் போல உதிர்ந்தது. முட்டையை உடைத்து வெளிவருவது போல தலையை முன்னால் எக்கி இடமும் வலமும் ஆட்டி உதறி, தொண்டைச் சவ்வு விரிய காற்றை உள்ளே இழுத்தது. காற்று நிரப்பப்படும் டியூப் போல உடல் விறைத்து நீண்டது. வாயிலிருந்து இரண்டு புழுக்கள் தப்பித்து வெளி வருவது போல நாக்கு விரைந்து நீண்டு புதுக்காற்றை நக்கி திரும்ப உள்ளே சென்றது. சரசரவென நெளிந்து சிறிது தூரம் சென்று விட்டு, பட்டென்று நின்று உடலை வளைத்து வட்டமாக்கி, தலையை உயர்த்திப் பத்தி விரித்து பொய்க் கண்களால் வெள்ளை முயல்குட்டி இருந்த இடத்தைப் பார்த்து விஷ மூச்சைவிட்டு சீறியது. தான் முயல் குட்டியாய் இருந்தது வெறும் கனவோ என்று நினைத்தது, இனி மீண்டும் பழைய வெள்ளை முயல்குட்டியாய் மாறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று புரிந்து கொண்டது போல ஏக்கமாகப் பார்த்தது. மற்றுமொரு முயல்குட்டிக்காக அதே காம்பில் புதியொரு கனியைச் சுமந்து கொண்டு பசுங்கொடி வளர்ந்து நெளிந்து சென்று காத்து நிற்பதைக் கண்டது. பின் தளர்ந்து, பத்தியைச் சுருக்கித் தலை கவிழ்ந்து ருசிக்காத புற்களின் மீது ஊர்ந்து சென்று, புதர்களின் ஊடாக மறைந்து அப்பால் இருண்ட குவியலாகப் பிண்ணிக் கிடக்கும் ஏராளமான மற்ற நாகங்களுடன் கலந்து காற்றில் விஷத்தை நிரப்பி பெருச்சாளி வேட்டைக்கு காத்திருந்தது.***


மறுநாள் இருள் பிரியும் முன்பே எழுந்தேன், தூங்கினேனா என்ற நினைவே இல்லை. பாதாளத்தில் இருண்ட சுரங்கப் பாதையில் திசையும், காலமும் இல்லாத நீண்ட பயனம் போய் வந்தது போல இருந்தது. தோட்டத்தில் பல் தேய்க்கும் போது கருங்கல் சுவற்றின் சிறிய இடைவெளியில் உரித்த பாம்புச் சட்டை சிக்கிக் கசங்கி, பாதி கிழிந்திருந்தது. பார்த்துக் கொண்டே அதன் மேல் சிறுநீர் கழித்தேன். குளித்து, யூனிஃப்பார்மை அணிந்து கொண்டு தலை வாரும் போது அண்ணா கடைவாயில் வழிந்திருந்த எச்சிலைத் துடைத்தபடி என்னை விநோதமாகப் பார்த்துக்கொண்டே போனான். அம்மா எனக்கு திருஷ்டி சுற்றினாள்.

அண்ணா கையைப் பிடிக்காமல் அமைதியாக வந்தான். பள்ளிக்குள் நுழையும் போது கிரவுண்டில் பாண்டி மார்பில் இருந்து பக்கவாட்டில் இரண்டு கையையும் நீட்டி விதம் விதமாக முகத்தை வைத்துக் கொண்டு வாயை அகலத் திறந்து சுற்றியிருந்த பையன்களிடம் என்னமோ அளந்து கொண்டிருந்தான். அல்டாப்பு ஆரம்பிச்சிருப்பான்.. “இத்தாத்தண்டி..” என்று மனதிற்குள் அவனை மாதிரியே சொல்லிக் கொண்டபோது சிரிப்பு வந்தது. நேராக வகுப்பிற்குச் சென்று கடைசி வரிசைக்கு முன் வரிசையில் பாண்டியின் இடத்திற்கு முன்னால் பையை வைத்தேன்.

நசுக்கரிடம் திருத்தக் கொடுத்திருந்த கட்டுரை நோட்டை வாங்க ஸ்டாஃப் ரூமுக்குப் போனேன். யாருமே இல்லை. நசுக்கரின் மேசையின் மேல் சிறிய டைரியின் பக்கங்களுக்கிடையில் வைக்கப்பட்ட புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகள் நான்கு பாதி வெளியே நீட்டி இருந்தது. காலையிலேயே வட்டி வசூல் ஆரம்பித்து விட்டார் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன். ஒருகணம் இந்தக் காசு கையில் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று தோணியது. அடுத்த நொடி, ‘பொறத்தியார் காசுக்கு ஆசைப்படறவாள ராக்ஷஸால்லாம் சேர்ந்து நரகத்துக்கு பிடிச்சுண்டு போயி, கொதிக்கிற எண்ணைல போட்டு பொரிப்பா’ என்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. ‘நசுக்கர் மட்டும் அநியாய வட்டி வாங்கலயா? பாண்டிய வேணும்னே ரெண்டு வருஷம் பெயிலாக்கலயா? அவர் காச எடுத்தா என்ன தப்பு?’ என்று நினைத்தேன். ‘ச்சீ.. என்ன புத்தி இது? தெய்வமே மன்னிச்சுடு’ என்று மனதுக்குள் சொல்லும் போது ரூபாய் நோட்டுகள் ஃபேன் காற்றில் ஆடியது. பிரேயர் மணி சத்தம் கேட்டு அவசரமாக வெளியேறினேன்.

பிரேயர் முடிந்த பத்தாவது நிமிடத்தில் தலைமை ஆசிரியர் ரூமில் இருந்து நசுக்கரும், பிற வாத்தியார்களும் பரபரவென வெளியேறி அவரவர் வகுப்புகளுக்குள் நுழைந்தார்கள். நசுக்கர் எங்கள் வகுப்புக்குள் வந்தார், “ஒரு வாத்தியாரோட பணத்த காணோம். எடுத்தவன் யாரா இருந்தாலும் பரவால்ல. உண்மையச் சொல்லிட்டா விட்ருவோம். டேய் அல்டாப்பு, கருவாயா, ஒளுவாடி, தேங்காமண்டி... உண்மையச் சொல்லிருங்கடா. எவனாயிருந்தாலும் மன்னிச்சு விட்ருவோம். நாங்களாக் கண்டுபிடிச்சா டீசி தான்” என்றார். வகுப்பே அமைதியாக இருந்தது.

நசுக்கர் ஒரு பையனிடம் சத்துணவு ஆயாவிடம் பச்சை முட்டை வாங்கி வரச் சொன்னார். ‘செரி.. எவனும் உண்மையச் சொல்ல மாட்டீங்க. எனக்கு எப்படிக் கண்டுபிடிக்கிறதுண்டு தெரியும். எல்லாரும் கண்ண மூடுங்கடா. இந்த முட்டைய மையத் தடவி மந்திரிப்பேன். அஞ்சு நிமிசம் டைம். அதுக்குள்ள எடுத்தவன் டேபிள்ள கொண்டாந்து வச்சிருங்க. அப்படிக் கொடுக்கலேனா முட்டை இங்கருந்து மாயமா மறஞ்சு எடுத்தவன் வகுத்துலேர்ந்து அப்படியே வெளிய தள்ளி வரும்....வகுறு வெடிச்சு செத்துருவான். மந்திரம் சொல்லும் போது எவனும் கண்ணத் தொறந்து பாக்கக் கூடாது. பாத்தவனுக்கு ஒன்னுக்கிருக்கிறது அறுந்து விளுந்துரும். அப்புறம் ‘அய்யோ’ ண்டாலும் கெடைக்காது, ‘சாமீ’ ண்டாலும் கெடைக்காது. இப்பவே சொல்லிப்புட்டேன்” என்றார். தன் பேணாவில் இருந்து மையை விரலில் உதறி முட்டை ஓட்டில் என்னமோ வரைந்தார். “கண்ண மூடுங்கடா எல்லாரும். மந்திரம் போடப்போறேன், எடுத்தவன் ஓடியாந்துரு..” என்றார். கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன். நசுக்கர் ஏதோ முனுமுனுத்தார். என்னால் பொறுக்க முடியவில்லை, வலது கண்ணை மெல்ல ஒரு நூலளவு பிளந்து இமை முடிகளின் சல்லடை வழியாக மெதுவாகத் தலையை இரண்டு பக்கமும் திருப்பிப் பார்த்தேன். எல்லாரும் கண்ணை மூடியிருந்தார்கள். நான், பாண்டி கண்ணை திறந்து பார்ப்பான் என்று எதிர் பார்த்தேன். பாண்டி, கருவாயனும் கூட கண்ணைத் திறக்கவில்லை. நசுக்கர் முட்டையை உடைத்து அண்ணாந்து வாய்க்குள் விட்டுக் கொண்டிருந்தார். “மந்திரம் முடியப் போது. எடுத்தவன் ஒழுங்கா வந்துரு. அடுத்து ஹெட்மாஸ்டர் வந்து எல்லார் பையையும் செக் பண்ணுவாரு. சிக்கினவன் செத்தான்” என்று சொல்லி, செருப்பைக் கழட்டிவிட்டு, காலடி ஓசை எழாமல் வகுப்பை விட்டு மெல்ல வெளியேறி முட்டை ஓட்டை வெளியே எறியப் போனார். இன்னும் எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டிருந்தனர். எனக்கு அக்குளுக்குள் சூடாக வியர்த்தது. இரண்டு நிமிடத்தில் வாயைத் துடைத்துக் கொண்டே வந்தார். நானும் கண்ணை மூடிக்கொண்டேன்.

“ஒருத்தனும் உண்மையச் சொல்ல மாட்டீங்க. எந்த ஈத்தர நாயின்னு இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிஞ்சிரும்” என்றபடி கடைசி வரிசையிலிருந்து ஒவ்வொருத்தன் பையாக சோதனை போட்டார். ஆறாவது ஆளாக பாண்டி. அவன் ஜோல்னாப்பையின் வெளி ஜிப்பில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. நசுக்கர் முகம் வெறியில் சிவந்தது. பாண்டி கண்ணத்தில் பலமாக அறைந்தார். அடுத்த அடிக்கு கையைப் பிடித்து விட்டான், “இங்கியாருங்க சார்.. எனக்கு ஒன்னுந்தெரியாது. சும்மா வேற பெரச்சனைய மனசுல வச்சுக்கிட்டு திருகல் பண்ணீங்கண்டா எனக்கு தெரியும். வெளில வந்துக்கிற மாட்டீங்க” என்றான். நசுக்கருக்கு உடல் உதறியது, கை நடுங்க, அவன் காதைக் கிள்ளி வராந்தாவில் இழுத்துக் கொண்டே ஹெட்மாஸ்டர் ரூம் நோக்கி சென்றார், “திருட்டுப் பயலையெல்லாம் பள்ளியூடத்துல வெச்சிருந்தா இப்படித்தான். வாத்தியாரையே கொல்லுவேன்னு மெரட்டுறான். அவ்ளோ பெரிய ஆளாடா நீ ராஸ்கல்” அவர் குழறிக் கத்துவது கேட்டு எல்லாரும் வெளியில் வந்து பார்த்தார்கள்.

'நசுக்கர் தான் வம்ம வச்சு மாட்டி விட்டுட்டார், பாண்டிக்கு கட்டாயம் டீசி தான்' என்று மற்ற பையன்கள் பேசிக்கொண்டார்கள். நான் என் பையை எடுத்துக் கொண்டு மௌனமாக முன்வரிசையில் சென்று அமர்ந்தேன்.

- பிரகாஷ் சங்கரன்.

Friday, September 2, 2011

அறிவாற்றல் மரபுப் பண்பா?


நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?”
உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடியும் என்று வாதிடப்பட்டது.

மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு உயிரியின் உடற்கூற்றியல் (Anatomy) மற்றும் உயிர்செயற்பாட்டியல் (Physiology) ரீதியான எல்லாப் பண்புகளையும் மரபணுக்களே தீர்மானிக்கின்றன, மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுவரை வெளிப்படுத்தப்பட்ட உயிரியல் பண்புகளையே (Phenotype) ஆராய்ந்து கொண்டிருந்த உயிர் அறிவியல், அப்பண்புகளைக் குறிக்கும் மூலமாகிய மரபணுத் தொகையின் (Genotype) கட்டமைப்பை ஆராயும் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களின் வழியாக புதுப்பாய்ச்சல் பெற்றது. மரபுப் பண்புகளையும், அதன் மூலமாகிய மரபணுக்களின் பங்களிப்பையும் பற்றிய ஆய்வு எல்லாத் துறைகளிலும் (பரிணாமவியல், மரபியல், உயிர்வேதியல், நரம்பியல், உளவியல், நோய்க்கூறியல், நடத்தை மரபியல் மற்றும் பல…) வேகம் பெற்றது.
அறிவாற்றலை மரபியல், நரம்பியல் மற்றும் நடத்தை மரபியல் (Behavioural genetics) ஆகிய துறைகளின் வாயிலாக உயிரியல் ரீதியாக அணுகலாம். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைகள் அறிவாற்றலைப் பற்றி என்ன சொல்கின்றன?
அறிவாற்றல்
அறிவாற்றல் மரபுப் பண்பா என்ற கேள்விக்கு முன், அறிவாற்றல் என்று குறிப்பிடப்படுவது எது? என்று தெரிந்து கொள்ளுதல் முக்கியம். அறிவாற்றல் (Intelligence) என்பது அறிதல் திறன் (Cognition), சிந்தித்தல், சமயோசிதம், கற்றல், வெளிப்படுத்துதல், தொடர்புகொள்ளல், திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்ற சிந்தனைச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது.
உளவியலில் பொதுவான அறிவாற்றல், பாய்ம மற்றும் படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் (Fluid and Crystallized Intelligence) என இரண்டாக வகுக்கப்படுகிறது. இதில் பாய்ம அறிவாற்றல் என்பது பெற்றுக்கொண்ட அறிவாக அல்லாது புதிய சூழ்நிலைக்கும், சிக்கலுக்கும் ஏற்றவாறு தர்க்கபூர்வமாக சிந்தித்து செயல்படுதலாகும். கணித, அறிவியல், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதில் திறன் பெற இது மிகவும் முக்கியம். படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் என்பது திறமையையும், அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும் ஆற்றல். ஆழ்ந்து அகன்ற பொது அறிவு, பரந்த சொல்வங்கி (Vocabulary), தகவல்களை நினைவிலிருந்து மீட்டுப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இதன் பங்கு அதிகம்.
நரம்பு மண்டலத்தின் தலைமையகமான மூளை என்னும் உயிரியல் உறுப்புதான் அறிவாற்றலின் மையம். தத்துவ ஞானி பிளாடோ மூளையே அறிவாற்றலின் மையம் என்று ஊகித்தார், ஆனால் அவரது சிஷ்யரான அரிஸ்டாட்டில் இதயமே அதன் மையம் என்று கருதினார், காலன் (Galen) என்கிற கிரேக்க ஹிப்போகிராட்டெஸ் வழி மருத்துவர் தான் சண்டையில் அடிபட்டு மூளை சிதைந்த போர்வீரர்களின் சிந்தனைப் புலம் பாதிக்கப்படுவதை கவனித்து, அறிவுச் செயல்பாடுகளில் மூளையின் முக்கியத்துவத்தை முதலில் உறுதி செய்தார்.
பரிணாமத்தின் பாதையில்
பரிணாமத்தின் மிக நீண்ட பாதையில், மனிதனுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் பொது மூதாதையான ஒரு பேரினக் குரங்கிலிருந்து மனிதன் தன் நெருங்கிய இனமான சிம்பன்ஸிகளிடம் விடைபெற்றுப் பிரிந்து, தனியாகத் தன் பயணத்தைத் துவங்கி இன்று கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட பரிணாமப் பயணத்தில் இதுவரை மனிதனின் மரபணுத் தொடர் (DNA sequence) சிம்பன்ஸிகளிடமிருந்து சற்றேறக்குறைய வெறும் 1.5% மட்டுமே வேறுபடுகிறது1 (இதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு –மரபணு வேறுபாடு எப்படி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து).
(Credit: Image: Edwin Hadley, University of Illinois.)
மரபணுத் தொடரில் 99% ஒற்றுமை இருந்தாலும் எது மனிதனை மனிதனாகவும், குரங்கைக் குரங்காவும் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வு முடிவு கூறிய பதில் மிக முக்கியமானது - மனித மூளையில் உள்ள மரபணு செயல்பாடு (Gene activity) தான்!2 இத்தனைக்கும் மனிதனுக்கும், சிம்பன்ஸிக்கும் மூளையில் வெளிப்படும் மரபணுக்களில் (Gene expression) உள்ள வித்தியாசம் மற்ற உள்ளுடல் அங்கங்களில் – அதாவது இதயத்திலோ, கல்லீரலிலோ, சிறுநீரகத்திலோ வெளிப்படும் மரபணுக்களை விடக் குறைவு தான்.(3) ஆனால் அது தான் மனிதனின் அறிவாற்றல் சார்ந்த பரிணாம வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மரபணுக்களின் பண்பு வெளிப்பாட்டில் ஆர்.என்.ஏ படியாக்கல் (Transcription) என்ற இடைநிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் சில காரணிகள் ஆர்.என்.ஏ ‘படியாக்கல் காரணிகள்’ (Transcription factors) என்று குறிக்கப்படும். இவற்றின் பங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது என்று நிறுவப்பட்டுள்ளது.(4) உதாரணமாக, ‘ப்ரோடோகாதெரின்’ (Protocadherin) என்கிற புரதத்தின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணியைச் சொல்லலாம். இந்த ப்ரோடோகாதெரின் மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது.
பெருமூளை அரைக்கோளங்களைச் (Cerebral hemisphere) சுற்றியுள்ள மடிப்புகள் நிறைந்த சாம்பல் நிறப் பொருள் (Grey matter) என்றழைக்கப்படும் புறணி (Cerebral cortex) மற்ற பேரினக்குரங்குகளை விட மனிதனுக்கு மூன்று மடங்கு அளவில் பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். (மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis)). இந்த சாம்பல்நிறப் பகுதி தான் சிந்தனை, விழிப்புணர்வு, மொழி, கற்றறிதல், பகுத்தறிதல் போன்ற மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் முக்கியப் பண்புகளை நிர்ணயிக்கிறது. சரி, இங்கே மரபணுக்களுக்கு என்ன முக்கியத்துவம்? என்று கேட்டால், பதில் ‘மிக முக்கியமான பங்கு மரபணுக்களுக்கு உண்டு’ என்பதே. உதாரணமாக HAR1F என்னும் ஒரு மரபணு மனிதக் கருவளர்ச்சியின் ஏழாவது வாரத்தில் மிக அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மரபணு நேரடியாக எந்தப் புரதத்தையும் குறிப்பதில்லை, பதிலாக மூளைப் புறணியில் (Cortex) நியூரான் அடுக்குகளை உண்டாக்குவதிலும், மூளையின் வடிவமைப்பைக் கட்டமைப்பதிலும் பங்குபெறும் இதர புரதங்களுக்கான மரபணுக்களின் வெளிப்பாட்டை மேம்படுத்துகிறது. மொத்தம் 49 மரபணுப் பகுதிகள் இவ்வாறு மனிதர்களில் சிம்பன்ஸிக்களை விட மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது5. அதில் ஒன்று தான் மேற்கண்ட HAR1F (மனிதர்களில் முடுக்கிவிடப்பட்ட பகுதி - Human Accelerated Region – HAR) மரபணு. மீதமுள்ள 48 பகுதிகளையும் அவற்றின் பண்புகளையும் கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனித இனத்தில்
இதுவரை மனிதன் அபாரமான மூளை வளர்ச்சி பெற்று தனது நெருங்கிய இனமான சிம்பன்ஸிக்களிலிருந்து வேறுபட்டு பரிணாமத்தின் பாதையில் விரைவாக முன்னேற மரபணுக்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இனி, மனித இனத்துக்குள் அறிவாற்றலை குறிக்கும் ஒரு காரணியாக மரபணுக்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
‘நவீன மரபியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆராய்ச்சியாளரான மெண்டல் (Gregor Mendel), பட்டாணிச்செடிகளை வைத்து ஆராய்ந்து, சில பண்புகள் மரபாக தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன என்ற தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு ஒரு வருடம் முன்பே 1865 ல் ஃபிரான்ஸிஸ் கால்டன் (Francis Galton) என்பவர் உயர்தள அறிவாற்றலும் மற்றும் சில திறன்களும் மனிதர்களில் மரபுப்பண்பாகக் கடத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்து இரண்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இவர் தான் “Nature Vs Nurture” என்கிற பதத்தையும் அந்த விவாதத்தையும் தொடங்கிவைத்தவர். கால்டனின் கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்டு ஸ்பியர்மேன் (Charles Spearman) என்பவர் பொதுவான அறிவாற்றல் காரணி (Genaral Intellingence factor, g ) என்கிற பதத்தை முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி வாய்மொழி (Verbal), எண்கணிதம் (Arithmetic), விழிப்புலம் (Visual), முப்பரிமாண சிந்தனை (Three dimensional thinking) போன்ற தனித்தனியான அறிவுத்திறன் சோதனைகளில் சிறப்பாக தேர்வுபெறுபவர்கள் இவற்றுக்குள் தொடர்புறக்கூடிய மைய இழையாக அடிப்படையான (அ) பொதுவான ஒரு அறிவாற்றல் உடையவர்களாக இருபார்கள். இந்த ‘அறிவாற்றலின் சாரம்’ அல்லது அடிப்படையான அறிவாற்றல் மரபாகக் கடத்தப்படக்கூடியது. இந்த கருதுகோளுக்கு எதிராக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் இதுவே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஆகும்.
மூலக்கூறு உளவியல் மற்றும் நடத்தை மரபியல் துறைகளில் சில பண்புகளின் மரபுத்தன்மையை ஆராய்ச்சி செய்ய இரட்டையர்களையே மாதிரிகளாகக் கொள்வது வழக்கம். ஒருவித்து இரட்டைகளில் (Monozygotic twins) இருவருக்கும் மொத்த மரபணுக்களும் 100% ஒத்ததாக இருக்கும். இருவித்து இரட்டைகளில் (Dizygotic twins) 50% மரபணு ஒற்றுமை இருக்கும். எனவே ஒரே சூழ்நிலையிலோ அல்லது பிரிந்து வெவ்வேறு சூழ்நிலைகளிலோ இந்த இரட்டைகள் வளர நேர்கையில், அவர்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது நீடிக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதன் மூலமாகப் பண்புகளை நிர்ணயிப்பதில் மரபணுக்களின் பங்கையும், சூழ்நிலை, சமூக தாக்கத்தையும் அறியலாம். அதே போல அல்ஸைமர் (Alzheimer’s), பார்க்கின்சன் (Parkinson’s), ஹண்டிங்டன் (Huntington’s) போன்ற நரம்பு குன்றல் நோய்கள் (Neuro degenerative diseases) அல்லது ஸ்கீசோஃப்ரீனியா (Schizophrenia) போன்ற மனநல குறைபாடுள்ளவர்களின் மரபணுவை (DNA), ஒத்த வயதும் சூழலும் கொண்ட ஆரோக்கியமானவர்களின் மரபணுவோடு ஒப்பிட்டு, ஆரோக்கியமானவர்களிடம் இல்லாத - அதே சமயம் மூளை குன்றல் நோயுள்ளவர்களிடம் இருக்கிற மரபணு மாற்றங்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாக மூளைச் செயல்பாட்டுக்கும், அறிவாற்றலுக்கும் உள்ள மரபுக் காரணிகளை விளக்கும் ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்துள்ளன. இவை ஒரு மறைமுகமான வழிமுறை தான்.
நேரடியாக அறிவாற்றலுக்கான மரபணுக்காரணிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட ஒற்றை மரபணுவும் அறிவாற்றலை நேரடியாகக் குறிப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அறிவாற்றல் என்பது பல்வேறு திறன்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது. அது ஒரு சிக்கலான பண்பு. எனவே பல்வேறு மரபணுக்கள் (Polygenic) தொடர்புடையதாக இருக்கும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த மரபணுக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அறிவாற்றலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருந்தாலும் சமீபத்திய சில முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளை தெரிந்துகொள்வது இந்தத் தலைப்பின் நோக்கத்திற்கு உதவும். எடுத்துக்காட்டாக, CHRM2 என்னும் மரபணுவின் புரதம் நரம்பணுக்கள் மின்னதிர்வை ஏற்று சமிக்ஞைகளை கடத்துவதில் பங்கு வகிக்கிறது. கற்றல் திறன், ஞாப சக்தி ஆகியவற்றுக்கு முக்கியமானது. 2007ம் ஆண்டு 200 குடும்பங்களைச் சேர்ந்த 2,150 தனிநபர்களின் CHRM2 மரபணுவில் உள்ள ‘மரபணு அடையாளங்களையும்’ (Genetic markers) அவர்களின் அறிவுத்திறன் அளவீட்டு சோதனையில் (IQ test) பெற்ற மதிப்பெண்களையும் ஒப்பிட்டதில், CHRM2 மரபணு அறிவாற்றல் திறனில் தாக்கம் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது (6). இதே மரபணு இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு நாடுகளில் செய்த ஆய்வுகளிலும் அறிவுத்திறன் அளவீட்டுடன் உள்ள தொடர்பு நிரூபிக்கப் பட்டுள்ளது. இன்னொரு நரம்பு மண்டல மரபணுவான STX1A, நரம்பணுக்களின் மின்வேதி சமிக்ஞை பரிமாற்றத்தில் பங்குபெறும் மிக முக்கியமான புரதத்தைக் குறிப்பது. STX1A மரபணுவின் வெளிப்பாடு வில்லியம்ஸ் ஸிண்ட்ரோம் என்னும் மனவளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளவர்களிடம் மிகக் குறைவாக உள்ளதும், அது அவர்களின் குறைவான அறிவுத்திறன் அளவீட்டுடன் (IQ-60) மிகவும் தொடர்புள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது7. சாதாரணமான ஒரு மனிதனின் அறிவுத்திறன் அளவீட்டு சராசரி 100 இருக்கும் (அதிகபட்ச IQ விற்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மரிலின் சாவன்துக்கு அவருடைய பத்தாவது வயதில் IQ-228 இருந்தது!). இதன் மூலம் அறிவாற்றலுக்கும் மரபணுவுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது என்பது வில்லியம்ஸ் ஸிண்ட்ரோமுக்கும் STX1A மரபணுவுக்கும் உள்ள தொடர்பின் வழியாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் (ஆகஸ்டு, 2011) வெளியிடப்பட்ட முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை மரபணுக்களுக்கும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பை மிக நேரடியாக நிரூபிக்கிறது (8). இதற்கு முன் வெளிவந்த ஆய்வுகள் பெரும்பாலும் மூளை சார்ந்த குறைபாடு நோயுள்ளவர்களையும், ஆரோக்கியமானவர்களையும், அல்லது இரட்டைகளையும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும், அவர்கள் பெற்ற/வளர்ப்பு பெற்றோரையும் ஒப்பிட்டு அறிவாற்றலின் மரபுப் பண்பை நிரூபித்துவந்தன. ஆனால் இந்த ஆய்வு ஆரோக்கியமான 3511 (ஆண், பெண் இருபாலரும்) பேரின் மரபணுவில் மொத்தம் 5,49,692 மரபணு அடையாளங்களைப் பரிசோதித்ததன் மூலம் மனிதர்களுள் படிகமாக்கப்பட்ட-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 40%ம், பாய்ம-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 51%மும் அவர்களின் மரபணு வித்தியாசங்களாலேயே தீர்மாணமாகின்றன என்று நிரூபிக்கிறது. ஒட்டுமொத்த மரபணுவையும் (DNA) கொண்டு ஆய்வு செய்யப்பட்டதால், எந்த குறிப்பிட்ட மரபணு (Gene) அறிவாற்றலில் பங்கு வகிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியாவிட்டாலும், மரபணுக்களின் பங்கையும் அறிவாற்றலின் மரபயிலையும் (Genetics of Intelligence) நேரடியாக தெரிவிப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மூளையின் அளவையும், நரம்பணுக்களின் வலைப்பின்னலையும் கட்டுமானத்தையும் நிர்ணயிப்பதில் மரபணுக் காரணிகள் வகிக்கும் இன்றியமையாத பங்கையும், மூளையின் அளவு எப்படி அறிவாற்றல் வளர்ச்சியில் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது என்பதையும் முன்னர் கண்டோம். மூளையின் செயல்பாடுகளைப் படம் பிடிக்கும் அதிநவீன கருவிகள் (HARDI) மூலம் 23 ஜோடி ஒருவித்து இரட்டையர்கள் மற்றும் 23 ஜோடி இருவித்து இரட்டையர்களின் மூளையைப் படம் பிடித்துப் பார்த்ததில் அவர்களின் மூளை நரம்பணு இழைகளைப் (Axons) போர்த்தியுள்ள மயலின் (Myelin) என்னும் கொழுப்புப்-புரதத்தின் தடிமனைப் பொறுத்து அவர்களின் மூளை செயல்பாட்டின் வேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தடிமனான மயலின் போர்வை இருந்தால் கட்டளைகளையும், தகவல்களையும் மூளை மிகவேகமாகக் கையாளும். அவர்களின் முப்பரிணாம சிந்தனை, விழிப்புலம் சார்ந்த செயல்பாடும், தர்க்கமும் எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டது. மயலின் போர்வையின் வளர்ச்சியைக் குறிக்கும் மரபணுக்கள் தான் இதைத் தீர்மாணிக்கின்றன. இருவித்து இரட்டைகளில் இந்த மயலின் போர்வையின் தடிமனில் வித்தியாசம் இருந்தது (ஏனென்றால் அவர்கள் 50% மட்டுமே மரபணு ஒற்றுமை கொண்டவர்கள், எனவே பெற்றோர்களிடமிருந்து மரபாகக் கடத்தப்படும் பண்பு வேறுபடலாம்) கண்டுபிடிக்கபட்டதன் மூலம் மூளை-அறிவாற்றல் செயல்பாடு மரபாகக் கடத்தப்படும் தன்மை புதியமுறையில் நிரூபிக்கப்பட்டது (9). இவையும் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகளும் அறிவாற்றலில் சமூகத்தின்/சூழலின் பங்கிருந்தாலும் முதல் மற்றும் முக்கியமான பங்கு பாரம்பரியமாகக் கடத்தப்படும் மரபணுக்களே என்ற கருத்தை அறிவியல் பூர்வமாக முன்வைக்கின்றன.
எதிர்காலம்
பரிணாமத்தில் மனித இனத்துக்குச் சிறப்புப் பண்பாக அமைந்த மூளை வளர்ச்சியையும், அறிவாற்றலையும் குறிக்கும் இந்த மரபணுக்கள் மனித இனம் முழுமைக்கும் பொதுவாகத் தானே இருக்கவேண்டும்?, அதனால் எல்லா மனிதருக்கும் அறிவாற்றலும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே? என்ற கேள்விகள் எழுகிறது. இங்கே தான் உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவித்து இரட்டைகளையும், இருவித்து இரட்டைகளையும், அவர்களின் அறிவுத்திறன் அளவீடு, வளர்கின்ற குடும்ப மற்றும் சமூகச்சூழல், சத்தான உணவு, பெற்றோரின் கல்வியறிவு மற்றும் அறிவாற்றல், கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை வைத்து சமூகவியலாளர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து அறிவாற்றலில் சூழ்நிலையின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக்கி வருகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவாற்றலின் மரபுத்தன்மை குறித்து ஆராயும் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சிகள் வேகம் பெற்று வருகின்றன. இப்போதும் இது ஒரு வளரும் துறையே. இது வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளவையும் ஒப்புநோக்க அடிப்படையானதே. இந்தத் துறையின் எதிர்காலப் போக்கை இதை போன்ற இன்னொரு துறையின் வளர்ச்சியை வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். தொற்று நோய்களுக்கான ஒற்றைப் புறக்காரணமாக நுண்கிருமிகளைக் கண்டுபிடித்த ஆரம்ப அறிவியல் காலங்களில், நோய்க்கூறு அறிவியல் (Immunology) வேகமாக வளர்ந்தது. ஆனால் ஒரு நோய்க்கிருமி ஒரே சூழ்நிலையில் வாழும் அனைவரையும் தாக்குவதில்லை என்பதும், ஒரு நோய்க்கிருமிக்கெதிரான தடுப்பூசி (Vaccine) அந்த நோய்கெதிரான பாதுகாப்பை எல்லா இன மக்களிலும் வெற்றிகரமாக உண்டாக்க முடிவதில்லை என்ற உண்மையும் அறிவியலாளர்களை மனிதர்களின் மரபணுக் கட்டமைப்பை நோக்கிச் சிந்திக்கச்செய்தது. நோயெதிர்ப்பில் ஈடுபடும் மரபணுக்களும், அதில் ஏற்படும் மாற்றங்களும் தான் ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்கு முதற்காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. (தொற்றுநோய்கள் மட்டுமல்ல உடற்செயலியக்கம் சார்ந்த எல்லா குறைபாடுகளுக்கும் மரபியல் முன்சார்பு உண்டு. எ.கா. இதயநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரைவியாதி, புற்றுநோய்…).
அந்த மரபணுக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கடத்தப்படுவதால், பிறப்பிலேயே சில நோய்கள் வருவதற்கான மரபியல் முன்சார்புகள் (Genetic predisposition) மனிதர்களில் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டதும் நோய்க்கூறியல், நோய்க்கூறு மரபியலாக வளர்ந்தது (Immunogenetics). பின்னர் இந்த மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட மனித இனத்துக்கோ (Race), இனக்குழுவுக்கோ (உதாரணம்: சாதிகள்) பொதுவானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது (Population-Immunogenetics). மனிதனின் மொத்த மரபணுத் தொடரும் வரிசைப்படுத்தபட்டபின் (Human Genome Sequencing) இன்னும் வளர்ந்து, ஒரு தனிமதனின் ‘நோய்க்கூறு ஜாதகத்தை’க் (Immunological Horoscope; என்னென்ன நோய்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது, எவ்வாறு அதைத் தடுத்துக்கொள்ளலாம்) கணிப்பதிலும், ஒவ்வொரு தனிமனிதனின் மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவம் (Personalized Medicine) என்ற நிலையையும் எட்டியுள்ளது. இதே போக்கு அறிவாற்றலின் மரபியலுக்கும் பொருந்தும்.
இப்போது அறிவாற்றலுக்கான மரபணுக் காரணிகளைக் கண்டறிவதில் வெற்றி பெற்றுள்ள இத்துறை பின்னர் ஒரு இனத்திலோ, சமூகத்திலோ அந்த மரபணுக்களின் பரவலை (Prevalence) ஆராய்ச்சி செய்யலாம். பின்னர் தனிநபரின் மூளை – அறிவுச் செயல்பாட்டை அல்லது நோய் வாய்ப்புகளை முன் கூட்டியே கணித்து முன்னேற்ற, பாதுகாக்க வழிசொல்லலாம். உதாரணமாக நாம் மேலே பார்த்த மயலின் போர்வையின் தடிமனை அதிகரிக்க, அதன் மரபணுவை வெளிப்பாட்டை அதிகரிக்கும் மருந்தை அல்லது மரபணு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதன் வழியாக பிறவியிலேயே வில்லியம்ஸ் சிண்ட்ரோம் வருவதற்கான மரபியல் முன்சார்பு இருக்கும் குழந்தைகளைக் காக்கலாம் (சாதாரண அறிவுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை அதிகப்படுத்தலாம்!!)  இப்போதைக்கு மூளை-அறிவாற்றல் வளர்ச்சிக் குறைவு நோய்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கவும் தான் அறிவாற்றல் மரபியல் துறை மரபணுக் காரணிகளைக் கண்டறிய முயற்சிக்கிறது.
அறிவாற்றலின் மரபுத் தன்மை என்னும் கருத்து சமூகவியல் பார்வையில் மிக அபாயகரமான கொள்கையாக இருக்கலாம். காரணம்- பன்னெடுங்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் மரபான பண்பாக அறிவாற்றல் (இன்னும் பல பண்புகள்) கருதப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது வம்சாவழியினருக்கோ சொந்தமானதென்றும் அதனால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டும் பிறர் தாழ்வாக நடத்தப்பட்டும் உருவான ஏற்றத்தாழ்வுகளே. சமூகவியல், சமவாய்ப்பின் மூலம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதும், வளர்த்துக் கொள்ளக் கூடியதும் தான் அறிவாற்றல் என்று நிரூபிப்பதன் மூலம் சமுக சமநிலையை வலியுறுத்த விழைகிறது. சமூகவியல் என்பது சட்டம், மொழியியல், அரசியல், தத்துவ, கலாச்சார விழுமியங்களையும், அறிவியலின் முடிவுகளையும் சற்றே மழுங்கடித்துச் சேர்த்து ஒன்றிணைத்து அலசி மனித சமூகத்தை, நடத்தையை, சமூக அமைப்பு முறைகளை புறவயமாக விளக்க முயல்வது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கூர்மையான, புறவயமான, நிரூபிக்கக் கூடிய உண்மைகளை மட்டும் தரமுடியும். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தான் பரிணாமத்தில் சிறப்புப் பரிசாக நமக்குக் கிடைத்த அறிவாற்றல் சார்ந்த மரபணுக்களுக்களை ஒவ்வொரு செல்லிலும் பொதிந்து வைத்திருப்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகும்!
உதவிய மூல ஆராய்ச்சி கட்டுரைகள்
2. Wolfgang Enard., et al., 2002. Intra- and Interspecific Variation in Primate Gene Expression Patterns. Science. 296: 5566. 340-343
3. Philipp Khaitovich., et al., 2005. Parallel Patterns of Evolution in the Genomes and Transcriptomes of Humans and Chimpanzees. Science. 309: 5742. 1850-1854
4. Yoav Gilad., et al., 2006. Expression profiling in primates reveals a rapid evolution of human transcription factors. Nature. 440, 242-245
5. Katherine S. Pollard., et al., 2006. An RNA gene expressed during cortical development evolved rapidly in humans. Nature. 443, 167-172
6. Danielle M. Dick., et al., 2007. Association of CHRM2 with IQ: Converging Evidence for a Gene Influencing Intelligence. Behavioural Genetics. 37:265–272
7. Gao MC., et al., 2010. Intelligence in Williams Syndrome Is Related to STX1A, Which Encodes a Component of the Presynaptic SNARE Complex. PLoS ONE. 5(4): e10292. doi:10.1371/journal.pone.0010292
8. G Davies., et al., 2011. Genome-wide association studies establish that human intelligence is highly heritable and polygenic. Molecular Psychiatry. DOI: 10.1038/mp.2011.85
9. Ming-Chang Chiang., et al., 2009. Genetics of Brain Fiber Architecture and Intellectual Performance. Journal of Neuroscience. 29 (7): 2212 – 2224


- பிரகாஷ்
நன்றி: சொல்வனம்