இப்படி ஒரு முன்னுரையுடன் உங்கள் முதல் அறிவியல் கட்டுரையை வெளியிடுங்கள். கட்டுரைக்கு முன்னுரை மாதிரியும் இருக்கும், உங்களைப் பற்றிய 'எளிய' அறிமுகமாகவும் இருக்கும். ஒரே கல்லில் ஒரு மாந்தோப்பையே வீழ்த்திய முதல் ஆள் நீங்களாகத் தான் இருப்பீர்கள். பின்னே இத்தனை அருமையாக உங்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்துவைக்க வேறு எவரால் முடியும்?
அறிவியல் கட்டுரை எழுதுவதற்கு முன்பு முதலில் எந்தப் பெயரில் எழுதுவது என்பதைத் தீர்மாணித்துக் கொள்ளுதல் நல்லது. நிஜப்பெயரில் கட்டுரை எழுதி இணையம் முழுவதும் அர்ச்சனை வாங்க தைரியம் இல்லாதவர்கள் தங்கள் சொந்த நலத்தை மட்டும் விரும்பும் உற்ற நண்பர்களிடம் ஆலோசித்து ஒரு பொருத்தமான புனைப்பெயர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். புதுக்கவிதை எழுதுபவர்கள், தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் 'காப்பியக் காவலன்' 'கவிப்பித்தன்' 'பாரதிக் கம்பன்' தமிழ்த்தமிழன்' என்றெல்லாம் வைத்துக்கொள்வது போல அறிவியல் கட்டுரைஎழுத்தாளனுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தெறிக்கும் பெயர் வேண்டும். 'மின்சாரக்கம்பி' 'காஸ்மிக் காதலன்' 'மரபணுவின் மைந்தன்' இன்னும் கொஞ்சம் லேட்டஸ்டாக வேண்டுமென்றால் 'நியூட்ரினோ நாதன்' போன்றவை சிறப்பாக பொருந்தி வரும்.
அறிவியல் கட்டுரை எழுதுபவர்கள் எப்போதும் பால்கனியில் இருப்பவர்கள். அதைத் தமிழில் வாசிப்பவர்கள் தரை டிகெட்டுகள். எனவே தரை டிக்கெட்டுகளின் தரத்திற்கு உங்களைத் தாழ்த்திக் கொண்டு தான் நீங்கள் அறிவியல்கட்டுரை எழுதியாக வேண்டும். தரை டிக்கெட்டுகளுக்கு எதையும் ஜோக்காகச் சொன்னால் தான் புரியும். 'சென்னையில் இருப்பவர்கள் வெயில் காலத்தில் ஃபேன் போட்டு மின்சாரத்தைச் செலவழிக்கவே தேவையில்லை. அவர்கள் கார்ப்பரேஷன் குழாயைத் திறந்தாலே போதும் ஃபேனை ஐந்தில் வைத்தது மாதிரி காற்று பீரிட்டுக் கொண்டு வரும். சரி, இப்பொழுது காற்று எப்படி அவ்வளவு வேகமாக வருகிறது என்று நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா? சரி, எளிமையாக விஷயத்திற்கு வருகிறேன். ஹை ப்ரஷர் தான் காரணம். எப்படியென்றால்....' என்று ஒவ்வொரு பத்திக்கும் ஒரு அசட்டுஜோக் வீதம் எழுதத் தெரியவேண்டும்.
நீங்கள் எழுத ஆரம்பித்துவிட்ட அறிவியல் கட்டுரையில் ஒரு அடிப்படையான விஷயம் உங்களுக்கே தெளிவில்லையெனில் கவலைப்பட வேண்டாம். ஒரு மாதிரி ரெண்டு வரியில் சுருக்கமாக 'மியாஸிஸ் செல் பிளவின் ஆரம்பத்தில் பிரிந்து பிளந்து நிற்கும் க்ரோமோசொம்களின் சிஸ்டர் க்ரொமாடிட்கள் குறுக்கு-சேர்க்கை என்னும் எளிய ஒரு செயல்பாடு நடைபெறுவதால் மரபணு மாற்றம் உண்டாகிறது' என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் 'எளிய இந்த தகவலை விளக்கவேண்டும் என்று கேட்பவர்கள் பக்கத்துவீட்டில் ப்ளஸ்டூ பயாலஜி படிக்கும் பையனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்' என்று எழுதிவிட்டால் வெட்கக்கேடுக்குப் பயந்து படிக்கும் அனைவரும் 'தெளிவாகப் புரிகிறதே!' என்று சொல்லிவிடுவார்கள். அல்லது நீங்களே அதே அடைப்புகுறிக்குள் 'பின்னொரு சமயம் நேரம் கிடைக்கும் பொழுது இதை விரித்து தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்' என்றும் போட்டுவிடலாம். யாரும் 'எங்கே விளக்க கட்டுரை?' என்று கேட்டுவரப்போவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நீர் அது இருக்கும் இடத்தின் வடிவமும், நிறமும் பெறுவது போல அறிவியல் கட்டுரையும் அதை எழுதுபவரின் ஆளுமையையும், விருப்பங்களையும் பொருத்தே வடிவம் பெறும் என்பது அறிவியல் கட்டுரைகளுக்கானஅறிவியல் விதி.
தத்துவத்திலும், ஆன்மீகத்திலும் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் எந்தத் துறை சார்ந்த அறிவியல்கட்டுரையையும் எப்படியாவது நீட்டி முழக்கி இழுத்துச் சென்று தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் கோர்த்து முடிக்க வேண்டும். பிரபஞ்ச தோற்றம், வளர்ச்சி பற்றின கட்டுரையில் "இதைத் தான் யஜுர் வேதத்தின் தைத்திரீய உபநிடதம் -ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேர் ஆப: அத்ப்ய ப்ருதிவி, ப்ருத்வியா ஓஷதய: ஓஷதீப்யோ அன்னம், அன்னாத் புருஷ:' என்கிறது. இதையே வேதம் தமிழ் செய்த மணிவாசகப் பெருமானும் -'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊணாகி உயிராகி' என்று தெள்ளு தமிழில் விளக்குகிறார்" என்று எழுதலாம். இடையில் வரும் சமஸ்கிருத வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் எழுத வேண்டியதில்லை. கட்டுரையில் புரியவே புரியாத இடங்கள் இருப்பது பலம் தான். கட்டுரை எழுத்தாளனின் எல்லைக்குள்ளேயே இருக்கும். யாரும் கேள்வி கேட்டு இம்சைப் படுத்தமாட்டார்கள்.
பாரத நாட்டின் பழைய மரபுகள் மற்றும் பண்பாட்டின் மேல் மதிப்பும், நமது அறிவியல் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையும் இருப்பவர்கள் எழுதும் அறிவியல் கட்டுரையில் "பிதாகரஸ் தேற்றத்தை 2800 ஆண்டுகளுக்கு முன்பே ச்ரௌத சூத்திரத்தின் அங்கமான சுல்ப சூத்திரத்தில் நமது பௌதாயன ரிஷி எழுதிவைத்துவிட்டார். நமது பாரத தேசத்தவர்களே நமது அறிவியல் பாரம்பரியத்தை அறியாமல் மேற்கைப் பார்த்து வாய்பிளந்து நிற்பது வேதனையானது" என்று எழுதலாம். பாரதப் பன்பாட்டின் மேல் இதே நம்பிக்கைகள் உள்ள ஆனால் அறிவியல்விஷயத்தில் மட்டும் சற்று முற்போக்கான எழுத்தாளர்கள் இவற்றை நக்கலடித்து, எதிர்த்து எழுதும் வாய்ப்புள்ளது. ஆகவே கட்டுரையின் அடுத்தவரியிலேயே "அதிலும் இன்னும் வேதனையானது என்னவென்றால் நமது தேசத்தின் பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர்களும் இந்த மேற்கு அறிவியல் மாயையில் வீழ்ந்துகிடக்கும் சோகம் தான்" என்று ஒரு பக்கவாட்டு உதை (தமிழில் 'சைடு-கிக்') கொடுத்து எழுதிவிடுவது நீங்கள் தீர்க்கதரிசி என்பதைக் காட்டிவிடும்.
இலக்கிய ஆர்வமும் இருந்து அறிவியல் கட்டுரையும் எழுதுவோர் என்றால் எல்லா வரியையும் கவித்துவத்துடன் எழுதவேண்டும். அறிவியல் உண்மைகளை விளக்கி விட்டு பின்பு ஒரு பாரா அதைப் பற்றி வியந்து விகசித்து எழுதப் பழக வேண்டும். கட்டுரையின் ஆரம்பத்திலும், நடுவிலும், முடிவிலும் புதுமைபித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன் என்று தமிழிலக்கிய நட்சத்திரங்களின் முக்கியமான படைப்புகளை மேற்கோள் காட்ட வேண்டும். 'பாக்டீரியா புதுமைபித்தனின் காஞ்சனை மாதிரி -வெறும் கண்ணுக்குத் தெரியாது, நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அதன் அளவுடன் ஒப்பிடுகையில் ஒரு அமீபாவின் உருவம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல மிகவும் பெரியது'.
நீங்கள் உலக இலக்கிய பரிச்சயம் உள்ளவராக இருந்தால், அதையும் அறிவியல் கட்டுரையின் ஊடே கோடி காட்ட விரும்பினால், உருமாற்றம் பற்றிய அறிவியல் கட்டுரையில் கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக உருமாறுவதை இப்படித்தான் ஃப்ரான்ஸ் காஃப்கா தனது மெடாமார்ஃபசிஸ் நாவலில் தந்தையினால் உண்டாகும் மன அழுத்தத்தால் கரப்பான் பூச்சியாக மாறுகிறார்' என்று எழுதலாம். தஸ்தயேவ்ஸ்கி, தொல்ஸ்தொய், புஷ்கின், மாக்ஸிம் கார்கி, பத்யுஷ்கோவ், த்யுத்ஷேவ், க்ரிபோயெடோவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளின் பேரை கட்டுரையில் இன்ன இடம் இன்ன காரணம் என்று இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தூவிக்கொள்ளலாம். மறுப்பே இல்லாமல் உங்களுக்கு ஒரு முற்போக்கு அறிவியல் இலக்கியவாதி முத்திரை கிடைத்து விடும்.
இலக்கிய அறிவியல் கட்டுரையாளர்களுக்கு இன்னொரு முக்கிய பணி உள்ளது. அன்றாட நடைமுறை மொழியில் எழுதி யதார்த்த இலக்கியம், வட்டார மொழி இலக்கியம் படைக்கப்படுவது போல அறிவியல் கட்டுரைகளையும் வட்டார மொழியில் எழுதலாம். அந்த வகையில் நீங்கள் 'யதார்த்த அறிவியல் கட்டுரைகள்' 'வட்டார மொழிஅறிவியல்' போன்ற துறைகளின் முன்னோடி ஆகும் வாய்ப்புள்ளது. உதாரணம்: மதுரை வட்டார மொழியில் அணுக்கருவை விளக்கையில், "பொரட்டானும், நியூட்டுரானும் அணுவுக்கு நடுவாக்குல பொந்துனாப்புல இருந்துக்கிட்டு எனக்கென்னாண்டு 'செவசெவா'ண்டு ஒக்காந்துக்கிருக்கும். ...க்காலி.. எலக்குட்ரானு மட்டும் மருதையச் சுத்தின களுத மாதிரி கேனக்கூனா கணக்கா நிக்காம சுத்திக்கே இருக்குமப்பேய்ய்ய்' என்று எழுதலாம்.
'மக்களே இப்பம் சில எளவெடுத்தவன் கள்ளுகுடிச்சா வயிற்றிகிடக்காம மப்பு தலைக்கு கேறி சலம்புதானே... ஏன்னு யோசிச்சனும் பிலேய்.. கல்லீரல்ல இருக்கப்பட்ட ஆல்கஹால் டீஹைட்ரோஜீனேஸுன்னு ஒரு நொதியாக்கும் மத்தவன.. அதாம்பிலேய்.. எரிப்பன உடச்சு நசிக்குதது. அதுல வல்ல கேடும் உண்டாகும்பமாக்கும் ஆளு கெடந்து குஞ்சுல எறும்பு கடிச்ச கொச்சு கணக்கா கெடந்து துள்ளுகது' என்று கல்லீரல் பற்றியும் ஆல்கஹால் சிதைமாற்றம் பற்றியும் நாஞ்சில் மலைத்தமிழில் எழுதலாம்.
அல்லது ஏதாவது அடிக்க வராத சாதியின் பாஷையில், 'முதல் தடவை வ்யாதி உண்டாகறச்சே உத்பத்தியாற எதிர்ப்பு ஜீவாணுக்கள்ல சிலது தேமேன்னு ஒன்னும் பண்ணாம பிரம்மமாட்டம் போய் ஒக்காண்டுடும். இதத்தான் இம்முனாலஜிக்காரா மெமரி செல்னு ஷொல்லுவா. திருப்பி அதே வ்யாதி க்ருமி வந்தாக்கே அந்த மெமரி செல் காளசம்ஹார மூர்த்தியாட்டம் ருத்ரதாண்டவம் ஆடிண்டு வந்து க்ருமிகளை எல்லாம் க்ஷணநேரத்திலே பிராணன வாங்கி வதம் பண்ணிப்டும். அதனால தான் நாம பகவத் க்ருபையாலே க்ஷேமமா இருந்துண்டு ரசஞ்சாதமும், நார்த்தங்கா ஊறுகாயும் ஷாப்டறோம்' என்று எழுத முயற்சி செய்து பார்க்கலாம்.
இவ்வளவுக்குப் பிறகும் உங்கள் அறிவியல் கட்டுரைகளை ஒருவரும் வந்து படித்துக் கருத்து சொல்வதில்லையே என்ற கவலை வரும். பொறுமை. அதற்கும் வழி இருக்கிறது. உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து சிக்கும் கன்னி ஒன்று உள்ளது. அது சினிமாவும் சினிமா சார்ந்த எதுவும் (முக்கியமாக நடிகைகள்). கட்டுரைகளுக்கு முடிந்தவரை கிளுகிளுப்பான தலைப்பு வைக்கவும். எடுத்துக்காட்டாக 'மெலமின்' என்னும் நிறமி பற்றிய அறிவியல்கட்டுரைக்கு 'மைக்கேல் ஜாக்சனுக்கும் ஏமி ஜாக்சனுக்கும் என்ன கசமுசா?' என்று தலைப்பு வைக்கவும். மறக்காமல் ஏமி ஜாக்சனின் தொப்புள் தெரியும்படியான கவர்ச்சியான ஒரு வண்ணப் படத்தை தரவிறக்கி உங்கள் கட்டுரையின் நடுவே இணைக்கவும். இப்போது பாருங்கள் ஏமி ஜாக்சன் செய்யும் மாயஜாலத்தை. உலகெங்குமுள்ள சினிமாத் தமிழர்கள் கூகுளில் "ஏமி ஜாக்சன்+தொப்புள்" என்று தேடு பொறிகளில் இடும் எல்லாத் தேடலையும் கூகுள் தன் இணையற்ற கருணையால் அள்ளிக்கட்டி கொண்டுவந்து உங்கள் அறிவியல் கட்டுரைப் பக்கத்தில் கொட்டிவிட்டுப் போவதை கண்ணீர்வழிய கண்டு ஆனந்திப்பீர்கள். அறிவியல் கட்டுரைக்கு நடிகையின் தொப்புள் படத்தைப் போட்டு அறிவை அசுத்தப்படுத்தலாமா என்று யோசிக்காதீர்கள். அறிவு நெருப்பு போல. 'நெருப்புக்கு ஏதுடா சுத்தம் அசுத்தம்?' என்று நான் கடவுள் படத்தில் ஜெயமோகனே டயலாக் பேசி இருக்கிறார். ஆகவே துணிந்து செல்லுங்கள்.
இன்னொரு வழியும் உண்டு முகப்புத்தகம், கூகுள் கூட்டல் என ஒன்றுவிடாமல் எல்லா சமூக வலைப்பக்கத்திலும் உறுப்பிணராகுங்கள். அங்கே ஏதாவது ஆப்பிரிக்க மாடல் அழகியின் புகைப்படத்தைப் போட்டு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆரய்ந்து கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தமிழ் நண்பர் குழாமில் போய் அந்த ஆப்பிரிக்க அழகியின் படத்தைச் சிலாகித்து இரண்டு வார்த்தை எழுதிவிட்டு 'இது தொடர்பாக 'ஆப்பிரிக்காவும் அணுசக்தியும்' என்று போன வருடம் நான் எழுதிய அறிவியல் கட்டுரை பாகம்-1, பாகம்-2' என்று சுட்டியைப் போடுங்கள். உங்கள் துஷ்பிரயோகத்தைச் சுட்டிக்காட்டி அசிங்கமாகத் திட்டு விழும். இருந்தாலும் பரவாயில்லை. ஒன்றிரண்டு பேர்கட்டுரையை க்ளிக்கி விடுவார்கள் என்று அனுபவம் சொல்கிறது.
தெரிந்தவர், தெரியாதவர், நண்பர், விரோதி என்று ஆயிரக்கணக்கானவர்களிடம் நண்பர்களாக இணைந்துகொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்தாலும் லைக் போடுங்கள் அல்லது +1. பாராட்டுங்கள். சிலர் இரக்கப்பட்டு உங்கள் அறிவியல் கட்டுரைக்கும் 'அருமையாக எழுதியுள்ளீர்கள். அதிலும் அந்தக் கடைசிப் பத்தி கண்கலங்க வைத்து விட்டது நண்பரே. மிக்க நன்றி சுட்டிக்கு, வாழ்த்துக்கள்!!!!' என்று பின்னூட்டம் போட்டு உங்கள் எழுத்தாற்றலை ஊக்குவிப்பார்கள்.
அப்படியே இணையத்தில் அறிவியல் கட்டுரைக்கு கொஞ்சம் 'பேர்தெரிந்த பார்ட்டி'யாக நீங்கள் ஆகும் காலம் வரும். அப்போது கொஞ்சம் பந்தாவாக நடந்து கொள்ளத் தெரிய வேண்டும். முக்கியமாக யார் எது எழுதினாலும் அதைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. லைக் போடுவதோ, பின்னூட்டம் போடுவதோ கூடவே கூடாது. வற்புறுத்தி யாராவது கேட்டால் மட்டும், 'இன்னும் கொஞ்சம் தெளிவாகவும், கோர்வையாகவும் எழுத முயற்சிக்கலாம். கட்டுரைநீளமாக இல்லாமல் அரைப்பக்கத்துக்குள் சுருக்கமாக இருந்தால் தான் வாசகனைச் சென்றடையும். முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்' என்று மட்டும் போட்டால் போதும். பாராட்டின மாதிரியும் இருக்கவேண்டும், பாராட்டாத மாதிரியும் இருக்க வேண்டும். கவனம்.
ஒருகட்டத்தில் அறிவியல் கட்டுரை எழுத விஷயமே கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். பத்தாம் வகுப்பு தமிழ்மீடியம் அறிவியல் பாடப்புத்தகத்தை எடுங்கள். தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது எப்படி என்று ஒரு பாடம் இருக்கும். 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை? தங்கத்தைக் காதலிக்கும் பெண்களா இல்லை? என்னும் மிஸ்டர் ரோமியோ படத்தில் வைரமுத்துவின் வைரவரிகளுக்கு ஏற்ப தங்கத்தை விரும்பாத பெண்கள் நமது நாட்டில் உண்டா என்ன? ஆனால் இந்த தங்கம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது என்று நாம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா? அதற்கு விடை தேடித் தான் இந்தக் கட்டுரை' என்று முதலில் நாலு வரி எழுதிவிட்டு முடிந்தால் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தை கொஞ்சம் வரிகளை மாற்றி எழுத முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டாலும் மோசமில்லை. அப்படியே அந்தப் பாடத்தை எழுதி ஒரு அறிவியல் கட்டுரைதயாரித்து விடுங்கள். இது பத்தாம் வகுப்பு மாணவராலும், ஆசிரியராலும் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்து விட்டால்? என்று பதறாதீர்கள். வீட்டில் கஷ்டப்பட்டு இல்லாத காரணமெல்லாம் சொல்லி பணம் வங்கி இண்ட்டெர்நெட் மையத்திற்கு வரும் பையன்கள் உங்கள் அறிவியல் கட்டுரையை படிக்கவா வருகிறார்கள்?
'அப்படினா வாத்தியார்... ?'
போங்க சார், நீங்கள் உலகமே தெரியாதவராக இருக்கிறீர்கள். அறிவியல் கட்டுரை எழுத நீங்கள் சரிப்பட்டு வரமாட்டீர்கள். பேசாமல் www.jeyamohan.in என்று டைப் அடித்து தத்துவம், இலக்கியம், வரலாறு, வேதாந்தம் என்று எதையாவது படித்து எப்படியோ போங்கள்....
-பிரகாஷ் சங்கரன்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகவும், கோர்வையாகவும் எழுத முயற்சிக்கலாம். கட்டுரைநீளமாக இல்லாமல் அரைப்பக்கத்துக்குள் சுருக்கமாக இருந்தால் தான் வாசகனைச் சென்றடையும். முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteகபீஷே... :))))))))
DeleteYou miSsed one point The writer`s nickname I'd must be female name. Like bama vijayaragavan. Gayathri krishnamoorthy
ReplyDelete"அருமையாக எழுதியுள்ளீர்கள். அதிலும் அந்தக் கடைசிப் பத்தி கண்கலங்க வைத்து விட்டது நண்பரே. மிக்க நன்றி சுட்டிக்கு, வாழ்த்துக்கள்!!!!"
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
arumai! vishaya gnanathudan koodiya nayandi saralamaga varugirathu.poattu tahkkungal.
ReplyDeleteகெளப்பல்!
ReplyDeleteசூப்பரப்பு... நமக்கும் எழுத தோதா ஒண்ணுரெண்டு பாயிண்ட்ஸ் நோட் செஞ்சிகிட்டேன்.
ReplyDeleteஹ்ஹ்ஹ்ஹா... தமிழின் பொதுபுத்தி சார்ந்து எழுதப்படும்/ எழுதப்பட்ட எல்லா அறிவியல் கட்டுரைகளையும் நன்றாக பகடி செய்துள்ளீர்கள். சிறுவயதில் நான் நூலகத்தில் எடுத்து படித்த படித்த எல்லா அறிவியல் கட்டுரைகளும் இப்படிதான் இருந்தன(NCBH உடைய ரஷ்ய அறிவியல் புத்தகங்கள் தவிர்த்து). எல்லா புத்தகங்களும் அதை எழுதிய ஆசிரியனை முன்னிறுத்தி அவனது மேதாவித்தனத்தை காட்டுவதற்கான வழிகலாக இருந்தனவே தவிர அறிவியலோ அது சார்ந்து நம்மை சிந்திக்க வைப்பவயாக இருந்ததில்லை. இக்கட்டுரையை முன்பே படித்து போல் உள்ளது, பிரகாஷ். அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteராம்ஜி, சிவா, விஜயராகவன், அருணகிரி, அரவிந்தன் நீலகண்டன், சரவணன் விவேகானந்தன்... அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteஅநீ, அண்ணாச்சி நான் உங்கட்ட இருந்து சுட்டத திரும்ப நீங்க என்கிட்ட இருந்து சுடுறீங்களா...கர்மா, காலச்சக்கர தரிசனம் எல்லாம் கரெக்ட்தான் போல ;-)
அருமையான, பயனுள்ள கட்டுரை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் எழுத்தோட்டம்.
ReplyDeleteஇது அறிவியல் கட்டுரைக்கு மட்டுமல்ல, கட்டுரை என்று எழுத ஆரம்பித்தால், அரசியல், சினிமா, வம்புகள் , கிசுகிசுகள் இவைகள் தவிர எது எழுதினாலும் இக்கட்டுரையில் எழுதியதைப் படித்து எழுதுதல் நல்லது. எழுத விரும்புகின்றவர்களுக்கு இது ஓர் வழிகாட்டி
ஏற்கனவே இது போன்ற சில முயற்சிகள் செய்து எழுதி வருகின்றேன். இனி மற்ற முயற்சிகளையும் செய்வேன்.எல்லோரும் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஆகிவிடமுடியாது. கிறுக்குப் பட்டம் கிடைக்காமல் இருந்தால் சரி
நன்றி
Excellent post ; enjoyed a lot after a long time .yur article also had lots is scientific stuff
ReplyDeleteExcellent post ; enjoyed a lot after a long time .yur article also had lots is scientific stuff
ReplyDeleteசுஜாதாவ பகடி பண்றீங்களா?
ReplyDeleteஅபோப்டொசிஸ் : சிலுக்கு ஸ்மிதாவின் கடைசி முத்தம். அஹ்....தலைவா தலைப்பு ரெடி.
ReplyDeleteபத்தாம் வகுப்புப் புத்தகத்தை இப்போதே தேட ஆரம்பித்துவிட்டேன்.
ReplyDeleteஹி ஹி ஹி ஹி!
:))))))பின்னியெடுத்து விட்டீர்கள் பிரகாஷ்.
ReplyDeleteஜோக்ஸ் அபார்ட், இணையத்தில் அவ்வப்போது சில நல்ல, உருப்படியான அறிவியல் தமிழ் கட்டுரைகளும் எழுதப் படுகின்றன என்பது சந்தோஷம் தரும் விஷயம் தான். ’கல்லா நீள்மொழிக் கத நாய்’ என்ற தலைப்புடன் முன்பு சொல்வனத்தில் ஒரு அறிவியல் கட்டுரை வந்தது - ஒரு சயிண்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரையின் தழுவல். அந்தத் தலைப்பு மிகக் கச்சிதமாக பொருந்தியிருந்தது.
நாம் எல்லாம் பிரதிபலிப்பின் வெளி மட்டுமே ))) நாம் வளரும் போதே அம்மா , அப்பா பார்த்து copy அடிக்க ஆரம்பித்து விடுகிறோம் .... உன் எழுத்தின் சாயல்...கண்டதாக இருப்பினும் ...நடை பய்லாமல் ஓட முடியாதே )))...தொடர்ந்து எழுது.. உனக்கான சாயல் நீயே பெறுவாய் பிரகாஷ் )))) என் வாழ்த்துக்கள்
ReplyDeleteHope this encourages some bench sitters to start writing science blogs in Tamil. Most of the time it is irritating to see so much about cinema in internet.
ReplyDeleteGovind: Can you explain to me how this blog encourages 'bench sitters' to start writing science blogs in Tamil?
Deleteஅன்புள்ள பத்ரி, கோவிந்த் அவர்கள் 'உண்மையாகவே' இந்தக் கட்டுரை அறிவியல் கட்டுரை எழுதுவது எப்படி? என்பதைக் கற்றுக்கொடுக்கிறது என்று நினைத்து அப்படி எழுதியிருக்கலாம். பகடியைத் தவறவிட்ட அவரைவிட பத்ரி அதற்கு விளக்கம் கேட்கிறார் என்பது தான் எனக்கு பெரும் பகடியாக இருக்கிறது :)))))))
DeletePrakash: I am looking forward to reading your science articles in Tamil soon.
DeleteDear Badri, I have already written a few in Solvanam. You can find them here in my blog too..
DeleteThank you.
u r making parody on sujatha.anyway it is good..
ReplyDeleteநல்லாருக்கு பிரகாஷ். வருவது முதல்முறை. முக்கால்வாசி பொறி..எந்த ஹாஸ்யம் எடுபடும், எடுபடாது என்ற judgement-ஐ மட்டும் இன்னும் கூர்தட்டிக்கொண்டால் எதேஷ்டம்..
ReplyDelete(இந்த கமெண்ட் டெம்ப்ளேட்ல இல்லியே..:))
Wow...!!! excellent...!!!
ReplyDeleteவாசித்த, விமர்சித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteகவர்ச்சியா... சாரி கவரும் விதமாக எழுதி இருக்கீங்க! அப்படியே ஒரு டெம்ப்ளேட்டும் தயார் பண்ணி குடுத்துடுங்க. நான் கூட ஒரு கட்டுரை எழுதலாமான்னு பார்க்கிறேன் :)
ReplyDeleteamazing Prakash sankaran..
ReplyDeleteஅறிவியல் கட்டுரை எழுதுவதற்கு இவ்வளவு அழகா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க. இதுல நீங்க எந்த வழிய பின்பற்றுகிறீர்கள்?அருமை.
ReplyDeleteGreat and I have a dandy give: Where To Start With Whole House Renovation updating exterior of home
ReplyDelete