Friday, May 17, 2013

இடும்பைகூர் வயிறு

ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு வசந்த காலத்தின் மத்தியில் பிராக் வந்து இறங்கிய போது எனக்கு வயிறு இருப்பதே மறந்துபோய்விட்டது. எங்கு திரும்பினாலும் என் கண்களை நிறைக்கும் புதிய நிலப்பரப்பு, புதிய மக்கள், கட்டிடங்கள், கலாச்சாரம், காலநிலை... எல்லாமே வேறுவகையானவை. ஐரோப்பாவின் வசந்தகாலம் எண்ணற்ற நிறத்தில் வாரியிறைத்த பூக்களாலும், புல் முதல் பெருமரங்கள் வரை இளவெயிலில் குளித்து பசுமையில் மினுக்கிக்கொண்டு இருக்கும். ‘க்விஷ்க்...ஸ்விஸ்க்..’ என்று காதருகே தோட்டா பாய்வது போல ஒரு ஒலி ‘செக்’ மொழிக்கு. நெகிழ்ந்து, உருகி, வியந்து, ஒப்பிட்டு விழிகள் உருள மனம் ஒவ்வொன்றாய்த் தொட்டு ஓடிக்கொண்டே இருந்தது. கண்களிலும், செவிகளிலும் உயிரின் ஆற்றல் முழுவதும் குவிந்திருந்தது போல உணர்ந்தேன். என்னை விமான நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு போக என் ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் வந்திருந்தார். காரில் உட்கார முன் சீட்டின் இடது பக்கத்து கதவை திறக்கப் பாய்ந்த போது சிரித்தார், அப்போதே தெரிந்துவிட்டது இங்கே பலதும் தலைகீழ் என்று. சுற்றிவந்து வலது பக்கத்து இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன்.


மாணவர் விடுதியின் அறைக்கு கொண்டு வந்து விட்டார், பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு குளித்து தயரானேன், இரண்டுமணி நேரத்தில் திரும்ப வந்து இந்திய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தார். வந்த முதல் நாளே ஊர்ப்பாசம் பொங்க ஹோட்டல்காரரிடம் அவர் குடும்ப புராணம் வரை அனைத்தையும் கேட்டேன். மறுநாளும் வந்து காரில் அழைத்துச் சென்று சுருக்கமாக சூப்பர் மார்க்கெட் உட்பட ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டு சில பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றும் வேறொரு இந்திய உணவகத்தில் சாப்பாடு. அதற்கு அடுத்த நாள் என் பிறந்தநாள், எனவே அன்றும் அவருடைய செலவில் வெளியில் உணவு. இரவு ஒன்பது மணிக்கும் சூரியஒளி பிரகாசமாக இருக்க ராத்திரி ஆகிவிட்ட உணர்வே வராமல் மனம் பரபரப்பாக இருந்தது.

விடுதி அறையில் நேரம் போகாமல் ஜன்னல் வழியே ஊரை வேடிக்கை பார்த்தபடி வீட்டு ஞாபகங்களை ஓடவிட்டுக்கொண்டே, அம்மா கட்டிக் கொடுத்துவிட்ட சீடை, கைமுறுக்கு, தேன்குழல், மிக்சர், தேங்காய் பர்பி, மைசூர்பாகு (நெய் உறைந்து குறுனை குறுனையாக மேலே இருந்தது), அப்பாவும் அண்ணாவும் ‘வச்சுக்கோடா.. இருக்கட்டும்..’ என்று ஆர்ய பவன், அகர்வால் ஸ்வீட்ஸ், டெல்லிவாலா, ஸ்ரீ க்ருஷ்ணா, லெக்ஷ்மி விலாஸ் என்று மதுரையின் பல்வேறு கடைகளிலும் வாங்கி நிரப்பியிருந்த திண்பண்டங்களைக் கொறித்தேன். ‘வச்சு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு’ என்ற அம்மாவின் வார்த்தைகள் மிக்சர் பொட்டலத்தில் முதல்கை வைத்தபோதே மறந்து போய்விட்டது. கடைசித் தூளை உள்ளங்கையில் ட்டி அண்ணாந்து வாயில் கொட்டிய பின், கையைத் தட்டிவிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பி, மனம் நிறைந்து, ‘என்ன உலகம் இது, சும்மா திண்ணு தூங்கி.. போதும் எதுவும் வேணாம்’ என்று கொஞ்சம் தத்துவம் கொட்டாவியுடன் கலந்து வழிய சாதித்துவிட்ட திருப்தியுடன் தூங்கலாம். தூங்கினேன். ஒருவாரம் ஸ்வீட் ஸ்டாலில் வாழ்ந்தது போல் இருந்தது.

ஆசிரியர் பிரட், ஜாம், வெண்ணை, டீ பைகள், மின்சார கெட்டில் எல்லாம் கொடுத்திருந்தார். காலை ஒரு பிரட்டில் வெண்ணையும் சிவப்பு ஜாமும் பரப்பி இன்னொரு பிரட்டை மேலே வைத்து சாப்பிட, ரெண்டுவாய்க்கு ஒரு தரம் ஏர்ல்க்ரே டீ ஆவி நளினமாக ஆட சூடாக, மணக்க குடித்துவிட்டு கூட்டமே இல்லாத டிராமில் ஏறி பல்கலைக்கு செல்லுதல்... எல்லாம் ஜோராக இருந்தது. ‘ஃபாரினில்’ இருக்கிற உணர்வைத் தந்தது. நாளாவது நாள் இனிப்பு ஜாம் முகத்தில் அடிப்பதுபோல அசிங்கமாக ரத்தச்சிவப்பாக, பொருத்தமில்லாமல் குளிர்ந்த வெண்ணை வழவழவென்று, பிரட் பொதுக்பொதுக்கென்று... அப்புறம் கரகரப்பான பிஸ்கட்டுக்கு மாறினேன். அது இரண்டாவது நாளே மெண்ணியைப் பிடித்தது. அடுத்து ‘இதுக்கு ஒன்னுமே சாப்பிடாம போகலாம்’ என்ற விவேகத்தை அடைந்தேன். மத்தியானம் பசி வயிற்றுக்குள் இருந்து கடப்பாரையால் குத்தியது. எதுவோ இழந்தது போல் மனசெல்லாம் ஒரு மந்தம்.

பத்துநாள் ஆனபிறகு தான் தெரிந்தது, அரிசிச் சோறே சாப்பிடவில்லை என்கிற ‘பகீர்!’ உண்மை. அப்போது தான் சோறு வேண்டுமென்றால் சமைக்கவேண்டும் என்ற இன்னொரு ‘பகீர்!’ உண்மையையும் கண்டுபிடித்தேன். ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து, அம்மா ‘எதுக்கும் இருக்கட்டும்’ என்று கட்டிவைத்திருந்த அரிசியை ரெண்டு கப் சேர்த்தேன். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பாத்திரம் சிலநிமிடங்களில் துலாபாரம் படத்தைப் பார்த்த பாட்டி போல பொங்கிப் பொங்கி அழுதது. வாயால் நுரையை ஊதியும், கரண்டியால் கிண்டிவிட்டும் ஆற்றுப்படுத்தினேன். ஒருகட்டத்தில் வெடித்துக் கதறியது. படத்தின் களைமாக்ஸ். பதறினேன். என்னால் அதன் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அழுது வடிந்து அடுப்பெல்லாம் வெந்த சோறு கொட்டி தீய்ந்து கருகிய வாடை. அது பொது சமையலறை. ‘ஐயையோ’ என பாத்திரத்தை இறக்கிவைக்க கையால் எடுத்தேன். ஊரில் என் அம்மாவிற்கு கேட்டிருக்கும் நான் போட்ட அலறல், ‘அம்மா...’ என்றபடியே சூடு பொறுக்கமாட்டாமல் பாத்திரத்தைக் கீழே போட்டேன். பாத்திரத்தில் ஒரு கைப்பிடிக்கும் குறைவாக சாதம் பாதிகூழாக மிஞ்சியிருந்த்து. அள்காட்டி விரலும் கட்டைவிரலும் பழுத்திருந்தது. நீரில் விரலை நெடுநேரம் வைத்துக் கொண்டே கீழே சிதறியிருந்த சோற்றைப் பார்த்தேன். வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தது. அன்று அழுதுகொண்டே அந்த சமையலறை முழுவதையும் சுத்தம் செய்தேன். மிஞ்சியிருந்த சாதத்தை உப்புப் போட்டு கரைத்து அம்மா என் திட்டையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எனக்குத் தெரியாமல் அடைத்து வைத்திருந்த நார்த்தங்காயுடன் சேர்த்து குடித்தேன். விரல் எரிச்சல், உடல் எல்லாம் வலி, பசி எல்லாமாக அம்மாவின் நினைவை மலையில் இருந்து பாறையை உருட்டிவிடுவது போல ஒன்றோடொன்றாக பல பழைய விஷயங்களையும் சேர்த்து தள்ளிக் கொண்டு வந்தது. படுக்கையில் தூக்கம் வராமல், காரணமே இல்லாமல் இந்த நாட்டை வெறுத்தேன். சபித்துக் கொண்டு அழுதேன். அழ அழ பசி அதிகமானது. நள்ளிரவில் ஃபிரிட்ஜில் ஜாம் பாட்டிலைத் தேடி எடுத்து, காலியாயிருந்த பாட்டிலில் விரல் விட்டு வழித்து நக்கிவிட்டு தூங்கினேன்.

என்னால் ‘ஒரே கட்டாக’ நிறையச் சாப்பிட முடியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ‘வக்கனையாகச்’ சாப்பிடப் பிடிக்கும். வீட்டில் நடக்கும் விசேஷங்களில் என் அம்மாவிற்கு நான் தான் உணவைச் சுவைத்து விமர்சனம் செய்யும் விற்பன்னன். இரண்டு கூட்டு, இரண்டு கறி, வடை, பாயசம், பச்சடி உட்பட குறைந்தது பதினைந்து பதார்த்தங்களாவது ஒற்றையாளாய் அம்மா சமைப்பாள், சிலசமயம் உதவிக்கு தெரிந்தவர்கள் யாராவது. விருந்தினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, தாம்பூலம் கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு அப்பா, அண்ணனெல்லாம் மதியத் தூக்கத்திற்கு போகும் போதே இரண்டறை மூன்று மணி ஆகிவிடும். அதற்கு மேல் புகை ஓய்ந்த, தகிக்கும் சமையலறையில், எண்ணெய்ப் பிசுபிசுப்பில், ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி அமர்ந்து வியர்வை வழிய சிறிய தட்டில் கொஞ்சமாக சாதமும், ரசமும் மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிடும் அம்மாவிற்கு தெண்ணையோலை விசிறியால் விசிறிவிடுவேன். ஒருநிமிடம் கூட ஆகியிருக்காது, ‘கைவலிக்கும், போதும்பா’ என்று சொல்லி நிறுத்திவிடுவாள். தெருவிலும், சொந்தக்காரர்களுக்கு மத்தியிலும் அம்மாவின் கைப்பக்குவம் பிரசித்தம். வாசனையையும், சாப்பிட்டவர்கள் முகக்குறிப்பையும், அளவையும் வைத்தே அம்மாவுக்குத் தெரிந்துவிடும் ஒவ்வொன்றும் எப்படி இருந்தது என்று. ஆனாலும் ஒவ்வொரு பதார்த்தத்தையும் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பாள். அம்மாவை சீண்டுவதற்கென்றே, "சர்க்கரைப் பொங்கல்ல துளி பச்சைக் கற்பூரம் ஜாஸ்தி, பருப்பு வடைக்கு மாவை அரைக்கும் போது ஒன்னுரெண்டா அரைச்சிருக்கனும், ரொம்ப நைஸா அரைச்சுட்டே.. மொறுமொறுப்பு இல்ல, ரசத்துல ஒரு உப்பு கம்மி, பெருங்காயமும் ஒரு கிள்ளு குறைவு.. அதனால வாசனையே கொஞ்சம் குறைஞ்சு போச்சு" என்று ஏதாவது சொல்வேன். சிரித்துக்கொண்டே “நாளைக்கு உம்பொண்டாட்டி கிட்ட இப்படியே சொல்லு, அடுத்த வேளை சோத்துக்கு தட்டெடுத்துண்டு போகனும்” என்றபடியே எழுந்துபோய் விடுவாள். சமையல், வீடு, ஊர், அம்மா, ருசி, பசி ஒன்றுடன் ஒன்றாக நினைவுகள் பிணைந்து வந்து நெஞ்சைக் கவ்வும். ஓய்ந்துபோய் கவனத்தைத் திருப்ப கடினமான எதையாவது எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். தோற்றுப் போய் நாக்கில் எச்சில் ஊற பருப்புப் பாயசத்திலோ, அடை அவியலிலோ வந்து மனம் முட்டிக் கொண்டு நிற்கும். ஏக்கத்துடன் நாட்கள் போகும்.

ஆரம்பத்தில் நான்கு மாதம் வரை என்னிடம் மடிக்கணினி கிடையாது. வெளியில் இருந்து தான் வீட்டிற்குப் பேச முடியும். செலவு அதிகம். அம்மா அதிகம் கேட்கமுடியாமல், தொண்டைஅடைக்க ‘முடியலைன்னா வந்துடுப்பா’ என்றாள். அப்பா ஃபோனை பிடுங்கி ‘படிக்கிற வழியப்பார்றா, சமையல் எல்லாம் தன்னால வரும்’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

கணக்காக தண்ணீர் ஊற்றி சாதம் வைக்கும் கலையில் மெல்ல தேர்ச்சி அடைந்திருந்தேன். தயிர்சாதமும் நார்த்தங்காயுமே என் அறிவின், ஆற்றலின் ரகசியம் என நம்பிவந்தேன். அது ஒருநாளும் திகட்டும் உணவாக மாறாது என்ற என் பிரியமான கோட்பாட்டைச் சொந்த அனுபவத் தரவுகளின் தர்க்கத்தின் அடிப்படையில் கொள்கை ரீதியிலான மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாகியது. அம்மாவிடம் சில சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பச் சொன்னேன், ஒருமாதம் கழித்து ஒரு கடிதம் வந்தது, எனக்கு இங்கு வந்த முதல் கடிதம். உள்ளே அப்பா ஆங்கிலத்தில். அறிவுரைகளும், என்னை தனித்த மனிதனாக வளர்த்துகொள்ள வேண்டிய தேவைகளையும், ஆய்வில் நான் சாதித்து பெருமை தேடித் தரவேண்டிய கடமையையும், இன்னபிறவும். அம்மா வாழ்க்கையில் எனக்கு எழுதிய முதல் கடிதம் அது தான். நேரடியாக வீட்டில் பேசும் தமிழில், பழைய பாணி கையெழுத்தில், மேலே நடுவில் பிள்ளையார் சுழி கீழே ஸ்ரீராமஜெயம், இடது ஓரத்தில் ‘க்ஷேமம்’ வலது ஒரத்தில் தேதி. சமையல் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து நன்றாகப் சாப்பிட்டு உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச்சொல்லி, அநேக ஆசீர்வாதங்களுடன் முடித்திருந்தார். தாளின் பின்பக்கம் ‘வெறுமன இருக்கே’ என்று சில புள்ளிவைத்த கோலங்கள் வரைந்திருந்தார். மறுபடியும் அழுகை. இவ்வளவு இலகுவாக நெகிழக்கூடியவனா நான் என்பதை அறிந்துகொள்ள வைத்தது அம்மாவின் கையெழுத்து.

அம்மாவின் குறிப்புகள் பெரும்பாலும் இப்படி ஆரம்பிக்கும், “பூச்சி இல்லாத கத்திரிக்காயா பாத்து வாங்கு. நன்னா அலம்பிட்டு சின்னச்சின்ன துண்டா நறுக்கிக்கோ. அடுப்புல இலுப்பச் சட்டியில கொஞ்சம் எண்ணை விட்டுண்டு...” என ஆரம்பித்து போகப்போக ‘”தேங்காய பூப்போல துருவி கொஞ்சமா வதக்கிண்டு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு நன்னா வெழுமூனா அரைச்சு எடுத்துண்டு...” என்று சிக்கலாகும். என்னிடம் தேங்காய் துருவி, மிக்ஸி உட்பட எதுவும் கிடையாது. தவிர அவ்வளவு பாத்திரமும் இருக்காது. சமைக்கிறேனோ இல்லையோ அதைப் படிக்கும் போது அம்மாவின் அருகாமையும், கிராமத்து வீட்டின் ஓட்டுக்கூரை போட்ட சமையல் அறையும், அங்கிருக்கும் அம்மாவின் அன்னபூரனி படமும், சமையல் மனமும் எல்லாம் துல்லியமாக நினைவுக்கு வரும். அவியல் சாப்பிட வேண்டுமென்றால் அம்மாவின் அவியல் குறிப்பை எடுத்துப் படித்துப் பார்ப்பேன், அப்படியே ஒவ்வொரு நாளும் தயிர் சாதத்துடன், அம்மாவின் குறிப்பில் பாகற்காய் பிட்லை, கத்திரிக்காய் கொத்சு, வாழைப்பூ பருப்பு உசிலி கறி எல்லாம் படித்துச் சாப்பிட்டுக் கொள்வேன். (இங்கே வாழைப்பூ கிடைக்கும் என்கிற என் அம்மாவின் நம்பிக்கையைத் தனியாகப் பாராட்ட வேண்டும். ஒரு வியட்நாமிய மார்கெட்டில் அதையும் பார்த்தேன்).

வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று சம்பந்தமே இல்லாமல், வெங்கலப்பானையில் செய்யும் அரிசி உப்புமா நினைவுக்கு வருவது எப்படி என்று வி.எஸ் ராமச்சந்திரனைத் தான் கேட்க வேண்டும். மூளையில் அரிசி உப்புமாவுக்கான நியூரானும், வைரஸ் என்ற சொல்லிற்கு பொருள் தரும் ஒரு நியூரானும் நரம்புமண்டலத்தின் விரைவுப்பாதைகளின் ஏதோ ஒரு குறுக்கு முனையில் முட்டிக்கொள்கிறதோ என்னவோ. பூரிமசாலின் இளம் மஞ்சள் பரப்பில் சிவந்த கேரட் துண்டுகளும், பச்சைமிளகாயும் வண்ணப்பொட்டுக்களாகத் தெரிய, பச்சைக் கறிவேப்பிலையின் வாசம் கலந்து வரும். அடக்க முடியாமல் கூகிளில் போய் “south Indian breakfast” என்றெல்லாம் தேடி படங்களைப் பார்ப்பேன். ஏதேதோ உயர்தரசைவ ஹோட்டல்கள், பெரிய எவர்சில்வர் தட்டில் வட்டமாக வாழையிலையை நறுக்கிப் போட்டு நடுவில் பிரவுனாகவும், வட்டவட்டமாக விரவி வரும் வெளியில் பொன்நிறமாகவும் இருக்கும் முறுகல் தோசைகளை குழல் போலச் சுருட்டி தட்டில் நீட்டுவாக்கில் வைத்து, வெள்ளைவெளேரென்று நான்கு இடிகளும், நல்ல குழிவான கரண்டியில் எடுத்துப் போடப்பட்ட, முழு மிளகுகளும், முந்திரிப்பருப்புகளும் துருத்திக்கொண்டு தெரியும் குழைவான வெண்பொங்கல் பந்துபோல உருண்டை வடிவமாக இருக்க, இஞ்சியும், பச்சை மிளகாயும் நாசூக்காகத் வெளித்தெரிய உப்பிய உளுந்தவடைகள் இரண்டும், சிறிய கப்களில் சிவப்பு, வெள்ளை, பச்சை என்று தேசிய ஒருமைப்பாட்டுச் சட்னி வகைகளுடன், கொஞ்சம் பெரிய கப்பில் சின்னவெங்காயம் மிதக்க எண்ணெய்த் திவலைகளுடன் இருக்கும் சாம்பாரும், டபரா செட்டில் பக்கத்திலேயே ஆவிபறக்க நல்ல அடர் நிறத்தில் இருக்கும் ஃபில்டர் காபியும் மென்பொருள் கொண்டு மெருகேற்றப்பட்ட அழகழகான படங்கள் காணல் உணவாக கண் முன் தெரியும். கண்கொட்டாமல் இட்லி சாம்பாரில் ஆரம்பித்து காபி வரை ஒவ்வொன்றையாக வரிசைக் கிரமமாக நிதானமாகப் பார்த்து முடிக்கும் போது ஒரு ‘விர்ச்சுவல் ஃபீஸ்ட்’ சாப்பிட்ட திருப்தி இருக்கும். இப்படியே “south Indian lunch” “masal dosa” “puri masal” எல்லாம் இணையத்தில் சாப்பிடலாம். என்ன கற்பனையும், அதில் ஒன்றிவிடும் மனமும் இருக்க வேண்டும். கல்யாணமாகி இந்தியாவில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சந்தோஷமாக என் கண்டுபிடிப்பைச் சொன்னபோது, “அடக்கமுடியாம போர்ன் சைட்டைப் பாக்கற மாதிரி... என்னடா இது??” என்று சத்தம்போட்டு சிரித்தான். ரசனையற்றவன். உணவில் நுண்ரசனை இல்லாதவர்களை இனிமேல் நட்பாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவுகட்டினேன். (நடுவில் ஒருமுறை இணையத் தேடலில் இட்லிவடை தளம் வந்து கடுப்பேற்றியதும் நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் அதையும் படிக்க ஆரம்பித்தேன்.)


ஊரில் இருக்கும் போது ஹோட்டல்களுக்கு நண்பர்களுடன் சென்றால் யாராவது, “’லச்சா பரந்தா, கராஹி பனீர், தால் தடுக்கா” என்று வட இந்திய உனவுவகை பெயர்களாக வாயைத் திறந்தால் அதை “வட இந்திய உணவு மேட்டிமை மனோபாவம், இந்தி மொழித்திணிப்பு உள்குத்து’ என்று எதையாவது கடக்குமுடக்கு என்று சொல்லி அடக்கிவிடுவேன். முதல் காரணம், ‘முருகனுக்கு மிஞ்சி தெய்வமில்லை, முறுகல் தோசைக்கு மிஞ்சி உணவு இல்லை’ என்கிற என் தீவிர மனச்சாய்வு, இரண்டாவதும் முக்கியமானதும் – எனக்கு ஹிந்தி தெரியாததால் வட இந்திய உணவுப் பெயர்கள் என்ன ஏதென்று புரியாது, சர்வரைக் கேட்கவும் கூச்சம். இங்கே வந்தால், ‘ஹ்லேப், ததார்ஸ்கா ஒமாச்கா, ப்ராம்பொராக், ஸெலனினோவி குலாஷ்’ என்று உணவுப் பெயர்களெல்லாம் ரஷ்ய இலக்கிய எழுத்தாளர்கள் பெயராக ஒலித்ததால் ‘என்ன இருந்தாலும் ஹிந்தி நம்ம நாட்டு மொழிதானே’ என்று சமரசம் செய்து கொண்டுவிட்டேன். தவிர  இங்கே இந்திய உணவகம் என்றால் அது வட இந்திய உணவகம் தான். தென்னிந்திய உணவுகளே கிடைக்காது. மசால் தோசை, சட்னி என்று வாரத்தில் ஒருநாள் சில இடங்களில் ஒன்று செய்வார்கள். ஒரு தீவிர தோசை வாசகன், அந்தப் பிரதிகளைக் கையால் தொடக்கூட மாட்டான்.

“இப்பதான் சுடச்சுட நல்ல காரமான அடையும், அதுமேல நெய்விட்டு, தொட்டுக்க வெல்லமும் சாப்பிட்டேன். காரம் அடங்குறதுக்குள்ள ஒரு காபி சாப்ட்டா.. அடடா... சொர்க்கம் தெரியுமா சொர்க்கம்... அது இது தான்” என்று விவரிக்கும் நண்பர்களும், ஆன்லைன் சேட்டில் வந்து “தயிர் சாதமா பண்ணப்போற?? சாதத்தைக் குழைவா வடிச்சு, கொதிக்க கொதிக்க இறக்கிவச்சவுடனேயே  அதுல கொஞ்சம் பசு வெண்ணைய வழிச்சுப்போட்டு, நன்னா கெட்டியா எருமைத் தயிரை தளும்ப ஊத்தி, இஞ்சி, மாங்காத் துண்டு, பச்சைமிளகாய் கடுகு உளுத்தம்பருப்பு தாளிச்சு, ரெண்டு கறிவேப்பிலையும், கொஞ்சம் கொத்தமல்லித் தழையும் அப்படியே மேலோட்டமா போட்டு உப்புப் போட்டு கிளறி மூடிவச்சுட்டு, அந்த ஆவிமணத்தோட எடுத்து போட்டு ஆவக்கா ஊறுகாயோட சாப்டனும். இல்லாட்டா சாப்பிடவே கூடாது. வேஸ்ட் “ என்று ரெசிப்பி தரும் சுகிருத்துக்களும், விதவிதமாகச் சமைத்தும், ஓட்டல்களில் போய் சாப்பிடுவதற்கு முன் கர்ம சிரத்தையாக போட்டோ எடுத்து கையோடு ஃபேஸ்புக்கில் போட்டு ‘யம்மி...டேஸ்ட்டி..ஆவ்சம்’ என்றெல்லாம் மேலதிக விவரணை செய்யும் நண்பர்களும் தாங்கள் செய்வது பஞ்சமா பாதகத்தில் ஒன்று என்று அறிவதில்லை. “செரி, நம்ம பயதான..போட்டும்!” என்று மன்னிக்கிறேன், ஒவ்வொருமுறையும். அதைவிடவும் கொடுமை, இது எதையுமே புரிந்துகொள்ளாமல், “படிக்கிற காலத்துல சாப்பாட்டுல உப்பு இருக்கா இல்லையாங்கறது கூட தெரியக்கூடாது, கவனம் படிப்புமேல மட்டும் தான் இருக்கனும். இப்படி தீனி தீனின்னு அலையக்கூடாது. இப்படித்தான் ஒரு முனிவரோட குருகுலத்துல ஒரு சிஷ்யன்...” என்றூ நீதிக்கதை சொல்லும் தத்துவ முத்துக்களை நான் புறக்கணிக்கிறேன்.

                             

வெவ்வேறு ருசியுள்ள உணவுகள் ஆனாலும், நாக்கில் சில நொடிகள் தங்கியிருந்து விட்டு குடலுக்குள் போய் எல்லாம் ஒன்றான இரண்டற்றதாக ஆகப்போகும் பொருட்கள் மனிதனை எவ்வளவு நுண்ணுணர்வுள்ள பலவீனமானவனாக்குகின்றன என்பதையும் அனுபவத்தால் கற்றுக்கொண்டேன். கனவுகள் கருப்பு வெள்ளையில் தான் இருக்கும், மிகச்சில நிமிடக் கனவுகள் கூட மிக நீண்டதாகத் தோன்றும்... இப்படியாக கனவுகளின் பொதுஇயல்பு பற்றி பல உண்மைகள் உண்டு. மிகமிக அரிதாகவே கனவில் ருசி, மணம் போன்றவை தெரியும். பெரும்பாலானபேர்களுக்கு அவ்வாறான அனுபவமே இருக்காது. எனக்கு அந்த அபூர்வமான கனவும் வாய்த்தது. அதுவும் சாப்பாட்டோடு தொடர்புடையது தான். கத்திரிக்காய் பிட்லை செய்வதற்கு முன் கடலைப்பருப்பை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுப்பார்கள். ஒருவீட்டில் சரியான பக்குவத்தில் வறுக்கும் போது எழும் அந்த வாசனை தெருவையே நிறைக்கும். கனவில் கடலைப் பருப்பு வறுக்கும் வாசனை மிகத் துல்லியமாக ஒரு முறை முகர்ந்திருக்கிறேன். தேங்காய்ப்பூரணக் கொழக்கட்டை -வெல்லமும், தேங்காயும், வெந்த அரிசி மாவுடன் சேர்ந்து வாயில் கரைவதாக வந்த கனவும், அந்தச் சுவையை பிரமிக்கும்படி மிக யதார்த்தமாக உணர்ந்து வாயில் நீர் ஊற எழுந்து ஏமாந்திருக்கிறேன். ஊருக்கு விடுமுறையில் வருவதைப் பற்றிய திட்டமிடல்கள் தொடங்கியவுடன், இம்முறை என்னவெல்லாம் சாப்பிடவேண்டும் என்ற பட்டியலும் தயாராகும். ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு ஒருமாதம் கழித்து திரும்பிவர விமானம் ஏறிவிட்டேன். விமானம் காற்றை உந்தி மதுரை மண்ணை விட்டு மேலெழுகிறது, ‘ஐயோ விரும்பியவற்றில் ஒன்றைக் கூட சாப்பிடவில்லையே... எல்லாம் போச்சே.. இனி ஒருவருஷம் ஆகுமே” என்று நெஞ்சுபடபடக்க கதறினேன். அக்குளில் சூடாக வியர்த்து, அடிவயிறு கொதித்து குழைவாக, நெஞ்சுத் துடிப்பு காதில் கேட்க விழித்தேன். கனவு. நான் கண்டதிலேயே இரண்டாவது கொடூரமான  - உக்கிரக் கனவு இதுதான். ‘மாட்டேன், என் லீவு நாட்களை வீணாகக் கழிக்க மாட்டேன். விதவிதமாகத் திண்பேன். காரடையான் நோம்புக் கொழுக்கட்டையிலிருந்து, கார்த்திகை அப்பம் வரை... நான் இல்லாமல் வீட்டில் கொண்டாடிய ஒருவருடத்து பண்டிகை விசேஷ உணவுகள் எல்லாவற்றையும் செய்து தரச் சொல்லி திண்பேன். இது சத்தியம்.’ என்று வீரசபதமிட்ட பின்னரே நிம்மதியாக உறங்க முடிந்தது.

மடிக்கணினி வாங்கி இணையத்தில் புழங்க ஆரம்பித்ததும், சுஜாதா கதைகளைப் படித்து, ‘வாழ்ந்தால் ஸ்ரீரங்கம், சாப்பிட்டால் ஐயங்கார் புளியோதரை’ என்றிருந்த ஒரு சுஜாதா பக்த நண்பன் அதே ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயின் mykitchenpitch என்ற தளத்தை சிபாரிசு செய்தான். கூடவே, “பின்நவீனத்துவ உப்புமா செய்றது எப்டின்னு அதுல ரெசிபி இருக்கும். படி, முடிஞ்சா செய்யி..” என்று ஒரு வஞ்சகமான வாழ்த்தும். உண்மையில் இங்கே தனித்த வாழ்க்கையில் நான் தினமும் தவறாமல் படிக்கும் இரண்டு தளங்கள் இரண்டு ‘ஜெ’ க்களுடையது. ஒன்று ஜெயமோகன், இன்னொன்று ஜெயஸ்ரீ. இரண்டும் ஒவ்வொரு வகையில் என்னை நிரப்புகின்றன. பொதுவாகச் சொன்னால் நான் “ஜெ” இன் வாசகன். என்ன ஒன்று ஜெமோவுக்கு எழுதுவது போல ஜெயஸ்ரீக்கு ‘அன்புள்ள ஜெ, பொரிவிளங்கா உருண்டையின் குறியீட்டு அர்த்தத்தை பொருள் விளங்கா உருண்டை என்று விளக்கியிருந்த விதம்...’ என்று ஆரம்பித்து கடிதம் எழுதவில்லை. அவ்வளவுதான். செக் குடியரசிலிருந்து ஜெயஸ்ரீயின் தளத்திற்கு வந்த ஹிட்டுக்கள் முழுவதும் என்னுடையதாகத்தான் இருக்கும்.


அப்படியே சமையல் கலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த போது இன்னொரு நண்பன் மூலமாக யூட்யூபில் ஸ்ரீரங்கம் ராது என்னும் மாமியின் சமையல் செயல்முறை (கூடவே அவர் கணவரின் ‘ஆமாப்பா.. தக்காளிய நன்னா ‘செவப்பா’ வதக்கிக்கோ’ என்பது போன்ற உபகுறிப்புக்கள்) அப்புறம் வட இந்திய சமையல்களுக்கு,  “நமஸ்தே. வெல்கம் டூ மஞ்சுளாஸ் கிட்சன். மை நேம் இஸ் மஞ்சுளா. டுடே வீ ஆர் கோவிங் டூ ப்ரிபேர் எ இஸ்பெசல் ஐட்டம்...” என ஆரம்பிக்கும் மஞ்சுளா ஆண்ட்டி என்று தகவல் மூலங்கள் வளர்ந்து வந்தது. நன்றாகச் சமைப்பதாக ஒரு பிரமை தோன்ற அரம்பித்ததும் பரீட்சித்துப் பார்க்க, உயிரியல் ஆய்வுமாணவனின் குரூர புத்தியுடன் பரிசோதனை எலிகளைத் தேடினேன். அதற்கும் ஆள் கிடைத்தார்கள். வெங்காயத்தை வதக்கி, உப்பும் மிளகாய்ப்பொடியும் கொட்டிவிட்டு ஆனியன் ஃப்ரை என்று சமாளிக்கும் ஒரு ஆள் சிக்கினார். முதல் சோதனையாக வெண்பொங்கலும் சாம்பாரும் செய்து பார்த்தேன். பரிசோதிக்கப்பட்ட ‘சப்ஜெக்ட்’ எந்த தீயவிளைவும் உண்டாகாமல் ஆரோக்கியமாக இருந்தது, கூடவே ‘இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டது மகிழ்ச்சியைத் தந்தது. அவருடைய வியப்பை தெரிவிக்கும் வார்த்தைகளில் அதி உயர்வானது ‘பிரம்மாண்டம்’. என்ன பிரச்சனை என்றால் எல்லாவற்றிற்கும் அதே வார்த்தையைச் சொல்லித்தான் பாராட்டுவார். ‘சார், பிண்ணிட்டீங்க. பொங்கல் பிரம்மாண்டம் போங்க. சாம்பார் அதவிட பிரம்மாண்டம். என்ன ஒன்னு கூட வடை இருந்தா இன்னும் பிரம்மாண்டமா இருந்திருக்கும்’. எனக்கு வந்த கடுப்பில் “இவன் மேல் ஒரு நாள் மஞ்சுளா ஆண்ட்டியின் ‘கஸ்டா கச்சோரி’ யை பிரயோகித்துப் பார்க்கவேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பார்க்கும் இந்திய நண்பர்களிடம் எல்லாம் “சார், வெண்பொங்கல் பிரம்மாண்டமா செய்வார், சார் காப்பி போட்டா பிரம்மண்டமா இருக்கும்” என்று சொல்லி என் கொ.ப.செ வாக செயல்பட்டதால் மன்னித்துவிட்டேன்.

அடுத்து கொஞ்சம் தைரியமாக ஒரு செக் நண்பனை சாப்பிட அழைத்தேன். பரிசோதனைகளுக்கு வெள்ளை எலிகள் இன்னும் உகந்தவை. கையில் ஒரு பியர் கேனுடன் வந்து பாசுமதி அரிசி சாதத்தையும், சாம்பாரையும் ஒரு பிடி பிடித்தான். கூடவே ஊறுகாயும். குடிக்க பியர். வெகுவாகச் சிலாகித்துவிட்டுப் போனான். ‘பயல் நடிக்கிறான். அந்தப் பக்கம் போய் புலம்புவான்’ என்று எதிர்பார்த்தால், அடுத்த வாரமும் ‘இன்னைக்கு என்ன சமையல், சாப்பிடலாமா?’ என்று வந்துவிட்டான். ஆச்சர்யம். மசாலாவும், காரமும் பிடிக்காதவனைக் கூட என் கைப்பக்குவம் வசப்படுத்தி விட்டது. சாம்பாரை விட உலகில் என்ன சிறந்த உணவு இருக்க முடியும்? சாப்பிட்டு முடித்துவிட்டு, போன வாரம் என் காரமான சாம்பாரைச் சாப்பிட்டுவிட்டு மறுநாள் வயிறு கலங்கி ‘காரியங்கள் எல்லாம் சுளுவாக நல்லபடியாக முடிந்தது’ என்ற தகவலைச் சொல்லி நன்றியும் சொன்னான். ‘அடப்பாவி, நான் கஷ்டப்பட்டு சமைக்கிறது, உனக்கு கான்ஸ்டிபேஷனுக்கு மருந்தா?’ என்று சொல்லி துரத்திவிட்டேன். பாத்திரமறிந்து பிச்சை இட வேண்டும் இனிமேல்.


பிறர் சமையல் நமக்கு எப்போதும் நன்றாக இருக்கும் என்பது புதியவிஷயமில்லை, ஆனாலும் என்னைவிட நன்றாகச் சமைப்பவர் இருக்கமுடியுமா என்ற ஆள்மனதின் தீராத கேள்வி என்னுள் இருந்து அலைக்கழித்துக்கொண்டு இருந்தது (இலக்கிய ஹேங்ஓவர், மன்னிக்கவும்). பக்கத்து மாணவர் விடுதிக்கு புதிதாகக் ‘குடிவந்த’ ஒரு தமிழ்நாட்டு மாணவரைப் பார்த்தேன். பழக்கம் கூடி ஒருநாள் சாப்பிட அழைத்தேன். ‘பாஸ் உங்க பொங்கல் இங்க பயங்கர ஃபேமஸ் போல. ஒருத்தரு சொன்னாரு”. நண்பர் பிரம்மாண்டம் ஏற்கனவே என பிரம்மாண்டமான பொங்கலைப் பற்றி பிரம்மாண்டமாகச் சொல்லியிருந்திருக்கிறார். ‘கெளப்பிரலாம் பாஸ்.. வாங்க' என்று சொல்லிவிட்டேன். சாப்பிட்டுவிட்டு ‘பரவால்லங்க.. பாஸ். சாப்டலாம், நல்லா இருக்கு’ என்று இலக்கிய வாசகர்கள் கதையை விமர்சிப்பது மாதிரி பட்டும்படாமலும் சொன்னார். 'நம்ம வெண்பொங்கலே இவரிடம் வேகவில்லை.. சரி ஆள் பெரிய சமையல்காரராக இருப்பார் போல’ என்று நினைத்துக் கொண்டேன். “நாளைக்கு நம்ம ரூம்ல சமையல் பாஸ், ஒருமணிக்கு வந்துருங்க” என்று சொல்லிவிட்டார். மறுநாள் பன்னிரெண்டே முக்காலுக்கு ஃபேஸ்புக்கில் மெஸேஜ். “பாஸ் வாங்க, செம ரகளையா இருக்கு சமையல்”. “தோ..” என்று பறந்தோடினேன். புண்ணகையுடன் வரவேற்றார். பெரிய வெங்காயத்தை நறுக்கி, தக்காளியுடன் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், மல்லித்தூள் மற்றும் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த எல்லா தூளும், மிளகாய்த் தூளுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டுடனும் கொட்டி வைத்திருந்தார். ரத்தச் சிவப்பில் நெருப்புக் குழம்பாக தகதகத்தது. “தக்காளிக் குழம்பு பாஸ். செம ஸ்பைஸி அண்ட் ஹாட். வெளுத்துக் கட்டுங்க” என்றார். அவரும் ஆர்வமாகச் சோற்றில் குழைத்து பூசினார். மறுநாள் நாள் அதிகாலை முதல் பிற்போக்குவாதி ஆனேன். உடலின் நீர்சத்து திரும்பக் கிடைக்க இரண்டு நாள் ஆகியிருக்கும். அடுத்த வாரமே மீண்டும், “பாஸ் தக்காளிக் குழம்பு..” என்று ஃபோன் செய்தார், “ஹலோ மெட்ரோல போய்க்கிட்டு இருக்கேங்க பாஸ்.. சரியா கேட்கல.. ஹலோ..”

கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவுடன் தொலைபேசினால் "இன்னைக்கு என்னம்மா சமையல்?" என்று நான் கேட்பதும், அம்மா சொல்லிவிட்டு அதன் செயல்முறை பற்றி விளக்கிவிட்டு, "நீ என்ன பண்ணின?" என்று என்னைக் கேட்பதும், வாயில் வந்த பேரை வைத்து ஏதாவது ஒரு உணவைச் சொன்னதும், "எப்படி பண்ணின?" என்று அம்மா கேட்பதும் வழக்கமானது. சமயம் என்பது மனதைப் பக்குவடுத்துவது, சமையல் என்பது உணவைப் பக்குவப்படுத்துவது என்று எங்கோ படித்த ஞாபகம். சமையல் செய்வதும் கூட நம்மைப் பக்குவப்படுத்துகிறது போல. உணவைக் குறைசொல்வதை பெரிதும் குறைத்துவிட்டேன். ஒரு தெலுங்கு நண்பன் இருக்கிறான். தொட்டால் பொன்னாகும் வரம் பெற்ற மிதாஸ் போல, அவன் கைபட்டால் எதுவும் மிகருசியான உணவாகும். வெறுமனே பிரட்டை பிய்த்துப் போட்டு கையில் கிடைத்த காய்கறிகளை வதக்கி உப்பு தூவி இறக்கி வைத்தால் அட்டகாசமான பிரட் உப்புமா. தெரிந்த பெண் இருந்தால் இவனுக்குக் கட்டிவைக்க வேண்டும். ஒரு நல்ல காரியம் செய்த புண்ணியம் நிச்சயம். மிகப்பனிவாக நிறையப் பரிமாறி சாப்பிட வைப்பான். ஆனாலும் ஒருநாளுக்கு இவ்வளவு தான் என்று வயிறு ஒத்துழைக்க மறுப்பதால் கழுத்துவரை மட்டுமே சாப்பிட முடியும். ஆனாலும் “அது நேத்திக்கு, இன்னைக்கு என்ன?” என்று புத்தம்புது பசியுடன் “கொண்டா.. கொண்டா” என நாக்கு தீயாய் துடிக்க, வயிறு உறுமி எக்காளமிடத் தொடங்கும் போதெல்லாம் வளைக்கை நீள சாதத்துடன் அம்மா கண்முன் வருகிறாள். அம்மா சொல்லித்தந்த இந்தப்பாடலின் வழியாக ஔவையாரும்...
  
  ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

    உன்னோடு வாழ்தல் அரிது.


இன்னும் ஒருமாதம் தான். ஊருக்கு வருகிறேன். ஏர் இந்தியா விமானத்தில் விமானப்பணிப்பெண் ஆண்ட்டி கொண்டுவரும் “வெஜ் மீல்”லில் ஆரம்பிக்கிறது என் விடுமுறை.

எடுத்த சபதம் முடிப்பேன் :-) 

-பிரகாஷ் சங்கரன்.


Saturday, May 11, 2013

பகடை - கடிதம்


('பளிங்கறை பிம்பங்கள்' என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு நான் எழுதிய கடிதம், ஜெ தளத்தில் பதிக்கப்பட்டது http://www.jeyamohan.in/?p=26648)

அன்புள்ள ஜெ,
பெண் தன் சுயத்தை ஒளித்துக் கொண்டு பளிங்கறை பிம்பங்களாய்ப் பல்வேறு தோற்றங்களைக் காட்டி ஆணின் அகந்தையை அலைக்கழிப்பதை, தன்னை முடிவிலாத தோற்றங்களாகப் பெருக்கிக் கொண்டு சிவனை வெல்லும் மகாமாயையுடன் பொருத்தி விளக்கியதும் சட்டென்று “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்” என்ற அபிராமி அந்தாதி வரிக்கு இந்த இடத்தில் வேறு அர்த்தம் தொனித்தது.
உமையும் சிவனும் ஆடும் பகடையாட்டம் என்னும் படிமம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் வழியாக வேறு கோணத்தில் மனதில் பதிந்திருந்தது.
என் இளவயதில், சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் பத்து நாள் நடக்கும் வைகாசித் திருவிழா சினிமாவில் காட்டப்படும் ஒரு கிராமத் திருவிழாவின் சகல லட்சனங்களும் பொருந்தியதாக இருந்தது. வறண்டு நீண்ட மணல் வெளியாகக் காட்சியளிக்கும் வைகையில், சித்திரைத் திருவிழாவில் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காகத் திறந்து விடப்பட்ட தண்ணீரின் ஈரம் மட்டும் அடியில் இருக்கும். நீரில்லாத வைகையில் தான் திருவிழாக் கடைகளும், மரணக் கிணறு, நாகக் கன்னி, குடை ராட்டினம், மாயக்கண்ணாடி, ப்ரொஃபசர் லாலின் இந்திரஜாலம், ஜயண்ட் வீல், வளையல் கடை, பீமபுஷ்டி அல்வா என்று அந்தப் பத்து நாள் மட்டும் தேவலோகம் கீழே வந்திறங்கும். மேலும் விதவிதமான சூதாட்டங்களும் கடைபரப்பி வைத்திருப்பார்கள். ரெண்டுங்கெட்டான் வயது பையன்களுக்குக் கண்ணெல்லாம் ‘குலுக்கு டப்பா’ க்காரர்கள் மீதே இருக்கும். அண்ணன்கள் தம்பிகளை வீட்டில் அழுது அடம்பிடித்து ‘திருலா’ பாக்க காசு வாங்கி வரவைத்து, ‘யார்கிட்டயும் போட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு குலுக்கு டப்பா விளையாடக் கூப்பிட்டு போவார்கள். ஒருநாள் நானும் அம்மனைத் தொழுது திருநீறு இட்டு ‘நிறையக் காசு அடிக்கனும்’ என்று பிரார்த்தித்துப் போயிருந்தேன். ‘விருட்டானெல்லாம் வெலகு…’ என்று விரட்டிக் கொண்டிருந்த குலுக்கு டப்பாக்காரன் கண்ணில் தெரிகிற மாதிரி ஐந்து ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு நின்றேன். சாமியெல்லம் நன்றாகக் கும்பிட்டிருந்தேன், ‘ராஜால காசு வச்சா டபுள் அடிச்சிரும்’, இருந்தாலும் ஒரு பயம், விளையாட்டில் இறங்காமல் அண்ணன் உடலை ஒட்டி இருந்து பார்த்துக் கொண்டே நின்றேன்.
சற்று நேரத்தில் சாராய போதையில் தள்ளாடியபடி ஒருவன் வந்தான். நான்கு திசையையும் பார்த்து விரலை ஆட்டி, காதுகூசும் கடும் கெட்ட வார்த்தைகளால் திட்டினான். யாரையோ நோக்கி சவால் விட்டான், ‘ஓச்சுப்புருவேன்… எங்கிட்டயா? குடும்பத்தையே கொண்டுபுருவேன்..ஆள் தெரியாம ஆடுறீங்களாடீ..?’ , காறித் துப்பினான். எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குலுக்கு டப்பாக்காரன் ஒரு கணம் பார்த்துவிட்டு இன்னும் சத்தமாக டப்பாவை உருட்டியபடி, காசு டபுள், ட்ரிபிள் அடிக்கப் போகும் யோகத்தைச் சொல்லி எல்லாரையும் அவன் பக்கம் இழுத்து விட்டான். குடிகாரனும் வந்து நூறு ரூபாயை வைத்தான். பணம் போயிற்று. ஒரு பெண் பெயரைச் சொல்லியபடி கெட்ட வார்த்தையால் வைதுவிட்டு மறுபடியும் பணம் வைத்தான், காசு அடித்தது, இன்னும் ஒரு கேவலமான கெட்ட வார்த்தையை அவள் பெயரைச் சொல்லித் திட்டி விட்டு மறுபடியும் இன்னும் அதிகமான பணம் வைத்தான். சட்டைப் பை, உள் பை, கை மடிப்பு, பச்சை பெல்ட் என்று விதவிதமான இடங்களில் நீட்டு வாக்கில் மடித்த, கசங்கிய ரூபாய் தாளை உருவி வைத்து ஆடிக் கொண்டே இருந்தான். பணம் வருவதும் போவதுமாகக் கொஞ்ச நேரம் போக்குக் காட்டியபடியே இருந்தது. எதற்கும் குலுக்கு டப்பாக்காரனின் முகத்தில் சலனம் இல்லை. கடைசியில் எல்லாப் பணமும் போனதும், அன்ட்ராயருக்குள் தேடி ஒரு கசங்கிய அம்பது ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். ரெண்டாகக் கிழித்து ‘வந்தா வருது, போனா போது…. ராசாவுல அம்பது, ராணில அம்பது’ என்று இரண்டு துண்டுகளையும் வைத்தான். குலுக்கு டப்பாக்காரன் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல் அதைப் புறங்கியால் தள்ளிவிட்டு ‘ஃப்பூஊ…’ என குப்பையை ஊதித் தள்ளுவது போல ஊதினான். உடனே கெட்டவார்த்தைகளால் மறுபடியும் வையத் தொடங்கினான். குலுக்கு டப்பாக்காரன் அவன் இருப்பதையே அறியாதவன் போல டப்பாவை உருட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கட்டத்தில் காசுவைக்கத் திரும்பிவிட்டார்கள்.
குடிகாரன் கீழே விழுந்து கிடந்த கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு எதுவோ புரிந்துவிட்டது போலக் கதறி அழுதான்.
எனக்கு அந்தக் காட்சி மனதில் அப்படியே பதிந்து போனது. அண்ணனுடன் அமைதியாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.
சிலசமயம் வாழ்க்கையை ரெண்டாகக் கிழித்து, ‘இது அல்லது அது’ என்று வைக்கும் போது, நம் கொதிப்பைக் கொஞ்சம்கூட மதிக்காமல், சம்பந்தமே இல்லாத ஒன்று நடக்கையில் தோன்றுவதுண்டு, சொக்கட்டான் உருட்டப்படுகையில் அடுத்து விழப்போவது எது என்பது அம்மையின் ஆசையும் இல்லை, அப்பனின் அதிகாரமும் இல்லை. எல்லாம் வெறும் சூதாட்டம் தான் போலும்.
நன்றி,
பிரகாஷ் சங்கரன்.

பலிகளின் பயணம் - கடிதம்


('மாபெரும்பயனம்' என்னும் ஜெயமோகனின் சிறுகதை மீதான என் வாசிப்பு. ஜெ இணையதளத்தில் வெளியிடப்பட்டது )
அன்புள்ள ஜெ,
‘மாபெரும்பயணம்’ மறுபடியும் படித்தேன்.
எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பிப்பார்க்கும்.
என்ற வரிகளின் வழியாக எருமையின் நிதானத்தில் மெல்லக் கலந்து, நரம்புகள் தளர்ந்து இளகி அசைவற்று இருக்கையில்

நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றைக் கிளப்பவேண்டும்.
என்ற வரி சுருக்கென்று குத்தும் எரிச்சலுடன் படிப்பவனையும் கிளப்புகிறது – அடிமாடுகளின் மரணத்திற்கான பயணத்தை நோக்கி!
புரட்சி, சித்தாந்தம், ஆயுதம், போர், பலி, கொள்கை, தியாகம் என்றெல்லாம் “நீர்சிகிட்சை நிபுணர்களால்” வாயில் குடம் குடமாகக் கொட்டப்பட்ட நீரால் உடல் உப்பிப் பளபளப்பாகத் தொடர்கிறது அடிமாடுகளின் பயனம் – சாவை நோக்கி.
காஷ்மீர் போராளி, இலங்கைப் புரட்சியாளன் இன்னும் பலவாறு பகல் கற்பனை செய்து கொள்ளும் எல்லா அடிமாடுகளும் வழிகாட்டி மாடுகளின் பின்னால் சென்று கில்லட்டினை அடைந்ததும் தோலையும், காதுகளையும் இழந்து உயிருடன் இருந்த உருவத்திலிருந்து முற்றிலும் வேறாக மாறி எல்லாம் ஒன்றுபோல குருதி சொட்டும் சிவப்பு மாமிசப் பிண்டமாகிக் கொக்கியில் தொங்குகின்றன. காஷ்மீரோ, இலங்கையோ- ‘கொம்பின்’ வடிவத்திற்கேற்ப கசாப்புக்கட்டையில் சரிந்த தலைகள், கழுத்து வெட்டப்படும் முன் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லத் துடித்து, சொல்லப்படாமல், வெறித்த விழிகளுடன் கிடக்கின்றன.
கோலப்பன் தற்கொலை செய்து கொண்டாலும், வாழ்வில் எல்லாவற்றையும் மறந்து வெகுதூரம் வந்து விட்ட கதை சொல்லி, உருக்கள் நதியாகச் சுழித்து மரணத்தின் பீடத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பொள்ளாச்சி சாலைக்கே சைபீரிய நாரை போல தன்னையறியாமல் வந்து சேர்கிறான். கதை சொல்லிக்குப் பெயரே இல்லை – வெறும் ‘அவன்’ தான். ஆம், அடிமாடுகளாக இழுத்துச் செல்லப்படும் யாராக இருந்தாலும் அது ‘அவன்’ தான். ராவ்ஜி, கோலப்பனுக்குப் பிறகு ‘அவன்’. மீண்டும் நீர்சிகிட்சை, மீண்டும் பயணம், மீண்டும் கில்லட்டின்.
பிறந்து விழுந்தது முதல் தவழ்ந்தும், நடந்தும் மரணத்தை நோக்கியே செல்லும் ஒரு மிகச் சிறிய நேர்கோட்டுப் பயணம் தானா வாழ்க்கை? அதைப் பெரும்பயணமாக்குவது மீண்டும் மீண்டும் வரும் ‘அவன்’களால் வட்டத்தின் முடிவின்மை போல் சுழலும் இந்த அடிமாட்டு வாழ்க்கை தானா?
ஏதேதோ காரணங்களுக்காக இழுத்துச் செல்லப்பட்டு கும்பலாக மடியும் போராளிகள் – அடிமாடுகளின் பயணம் என்கிற குறியீடு, பொருள் கொள்ளலுக்குத் தரும் சாத்தியங்கள் முடிவிலியாக விரிகின்றன.
நன்றி ஜெ,
அன்புடன்,
பிரகாஷ் சங்கரன்.

சின்ன விஷயங்கள் - ரேமண்ட் கார்வர்


st1
அன்று காலநிலை மாறவும் பனி உருகி அழுக்கான நீராகிக் கொண்டிருந்தது. கொல்லைப்புறத்தைப் பார்த்து திறந்திருந்த உயரமான ஜன்னல் பக்கமாக பனி உருகிய நீர் நிலத்தில் கலங்கிய குறுகலான ஓடையாக ஓடியது. வெளியே இருட்டிக் கொண்டிருக்க, தெருவில் கார்கள் பனிச்சேற்றில் விரைந்து கொண்டிருந்தன. உள்ளேயும் இருட்டிக் கொண்டுதான் இருந்தது.
படுக்கையறையின் வாசலுக்கு அவள் வந்த போது அவன் உள்ளே ஒரு பெட்டிக்குள் துணிகளைத் திணித்துக் கொண்டிருந்தான்.
சந்தோஷம், ரொம்ப சந்தோஷம் நீ கிளம்புவது, என்றாள் அவள். சொல்வது உனக்குக் கேட்கிறதா?
அவன் தொடர்ந்து துணிமனிகளை பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தான்.
நாய் மகனே! நீ போவது எனக்கு சந்தோஷம் தான்! அவள் அழத் தொடங்கினாள். உன்னால் என் முகத்தை நேருக்குநேர் பார்க்கக் கூட முடியாது. முடியுமா என்ன?
படுக்கைமேல் இருந்த குழந்தையின் புகைப்படத்தைக் கவனித்தாள், உடனே அதை எடுத்துக் கொண்டாள்.
அவன் அவளைப் பார்த்தான், அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனை வெறித்துப் பார்த்துவிட்டு திரும்பி நடந்து கூடத்திற்குச் சென்றாள்.
மேலும் படிக்க ... http://solvanam.com/?p=26052
- பிரகாஷ் சங்கரன்