Showing posts with label இந்து மதம். Show all posts
Showing posts with label இந்து மதம். Show all posts

Monday, April 29, 2013

மேல்நாட்டுச் செருப்பு


மித்திலனின் கட்டுரை மற்றும் பஞ்சநதத்தின் கடிதத்தை ஒட்டி நடந்த விவாதத்தில் பிரகாஷ் சங்கரனின் கருத்துக்களின் சில பகுதிகள்.
poli90
1. //Logocentric சிந்தனைதான் இன்றைய மேற்குச் சிந்தனை என்பதோடு நவீனமாகுதல் என்பது அதீதமான மொழி மைய, எழுத்து மைய, புத்தக மைய, பிரதி மைய நடைமுறை. இதை நிராகரித்தால், மொழி இன்றி அனுபவங்கள் தன்னிலை தாண்டிய சமூக உடன்பாட்டுக்குச் செல்ல வழியுண்டா என்று கேள்வி எழும். அப்படிப்பட்ட ஒரு நடைமுறை இன்று நாம் மதித்துப் பேசக்கூடிய கருதுபொருளாக இருக்க முடியுமா என்றும் கேள்வியைத் தவிர்க்க முடியாது.//
இதைத் தான் ‘மேற்கு வைக்கும் -நமக்குப் பொருந்தாத ஒரு கருத்துச் சட்டகத்தை கீழை நாடுகள் வாங்கித் தலையில் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா?’ என பாலகங்காதராவும், கட்டுரை வழியாக மித்திலனும் நிராகரிக்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் தான் லிங்க வழிபாடு என்ற தத்துவம் பண்டைய இந்துச் சமூகத்தில் எப்படி இருந்தது, மேற்கத்திய ஆய்வாளர்கள் அதை எப்படி தங்கள் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் போட்டு மோலோட்டமாக “ஆண்குறி வழிபாடு” என்று குறுக்கினார்கள், இப்போது அதை மறுத்து அதன் குறியீட்டு ஆழத்தை விளக்க வேண்டுமானால் நாமும் அவர்கள் கருத்தியல் கருவிகளையே ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு எவ்வாறு ஆளாகிறோம், “அந்த அளவுகோளிலேயே பேச வேண்டும் என்பதே சரி” என எப்படி இந்திய அறிவுஜீவிகளும் இயல்பாக மனதில் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று விளக்குகிறார்கள்.
இந்துமதத்தின் பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் வரலாற்றுக் காலத்துக்கும் மிக முந்தைய ஆதிப்பழங்குடிக்கால வாழ்க்கையில் வேர் கொண்டு இன்று வரை அறுபடாது தொடர்ந்து வளர்ந்தபடி வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீண்ட அதன் வளர்ச்சிப் போக்கில், ஆரம்பகட்ட எளிய வழிபாட்டு முறைகள் தத்துவார்த்தமான உட்பொருள் கொண்ட குறியீடுகளாகவும், சடங்குகளாகவும் செறிவுபடுத்தப்பட்டு அழமும் விரிவும் கொண்டதாக இன்று உருப்பெற்றுள்ளன. லிங்க வழிபாட்டை எடுத்துக் கொண்டால், அது பழங்குடி வாழ்க்கையின் வளச்சடங்குகளில் இருந்து வளர்ந்ததாக இருக்கலாம் என்று கருதும் சிந்தனைப் பள்ளியும், அல்லது, சுவாமி விவேகானந்தர் உட்பட பலரால் விளக்கப்படும் ‘ஸ்தம்ப வழிபாடு’ என்பதன் நீட்சியே லிங்க வழிபாடு என்னும் சிந்தனைப் பள்ளியும் இம்மண்ணில் உள்ளது. கோள்கள், நதி, மரம், கல், பறவை, விலங்கு, சகமனிதன் என இப்பிரபஞ்சத்தில் உள்ள எதையும் தீயதின் உருவமாகப் பார்க்காமல், அனைத்திலும் ஒரே பிரபஞ்ச சாரத்தையே -மேண்மையின் உருவமாகவே காண்பவை இந்துமத வழிபாட்டு முறைகள். ஆனால், ஒரே இறைவன்-ஒரே இறைத்தூதர்-ஒரே இறை நூல் என்னும் எளிய நேர்கோட்டு ஆபிரகாமிய மதச்சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த மேற்கின் கலாச்சார ஆய்வு மனங்கள், அவற்றின் சிந்தனைக்கே எட்டாத, “நான் உட்பட இங்குள்ள அனைத்தும் இறையின் அம்சமே” என்னும் மகத்தான இந்து சிந்தனை முன் பிரமித்து நிற்கின்றன. அவர்களால் விளங்கிக் கொள்ளவும், செரித்துக் கொள்ளவும் முடியாத இந்தச் சிந்தனை உச்சத்தை மறுப்பதற்காக அதன் தத்துவார்த்த சாரத்தை புறந்தள்ளிவிட்டு “பயத்தால் வழிபடுகிறார்கள்” என்று ஒற்றைப்புரிதலில் குறுக்குகின்றனர். மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.
ஃபிராய்டும் ஒரு உதாரணம். மேற்கு மனங்களையும் அதன் கலாச்சார பின்புலம் சார்ந்து அவர்கள் மனங்களில் எழும் சிக்கல்களையும் வைத்து அவர் உருவாக்கிக் கொண்ட புரிதல்களை, எப்படி உலகம் மொத்தத்துக்கும், எல்லா கலாசார பண்பாட்டுப் பின்புலம் கொண்ட மக்கள் குழுவிற்குமான புரிதலாக ஒரே நாடாவால் சுற்றினார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
கிழக்கின் கலாச்சாரத்திற்கு -குறிப்பாக இந்தியப் பண்பாட்டுப் பின்புலமுள்ள வாழ்க்கை முறைக்கும், உறவுமுறைகளுக்கும், மனஓட்டத்துக்கும் சிக்மண்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு எல்லா சூழலிலும் கைகொடுக்காது. ஒரு உதாரணம் - சத்யஜித் ராயின் ‘தேவி’ படத்தில் தயாமயி (ஷர்மிளா தாகூர்) தேவியாவதற்கு முன் வயதான தன் மாமனாருக்கு மருந்து கொடுத்து, கால் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதுபோல ஒரு காட்சி வரும். பின்னர் மாமனாரின் கனவில் அவரின் மருமகளே தேவியாக தோன்றுவாள். இதை ஃபிராய்டிய உள்ளோட்டம் இருப்பதாக விளங்கிக் கொண்டு விமர்சனம் செய்தார் உலகப்புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட விமர்சகர் பௌலின் கேல். தாய், தந்தை, உடன்பிறந்தோரைத் தவிர பிற அனைவரையும் ஆண், பெண் என்று பாலினம் மட்டுமாகவே பார்க்கும் மேற்கின் கலாச்சாரத்தில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் தாயாகவும், தந்தையாகவும், சகோதர சகோதரியாகவும், பாட்டன் பாட்டியாகவும் பார்ப்பதையும், அவர்களைத் தொட்டு பணிவிடை செய்வதையும் இப்படித்தான் தவறாக பாலியல் சிக்கலாக உளப்பகுப்பாய்வு செய்யமுடியும்.
இந்த ஃபிராய்டிய நனவிலி, உளப்பகுப்பு ஆகிய உளவியல் அறிதல் கருவிகளை மீறி ஒரு படி முன்னேறி கூட்டுநனவிலி வரை சென்றதாலேயே யுங் நமக்கு நெருக்கமாக வருகிறார். யுங்கின் வழியாகப் பார்த்தால் ‘பித்தில் பிறந்த போதம்’ சரியானதாகவே இருக்கும். இது நம் பண்பாட்டில் கூடுநனவிலியில் இருந்து நாம் உருவாக்கிக் கொள்ளும் குறியீடு, சடங்கு, வழிபாட்டு முறை.
2. // ஆண்குறி வழிபாடு குறித்த நம் எதிர்வினைகள்தான் அதைக் கொச்சைப்படுத்துகின்றன. லிங்க என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருத அகராதியே ஆணுறுப்பு என்றுதான் அர்த்தம் சொல்கிறது.//
இல்லை, இங்கு தான் மொழியைத் தாண்டிய புரிதல் முக்கியமாகிறது. இந்தியக் குறியீட்டு, படிம வெளிக்குள் புழங்காத மேற்கு மனம் மொழியில் இருந்து நேரடி அர்த்தத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை இந்துக்கள் நிராகரிப்பது, ‘ஆண்குறி’ என்பதை விக்டோரிய ஒழுக்கவியல் நோக்கில் சங்கடமான / வெட்கத்திற்குரிய ஒரு செயலாக எடுத்துக்கொண்டு எதிர்ப்பது ஆகாது. மாறாக அந்த குறுகிய புரிதலை மறுத்து, சிவ சக்தி ஐக்யம் என்னும் ஆழ்ந்த குறியீட்டை விளக்கும் முயற்சியே. இந்த சிவசக்தி ஐக்யம் என்பது இன்னும் பிரம்மாண்டமாக பல தளங்களில் விரியும் ஒரு படிமம். அதை விளங்காமல் தட்டையாக ஆண்குறி வழிபாடு என்று மேற்கத்தியர்கள் குறுக்கினால், நாம் அதை எதிர்ப்பது இயல்பே.
முதலில் லிங்கம் என்ற சொல்லிற்கு ஆண்குறி என்று பொருளல்ல. அடையாளம், குறியீடு என்பதே லிங்கத்தின் நேரடிப் பொருள். எடுத்துக்காட்டாக, பாலின அடையாளம் சம்ஸ்கிருதத்தில் புல்லிங்கம், ஸ்த்ரீ லிங்கம், நபும்ஸக லிங்கம் என்னும் சொற்களால் குறிக்கப்படும். ஸ்த்ரீ லிங்கத்தில் லிங்கத்தை ஆண்குறி என எடுத்துக்கொண்டால் அர்த்தமே மாறிவிடும். அதுபோலவே லிங்கத்துடன் தொடர்புடைய ஒற்றை வேரிலிருந்து கிளைத்த வார்த்தைகளே lingua -> language. லிங்கம் ஆண்குறி என்றால் மேற்கத்திய மொழியே பாலினக்குறியுடன் தொடர்புடையதுதானா?
சிவனின் உருவ வடிவம் -பரமேஸ்வரன், நடராஜர். உருவரு -லிங்க அடையாளம். அருவம் -ஒளி.
அதுபோலவே யோனி என்ற சொல்லும். அது படைப்பின் குவிமையத்தைச் சுட்டும் சொல். ஒரு கலைஞனின் படைப்பு மனத்தின் மையத்தைக் கூட அவர் யோனி என்று சொல்லலாம். அது பெண்ணுறுப்பிற்கும் சொல்லானது. அவ்வளவு தான்.
3. //காத்திரமான தற்கால இந்தியச் சிந்தனைக்கு வழி கோல பண்டை இந்தியச் சிந்தனையை மீட்டுப் புனருத்தாரணம் செய்வது வழியாக இராது. ஏனெனில் இயற்கைச் சூழலில் இருந்து துவங்கி, உடைகள், பண்டங்கள், உணவுகள் என்று எதிலும் தொடர்ச்சி இல்லாத ஒரு வாழ்வாகிப் போனதில் உலகச் சூழலுக்கு எதிரான இந்தியச் சூழலை நிறுவ முடியாது, அப்படி ஒரு இந்தியச் சூழலுக்கு உலகத்தோடு ஒத்திசைந்து இயங்காத தன்னிச்சை இயக்கம் என்பதும் கிட்டாது. ஊடுருவும் உலகச் சூழல்- பண்டம், ஆடை, பணம், கனிமங்கள், உணவுகள், ஊடகங்கள், ஆர்ப்பரிப்பான ஆசைகள், அழகியல் விழைவுகள், இலக்கியம், இசை என்று என்னென்னவோ பாய்ந்திருக்கிறதை வெளியேற்றி தூய்மைப்படுத்த முடியாத கலவை இங்கு உள்ளது.//
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் மதத்தைச் “சுத்தப்படுத்தும்” வஹாபியம் போல் இல்லை இந்துமத புணருத்தாரணம். இந்து மதத்தைத் “தூய்மைப்படுத்துவது” என்ற பெயரில் அதன் பண்மைத் தன்மையை அழிப்பதோ, மாற்றங்களை வெறுப்பதோ, பழைமைவாதத்திற்குள் ஒடுங்கி மதத்தை இறுக்கமான நம்பிக்கைகளின் இருட்டுப் பெட்டியாக்குவதோ இல்லை என்பதில் முக்கியமான இந்து மத அறிஞர்கள் எக்காலத்திலும் தெளிவாகவே இருந்து வருகின்றனர். இந்துமத சீர்திருத்தம் என்பது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்ட சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றிலுள்ள தத்துவப் பின்புலத்தை முக்கியத்துவப்படுத்தலும், அவற்றை சமூக தேக்கநிலையிலிருந்து மேலெடுத்து ஜனநாயகப்படுத்தலுமே. திரித்துவிளக்கப்படும் இந்து மத தொண்மங்களுக்கான பாரம்பரிய தத்துவார்த்தமான விளக்கத்தை அளிப்பதும் அதில் ஒன்று, அதன் அங்கமாகத் தான் லிங்கவழிபாடு போன்ற விவாதங்களில் இந்துமதத் தரப்பு மேற்கின் பார்வையை அதன் தொடக்கத்திலேயே நிராகரிக்க வேண்டியுள்ளது.
***
(லிங்கம், யோனி குறித்தான தத்துவார்த்த தகவல்கள் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் கட்டுரைகளில் இருந்தும், உரையாடல்களில் இருந்தும் அறிந்து கொண்டவை. அவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்)
-பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம், இதழ் 85ல் வெளியானது)

Friday, April 12, 2013

பௌத்தமும் வேதாந்தமும்


(ஆசான் ஜெயமோகன் எழுதிய அம்பேதகரின் தம்மம் என்னும் அற்புதமான நீள்கட்டுரை தொடர்பாக நான் அவருக்கு எழுதிய கடிதமும் அவரது பதிலும்)

அன்புள்ள ஜெ,
அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால்.
குறிப்பாக “தர்மம்” என்னும் சொல் குறிக்கும் பொருள் பற்றி விளக்கங்கள்.
//பௌத்தம் பேசும் தம்மம் என்பது என்ன? நான் முன்னர் சொன்ன அத்தனை நிலைகளிலும் இருக்கும் ஒன்று. என்னுள் இருந்து என்னை உருவாக்கும் நியதி. இவையனைத்தையும் ஆளும் நெறி. காலத்தையும் வெளியையும் உருவாக்கி நிறுத்தும் விதி. அனைத்துமாக ஆகி நிற்கும் பிரபஞ்சமெனும் ஒழுங்கு. அதுவே பௌத்த தம்மம். (அம்பேத்கரின் தம்மம்-பகுதி-1)//
ஆம், வேதங்களின் ஆப்தவாக்கியங்கள் போல, பௌத்த தரிசனம் ‘தர்மம்’ என்பதை தனது ஆப்த வாக்கியம் போலவே – தர்மம் சரணம் கச்சாமி- என முக்கியத்துப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறது.
பௌத்தம் பேசும் இந்த மகாதர்மத்திற்கான அடிப்படை இந்து மதம்/வேதாந்த மரபிலும் ஏற்கனவே இருந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக உங்கள் கீதை உரையைப் படித்ததில் இருந்து.
//கீதையின் முதல் சொல்லே ‘தர்மஷேத்ரே’ என்று இருக்கிறது. ”அறநிலமாம் குருநிலத்தில்” என்று தொடங்கும் கீதை குருஷேத்ர களத்தை அறம் திகழ் மண்ணாகக் குறிப்பிடுகிறது. அது உண்மையா என்ன? அது அறத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான போர் என்று கூறுவதுகூட சற்று மிகைதான். பாண்டவர் தரப்பிலும் அறமீறல்கள் பல உள்ளன. அப்படி யோசிக்கும்போது இங்கு கூறப்படும் அறம் என்பது சாமானிய தளத்தில், நீதி என்ற பொருளில், நாம் குறிப்பிடும் மானுட அறம் அல்ல என்றே கொள்ள வேண்டும். பிரபஞ்சப் பேரியக்கத்தின் நியதியாக உள்ள ‘மகாதர்மம்’தான் இங்கே அறம் என்று கூறப்பட்டது. அதை மானுடம் சார்ந்த நன்மை தீமைகள், சரிதவறுகள் மூலம் அளக்க இயலாது. அது எளிய தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ‘பிரபஞ்ச நியதியின் களமேயான குருஷேத்ர ரணபூமியில்’ என்று கீதை தொடங்குகிறது என்று வாசிக்கலாம். (கீதை:1 மகத்தான மனத்தடுமாற்றம்)//
மகாபாரதத்தின் குருக்ஷேத்ர யுத்தம் – தர்ம யுத்தம் என்றே அழைக்கப்படுகிறது. மகாதர்மத்தின் ஒரு பகுதியாக நடந்த யுத்தம், அதில் அர்ஜுனன் உள்ளிட்டோரின் சுதர்மமும் அடங்கும். குருமார்களையும், சொந்தங்களையும் கொன்றாவது நிலை நிறுத்தியாக வேண்டிய மகாதர்மத்தின் பொருட்டே ஒவ்வொருவரின் சுதர்மமும் செயல் பெறுகிறது. இந்த தர்ம யுத்தத்தில், தர்மம் என்பது ‘இவை அனைத்தையும் ஆளும் நெறி’ என்று பொருள் கொள்ளப்படும் போதே, அதனுள் ஒவ்வொருவரின் சுதர்மமும் அடங்குவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
அதே பாரதத்திலேயே பீஷ்மர் (பீஷ்மோபதேசம் ) சொல்கிறார், “தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்மமேவ ஹதோ ஹந்தி” – தர்மத்தைக் காப்பவனை தர்மம் காக்கும், தர்மத்தை அழிப்பவனை அதுவே அழிக்கும். தன்னறம் அல்லது சாமான்ய தளத்தில் கூறும் மானுட அறத்தை காக்காததினால் ஒருவன் அழிவான் என்பதை விட இந்த வாக்கியம் முழுமையான பொருளைத் தருவது “இந்தப் பிரபஞ்சம் உட்பட இங்குள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியிருக்கும் நியதி காக்கப்பட்டால் அதுவே அதன் அங்கமான நம்மையும் காத்துக் கொள்வதாகும், அதை அழித்தால் அது நமது அழிவாகத் தான் இருக்கும்” என்று பொருள் கொள்ளும் பொழுது தான்.
பௌத்த தரிசனத்தின் சில விஷயங்களை என்னால் வேதாந்த தரிசனத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக நினைக்க முடியவில்லை, அதன் இன்னொரு கோணமாகத் தான் எனக்குத் தெரிகிறது.
உதாரனமாக,
//நிர்வாணம் என்பது அனைத்தையும் களைந்துவிடல் அல்ல என்று அம்பேத்கர் சொல்கிறார். நிர்வாணம் என்பது அறிவின் நெருப்பில் நம்மைக் களைந்து எரிப்பது மூலம் அடையப்பெறுவது. ஒரு தூய்மையாக்கல் அது. ஆனால் அந்நெருப்பில் அனைத்தையும் எரிப்பதைப்பற்றி புத்தர் பேசவில்லை. அதில் திருஷ்ணையை- ஆசைகளை – எரிப்பதைப்பற்றியே பேசுகிறார். ஆம், அனைத்தையும் துறந்து அமைவதல்ல நிர்வாணம். அது இங்கே இந்த வாழ்க்கையில் ஆசைகள் மீதான அறிவின் கட்டுப்பாட்டுடன் வாழும் முழுமையான வாழ்க்கை மட்டுமே (அம்பேத்கரின் தம்மம், பகுதி-3)//
என்னும் பௌத்த சிந்தனை, பகவத் கீதையின் நாலாம் அத்தியாயமான ஞான கர்ம சந்யாச யோகம் கூறும் ‘செயலின் பலன் மீதான விருப்பத்தைத் துறந்த (கர்ம பல சந்யாசம்) நிலையை’ப் போன்று தான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த அத்யாயத்தின் 14வது ஸ்லோகத்தில் இருந்து கடைசியான 42வது ஸ்லோகம் வரை, அதிலும் முக்கியமாக, ” எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள் (கீதை, 4:19)” என்னும் ஸ்லோகம் மேலே சொன்ன பௌத்த சிந்தனைக்கு மிகவும் நெருங்கியது.
மேலும், //பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை (அம்பேத்கரின் தம்மம், பகுதி-4) என்னும் பௌத்த சிந்தனையை, உங்கள் கீதை உரையில்
 //பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும் ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.( செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4) // 
   -என்று நீங்கள் விளக்கியிருந்ததுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்கிறேன். 
கைவல்ய உபநிஷதம், “ந கர்மணா, ந ப்ரஜயா, தனே ந, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:” என்கிறது- “கர்மங்களால் அல்ல, மக்கட்பேறால் அல்ல, செல்வத்தினால் அல்ல, தியாகத்தாலேயே அமரத்துவம் எய்தப்படுகிறது” -இதுவும் கீதையும், பௌத்தமும் சொல்லும் அதே மனநிலையைத் தான் பேசுகிறது.
சூன்யவாதம் குறித்தும் மிகவும் புதிதான ஒரு கோணத்தில் (சூனிய வாதம் வெறுமையைச் சொல்வதல்ல, அறியமுடியாமையைச் சொல்வது) இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன் (இருந்தாலும் என் மனதின் இயல்பிற்குப் வேதாந்தத்தின் பூரணத்துவமே நெருக்கமாக இருக்கிறது).
மொத்தத்தில் இந்தக் கட்டுரைத் தொடர், என்னளவில், என்னை மிகவும் யோசிக்க வைத்த, ஒவ்வொரு சொல்லிலும் என் கற்பிதங்களைப் புரட்டிப் போட்ட, நான் வாசித்த மிக முக்கியமான கட்டுரை. அதற்காக மிக்க நன்றிகள் ஜெ.
இந்தக் கடிதத்தை எழுதும் முன் ஒருவாரத்திற்கும் மேலாக எழுதுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். இந்து/வேதாந்த மரபில் இருப்பதாக என் மனதில் படுவதைச் சொல்ல வேண்டும் ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்திய ஞான மரபில் பௌத்த தரிசனத்தின் தாக்கத்தையும், பங்களிப்பையும் குறைத்துச் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். எனக்கு புத்தர் மீது பெரும் பக்தி உண்டு. நான் சங்கர வேதாந்த மரபைச் சேர்ந்தவன். சங்கரரே பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் முரண்பட்டு இன்னொரு நிலையில் ஏற்றுக்கொண்டு, இவற்றின் சிறந்த அம்சங்களையெல்லாம் வேதாந்த ஞானத்துடன் தொகுத்துக் கொடுத்தவர் தானே?
கடைசியாக சுவாமி விவேகனந்தரின் வார்த்தைகளுடன் இந்தக் கடித்தை முடித்துக் கொள்கிறேன். “சாக்கிய முனி ஹிந்துமதத்தை அழிக்க வந்தவரல்ல, அவரே அதை முழுமை செய்தவரும், அதன் தர்க்கபூர்வமான நிறைவும், வளர்ச்சியும் ஆவார். இந்து மதமும், பௌத்தமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. ஹிந்து மதத்தின் அற்புதமான மெய்ஞான மூளையும், பௌத்தத்தின் மனிதாபிமானமும் கருணையும் மிக்க இதயமும் பிரிந்ததனால் தான் இந்தியா வீழ்ந்தது. இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணையட்டும்”
என் புரிதல்களில் பிழை இருந்தால் பொறுத்துக் கொண்டு, அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்
பிரகாஷ் சங்கரன்.
(பி.கு. – ஒரு சிறிய தகவல்- வேதங்களின் முதல் பாகமாகிய கர்மகாண்டத்தின் ஸம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை விளக்கும் ‘பிராம்மணங்கள்’ என்னும் விளக்க நூல்களை அடியொற்றி எழுந்ததால் தான் பூர்வமீமாம்ஸை ‘பிராம்மண மதம்” என்றழைக்கப்படுகிறது. அது யாகங்கள் முதலான சடங்குகளைச் சொல்வதால் பிராமணர் என இன்று அழைக்கப்படும் சாதியினருடைய மதம் என்று பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது).


அன்புள்ள பிரகாஷ்,
இந்தியாவின் தத்துவ- ஞான விவாதமென்பது ஓர் ஒற்றைப்பெரும்பரப்பு. அதிலுள்ள எல்லா கருதுகோள்களும் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் மூலம் கொண்டும் கொடுத்தும் வளர்ந்துவந்தவை. ஆகவே பொது அம்சங்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தால் வந்துகொண்டே இருக்கும்.
நம்முடைய நோக்கம் என்ன என்பதே பார்வையை தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் இந்தியாவின் சிந்தனை மரபுகளுக்குள் எந்த விதமான உறவும் இல்லை, அவை ஒன்றையொன்று கொல்லத்துடித்தவை என்று சொன்னாரென்றால் நாம் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறோம். அதேசமயம் ஒவ்வொன்றையும் அவற்றின் தனித்தன்மையுடன் அறிய விரும்பினோமென்றால் வேறுபாடுகளை கவனப்படுத்துகிறோம்
நாராயணகுருவிடம் இதைக் காணலாம். கேரளத்தின் ஆசாரவாதிகள் வேதாந்தத்தை ஆசாரவாதம் நோக்கி கொண்டுசென்று அங்கே அதை முளையடித்துக் கட்டியிருந்த காலகட்டத்தில் குரு வேதாந்தத்தை பௌத்தம் நோக்கி நகர்த்தினார். குருவின் ஆடை, அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை, அவர்களின் கொடி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பௌத்த செல்வாக்கு வெளிப்படையானது. வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள பொதுத்தன்மைகளை அதிகமாக குரு முன்வைத்தார். அவரது வெதாந்தநூல்களின் வாசிப்பு அந்த இயல்பு கொன்டது
ஆனால் வேதாந்தமும் பௌத்தமும் தத்துவ அணுகுமுறையிலும் மையத்தரிசனத்திலும் நுட்பமான வேறுபாடுகள் கொன்டவை. அந்தவேறுபாடுதான் அவற்றை இருவேறு தத்துவக்கட்டுமானங்களாக நிலைநிறுத்துகிறது. அம்பேத்கரின் தம்மம் கட்டுரையில் அந்த வேறுபாடுகளை நான் சுட்டிக்காட்டியபடியே செல்கிறேன். அவை இரண்டும் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அனேகமாகக ஒன்றே. ஆனால் அவற்றுக்கிடையே அழுத்தமான ஆனால் மிக மெல்லிய பொருள் வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை கவனித்தாலொழிய அவற்றை சரியாகப்புரிந்துகொள்ள முடியாது
உதாரணமாக தர்மம் என்ற சொல். வேதாந்தமும் பிரபஞ்சதர்மம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வேதாந்த நோக்கில் மகாபிரம்மத்தின் ஒரு லீலை. பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடு. பௌத்தம் மகாதர்மம் பற்றிப்பேசுகிறது. ஆனால் அங்கே அதை மீறிய ‘சத்’ஏதும் இல்லை. மகாதம்மம் என்பது மட்டுமே முதல்முடிவானது. அது எதன் லீலையும் அல்ல. அது நிகழ்வதனால் அது இருக்கிறது.
இப்படிச் சொல்லலாம். பம்பரம் சுழல்கிறது. அப்போது ஒரு மையம் உருவாகிறது. அது சுழல்வதனால் அந்த மையம் உருவாகிறது. சுழற்ச்சியின் ஆதாரவிதியே அந்த மையம். அவ்வளவுதான். நாம் சுழற்சியைப்பார்க்கிறோம். ஆகவே நமக்கு மையம் என்ற அனுபவம் உள்ளது. மற்றபடி அங்கே மையமென ஒன்றுண்டா என்பதெல்லாம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவை- இது பௌத்தம். சுழற்சியின் மையம் என்பது பம்பரத்தின் ஆதாரமான அமைப்பு, சுழற்சியை நிகழ்த்துவதே அதுதான் – இது வேதாந்தம். இருவேறு தரிசனங்கள்
இவ்வாறு எல்லாவற்றிலும் வேறுபாடுண்டு. பௌத்தம் பொருளை நிராகரிப்பதில்லை. பொருண்மை என்ர நிகழ்வாக அது பொருளை அணுகுகிறது என்று சொல்லலாம். இகம் அதைப்பொறுத்தவரை பொருள்வயமானதே. ஆனால் வேதாந்தம் பிரம்ம சத்யம் ஜகன் மித்யை என உணரக்கூடியது. பொருள்வய பிரபஞ்சமென்பது வேதாந்த நோக்கில் பிரம்மம் அளிக்கும் மயக்கநிலைதோற்றம் மட்டுமே.
ஆனால் வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் நடுவே மிகச்சிறந்த ஓர் ஒருமையை நாம் கண்டடையவும் முடியும். பிரம்மம் என்பதை சத் என்றல்லாமல் தத் என்று புரிந்துகொண்டால் அது பௌத்ததை அடைந்துவிடுகிறது என்று நாராயனகுரு சொல்லியிருக்கிறார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அதை விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள். விவேகானந்தர் முதலிய எல்லா நவீன வேதாந்திகளிலும் அந்த சமன்வய நோக்கை நாம் காணமுடியும்
நாராயணகுரு பௌத்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் நடுவே ஒரு சமரசவேதாந்தத்தை உருவாக்கியவர். வேதாந்தம் கயிற்றரவு என்கிறது. அது கயிறு என நாம் தெளியும்போது அங்கே பாம்பு இல்லை. ஆனால் நாராயணகுரு மலரும் மாலையும் என்கிறார். மலரைப்பார்க்கையில் மாலை இல்லை. மாலையைப் பார்க்கையில் மலர் தெரிவதில்லை, ஆனால் இருக்கத்தான் செய்கிறது
இப்படிச் சொல்கிறேன். வேதாந்தம் பௌத்தம் சமணம் போன்றவற்றை கற்கையில் அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை கவனித்து கற்பதே தேவையானது. ஆனால் நம் அகத்தில் இறுதியில் ஓர் ஒருங்கிணைவுநோக்கு உருவாகி வரவேண்டும் — சமன்வய நோக்கு
கவனிக்கவும், கடைசியில்தான் அது உருவாகவேண்டும்
ஜெ

Monday, January 28, 2013

வாழ்வெனும் வரம்

1_500


கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஒரு ஆவனப்படம் பார்த்தேன். பேராழிகள் - Oceans என ஆங்கிலத் தலைப்பு.  ஜாக்குவெ பெர்ரின் (Jacques Perrin) என்னும் ஃபிரெஞ்சு நடிகர்-இயக்குனரால் இயக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் நான்கு வருடங்கள் படம்பிடிக்கப்பட்டது. ஜாக்குவெ பெர்ரின், சின்னஞ்சிறு பூச்சிகளின் உலகில் நடக்கும் தொடர்புகொள்ளல் முறைகளை நுணுக்கமாக ஆராயும் ‘Microcosmos’  மற்றும் வலசை போகும் பறவைகளின் நெடும் பிரயானத்தை விளக்கும் ‘Winged Migration’ என்னும் புகழ் பெற்ற ஆவனப்படங்களையும் இயக்கியவர்.
பூமிப்பந்தில் நிலத்தின் அளவை விட மூன்று பங்கு அதிகமான பரப்பைக் கொண்ட கடலில், நிலத்தை விட மூன்று மடங்கு அதிகம் அற்புதங்களும் இருக்கத்தான் செய்யும். பூமியின் உயிரினங்களில் மிகப்பெரியது முதல் மிகச் சிறியது வரை அங்கு உயிர் வாழ்கின்றன. நில உயிர்களின் தோற்றங்களை வைத்து நாம் அறிந்திருக்கும் வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறான, உயிர்களின் உருவ அமைப்பு குறித்தான நமது தர்க்கத்துக்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்ட, கற்பனைக்கே எட்டாத ஆயிரமாயிரம் விநோத வடிவங்களில் உயிரினங்கள். கற்பாறைக்கு வாய் வாய்த்தது போல் ஒன்று, கிளைகளும், இலைகளுமாய் நகர ஆரம்பித்துவிட்ட தாவரம் போல் ஒன்று, ஒளியே வடிவான ஒன்று, ஒளிசென்று தீண்டும் ஆழத்திற்கப்பால் முழுதும் வண்ணங்களால் வாரியிறைத்த உடலுடன் ஒன்று, உருகி உருகி வழிவது போல நகரும் ஒன்று, இன்னும் இன்னும்…. ஆனால் அனைத்திலும் நீரின் வளைவு-நெளிவு-நெகிழ்வு என்னும் அடிப்படையான இயல்பே அதில் வாழும் உயிர்களின் உடல் வடிவத்தின் தகவமைப்புக்கும் ஆதாரமான விதியாக அமைந்திருக்கிறது. வாழும் இடத்தின் இயல்பே அதில் வாழ்பவற்றின் இயல்பைத் தீர்மாணிக்கின்றது. நம்மில் பலரும் பெரும்பாலும் இத்தகைய ஆவனப்படங்களைப் பார்த்திருப்போம். எனவே அவற்றை இங்கே விவரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால், ஒன்றரை மணிநேரப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு வகையான உயிரிணங்களின் வாழ்க்கையில்  வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு உயிரினத்தின் கதை என்னைப் படைப்பின் விநோதங்களுப்பால் இயற்கையின் புதிரான கணக்கு வழக்குகளையும் -அதன் சமன்பாட்டையும், இவற்றின் வழி ஒட்டுமொத்தமாக மனித வாழ்க்கையையும் நின்று யோசிக்க வைத்தது. கடல் - எப்படியானாலும் நம்முடைய ஆதி வீடல்லவா?
தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகிறது. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையில் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு முமையாக விடுபடுகின்றன.  அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன. கடல் அலைக்கரங்களை வீசி ஓலமிட்டு அழைக்கிறது, உண்மையில் கடலடியில் மனதைத் தங்கள் குஞ்சுகளின் மேல் வைத்திருக்கும் தாய் ஆமைகளின் உயிர்த்தவிப்பு தான் கரையை மோதும் அந்த அலைகள். இப்பொழுது காமிரா வானத்தைக் காண்பிக்கிறது. இந்தக் ஆமைக் குஞ்சுகளுக்காகவே நீண்ட தூரம் பறந்து வந்து களைத்து வானத்திலேயே பசியுடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு கடற்பறவை இனம். வானை நிறைத்து நுற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன. பூமியை நோக்கி எய்யப்பட்ட அம்பு போல சர் சர்ரென்று வேகமாகப் பறந்து வந்து ஆமைக் குஞ்சுகளைக் கவ்விச்செல்கின்றன பறவைகள்.


பிறந்த நொடிமுதல் வாழ்க்கைப் பந்தயம் ஆரம்பிக்கின்றது. பந்தயத்தின் முடிவு வாழ்வு அல்லது சாவு - இரண்டில் ஒன்று தான். இரண்டு உயிரினங்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம். ஆமைக்குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியேறிய கணமே ஓட ஆரம்பிக்கின்றன. நீரின் ஆழத்திற்கு சென்று சேர்வதற்குள் மிகப்பெரும்பாலானவை மரணம் அடைகின்றன. பிறந்த அடுத்த நொடியில் மரணம். என்ன வாழ்க்கை இது? இந்தப் பிறப்பிற்கு என்ன அர்த்தம்? எதற்காகப் பிறக்க வேண்டும்? பறவை இனம் உயிர்பிழைக்கவா? அதற்காக ஆமையாய்ப் பிறந்து அக்கணமே மடிய வேண்டுமா? இது பாரபட்சம் இல்லையா? என்ன இயற்கை இது?
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சம்பவமும் அதன் முன் பின் நிகழும் சம்பவங்களுடன் கொள்ளும் தொடர்பை கவனிக்க முடிகிறது. பிரபஞ்ச விதியின் திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விலக்கப்பட, காட்சி இப்போது தெளிவாகிறது. இந்தத் தரிசனம் வாழ்வு குறித்த பல சிந்தனைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்புகிறது. கடலில் வாழும் இந்த ஆமைகள் எதற்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்ல வேண்டும்? கடலில் இருந்து நிலத்திற்கு வந்து பரிணமித்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட உயிரினங்களில், நிலத்திலிருந்து மீண்டும் கடலுக்குத் திரும்பச் சென்ற சில உயிரிகள் உண்டு. அதில் ஒன்று தான் இந்தக் கடல் ஆமைகள். ஆனாலும் அவை முட்டையிடுவதற்கு இன்னும் நிலத்தைத் தான் சார்ந்துள்ளன, கடலிலேயே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் அளவுக்கு இன்னும் பரிணமிக்கவில்லை. ஆகவே அவை நிலத்துக்கு வந்தாக வேண்டும்.
முட்டை இட்டுவிட்டு தாய் ஆமைகள் மீண்டும் கடலுக்குச் சென்று விடுகின்றன. மற்றெல்லா உயிரினத்திலும் குட்டிகள் பிறந்தது முதல் சுயமாக வாழும் தகுதி பெறும் வரை தாயால் உணவு ஊட்டப்பட்டு, உயிர் பாதுகாக்கப்பட்டு மிகக்கவனமாக பேணி வளர்க்கப்படுகின்றன. ஆனால் கடல் ஆமைக்குஞ்சுகள் பிறக்கும் போதே தன்னந்தனியாக, காத்துக்கொண்டிருக்கும் மரணத்தின் கரிய நிழலை எதிர்கொண்டபடி பிறக்க வேண்டிய சவாலை இயற்கை விதித்திருக்கிறது.
g
ஓவ்வொரு ஆமையும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான். ஆம், கரையில் பிறந்த இடத்திலிருந்து கடலுக்குள் சென்று சேரும் அந்த இருபதடி தூர உயிருக்கான ஓட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஆமை மட்டுமே கடற்பறவைகளின் பசித்த வாயில் இருந்து தப்பிக்கிறது. கடலுக்குள் சென்று சேர்ந்தாலும் கூட்டமாக இடப்பட்ட பல்லாயிரம் முட்டைகளில் எந்த ஆமைக்குஞ்சின் தாய் எந்த பெரிய ஆமை என்று எப்படி தெரியும்? எனவே தானாகவே தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டியது தான். அப்படி கரையில் உயிர் பிழைத்த ஆமைக் குஞ்சுகளுக்கு அடுத்த எதிரி கடலில் இருக்கும் பெரிய மீன்கள். அவற்றிலிருந்தும் எவை தப்புகின்றனவோ அவையே கடல் ஆமை இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு கடல் ஆமை முழு பாலின வளர்ச்சி அடைவதற்கு (இனத்தைப் பொறுத்து) குறைந்தது இருபத்தி ஐந்து முதல் அதிகபட்சம் ஐம்பது ஆண்டுகள் ஆகும். எதிரிகளிடமிருந்து தப்பி உயிர் பிழைத்து வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே பாலின முதிர்ச்சி அடைந்து தங்கள் இனத்தின் உயிர்ச் சங்கிலி அறுபடாமல் காக்கின்றன.
உயிர்வாழும் கடல் ஆமைகளை வெற்றியாளர்களின் சமூகம் என்று சொல்லலாம், அல்லது இனத்தின் தொடர்ச்சிக்கு வேண்டி உயிரிழந்த சகோதரர்களின் உயிர்த் தியாகத்தால் பிழைத்து வாழும் சமூகம் என்றும் சொல்லலாம். சுமார் 10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூதாதையர் ஆமை இனத்தில் இருந்து  பிரிந்தவை கடல் ஆமைகள். இந்தக் கிரகத்தின் உயிரினங்களில் மூத்தகுடிகளுள் ஒன்று. இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உயிர்பிழைத்து வந்தவை, ‘நேற்றுப் பிறந்த’ மனிதனால் எந்த மதிப்பும், இரக்கமும் இல்லாமல் வேட்டையாடப்படுகின்றன.
கடல் ஆமைக் குஞ்சுகள் கரையில் முட்டை ஓட்டைப் பிளந்து கொண்டு வெளிவரும் சமயத்தில் இருந்து பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று கூட பின்னோக்கியோ பக்கவாட்டிலோ ஓடுவதில்லை. அப்படி ஓடினால் ஆயிரத்தில் ஒன்று கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. மிகச்சரியாக எல்லாமே கடலை நோக்கியே ஓடுகின்றன. அவை எப்படி கடலின் திசையை அறியும்? அப்போது தான் இன்னொறு தெரிகின்றது, தாய் ஆமைகள் எல்லா முட்டைகளையும் தலை கடல் நோக்கி இருக்குமாறு இட்டிருக்கின்றன. அவற்றின் எதிர்காலத்தின் திசை கருவிலேயேயே விதிக்கப்பட்டிருக்கிறது. வெளியேறியவுடன் அந்தத் திசை நோக்கி ஓட வேண்டியது தான்.
முன்னரே நேரம் குறித்து வைத்தது போல ஒரே கால அளவைக்குள் படைபடையாக ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருகின்றன. அப்படி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் அல்லது வெவ்வேறு நாட்களில் முட்டைகளைக் கீறி வெளிவருமானால்? அப்பொழுதும் ஒன்று கூட உயிர் பிழைக்க முடியாது. மேலே பசியுடன் பறந்தலைந்து கொண்டிருக்கும்  கடற்பறவைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தால் தான், ஒவ்வொரு பறவையும் ஒன்றிரண்டாகத் தங்களுக்கு எனக் கவ்விக் கொண்டது போக சில ஆயிரம் ஆமைகள் உயிர் பிழைத்து கடலைச் சென்றடைய முடியும். அத்தனையும் சரியாக நடந்தால் ஒரு ஆமைக்குஞ்சு வாழ்வெனும் வரத்துடன் ஆழியை அடையும்.
ஒருவேளை கொன்று தின்பதற்காகக் காத்திருக்கும் எதிரிகளே இல்லாமல் இருந்திருந்தால்? இனப்பெருக்க காலத்தில் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் கரைக்கு வந்து கடற்கரை மணலை அகழ்ந்து முட்டையிடுகின்றன. ஒவ்வொன்றும் சராசரியாக இருநூறு முட்டைகள் வரை இடும். அவ்வளவும் பொரிந்து குஞ்சுகள் கடல் சேர்ந்தால் கடலே ஆமைகளின் ஏகாதிபத்தியத்தியமாகி விடும். பிறக்க வேண்டிய ஆமைக்குஞ்சுகளின் எண்ணிக்கை, வெளிவர வேண்டிய நேரம், எதிரிகளின் எண்ணிக்கை என யாவும் இயற்கையின் மாறாத விதிகளில் மிகக்கச்சிதமாக முன்வகுக்கப்பட்ட உயிர்ப் போராட்டம் இது. ஒன்று பிறழ்ந்தாலும் ஏதாவது ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபட்டுப் போகும். ஜெயமோகன் தனது ‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ நூலில் கூறியிருப்பது போல பிரபஞ்ச விதி, அதன் பல்லாயிரம் தராசுத் தட்டுகளை ஓயாமல் சமன்படுத்திய படி இருக்க முள் ஒரு சமநிலையைக் கண்டு மையத்தில் நிற்கிறது.
ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்தால் நியாயப்படுத்தப்படுகிறது இங்கே. சிந்திக்கையில் ஒவ்வொரு மனிதருமே  வெற்றிகரமாக உயிர்பிழைத்த ஒரு கடல் ஆமை போல தான். ஆயிரத்தில் ஒன்றாகக் கடல் சேர்ந்த ஆமைக்குஞ்சு போல, பல்லாயிரத்தில் அண்டம் சேர்ந்த ஒரு உயிர் அணு தான் மனிதன். ஓடு உறுதியாகி வளர்ந்து விட்டால் ஒவ்வொரு ஆமையும் (இனத்தைப் பொருத்து) சராசரியாக நாலரை அடி நீளமும், 250 கிலோ எடையுமாக, என்பது ஆண்டுகள் உயிர் வாழும். பிறந்த நொடியில் ஓடிய ஓட்டத்திற்கும், காட்டிய வேகத்திற்கும் முற்றிலும் எதிர்மாறாக, காலத்தின் வேகத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் மிக நிதானமாக, மிதக்கும் குன்றுகள் போல வாழ்கின்றன. வரமாகக் கிடைத்த வாழ்வை நிறைவாக வாழ்ந்து மடிகின்றன. ஆமைக்குஞ்சுகளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் இந்த வாழ்க்கை பெரும் வரம் தான். ஆனால் இந்த வரத்தை விரயமாக்க நாமே ஓயாமல் போராடுகிறோம். மனிதனுக்கு மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை; ஐம்புலன்கள் வழியாக, அடங்காத மனத்தின் பேராசையை நிரப்பும் கட்டுக்கடங்காத வெறியில் தன் இனம் முதல் அனைத்து உயிர்களையும் அழிக்க தயங்குவதில்லை. இன்னும் நெருக்கமாகப் போனால் ஒவ்வொருவருக்கும் கட்டுப்பாடற்ற தன் சொந்த மனமே போதும், வாழ்வைக் கொன்றழிக்க.
வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எல்லையற்று, புலன் வழி நுகர்ச்சிகளின் வழியாகப் பெறும் இன்பங்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்வதல்ல. அதே நேரம் முற்றாக நிராகரிப்பதும் முழுமையான வாழ்க்கை அல்ல. செயலற்ற நிலை என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை. அப்படியானால் எது முழுநிறைவான வாழ்க்கை? இந்திய மரபு கூறும் முழுமையான வாழ்வென்பது செயல்களின் விளைவுகளில் பற்று வைத்து அதிலேயே உழலாமல், செய்யும் தொழிலில் முழுப்பிரக்ஞையுடன் திறம்பட செயல்புரிவதையே. இந்த நிலையை அடைய மனம் மற்றும் புலன்களின் மீதான முழுக் கட்டுப்பாடு தேவையாகிறது.
இந்துத் தொன்மங்களில் ஆமை முக்கியமான குறியீடாகத் தொடர்ந்து சுட்டப்படுகிறது. ஜபம், தியானம் செய்பவர்கள் அமர்வதற்கென்று ஆமை வடிவத்தில் மரத்தால் ஆன பலகை உகந்ததென்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அமரும் பலகைக்கு கூர்மாசனம் என்று பெயர். (யோக மரபில் கூறப்படும் கூர்மாசனம் என்னும் ஆசனப்பயிற்சி வேறு). கூர்மாசனத்தில் அமர்தல் என்னும் குறியீடு ஐம்புலன்களை வெல்வதை, அதன் வழி இச்சை மற்றும் மனத்தின் மீதான முழுக்கட்டுப்பாட்டைப் அடையும் நிலையைக் குறிக்கின்றது.
இந்து மதம்/வேதாந்தம் செயல் புரியும் ஊக்கத்தைக் குறைத்து அவனை சமூக வாழ்வில் இருந்து விலக்குகிறது, உள்ளொடுங்கியவனாக மாற்றுகிறது என்னும் மேற்கின் குற்றச்சாட்டு அதன் முற்றான புரிதல் குறைபாட்டால் எழுவது. உண்மையில் நேர்மாறாக, செயல்களின் பலனில் விருப்பத்தை விலக்கி, முழு மனத்திறனுடன் செயல் புரியும் மனிதர்களே சிறந்த சமூக மனிதர்களாக, சமூகத்தின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் ஆகப்பெரிய பங்களிப்பாளர்களாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த வெற்றியாளர்களாக இருக்க முடியும். இந்த நாட்டில் அப்படி வாழ்ந்து காட்டிய எண்ணற்ற ஆளுமைகள் வரலாற்றில் உண்டு. ஆயிரத்தில் ஒரு ஆமைக்குஞ்சிற்குக் கிடைத்ததைப் போல, அத்தகையவர்களுக்கே உண்மையில் வாழ்வெனும் வரம் முழுமையாக கைவரப்பெறுகிறது.
-பிரகாஷ் சங்கரன்