Tuesday, January 15, 2013

அனுபவமாவது எது?


கடந்த மாதம் செக் குடியரசின் தெற்குப் பகுதியில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பழமையான ஒரு ஊருக்கு நண்பர்களுடன் பயணம் செய்தேன்.
காலையில் மரக்கூட்டங்களுக்கு ஊடாக பல கிலோமீட்டர் நடந்து மலை உச்சியின் மீதுள்ள ஒரு சிதைந்த 12ஆம் நூற்றாண்டுக் கற்கோட்டைக்குச் சென்றோம். லாண்ட்ஷ்டெய்ன் (Landstejn) எனப்படும் அக்கோட்டை மன்னர்களிடமிருந்து பல பிரபுக் குடும்பங்களுக்கு கைமாறி பிறகு மெல்ல மெல்ல கைவிடப்பட்டு சிதைந்து காலத்தின் எச்சமாக நிற்கிறது. கோட்டையின் ஒரு மூலையில் தனியாக செங்குத்தான சதுரமாக உயர்ந்து நிற்கும் கண்காணிப்புக் கோபுரத்தின் உள்ளே இருக்கும் படிகள் வழியாக ஏறினால் உச்சியில் திறந்த வெட்டவெளிக்கு வரலாம்.
dsc00967
மூச்சு வாங்க மேலேறி வந்தவுடன் சட்டென்று பத்துத் திசையையும் திறந்து கொள்ள, ஆகாயத்தின் நடுவில் அந்தரத்தில் தனியாக தொங்க விட்டது போன்று இருந்தது. குளிர்ந்த வேகமான காற்று மோதித் தள்ள ஏதோ கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் கூட்டமாக கையைப் பிடித்து பின்னால் இழுப்பது போல உணர்ந்தேன். கோபுரத்தின் இடுப்புயரமுள்ள பக்கச் சுவரின் விளிம்புக்கு மறுபுறம் கீழே அப்படியே செகுத்தாக இறங்க கோட்டையின் சிதைந்த சுவர்களும், அதற்கும் கீழே மலை முகடும் அது அப்படியே சரிந்து சமவெளியைத் தொட்டுப் படர்ந்த பச்சைப் பள்ளத்தாக்கும் தெரிந்தது.
மேலிருந்து பார்க்கும் முன்னூற்றி அறுபது பாகையும் வெகுதொலைவில் தொடுவானத்தின் புகைமூட்டத்தினுள் சென்று மறையும் அடர்ந்த பசும் மரக்கூட்டம். உடுத்திக் களைந்து தரையில் போட்ட கசங்கிய பச்சைப் பட்டுப் புடவை போல நடுநடுவே பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் மொண்ணை முகடுகளுடன் ஏறியிறங்கி அலையலையாகப் படர்ந்துள்ள புல்வெளி. இது ஒருதரம் கிளிப்பச்சை. வளைவு நெளிவே இல்லாமல் நெட்டுக்குத்தாக ஊசி முனையுடன் பைன் மரங்கள் நின்ற இடங்களில் பூமி மேனி சிலிர்த்துக் கொண்டது போல இருந்தது. இலையுதிர் காலம். பசுமை மாறா மரங்களின் கரும்பச்சை பரப்புக்கிடையே ஆங்காங்கே இலையுதிர்க்கும் மரங்களின் இலைகள் வெயிலில் பளீரென்று மஞ்சளாகவும், காவிநிறத்திலும், சிவப்பாகவும் ஜொலிப்பது பச்சைப் பட்டுப் புடவையின் கோலம் போல அல்லது காடு தீப்பற்றி எறிவது போல இருந்தது.
எங்கோ உற்பத்தியாகி காட்டை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கும் நதி, வெயில் பட்டு மினுமினுக்கையில் புதர்களுக்குள் ரகசியமாக வளைந்து ஊர்ந்து செல்லும் ராட்சதப் பாம்பு போலத் தெரிந்தது. நீலவானம் கரைந்து தரையில் சொட்டித் தெறித்தது போல வெவ்வேறு அளவுகளில் கோணலான ஏரிகள், குளங்கள். சில இடங்களில் பழுப்புச் சிவப்பு நிறத்தில் ஏழெட்டு கட்டிடங்களின் ஓட்டுக்கூரைகள், இன்னும் சிலவும் இருக்கலாம் -உள்காட்டில் மறைந்து அலையும் செந்நாய்க் கூட்டம்போல - மரத்தின் அடர்த்தியில் மேலிருந்து பார்த்தால் கண்ணில் படவில்லை.


இதற்கு முற்றிலும் மாறாக, மேலே கவிழ்ந்த வானம் தெள்ளத் தெளிவான நீல நிறத்துடன் சூரியன் பிரகாசிக்க பூமியை வெறும் சாட்சியாகப் பார்த்தபடி அமைதியாக இருந்தது. அவ்வப்போது இடையன் புசுபுசுவென்ற வெள்ளை செம்மறியாட்டுக் கூட்டத்தைப் பத்திச் செல்வது போல காற்று திரள் திரளாக குட்டி மேகங்களை தள்ளிக் கொண்டு சென்றது. செம்மறியாட்டு கூட்டம் மறைந்ததும் மீண்டும் சூரிய ஒளி, மீண்டும் நீல வான அமைதி. சொல் ஒழிந்த மனம் போன்ற அமைதி.
இயற்கை உண்டாக்கிய கிளர்ச்சியினால் கோபுர உச்சிக்கும் மேல் சில அடி உயரத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். பார்க்கும் காட்சியையெல்லாம் என்னை மீறி உருவகங்களாக, வர்ணனைகளாக, சொற்களாக வாரி இறைந்த படி இருந்தது மனம். கொஞ்ச நேரம் நிலைகொள்ளாத தவிப்பு. வார்த்தைகள் ஒவ்வொன்றாக வற்றிக் காய்ந்ததும் மனதில் ஒரு பேச்சற்ற அமைதி. துக்கத்தைத் துடைத்து வழிந்த கண்ணீர் கன்னத்தில் உப்புப் பிசுபிசுப்புத் தடத்தை மட்டும் விட்டு செல்வதைப் போல, எல்லாம் ஒரு உணர்ச்சிநிலை மாத்திரமாக உறைந்தது. பூமியின் பச்சை கொப்பளிக்கும் உற்சாகமும், வானின் மௌனமான நீலமும் மனதின் ஒரு ஊசிமுனையில் அருகருகே இருக்கின்றன போல.
மலை உச்சியிலோ, பாறையின் மீதோ இருந்து தடைகளின்றி விழிப்புலத்தை நிறைக்கும், மாபெரும் இயற்கை விரிவைக் காணும் போதெல்லாம் ஏற்படும் அதே வியப்புணர்வு - பிரபஞ்சம் மிகமிகப் பிரம்மாண்டமானது, இயற்கை அதிமகத்தானது!
கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது. இந்தப் பிரம்மாண்டத்தில் நானும் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். சதைக்குள் சிக்கிக் கொண்ட பிரபஞ்சம் நான். முதன் முறை வாழ்வில் ஒரு மலைஉச்சியில் நின்று பார்த்தபோது இந்த அத்வைத உணர்வு ஒரு கணம் தான் தோன்றியது, அதற்கப்புறம் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப அதே எண்ணம் உருவாகிறதா அல்லது நான் அதை உருவாக்கிக் கொள்கிறேனா என்று தெரியவில்லை. சிலநேரம் இந்த வார்த்தைகளே சலிப்பைத் தரும். ஆனாலும் அப்படி நினைத்துக் கொள்வது ஒரு பெரிய ஆசுவாசம்.
dsc00992
மெல்ல மலை இறங்கி நடந்து வந்தோம். மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் தெல்ச் (Telc) என்ற ஊருக்குச் சென்றோம். சிறிய ஊர் தான் ஆனால் பழமையான, முக்கியமான ஊர். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையம். ஊரின் நடுவே பெரிய, கொஞ்சம் கோணிய செவ்வகமான சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றிலும் வரிசையாக மிக விரிவான வேலைப்பாடுகள் கொண்ட பரோக் பாணி மற்றும் மறுமலர்ச்சிக் கால கட்டிடங்கள்.
பச்சை, பழுப்பு, கடல் நீலம், மஞ்சள், சிவப்பு, தாமரை நிறம் என்று பல வர்ணநிறக் கட்டிடங்கள் கலவையாக அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தன. அனைத்துமே நான்கு மாடி உயரம். எல்லா கட்டிடங்களையும் இணைக்கும் மறுமலர்ச்சி பாணி நீண்ட இணைப்பு வழி. தூண்களில் இருந்து புறப்பட்டு மையத்தை நோக்கி சர்ச் விதானம் போலக் கூம்பியபடி சென்று மையத்தில் இணையும் பூவை ஒத்த அதன் வளைந்த உள் கூரை.
கட்டிடங்களின் முகப்பு வெறும் சதுரமாக பெட்டிகளை அடுக்கி வைத்தது போல இல்லாமல் அழகான வளைவுகளுடன், அகலம் குறைந்த படியே சென்று மேலே முக்கோணம் அல்லது அரைக்கோள வடிவத்தில் முடிந்தது. முன் பக்கம் முழுவதும் நுணுக்கமான கீறல் ஓவியங்கள் செறிவாக வரைந்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. எல்லாக் கட்டிடங்களிலும் கண்ணாடிக் கதவு வைத்த ஜன்னல்களின் வெளிப்புறம் கொத்துக்கொத்தாக விதவிதமான நிறங்களில் பூக்கள் அடர்ந்து பூத்திருக்கும் சிறிய அலங்கார பூத்தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தன.
இரண்டு உள்ளங்கை அளவுள்ள சிறிய கருங்கல் பாவிய சதுக்கத்தின் மத்தியில் இரண்டு நீரூற்றுக்கள். ஒரு சிறிய பூங்காவின் மத்தியில் ஐரோப்பாவைச் சூறையாடிய பிளேக் நோய் மரணங்களின் உயரமான நினைவுச் சிலை. இன்னொரு சிறிய நீர்த் தடாகத்தின் மத்தியில் கையில் சிறிய பொன்னிற சிலுவையும் தலைக்குப் பின் சுடரும் பொன்னாலான ஒளிவட்டமுமாக யேசு - அவருக்கே உரித்தான சோகம் கப்பிய சாந்தமான முகத்துடன். அந்தச் சிலையின் பிரதிபிம்பம் அப்படியே கீழே உள்ள நீரில் தலைகீழாகத் தெரியும். சதுக்கத்தின் ஒரு பாதி வரிசைக் கட்டிடங்களும் யேசுவின் காலுக்குக் கீழே நீரில் பிரதிபலிக்கும். தென்றல் மெல்ல நீர்ப் பரப்பை வருடிச் சென்றால், தலைகீழ் யேசுவும், அந்த சதுக்கமும் எல்லாம் ஒரு கனவு போல அலையலையாக மெல்ல கலைந்து ஓயும், பின்னர் மீண்டும் பிம்பம் உருவாகும். அந்த அலை அசைவில் பிறர் இன்னும் அறியாத ஒரு யேசு நடனமாடுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.
dsc01072
கொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் குவியல்களாக வானத்தில் மேகங்கள் படர நிலத்தில் ஒளி குறைந்து கொண்டே வந்தது. காட்சிக்கேற்றபடி ஒளி அமைக்கப்பட்ட நாடக அரங்கம் போல சதுக்கம் இப்போது முற்றிலும் புதிய இடமாக இருந்தது. புகை படிந்த பழைய எண்ணை ஓவியம் போல கட்டிடங்களின் நிறம் மங்கலாக, கல்தரையும், வானமும் ஒன்று போலானது.
பூத்தூவலாகத் தொடங்கி கொஞ்சம் பெரிய தூறல் மழை பெய்தது. பத்தே நிமிடம், திரைவிலக்கப்பட்டது போல் மேகம் மாயமாய்க் கலைந்து விலக மீண்டும் பளீரென்று சூரியன். கல்தரை எண்ணை பூசிய கருங்கல் சிலை போல பளபளக்க, கழுவித் துடைத்த கண்ணாடி வழியாகக் காணும் காட்சி போல சதுக்கமே தெளிவான புதிய ஒளியுடன் பிரகாசமாக இருந்தது. ஒருவேளை சற்று முன் இருந்த மங்கலான ஒளியின் காரணமாக இருக்கலாம், இப்போது எல்லாமே முன்பைவிடக் கூடுதல் பொலிவுடன், துல்லியமாகவும், பளீரென்றும் இருந்தது.
சூரியனின் மாயக் கிரண விரல்கள் தொட்ட இடமெல்லாம் புதுப் பிறப்பெடுத்தது. தடாக மையத்து யேசுவின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நிஜமாகவே ஒளிவட்டமாகியது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு இளம்பெண் போல தனக்கு மட்டுமே உரிய பிரத்யேக அழகுடன் மிளிர்ந்தது. ஒளியால் அறியப்படும் பொருட்களில் எல்லாம் ஒளியையே அறிகிறோம் என்ற வரி நினைவில் எழுந்தது. இது சாங்கியமா வைசேஷிகமா என்றொரு குழப்பமும் கூடவே. வார்த்தைகளும் சிந்தனைகளும் குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்று பிரயத்தனப்பட்டேன், முடியவில்லை. ஒவ்வொறு கட்டிடமாக நிதானமாக பார்த்துக் கொண்டே நின்றேன். என்னைச் சுற்றி வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் நடுவில் வந்து விழுந்து விட்டது போல இருந்தது. அழகு. பைத்தியக்காரனாகப் புலம்பவிடும் அழகு. கோட்டை உச்சியில் நின்றுகொண்டு சமவெளியைக் கண்டபோது எழுந்த அதே மன எழுச்சி, சற்றும் குறைவில்லாமல். ஏதோ சிலகணங்கள் என்னை இழந்திருந்தேன்.
வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் மரங்களும், பூமியை நோக்கி வளைந்து வரும் ஆகாயமும் இணைந்து மனத்தில் தூண்டும் அழகுணர்ச்சியை கல்லும் மண்ணும் குழைத்துக் கட்டிய கட்டிடங்களும், சிலைகளும் உண்டாக்குகின்றன. கூட இருந்தவர்கள் சாதாரணமாக பார்வையை ஓடவிட்டு இயல்பாக பார்த்துக் கொண்டிருக்க எனக்கோ ஒவ்வொன்றும் நரம்புகளை அதிரவைத்து, மனம் பரபரக்க பரவச அனுபவமாக, ஏதோ ஒரு உணர்வு நிலை என் போதத்தை மெது மெதுவாக மேவிப் புதைக்கிறதே, ஏன்?
இரண்டிலும் உள்ள அழகு ஒன்று தானா? இயல்பாக ஒன்றை இயற்கை என்றும் மற்றதை செயற்கை என்றும் எளிதாகப் பிரித்துக் கொண்டு, சிறந்தது x கொஞ்சம் மட்டமானது என்று வகுப்பது பொதுப்போக்கு. கடலும் நதியும், மலையும் மழையும், மரமும் மலரும் மனதில் தோற்றுவிக்கும் கிளர்ச்சி தான் சிற்பமும், ஓவியமும், கட்டிடங்களும் உண்டாக்குகின்றதா? நாம் காண்பனவற்றில் எதை நாம் சாரமாக அனுபவிக்கிறோம் அல்லது நம்முள் எது அனுபவமாகிறது?
இரவு காட்டை ஒட்டி இருந்த நண்பரின் பழைய விடுமுறைக் கால வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். சுற்றிலும் வேறு கட்டிடங்கள், வாகனங்கள், தெருவிளக்கு போன்றவை எதுவும் இல்லாததால் ஒளியால் மாசுபடாத அடர்ந்த இருள். நட்சத்திரங்களை அவதானிக்க பொருத்தமான சூழல். வீட்டு முற்றத்துப் புல்வெளியில் மல்லாந்து, ஒளிப் புள்ளிகளாக ஆகாயம் எங்கும் விரவிப் படர்ந்திருந்த நட்சத்திர மண்டலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கார்ல் சாகன், “பெருவெளியில் எண்ணற்ற விண்மீன் அண்டங்களின் (galaxies) தூசி மண்டலத்தில் பூமி என்னும் ஒரு துகளில் ஒட்டிக் கொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் என்பவன்” என்று மனித மைய சிந்தனையை நிராகரித்ததை நினைத்துக்கொண்டேன். அந்த நேரத்தில் அந்த நினைவு மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்தது.
நல்ல குளிர். பிறர் உறங்கச் சென்றுவிட்டார்கள். கூடத்தில் இருந்த கணப்பில் பெரிய மரத் துண்டுகள் போடப்பட்டிருந்தது. செத்த காட்டைத் தின்று நெருப்பு வளர்ந்து கொண்டிருந்தது. தீயும் காற்றும் பேசிக் கொள்ளும் படபட சப்தம் தவிர கனத்த அமைதி.
மனதைக் காற்றுடன் ஒப்பிடுவது வழக்கம். அப்போது தீயுடன் ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருந்தது. தீ என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பது. பயறு போல சிறிதாக அசைவில்லாமல் இருக்கும் மெழுகுவர்த்தியின் நெருப்பும் இடைவிடாத நிகழ்வு தான். எண்ணங்களின் தொடர்ச்சியான நிகழ்வு தான் மனம். எண்ணங்களின் ஒழுக்கு நின்று போனால் மனம் இல்லை. கிடைமட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போல, எரியும் அக்னி மேல் நோக்கிப் பாயும் நதி. ஒரு கணத்தில் இருந்த நெருப்பை மறுகணம் பார்ப்பதில்லை நாம்.
dsc01232
அனுபவமாவது எது? உறங்க விடாமல் கேள்வி எரிந்து கொண்டிருந்தது. யோசித்து யோசித்து இரு கோட்பாடுகளை வந்தடைந்தேன்.
1. இயற்கை மனிதனுக்கு எப்போதும் முடிவில்லாத ஆச்சர்யங்களைத் தந்து கொண்டே இருப்பது. அதியற்புதம் வாய்ந்த இயற்கையின் பேரழகின் முன் நிற்கும் போதெல்லாம் மனிதன் பேச்சிழந்து ஸதம்பிக்கிறான். ஓவியம், சிற்பம், இசை, கலைநயம் மிக்க கட்டிடம் என்று மனிதனுக்குள் உள்ள நுண் உணர்வுகளைத் தீண்டி அழகுணர்ச்சியைக் கிளறி அவன் தன்னை மறந்து போகச் செய்யும் எல்லா கலைப்படைப்புகளும் மனிதனின் ‘படைப்புகளே’. ஆனால் மனிதனின் படைப்பு ஒரு போதும் இயற்கையின் பேராற்றல் மிக்க படைப்புத் திறனை தாண்டிச் செல்ல முடியாது. இதை மனித மனம் உள்ளூற நன்கு அறியும். ஆனாலும் ‘நான்’ என்னும் ஆதாரமான, மிக அழுத்தமான சுயம் தனக்கான அங்கீகாரத்தை தானே வழங்கிக் கொள்ளும். எனவே மானுடத்தின் ‘படைப்புகளின்’ முன்பு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை மறந்து வியப்பதும், பெருமைப்பட்டுக் கொள்வதும், ரசிப்பதும் மானுடத்தையே -அதன் வழியாக தன் சுயத்தையே. ஒருவகையில் ஆழ்மனதில் தன்னைத் தானே அங்கீகரித்துக் கொள்ளும் செயல். ஆக, மனிதனுக்கு கலைப் படைப்புகளில் அனுபவமாவது என்பது அவன் சுயமே.
2. மனிதனே இயற்கையின் படைப்புகளுள் ஒன்றுதான். அந்த இயற்கையே மனிதனையும் படைக்குமாறு விதித்துள்ளது. மனித மனத்திற்குச் சாத்தியமான எல்லாக் கற்பனைகளுக்கும் வேர் இயற்கையிலேயே உள்ளது. ஆகவே அவன் செய்வதெல்லாம் மறுபடைப்பு மட்டுமே. மனிதன் உருவாக்கும் மறுஆக்கத்திற்கெல்லாம் தூண்டுகோல் இயற்கை தரும் பேரனுபவம் தான். அந்த அனுபவத்தையே மனிதன் ஓவியமாகவும், இசையாகவும், கவிதையாகவும், சிற்பமாகவும், அழகான கட்டிடங்களாகவும் அவனுடைய இயல்பிற்கேற்ப பிரதிபலிக்கிறான். விஷ்ணுபுரத்தின் சிற்பி பிரசேனர் சொல்வது போல் பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். அதை ஆழ்ந்து அறியத் தொடங்கும் போது ஒரு அனுபவத்தை மற்றொன்றாக மாற்றிக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஆற்றல் அழிவின்மை விதி போல. இயற்கையின் படைப்பு தரும் பேரனுபவமே மனிதனின் மறுபடைப்புகளிலும் அனுபவிக்கப்படுகிறது. அதாவது மனிதனின் படைப்புகளிலும் இயற்கையே அனுபவமாகிறது.
சுருக்கமாக, மனிதனின் படைப்புகளில் அனுபவமாவது அவன் சுயமே x மனிதனின் படைப்புகளில் அனுபவமாவதும் இயற்கையே என்று இரண்டு எதிரெதிர் கருதுகோள்களாக வரையறுக்கலாம். ஆனால் உண்மையில் முதல் கருதுகோள் வழியாக இரண்டாம் கருதுகோளுக்கு வந்து சேர்ந்தேன் என்பதே சரி.
கணப்பில் தணல் நிறமான இலைகளுடன் மரங்கள் காற்றில் அசைந்தாடின. பழுத்துச் சிவந்த இலைகள் மழை போல் உதிர்ந்து விழுந்தன, சில இலைகள் காற்றில் மெல்லப் பறந்து மறைந்தன. அங்கே நீலமும், மஞ்சளும், சிவப்புமாக வரிசையாகக் கட்டிடங்கள் தோன்றின. அவை நெருப்புத் தடாகத்தில் நெளிந்து நெளிந்து ஆடின. அதன் பின் சிவந்த இலைகளுள்ள மரங்களும், வண்ண வண்ணக் கட்டிடங்களும் எல்லாம் ஒன்றாகக் கனப்புக்குள் கலந்து ஆடி ஆடி மெதுவாக அமிழ்ந்தன. கண்களுக்குள் சிவப்பு கரைந்தது, விழி மெல்லச் சுழன்று உள்வாங்கியது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி நெருப்பு இலையுதிர்க்கும் வனத்தில் மூழ்கினேன்.
- பிரகாஷ் சங்கரன்.
(நன்றி: சொல்வனம் இதழ் 80ல் வெளிவந்தது http://solvanam.com/?p=23454)

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...