Saturday, March 10, 2012

நாடகம்


பொழுதுக்கு ஒரு முகமென
விதம் விதமாய்
ஒளிந்துகொண்டு
ஒப்பனை செய்வீர்கள்

உங்கள் பொய்த்திரைகளைக்
கிழித்துக்கொண்டு வந்து
என் கண்கள் கண்டுவிடும்

சட்டென்று வெட்கி
புதுப்புது பாவனைகளை
அள்ளிச் சுற்றிக்கொண்டு
மானம் காப்பீர்கள்

இரக்கமில்லாமல்
அவற்றை உருவி எறிந்து
உங்களை அம்மணமாக்கி
என் அகம் ரசித்துவிடும்

'சீச்சீ.. பைத்தியக்காரன்'
என்று
'கௌரவமாக' ஒதுங்குவீர்கள்

மெத்தென்ற தெருப்புழுதியில்
சுகமாகப் புரண்டபடி
உங்கள் நாடகங்களை எண்ணி
சிரித்துக் கொள்வேன்

பாழடைந்த
உங்கள் உள்ளங்களில்
என் சிரிப்பு
முடிவுறாது எதிரொலிக்கும்

செவிப்பறைகள் கூச
அப்போதும்-
'ஐயோ பாவம்' என்றொரு
அனுதாப வசனம் பேசுவீர்கள்

அதற்கப்புறமும்-
நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல்
நடிப்பீர்கள்
நான் எதுவுமே தெரியாதவன் போல்
நடிப்பேன்.

-பிரகாஷ் சங்கரன்

2 comments:

  1. அன்புள்ள பிரகாஷ்

    அழகான, நறுக்கென்ற கவிதை.

    அந்த 'நீங்கள்' யாரென்று சொல்லாமல் விட்டது கவிதையின் ஆழத்தைக் கூட்டியிருக்கிறது.

    ReplyDelete
  2. அன்புள்ள ஜெகதீஷ் குமார், நன்றி.

    //அந்த 'நீங்கள்' யாரென்று சொல்லாமல் விட்டது // ;)

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...