கடைகளில் முகம் மலர சிரித்து வரவேற்கும் ஊழியர்கள், தெருக்களில் உற்சாகமாகப் பேசிக்கொண்டு செல்லும் இளைஞர்கள், முகம் ஒப்பனையில் மிளிர நேர்த்தியான ஆடைகள் அணிந்து கொண்டு பதவிசாக சிம்பொனி அரங்குகளுக்குச் சென்று இசையை ரசிக்கும் நடுவயதினர் மற்றும் முதியோர்கள், ட்ராம், பேருந்து, சாலை என எங்கும் கைகோர்த்துக் கொண்டும், தழுவி முத்தமிட்டுக் கொண்டும் காதலில் உலகம் மறந்த ஜோடிகள் என வெளியில் வாழ்க்கை அழகானது. அது உள்ளும் புறமும் அப்படி இருந்தால் அதைவிட என்ன வேண்டும் வாழ்க்கையை நிறைக்க?
அன்றில் பறவைகள் போலிருக்கும் ஜோடிகளைப் பிரித்தால் இறந்தே போய்விடுவார்கள் எனத்தோன்றும் அளவுக்கு நெருக்கமாக இருப்பார்கள். பந்தங்கள், பலவண்ணங்களைக் காட்டி மிளிர்ந்தபடி காற்றில் அலையும் சோப்பு நுரை போல மெல்லியது. தனிமனிதன், தனித்தன்மை என்பது சருமத்தோடு ஒட்டிய கவசம் போன்றது, அதில் சிறிய கீறல் விழுவது போல ஏதாவது சாதாரணமாக நிகழ்ந்தாலும் கடுமையாக சீண்டப்படுவார்கள், கோபமாக எதிர்வினையாற்றுவார்கள். சோப்புநுரை தெறித்துவிடும். இங்கும் காதல், பாசம், நட்பு எல்லாம் உண்டு. ஆனால் தனிமனித விருப்பம்,சுதந்திரம் என்னும் மனநிலையின் தீவிரப்பிடிப்புக்கு முன் உறவுகளும், பந்தமும் எல்லாம் நிலைத்து நிற்க முடியவில்லை.
நாற்பது ஆண்டு கால கம்யூனிஸ ஆட்சியில் செக் மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை. 1989ல் கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டதும் பிரஷர் குக்கரிலிருந்து பீறிட்டு எல்லாத் திசையும் பாயும் நீராவி போல மக்கள் ஆர்வமாக எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்கள். இந்தியா, நேபாளம் ஆகியவையும் அவர்களின் விருப்ப சுற்றுலாத் தலங்களுள் முக்கியமானவை. இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள நிறைய செக் நண்பர்கள் உண்டு.
என் பல்கலையிலும், நான் வசிக்கும் விடுதியிலும், கிழக்கு முதல் மேற்கு வரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் இருந்து மாணவர்கள் இருக்கின்றனர். எனவே என் கோணங்கள் என்பது செக் மக்களுடன் மட்டுமே பேசியதிலிருந்து உருவானதல்ல. இந்தியாவைப் பற்றித் தெரிந்தவர்கள், இந்தியாவை விரும்புபவர்கள், இந்தியக் கலாச்சரத்தின் மீதும் இந்தியர்கள் மீதும் பெரிய மதிப்போ, விருப்பமோ இல்லாதவர்கள், மதநம்பிக்கை அற்றவர்கள், கிறிஸ்தவ, இந்து, புத்தமத ஆதரவாளர்கள் என்று பலதரப்பினருடனும், மாணவர்கள், இசைக்கலைஞர், ஆராய்ச்சியாளர், கார் ஓட்டுனர், மருத்துவர், சாதாரண வேலைகள் செய்பவர்கள், ஆண்கள், பெண்கள் என செக் மக்களுக்குள்ளும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளிலும் வயதிலும் உள்ளவர்களிடமும் உரையாடியிருக்கிறேன்.
முதலில் பரிச்சயமாகும் யாரிடமும் ஒருபோதும் நானாக இந்தியாவையும், நமது கலாச்சாரத்தையும் பற்றியோ அவர்களது கலாச்சாரத்தையோ பற்றின உரையாடலைத் துவக்க மாட்டேன். பொதுவான விஷயங்களையோ, என்னுடைய ஆராய்ச்சி அல்லது அவருடைய தொழில் சார்ந்த விஷயங்களையோ தொட்டுத்தான் பேச்சு இருக்கும். நான் நெற்றியில் புருவமத்தியில் சிறியதாக குங்குமம் இட்டிருப்பேன். கொஞ்சம் நன்றாகப் பேசியதும் அது என்ன, எதற்காக என்று கேட்பார்கள். அல்லது நான் மதுவகைகளைத் தவிர்த்தாலோ, அசைவ உணவைத் தவிர்த்தாலோ ஆர்வமிகுதியால் அனுமதியுடன் ஏன் என்று கேட்பார்கள். பதில் சொல்வேன், அது பெரும்பாலும் இந்தியாவை -அதன் பழக்க வழக்கம், பண்பாடு பற்றின உரையாடலாகத் தான் நீளும். தொடர்ந்து என்னை, என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால், அதன் வழியாக அவர்கள் தங்கள் நாடு, கலாச்சாரம், தங்களின் குடும்பம், தனிப்பட்ட தகவல்கள் பற்றியும் சொல்லவேண்டிவரும். அப்படித்தான் எனக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமண முறையை ‘அதில் காதல் என்னும் அற்புதம் இல்லை, வெறும் பிஸினஸ் அக்ரிமெண்ட்’ என்று விமர்சித்தபடி என்னுடன் பேச்சைத் துவக்கிய என் சகமாணவி உண்டு. நான் பொறுமையாக விளக்கினேன், என் அண்ணனின் கல்யாணம் நடந்த விதத்தை ஒரு ‘கேஸ் ஸ்டடி’ போல விவரணை செய்து, அவர்கள் இப்போது எப்படி சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னேன். இன்றும் இத்தகைய திருமணங்களில் அதிக சதவீதமும் வெற்றிகரமானவையாக இருப்பதையும், அதில் அன்பும் காதலும் இல்லாவிட்டால் திருமண பந்தங்கள் நீடித்திருக்க வழியில்லை என்பதையும் விளக்கினேன். பேச்சு முடிந்து அடுத்த மாதமே மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் ஆண் நண்பனுடன் இந்தியா சென்றார். தன் சுற்றுலாவின் இடையில் மதுரை சென்று அங்கிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் வீட்டு முகவரி பெற்றுக்கொண்டு கிராமத்தில் என் வீட்டிற்குச் சென்று நான் சொல்லியபடிதான் என் வீடும், குடும்பமும், ஊரும், மக்களும், பழக்கங்களும் இருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு வந்தார்.
பிராக் திரும்பியதும், ‘இந்தியாவைப் பார்த்ததும் முதலில் உன் மனதில் தோன்றிய எண்ணம் என்ன?’ என்று கேட்டேன். அவரை பற்றித் தெரியும் என்பதால் அநேகமாக டாக்ஸிக்காரர்களையோ, தெருவில் இருந்த குப்பையையோ, காசு கேட்டு நச்சரித்த பிச்சைக்காரர்களையோ குறித்தான எரிச்சலான விமர்சனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு தோற்று நான் வியக்கும்படியாக, ‘திருவனந்தபுரத்தில் அதிகாலை விமானத்தில் இருந்து இறங்கிக் காரில் விடுதி நோக்கி சென்றோம். வழியில் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவு ஊழியர் பெண்கள் மனதில் இருந்து மகிழ்ச்சியாக முகம் எங்கும் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தர்கள். பறக்கும் தூசிக்கு நடுவிலும் அவர்கள் முகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் கலந்த ஒளி தெரிந்தது. இங்கே ஐரோப்பாவில் பெண்கள் இவ்வளவு உண்மையான சந்தோஷத்துடன் இல்லை. மனதிற்குள் ‘ஃபக்… தே ஆர் லிவிங்’ என்றேன்’ என்று சொன்னார்.
விரைவில் திருமணம் செய்துகொண்டு இந்தியாவைப் போல நிலைத்த பந்தத்துடன் தானும் தன் ஆண் நண்பரும் வாழ முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் ஆறே மாதத்தில் சிறிய பிரச்சனையால் பிளவுபட்டுப் பிரிந்து போனார்கள். நான் அதற்காக உண்மையில் வருந்தினேன். இந்த மக்கள் அவர்களே விரும்பினாலும் கூடத் திரும்பமுடியாதவாறு கலாச்சாரத்தின் மறுபக்கத்திற்குப் புரண்டு வந்துவிட்டார்கள் என எண்ணிக்கொண்டேன்.
மிகையான தனிமனித உணர்வு உறவுகளில் உண்டாக்கும் சிக்கலை விளக்க ஒரு உதாரணத்திற்காக இவர்களை மட்டும் சொன்னேன். எனக்குத் தெரிந்து நான் பார்த்தவர்களிலேயே ஆண்கள் பெண்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் முறிந்த பந்தங்கள் குறைந்தது ஒன்றிரண்டாவது உண்டு. அவர்களின் வேதனையை அவர்களாகப் பகிராவிட்டால் ஒருபோதும் என்னால் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தோ வேறு எவ்வகையிலுமோ ஊகித்திருக்கவே முடியாது. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியாக ‘வெற்றிகரமாக’ இருப்பதாகவே தோன்றும். இந்த வெளிப்புறத்தைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். வேலை, விருப்பங்கள், சினிமா, அரசியல், சாப்பாடு, காலநிலை, விளையாட்டு இதற்கு மேல் ஒன்றும் பேசாமல், பெயர், சில மேலோட்டமான தனிப்பட்ட விவரங்கள் தவிர அதிக நெருக்கமும் இல்லாமல் மேற்கத்தியரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், வெற்றிகளைப் பற்றியும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
சும்மா விக்கிப்பீடியாவில் மேற்கத்திய பிரபலமான இசைக்கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டுவீரர்கள் இன்னபிற வெற்றிகரமான தனிநபர்களைப் பற்றிய பக்கங்களைப் புரட்டினாலே ஒரு விஷயம் தெரியவரும். அநேகமாக மிகப்பெரும்பாலானவர்களுக்குக் குறைந்தது ஒன்றோ இரண்டோ திருமண முறிவுகள் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் வெற்றியும், புகழும், பணமும் மட்டும் வெளியே தெரியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளில் அவர் நிம்மதியைத் தொலைத்திருப்பாரா, உள்ளுக்குள் இதனால் துக்கம் இல்லாமல் இருக்குமா, அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியும் வெற்றியும் நிரம்பிய மனிதரா என்பதை நம்மவர்கள் கணக்கிலெடுப்பதே இல்லை.
சொந்தத் தாய் அல்லது தந்தை (கூட அவர்களின் புதிய துணை) என ஒற்றைப் பெற்றோர்களுடன் வளர்ந்தவர்கள் மனநிலையைக் கேட்டறிந்தால் தெரியும். ‘இந்த நிமிடம் வாழ்க்கையில் நான் துவண்டு அப்படியே மல்லாந்து விழுந்தால் என்னைத் தாங்க என் குடும்பம் மொத்தமும் துடித்துக் கொண்டு வரும், மெல்ல என்னை வாழ்விற்கு மீட்டுவிடும். எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று நான் சொன்னால் அத்தகைய உறுதியுடன் திரும்ப பதில் சொல்லமுடியாமல் என்னைப் பொறாமையாகப் பார்க்காத ஐரோப்பியரே இல்லை. தனிமனித சுதந்திரம் என்பது மனிதர்களைத் திரளாகவே நடத்தாமல் தனியொரு மனிதரின் சிந்தனை, படைப்பூக்கம், விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்து அவருக்கான வெளியை உருவாக்கிக்கொள்ள வகைசெய்தல் என்ற அதன் உண்மையான பொருளிலிருந்து திரிந்து, தன் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கமுடியாத தனியாள்- அவனுடைய விருப்பங்களும், வெற்றியும், மகிழ்ச்சியுமே முக்கியம் என்று குறுகிவிட்டதாகவே நான் உணர்கிறேன். வெற்றிக்கெல்லாம் எப்படி தனிமனிதனே பொறுப்பாகிறானோ அப்படியே தோல்வியும். தோற்ற ஐரோப்பியர்களை யார் கவனித்துப் பார்க்கிறார்கள்?
பொருளாதார, விஞ்ஞான முன்னேற்றத்தையும், எளிதில் உடைந்து உருமாறும் பந்தங்களையும் தவறாகத் தொடர்பு படுத்திக் கொண்டு ஒரு நண்பர் (இந்தியர்), “இந்திய மதங்கள் சொல்லும் தத்துவம் என்ன? பற்றற்று இருப்பது தானே? அப்படி செண்டிமெண்ட், இமோஷன்ஸ் இல்லாமல் இருந்தால் செயல்கள் வெற்றி பெறும் என்பதுதானே உண்மை. அதை இங்கே கண்ணால் பார்க்கிறேனே. ஐரோப்பியர்களுக்கு யார் மீதும் உணர்ச்சிபூர்வமான பந்தமே இல்லை பற்றற்று இருக்கிறார்கள். அதனால் தான் முன்னேறிய சமூகமாக, அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்றார். இந்து மதம் கூறும் பற்றற்றிருப்பது என்றால் உண்மையில் என்ன என்று எனக்குத் தெரிந்த வகையில் கொஞ்சம் விளக்க முயன்றேன். நண்பர் அவரின் ‘தரிசனத்தை’ விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பாவிலேயே தங்கத் தீர்மானித்துவிட்டதாகச் சொன்னார். யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை, அதனால் நெருக்கமான நண்பர்களாக ஐரோப்பியர் எவரும் இல்லை, “நெறய ஃப்ரெண்ட்ஸ் உண்டு, ஆனா, என்னன்னா என்னங்கற லெவல்ல டிஸ்டண்ட் மெய்ண்டெய்ன் பண்ணிக்கிறது. பிரச்சனை வராது பாருங்க”. ஐந்து வருடமாக ஐரோப்பாவில் ‘பற்றற்று’ இருக்கிறார் போலும். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தேன் இந்திய, மேற்கு தத்துவ நூல்கள் அடுக்கி வைத்திருந்தார். (மனதில் ஆசானுக்கும் மற்ற குருமார்களுக்கும் நன்றி சொன்னேன். தெளிவாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல், வழிகாட்ட ஒரு குருவும் இல்லாமல் எதையாவது படிக்கக் கிளம்பினால் இப்படி ‘தரிசனம்’ கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டேன்).
மதவரலாறு, ஆன்மீக வறுமை, வாழ்வின் சாரமற்ற வறட்சி, அரசியல் வரலாறு, கொடும் போர்களின் பேரிழப்புகள், அதன் உளவியல் தாக்கம், மிகையான தனிமனித முக்கியத்துவம், சீர்குலைந்த குடும்ப அமைப்பு, நிலையற்ற தனிப்பட்ட உறவுகள் என்று ஐரோப்பாவைப் பற்றி அடுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கே விஞ்ஞானம் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது, மக்கள் காதலிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள், வளர்க்கிறார்கள், குழந்தைகள் வளர்ந்து வெற்றியாளர்கள் ஆகிறார்கள், அவர்களும் காதலித்துப் பிள்ளை பெறுகிறார்கள், அவர்களும் வளர்கிறார்கள்…. என வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. எப்படி?
இந்தியாவில் அரசாங்கம் சரியில்லை, எங்கும் ஒரே ஊழல், லஞ்சம், நல்ல சாலை இல்லை, மின்சாரம் இல்லை, வறுமை, அழுக்கு, குப்பை, குடிக்க தூய குடிநீர்கூட இல்லை, இருந்தும் இங்கேயும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறதே? எப்படி? நாம் நமது சமூகச் சீர்கேடுகளை ‘இதெல்லாம் இப்படித்தான்’ என்று சகிக்கப் பழகிக்கொள்ளவில்லையா? அப்படித்தான் மேற்கிலும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘இதுஇப்படித்தான், மாற்ற முடியாது’ என்று சகிக்கப் பழகிக்கொண்டு அடுத்து என்ன? என்று வாழ்கிறார்கள். நாம் இழப்பது வசதியான வாழ்க்கையை, அவர்கள் இழப்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை.
ஐரோப்பா கீழானது, இந்தியா மேலானது என்று எளிய சூத்திரத்தை ஒப்பிக்க வரவில்லை, அது உண்மையும் இல்லை.
இந்தியாவில் தற்போது இருக்கும் மோசமான சீர்கேடுகளை, சமூகச் சூழ்நிலையை, ஒழுங்கீனங்களை வைத்து நமது சமூகத்தின் வரலாறே இப்படித்தான், எனவே இது மாறாது என்று நினைப்பவர்கள் உண்டு. மனித மனம் எட்டக்கூடிய பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை குறித்தான தரிசனங்களின் உச்சங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டடைந்த, அறிவியல், மெய்யியல், கலை, நாகரீகம் என்று அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மை வாய்ந்த நம் நாட்டின் நீண்ட வரலாறை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அடிப்படை சமூக, பொது ஒழுக்கங்கள் கூட அடையப்பெறாத மக்கள் சமூகத்திலிருந்து இத்தகைய ஒரு பண்பாடு எழுந்துவர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயமாக இல்லை என்று கொஞ்சம் யோசிக்கும் யாராலும் சொல்லமுடியும். ஐரோப்பாவின் அகவாழ்க்கைக் குளறுபடிகளுக்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பது போல நமது சமூகச் சீர்கேட்டிற்கும் வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மேற்கின் காலனியாதிக்கத்திற்கு அடிமைகளாக இருந்த, ஒட்டச் சுரண்டிவிட்டுப்போன தேசத்தின் வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளப் போராடிய காலத்தின் எச்சம் இவை. கல்வியும், பொருளாதாரமும், விழிப்புணர்வும் போதும் இதை மாற்ற. இது மாற்றக்கூடிய புறச்சீர்கேடு. மாறும்.
போரிட்டு நாடுகளை அழித்த, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புறத்தைக் கவலையே இல்லாமல் மாசுபடுத்திச் சீரழித்த ஐரோப்பா விழிப்புணர்வு பெற்று இப்போது பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதும், காடு நதி என்று இயற்கையைப் பேணுவதும் பார்க்கிறோமே? அவர்களால் முடியுமானால் நம்மாலும் முடியும். கடுமையான ஒரு சட்டமும் அதை கறாராக அமுல்படுத்தும் அரசும் போதும், இவற்றை மாற்றிவிட முடியும். (அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய அரசியல் தலைமை உருவாகும் நல்லூழ் நமது நாட்டிற்கு இருக்கும் என்றே நம்புகிறேன்). பழக்கத்தாலும் மாறும். இந்தியாவில் எப்படி இருந்திருந்தாலும், மேற்கிற்கு வந்ததும் அவர்களின் குடிமை ஒழுக்கத்தை கவனித்து வியப்பவர்களில் பலரும் தாங்களும் அதைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே இது மாறக்கூடிய சீர்கேடு தான்.
வேதியியலில் மீள்வினை, மீளாவினை என்று இருவகையான வினைகள் உண்டு. நமது சமூகச் சீர்கேடுகள் மீள்வினை, இவற்றை மீட்டுப் பழைய நல்ல நிலைக்கு முயன்று கொண்டுவந்து விடலாம். ஆனால் ஒருபண்பாடு தன் உள்ளார்ந்த உயர்ந்த விழுமியங்களை முற்றிலுமாக இழப்பது மீளாவினை. குடும்பம், வாழ்வின் அர்த்தம் மீதான நம்பிக்கை, நிலைத்த உறவுகள், தியாகம், ஒருவருக்காக ஒருவர் என்ற வலைப்பின்னல் சமூகம், போன்றவை இழந்தால் மீட்கமுடியாதவை. ஐரோப்பாவின் பிரச்சனை இதுதான். நான் பேசிப் பார்த்தவரை அவர்களும் இதை உணர்கிறார்கள்.
ஐரோப்பா எதற்கு? இங்கே நமது நாட்டிலேயே நாம் இதைக் கவனிக்கலாம். அயலானை சந்தேகத்தோடு பார்க்கிற, கதவை சாத்தி வாழ்கிற அடுக்குமாடி வாழ்க்கையும், பெருகும் திருமண முறிவுகளும், முதியோர் இல்லங்களும், இன்னும் பிறவற்றையும், வாழ்வை வாழ நினைக்கும் எவரும் கவலையோடு தான் நோக்குவார்கள். இதனால் உண்டாகும் இழப்பும், துயரமும் என்ன என்பதை நாமும் அறிவோம். இவற்றைப் பழைய நிலைக்கு மாற்ற முடியவில்லையே என்ற நிதர்சனம் தான் பழங்காலத்தை, கூட்டுக் குடும்பத்தை, கிராமத்து வாழ்க்கையை, கடந்த போன பால்யத்தைப் பற்றின ஏக்கம் நிரம்பிய புலம்பல்களாக நாள்தோறும் கேட்கிறோம். நாமும் புலம்பியிருப்போம். இது இப்படியே தொடர்ந்தால் நாமும் ஐரோப்பியர்களாகி விடுவோம்.
இந்தியாவில் மக்களிடையே கசப்பும், அதிருப்தியும், கவலையும் உள்ளது. மிகப்பெரும்பாலும் அது பணப்பற்றாக் குறையால். நமது நாட்டில் நடக்கும் தற்கொலைகளில் அதிகமும் வறுமை, கடன் முதலியவற்றால், மேற்கில் இது முறிந்த பந்தங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் தோல்விகள், ஆதரவு தர ஆளில்லாததால் உண்டாகும் மன அழுத்தத்தால். ஆக, என்னைக் கேட்டால் ஒப்பீட்டளவில் மேற்கை விட இந்தியர்கள் வசதியற்ற வாழ்க்கையின் நடுவிலும் ஒரு மகிழ்ச்சியும், திருப்தியும் இருப்பவர்களாகவே சொல்வேன். கையில் இருப்பதன் பெருமை உணரப்படாது என்பது பொதுவிதி.
அயல் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் புறவயமான முன்னேற்றம், பொருளியல் வெற்றி, இவற்றை முதன்மைப்படுத்தும் வறட்டு பொருளியல், அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுபவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. மாறாக, மெய்யான மன மகிழ்ச்சியும், வாழ்ந்ததன் திருப்தியும், ஆத்மார்த்தமான நிறைவும் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் அளக்கும் அளவீடுகளாக நம்புபவர்களுக்காகவே என் அனுபவங்களை சொல்கிறேன்.
இந்தியா வெற்றிபெற்ற சமூகமாக இருக்க வேண்டுமா அல்லது மகிழ்ச்சியான சமூகமாக இருக்க வேண்டுமா இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றால் நான் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுப்பேன். மண்ணில் யூடோப்பியா சாத்தியம் இல்லை, ஆனால் இங்கே நாம் வாழமுடிந்த அதிகபட்சமான சிறப்பான, நிறைவான வாழ்க்கை என்பது இன்றைய நிலையில் மேற்கின் குடிமை ஒழுக்கங்களையும், சூழல் உணர்வையும் இந்தியா அடைவதும், மேற்கு தன் ஆத்மாவை நிரப்பும் ஆன்மீக தரிசனத்தையும், குடும்ப வாழ்க்கை என்னும் பலத்தையும் வெற்றிகரமாக இணைப்பதில் உள்ளது. இந்தியாவின் பக்கம் இந்த சமன்பாடு எளிதாக அடையக்கூடியது என்று நம்புகிறேன்.
-நிறைவு-
-பிரகாஷ் சங்கரன்