Saturday, November 16, 2013

அயல் கலாச்சாரம் (பகுதி -1)


(முன்குறிப்பு:இது சொல்புதிது இலக்கிய குழுமத்தில் அயல்கலாச்சாரம் குறித்து நண்பர்களுக்கிடையே நடைபெற்ற விவாதத்தில் நான் தொடராக எழுதிய மடல்கள். அவை தொகுக்கப்பட்டு ஆசான் ஜெயமோகனின் இணையதளத்தில் செக் குடியரசின் வாழ்க்கை என்னும் கட்டுரையாக வெளியிடப்பட்டது )
---

ஒரு மாதத்திற்கு முன் நண்பர்களுக்கிடையிலான ஒரு கலந்துரையாடலில் கிருஷ்ணன் இந்தியர்கள் champions of mediocrity ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையைத் தெரிவித்தார். அவர் தன் எல்லைக்குள் கவனித்தவரையில், இந்திய தனிநபர்கள் மிகுந்த உழைப்பும், கவனமும், திறமையும் தேவைப்படும் வேலைகளில் ஒதுங்கி மேம்போக்கான ஒரு ‘நடுசெண்டரான’ வாழ்க்கையை வாழ்கிறவர்கள் என்று சொன்னார். மூளைத் திறனிலும் உடல் திறனிலும் நாம் சப்பாணிகளாய் விட்டோம் என்றார். இந்த திறமைக் குறைவை ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளைக் கொண்டு உதாரணம் காட்டினார்.
எனக்கும் அதே சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த ஒரு பிரச்சனையாக நான் புரிந்து கொண்டிருந்தேன். இந்தியா மற்றும் அயல்நாட்டு வாழ்க்கையில் நான் கவனித்தவற்றை கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அதை நண்பர்களுக்கு எழுதினேன்.
அதன் சாராம்சம்:
நமது மக்கள் ஏன் இப்படி சோம்பியவர்களாக, தனித்திறமையற்று இருக்கிறார்கள்? சமீபத்திய ஒலிம்பிக் முடிவுகளை கவனித்ததை ஒட்டியும், பொதுவாக ஐரோப்பியர்களின் வாழ்க்கையை கவனித்ததை வைத்தும் நான் நினைப்பவை இவை…
1. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவையே பெரும்பாலும் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய (பொதுவாக -’மேலை நாடுகள்) நாடுகளின் கலாச்சாரம் தனிமனிதனை -அவன் வெற்றி, தோல்வி, சுகதுக்கங்களை, அவன் சொந்த நலனை முன்னிறுத்துபவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவனையே சாரும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் யாரையும் சார்ந்திருக்காத அதே சமயம் யாரையும் கடைசிவரை ஆதரிக்க வேண்டுமென்கிற தார்மீகச் சுமை இல்லாத தனிமனித சுதந்திரத்தை, நலனை முதன்மைப்படுத்தும் கலாச்சாரம்.
2. சமீபத்திய சில ஒலிம்பிக் பந்தயங்களை எடுத்துக் கொண்டால் ஆசியாவில் இருந்து அந்தப் பட்டியலுக்குள் பாய்ந்து வந்து அமர்ந்திருப்பவை சீனா, ஜப்பான், தென்கொரியா. இதில் சீனாவை மட்டும் விதிவிலக்காகக் கொண்டு ஒதுக்கி விடுகிறேன், அது சர்க்கஸ் மிருகங்களைப் பயிற்சி கொடுத்து வித்தைகாட்ட வைப்பதை தான் ஞாபகப்படுத்துகிறது. ஆனால் ஜப்பானும் தென்கொரியாவும் சமூகக் கலாச்சாரத்தில் நிறைய மாறிவிட்டன – அதாவது ஐரோப்பிய வாழ்க்கை முறையின் – சமூக இயங்குமுறையின் தாக்கம் மிகமிக அதிகம். அங்கு கீழைத்தேய வாழ்வுமுறை மாறி ‘தனிமனிதன்’ , தனிவாழ்க்கை என்னும் கருத்து சர்வசகஜமாக ஆகிவிட்டது. பழைய கலாச்சார விழுமியங்கள் பேணப்படுவதில்லை.
3. மேற்சொன்ன இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது தனிமனிதன் என்னும் கருத்தை முன் வைக்கும் சமுதாயம் தனிமனிதத் திறமைகளை, தனிநபர் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வித்யாசமாக, புதிதாக ஏதாவது செய்யப் படும்பாட்டைப் பார்க்கிறேன்.
4. ஆனால் இந்தத் ‘தனிமனிதன்’ என்னும் கலாச்சாரம் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை சிதைத்துப் போட்டுவிடுகிறது. பெரும்பாலானவர்களின் career நன்றாக இருந்தாலும், அந்தரங்க வாழ்க்கை மிகமோசமானதாக இருக்கிறது. அந்த அழுத்தம், அது தரும் மனச்சோர்வு ஆண், பெண் இருபாலரையும் நாற்பது வயதுகளில் தொடங்கி மிகவும் பாதிக்கிறது. கடைசிவரை நிலையில்லாத பந்தங்கள் தான் பெரும்பாலும். இந்த விரக்தியில் தான் வாழ்க்கைக்கு எந்த பொருளும் இல்லை, பிறந்தோம், அனுபவிப்போம், சாவோம் என்ற மனநிலைக்கு வருகிறார்கள். ஒரு பிடிமானம் இல்லை. தள்ளி இருந்து பார்க்கும் போது தெரியாது. நெருங்கிப் பழகி, நம்பிக்கையைச் சம்பாதித்தால் அப்புறம் அவர்கள் சொல்வதில் இருந்து நமக்கு இது புரியும்.
5. நம் குடும்ப வாழ்க்கை முறை, நம்மைச் சார்ந்தவர்களுக்காக நாம் நமது விருப்பங்களையும், ஆர்வங்களையும் தவிர்த்துக்கொள்ளுதல், ஒருவகையில் தனிமனிதத் திறமைகளைப் பின்னுக்கு இழுத்தாலும், ஒப்பீடாக மேலைக் கலாச்சாரத்தைத் தொடர்பவர்களை விட நம் அந்தரங்க வாழ்க்கை திருப்திகரமாகவே இருக்கிறது. ஆக, லாபமும், நட்டமும் வெவ்வேறு வாழ்க்கைமுறைகளில் ஒரு மாதிரி ஊசலாட்டத்திற்குப் பிறகு முள் ஒரு சமநிலைக்கு வருகிறது என்று நினைக்கிறேன். அதிக GDP அல்லது Gross National Happiness (GNH) எது ஒரு நாட்டிற்கு அவசியம் என்பது போல மேற்கண்டதும், சிக்கலான ஒரு சமநிலை.
(அயல்நாடுகளிலும் இந்தியாவிலும் சாதிக்கும் சில விதிவிலக்கான இந்தியர்களை விலக்கி, பெரும்பான்மையான சராசரி மக்களைக் கொண்டு அடைந்த முடிவுகள் இவை. மேலும் இவை ஒலிம்பிக் சமயத்தில் தோன்றியவை. மேலோட்டமான புரிதலுக்கு நமது குடும்ப வாழ்க்கை முறையால் தான் நாம் தனித்திறமைகளை வளர்க்காமல் மந்தையாக வாழ்கிறோம் என்று நான் சொல்வது போல் தோன்றும். சிறிய நண்பர்கள் கூட்டம் என்பதால் புரிந்துகொள்ளப்படும் என்று நினைத்து எழுதுகிறேன்.)
***
இதன் பின்னர் கிருஷ்ணனுடன் தொலைபேசியில் நடந்த உரையாடல்களில் இங்கே நான் கவனித்தவை, என் நேரடி அனுபவம், இந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் சில விஷயங்களைச் சொன்னேன். அவற்றை வரும் நாட்களில் எழுதுகிறேன்.
எல்லா நாட்டு சர்வதேச விமான நிலையங்களும் ஒரே உணர்வைத் தருவதைப் போல பெருவாரியான “வெளிநாட்டு அனுபவங்களும்” புறவாழ்க்கையை வைத்து மட்டும் பார்த்தால் பெரிய வித்யாசம் எதுவும் தெரியாது. இவற்றில் பொதுவாக, வெள்ளைக்காரப் பிள்ளைகள் பஸ்ஸில் போகும் போது அழுவதே இல்லை, இந்தியப் பிள்ளைகள் கத்திக் கூப்பாடு போடும், வெள்ளைக்காரர்கள் காலையில் குளிப்பதே இல்லை, மவுத்வாஷ் மட்டும் செய்துவிட்டு, சாண்ட்விச்சும், காப்பிக் கோப்பையுமாகக் கிளம்பிவிடுவார்கள், வாக்கிங் போகும் போது எதிர்ப்பட்டால் “இனிய நாள்” என்று சிரித்தபடி வாழ்த்துவார்கள், ட்ராமில், பஸ்ஸில், ட்ரையினில் எங்கும் காதில் ஐபாடும், கையில் புத்தகமுமாக இருப்பார்கள், அடுத்தவர்களைக் கவனிக்க மாட்டார்கள், தெருவெல்லாம் கண்ணாடி மாதிரி இருக்கும், இந்தியாவின் மசால் தோசையை விரும்புவார்கள், இனிப்பு போடாமல் காப்பி, டீ குடிப்பார்கள் … என்பவை உட்பட இன்னும் எழுதிச் சலித்த ஏராளமானவை உண்டு. அவற்றை நான் எழுதப்போவதில்லை.
அயல் வாழ்க்கை, அயல் கலாச்சாரம் என்பதில் என்னைப் பொறுத்தவரை முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தனிமனித உறவுகள், உறவுச்சிக்கல்கள் -இவற்றினால் உண்டாகும் அகபாதிப்புகள் – புறவிளைவுகள் தான். ஏனென்றால் அது தான் அந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு விளைவை உண்டாக்கவல்லது.
கிட்டத்தட்ட நமது நாட்டைப் போலவே நெடுங்கால அந்நிய ஆக்கிரமிப்பு, போராட்டங்கள், அழிவுகள், சுதந்திரம், பிரிவினை என்னும் வரலாற்றுத் தடம் உள்ள நாடு செக் குடியரசு. தனிநாடாக நம்மை விட மிக இளைய நாடு. பொருளாதாரத்தில், பொது வாழ்க்கைத்தரத்தில் வளர்ந்த நாடு. இங்கே தனிவாழ்க்கை எப்படி இருக்கிறது? நான் கவனிப்பவற்றை எழுதுவேன்.
***

செக் குடியரசின் சுருக்கமான முன்வரலாறு:

13ஆம் நூற்றாண்டு-
கடுமையான படையெடுப்புகளால் உலகையே நடுங்க வைத்த மங்கோலியப் படை ஜெங்கிஸ்கானின் பேரன் பைதாரின் தலைமையில் ஐரோப்பாவை ஆக்கிரமிக்கப் புகுந்தபோது செக்நாட்டின் கிழக்கு எல்லையில் தோற்கடிப்பட்டது. பைதார் கொல்லப்பட்டார். வரலாற்றில் வெல்லவே முடியாததாக விளங்கிய மங்கோலியப்படைகள் செக் படைவீரர்களால் அடக்கப்பட்டது .
14ஆம் நூற்றாண்டு-
செக் அரசர் நாலாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் சக்ரவர்த்தியாக, ரோம, இத்தாலிய தேசங்களின் மாமன்னனாக ஐரோப்பாவின் செல்வாக்கான அரசராக விளங்கினார். செக்கின் பொற்காலம்.
15ஆம் நூற்றாண்டு-
ஐரோப்பாவில் போப் தலைமையிலான நிறுவன கிறிஸ்தவத்தின் அடக்குமுறைகள், பாகுபாடுகளைக் கண்டித்து பெரும் கலகம் செய்த செக் நாட்டவரான யான் ஹூஸ் என்னும் சீர்திருத்தவாதியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இருபத்தி ஐந்து வருடங்கள் நிறுவன கிறிஸ்தவத்தை எதிர்த்துப் போராடினர். கிறிஸ்தவ போப் ஏவிவிட்ட சிலுவைப்படைகளுடன் மூன்று முறை போரிட்டனர். விளைவாக மெல்ல மெல்ல மொத்த நாடும் ஆன்மீக கிறிஸ்தவ நாடாக மாறியது. போப், கத்தோலிக்கம் இரண்டும் வலுவிழந்தது. யான் ஹூஸின் மறைவிற்குப் பின் புரட்சிப்படை மெல்ல வன்முறைப் படையாக மாறி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கெதிரான கொடுமைகளை நடத்தத் தொடங்கியது. அதுவே பின்னர் வேறு வகையில் நிறுவனமாகி அதிகாரத்துடன் இணைந்து கொண்டு, எதிர்த்துப் பேசுபவர்களை வன்முறையால் கையாளும் அடக்குமுறையாகிப் போனது தனிச் சோகக்கதை.
16, 17, 18, 19ஆம் நூற்றாண்டுகள்-
ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பர்க் அரசவம்சத்தின் கட்டுப்பாட்டுக்குள் மெல்லெ மெல்ல செக் நாடு வந்தது. புனித ரோமப்பேரரசு வீழ்ந்த பின் ஆஸ்திரோ-ஹங்கேரிய அரசின் கீழ் வெறும் ஒரு அங்கமாக ஆனது. (கிட்டத்தட்ட காலனிபோல). பஞ்சம், போர்கள், துர்க்கியப் படையெடுப்பு, பெரும் நோய்கள் என்று பேரிழப்புகளுடன் தொடர்ந்த சோதனையான காலகட்டம். கத்தோலிக்க நிறுவன கிறிஸ்தவம் மீண்டும் அரச குடும்பத்தால் வலுவாக்கப்பட்டது. சீர்திருத்த கிறிஸ்தவம் உட்பட எல்லா பிற மத நம்பிக்கைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டன.
20ம் நூற்றாண்டு-
முதல் உலகப்போரில் ஆஸ்த்ரோ-ஹங்கேரிய அரசு தோற்று சிதைந்த பின்னர் செக்கொஸ்லோவாக்கியா என்னும் தனி நாடு உருவாக்கப்பட்டது.
ஹிட்லரின் நாஜி ஜெர்மனி செக்கோஸ்லோவாக்கியாவை மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மீண்டும் லட்சக்கணக்கான கொடூர மரணங்கள். செக்கோஸ்லோவாகியர்களும், யூதர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்று 1945ல் ரஷ்ய லிபரேஷன் படை பிராக் நகருக்குள் வந்து நாட்டை விடுவித்ததுடன் ஜெர்மானிய ஆதிக்கம் ஒழிந்தது. கம்யூனிஸமும், ரஷ்யர்களும் கொண்டாடப்பட்டார்கள்.
கம்யூனிஸம் பிரபலைமடைந்து வெகுவேகமாக வளர்ந்தது. செக்கோஸ்லோவாகிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி அடுத்த ஆண்டே (1946ல்) ஆட்சியைப் பிடித்தது. அடுத்தடுத்த வருடங்களில் ‘சீர்திருத்த புரட்சி’ என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையும் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கம்யூனிஸ்ட் கட்சி. அடக்குமுறை ‘சுதந்திரம்’. கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் கைதிகளும், கலகக்காரர்களும், சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டனர். ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளுக்கு விசுவாசமான நாடு.
தொடர்ந்து 41 ஆண்டுகள் கம்யூனிசத்தின் ஆட்சி. 1950களில் வேகமாக வளர்ந்த நாடு, 60, 70 களில் வளர்ச்சி வேகம் குறைந்தது, 80களில் முற்றிலும் தேங்கிப் போனது. செக்கொஸ்லோவாகியா மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதாரத்தில், வளர்ச்சியில் பின் தங்கியது. இந்த நாற்பத்தோரு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேர் தேசத்திற்கு எதிரானவர்களாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், நான்கு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
1989ல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை வழிப்போராட்டம் – ‘வெல்வெட் புரட்சி’ கம்யூனிச சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இன்னொரு சுதந்திரம். தாராளவாத பொருளாதாரக் கொள்கையுடன், புதிய ஜனநாயக ஆட்சி உருவானது.
1993ல் ஸ்லோவாகியா சண்டையும், கொலைகளுமின்றி அமைதியாக சகோதர நாடாக தனியாகப் பிரிந்தது – ‘வெல்வெட் டிவோர்ஸ்’.
கடந்த பத்தொன்பது வருடங்களாக தனி நாடாக செக் குடியரசாக இருக்கிறது. மிக இளைய நாடு. வேகமான முன்னேற்றம். உலக வங்கியின் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. ஒரு கோடி ஜனத்தொகை. நல்ல சமூகவாழ்க்கைத் தரம்.
கவனித்தால் சில வேறுபாடுகளுடன் நமது வரலாற்றுப் போக்கு போலவே இருப்பது தெரியும். ஒரு அரசியல், மத பொற்காலம், தொடர்ந்து நூற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பு, அஹிம்சை வழியில் ஒரு புரட்சி, பிரிவினை..என்று..
இன்றைய சமூக, அரசியல், கலாச்சார, வாழ்க்கை நிலையில் சொந்த வரலாற்றின் தாக்கம் இருக்கும். அதற்காகவே இந்த எளிய வரலாற்று அறிமுகம்.

- பிரகாஷ் சங்கரன்

                                                                                                                                              (பகுதி - 2)
                                                                                                                                                                             

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...