Thursday, September 19, 2013

சிரிக்கும் புத்தர்(காந்தி-இன்று தளத்தில் வெளியான என் கட்டுரை. நன்றி காந்தி-இன்று இணையதளம்) 

மதிப்பிற்குரிய தலாய் லாமா ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் பகுதியாக செக் குடியரசில் மூன்று நாட்கள் இருக்கிறார். சனிக்கிழமை (14-09-2013) பொதுமக்களுக்கான உரை. பெரிய விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. நானும் கலந்துகொண்டேன். 2011ல் அவர் இங்கே வந்த போது பழைய செக்கோஸ்லோவாகியாவின் கடைசி அதிபரும், புதிய செக் குடியரசின் முதல் அதிபரும், தலாய் லாமாவின் நெடுங்கால நெருங்கிய நண்பருமான வாட்ஸ்லாவ் ஹவேல் தள்ளாத வயதில் சக்கர நாகாலியில் வந்து வரவேற்றார். இந்த முறை அரசாங்க தரப்பில் இருந்து எந்த ஒரு பிரதிநிதியும் வரவேற்கவோ, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ இல்லை. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சீனாவுக்குப் பயந்து கையாலாகமல் தலாய் லாமாவை சந்திப்பதைக் தவிர்க்கின்றனர். இந்தக் கையாலாகாத்தனத்தை விமர்சித்து செக் இணையத்திலும் கண்டித்து எழுதப்பட்டிருந்ததை இன்று படிக்கமுடிந்தது. இன்னொரு நிகழ்ச்சியில் ஆங் சான் சூ கி யும் தலாய் லாமாவுடன் சேர்ந்து பங்கேற்கிறார். 


தலாய் லாமா மேடையேறியதும் கூடியிருந்த பிரும்மாண்ட கூட்டத்தை வணங்கி வாழ்த்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். ஹவேல் உடனான தன் நட்பு பற்றி நினைவு கூர்ந்துவிட்டு, செக் குடியரசைக் குறித்த தன் எண்ணங்களை கொஞ்ச நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சட்டென்று நினைவு வந்தவராக, "என்ன தலைப்பில் நான் பேச வேண்டும்?" என்று பக்கத்தில் இருந்த இன்னொரு லாமாவிடம் சிரித்துக் கொண்டே கேட்டார். அவரது அந்தச் வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்பு ஒரு தொற்று போல அரங்கத்தில் கூடி இருந்தவர்களிடம் பரவியது. கடைசி வரைக்கும் அந்தச் சிரிப்பு அரங்கத்தில் இருந்து கொண்டே இருந்தது. "என்னை நான் ஒருபோதும் புனிதமானவராக, தனிச்சிறப்பு வாய்ந்தவரக, உயர்ந்தவராக எல்லாம் கருதிக் கொள்வதில்லை. நான் சாதாரன மனிதன். நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள், பிச்சைக்காரர்கள் என விதவிதமான மக்களைச் சந்திக்கிறேன். இந்த நீண்ட வாழ்நாளில், என் அனுபவத்தில் அறிந்துகொண்டதையே பிறருக்குச் சொல்கிறேன். கடைசியில் அதை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான்" என்றார்.

"நான் முன் கூட்டியே தயாரித்துக் கொண்டெல்லாம் பேசமாட்டேன், அந்த நேரத்தில் மனதின் ஆழத்தில் இருந்து வருவது எதுவோ அதுதான். அதுதானே உண்மையாக இருக்கும்?" என்ற படியே மறுபடியும் சிரித்தார். ஒருசிறிய தாளில் எழுதியிருந்த தலைப்பைப் படித்துப் பார்த்தார். மிகத்திரளான பொதுமக்கள் பங்கு பெரும் கூட்டங்களில் தத்துவார்த்தமான உரை ஆற்றுவதற்கான சாத்தியமில்லை, அன்பை, கருணையை வலியுறுத்தும் எளிய நீதி போதனைபோலவே இருக்கும் என்று உணர்ந்தே தான் போயிருந்தேன். அவர் வீற்றிருக்கும் அரங்கில் இடம்பெற வேண்டும் என்பதே என் எண்ணம். உரைக்கான தலைப்பும் அப்படிப்பட்ட பொதுவான விஷயம் குறித்து தான்.

"உண்மையான மார்க்சிஸ சமூக பொருளாதார சிந்தனை, நாட்டின் எல்லா வளங்களும் எல்லோருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வதாகவே நான் புரிந்துவைத்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நானும் மார்க்ஸிஸ்ட் தான். ஆனால் லெனினியத்தை முற்றாக எதிர்க்கிறேன். அது அடக்குமுறையையும், அதிகாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது" என்று ஆரம்பித்தார். அன்றைய உரை முழுவதும் சுயமைய சிந்தனையை எதிர்த்தும் அதற்கு மாற்றாக சமூகத்தின் போக்காக சகமனிதரிடத்து கருணை இருக்கவேண்டும் என்பது பற்றியே இருந்தது. அதற்குக் கருவியாக நல்ல கல்வியே தேவை என்றும், இளம் தலைமுறைக்கு இந்தச் செய்தி கல்வி வழியாக போய்ச்சேர வேண்டும் என்றார். 

"புற அழகு நல்லது தான், ஆனால் அக அழகு அதைவிட நல்லது இல்லையா? புறத்தூய்மை அவசியமானது தான், அகத்தூய்மை அதைவிடவும் அவசியமானது. இதைத் தருகின்ற கல்வி தான் உண்மையான கல்வி" என சகிப்புத் தன்மையையும், கருணையையும் வளர்க்கும் கல்வியே மேலானது என்று பேசினார்.

நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, திடீரென்று பக்கத்தில் காத்திருந்த செக் மொழிபெயர்ப்பாளர்க் குறித்து நினைவு வந்ததும், நீண்ட நேரம் பேசிவிட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மொழிபெயர்ப்பாளர் செக் மொழியில் உரையை மொழிபெயர்த்துப் பேசிக்கொண்டிருக்கும் போது கிடைத்த நேரத்தில்உதவிக்கு கூட இருந்த லாமா ஒருவர் தலாய் லாமாவுக்கு ஒரு கண்ணாடித் தம்ளரில் குடிக்கத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். உடனே தலாய் லாமா தன் இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த இரண்டு சிறிய மேசைகளில் ஒன்றை எடுத்து மொழிபெயர்ப்பாளர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே போடச் சொன்னார். ஒரு தண்ணீர் பாட்டிலையும், தனக்கு லாமா ஊற்றிக் கொடுத்த தண்ணீர் தம்ளரைய்ம் மொழிபெயர்ப்பாளர் முன் போடப்பட்ட மேசையில் தானே வைத்தார். இன்னும் நேரம் இருந்த போது, தனக்கு எதிரே உள்ள சிறிய மேசையில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் குவளை, சிறிய டீப்போத்தல், ஃபிளாஸ்க் ஆகியவற்றைச் சிறுவனைப் போல் ஆர்வமாக கையில் எடுத்துப் பார்த்துவிட்டு திரும்ப வைத்தார். மேலே சிறிய குமிழி போல வைக்கப்பட்டிருந்த பீங்கான் குவளையின் மூடி குல்லா போல இருந்தது. அதைப் பக்கத்திலிருந்த லாமாவிடம் காட்டிவிட்டு, தன் தலையில் குல்லா போல வைத்துக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து சிரித்தார். அந்த இடுங்கிய கண்கள் கோடுகளாக, கண்ணக் கதுப்புகள் சிவந்து மேலேற குதூகலமாக, சத்தமாக அவர் சிரித்தது தான் எனக்கு செய்தியாக இருந்தது. சுற்றீ அமர்ந்திருந்த செக் மக்களின் உணர்ச்சிகளைக் கவனித்தேன். அவர்கள் உற்சாகமாக, மனம் விட்டுச் சிரித்தார்கள். அவரைப் புகழ்ந்துகொண்டார்கள்.

"சில கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் பிற மதங்களை மிகவும் காழ்ப்புடன் அனுகுகின்றனர். அது மிகத் தவறு. மதச்சார்பற்ற அரசு என்றால் மதங்களை வெறுக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம். எல்லா மதங்களையும் சமமாக நடத்துவது தான். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கிய காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றோர் தனிப்பட்டமுறையில் மத நம்பிக்கையாளர்கள் தான். இது தான் இந்தியப் பாரம்பர்யத்தின் சிறப்பு. சாங்கிய தரிசனம் போன்ற மிகப்பழைய தத்துவங்களின் தேசம் அது. ஏன், பண்டைய காலத்திலேயே இந்தியாவில் கடவுள் மறுப்புக்கும் கூட சமமான இடம் மரபாகவே இருந்துவந்துள்ளது" என்றவர் ஒவ்வொரு விஷயத்திலும் சுயமையப் பார்வையக் கண்டித்தே அதிகமும் பேசினார். மனிதன் ஒரு சமூக விலங்கு தான், இதை யாரும் மறுக்க முடியாது. யாரும் தனித்து சந்தோஷமாக வாழ முடியாது. கருணை இருந்தால் போதும், சகமனிதனை அடக்கியாளாமல் கருணையோடு இருந்தால் போதும், உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றார்.

கடைசியில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  "நான் சிறுவனாக குடும்பத்துடன் இருந்த நாட்களில் இருந்து வீட்டைப் பற்றிய ஞாபகம் என் அன்னை மட்டுமே. மிகமிக அன்பானவர் என் அம்மா, எனக்கு நன்றாக நினைவுள்ளது. அதற்கப்புறம் லாசாவிற்கு தலாய் லாமாவாக அழைத்துவரப்பட்டேன். கருணை செய்வதில், கருணையோடு இருப்பதை சமூகத்தில் பரவச் செய்வதில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். இயல்பாகவே கருணை மிக்கவர்கள் பெண்கள்" என்றார். 

க்யூபாவிலிருந்து வந்திருந்த ஒருவர், தங்கள் நாட்டுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு பெருமூச்சுவிட்டு, "துப்பாக்கியின் பலம் கொஞ்ச நாட்கள் மட்டும் தான். உண்மையின் பலம் எப்போது இருக்கும், அதுவே கடைசியில் ஜெயிக்கும். நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள், அமைதியாகப், பொறுமையாக இருங்கள். உண்மை மட்டுமே ஜெயிக்கும்" என்றார். எனக்கு அவர் தனக்குத் தானே ஒரு முறை அந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வது போலப்பட்டது. வியன்னாவிலிருந்து பாரம்பரிய ஆடைகள் அணிந்து குழுக்களாக வந்திருந்த நிறைய திபெத் அகதிகள் கைகளைக் கூப்பியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

-பிரகாஷ் சங்கரன்.

(தொடர்புடையவை : ஆசான் ஜெ அவரது இளையதளத்தில் வெளியிட்டிருந்த குறிப்பு : போதிசத்வரின் புன்னகை )