Sunday, November 13, 2011

லீலை (சிறுகதை)

தேஜா பளீரென்றிருந்த வெளியில், உற்றுக் கவனித்தால் மட்டும் தெரியும் கரும்புள்ளிகளில் மனதைச் செலுத்தினான். அக்கரும்புள்ளிகள், அப்பால் மிதக்கும் மற்ற ஒளிரும் கிரகங்களுக்கு இடையே உள்ள வெளி என்று அவனுக்கு உணர்த்தப்பட்டிருந்தது. மனவிலக்கம் அடைந்தவர்கள் மட்டுமே அந்தப் பிலங்களின் உள்ளே நுழைந்து வெளியேற முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படிப் போனவர்கள் திரும்பியதில்லை, அப்புறம் இங்கிருக்கும் யாருடைய ஆழ் மனதாலும் அவர்களை உணரமுடியாது. ‘அது எதற்கு இப்போது?’ என்று ஆழ்மனதைக் கலைத்து தங்கள் கிரகத்தின் நியதிகளிலும், பழம் புராணங்களிலும் மனதைக் குவித்து கிரகிக்கத் தொடங்கினான். அவர்கள் இனத்தின் புராணங்களில் சில பகுதிகள் நம்ப முடியாததாகவும், இன்னும் சில - அவன் இதுவரை உணர்ந்திராத மனப்பதிவுகளாகவும் இருப்பதை உணர்கையில் ஒளிரும் அவன் உடல் இன்னும் ஒரு ஒளி அலையை வெளியிட்டு அடங்கியது.

தேஜாவின் இன மூதாதைகள் ஆழ்மனத்தால் அடையமுடியாத ஏதோ ஒரு புள்ளியில் பூமி எனும் கிரகத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அந்தக் கிரகம் இதைப் போல ஒளிர் கிரகமல்ல. சூரியன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு சுயஒளிர் எரியிலிருந்து வெளிவரும் ஒளியைத் தான் ஏந்திக் கொண்டிருந்தது. பூமி தன் முழுப்பரப்பிற்கும் ஒளி வேண்டி சூரியனைத் தொழுது சுழன்று கொண்டே இருந்தது. சுழற்சியில் ஏதாவது ஒரு பாதிக்கு மட்டுமே ஒளி கிடைத்ததால் இன்னொரு பாதி இந்த வெட்டவெளிப் பிலம் போல இருந்தது. அதை இருள் என்று அழைத்தார்கள். இருளும் ஒளியும் மாறி மாறி வந்ததால் அவர்கள் ஒளிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கிரகத்தில் ஒளியே அனைத்திலும் வேகமாகப் பயனித்ததாக அறிந்திருந்தார்கள், எனவே ஒளியால் அளக்கப்படும் காலத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இப்போது தேஜாவின் இனம் இருப்பது தன்னொளிக் கிரகம். இங்கே இருப்பவர்கள் தங்கள் தேஜோமயர்கள் என்று கூறிக்கொண்டார்கள். எல்லோரும் ஒளிரக் கூடிய உடல் பெற்றிருந்தார்கள். தேஜோமயர்களின் ஒளியுடல் தான் கிரகத்தையே ஒளிமயமாக்கியதா, இல்லை கிரகத்தின் தன்னொளியால் தேஜோமயர்களின் உடல் ஒளிர்கிறதா என்பது இங்கே எப்போதும் நடக்கும் விவாதம். பக்கத்தில் இருக்கும் இன்னொரு கிரகமும் ஒளிரக்கூடியது தான், அங்கிருக்கும் உயிர்கள் தங்களைச் சுயம்பிரகாசிகள் என்று அழைத்துக்கொண்டார்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களில் இருந்து தான் தோன்றினார்கள் என்றும், பூமியிலிருந்து இருள் பிலத்தின் வழியாக இங்கே வந்தடைவதற்காக தங்களை ஒளிரும் உடலுள்ளவர்களாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் பதிவுகள் இருப்பதை உணர்ந்தான். ஒளிராத உடல் எப்படி இருக்குமென்று ஆச்சர்யப்பட்ட போது அவன் உடலில் ஒரு ஒளியலை வெளியேறியது.

ஆழ்மனதின் ஒரு பகுதியைத் திருப்பி தன் ஒளிரும் கிரகத்தின் இயங்குவிதிகளில் நிறுத்தினான். இங்கே மனம் தான் எல்லாவற்றிலும் இயங்கு விசை. அதன் வேகம் அளக்கப்படவில்லை, அளக்கவும் முடியாது. ஆகவே இங்கே காலம் என்னும் கருத்தே இல்லை. மக்கள் தங்கள் மேல்மனத்தால் இன்னொருவரின் மேல்மன எண்ணங்களை உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரை தெளிவாக அறிந்தார்கள். அதனால் மிக வெளிப்படையான நல்ல எண்ண அலைகள் மட்டுமே இருந்தது. மக்கள் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ்ந்தார்கள் அல்லது வாழ்க்கை என்ற ஒன்றே இருக்கவில்லை. தேஜோமயர்களின் மூதாதையர் பூமியில் வாழ ஆரம்பித்த காலங்களில் இங்கிருப்பது போன்றே வெளிப்படையாக வாழ்ந்தனர், ஆனால் அடுத்தவர் மனதை நேரடியாக உணரும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. ஒலியைப் பயன்படுத்தி தங்கள் மேல்மனதை வெளிப்படுத்தினர் என்பதை கவனித்தான். அந்த மகிழ்ச்சியான பகுதிகளை அவர்கள் ‘கிருதயுகம்’ என்று அழைத்திருந்தனர் என்பதும் பதியப்பட்டிருந்த்து.

ஒளிர்கிரகத்தில் உடலாலும் அறிவாலும் எல்லோரும் சமமானவர்கள். தங்கள் ஆழ்மனத்திற்குள் நுழைந்து பிரபஞ்ச விதிகளையும், மூதாதைகளின் புராணங்களையும், மற்ற உணரப்படாத எண்ண அலைகளையும் கிரகிப்பதில் காட்டும் ஈடுபாட்டில் தான் வேறுபட்டனர். அது முற்றிலும் அவர்களின் மேல் மனத்தின் விருப்பத்தைப் பொறுத்தே அமைந்தது. தேஜா தங்கள் மூதாதைகள் கிருதயுகம் முடிவடைந்த காலத்தில் ஒலியால் வெளிப்படுத்தப்படும் முறையான மொழியைக் கொண்டு தங்கள் மேல் மனதை மறைக்கும் அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்தான். அந்தக் கட்டம் அவர்கள் மொழியில் த்ரேதாயுகம் என்று குறிக்கப்பட்டிருந்தது. மனத்தில் எண்ணாதவற்றை வெளிப்படுத்தவும், எண்ணங்களை ஒளிக்கவும் மூதாதைகளுக்கு ஆற்றல் இருந்தது என்பது அவனுக்கு சுவாரசியமாக இருந்தது. மேல் மனதில் அம்மா தன்னை அழைப்பதை உணர்ந்தான், அப்புறம் வருவதாக எண்ணியவுடன் அம்மா மனம் கலைந்து செல்வதை உணர்ந்தான்.

மீண்டும் மூதாதைகளின் புராணங்களில் ஆழ்மனதைக் குவித்தான். அடுத்து துவாபரயுகம் என்றழைக்கப்பட்ட காலகட்டத்தில் உடலால் மொழியையும், மேல்மனத்தையும் மூடி, அடுத்தவர்கள் தங்கள் அறியாதபடி மறைத்துக் கொண்டார்கள். கலியுகத்தில் மேல்மனம், மொழி, உடல் மூன்றாலும் ஆழ்மனத்தையே மறைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டதும் மூதாதைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகி, விரும்பியதை அடையும் வல்லமை பெற்றார்கள். அடைந்தவற்றை அனுபவிக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உடலும், ஆயுளும் போதவில்லை. தங்கள் உடலை நிர்ணயிக்கும் உயிரின் அடிப்படை வரிகளையே திருத்தி எழுதினார்கள். உயிரின் எழுத்தை மாற்றி, பிரபஞ்ச விதிகளை வெற்றி கொண்டதன் குறியீடாக தங்கள் இறைவன் கையில் பின்னிப் பிணைந்திருக்கும் இரண்டு பாம்புகளை வைத்தார்கள். மரணத்தை வென்று அதன் மூலம் எல்லோரும் காலத்தை மீறிவிட முயன்றார்கள். ஆனால் அவர்களின் ஆதி இச்சையான அன்பும், காமமும், குரோதமும் அவர்கள் மனதை அழைக்கழித்தது. மரணமில்லாமல் பெருகிய மனித உடல்கள் அவர்களுடைய பூமிக்கிரகத்தை நிறைத்தது. அடுத்தவரின் மன எண்ணங்களை அறியமுடியாமையும், ஆசையும் போட்டியை வளர்த்து ஒருவரை ஒருவர் அடக்கமுற்பட்டார்கள். அவர்கள் இறைவனின் கையிலிருந்த உடல்கள் பிணைந்திருந்த அந்தப் பாம்புகளின் தலைகள் ஒன்று மற்றொன்றை எதிர்த்து நோக்கி விஷமூச்சு வெளியிட்டு ஓயாது சீறின. நிலமும், வெளியும், சலமும் எல்லாம் நச்சுகலந்து நிறைந்தது. ஒட்டுமொத்தமாக பூமியே அழிவை நோக்கிச் சுழன்று சுழன்று நகர்ந்தது. கலியுகம் தங்கள் இனத்தின் ஊழிக்காலம் என்பதை அறிந்த அவர்கள் இனிப் பூமி சுழன்று, பகலும் இரவுமாகிக் காலம் நகர்வதை தடுக்க முடியாதென்று புரிந்து கொண்டார்கள். முற்றான அழிவிலிருந்து அவர்கள் இனம் தப்பிக்க ஒரே வழி காலம் விரைந்து கலியுகம் முடியுமுன் இந்தக் காலச்சக்கரத்திலிருந்து வெளியேறுவதே என்று கண்டுகொண்டார்கள். இறுதி முயற்சியாக மீண்டும் ஒருமுறை தங்கள் உயிருடல் விதியின் வரிகளை மாற்றி எழுதினார்கள். மூளையின் கட்டமைப்பையும், வலைப்பின்னல்களையும் அடியோடு மாற்றினார்கள். பேச்சுக்கான பகுதியை முற்றிலும் செயலிழக்க வைத்தார்கள். எல்லோருக்கும் மூளையின் அளவும், செயல்படும் வேகமும் ஒன்றுபோல இருக்கும்படி உயிர்விதியின் வரிகளைத் திருத்தி எழுதினார்கள். இருளில் ஒளிரும் உயிரிகளின் உயிர் வரிகளைப் படித்து, அதைச் செறிவாக்கித் தொகுத்து தங்கள் இனத்திற்குள் புகுத்தினார்கள். ஒளிர்ந்தார்கள். இரண்டு கலங்களிலாக காற்றை உந்தி, பூமியை வெட்டவெளியில் அனாதையாக விட்டு விட்டு கரியபிலத்துள் நுழைந்து மறுபுறம் வெளியேறி ஒளிர்கிரகங்களில் வந்து ஒட்டிக்கொண்டார்கள்.




தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான். தன்னால் அவ்வளவு ஆழம் சென்று உணரமுடிவது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அல்லது தானே முன் பிறவிகளில் தேடிக் கண்டுகொண்டவற்றின் எண்ண அலைகளோ இவை என்று வியந்துகொண்டான். இந்த ஒளிர்கிரக வாழ்வில் பிறப்பும், இறப்பும் உண்டு, ஆனால் எதற்கும் மகிழ்ச்சியோ துக்கமோ இல்லை. யாருக்கும் பசியும் கிடையாது கழிவும் வெளிவராது. உடல் ஒரு ஒளித்துண்டு போல உள்ளும் புறமும் தெரிய காற்றில் மிதப்பது போல லேசானது. யாருக்கும் எந்த ஆசைகளும், தேவைகளும் இல்லை. ஆகவே, போராட்டமும் இல்லை. சுற்றிலும் எப்போதும் ஒரே அளவான வெண்ணொளி. பிறக்கும் போதே மேல்மன அலைகள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். மூதாதையர்களிடமிருந்து காமமும், பொருள் வடிவான அவர்கள் மொழியும் மட்டும் ஒளிர்மாந்தர்களுக்கு பொதிந்து கைமாறப்பட்டு வந்தது. ஆதி இச்சைக்கேற்ப முடிவிலாது புணர்ந்தார்கள், சந்ததிகளை பிறப்பித்தார்கள். அதுமட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்ட செயல் கட்டளை. தேஜாவுக்குள் ஒரு கணம் ஆழ்மனதிற்குக் கூட அறியாத அடியாழத்திலிருந்து ஒரு குறும் அலை கிளம்பி அடங்கியது. அது என்னவென்று உணரமுடியவில்லை. முயன்று பார்த்த போது எங்கோ வெளிக்கு அப்பால் யாரோ எதுவோ உணர்த்த முயசிப்பது போல தோனியது. ‘ஒருவேளை சுயம்பிரகாசர்களில் என்னைப் போலவே யாராவது பிரபஞ்ச விதிகளில் தங்கள் மனத்தால் ஊடுறுவியிருக்கிறார்களா?’ என்று நினைத்துக் கொண்டான். எண்ணங்களை மீட்டு மேல் மனத்திற்கு வந்த போது ஒரு ஒளிரும் இளம்பெண் மெண்மையாக ஒளியலை பரப்பிக்கொண்டு ஒளிவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை அவள் மனம் உணரவில்லை என்று நினைத்த போது அவனுக்கு வியப்பாக இருந்தது.
தேஜா தங்கள் இனத்தை எண்ணிக் கொண்டான். பிறப்பவர்கள் எல்லோரும் வளர்கிறார்கள், மேல்மனதால் எதையும் தெரிவிக்கவோ, கிரகிக்கவோ முடியவில்லை என்றாலோ, தேகம் ஒளிர்வது நின்றாலோ அவர்கள் அடுத்தவர்களுக்கு புலப்படாமல் மறைவார்கள். மறைந்தவர்களின் மேல்மன நினைவுகள் சுத்தமாக அழிக்கப்பட்டு மறுபடியும் பிறப்பார்கள். அவர்களின் ஆழ்மனத்தில் கிரகித்துக் கொண்ட பிரபஞ்ச உணர்வுகளை மட்டும் மீண்டும் முயன்று மீட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து ஆழ்மனதில் உலாவி முன்னோர்களைப் பற்றிய புராணங்களையும், அவர்கள் இனத்தின் விதிகளையும் உணர்ந்து கொள்ளலாம். அதே வாழ்க்கை. ஒளி போல. மாற்றமில்லாமல், மங்கலும், துலக்கமும் இல்லாமல் ஒரே நிலை. இந்தச் சுழல் சலித்துப் போனால் தீவிரமாக முயன்று ஆழ்மனதையும் தாண்டி தங்கள் மனதையே அடியோடு விலக்கி பிரபஞ்ச மனதுடன் இணைந்து விடலாம். பின் மீண்டும் ஒளியுடல் கிடைக்காது, புணரமுடியாது. கரும் பிலத்துக்குள் சென்று விட்டதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். பிரபஞ்ச நியமத்தின் ஒரே கட்டளை –மன விலக்கம். அந்த நிலையில் ஒடுங்கும் வரை திரும்பத் திரும்பப் பொருளே இல்லாமல் பிறந்து, புணர்ந்து, ஒளிர்ந்து, மறைந்து…. மாற்றமே இல்லாமல்!
ஒளி அலைகள் இல்லாமல் அமைதியாக வெளிச்சப் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘நம் மூதாதைகள் தான் எத்தனை உணர்வுகளை வெறும் சொல்லாக, முடமாக்கிப் பொருள் இல்லாமல் விட்டுச் சென்றிருக்கிறார்கள்? பொய், துரோகம், திருட்டு, ஓசை, இசை, மரம், மயில், நாய், தெய்வம், பகை, உறவு.. எத்தனை எத்தனை பொருளற்ற சொற்கள் எண்ண அலைகளாக வெளிப்படுத்த முடியாமல்?? மூதாதைகளின் கிரகத்தில் ஒளி சிதறி நிறங்கள் உண்டானதாக பழைய எண்ணப் பதிவுகளை கவனித்த போது உணர்ந்திருக்கிறான்.
‘அவர்களைப் போலவே இங்கும் ஒளி பிரிந்து வண்ணங்கள் வந்தால்? ஒளியே இல்லாமல் போனால்..? ஒளியில்லாத நேரத்தில் வாழும் முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கை இருந்தால்…?’ தேஜாவின் ஆழ்மனதின் கீழே ஒரு கருப்புத் துளை குழிந்து விரிந்து பின் மூடிக்கொண்டது போலத் தோணியது. அவர்கள் இனம் அழியாமல் இருக்கவேண்டி, இங்கே கிருதயுகம் மட்டும் நிலைத்திருக்கும் படி மாற்றத்திற்கான எல்லா வழிகளையும் மூதாதைகள் அடைத்து விட்டார்களா? இங்கே எந்த மாற்றமும் இல்லாததால் காலம் என்பது இல்லையா? அல்லது காலமே இல்லாததால் எதுவும் மாறுவதில்லையா? என்னால் ஒரு த்ரேதாயுகத்தை உருவாக்கும் லீலையைத் தொடங்கி வைக்க முடியுமா? இங்குள்ளவர்கள் வாழ்வில் வண்ணங்களை வாரி இறைக்க முடியுமா? அப்படி நினைக்கும் போதே அவன் உடல் வெண்ணொளியைப் பொழிந்து மேலும் பிரகாசித்தது. அந்த ஒளிர் மங்கை வெட்டவெளியிலிருந்து மனத்தை நகர்த்தித் திரும்பி தேஜாவை ஆர்வமாகப் பார்த்தாள். எந்த உணர்வலைகளையும் மேல்மனத்தில் எழுப்பாமல், அவளை நோக்கி “உன்னை நேசிக்கிறேன், உன்னுடனேயே கலந்திருக்க விரும்புகிறேன்” என்று ஆழ்மனத்திலிருந்து ஒரு எண்ணஅலையை எழுப்பி அனுப்பிப் பார்த்தான். அவள் உடல் ஒளிர்ந்தது. அலையலையாக வெண்மை படரும் ஒளி பரவி தேஜாவைத் தொட்டது. மெல்லப் புண்ணகைத்து அவன் உடலில் கலந்து இறுக்கிக் கொண்டாள்.
தேஜா மறுபக்கம் ஒளிவெளியில் புள்ளியாகத் தெரிந்த கரும் பிலத்தைப் பார்த்துக் கண்ணடித்தான்.

- பிரகாஷ்.
நன்றி: சொல்வனம். இதழ் 59 (11.11.2011)ல் வெளியானது http://solvanam.com/?p=17347

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட கதை குறித்து அன்பிற்குரிய என் ஆசான் ஜெயமோகனுக்கு தெரிவித்திருந்தேன். அவரிடமிருந்து வந்த பாராட்டும், ஆலோசனையும் உருவாக்குகின்ற உத்வேகத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. http://www.jeyamohan.in/?p=22614
அன்புள்ள ஜெ,
வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை”
கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த மனிதர்கள், பூமியைக் கைவிட்டுப் போதல், பேச்சு மொழியல்லாது பிரக்ஞைப் பூர்வமாக தொடர்பு கொள்ளல், காலத்தை மீறல் என்று சில விஷயங்களை அடிப்படையாக வைத்துச் சுருக்கமாக (காண்டாக்ட் அளவிற்கு விரிவாகவோ, அவர் பேசும் தளத்திலோ அல்ல) ஒரு சிறுகதையாக எழுதி சொல்வனத்திற்கு அனுப்பியிருந்தேன். ஒரு பெரும் அறிவியல் அறிஞரின் சிந்தனையில் ஒரு சிறுதுளி அதிர்ஷ்டவசமாக எனக்குள்ளும் விழுந்துவிட்டதோ என ஒரு மகிழ்ச்சி உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் வந்தது. அதை உங்களுடன் பகிரந்து கொள்ள வேண்டுமென விருப்பம்.
நன்றி,
அன்புடன்,
பிரகாஷ்.
அன்புள்ள பிரகாஷ்
நல்ல கதை.
ஆனால் அறிவியல்கதைகளில் இரு முக்கியமான அம்சங்களை கருத்தில்கொள்ளவேண்டும். சிக்கல் இல்லாமல் கதையுடன் இணைந்து அறிவியலை விளக்குதல் ஒன்று. முற்றிலும் புதிய சூழலை உண்மையான சித்திரமாக சித்தரித்துக்காட்டுதல் இரண்டு
மேலும் முயலலாம்
வாழ்த்துக்கள்
ஜெ


No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...